நந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ (Sun Seeds) – கவிதைத் தொகுதி வெளியீடு
தர்பார், சர்க்கார், என்னை அறிந்தால், ஐ, சர்வம் தாளமயம், தங்க மீன்கள் போன்ற தமிழ்ப்படங்களுக்கு சப்டைட்டில் செய்த நந்தினி கார்க்கி, Sun Seeds (சூரிய விதைகள்) என்ற பெயரில் ஒரு ஆங்கிலக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்துவும் அவரது மனைவி பொன்மணி வைரமுத்து மகன்கள் மதன்கார்க்கி, கபிலன் வைரமுத்து என்ற கவிதைக் குடும்பத்தில் இப்போது அவரது மருமகள் மற்றும் மதன் கார்க்கியின் மனைவி நந்தினி கார்க்கி ஒரு ஆங்கிலக் கவிஞராய் உதயமாகியுள்ளார்.
இருட்டில் இருந்து விடியலுக்கு என்ற இரு வழிப் பயணத்தை மேற்கொள்கிறது இந்த நூல். இயற்கையின் அழகை, மாற்றங்களை ஒரு வழியில் கண்டு களித்து மனதின் மேடு பள்ளங்களில் இன்னொரு வழியில் பயணம் செய்கின்றன நந்தினி கார்க்கியின் கவிதைகள்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று, அமெரிக்காவில் பணி புரிந்து, ஏழு கண்டங்களுக்கும் பயணம் செய்த தன் அனுபவங்களின் சாறு இந்த நூல் என்று நூற்குறிப்பில் நந்தினி கார்க்கி எழுதியுள்ளார். இவர் கடந்த ஓராண்டாக தினமொரு சங்கப்பாடலை பற்றிய விளக்க உரையை இணையவழி பாட்காஸ்ட் செய்து வருகிறார்.
இந்தக் கவிதைத் தொகுப்பை நோஷன் பிரஸ் வெளியிட்டுள்ளது. அமேசான், அமேசான் கிண்டில் போன்ற தளங்களில் வெளியிடப்படும் இந்த நூல் ஆங்கிலக் கவிதை விரும்பிகளுக்கு மட்டும் விருந்தளிக்காமல் மனம் தளர்பவர்களுக்கும் மருந்தளிக்கும் என்று நம்புகிறார் நந்தினி கார்க்கி.