மலேசியத் தமிழ் எழுத்தாளர் நிர்மலா ராகவன், தமிழில் 25 நூல்களையும் ஆங்கிலத்தில் 6 நூல்களையும் எழுதியவர். சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை எனப் பல துறைகளிலும் அமைந்த இந்த நூல்கள் பலவும், பரிசுகளையும் பாராட்டுகளையும் வென்றவை. கணவரிடம் அடி வாங்கி, பாதுகாப்பு இல்லத்தில் தங்கியோர், ஓடிப் போன பெண்கள், தொழுநோயாளிகள், குண்டர் குழுவில் இருந்தோர்… எனப் பலரையும் நேரில் சந்தித்து அவர்களின் வாழ்க்கையைக் கேட்டுக் கதைகளாக எழுதியவர். எழுதுவதற்கான கருக்களைத் தேர்ந்தெடுப்பது, அதற்காகக் கள ஆய்வு செய்வது, பாத்திரங்களாகவே மாறுவது, கூடு விட்டுக் கூடு பாய்வது… என விரியும் தமது அனுபவங்களை இந்த அமர்வில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
எழுத்தாளர் நிர்மலா ராகவன், மலேசியாவில் 30 ஆண்டுகளில் 30 ஆயிரம் மாணவர்களுக்கு இயற்பியல் கற்பித்தவர். மலாய், சீனர், இந்தியர் எனப் பல்லின மாணவர்களின் உள்ளம் கவர்ந்தவர். கற்றல் திறன் குறைந்தவர்களுக்கும் வறுமையில் வாடியவர்களுக்கும் இனக் காழ்ப்பை எதிர்கொண்டவர்களுக்கும் துணை நின்று பாதுகாத்தவர். இந்த நேர்காணலில் தாம் சந்தித்த மாணவர்கள் சிலரைப் பற்றி நம்முடன் உரையாடுகிறார்.
படம் வரைவது தவிர வேறு எதுவுமே தெரியாத மாணவர்கள், தேர்வு என்றால் படிக்க வேண்டுமா என்று கேட்ட மாணவர், வகுப்பில் தூங்கிய மாணவர், பொம்மையே பார்க்காத மாணவர், F.U.C.K. என்று ஆய்வுக்கூடத்தில் எழுதிய மாணவர், தெருவில் நின்று தங்கள் உடலை 50 காசுக்கு விற்ற மாணவியர், இந்த வகுப்புக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக என் அனுதாபங்கள் என்று சொன்ன மாணவர் எனப் பலரை இந்தப் பதிவில் நீங்கள் காணலாம். ஆட்டிசம் பாதிப்புள்ள மாணவரை வகுப்பில் மானிட்டராய் நியமித்தது, பட்டன் போடாத / ஜிப் போடாத மாணவர்களுக்கு ஊக்கு வாங்கிக் கொடுத்தது, ஒரு வகுப்பை ஒரே மாதத்தில் ஆங்கிலம் பேச வைத்தது, சீன மாணவியருக்கு நடனம் சொல்லிக் கொடுத்தது… எனப் பல அனுபவங்கள் இதில் உண்டு.
புகையிலை சிகரெட்டால் புற்றுநோய் உள்ளிட்ட பல தீங்குகள் ஏற்பட்டு வருகையில், மூலிகை சிகரெட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறார், டேவிட் ராஜா. புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை இதன் மூலம் மீட்டு, புகைப் பழக்கத்தையே கைவிடச் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
ஆடாதொடை இலைகளைக் கொண்டு இந்த அதிசயத்தை, சித்த மருத்துவரான இவர் மனைவி டாக்டர் கமலா சௌந்திரம் முதலில் நிகழ்த்திக் காட்டி, காப்புரிமை பெற்றார். அதைத் தொடர்ந்து, முள்ளை முள்ளால் எடுப்பது போல், சிகரெட்டைச் சிகரெட்டாலேயே வீழ்த்தும் வகையில், இதற்குப் புது வடிவம் கொடுத்து, வணிக ரீதியில் டேவிட் ராஜா, சந்தைப்படுத்தி வருகிறார்.
சித்தா மூலிகை சிகரெட்டை உருவாக்கியது எப்படி என்று இந்த நேர்காணலில் நமக்கு விவரிக்கிறார். ஒரு தொழில்முனைவோராக அவரது பயணத்தையும் அவர் எதிர்கொண்ட சவால்களையும் இதில் காணலாம்.
கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான மதுமிதா, பல நூல்களின் ஆசிரியர். சமஸ்கிருதத்திலிருந்து சுபாஷிதம் (மகாகவி பர்த்ருஹரியின் கவிதைகள்), மேகதூதம், ருதுசம்ஹாரம் உள்ளிட்ட நூல்களைத் தமிழில் பெயர்த்துள்ளார். சாகித்திய அகாதெமிக்காக, ஒடியக் கவிஞர் பிரதீபா சத்பதியின் கவிதைகளை ‘வசீகரிக்கும் தூசி’ என்ற பெயரில் தமிழில் பெயர்த்துள்ளார். கன்னடத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் சிற்சில நூல்களைத் தமிழுக்குப் பெயர்த்துள்ளார். மொழிகளுடனான அவரது பயணம் குறித்தும் சமஸ்கிருத மொழியின் தனித்தன்மைகள் குறித்தும் தமிழ்-வடமொழிக்கு இடையிலான உறவுகள் குறித்தும் இந்த நேர்காணலில் நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
சமஸ்கிருதம், செத்த மொழியா?, ஆலயங்களில் சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஒலிப்பது ஏன்? சொற்கள் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றனவா? வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்தனவா? மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறீர்களா? இந்திப் படிப்பதால் என்ன பயன்? போன்ற சர்ச்சைக்குரிய பல கேள்விகளுக்கு நயமாகப் பதில் அளித்துள்ளார். இந்த அர்த்தமுள்ள நேர்காணலைக் காணுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.
தமிழறிஞரும் வேர்ச்சொல் ஆய்வு வல்லுனருமான கு.அரசேந்திரன் அவர்களை அவரது இல்லத்தில் (08.09.2020) சந்தித்தேன். அரசேந்திரன், சென்னை, தாம்பரம், கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகத் திகழ்ந்து, ஓய்வு பெற்றவர். இவர் ஆக்கிய கால் அடி தாள் சொல் வரலாறு, உலகம் பரவிய தமிழின் வேர்-கல் ஆகிய ஆய்வு நூல்கள், பெரும் புகழ் பெற்றவை. கம்பராமாயணத்தில் அணிகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பாவலர் பெருஞ்சித்திரனாரின் மாணவர். தமிழ்த் தேசிய உணர்வு கொண்டவர். வள்ளலார் வழி நடப்பவர்.
இந்த நேர்காணலில் பெருஞ்சித்திரனாரையும் வள்ளலாரையும் தம் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டது ஏன் என்று விளக்குகிறார்.
கூகுள் நிறுவனம், தமிழ் மொழியைத் தன்னுடைய அலுவல் மொழியாக (Official language) அங்கீகரித்துள்ளது என்ற செய்தி, பல மாதங்களாக, சமூக ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் வாட்ஸாப் செய்திகளாகவும் சுற்றி வருகிறது. இதன் உண்மைத் தன்மை என்ன என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஆசிரியரையே காதலிக்கும் மாணவர்களை நாம் திரைப்படங்களில், கதைகளில் கண்டிருப்போம். நிஜத்திலும் சிலர் உண்டு. அப்படி மாணவர்களின் காதலுக்கு உரியவர், நிர்மலா ராகவன். மலேசியாவில் 30 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தம் சின்னஞ்சிறு காதலர்கள் குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வசிக்கும் எழுத்தாளர் நிர்மலா ராகவன், 30 ஆண்டுகளாக இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இவரது நூல்கள் பலவும், அச்சு நூல்களாக, மின்னூல்களாக, ஒலி நூல்களாக வெளிவந்துள்ளன. வல்லமையில் தொடர்ந்து பத்திகள் எழுதி வருகிறார். பாடல்கள் புனைந்து பாடியுள்ளார். எழுத்தாளர் என்ற முகத்தைக் கடந்து, இவருக்கு இன்னொரு முகமும் உண்டு. இவர், பூனைகள் வளர்த்து வருகிறார்.
பூனைகள் தொடர்பான எனது காணொலிகள் சிலவற்றை அண்மையில் யூடியூபில் வெளியிட்டேன். அதில் பூனைக்கு என்ன மன அழுத்தம் என்று கேட்டிருந்தேன். பூனைக்கு எதனால் எல்லாம் மன அழுத்தம் ஏற்படும் என எனக்கு விளக்கினார்.
அதைத் தொடர்ந்து, பூனைகள் தொடர்பான எனது கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாகவும் பூனையுடனான அவரது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையிலும் இந்த நேர்காணலை வடிவமைத்தோம்.
இந்த அமர்வில், பூனைகளின் இயல்புகள், நடத்தை, பழக்க வழக்கங்கள், உணர்வுகள் உள்ளிட்ட பலவற்றையும் மிக அழகாக விளக்கியுள்ளார். பூனையின் அசைவுகளை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என விளக்கினார் (பூனை மல்லாக்கப் படுத்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?).
மனித மொழியைப் பூனை புரிந்துகொள்கிறது என்றார் (பூனைக்குத் தமிழ் புரியும்). பூனை கர்நாடக சங்கீதமும் பாடும் (விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியை பூனை அசையாமல் உட்கார்ந்து பார்த்தது). பூனைக்கு மனிதனை விட ஐந்து மடங்கு அதிகமான நுண்ணிய கேட்கும் திறன் உண்டு என்றார். பூனையின் வேட்டைத் திறன் பற்றியும் விளக்கினார் (இவர் வீட்டுப் பூனை, நான்கு பாம்புகளைக் கொன்றுள்ளது).
பூனை வளர்ப்போர், வளர்க்க விரும்புவோர் ஆகியோருடன் பூனைகளைப் புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் இந்தப் பதிவை அவசியம் பாருங்கள்.
இன்று கடைக்குப் போய்விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். திடீரென்று தோன்றியது. வழக்கமான தெருவின் வழியல்லாது, பக்கத்துத் தெரு வழியாகச் செல்வோமே என்று வண்டியைத் திருப்பினேன். அந்தத் தெருவில் குகுக் குகுக் எனப் பெரிய ஒலி தொடர்ச்சியாகக் கேட்டது. அது ஒரு பறவையின் குரல். இதுவரை நான் கேட்காத குரல். வண்டியை நிறுத்திவிட்டு, பறவையைத் தேடத் தொடங்கினேன். குரல் மட்டும் நன்றாகக் கேட்டது. பறவையைக் காணவில்லை.
முதலில் ஒன்றிரண்டு காக்கைகள் கரைந்தன. அவை இதர காக்கைகளையும் அழைத்தன. சிறிது நேரத்தில் ஏராளமான காக்கைகள் அந்தப் பகுதியில் குவிந்து கரையத் தொடங்கின.
இறுதியில் அந்தப் பறவையைக் கண்டேன். காகம் போன்ற தோற்றத்தில் கபில நிற இறக்கைகளைக் கொண்டிருந்தது. ஜோடிப் பறவையாக வந்திருக்க வேண்டும். நான் ஒரு பறவையை மட்டும் கண்டேன். மற்றது குரல் கொடுத்துக்கொண்டிருந்தது.
இந்தப் பறவையின் பெயர், செம்பகம். இதைத் தமிழீழத்தின் தேசியப் பறவையாகப் பிரபாகரன் பிரகடனம் செய்துள்ளார். செம்போத்து, செம்பகம், செங்காகம் (Centropus sinensis) என்ற பெயர்களைக் கொண்ட இது, குயில் வரிசையில் உள்ள பறவை. இதைச் செம்பூழ் என்று சங்க இலக்கிய நூல்களான அகநானூறும் ஐங்குறுநூறும் குறிப்பிடுகின்றன. குகுக் குகுக் என்ற செம்பகத்தின் ஒலி, மிகத் தொலைவு வரை கேட்கக் கூடியது.
நாம் திட்டமிடாமலே சில செயல்கள் நிகழ்கின்றன. இன்று நான் செம்பகத்தைக் கண்டதும் அப்படி ஓர் எதிர்பாராத நிகழ்வே.
இன்று முடிச்சூர் சாலையில் சென்றபோது, ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் வாசலில் இருந்த பிள்ளையாருக்கு அப்போதுதான் அபிஷேகம் முடிந்து, அலங்காரம் தொடங்கியிருந்தது. கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவேன் எனப் பிடித்து, நின்னைச் சில வரங்கள் கேட்பேன், அவை நேரே இன்றெனக்குத் தருவாய் எனப் பாரதி கேட்பது போல், எனக்குக் கேட்க ஏதுமில்லை. எனினும் பக்தர்கள் உள்ளம் குளிர, அந்த அருட்காட்சியைப் படம் பிடித்து வந்தேன்.
தமிழ் இணையக் கழகத்தின் இணையத் தமிழ்ச் சொற்பொழிவுத் தொடரில் ‘எங்கே புத்தாக்கம்?’ என்ற தலைப்பில் உரையாற்றினேன். இதைத் தொடர்ந்து, ஆய்வாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தேன். இதில் பேராசிரியர்கள் உமாராஜ், சிதம்பரம், துரை.மணிகண்டன், மென்பொருளாளர் நீச்சல்காரன், யாழ்பாவாணன், எட்வர்டு பாக்கியராஜ், ஆய்வு மாணவர் தமிழ் பாரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்தக் கேள்வி – பதில் அமர்வை, இந்தப் பதிவில் காணலாம்.
09.08.2020 அன்று இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு Teamlink செயலி ஊடாக இந்த அமர்வு தொடங்கி நடைபெற்றது.