-க. பாலசுப்ரமணியன்  

காதலைக் கருவில் சுமந்த வலி
காலத்தில் மழலை கரையும் வலி
சிரிப்பைச் சுமக்க முடியாத வலி
சோகத்தில் சிரிப்பை இணைக்கும் வலி
ஏழ்மையை இருட்டில் கழிக்கும் வலி
பணத்தை இருளில் பதுக்கும் வலி
பசியைப் பாதுகாக்கும் வலி
புசித்த சுமையில் வாடும் வலி,

உழைப்பிற்கு ஊதியம் கிடைக்காத வலி
உண்மை உதவாதபோது வலி
பொய்மைக்கும் புகழ்பாடும் வலி
பல்லக்கில் பாவிகளைத் தூக்கும் வலி
முதுமையைக் குழந்தைகள் ஏலம்போடும் வலி
முக்காடு போட்டுக்கொண்டு முகம் காட்டமுடியாத வலி
மூவுலகும் ஆள நினைக்கையில்
முழங்காலைக் கூடத் தூக்கமுடியாத வலி

 மலர்கின்ற பொழுதும் வலி
மணத்தைக் காக்கும் பொழுதும் வலி
வாசமில்லா  வாழ்வும் வலி
வாழ்வில் வாசம் விலகுவதும் வலி
வலிப்பவனுக்குத் தான் தெரியும்…
அது என்னவென்று!

உள்ளத்தை உரசல்கள் புண்ணாக்கும் பொழுது
வாழ்வே…
கசப்பாய், துவர்ப்பாய், புளிப்பாய்…
அறுசுவையும் வலியாய்…

வலி…
வலிக்கட்டும் வலிக்கட்டும்…
வலியில்லாத வாழ்வும் ஒரு வாழ்வோ?

வலியை உணராத மானுடனும் ஓர் மானுடனோ?
வலிக்கு மருந்து தேடும் மனிதனுக்கு
இறைவன் கொடுக்கும் ஒரு வரப்ரசாதம்
இன்னும் கொஞ்சம் வலி!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.