சிரிப்பதிகாரம் (2)
கிரேசி மோகன்
“ஏழை சிரிப்பில் இறைவன்; சிரிப்பினில், –
ஏழையாய் மாற எமன்சைத்தான் -தோழமைதான்;
வாழ்க வளமுடன் வாய்விட் டுசிரித்து,
மூழ்கி எடுசிரிப்பில் முத்து”
“சிரிக்கச் சிரிக்கச் சிதறுகின்ற முத்து,
சிரிப்பதி காரச் சிலம்புள், -இருக்கு:
கிறுக்கென்ற போதும், கிரேசியென்ற போதும்,
உரக்கச் சிரித்தல் உரம்”
”வேண்டுதல் வேண்டாமை விட்டோன் சிரிப்பினில்,
மூண்டெழும் மோன முகம்துதிக்க, -தீண்டுமோ,
தீமைகள் நம்மை, திருவருணை யோகியார்
ஆமை,நாம் குஞ்சாம் அவர்க்கு”.
”எல்லோரும் இன்புற்(று) இருப்பதல்லால், வேறொன்றும்
சொல்லார், சிரிக்கவும் சிந்திக்க, -வல்லார்கள்,
முல்லாபீர் பால்ராமன், மூஞ்சி சிடுசிடுப்பை,
இல்லாமல் செய்யும் இறை”