Category: அறிவிப்புகள்

  • முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது

    முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது

    முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதுதொடர்பாக முனைவர் வா.செ.குழந்தைசாமி அறக்கட்டளையின் தலைவர் ப. தங்கராசு வெளியிட்டுள்ள அறிக்கை:

    முனைவர் வா.செ.குழந்தை சாமி அறக்கட்டளை சார்பில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

    நிகழாண்டுக்கான விருதுக்குத் தொல்லியல், கல் வெட்டியல், நாணயவியல், அகழாய்வு, பலதொழில் துறைகளில் பயன்படுத்தியுள்ள, ஆனால் அகராதிகளில் இது வரை இடம்பெறாத புதிய சொற்களின் தொகுப்பு, மொழிச் சீர்திருத்தம், சமுதாயச் சீர்திருத்தம், முன்னேற்ற சிந்தனை கொண்ட முத்தமிழ் படைப்புகள் போன்ற பொருள்களில் ஒன்றைக் கொண்ட நூல்கள் வர வேற்கப்படுகின்றன.

    தேர்ந்தெடுக்கப்படும் நூலின் படைப்பாளிக்கு, முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருதுடன் முதல் பரிசாக உரூ.30,000, இரண்டாம் பரிசாக உரூ.20,000, மூன்றாம் பரிசாக உரூ.10,000 வழங்கப்படும்.

    நிபந்தனைகள் :

    1)நூல் படைப்பு 2018 -ஆம் ஆண்டில் இருக்க வேண்டும்.
    2) நூலின் இரு படிகளை அனுப்ப வேண்டும்.
    3)நூலை அனுப்பி வைக்க வேண்டிய கடைசி நாள் : ஆனி 15, 2050 / சூன் 30, 2019.

    விருதும், பரிசுகளும் வழங்கும் நாள்: ஆடி 05, 2050 – சூலை 21, 2019.

    நூலை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:

    ப. தங்கராசு,
    தலைவர்,
    முனைவர் வா.செ.குழந்தை சாமி கல்வி ஆய்வு அறக்கட்டளை தமிழ் மேம்பாட்டு விருது,
    5/45, எல்.ஆர்.சி. நகர், ஆண்டாங்கோவில் கிழக்கு,
    கரூர் – 639 008.

    Share
  • ஒரு நாள் படைப்பிலக்கியப் பயிற்சிப் பட்டறை

    கல்லூரி மாணவ,  மாணவியர் மற்றும் பொது வாசகர்களுக்கான கவிதை, சிறுகதை எழுதுதல் பற்றிய கோடை முகாம். 12/5/19 ஞாயிறு, இடம் விரைவில் அறிவிக்கப்படும். கட்டணமில்லை. மதிய உணவு, தேனீர் வழங்கப்படும். முன்னணி எழுத்தாளர்கள் பயிற்சி அளிப்பர்.

    கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டிய கைபேசி எண்கள்:
    தோழர்கள்
    பி ஆர் நடராஜன் (செயலாளர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் , திருப்பூர் மாவட்டம்.)
    (94434 27156 ),
    இரா. சண்முகம் (தலைவர்)
    (99448 15107 )

    நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் , திருப்பூர் மாவட்டம்.

    செய்தி: பி ஆர் நடராஜன் ( செயலாளர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் , திருப்பூர் மாவட்டம்.)  ( 94434 27156 ),

    Share
  • வல்லமை ஆசிரியர் குழுவில் இணைய ஒரு வாய்ப்பு

    பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் அங்கீகாரம் பெற்ற வல்லமை மின்னிதழ், ஒன்பதாம் ஆண்டில் நடை போடுகிறது. 2019 மே மாதத்தில் பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. தரமான ஆய்வுக் கட்டுரைகளை அவற்றின் தகுதியை மட்டுமே பரிசீலித்து வெளியிட்டு வருகிறோம். இந்த ஒன்பது ஆண்டுக் காலத்தில் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இவை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன.

    அருஞ்செயல் புரிந்த ஒருவருக்கு வாரந்தோறும் வல்லமையாளர் விருதினை வழங்கி வருகிறோம். வாரந்தோறும் படக்கவிதைப் போட்டியும் நடத்தி வருகிறோம். இதுவரை சிறுகதை, கட்டுரை, கவிதை, கடித இலக்கியம், நூல் விமர்சனம்… எனப் பல திறன்களை ஊக்குவிக்கும் வகையில், போட்டிகளை நடத்தியுள்ளோம்.

    வல்லமை, கருத்துச் சுதந்திரத்தை ஊக்குவிக்கும் வகையில் கூகுள், ஃபேஸ்புக், ஃபிளிக்கர், வாட்ஸப் ஆகியவற்றில் குழுமங்களை நடத்தி வருகிறது. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பல்வேறு பயிலரங்குகளை நடத்தி வருகிறது.

    வல்லமையை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் மேலும் பல திட்டங்களை முன்னெடுக்கும் வகையிலும் ஆசிரியர் குழுவினை விரிவுபடுத்த உள்ளோம்.

    *தமிழ் மொழியறிவும் கூர்மையான ஆய்வுக் கண்ணோட்டமும் இதழியல் ஆர்வமும் கொண்டவர்கள், உதவி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

    *கல்லூரியில் பயிலும் மாணவர்கள், பயிற்சி இதழாளர்களாகப் பணியாற்றலாம்.

    *ஆய்வுக் கட்டுரைகளை நடுநிலையுடன் மதிப்பாய்வு செய்வதில் திறம் வாய்ந்த பேராசிரியர்களும் அறிஞர்களும் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.

    *இணையத்தள வடிவமைப்பிலும் வேர்ட்பிரஸ் தொழில்நுட்பத்திலும் ஆண்டிராய்டு செயலி உருவாக்கத்திலும் அனுபவம் வாய்ந்தவர்கள், வல்லமைக்குத் தொழில்நுட்ப ரீதியில் உதவலாம்.

    • விண்ணப்பிக்க விரும்புவோர், தமிழில் பிழையின்றி எழுதவும் கணினியில் தட்டச்சு செய்யவும் கற்றவர்களாக இருக்க வேண்டும்.
    • படைப்புகளில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து திருத்தும் திறன் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
    • சொந்தமாகக் கணிப்பொறியும் இணைய இணைப்பும் கொண்டிருக்க வேண்டும்.
    • நாள்தோறும் ஓரிரு மணி நேரம், வல்லமைக்காகச் செலவிடக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
    • வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    • குறைந்தபட்சம் ஓராண்டு பணிபுரிய வேண்டும்.
    • வல்லமை, இலாப நோக்கில்லாத அமைப்பு என்பதால், எம்மால் ஊதியம் வழங்க இயலாது. ஆயினும், வல்லமை சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.
    • தமிழ்த் துறை மட்டுமின்றி, எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இல்லத்தரசிகளும் மாணவர்களும் கூட, உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு கிடையாது.
    • விருப்பம் உள்ளோர், உங்கள் சுயவிவரக் குறிப்புடன் கூடிய விண்ணப்பத்தை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

    சிந்தனை, செயல், முன்னேற்றம் என்பது நம் இலக்கு. வாருங்கள் இணைந்து சிந்திப்போம், செயல்படுவோம், முன்னேறுவோம்.

    Share
  • ஆழ்ந்த இரங்கல் …

    நம் மதிப்பிற்குரிய அறிவியல் விஞ்ஞானி திருமிகு ஜெயபாரதன் ஐயா அவர்களின் அன்பு மனைவியார் தசரதி அவர்கள் நேற்று (17.11.18) மாலை 6.10 மணியளவில் இறையடி நிழலில் தஞ்சம் புகுந்துள்ளார். அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும், நம் ஜெயபாரதன் ஐயாவும் அவர்தம் குடும்பத்தினரும் மனம் அமைதி பெறவும் எல்லாம் வல்ல எம் இறையை மனமாரப் பிரார்த்தனை செய்கிறோம்.

    Share
  • ஆழ்ந்த இரங்கல்கள் ..

    அன்புச் சகோதரர், அருமை வெண்பா வித்தகர், ஆழ்ந்த மனப்பக்குவம் கொண்ட நம் கிரேசி மோகன் அவர்களின் அன்புத் தந்தையார் திரு ரங்காச்சாரி அவர்கள்
    இப்பூவுலகை விட்டு இறையடி நிழலை நாடிச் சென்றுள்ளார். அன்னார் இந்தியன் வங்கியில் முதன்மை மேலாளர் பொறுப்பில் எண்பதுகளில் பணி நிறைவு செய்தவர். அவர்தம் ஆன்மா சாந்தியடையவும்,  குடும்பத்தினர் அனைவரும் மன அமைதி பெறவும் உளமார பிரார்த்திக்கிறோம்.

     

     

    ஆன்மனுக்குச் சாவில்லை சேதாரம் மேனிக்கேயென
     ஆதாரத்துடன் அங்கம் துலக்கி மீளாத
     சோகத்திலும் மாளாத பக்குவம் நிறைத்
    தவமாய் உதித்த தனயன்!

    சித்தின் விளையாட்டை ஆனந்தத்தின் சத்தாய்
    வேடிக்கைப் பார்க்கும் ஆன்மீகப் புத்தி
    உலகே மாயம் இவ்வாழ்வும் மாயம்
    எதுவும் நிரந்தரமில்லை சோகமிலைகாண்!

    மனத்தெளிவே உளத்துறவு வரவும் செலவுமே
    உறவும் பகையும் எனும் மாசற்ற மனம்
    அழிவற்ற ஆன்மா பயனற்ற கூடுவிட்டு 
    பண்ணோடு மீண்டு வாழும்!

    முடிவற்ற உயிர் வானமேறி வைகுந்தமேகி
    அரியையும் அரனையும் பாதாரவிந்தம் துதித்து
    பரமனின் பக்கத்தில் பதவிசாய் ஆனந்தமாய்
    பக்குவமாய் இறைநிலை இன்பமடையுமே!!

     

    படத்திற்கு நன்றி  : திரு இசைக்கவி ரமணன்

     

     

    Share
  • வல்லமை அன்பர்கள் சந்திப்பு 2018

    பவள சங்கரி

     

    வல்லமை அன்பர்கள் சந்திப்பு, 14.10.2018 ஞாயிறு அன்று பிற்பகல் 3 மணி முதல் 5 மணிவரை சென்னை அண்ணாநகரில், கீழ்க்கண்ட முகவரியில் நடைபெற உள்ளது.

    White Room for Scientific Tamil Development
    Manavai Mustafa Scientific Tamil Foundation Trust
    AE 103, 6th Street, 10th Main Road
    Anna nagar West, Chennai – 600040
    https://goo.gl/maps/8qNo5AEvEgN2

    பொது அறிமுகத்திற்குப் பிறகு, செய்த, செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி ஆலோசிப்போம். வல்லமையில் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட விரும்புவோர், அது குறித்து இந்தச் சந்திப்பில் நேரில் கேட்டறியலாம்.

    இந்த நிகழ்வில் பங்கேற்போர், தங்கள் வருகையை vallamaieditor@gmail.com என்ற முகவரியில் உறுதி செய்யுங்கள். வாருங்கள்! சந்திப்போம்! உரையாடுவோம்! ஆக்கபூர்வமாகச் செயல்படுவோம்!

    Share
  • வாழ்த்தி வரவேற்கிறோம்!

    பவள சங்கரி

     

    நம் வல்லமை ஆசிரியர் குழுவில் இணைந்திருக்கும் முனைவர் பா. ஜெய்கணேஷ் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.

    முனைவர் பா. ஜெய்கணேஷ் (பா.இளமாறன்) தற்போது காட்டங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்த்துறையில் துறைத்தலைவராகப் பணியாற்றி வருகின்றார். தமிழ் இலக்கணம், இலக்கியம், பதிப்பு தொடர்பான ஆய்வுகள் பல நிகழ்த்தி நூல்கள் பல வெளியிட்டுள்ளார்.

    தமிழ் இலக்கண உரை வரலாறு : யாப்பியல் உரைகள் என்னும் தலைப்பில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு, இரு நூற்றாண்டுப் பதிப்பு வரலாற்றில் தொல்காப்பியம், பதிப்பும் வாசிப்பும், தொல்காப்பியம்: அடைவு – ஆவணம் – வரலாறு , தொல்காப்பியம் – பன்முக வாசிப்பு , ஏழாம் இலக்கணம், அறியப்படாத தமிழ் உலகம், தமிழ் நூல் தொகுப்பு வரலாறு முதலான நூல்களை எழுதியும், தொகுத்தும், பதிப்பித்தும் வெளியிட்டுள்ளார். மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் என்னும் கவிதை நூலையும், கலியுகக்கிழவியும் ஓநாய்க்குட்டிகளும் என்னும் மொழிபெயர்ப்பு நாவலையும் 2018 இல் வெளியிட்டுள்ளார்.

    மொழி நிறுவனத்தின் வழியாக வெளியிடப்பெற்ற தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி வெளியீட்டுப் பணியிலும் ஆய்வாளராகச் செயல்பட்டுள்ளார். மாற்றுவெளி, புதிய புத்தகம் பேசுது முதலான இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை இதழ்களிலும் கருத்தரங்கங்களிலும் வெளியிட்டுள்ளார். எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் வழி சுவிட்சர்லாந்து சென்று அங்கு மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்துள்ளார்.

    பொதிகைத் தொலைக்காட்சியில் ஓராண்டு கடந்து போய்க்கொண்டிருக்கும் தமிழின் பெருமையையும் சிறப்பையும் பறைசாற்றி வரும் “ழகரம்” என்னும் நேரலை நிகழ்வின் வல்லுநராகவும், நெறியாளராகவும் செயல்பட்டு வருகின்றார்.

    இவர் பெற்ற விருதுகள்:

    செம்மொழி நிறுவனம் வழியாக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் கையால் இளம் ஆய்வறிஞர் விருது (1, 00,000 பரிசுத்தொகையுடன் பட்டயம் – 2015)

    எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் – வளர்தமிழ் விருது (1,50,000 பரிசுத்தொகையுடன் பட்டயம் – 2014)

    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் – சிறந்த ஆய்வாளர்க்கான விருது ( 2013)

    Share
  • வாழ்த்தி வரவேற்கிறோம்!

    பவள சங்கரி

     

    ஆசிரியர் குழுவில் இணைகிறார் – முனைவர் கல்பனா சேக்கிழார்

    கடந்த 12 ஆண்டுகளாக அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழ், கணினி, மொழியியல் ஆகியவற்றில் முதுகலை பட்டமும்  தமிழில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

    இதுவரை ஆறு நூல்களும், 100 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 52 தொகுப்பு நூல்களைப் பதிப்பித்துள்ளார்.  பல்வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதியும் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். பல்கலைக்கழக மானியக் குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (PDF)  மேற்கொண்டு வருகிறார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

     

    Share
  • ஆசிரியர் குழுவில் இணையும் கவிஞர்!

    பவள சங்கரி

     

    விவேக் பாரதி, “கல்லூரி பயிலும் இளம் மரபு கவிஞர்” துபாய் தமிழர் சங்கத்தின் மூலம் “வித்தக இளங்கவி” என்ற பட்டம் பெற்றவர். “மகாகவி ஈரோடு தமிழன்பன்” விருது பெற்றவர். “முதல் சிறகு” என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர். பாரதி மேலே தீராத பற்று கொண்ட இளைஞர். மரபுக் கவிதைகள் மேல் வளர்த்த காதலால் கவிதை பாடும் கவிஞர்.

    ஆர்வமும் திறனும்:

    தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கவிதைகள், கட்டுரைகள் எழுதும் திறன்.
    தமிழ் இலக்கியத்திலும் மரபு இலக்கணத்திலும் ஆர்வம்.

    பட்டங்கள், விருதுகள் :

    1) வித்தக இளங்கவி பட்டம் (2015)
    2) தமிழன்பன் – 80 விருது (2015)
    3) பைந்தமிழ்ப் பாமணி பட்டம் (2016)
    4) பைந்தமிழ்ச் செம்மல் பட்டம் (2017)
    5) ஆசுகவி பட்டம் (2017)

    படைப்புகள்:

    1) யானைமுகனான கதை (மின்னூல்) (2015)
    2) முதல் சிறகு (2016)
    3) பாவலர் மா.வரதராசன் பன்மணி மாலை (2017)
    4) ககனத்துளி (2018)
    5) பேசுபொருள் நீயெனக்கு (2018)

    வல்லமை ஆசிரியர் குழுவில் இணையும் கவிஞர் விவேக் பாரதியை வாழ்த்தி வரவேற்கிறோம்.

    Share
  • ஆய்வேடுகளின் மீதான திறனாய்வு

    முனைவர் அண்ணாகண்ணன்

    தமிழில் முனைவர்ப் பட்ட ஆய்வேடுகளைச் சமர்ப்பித்த பிறகு, பொது வாய்மொழித் தேர்வுக்கு முன், அதனைப் பொதுவில் பார்வைக்கு வைப்பர். அதனைப் படித்து, அதன் மீது யாரும் கேள்வி எழுப்பலாம் என்பது எதிர்பார்ப்பு. ஆனால், நடைமுறையில் இவற்றைப் படிப்பாரும் இல்லை; ஆராய்வாரும் இல்லை. கேள்விகள் அனைத்தும் பொது வாய்மொழித் தேர்வு அரங்கில் ஆய்வாளர் பேசுவதை அல்லது தலைப்பை வைத்தே கேட்கப்படுகின்றன.

    சமர்ப்பிக்கப்பெறும் ஆய்வேடுகளின் மென்படி ஒன்றினை இணையத்தில் வைத்தால், அதனை உலகில் எங்கு உள்ளவரும் படித்துக் கருத்துக் கூறலாம். இதற்குக் கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழக மானியக் குழுவும் முன்முயற்சி எடுக்க வேண்டும்.

    அதற்கு முன்னதாக, இப்போதுள்ள நடைமுறைப்படியே, நூலகத்தில் வைக்கப்படும் ஆய்வேடுகளை அந்தக் கல்லூரியிலோ, பல்கலைக்கழகத்திலோ பயிலும் சக மாணவரோ, வழிகாட்டி அல்லாத வேறு பேராசிரியரோ ஆராய்ந்து ஒரு கட்டுரை அளித்தால், ஆய்வின் தரம் இன்னும் மேம்படும்.  ஆய்வின் சிறப்பம்சங்களையும் உலகறியச் செய்யலாம்.

    இத்தகைய கட்டுரைகளை வெளியிட, வல்லமை மின்னிதழ் (http://www.vallamai.com) அணியமாக உள்ளது. ஆய்வாளர்கள் உள்ளிட்ட மாணவர்கள், பேராசிரியர்களின் ஒத்துழைப்பினை நாடுகிறோம். ஆய்வேடுகளின் மீதான திறனாய்வினை அனுப்ப வேண்டிய முகவரி: vallamaieditor@gmail.com

    Share
  • பேரூர் சுவாமிகளின் ஆன்மா இறையடி நிழலில் …

    சைவமும் தமிழும் இரு கண்களென போற்றி தொண்டாற்றிய பெருந்தகை தவத்திரு பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் ஐயா அவர்களுக்கு நம் இதய அஞ்சலியை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஆகச்சிறந்த சொற்பொழிவாளரும், ஆன்மீகவாதியும், பெரிய புராணத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட அடியாரின் ஆன்மா இறையடி நிழலில் சாந்தி பெற உளமாரப் பிரார்த்திக்கிறோம்.

    Share
  • ஆகச்சிறந்த ஆன்மாவிற்கு புகழஞ்சலி!

    முன்னாள் பிரதமர், உயர்திரு அதல் பிகாரி வாஜ்பாயி, தமது 93ஆம் அகவையில், இன்று (16/8/2018) மாலை 5 மணிக்கு இயற்கை எய்தினார். தேசிய சனநாயகக் கூட்டணி அரசின் பிரதமராக, 1999 முதல் 2004 வரை கடமையாற்றிய காலத்தில், இந்தியா சந்தித்த பல சோதனைகளை மிகத் திறம்பட நிர்வகித்த பெருமைக்குரிய ஒப்பற்ற அரசியல்வாதி. இவற்றுள் பொக்ரான்-2 அணு பரிசோதனை, பாக்கித்தானுடனான கார்கில் யுத்த வெற்றி, போன்றவை குறிப்பிடத் தக்கவை !

    ஆகச்சிறந்த கவிஞரான திரு வாஜ்பாய் , ஆங்கிலத்திலும், இந்தியிலும் அற்புதமாகக் கட்டுரை வடிக்கவும், சொற்பொழிவாற்றும் திறனும் படைத்தவர். 2014 ஆம் ஆண்டில் பாரத ரத்னா பட்டம் பெற்றவர். 40 ஆண்டுகள் நடுவண் அரசின் அரசியலில் பங்கு பெற்று, 10 முறைகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2 முறைகள் மேலவை உறுப்பினராகவும் 3 முறைகள் பிரதமராகவும் சேவை புரிந்தவர். நாடாளுமன்றத்தில் இவருடைய நேர்மறையான, ஆணித்தரமான விவாதங்கள் பலராலும் வரவேற்கப்பட்டன. வாஜ்பாய் கொண்டுவந்த தங்க நாற்கரம் சாலைத் திட்டம் போற்றத்தக்கது!

    எதிர்கட்சித் தலைவர்களையும் பேதமின்றி அவர்தம் நற்செயல்களை உளமார பாராட்டக்கூடிய பண்பாடு மிகுந்தவர். அதேபோன்று வன்மையான பேச்சிலும், எழுத்திலும் எதிராளிகளை நிலை குலையச் செய்யும் வித்தகர். மிகச்சிறந்த நகைச்சுவையாளரும் கூட ! ஐ.நா.விலும், நமது நாடாளுமன்றத்திலும் திருக்குறளையும், பாரதியாரின் பாடல்களையும் தமிழில் அழகாக எடுத்துரைத்தவர். அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும், அவர்தம் குடும்பத்தினரும், நண்பர்களும், கட்சியினரும் மனம் அமைதி பெறவும் எல்லாம் வல்ல எம் இறையை பிரார்த்திக்க்கிறோம். இந்திய வரலாற்றில் நிலையான இடம் பிடித்த அவர்தம் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்!

    Share
  • வல்லமை ஆசிரியர் குழுவில் இணைகிறார்கள்!

    வல்லமை நிர்வாகக்குழு – 2018

    ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நம் வல்லமை இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இன்று புதிதாக பொறுப்பேற்கும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக, மொழிபெயர்ப்புத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர். விஜயராஜேஸ்வரி அவர்களை மகிழ்வுடன் வரவேற்கிறோம். தமிழ் மலையாள மின் அகராதி உருவாக்கம், கணினி மொழியியல், இயந்திர மொழிபெயர்ப்பு – இந்திய மொழிகளுக்கிடையேயான இயந்திர மொழிபெயர்ப்புத்திட்டம் (IL- ILMT Project, Govt.of India ) , மொழியியல் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், பேரா. முனைவர். ச.இராசேந்திரன். 2. கணினி மொழியியல், இயந்திர மொழிபெயர்ப்பு, கணினிக்கான இலக்கண வரைவு – இந்திய மொழிகளுக்கிடையேயான இயந்திர மொழிபெயர்ப்புத்திட்டம் (IL- ILMT Project , With Professor Uma Maheshwar Rao at Centre for Applied Linguistics and Translation Studies, Central University of Hyderabad and IIIT-Hyderabad ) உதவி ஆய்வாளர் ( Junior Research Fellow ), முதுமுனைவர். வ.அய்.சு நினைவு திராவிட மொழிகள் பள்ளி, (International School of Dravidian Linguistics, Thiruvananthapuram) திருவனந்தபுரம், போன்ற மிகச்சிறந்த பணி அனுபவங்கள் கொண்ட முனைவர் விஜய ராஜேஸ்வரி நம் வல்லமை இதழ் மென்மேலும் சிறப்புற தம் ஒத்துழைப்பை முழுமையாக நல்குவார் என்று உளமார வாழ்த்தி வரவேற்கிறோம்.

    நம் வல்லமை இதழின் முதல் வல்லமையாளரான திருமதி ராமலட்சுமி அவர்கள் நம் ஆசிரியர் குழுவில் இன்று இணைகிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். திருமதி ராமலட்சுமி அவர்களின் சிறப்பான பங்களிப்புகளையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.

    Share
  • இறையடியில் இளைப்பாறும் மூத்த பத்திரிகையாளர் ஞாநி

    பவள சங்கரி

    26731344_1571637166206492_8527690463404708172_n

    சுயநலத்திற்காக சமரசம் செய்து கொள்ளாத பத்திரிகையாளர், தெளிவான கொள்கையும், துன்பத்தைக்கண்டு துவளாது, உடல் நலிவுற்ற நிலையிலும் இறுதிவரை சமூகச்சிந்தையுடன் தனக்கு நியாயம் என்று பட்டதை துணிந்து பேசி, எழுத்தில் வடித்தும், இறப்பிற்குப் பின்பும் தமது உடலையே தானமாகக் கொடுத்துச்சென்றுள்ள, மூத்த பத்திரிகையாளர் ஞாநி அவர்களின் ஆன்மா சாந்தியடையவும் அவர்தம் குடும்பத்தினர் மனம் அமைதி பெறவும் எல்லாம் வல்ல எம் இறையைப் பிரார்த்திக்கிறோம்.

    வல்லமை ஆசிரியர் குழுவினர்

    Share