சொன்னது நீதானா… சொல்… சொல்… என்னுயிரே…
— கவிஞர் காவிரிமைந்தன்.
சொன்னது நீதானா… சொல்… சொல்… என்னுயிரே…
வாழ்க்கைப் பயணத்தில்தான் எத்தனை எத்தனைத் திருப்பங்கள்! சொந்தங்களும் பந்தங்களும் உண்டாக்கும் தாக்கங்கள், அன்பில் கலந்த உறவுகளை அப்படியே விட்டு விடுவதில்லை. பிரிவும் வந்து முகம் காட்டி உயிர்வரை கேட்கும் அபாயங்கள், இப்படி விதி வரைந்த கோலங்களின் விபரீத விளையாட்டினை முக்கோணத்தில் வடித்த மதிப்பிற்குரிய இயக்குநர் ஸ்ரீதரின் “நெஞ்சில் ஓர் ஆலயம்” – மறக்க முடியாத படம். அதிலே கண்ணதாசனின் முத்தான வரிகள். தத்துவ தரிசனங்களும், உள்ளக் குமுறல்களின் உணர்ச்சி வெளிப்பாடுகள் நெஞ்சைப் பிழிய வைக்கும். இசையோ கேட்டுக் கேட்டு உருக வைக்கும். இரட்டையர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இந்தப் பரிமாணங்கள் தமிழ்த் திரைக்குத் தந்த வெகுமானம் இப்பாடல்கள்.
சொன்னது நீதானா… சொல்… சொல்… என்னுயிரே…
கதாநாயகி நம் தேவிகா, கருப்பு – வெள்ளைப் படச்சுருள் மூலம் கருத்தில் நிறைகிறார். பாடலின் வார்த்தைகள் சொல்லும் அர்த்தங்களைப் பிரதிபலிக்கும் பாவங்கள் முகம் முழுவதும். உடல் நோய்வாய்ப்பட்டிருக்கும் கணவன் – தனது மரணத்திற்குப் பிறகு ‘நீ மறுமணம் செய்து கொள்’ என்று மனைவியிடம் சொன்ன சொல்லால் பிறக்கும் பாடலிது.
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை – தெருவினில் விழலாமா?
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கைப்படலமா?
தமிழ்ப் பண்பாட்டு மரபை வார்த்தைகளில் கட்டிக்காத்து எழுதியுள்ளார் கவியரசு கண்ணதாசன். என்று முத்தமிழரசி முனைவர் சரஸ்வதி ராமநாதன் விளக்கம் தருகிறார்.
எஸ்.பி. பாலசுப்ரமணியம் நடத்திய வானம்பாடி என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்ற கவிஞர் பிறைசூடன் தந்த விளக்கம் கேளுங்கள்…
‘மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே’ என்கிற ஒற்றை வரியில் எத்தனை அர்த்த புஷ்பங்கள் பாருங்கள்.
ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தை ஒரு ஆண் மகன் தொடுவது அல்லது அறிவது முதன் முதலில் எப்போது தெரியுமா (அது அந்தக் காலம்?) திருமணத்தன்று மண மேடையில் மாலையிடும்போதுதான். அப்படி மாலையிடும்போது கூட தொடுவது இருக்காது. குங்குமம் இடுவது, தனது வலது கரத்தால் மணமகளின் திருமுகத்தில் குங்குமமிடும்போதுதான். எனவேதான் மங்கல மாலை குங்குமம் என்று வரிசைப்படுத்தி எழுதியிருக்கிறார் என்றார்.
இன்னும் கூட ஒரு சில பின்னணிகள் இப்பாடலுக்கு உண்டு. மெல்லிசை மன்னருக்கும் கவியரசருக்கும் இடையே ஏற்பட்ட வார்த்தைப் பிரகடனத்தின்போது கிடைத்த பல்லவி. சொன்னது நீதானா?
காணொளி: https://www.youtube.com/watch?v=znRUzlYa3bk
திரைப்படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்
வரிகள்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
குரல்: பி. சுசீலா
பாடல்: சொன்னது நீதானா சொல் சொல் சொல்
சொன்னது நீதானா… சொல் … சொல் …
சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே
(சொன்னது)
இன்னொரு கைகளிலே யார் யார் நானா
எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே
(சொன்னது)
மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே
மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே
என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே
இறுதிவரைத் துணையிருப்பேன் என்றதும் நீதானே
இன்று
(சொன்னது)
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா
(சொன்னது)