Category: செய்திகள்

  • மறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு

    மறவன்புலவு க சச்சிதானந்தன்
    தலைவர், சிவசேனை, இலங்கை

    உண்ணா நோன்பிருக்கிறேன்

    போர்த்துக்கேயரின் அடிவருடிகள், ஊர்காவற்றுறையில் ஒளிந்திருந்த காக்கை வன்னியன் வாரிசுகள், யாழ்ப்பாண ஊடகங்களின் அச்சு இதழான வலம்புரி இதழ் அலுவலகத்துக்கு இன்று 20.02.2020 வியாழன் மாலை வந்தார்கள். 
    அடித்து நொறுக்க முயன்றார்கள்
    இடித்து அழிக்க முயன்றார்கள்
    விட்டிருந்தால் தீயிட்டுக் கொளுத்தி இருப்பார்கள்.

    ஊர்காவற்றுறையில் சைவத் தெருப்பெயர்களைக் கிறித்தவப் பெயர்களாக மாற்ற முனைகிறார்கள் எனச் செய்தி வெளியிட்டதற்காகத் தாக்கினார்கள்

    ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு என்ற இயேசு பெருமானின் வரிகளை மறந்து, வன்முறையில் ஈடுபடுகின்ற போர்த்துக்கேயரின் அடிவருடிகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    வலம்புரி இதழ் மீது கைவைத்தால் சைவத் தமிழ் உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

    வன்முறையைத் கண்டித்து
    ஊடக சுதந்திரத்தை ஆதரித்து
    சைவத் தமிழ் பண்புகளைக் காக்க
    21.2.2020 வெள்ளி காலை தொடக்கம், யாழ்ப்பாணம் கண்டி வீதி சுண்டிக்குளி  ஆயர் இல்லத்துக்கு முன்பாக அடையாள உண்ணா நோன்பிருக்கிறேன்.

    Share
  • ‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவிப்பு மடல்

    ‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவிப்பு மடல்

    காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் ‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவிப்பு மடல்

    Share
  • குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்

    குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்

    அண்ணாகண்ணன்

    20.02.2020 அன்று சென்னை வேப்பேரி குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவையில் உரையாற்றுகிறேன். 

    வாய்ப்புள்ளோர் வருக.

    Share
  • பேராசிரியர் வீ.அரசு மணிவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு

    பேராசிரியர் வீ.அரசு மணிவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு

    உரையாளர் குறித்து

    தமிழ்த் தேசிக அரங்கர் அண்ணாவியார் இளைய பத்மநாதன் அவர்கள் இலங்கை நெல்லியடியில் (1938) பிறந்தவர். தற்பொழுது ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருபவர். தமிழ் அரங்கச் செயல்பாட்டில் மூத்த முன்னோடி வழிகாட்டியாகச் செயல்பட்டு வருபவர். இலங்கையில் நடைபெற்ற, நடைபெற்று வருகிற இனவாதச் சிக்கலில் அரங்கச் செயல்பாட்டின் வழியாகத் தமிழ்த் தேசிகத்தைக் கட்டமைக்க முயன்றவர். இதனைப் பண்டைய தமிழ் மரபிலிருந்தும் சமகால கூத்து மரபிலிருந்தும் மீள் உருவாக்கம் செய்தவர். சிலப்பதிகாரத்தில் உள்ள அரங்க மரபுகளை ஆய்வு செய்யும் அதே வேளையில் சிலப்பதிகாரமே ஒரு அரங்கப்பனுவல்தான் என்பதையும் நிறுவுகிறார். இவரது முதன்மையான ஆய்வு நூல் சிலப்பதிகாரம் அரங்கத் திறம். நாடகக்கலை குறித்து உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் முறையாகப் பயிற்சி பெற்று பத்துக்கும் மேற்பட்ட நாடகப்பனுவல்களை உருவாக்கியுள்ளார். இலங்கை, தமிழகம், ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் தனியாகவும் கூட்டாகவும் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். எண்பது வயதினைக் கடந்து இன்றும் தமிழ் தேசிக அரங்கம் குறித்து சிந்தித்தும் செயல்பட்டும் வருபவர். இவரது கலைப்பயண வரலாறு என்பது கடந்த அறுபது ஆண்டுகால தமிழ் அரங்கக்கலைவரலாற்றின் கலைப்பயணமும் ஆகும்.

    முகமாடல் – Curtain Raiser

    ‘எனது அரங்கப் பயணம்’ எனது அரசியல் பயணமும் ஆகும். நான் அரசியலுக்கு ஊடாக நாடக அரங்கிற்கு வந்தவன். எனது நாடகங்கள் அரசியல் பேசும். எனது நாடகங்கள் நிரந்தர முரண்பாடுகளைப் பற்றிப் பேசும். ஏனைய முரண்பாடுகள் முனைப்புப் பெறும்போது அவற்றையும் பேசும். முரண்பாடுகளில் நடுநிலைமை இல்லை. எப்பக்கம் என்பதுதான் கேள்வி. வர்க்கமாக இருக்கலாம் இனமாக இருக்கலாம் சாதியாக இருக்கலாம் பால்வேறுபாடாகவும் இருக்கலாம். எதுவானாலும் அடக்கி ஒடுக்கப்பட்டவர் பக்க நியாயத்தையே எனது நாடகங்கள் பேசும்.

    உள்ளடக்கத்தில் மட்டுமல்ல உருவத்திலும் அரசியல் உண்டு. உருவம் அடையாளம் காட்டும். இது அடையாள அரசியல். அரங்கின் அடையாளத் தேடலே எனது அரங்கப்பயணமாகும். என் அரங்கப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கிறேன். உணராமலும் உணர்ந்தும் அடையாளத்தைத் தேடியே அரங்கில் பயணித்திருக்கிறேன். பயணத்தின் ஒவ்வொரு தரிப்பிடமும் ஒவ்வொரு அரங்கக் கோட்பாடாக வழிகாட்டியது. தேசிக அரங்கு என்ற அரங்கக் கோட்பாட்டை அடைந்திருக்கிறேன். அடையாளத் தேடலின் அதிமுக்கிய இடத்திற்கு வந்திருக்கிறேன். நான் இந்த இடத்திற்கு வந்தவற்றை உரையாடவுள்ளேன். எனது ஒவ்வொரு நாடக அரங்காக்கமும் அரங்கியல் அடையாளத்தை நோக்கிய பாய்ச்சலாக உள்ளது. ஆகவே ஒவ்வொரு நாடகத்தையும் சுட்டிப் பேசலாம்.

    பேராசிரியர் வீ. அரசு பற்றிய சிறு குறிப்பு

    பேராசிரியர் வீ. அரசு அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் பேராசிரியர் மற்றும் தலைவராகப் பணியாற்றியவர். தமிழ் இலக்கியக் கல்வியை, ஆய்வை விரிவான தளத்தில் முன்னெடுத்தவர். தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல் முதலான துறைகளோடு இணைத்து தமிழ்க்கல்வியை சமூகவியல் கல்வியாக வளர்த்தெடுத்ததுடன் அதே தன்மையோடு ஏராளமான ஆய்வு மாணவர்களையும் உருவாக்கியவர். தமிழ்ச்சமூகம் குறித்த மறைக்கப்பட்ட உண்மைகளை  அரிதான ஆவணங்களிலிருந்து தொகுத்தும் பதிப்பித்தும் ஆராய்ந்தும் வெளிப்படுத்தி வருபவர்.

    பேராசிரியர் வீ. அரசு அவர்களின் மணிவிழாவின் போது அவரது மாணவர்களால் உருவாக்கப்பட்டது இவ்வறக்கட்டளை.

    Share
  • ‘புத்தகங்களும் நானும்’ நடமாடும் இலவச வாசகசாலை

    ‘புத்தகங்களும் நானும்’ நடமாடும் இலவச வாசகசாலை

    எம். ரிஷான் ஷெரீப்

    கடந்த சில வருடங்களாக நாடு முழுவதிலும் ‘இலவச நூலகங்கள்’ எனும் முயற்சியை மேற்கொண்டு, பொது மக்களிடம், அவர்கள் வாசித்த புத்தகங்களைச் சேர்த்தெடுத்து வாசகசாலைகள் அற்ற ஊர்களில் பேரூந்து நிலையங்களிலும், புகையிரத நிலையங்களிலும், வைத்தியசாலைகளிலும் இலவச நூலகங்களை அமைத்த முயற்சி மிகுந்த வெற்றியளித்தது. அதைக் குறித்து நீங்களும் உங்கள் தளத்தில் பதிந்திருந்த எனது பதிவு பரவலான வரவேற்பைப் பெற்று பலரும் புத்தகங்களை அனுப்பியிருந்தார்கள். அந்தந்த இடங்களில் அமைக்கப் பெற்ற நூலகங்களுக்கு அந்தந்த இடங்களின் மேலதிகாரிகளுக்கே பொறுப்பை வழங்கியிருப்பதால் அவை இப்போது பலரதும் கவனத்தைப் பெற்று சிறப்பாக இயங்கி வருவதோடு, புத்தக வாசிப்பாளர்களாக பலர் இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

    சிங்கப்பூரிலிருந்து எழுத்தாளர் ஜெயந்தி சங்கர், சென்னையிலிருந்து எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன், கோயம்புத்தூரிலிருந்து ஜே.வி. விஜயகுமார் ஆகியோர் பெருந் தொகையான தமிழ் புத்தகங்களை அனுப்பியிருந்ததால், அவற்றை கவிஞர் கருணாகரன் மூலமாக கிளிநொச்சியிலிருக்கும் வறிய கிராம நூலகங்களுக்கும், இன்னும் பிற நூலகங்களுக்கும் பகிர்ந்தளிக்க முடிந்தது. இவ்வாறாக இலவச வாசகசாலை விபரத்தை பலரதும் கவனத்துக்குக் கொண்டு சென்ற உங்களுக்கும், புத்தகங்களை அனுப்பி வைத்திருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியும், பேரன்பும் என்றும் உரித்தாகும்.

    இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக, கடந்த ஒன்றரை வருட காலமாக எனது ஊர் அமைந்துள்ள மாவட்டத்தில் வாசகசாலைகளற்ற மலைக் கிராமங்களுக்கு புத்தகங்களை எடுத்துச் சென்று அங்குள்ள சிறுவர்களை புத்தகங்களை வாசிக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு பெட்டிக்குள் புத்தகங்களை இட்டு சைக்கிளில் ஏற்றிச் சென்று கிராமத்திலுள்ள பொது மண்டபமொன்றில் போயிருந்து, சைக்கிளையும் பெட்டியையும் கண்டு ஒன்று சேரும் பெற்றோர்களையும், பிள்ளைகளையும் கூப்பிட்டு அவர்களிடம் புத்தகங்களிலுள்ள கதைகளையும், வாசிப்பின் பயன்களையும் எடுத்துரைத்து இலவசமாகப் புத்தகங்களை வழங்கி விட்டு வருதல், இரண்டு கிழமைக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட தினத்தை அடுத்து வரப் போகும் தினமாகக் கூறுதல், குறிப்பிட்ட அத்தினத்தில் போய் அந்நூல்களைத் திருப்பி வாங்கிக் கொண்டு வேறு நூல்களை வழங்கி வருதல் இப்படியாக பதினைந்து கிராமங்களுக்கு இந்த இலவச நடமாடும் நூலக சேவையைச் செய்ய முடிந்தது.

    இந்த இலவச சேவையைப் பயன்படுத்தும் வாசகர்களிடம் முன்பு வழங்கிய நூல்களைத் திரும்பப் பெறும்போது பெரியவர்களிடமும், சிறுவர்களிடமும் அவர்களது வாசிப்பனுபவம் மற்றும் நூல் குறித்த விமர்சனத்தை கூறுமாறு அல்லது எழுதித் தருமாறு கோரப்படும். அவர்களும் தம்மாலியன்ற விதத்தில் நூலைப் பற்றிக் கூறும்போது அல்லது எழுதித் தரும்போது இச் சேவையின் பயனை ஆத்மார்த்தமாக உணர முடிகிறது.

    இந்த எண்ணக் கரு நண்பரும், சிறுவர் நல, பராமரிப்பு உத்தியோகத்தருமான திரு. மஹிந்த தசநாயக்கவுடையது. அவர் ஒரு வறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்து பட்டதாரியானவர். எனவே கிராமப்புறங்களில் வாசிக்கத் தேவையான புத்தகங்கள் கிடைப்பதிலுள்ள சிக்கல்களை அவர் நன்கு அறிவார். அவரது முயற்சியால் சிங்கள, தமிழ், முஸ்லிம் மலைக் கிராமங்களில் இந்த இலவச நடமாடும் நூலக சேவையை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடிகிறது.

    இந்த வருடம், இந்தச் சேவையை எமது மாவட்டத்துக் கிராமங்களோடு மாத்திரம் நிறுத்தி விடாது, பிற மாவட்டங்களிலுள்ள வறிய கிராமங்களிலும் இதனை முன்னெடுக்கத் திட்டமிட்டோம். எனவே போரால் பாதிக்கப்பட்ட, பல வறிய கிராமங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணத்துக்கு புத்தகங்களை எடுத்துக் கொண்டு போகத் தீர்மானித்தோம். நான் தயாரித்துக் கொடுத்த பெட்டியை, நண்பர் மஹிந்த தசநாயகவின் மனைவி வாங்கிக் கொடுத்த சைக்கிளில் பிணைத்து யாழ்ப்பாணத்துக்கு புகையிரதத்தில் அனுப்பியாயிற்று. ஆனால் ஏற்கெனவே தமிழ் நூல்கள் எல்லாவற்றையும் விநியோகித்து முடித்திருந்தோம். எனவே புதிதாக நூல்களைக் கொள்வனவு செய்ய வேண்டியிருந்தது.

    வறிய தமிழ்ப் பிள்ளைகளுக்கு நூல்கள் வாங்க வேண்டும் என்ற விடயத்தைக் கூறியதும் மஹிந்த தசநாயக்கவின் சிங்கள நண்பரொருவர் இருபதாயிரம் ரூபாயை இலவசமாக அனுப்பியிருந்தார். அதை எடுத்துக் கொண்டு நானும், மஹிந்தவும் விடிகாலையே புறப்பட்டு கொழும்பிலிருக்கும் குமரன் புத்தக நிலையத்துக்குப் போய் இருபதாயிரம் ரூபாய்க்கு தமிழ்ப் புத்தகங்களைக் கொள்வனவு செய்தோம். இலவச நடமாடும் நூலக விடயத்தைக் கூறியதும், புத்தக நிலைய உரிமையாளர் திரு. குமரன் அவர்கள் (எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவர்களது மகன்) நாம் வாங்கிய நூல்களுக்கு தன்னாலியன்ற சிறந்த விலைக் கழிவினை வழங்கி உதவினார். அதனால் இலங்கை, இந்திய வெளியீடுகளான ஏறத்தாழ நூற்றைம்பது நூல்களை வாங்க முடிந்தது.

    அவற்றைப் பொதி செய்து எடுத்துக் கொண்டு நள்ளிரவு புகையிரதத்தில் யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டு மறுநாள் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தோம். அங்கு, ஏற்கெனவே புத்தகங்கள் வழங்கப்பட வேண்டிய வறிய பிள்ளைகளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவிகள் இனங்கண்டு அவர்களை கொக்குவில் கோயிலருகே ஒன்றிணைத்திருந்தார்கள். அப் பிள்ளைகள் கொக்குவில் புகையிரத நிலையத்தருகே குடிசைகளில் வசிக்கும் பிள்ளைகள். அப் பிள்ளைகள் அந்த மாணவிகளோடு நெருக்கமாக இருப்பதையும், மாணவிகள் அவர்களோடு தமிழில் கதைப்பதையும் காண முடிந்தது. இரண்டு வயது பெண் குழந்தையொன்று மாணவியின் கையிலேயே அமர்ந்து கொண்டு தனது தாயிடம் செல்ல மறுத்தது. கொக்குவிலைச் சேர்ந்த துவாரகாவும் இன்னும் இரண்டு இளைஞர்களும் கூட அங்கு வந்து சேர்ந்து நூல்களை விநியோகிக்க உதவினார்கள்.

    காலையிலிருந்து கொக்குவிலில் சேர்ந்திருந்த சிறுவர்களுக்கு ஒரு தொகுதி நூல்களை விநியோகித்து விட்டிருந்தோம். எனினும் அங்கு இலவசமாக வழங்கப்படும் நல்ல நூல்களை எடுத்துக் கொண்டு சென்று வாசிக்கக் கூடிய பிள்ளைகளின் தட்டுப்பாடு நிலவியது. நாம் சென்றது வார இறுதி நாளில் என்பதால், பெருமளவான பிள்ளைகள் பிரத்தியேக (ட்யூஷன்) வகுப்புகளுக்குச் சென்றிருந்தமை எமக்கு ஆச்சரியமளித்தது. வாரத்தில் ஐந்து நாட்கள் பாடசாலையில் காலையிலிருந்து மாலை வரை படித்துக் களைத்துப் போன பிள்ளைகளை சனி, ஞாயிறு விடுமுறை தினங்களிலும் விடிகாலையிலிருந்து இரவு வரை பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுப்புவது சரியா? அவர்களுக்கு விளையாடுவதற்கோ, வேறு தமக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகளைச் செய்வதற்கோ பெரியவர்கள் நேரம் கொடுப்பதே இல்லை. பாடசாலையில் ஒழுங்காகவும், முறையாகவும் கற்பித்தால் பிள்ளைகள் பணம் கொடுத்துக் கற்க வேண்டிய பிரத்தியேக வகுப்புகளுக்கான அவசியமே இல்லையே? தமிழ்ப் பிரதேசங்களில் ஏன் இந்த நிலைமை காணப்படுகிறது? இதைப் பற்றி மேலும் கூறினால் பிரத்தியேக வகுப்பாசிரியர்களும், சில பெற்றோர்களும் கோபிப்பார்கள். இது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விடயம். விடயத்துக்கு வருவோம்.

    யாழ் சிறுவர் நல, பராமரிப்பு உத்தியோகத்தர் ராஜீவனைத் தொடர்பு கொண்டபோது சுன்னாகம், மானிப்பாய் வழியே சங்கிலிப்பாய் கிராமத்துக்கு அவர் எம்மை அழைத்துச் சென்றார். அங்கு அவரது முயற்சியின் கீழ், திரு. கஜரூபன் அவர்களது ஒருங்கிணைப்பில் புத்தகங்களை வாசிக்கக் கூடிய ஐம்பது, அறுபது பிள்ளைகள் ஒன்று சேர்ந்திருந்தார்கள். நாட் கூலி வேலைகளுக்குச் செல்லும் பெற்றோர்களின் பிள்ளைகள் என்பதால் தனிப்பட்ட வாசிப்புத் தேவைகளுக்காக நூல்களை வாங்கி வாசிப்பதென்பது அவர்களுக்கு பெரும் கனவு. அவ்வாறானவர்களுக்கு புத்தகங்களை வழங்க முடிந்ததில் பெரும் திருப்தியை உணர்ந்தோம். எஞ்சிய நூல்களை கஜரூபனிடம் கொடுத்தோம். இரு கிழமைக்குப் பின்னர் அப் பிள்ளைகள் வாசித்து முடித்த நூல்களைக் கேட்டு வாங்கி எஞ்சிய நூல்களை விநியோகிக்குமாறு கூறி விட்டு அன்றிரவு புகையிரதத்தில் புறப்பட்டு மறுநாள் வீடு வந்து சேர்ந்தோம். புதிதாகச் சேரும் தமிழ் நூல்களை எடுத்துக் கொண்டு அடுத்த மாதம் யாழ்ப்பாணம் செல்லவிருக்கிறோம்.

    ‘புத்தகங்களும் நானும்’ எனும் இந்த இலவச நடமாடும் நூலக சேவை குறித்து முன்பே நான் வெளிப்படையாக அறியத் தந்திருந்தால் நூல்களைப் பெற்றுக் கொள்வதிலும், நூல்களைப் பெற்றுக் கொள்ளத் தகுதியானவர்களைக் கண்டடைவதிலும், ‘நீங்கள் NGO வா?’ ‘அரசாங்கம் உங்களை அனுப்பியதா?’ ‘உல்லாசமா ஊர் சுற்ற வேண்டிய வயதில, இந்த வெயிலில் ஏன் இதைச் செய்து திரியுறீர்?’ போன்ற கேள்விகளை எதிர்கொள்ளாதிருக்கவும் முடிந்திருக்கும். பல மாவட்டங்களிலுமிருக்கும் வறிய தமிழ், முஸ்லிம் கிராமங்களில் இதைத் தொடர்ந்தும் செய்யவிருப்பதால் இப்போதேனும் இதைப் பதிந்து வைப்பது தாமதமில்லை என்று தோன்றுகிறது.

    பிள்ளைகளின் வாசிப்பு ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் சிநேகபூர்வமான சுற்றுச் சூழல் ஆகியவற்றை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டு ‘புத்தகங்களும் நானும்’ எனும் இலவச நடமாடும் நூலக சேவை பல பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தற்காலத்தில் பிள்ளைகள் தொழில்நுட்பக் கருவிகளோடு ஓரிடத்துக்குள் அடைபட்டு, ஒரு விதத்தில் தனிமைப்பட்டிருக்கும் நிலைமை காணப்படும் சூழலில் புத்தகங்களை வாசிக்கப் பழக்குவதன் மூலம் சுற்றுச் சூழலையும், சமூகத்தையும் நேசிக்கும் மனிதர்களாகி எதிர்காலத்தைச் சந்திப்பவர்களாக அப் பிள்ளைகளை மாற்ற முடியும். இதை இலக்காகக் கொண்டு நட்போடு கை கோர்ப்பதே ‘புத்தகங்களும் நானும்’ சேவையின் எதிர்பார்ப்பாகும்.

    வாசகர்கள் தாம் வாசித்து முடித்த நூல்களை இலவசமாக அனுப்பி வைத்தால் அவற்றையும் சேகரித்து வறிய கிராமப்புறங்களுக்கு இவ்வாறு வழங்குவோம். எழுத்தாளர்களும் தாம் வெளியிட்ட நூல்களின் பிரதிகளை அனுப்பி வைக்கலாம். வாசகர்கள் அந் நூல்கள் தொடர்பாக ஏதேனும் விமர்சனங்களை முன்வைத்தால் அவை எழுத்தாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இச் சேவையை, தன்னலம் பாராது சேவை மனப்பான்மையோடு தமது பிரதேசங்களிலும் முன்னெடுக்க விரும்புகிறவர்களும் எம்மை அணுகலாம்.  

    தொடர்புக்கு mrishansh@gmail.com

    பெரியவர்கள், பிள்ளைகளுக்கு வழங்க வேண்டியது முன்னுதாரணங்களையேயன்றி, அறிவுரைகளை அல்ல. அத்தோடு உலகத்தை நேசத்தோடு ஒன்றிணைக்க நல்ல புத்தகங்களாலும், புத்தக வாசிப்பாளர்களாலும் முடியும், இல்லையா?

    Share
  • இலக்கிய அமுதம் நிகழ்வு 09-02-2020

    இலக்கிய அமுதம் நிகழ்வு 09-02-2020

    தொடர்பிற்கு 

    சுந்தரராஜன் – 9442525191
    அ இராமச்சந்திரன் 2491 8096

    Share
  • நந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ (Sun Seeds) – கவிதைத் தொகுதி வெளியீடு

    நந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ (Sun Seeds) – கவிதைத் தொகுதி வெளியீடு

    நந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ – கவிதைத் தொகுதி வெளியீடு

    தர்பார், சர்க்கார், என்னை அறிந்தால், ஐ, சர்வம் தாளமயம், தங்க மீன்கள் போன்ற தமிழ்ப்படங்களுக்கு சப்டைட்டில் செய்த நந்தினி கார்க்கி, Sun Seeds (சூரிய விதைகள்) என்ற பெயரில் ஒரு ஆங்கிலக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

    கவிஞர் வைரமுத்துவும் அவரது மனைவி பொன்மணி வைரமுத்து மகன்கள் மதன்கார்க்கி, கபிலன் வைரமுத்து என்ற கவிதைக் குடும்பத்தில் இப்போது அவரது மருமகள் மற்றும் மதன் கார்க்கியின் மனைவி நந்தினி கார்க்கி ஒரு ஆங்கிலக் கவிஞராய் உதயமாகியுள்ளார்.

    இருட்டில் இருந்து விடியலுக்கு என்ற இரு வழிப் பயணத்தை மேற்கொள்கிறது இந்த நூல். இயற்கையின் அழகை, மாற்றங்களை ஒரு வழியில் கண்டு களித்து மனதின் மேடு பள்ளங்களில் இன்னொரு வழியில் பயணம் செய்கின்றன நந்தினி கார்க்கியின் கவிதைகள்.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று, அமெரிக்காவில் பணி புரிந்து, ஏழு கண்டங்களுக்கும் பயணம் செய்த தன் அனுபவங்களின் சாறு இந்த நூல் என்று நூற்குறிப்பில் நந்தினி கார்க்கி எழுதியுள்ளார். இவர் கடந்த ஓராண்டாக தினமொரு சங்கப்பாடலை பற்றிய விளக்க உரையை இணையவழி பாட்காஸ்ட் செய்து வருகிறார்.

    இந்தக் கவிதைத் தொகுப்பை நோஷன் பிரஸ் வெளியிட்டுள்ளது. அமேசான், அமேசான் கிண்டில் போன்ற தளங்களில் வெளியிடப்படும் இந்த நூல் ஆங்கிலக் கவிதை விரும்பிகளுக்கு மட்டும் விருந்தளிக்காமல் மனம் தளர்பவர்களுக்கும் மருந்தளிக்கும் என்று நம்புகிறார் நந்தினி கார்க்கி.

    Share
  • Invitation – Lecture and Demonstration

    Invitation – Lecture and Demonstration

    About the talk and demonstration

    In this talk, Nrithya Pillai discusses her position as a hereditary woman artist from the isai velalar (formerly devadasi) community of Tamilnadu. She will address socio-political issues related to both identity as well as performance, for she understands these to be deeply related. She will talk about issues such as Indian nationalism, “devadasi reform,” the reinvention of dance in Madras in the 1930s, as well as questions around the deeply political nature of today’s Bharatanatyam as both a discourse and a practice. This event will feature a lecture, demonstration, and also short excerpts of performance.

    About the speaker/performer

    Nrithya Pillai is a dancer, dance composer, singer, writer, speaker, and dance instructor who proudly claims her hereditary nattuvanar-devadasi lineage. Artistic Director of Rajarathnalaya,  a bharathanatyam institution founded by her maternal grandfather Swamimalai Rajarathnam Pillai, she consciously preserves and reanimates the rich repertoire and the teaching and choreographic practices of her celebrated ancestors, who include Vaitheeswarankoil Meenakshisundaram Pillai, T.K Swaminatha Pillai and Padmashri Vazhuvoor B. Ramiah Pillai. Epitomizing the teacher-nattuvanar of the hereditary paramparais, and carving out her own space as a performer with impeccable training and vast creativity, Nrithya nevertheless represents a new kind of artistic and intellectual engagement with the troubled history of bharatanatyam in the long 20th century. She vigorously challenges the power relationships and ideologies that made the form unavailable to women of her community, and advocates fiercely for the restoration of credit for bharatanatyam technique, repertoire, and philosophy to the hereditary isai vellala community of practitioners. Her performances and her writings about the upper caste appropriation of this form, which have evoked both enthusiastic accolades and awards on the one hand and resistance on the other, are at once embodied research, political intervention, and a labour of abiding love towards the traditional custodians of the form–especially towards her foremothers, who include the remarkable Tiruvalaputtur Kalyani. Nrithya’s voice, raised against casteism in the contemporary dance world, is unique in the field today, and her message against historical misrepresentation is relevant and powerful.

    Share
  • பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு

    பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு

    திருநெல்வேலி அருகில் உள்ள பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் 25.01.2020 அன்று நடைபெற உள்ள தமிழிணையப் பயிலரங்கில் பங்கேற்கிறேன். அழைப்பிதழ் காண்க. வாய்ப்புள்ளோர் வருக.

     

    Share
  • பிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு

    பிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு

    பிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு, 18.01.2020 அன்று சென்னையில் நடக்கிறது. அழைப்பிதழ் காண்க.

    Share
  • ஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது

    ஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது

    அதிக மாடுகளை அலங்காநல்லூர் களத்தில் கடந்த ஆண்டு அடக்கிய வீரருக்கும், இவ்வாண்டு அடக்கும் வீரர் திலகத்திற்கும் ரூ. 4 லட்சம் பெறுமதியான கறவை மாடுகளை The Rise என்ற எழுமின் அமைப்பு வழங்கிச் சிறப்பிக்கிறது.

    The Rise என்ற எழுமின் அமைப்பு, உலகளாவிய தமிழ்த் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்களை இணைத்து, சுமார் 30 நாடுகளில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் மதுரைக் கிளை, ஜல்லிக்கட்டு வீரர்கள் பலர், வாழ்வாதார வசதிகள் இன்றி வாடுவதை எழுமின் அமைப்பின் பொதுக் கவனத்திற்குக் கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் அனைத்துலக எழுமின் அமைப்பு, அத்தகைய வீரர்களுக்கு உதவ முடிவு செய்தது.

    முதற்கட்டமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கில், கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் அதிக மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 8 கறவை நாட்டு மாடுகளை அலங்காநல்லூர் அரங்கிலேயே மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் இன்று மாலை வழங்குகிறது.

    எழுமின் அமைப்பின் உலகளாவிய தொழிலதிபர்கள் மலேசியா தான்சிறி டத்தோ பலன், கத்தார் பஸீத் அஹமது, சிங்கப்பூர் அஹமது புகாரி, மதுரை பெரிஸ் மகேந்திர வேல், கனடா ஸ்டன் முத்துலிங்கம், சென்னை சௌகியா குழுமத்தின் சிவகுமார், சென்னை சில்க்ஸ் நிறுவனம் உள்ளிட்டோர் இந்தக் கறவை மாடுகளை நன்கொடையாகத் தந்துள்ளனர்.

    “வீரர்கள் வாழ்ந்தால்தான் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டும் வாழும்” என எழுமின் அமைப்பின் நிறுவனர் அருட்திரு. ம. ஜெகத் கஸ்பர் தெரிவித்தார். கறவை மாடுகள் வழங்கும் பணியினை எழுமின் மதுரைத் தலைவர்கள் பாலகுரு, ஜலீல், சரவணன், சுரேஷ் மனோகரன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்து நல்லதொரு தொடக்கத்தைத் தந்துள்ளனர். ஜல்லிக்கட்டு வீரர்களின் வாழ்வாதாரத்திற்குக் கறவை மாடுகள் தந்து உதவ, உலகத் தமிழர்களை எழுமின் அமைப்பு அழைக்கிறது. முன்வருவோர் ஹேமாவதி அவர்களை +91 94443 35177 தொடர்பு கொள்ளலாம்.

    (பத்திரிகைச் செய்தி)

    Share
  • ஓவியர் வீர சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘ஞானச் செருக்கு’

    ஓவியர் வீர சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘ஞானச் செருக்கு’

    மக்கள் தொடர்பாளர் ஜான் 

     
     

    இயக்குநர் தரணி ராசேந்திரன்   இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள படம் ‘ஞானச் செருக்கு’.

    ஓவியர் வீர சந்தானம், வ.ஐ.ச. ஜெயபாலன், தமிழ்மாறன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

    தரணி ராசேந்திரன் பூர்வீகம் திருவாரூர் என்றாலும் சென்னையிலேயே பிறந்து வளர்ந்து படித்தவர். பொறியியல் படித்தபோதே படிப்பில் நாட்டம் இல்லாமல் இவரது கவனம் சினிமா பக்கம் திரும்பியது. இதோ அவரே இயக்குநரான அனுபவங்களையும், ஞானச்செருக்கு உருவான விதம் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்..

    “பொறியியல் படித்தாலும் சினிமா ஆர்வம் அதிகமாக இருந்ததால் ஒளிப்பதிவு பக்கம் என் கவனம் திரும்பியது. அதன்பிறகு ஒளிப்பதிவு குறித்த டிப்ளமோ கோர்ஸ் முடித்தேன்.

    சினிமாவில் உதவி இயக்குநராக சேர்வதில் ஏற்படும் காலதாமதம் தேவையில்லை என நினைத்ததால், நானே குறும்படங்களை எடுக்க ஆரம்பித்து அதன் மூலம் சினிமா கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

    ஒரு கட்டத்தில் பெரிய படமெடுக்கும் நம்பிக்கை வந்தபோது ஓவியர் வீரசந்தானத்துடன் நட்பு ஏற்பட்டது. என் கதையின் நாயகனாக நடிக்க வீர சந்தானம் பொருத்தமான தேர்வாக இருந்தார்.

     

    இந்தக் கதையை படமாக எடுப்பது அபத்தமான முயற்சி என்றுகூடப் பலர் கூறினார்கள். முதலில் அரைமணி நேரம் படமாக எடுத்துப் பார்ப்போம் என்று நினைத்தேன். அதன்பிறகு ஒரு தயாரிப்பாளரிடம் இந்தக் கதையைக் கூறியபோது, அதை ஒரு பெரிய படமாக எடுக்கும் அளவிற்கு டெவலப் செய்யுங்கள் என்று கூறினார்.

    எல்லாவற்றையும் முடித்த நேரத்தில் அவரால் அந்தப் படத்தைத் தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அந்தப் படத்தில் என்னுடன் இருந்த பலரும் அந்தச் சமயத்தில் விலகிவிட்டனர். அதன் பின்னர் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் போட்டு இந்தப் படத்தை எடுத்து முடித்தோம். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் க்ரவ்டு பண்டிங் முறையில் தான் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இப்படி ஒரு விஷயம் ஓவியர் வீரசந்தானத்துக்குத் தெரியாது. ஆனால் படப்பிடிப்பு நடத்தத் தேவையான பணம் இல்லை என்று தெரிய வந்தபோது என்னை அழைத்துத் திட்டினார். பின்னர் அவரை எப்படியோ சமாதானப்படுத்தி எனது சம்பளம், எனது மாமாவின் பெர்சனல் லோன் ஆகியவற்றைக் கொண்டு மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாகப் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.

    ஓவியர் வீரசந்தானம் கூட, தனக்கு ஏதாவது சம்பளம் கொடுக்க வேண்டும் என நினைத்தால் அதையும் இந்தப் படத்திற்கு பயன்படுத்திக்கொள் என்று சொல்லிவிட்டார்.

    இத்தனை கால இடைவெளியில் தாமதமாக இந்தப் படம் உருவானாலும் கால மாற்றம் இதன் கதையில் எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது பிளஸ் பாயிண்ட். இந்த படத்தின் டப்பிங் முடிந்த நிலையில் ஓவியர் வீரசந்தானம் மறைவு என்னை ரொம்பவே பாதித்தது.

    அதன்பிறகு சிறிய இடைவெளி விழுந்தாலும், மீண்டும் புதிய குழுவினருடன் இந்தப் படத்தின் வேலைகளை முடித்தேன். இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு இந்தப் படத்தின் மதிப்பு பற்றி வெளியே தெரிய வேண்டும், அதன்பிறகு அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

    நான் எடுத்துள்ளது கமர்சியல் படம்தான். ஆனாலும் இந்தப் படத்தைத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினேன். கிட்டத்தட்ட நாற்பது நாடுகள்  சிறந்த படமாக இதை அங்கீகரித்துள்ளன. இந்தப் படத்திற்கு இதுவரை 7 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன. இயக்குநர் இமயம் பாரதிராஜா இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்து கைகொடுத்துப் பாராட்டினார். பாரதிராஜாவைப் பொறுத்தவரை இதுவரை பாலுமகேந்திரா, மகேந்திரன், இளையராஜாவிடம் மட்டுமே கை கொடுத்து வாழ்த்தியுள்ளாராம்.

    அதன் பிறகு என்னிடம் கைகொடுத்து வாழ்த்தியுள்ளதாக மற்றவர்கள் சொன்னபோது எனக்கு இதுவே மிகப்பெரிய விருது பெற்றது போல இருந்தது. அவர் மட்டுமின்றி, எழுத்தாளர்கள், முக்கியமான அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தைப் பார்த்துப் பாராட்டி உள்ளார்கள்.

    இது வெகுஜனப் படம்தான். இந்தப் படத்திலும் மூன்று ராப் பாடல்கள் இருக்கின்றன. 80 வயதில் உள்ள கலைஞனின் எழுச்சிதான் இந்தப் படம்.

    இந்தச்  சமூகம், அதிகார வர்க்கம் ஒரு கலைஞனை எப்படிப் பார்க்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தால் மிகப்பொருத்தமாக இருந்திருக்கும். அந்த அளவிற்கு  முழுக்க முழுக்க கமர்சியல் படம்தான் இது. குடித்துவிட்டு கூத்தடிப்பவர்களுக்கும் இரட்டை அர்த்த வசனங்களை எதிர்பார்ப்பவர்களுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்காது. காரணம் நான் குப்பைப் படத்தை எடுக்கவில்லை. படம் பார்க்க வரும் ரசிகர்களை முட்டாளாக்கி அனுப்பக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

    நல்ல படத்தைத் திரையிடக்கூடாது என்று எந்த தியேட்டர்காரர்களும் நினைப்பதில்லை. நல்ல படம் என்பதை அவர்களிடம் நாம் தான் சரியாகக் கொண்டு செல்லவேண்டும். அவர்களுக்கும் வியாபாரம், குடும்பம் என்றெல்லாம் இருக்கிறது அல்லவா? அதனால் அவர்களை நாம் குறை சொல்ல வேண்டியதில்லை. இதற்கடுத்த எனது படங்கள் கமர்ஷியலாகவும், அதேசமயம் எனக்கான அடையாளமாகவும் இருக்கும் என்பதையும்  சொல்லிக்கொள்கிறேன். விரைவில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன” என்று கூறினார் தரணி ராசேந்திரன்.

    ஃஃபார்ட்சூன் ஃப்ரேம்ஸ் சார்பில்  செல்வராம், வெங்கடேஷ் ஆகியோர், இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.

    Share