‘புத்தகங்களும் நானும்’ நடமாடும் இலவச வாசகசாலை

0

எம். ரிஷான் ஷெரீப்

கடந்த சில வருடங்களாக நாடு முழுவதிலும் ‘இலவச நூலகங்கள்’ எனும் முயற்சியை மேற்கொண்டு, பொது மக்களிடம், அவர்கள் வாசித்த புத்தகங்களைச் சேர்த்தெடுத்து வாசகசாலைகள் அற்ற ஊர்களில் பேரூந்து நிலையங்களிலும், புகையிரத நிலையங்களிலும், வைத்தியசாலைகளிலும் இலவச நூலகங்களை அமைத்த முயற்சி மிகுந்த வெற்றியளித்தது. அதைக் குறித்து நீங்களும் உங்கள் தளத்தில் பதிந்திருந்த எனது பதிவு பரவலான வரவேற்பைப் பெற்று பலரும் புத்தகங்களை அனுப்பியிருந்தார்கள். அந்தந்த இடங்களில் அமைக்கப் பெற்ற நூலகங்களுக்கு அந்தந்த இடங்களின் மேலதிகாரிகளுக்கே பொறுப்பை வழங்கியிருப்பதால் அவை இப்போது பலரதும் கவனத்தைப் பெற்று சிறப்பாக இயங்கி வருவதோடு, புத்தக வாசிப்பாளர்களாக பலர் இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

சிங்கப்பூரிலிருந்து எழுத்தாளர் ஜெயந்தி சங்கர், சென்னையிலிருந்து எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன், கோயம்புத்தூரிலிருந்து ஜே.வி. விஜயகுமார் ஆகியோர் பெருந் தொகையான தமிழ் புத்தகங்களை அனுப்பியிருந்ததால், அவற்றை கவிஞர் கருணாகரன் மூலமாக கிளிநொச்சியிலிருக்கும் வறிய கிராம நூலகங்களுக்கும், இன்னும் பிற நூலகங்களுக்கும் பகிர்ந்தளிக்க முடிந்தது. இவ்வாறாக இலவச வாசகசாலை விபரத்தை பலரதும் கவனத்துக்குக் கொண்டு சென்ற உங்களுக்கும், புத்தகங்களை அனுப்பி வைத்திருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியும், பேரன்பும் என்றும் உரித்தாகும்.

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக, கடந்த ஒன்றரை வருட காலமாக எனது ஊர் அமைந்துள்ள மாவட்டத்தில் வாசகசாலைகளற்ற மலைக் கிராமங்களுக்கு புத்தகங்களை எடுத்துச் சென்று அங்குள்ள சிறுவர்களை புத்தகங்களை வாசிக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு பெட்டிக்குள் புத்தகங்களை இட்டு சைக்கிளில் ஏற்றிச் சென்று கிராமத்திலுள்ள பொது மண்டபமொன்றில் போயிருந்து, சைக்கிளையும் பெட்டியையும் கண்டு ஒன்று சேரும் பெற்றோர்களையும், பிள்ளைகளையும் கூப்பிட்டு அவர்களிடம் புத்தகங்களிலுள்ள கதைகளையும், வாசிப்பின் பயன்களையும் எடுத்துரைத்து இலவசமாகப் புத்தகங்களை வழங்கி விட்டு வருதல், இரண்டு கிழமைக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட தினத்தை அடுத்து வரப் போகும் தினமாகக் கூறுதல், குறிப்பிட்ட அத்தினத்தில் போய் அந்நூல்களைத் திருப்பி வாங்கிக் கொண்டு வேறு நூல்களை வழங்கி வருதல் இப்படியாக பதினைந்து கிராமங்களுக்கு இந்த இலவச நடமாடும் நூலக சேவையைச் செய்ய முடிந்தது.

இந்த இலவச சேவையைப் பயன்படுத்தும் வாசகர்களிடம் முன்பு வழங்கிய நூல்களைத் திரும்பப் பெறும்போது பெரியவர்களிடமும், சிறுவர்களிடமும் அவர்களது வாசிப்பனுபவம் மற்றும் நூல் குறித்த விமர்சனத்தை கூறுமாறு அல்லது எழுதித் தருமாறு கோரப்படும். அவர்களும் தம்மாலியன்ற விதத்தில் நூலைப் பற்றிக் கூறும்போது அல்லது எழுதித் தரும்போது இச் சேவையின் பயனை ஆத்மார்த்தமாக உணர முடிகிறது.

இந்த எண்ணக் கரு நண்பரும், சிறுவர் நல, பராமரிப்பு உத்தியோகத்தருமான திரு. மஹிந்த தசநாயக்கவுடையது. அவர் ஒரு வறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்து பட்டதாரியானவர். எனவே கிராமப்புறங்களில் வாசிக்கத் தேவையான புத்தகங்கள் கிடைப்பதிலுள்ள சிக்கல்களை அவர் நன்கு அறிவார். அவரது முயற்சியால் சிங்கள, தமிழ், முஸ்லிம் மலைக் கிராமங்களில் இந்த இலவச நடமாடும் நூலக சேவையை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடிகிறது.

இந்த வருடம், இந்தச் சேவையை எமது மாவட்டத்துக் கிராமங்களோடு மாத்திரம் நிறுத்தி விடாது, பிற மாவட்டங்களிலுள்ள வறிய கிராமங்களிலும் இதனை முன்னெடுக்கத் திட்டமிட்டோம். எனவே போரால் பாதிக்கப்பட்ட, பல வறிய கிராமங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணத்துக்கு புத்தகங்களை எடுத்துக் கொண்டு போகத் தீர்மானித்தோம். நான் தயாரித்துக் கொடுத்த பெட்டியை, நண்பர் மஹிந்த தசநாயகவின் மனைவி வாங்கிக் கொடுத்த சைக்கிளில் பிணைத்து யாழ்ப்பாணத்துக்கு புகையிரதத்தில் அனுப்பியாயிற்று. ஆனால் ஏற்கெனவே தமிழ் நூல்கள் எல்லாவற்றையும் விநியோகித்து முடித்திருந்தோம். எனவே புதிதாக நூல்களைக் கொள்வனவு செய்ய வேண்டியிருந்தது.

வறிய தமிழ்ப் பிள்ளைகளுக்கு நூல்கள் வாங்க வேண்டும் என்ற விடயத்தைக் கூறியதும் மஹிந்த தசநாயக்கவின் சிங்கள நண்பரொருவர் இருபதாயிரம் ரூபாயை இலவசமாக அனுப்பியிருந்தார். அதை எடுத்துக் கொண்டு நானும், மஹிந்தவும் விடிகாலையே புறப்பட்டு கொழும்பிலிருக்கும் குமரன் புத்தக நிலையத்துக்குப் போய் இருபதாயிரம் ரூபாய்க்கு தமிழ்ப் புத்தகங்களைக் கொள்வனவு செய்தோம். இலவச நடமாடும் நூலக விடயத்தைக் கூறியதும், புத்தக நிலைய உரிமையாளர் திரு. குமரன் அவர்கள் (எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவர்களது மகன்) நாம் வாங்கிய நூல்களுக்கு தன்னாலியன்ற சிறந்த விலைக் கழிவினை வழங்கி உதவினார். அதனால் இலங்கை, இந்திய வெளியீடுகளான ஏறத்தாழ நூற்றைம்பது நூல்களை வாங்க முடிந்தது.

அவற்றைப் பொதி செய்து எடுத்துக் கொண்டு நள்ளிரவு புகையிரதத்தில் யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டு மறுநாள் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தோம். அங்கு, ஏற்கெனவே புத்தகங்கள் வழங்கப்பட வேண்டிய வறிய பிள்ளைகளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவிகள் இனங்கண்டு அவர்களை கொக்குவில் கோயிலருகே ஒன்றிணைத்திருந்தார்கள். அப் பிள்ளைகள் கொக்குவில் புகையிரத நிலையத்தருகே குடிசைகளில் வசிக்கும் பிள்ளைகள். அப் பிள்ளைகள் அந்த மாணவிகளோடு நெருக்கமாக இருப்பதையும், மாணவிகள் அவர்களோடு தமிழில் கதைப்பதையும் காண முடிந்தது. இரண்டு வயது பெண் குழந்தையொன்று மாணவியின் கையிலேயே அமர்ந்து கொண்டு தனது தாயிடம் செல்ல மறுத்தது. கொக்குவிலைச் சேர்ந்த துவாரகாவும் இன்னும் இரண்டு இளைஞர்களும் கூட அங்கு வந்து சேர்ந்து நூல்களை விநியோகிக்க உதவினார்கள்.

காலையிலிருந்து கொக்குவிலில் சேர்ந்திருந்த சிறுவர்களுக்கு ஒரு தொகுதி நூல்களை விநியோகித்து விட்டிருந்தோம். எனினும் அங்கு இலவசமாக வழங்கப்படும் நல்ல நூல்களை எடுத்துக் கொண்டு சென்று வாசிக்கக் கூடிய பிள்ளைகளின் தட்டுப்பாடு நிலவியது. நாம் சென்றது வார இறுதி நாளில் என்பதால், பெருமளவான பிள்ளைகள் பிரத்தியேக (ட்யூஷன்) வகுப்புகளுக்குச் சென்றிருந்தமை எமக்கு ஆச்சரியமளித்தது. வாரத்தில் ஐந்து நாட்கள் பாடசாலையில் காலையிலிருந்து மாலை வரை படித்துக் களைத்துப் போன பிள்ளைகளை சனி, ஞாயிறு விடுமுறை தினங்களிலும் விடிகாலையிலிருந்து இரவு வரை பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுப்புவது சரியா? அவர்களுக்கு விளையாடுவதற்கோ, வேறு தமக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகளைச் செய்வதற்கோ பெரியவர்கள் நேரம் கொடுப்பதே இல்லை. பாடசாலையில் ஒழுங்காகவும், முறையாகவும் கற்பித்தால் பிள்ளைகள் பணம் கொடுத்துக் கற்க வேண்டிய பிரத்தியேக வகுப்புகளுக்கான அவசியமே இல்லையே? தமிழ்ப் பிரதேசங்களில் ஏன் இந்த நிலைமை காணப்படுகிறது? இதைப் பற்றி மேலும் கூறினால் பிரத்தியேக வகுப்பாசிரியர்களும், சில பெற்றோர்களும் கோபிப்பார்கள். இது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விடயம். விடயத்துக்கு வருவோம்.

யாழ் சிறுவர் நல, பராமரிப்பு உத்தியோகத்தர் ராஜீவனைத் தொடர்பு கொண்டபோது சுன்னாகம், மானிப்பாய் வழியே சங்கிலிப்பாய் கிராமத்துக்கு அவர் எம்மை அழைத்துச் சென்றார். அங்கு அவரது முயற்சியின் கீழ், திரு. கஜரூபன் அவர்களது ஒருங்கிணைப்பில் புத்தகங்களை வாசிக்கக் கூடிய ஐம்பது, அறுபது பிள்ளைகள் ஒன்று சேர்ந்திருந்தார்கள். நாட் கூலி வேலைகளுக்குச் செல்லும் பெற்றோர்களின் பிள்ளைகள் என்பதால் தனிப்பட்ட வாசிப்புத் தேவைகளுக்காக நூல்களை வாங்கி வாசிப்பதென்பது அவர்களுக்கு பெரும் கனவு. அவ்வாறானவர்களுக்கு புத்தகங்களை வழங்க முடிந்ததில் பெரும் திருப்தியை உணர்ந்தோம். எஞ்சிய நூல்களை கஜரூபனிடம் கொடுத்தோம். இரு கிழமைக்குப் பின்னர் அப் பிள்ளைகள் வாசித்து முடித்த நூல்களைக் கேட்டு வாங்கி எஞ்சிய நூல்களை விநியோகிக்குமாறு கூறி விட்டு அன்றிரவு புகையிரதத்தில் புறப்பட்டு மறுநாள் வீடு வந்து சேர்ந்தோம். புதிதாகச் சேரும் தமிழ் நூல்களை எடுத்துக் கொண்டு அடுத்த மாதம் யாழ்ப்பாணம் செல்லவிருக்கிறோம்.

‘புத்தகங்களும் நானும்’ எனும் இந்த இலவச நடமாடும் நூலக சேவை குறித்து முன்பே நான் வெளிப்படையாக அறியத் தந்திருந்தால் நூல்களைப் பெற்றுக் கொள்வதிலும், நூல்களைப் பெற்றுக் கொள்ளத் தகுதியானவர்களைக் கண்டடைவதிலும், ‘நீங்கள் NGO வா?’ ‘அரசாங்கம் உங்களை அனுப்பியதா?’ ‘உல்லாசமா ஊர் சுற்ற வேண்டிய வயதில, இந்த வெயிலில் ஏன் இதைச் செய்து திரியுறீர்?’ போன்ற கேள்விகளை எதிர்கொள்ளாதிருக்கவும் முடிந்திருக்கும். பல மாவட்டங்களிலுமிருக்கும் வறிய தமிழ், முஸ்லிம் கிராமங்களில் இதைத் தொடர்ந்தும் செய்யவிருப்பதால் இப்போதேனும் இதைப் பதிந்து வைப்பது தாமதமில்லை என்று தோன்றுகிறது.

பிள்ளைகளின் வாசிப்பு ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் சிநேகபூர்வமான சுற்றுச் சூழல் ஆகியவற்றை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டு ‘புத்தகங்களும் நானும்’ எனும் இலவச நடமாடும் நூலக சேவை பல பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்காலத்தில் பிள்ளைகள் தொழில்நுட்பக் கருவிகளோடு ஓரிடத்துக்குள் அடைபட்டு, ஒரு விதத்தில் தனிமைப்பட்டிருக்கும் நிலைமை காணப்படும் சூழலில் புத்தகங்களை வாசிக்கப் பழக்குவதன் மூலம் சுற்றுச் சூழலையும், சமூகத்தையும் நேசிக்கும் மனிதர்களாகி எதிர்காலத்தைச் சந்திப்பவர்களாக அப் பிள்ளைகளை மாற்ற முடியும். இதை இலக்காகக் கொண்டு நட்போடு கை கோர்ப்பதே ‘புத்தகங்களும் நானும்’ சேவையின் எதிர்பார்ப்பாகும்.

வாசகர்கள் தாம் வாசித்து முடித்த நூல்களை இலவசமாக அனுப்பி வைத்தால் அவற்றையும் சேகரித்து வறிய கிராமப்புறங்களுக்கு இவ்வாறு வழங்குவோம். எழுத்தாளர்களும் தாம் வெளியிட்ட நூல்களின் பிரதிகளை அனுப்பி வைக்கலாம். வாசகர்கள் அந் நூல்கள் தொடர்பாக ஏதேனும் விமர்சனங்களை முன்வைத்தால் அவை எழுத்தாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இச் சேவையை, தன்னலம் பாராது சேவை மனப்பான்மையோடு தமது பிரதேசங்களிலும் முன்னெடுக்க விரும்புகிறவர்களும் எம்மை அணுகலாம்.  

தொடர்புக்கு mrishansh@gmail.com

பெரியவர்கள், பிள்ளைகளுக்கு வழங்க வேண்டியது முன்னுதாரணங்களையேயன்றி, அறிவுரைகளை அல்ல. அத்தோடு உலகத்தை நேசத்தோடு ஒன்றிணைக்க நல்ல புத்தகங்களாலும், புத்தக வாசிப்பாளர்களாலும் முடியும், இல்லையா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.