ஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது

0

அதிக மாடுகளை அலங்காநல்லூர் களத்தில் கடந்த ஆண்டு அடக்கிய வீரருக்கும், இவ்வாண்டு அடக்கும் வீரர் திலகத்திற்கும் ரூ. 4 லட்சம் பெறுமதியான கறவை மாடுகளை The Rise என்ற எழுமின் அமைப்பு வழங்கிச் சிறப்பிக்கிறது.

The Rise என்ற எழுமின் அமைப்பு, உலகளாவிய தமிழ்த் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்களை இணைத்து, சுமார் 30 நாடுகளில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் மதுரைக் கிளை, ஜல்லிக்கட்டு வீரர்கள் பலர், வாழ்வாதார வசதிகள் இன்றி வாடுவதை எழுமின் அமைப்பின் பொதுக் கவனத்திற்குக் கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் அனைத்துலக எழுமின் அமைப்பு, அத்தகைய வீரர்களுக்கு உதவ முடிவு செய்தது.

முதற்கட்டமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கில், கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் அதிக மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 8 கறவை நாட்டு மாடுகளை அலங்காநல்லூர் அரங்கிலேயே மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் இன்று மாலை வழங்குகிறது.

எழுமின் அமைப்பின் உலகளாவிய தொழிலதிபர்கள் மலேசியா தான்சிறி டத்தோ பலன், கத்தார் பஸீத் அஹமது, சிங்கப்பூர் அஹமது புகாரி, மதுரை பெரிஸ் மகேந்திர வேல், கனடா ஸ்டன் முத்துலிங்கம், சென்னை சௌகியா குழுமத்தின் சிவகுமார், சென்னை சில்க்ஸ் நிறுவனம் உள்ளிட்டோர் இந்தக் கறவை மாடுகளை நன்கொடையாகத் தந்துள்ளனர்.

“வீரர்கள் வாழ்ந்தால்தான் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டும் வாழும்” என எழுமின் அமைப்பின் நிறுவனர் அருட்திரு. ம. ஜெகத் கஸ்பர் தெரிவித்தார். கறவை மாடுகள் வழங்கும் பணியினை எழுமின் மதுரைத் தலைவர்கள் பாலகுரு, ஜலீல், சரவணன், சுரேஷ் மனோகரன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்து நல்லதொரு தொடக்கத்தைத் தந்துள்ளனர். ஜல்லிக்கட்டு வீரர்களின் வாழ்வாதாரத்திற்குக் கறவை மாடுகள் தந்து உதவ, உலகத் தமிழர்களை எழுமின் அமைப்பு அழைக்கிறது. முன்வருவோர் ஹேமாவதி அவர்களை +91 94443 35177 தொடர்பு கொள்ளலாம்.

(பத்திரிகைச் செய்தி)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.