ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 15

0

சி. ஜெயபாரதன்.

 

கலில் கிப்ரான்

 

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

உன்னைப் போன்றவன் நான்

 

உன்னைப் போன்றவன் நான்
____________________________

என் இருண்ட உள்ளத்தில்
விண்மீன்கள் உணர்ச்சி வசத்தால்
சிதறிக் கிடக்கின்றன
மின்னிய வண்ணம் !
என் இதயத்தில்
சந்திரன் வெளிச்சம் அளிக்கும்
என் கனவுகட்கு
வழி காட்டிக் கொண்டு !
உறக்க மில்லாத
என் ஆத்மாவில்
ஓர் மௌனம் வெளியாக்கும்
காதலர் மர்மங்களை !
எதிரொலி செய்யும்
முணுமுணுப்போர் வழிபாடுகளை !
முகமூடி அணிந்து கொள்ளும்
என் முகம்,
மரணத்தின் கோரத்தால்
கிழிந்து போய்,
இளைஞர் கீதங்களால்
செப்பணிடப் பட்டு !
இரவே !
ஒருவரை ஒத்தவர் நாம்
இருவரும்
ஒவ்வொரு போக்கிலும் !
____________________________

உனைப் போல் நானிருக்க
நினைத்தால்
மனிதன் பெருமைக் காரன்
நானென
நினைப் பானோ ?
பகல் பொழுதைத்
தன்னைப் போல்
எண்ண மாட்டானோ
இந்த மனிதன் ?
இரவே !
உன்னைப் போன்றவன்
நானும் !
இருவரும் இகழப் படுவோம்
இல்லாத வற்றுக்கு !
தங்க முகில் மகுடம்
அணிய வில்லை
அந்தி வேளை மங்கிய வெளிச்சம்
எந்தன் சிரத்தில் !
____________________________

உன்னைப் போன்றவன்
நானும் !
உதயப் பொழுது
தன்னொளிக் கதிர்களால்
ஒப்பனை செய்வ தில்லை
என் அங்கியின்
பின்னலை !
உன்னைப் போன்றவன்
நானும்
பால் வீதி ஒளிமந்தை
என்னைச் சுற்றி
வட்ட மிடா விட்டாலும் !
கரையற்ற இரவாய்
மௌனத்தில் உள்ளேன்
துவக்க மில்லை
என் இருட்டுக்கு !
முடிவில்லை
என் ஆழ் மனதுக்கு !
____________________________

மகிழ்ச்சியின் ஒளியில்
மூழ்கிக் கொண்டு
ஆத்மாக்கள் மேற் செல்லும் போது
கீழிறங்கும் என் ஆத்மா
துக்க இருளின்
துதி பாடி !
உன்னைப் போன்றவன்
நானும் இரவே !
காலை
விடியும் வேளை
முடியும்
எனது காலம் !
____________________________

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *