Category: சிறுகதைகள்

கதைகள்

  • அறிவழகனும் அவனது கூட்டாளிகளும்

    -முனைவர் ஆ. சந்திரன் 

    விண்ணை முட்டிநின்றது மலை.  அந்த மலையிலிருந்துதான் பேய் வரும் என்று பெரியவர் கூறியிருந்தார்.  அவன் அந்த மலையை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு எதுவும் தென்படவில்லை. எப்படியும் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவலால் பல நாட்கள் அவ்வாறு செய்தான்.

    ஆனால் அவனது முயற்சி தோற்றுக்கொண்டே இருந்தது. அதனால் அவனுக்குப் பெரியவர் கூறியதன் மீது சந்தேகம் வந்தது. ஒரு வேளை பேய் பற்றிக் கூறியது பொய்யாக இருக்குமோ என்று நினைத்தான். அவரிடம் அது பற்றி எப்படிக் கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

    அப்போது அவனது கூட்டாளிகள் வந்தார்கள். தன்னுடைய எண்ணத்தை அவர்களிடம் கூறினான் அறிவழகன். அதைக் கேட்டு அவர்கள் சிரித்தார்கள்.

    “சரி சரி சிரிச்சது போதும் வாங்கடா விளையாடப் போகலாம்” என்றான் அந்த கூட்டத்திலேயே உயரமாக இருந்த ஒருவன். அவனை எல்லோரும் வளர்ந்துகெட்டவன் என்றுதான் அழைப்பார்கள். அவன்தான் அவர்களில் வயதில் மூத்தவன்.

    பக்கத்தில் இருந்த மைதானத்தில் கபடி விளையாட ஆரம்பித்தார்கள்.

    அப்போது அந்த வழியாக அந்தப் பெரியவர் சென்று கொண்டிருந்தார். அவர் பெயர் ஸ்ரீ ஸ்ரீ பால ராம கங்க சிங்கர். அவர் மீது அந்த ஊரில் உள்ளவர்களுக்கு நல்ல மதிப்பு இருந்தது. காரணம் அவர்தான் அந்த கிராமத்தில் அதிகம் படித்தவர். எல்லாரிடமும் சகஜமாகப் பேசுவார்.

    அவரைப் பார்த்ததும் அவரிடமாவது இந்த சந்தேகத்தைக் கேட்கலாமா? என்று அறிவழகன் யோசித்தான்.

    அதைப் புரிந்துகொண்ட கூட்டாளிகளில் ஒருவனான அந்த வளர்ந்துகெட்டவன் அதைக் கேட்டேவிட்டான். ஐயா! கொல்லிக்கட்டி பேய்னு ஒன்னு இருக்கா? என்று.

    கொல்லிக்கட்டி பேயா? என்று வாய்ப்பிளந்த அவர், ”ஆமாம்! முன்னாடி இருந்தது. நான் என்னுடைய சின்ன வயசில பார்த்திருக்கிறேன். வெள்ளையாக இருக்கும். அதோட தலை வானத்திலும் கால்கள் பூமியிலும் இருக்கும். ஆனால் நம்ம ஊருக்கு மின்சாரம் வந்ததில் இருந்து அது வருவதில்லை” என்று பெருமூச்சு விட்டவர் தன் மூக்குக் கண்ணாடியைச் சரிசெய்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

    இரவு மீண்டும் புலர்ந்தது.

    அன்றும் வழக்கம் போல நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்தார்கள் அறிவழகனும் அவனுடைய கூட்டாளிகளும்.

    மல்லாந்து படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தான் அறிவழகன். அவனுக்கு நட்சத்திரங்களை எண்ணுவதில் ஆர்வம் அதிகம். அவனுக்கு மட்டுமல்ல அவனுடைய கூட்டாளிகளுக்கும் அப்படித்தான். சில  நேரங்களில் யார் அதிகமாக நட்சத்திரங்களை எண்ணுகிறோம் பார்க்கலாம் என்று அவர்களுக்குள் போட்டி வரும்.

    இரவு ஏழு மணியளவில் இம்மாதிரியான வாதம் துவங்கும். அவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கும் போதே உறங்கிவிடுவார்கள். மறுநாள் மீண்டும் அது தொடரும். அந்த  கிராமத்துச் சிறுவர்களின் வாடிக்கை அது.

    எட்டொன்பது வீடுகளைக் கொண்ட அந்தக் கிராமத்தில் நான்கு பிரதான தெருக்கள் இருந்தன. அவற்றில் மூன்று தெருக்கள் கிழக்கு மேற்காக இருந்தன. அவற்றை இணைப்பது போல் அமைந்திருந்தது நான்காவது தெருவான சங்கத் தெரு. வாடைக் காற்றை வரவேற்கும் அத்தெருவில்தான் அறிவழகனின் வீடு இருந்தது.

    அந்தத் தெருவில் வசிப்பவர்கள் இரவில் பெரும்பாலும் வாயிலுக்கு வெளியில் பாய்விரித்துப் படுத்துறங்குவது வழக்கம். இந்த வழக்கம் எவ்வளவு காலமாக உள்ளது என்ற கேள்விக்குப் பதில் யாருக்கும் தெரியாது. யாரும் அதைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பவில்லை.

    அன்று வழக்கம் போல் வீட்டிற்கு வெளியே பாய்போட்டுப் படுக்கப்போனான் அறிவழகன். அவனுடைய கூட்டாளிகள் சிலரும் அவனுடன் இருந்தார்கள். அப்போது தான் அதைப் பற்றி அவர்கள் முதல் முறையாகக் கேட்டார்கள்.

    கொல்லிக்கட்டி பேய். அது இரவு வேளையில் நடமாடும். வானளவு உயரத்திற்கு அது இருக்கும். வெள்ளையாக இருக்கும். அது நடந்துவரும் போது “ஜல் ஜல்” என்று சத்தம் வரும் என்று பேய் பற்றிக் கூறிக்கொண்டிருந்தார் பக்கத்து வீட்டுப் பெரியவர்.

    அவர் பெயர் ஆனந்தன். அவர் கண்ணாடி அணிந்து கொண்டிருந்தார்.

    சிறுவர்கள் குதூகலத்துடன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மின்விளக்கின் ஒளியில் அவர் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடி நன்றாகத் தெரிந்தது.

    அவர் தொடர்ந்தார். ”தான் சிறுவனாக இருந்தபோது ஒருநாள் தன்னுடைய அப்பாவுடன் வயலுக்குச் செல்லும்போதுதான் முதல் முறையாக அப்பேயைக் கண்டதாகவும், அப்போது சிலீஸ்! சிலீஸ்! என்று அவருடைய அப்பா கூற அப்பேய் அவர்களை ஒன்றும் செய்யாமல் போய்விட்டதாகவும்” அவர் கூறினார்.

    அக்கதையைக் கேட்ட சிறுவர்கள் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அறிவழகனுக்கு அது சுவாரசியமாக இருந்தது. கொல்லிக்கட்டிப் பேயைப் பார்க்க அவன் மனம் ஆவல் கொண்டது. பெரியவர் கூறிய வடிவம் அவன் மனதில் ஆழமாகப் பதிந்தது. அந்தப் பேய் இப்போதும் நடமாடிக்கொண்டுள்ளதா? என்று பெரியவரிடம் கேட்கலாம் என்று அவன் நினைத்தான்.

    ஆனால் ஏனோ கேட்காமல் விட்டுவிட்டான்.

    *****

    கதாசிரியர் – உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)
    திருப்பத்தூர், வேலூர்

    Share
  • எழுதப்படாத பக்கங்களை வாசிக்கத் தொடங்கியவன்

    -முனைவர் ஆ. சந்திரன்

    “ஆகாயத்திலிருந்து விழும் தீப்பந்தங்கள் அனைத்தையும் தன்னுடைய வாய்க்குள் போட்டுக் கொள்ளும்” என்பதை முன்னரே அறிந்தவர்கள்  போல இருந்தன அவர்களுடைய செயல்பாடுகள். அதனால் தானோ என்னவோ தங்களுடைய முன்னோர்கள் பற்றி இப்படி எழுதியிருந்தனர். “கூகுலில் எழுதப்படும் தமிழ் எழுத்துக்கள் போன்ற கட்டுமஸ்தான உடல்வாகு. யானைகளைத் தலைதெறிக்க புறமுதுகிட்டு ஓடவிடும் வலிமையான வீரர்கள். தோல்வியை எதிரிகளுக்குப் பரிசாக வழங்குவதே தம்முடைய நோக்கம் என்ற வாசகங்களின் மேல் வீற்றிருக்கும் மன்னன்” என்று.  இந்த உண்மை மன்னனில் இருந்து வெளியேறிய போது, அழிவிலிருந்து மீண்ட அந்தத் தேசம் புது சரித்திரம் எழுதும் வேலை தொடங்கியிருந்தது. புதிய மன்னனின் அரசாணையின் பேரில் அது தொடங்கப்பட்டிருந்தது என்பது மிகமுக்கியமான ஒன்று. அவ்வாறு எழுதப்பட்ட புதிய சரித்திரத்தை நம்ப வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நம்ப மறுத்தவர்களின் வாயில் வலுக்கட்டாயமாக விஷம் கூட ஊற்றப்பட்டது. அந்த விஷத்தின் சுவை தெரியாமல் இருக்க ஒரு சிலருக்கு மட்டும் ஆம்லெட் சைடிஸாகப் பெறும் சிறப்புச் சலுகை இருந்தது. சிதைவிலிருந்து உருவான நகரின் எல்லையில் அமைந்திருந்த அடர்ந்த வனப்பகுதியில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மக்களின் எச்சங்கள் பதுங்கி இருந்தன. அம்மண்ணின் மேல் தவழ்ந்து விளையாட்டுப் பழகி வளர்ந்ததால், அவற்றின் மீது அவனுக்கு இயற்கையாகவே ஒரு பிடிப்பு இருந்தது. “பெயரின் முன் ஒட்டிக்கொண்டிருந்த தாயின் நினைவுகளை அழிக்க வேண்டும். அவ்வாறு செய்பவர்களுக்குப் புதுப் பெயருடன் மெல்ல பட்டாணியும் கிடைக்கும்” என்று உத்தரவாதம் வீதிகள் தோறும் கால்முளைத்து நடக்க ஆரம்பித்தன. அவற்றின் மீது ஏறியவர்களின் பார்வையில் கலிஸ்டட்டிட்  பரிதாபமாகக் காட்சியளித்தான். அவனுடைய வாய் கலிஸ்! கலிஸ்! என்று முணுமுணுத்துக்கொண்டிருந்தது. அது அவனுடைய தாயின் பெயர்.

    வேகமாக வலப்பக்கமாக ஓடிக்கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு எதிராக நடைபோட ஆரம்பித்தன பாபிணகன் கால்கள். அதனால் அவனது காலடிச் சுவடுகள் அந்நாட்டில் தனியாகத் தெரிந்தன. அந்தக் கால்களைத் தொடர்ந்து தயக்கத்துடன் சிலர் நடக்க ஆரம்பித்தனர். அப்படி நடந்தவர்களுக்கு ஒரு தலைவன் திடீரெனக் கிடைத்தான். அதனால் அவனைப் பின்தொடர்வதில் அம்மக்களுக்கு ஒரு நிம்மதி கிடைத்தது. அதனால் அவர்களின் நடையின் வேகம் அதிகரித்தது. மக்களின் நடைக்கு ஏற்ப அவனுடைய தலைவனுக்குக் விலைமதிப்பற்ற பொற்காசுகள் பரிசாகக் கிடைத்தன. பரிசு கொடுத்தவரின் முகம் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டதைத் தலைவனின் ஒன்று விட்ட தம்பியின் மகன் கண்டு கண்பிடித்த மறுநாள் அதிகாலையில் இறந்து போனான். அவன் இறந்த செய்தி மக்களின் தலைவனான திடதத்தனின் கையெழுத்துடன் அறிவிக்கப்பட்டது. “என் உயிருக்கும் மேலான இளவலின் மரணம் இயற்கையானது. நெடுநாள் வயிற்றுவலியால் அவன் துடித்துக்கொண்டிருந்தான் என்பது நீங்கள் அறிந்த ஒன்றே! வலிதாங்காமல் துடித்துக்கொண்டிருந்த அவனுடைய உயிரை அதிகாலை 3.33 மணிக்கு  எடுத்துக்கொண்டு வயிற்று வலி பறந்து போனதை நானே நேரில் பார்த்தேன்” என்று  அந்த அறிவிப்பு அமைந்திருந்தது. வாசகத்தின் கீழ், தலைவன் தன்னுடைய கட்டைவிரலால் கிறுக்கியிருந்தார்.  அந்தக் கிறுக்கலின் உள்ளே பதுங்கியிருந்தது ஒரு இராஜ இரகசியம். அது “தலைவனின் நூறாவது மகனின் ஆறாவது வாரிசுக்கு மட்டும் புரிய வேண்டும் என்று டிசைன் செய்யப்பட்டிருந்து. அதன் குறிப்பு ஒன்றினைப் பேழையில் மறைத்து வைத்துவிட்டு அத்தலைவன் தன்னுடைய இறுதி மூச்சினைக் கடைசியாக ஒருமுறை வேகமாக இழுத்துவிட்டான். அவன் இறந்த இரண்டாவது சகாப்பத்தின் கடைசி நாள் நள்ளிரவில் கீழ்வானில் ஓர் ஒளிவட்டம் தோன்றியது. முழுநிலவு நாளில் தோன்றிய அதை மக்கள் இரவெல்லாம் கண்விழித்துக் காத்திருந்து பார்த்து மகிழ்ந்தனர். வானில் அன்று வழக்கத்திற்கு மாறாக ஒன்பது கோள்களும் ஒரு புள்ளியில் வந்துநின்று தம்முடைய மகிழ்ச்சியைக் கைக்லுக்கி பரிமாறிக்கொண்டிருந்தன.  அப்போது “இந்த சாம்ராஜ்ஜியத்தின் மகாசக்கரவத்தி நான்” என்று முடிசூட்டி மகிழ்ந்த முதல் மன்னனின் வாழ்க்கை முழுமை அடைந்தது. நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த மகாசக்கரவத்தியின் ஏகபத்தினி அன்று ஓர் பாலகனைப் பிரசவித்தாள். ஊரே அதைக் கொண்டாட ஆரம்பித்தது.

    பாதியளவு நிரம்பியிருந்த குளத்தின் மையத்தில் வீசியெறிந்த கல்லை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த முதியவரின் நரை தண்ணீரின் மெல்லிய அலைகளுக்கிடையே நன்றாகவே தெரிந்தது. அப்போது மழைக்காலமாக இல்லாவிட்டாலும் அக்குளத்தில் மட்டும் தண்ணீர் பாதிக்குமேல் இருந்தது. மழைக்குப் புறம்பான காலத்தில் இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழைநீரும் அதில் கலந்திருந்ததால் தெளிவாய் இருந்தது. வட்ட வடிவிலான அலைகள் அவரை நோக்கி விரைந்துகொண்டிருந்தன. அவரது பார்வை மையத்திலிருந்து தன்னுடய காலடியைத் தொட விரையும் அலைகளுடன் பயணித்து திரும்புவதற்குள் கல்லெறிந்த இடம் அடையாளம் இன்றிப் போனது. அதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர், தன்னுடைய நெஞ்சில் இருந்த சுமை விலகியதாய் உணர்ந்தார். அப்போது அவருக்குப் பிறந்த புதுத்தெம்பு அவரை தெற்கு நோக்கி இழுத்தது. எதையோ சாதித்தவர்போல் அங்கிருந்து புறப்பட ஆரம்பித்தார். தன்னுடைய கைத்தடியை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தபோது அவருடைய ஆறாவது விரலில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.

    அறிமுகமில்லாத ஆனால் தன்முன்னோர்கள் வாழும் தேசத்தில்தான் வாழ்கிறேன் என்பதை உணரும் போது அவனுக்கு வயது 99 ஆகியிருந்தது.  என்றாலும், அவனுடைய நடையில் அது தெரியாததில் வியப்பொன்றும் இல்லை. அது அந்நிலத்தின் நியதிகளில் ஒன்று. “யுகப் புதல்வன் அந்நிலத்திற்குக் கொடுத்திருந்த வரம் அது” என்பதை மக்கள் அறிந்துகொண்டது முதல் மூப்பின் வியர்வைத்துளிகள் அம்மண்ணில் சிந்துவது முற்றிலும் நின்று போயிற்று. வேண்டிய இடத்தின் வரைபடம் அவர்கள் கண்முன் தோன்றும். அதனால் அவர்களுடைய கால்களுக்கு வேலையில்லாமல் போனது. சிலர் பயனற்ற அந்த கால்களை வெட்டி மியூசியத்தில் வைத்துப் பராமரிக்கவும் ஆரம்பித்தனர். அப்படி பாதுகாத்தவற்றில் சில இரவு வேளைகளில் யாருக்கும் தெரியாமல் நடைப் பயிற்சியில் ஈடுபட்டன. குறுக்கும் நெடுக்கமாக மண்புழுக்கள் போல் நடக்கும் அவற்றினைப் புகைப்படம் எடுத்தவனின் கைகள் மீது பரிசு மழை பெய்தது. அவற்றில் இருந்து தப்பிக்க அவன் அடிக்கடி குகைக்குள் ஓட ஆரம்பித்தான். அவ்வாறு ஓடிக்கொண்டிருந்த ஒருநாள் அவன் தோள் மீது அவனுக்குத் தெரியாமல் வானரம் ஒன்று தொற்றிக் கொண்டது. அதன் பிறகு அவன் அடிக்கடித்  தண்ணீருக்கு அருகிலிருந்த குளத்திற்குச் செல்ல ஆரம்பித்தான். தாகம் தணிக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் அவன் முகம் தாமரை போல் மலர ஆரம்பித்தது. அதை அவனுடைய கண்கள் ஒவ்வொரு முறையும் ஏமாற்றின.

    10.30 மணிக்கு வந்தடைவேன் என்று கங்கன் முன்கூட்டியே அனுப்பிய குறுஞ்செய்தி பொய்க்கவில்லை. ஆனால் வெறும் 20 நிமிடங்கள் மட்டும்தான் கால தாமதமானது. ஆதலால்தான் அவன் ரொம்ப கூலாக இருந்தான். ஒரு மணிநேரம் காத்திருப்போம். அதற்குள் வரவில்லை என்றால் பிறகு என்ன செய்வதென்று காத்திருந்தவர்களுக்கு, ஒன்றரை மணிநேரம் தேவைப்பட்டது. தங்கள் முடிவை மாற்றாமல் இருப்பதற்கு. அதற்குக் காரணம் கங்கன் நாற்பது நிமிடங்கள் முன்னரே வந்துவிட்டதுதான் என்றும் நினைக்கலாம். அல்லது அவர்களுடைய பொறுமைக்குப் பொற்காசுகளும் தரலாம். கிளம்பலாம் என்று முடிவெடுத்தால், கிளம்பவேண்டியது தானே! என்றும் நினைக்க வாய்ப்பு இல்லாமல் இல்லை. முடிந்த ஒன்றின் தொடர்ச்சியா, தொடர்ச்சியின் முடிவா? என்ற கேள்விகளும் எழுந்திருக்க வாய்ப்புகள் உண்டு. “வயது ஆகிவிட்டாலே இப்படித்தான். எதையும் ஞாபகத்ததுல வைக்க முடியருதில்ல” என்ற முணுமுணுப்புகளுக்கு மத்தியில் எதிர்ப்பார்த்துக் காத்திருப்பதில் பெரிய மன வருத்தம் ஏற்படவில்லை. என்றாலும், நாடு மக்கள் பழக்க வழக்கம் என எல்லாம் அவனுக்குப் பழகியதாக இருந்தாலும், ஏனோ அன்று புதிதாகத் தோன்றியது. அதனால் அவன் தன்னுடைய ஊருக்கே திரும்பிப்போக முடிவுசெய்தான்.

    ராப்பகல் சந்திப்பு. கைத்தடியுடன் ரயிலில் இருந்து இறங்கிய பெரியவருக்கு மாலை மரியாதை மலிந்தன. அவருடைய கால்களின் நிழல்கள் ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்பின்படி அந்தப் படிக்கட்டுகளைக் கடந்து சென்றன.  நல்ல மேய்ப்பனாய் இருந்து புகழ்பெற்றதால் வானில் இருந்து நேரடியாய் பூமிக்கு வந்தது ஆயிரம் ஆண்டுகளில் அவனுக்கு ஒட்டகச்சிவிங்கியின் கழுத்துப் பரிசாகக் கிடைத்திருந்தது. அதனால் அவன் அந்த கூட்டத்தின் ஒப்பற்ற நாயகனாய் மாறினான். மக்களின் துயரங்களைக் காதில் வாங்கி அவற்றை வானதிற்கு அப்பால் வீசியெறிந்து கொண்டிருந்தபோது தடியுடன் வந்த பெரியவரின் நிழல் காத்திருந்து இரகசியமாக களவில் மகிழ்ந்ததை அந்த ஊரில் இருந்த சிலருடைய வாய் முணுமுணுத்துக்கொண்டிருந்தன. அவை பெரியவரின் கைதடியை வாங்கிக்கொண்டதும் அமைதியடைந்தது.

    ஜிலேப்பியைப் பிச்சிப்போட்டது போல் தலையெழுத்து இருந்ததைப் பற்றிய நினைவுகள் ஏதும் அவர்களிடம் இப்போது இருக்கவில்லை. எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது என்று வரலாற்றை அவர்களின் குழந்தைகளும் நன்கு அறிந்திருந்தனர். ரத்தவெள்ளம் அடிக்கடி ஊரின் வழியாகப் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்து ஏன் இந்த வாழ்க்கை நமக்கு என்று வேதனையுடன் இருந்த போதுதான் அவர்களின் வேதனைத் துடைக்கும் மருந்தாய் அவர்களிடம் வந்து சேர்ந்தான் அந்தப் புனிதன். அவனுடைய பயணத்தின் தொடக்கம் எங்கிருந்து ஆரம்பித்தது என்பதைப் பற்றிய  நினைவு அவனிடம் இருக்கவில்லை. ஆனால் அவன் போய்ச்சேரும் இலக்கைப் பற்றிய வரைபடத்தைத் தன்னுடைய நெற்றியில் வரைந்துவைத்திருந்தான். அவனுடைய வருகைக்குப் பிறகு ரத்த வெள்ளம் ஊரை நோக்கி வருவது முற்றிலும் நின்று போனது. மக்கள் ஆற்றில் நீச்சல் பழகி மகிழ்வதை வாடிக்கையாக்கிக் கொண்டனர்.

    ஐந்து சகோதரர்களைத் துரத்தியடித்த பூரிப்பு நெடுநேரம் அவர்களுக்கு நீடிக்கவில்லை. ஆசை யாரை விட்டது.  அவர்களை விட்டு வைக்க. மூத்தவனை இளையவர்கள் இருவரும் சேர்ந்து கொலை செய்துவிட்டு இருக்கும் சொத்தை இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம் என்று நினைத்தார்கள். ஆனால் விதி வேறொரு கணக்கை கையில் வைத்திருந்தது என்பது துரத்தப்பட்ட சகோரதரர்களுக்குத் தெரிந்த போதும் அவர்களால் அதைத் தடுக்க முடியவில்லை. காலக்கணக்கில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இல்லை. ஆனால் அவர்கள் தங்களுடைய முன்னோர்களின் பாதையில் பயணிப்பதையே விரும்பினார்கள். அதனால் அவர்களின் வாரிசுகளில் பலர்  தங்களுடைய உருவத்தை மாற்றிக்கொண்டால் என்ன? என நினைத்தனர். அப்படி மாற்றிக்கொண்டவர்களில் பலர் பின்னாளில் சரித்திரத்தில் தங்களுடைய பெயர் பொறிக்கப்படுவதை வேடிக்கைப் பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றார்கள்.

    இரவின் இருளில் மறைந்து வாழ்ந்து பழகியதால் எல்லாம் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்ததில் வியப்பில்லை. ஆனால் அவர்களை யாரும் கண்டுகொள்ளக் கூடாதென்பதில் கவனமாக இருந்தார்கள். அதனால்  கோழியை அறுத்து அதன் முட்டையைக் கரியுடன் கலந்து கள் குடித்து உண்டான போதயை யாருக்கும் தெரியாமல் இரகசியமாக வைத்திருந்தார்கள். தங்களைப் பற்றிய உண்மையை யாரும் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக அவர்கள் பூமியில் இரத்தத்தை அவ்வப்போது தெளிப்பார்கள். சில வேளை அவர்களே ஆடுகளாக வேடமிட்டும் அலைவார்கள். அப்போது தானே அவர்களுக்கு நல்ல மேய்ப்பன் கிடைப்பான். அவனை வைத்து அவர்கள் விளையாட்டைத் தொடரமுடியும். அவர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக இரண்டு பெரிய கண்களைத் தயாரித்து வானில் உலவவிட்டு மகிழ்ந்தார்கள். அதைப் பார்த்து மக்கள் அங்கே பார் இரண்டு கண்கள் என்று அதிசயத்து நின்றனர். ஆனால் உண்மையில் அவை இரண்டு கண்கள் அல்ல. ஏன் அவை கண்களே அல்ல. என்பதைக் கண்டு பிடித்தான் வள்ளரிஸ். அதனால் அவனுடைய உடல் இருட்டறையில் அடைக்க சத்தமில்லாமல் ஏற்பாடு நடந்தது. யார் அவனை இருட்டறையில் அடைத்தார்கள்? என்ற செய்தியும் இருட்டிலே அடைந்து கிடந்ததுதான் வேடிக்கை என்றாலும், அதையும் அறிந்துகொண்டவனின் கண்களும் இருளில் அடைக்கப்பட்டது வியப்புதான். அவ்வாறு இருட்டில் அடைப்பட்டுக்கிடந்தாலும் அவற்றிற்கு அந்த ஒற்றைக் கண் தெளிவாகத் தெரிந்தது. அதை அவனால் நன்றாக இப்பொழுதும் பார்க்க முடிந்தது. அப்படி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்தக் கண்ணில் இருந்து சில உருவங்கள் ஓசையின்றி நடைபோட்டுக்கொண்டிருந்தன. அவை அவனுக்கு வியப்பைத் தரவில்லை என்றாலும் அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தான். இருளின் நீளத்திற்கு உருவங்கள் தொடர்ந்தன …….

    வேகமாக அடுத்தப் பக்கத்தைப் புரட்டிய ஜெயந்தனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பக்கத்தில் எதுவும் எழுதப்படவில்லை. அந்த புத்தகத்தின் அடுத்தடுத்தப் பக்கங்களும் அவ்வாறே வெறுமையாக இருந்தன.  பாதிக்குமேல் ஒன்றும் எழுதப்படாத அட்டை கிழிந்திருந்த புத்தகத்தை மூடிவைத்துவிட்டு விரக்தியுடன் தூங்கப்போனான். படுக்கையறையில் வெகுநேரம் உறக்கம் இல்லாமல் தவித்தவனின் கண்களை உறக்கம் மெல்ல தழுவ முயன்றது. அப்போது அவனுடைய கண்கள் எதை எதையோ பார்க்கத் தொடங்கின.

    பக்கங்களைத் திருப்பி வாசிக்க ஆரம்பித்தான்…

    *****

    கதாசிரியர் – உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),
    திருப்பத்தூர், வேலூர்

    Share
  • தோலுரிக்கும் வேலை!

    -முனைவர் ஆ.சந்திரன்

    மெரினா கடற்கரையைக் வங்கக்கடல் விழுங்க முயன்றபோது அந்த தொழிற்சாலையை உலகமயமாக்குவதாக அறிவித்தார்கள். அப்படிச் செய்வதால் அந்நிறுவனத்திற்கு உலகம் முழுதும் கிளைகள் உருவாகும் என்ற அலர் காற்றில் மிக வேகமாகப் பரவியது. அந்தச் செய்தியைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தவர்களில் நம்பியும் ஒருவன். அவனுக்கு எதிர்காலம் மிகவும் பிரகாசமாகத் தோன்றியது. அவனைப் போல் பலர் அவ்வாறு நினைத்திருந்தார்கள் என்பது பிறகுதான் தெரிந்தது.

    மெதுவாக நடக்கும் மக்கள் வாழும் ஊர். அங்குதான் அந்த தொழிற்சாலை வெகுகாலமாக நேர்மையாகச் செயல்பட்டு வந்தது. உலகமயமாக்கப்பட்ட உடனே அந்த தொழிற்சாலையின் தலைமையகத்தை எப்படியாவது தங்களுடைய தலைநகருக்குக் கொண்டுவந்துவிடவேண்டும் என்ற பகீரத முயற்சியில் சிலர் இறங்கினார்கள். அப்போது வேறு சிலர் அந்தொழிற்சாலை அங்கேயே இருப்பதுதான் சரியாக இருக்கும் என்று பெரிதும் விரும்பினார்கள்.

    அவ்வாறு சொன்னவர்கள் மீது தாய்நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்ற வசை சொற்கள் வீசியெறியப்பட்டன. நம்முடைய மண்ணிற்கு அந்தத் தொழிற்சாலையின் தலைமையகம் வருவது நல்லதுதானே. அவ்வாறு வந்தால் நமக்கு இன்னும் கூடுதலான பலன்கள்  கிடைக்குமல்லவா? என்று நம்பிக்குத் தோன்றியதால் தொடக்கத்தில் அவனுக்கும் அவர்கள் மீது கோபம் ஏற்பட்டது. ஆனால், பிறகு அவனுடைய நினைப்பு தவறாய்ப் போனதை அவன் புரிந்துகொண்டான்.

    பலாப்பழங்களைப் பிரித்துச் சுவைப்பது; பலாக்கனிகளில் எத்தனை சுளைகள் இருக்கிறது என்று எண்ணிப்பார்ப்பது; சுவையுடையவற்றை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது எனப் பத்தம்சத் திட்டங்களை முதலில் செய்துமுடிப்பது “சிங்சங்” தொழிற்சாலையின் முதல் கட்ட நோக்கமாகச் சொல்லப்பட்டது. அதற்காகச் சில குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றில் பஞ்சக்குழுவும் அட்டக்குழுவும் முக்கியமானவை. ஏனெனில் அக்குழுக்களுக்குத்தான் இந்தப் பத்தம்சத் திட்டங்களைச் செயல்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்து.

    தொடக்கத்தில் நாடு முழுவதிலும் இருந்து அக்குழுக்களுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களில் பலர் பலாக்கனிகளைப் பற்றிய விவரங்களை அறிந்தவர்களாக இருந்தார்கள். கனிகளை உண்ணவரும் காக்கைளை விரட்டுபவர்கள் சிலரும் அக்குழுவில் சத்தமில்லாமல் இணைந்து கொண்டார்கள்.

    பெரும்பான்மையானவர்கள் ஆசைப்பட்டதுபோல் தொழிற்சாலை செயல்பட ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே தலைமையகம் தலைநகருக்கு மாற்றப்பட்டது. சிலரது அயராத முயற்சியால்தான் அது நடந்தது என்ற குரல் அடங்கச் சில காலம் ஆனது. அதன் பிறகு அந்தத் தொழிற்சாலையின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுவருகின்றன என்றும், பத்தம்சத் செயல்திட்டங்களை விரைந்து முடிக்க விரும்புகிறார் அதன் தலைவா் என்றும் ரூமர் காற்றில் பரவியது.

    அப்போது மாம்பழத்தை ரசித்துக்கொண்டிருந்தவர்கள், வாழைப்பழங்களைச் சுவைத்துக் கொண்டிருந்தவர்கள், பூக்களின் வாசத்தை நுகர்ந்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் அவற்றைத் தூக்கி வீசியெறிந்துவிட்டுப் பலாப்பழங்களைத் தோலுரிப்பது எப்படி என்று கற்கத் தொடங்கினர்கள். அதற்குக் காரணம் பத்தம்சத் திட்டம் பற்றி வெளியான அந்த வதந்தி.

    அப்போது நம்பி வாழை சாகுபடி பற்றியும் அவற்றின் வரலாறு பற்றியும் அவனுடைய தந்தையிடம் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தான். அவனிடம் சிலர் சொன்னார்கள் நீயும் பலாக்கனிகளைத் தேலுரிக்கக் கற்றுக்கொள். அப்படிக் கற்றுக்கொண்டால் உனக்கு உடனடியாக சிங்சங் நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்று.

    அப்போது அதை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் மாங்கனி பயிரிடுவது பற்றி அறியத்தான் அவன் முதலில் விரும்பி இருந்தான். அவனுடைய அப்பாதான் அவனை வாழையைப் பயிரிடப் பழக்கினார். தொடக்கத்தில் விருப்பம் இல்லாமல் பயிற்சி மேற்கொண்டாலும் போகப்போக அது அவனுக்கு ரொம்பப் பிடித்துப்போனது. எனவே வாழைமரம் பற்றி முழுவதும் அறிந்து கொள்ளலாம். அதன்பிறகு வேண்டுமானால் பலாக்கனிப் பற்றிப் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் அவனுடைய எதிர்காலம் கருதி பலாப்பழம் பற்றிய பயிற்சிக்குத் தன் அப்பாவால் நிர்ப்பந்திக்கப்பட்டான். வேறு வழியில்லாமல் பலாப்பழம் சாகுபடி அதன் வரலாறு பற்றி விரிவாகக் கற்க ஆரம்பித்தான். கனிகளின் வரலாற்றைத் தேடிக்கொண்டிருந்தபோது ஓர் அழைப்பு அவனைத் தேடிவந்தது.

    எதிர்ப்பார்த்தது போல் அந்த அழைப்பு சிங்சங் தொழிற்சாலையிலிருந்துதான் வந்திருந்தது. அப்போது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அந்த வேலைக்கு முழுவதும் தயாராகவில்லை என்று நினைத்திருந்தான். ஆனால் அந்த வேலைக்குரிய எல்லாத் தகுதியும் அவனுக்கு இருக்கிறது என்று நம்பினார் அவன் தந்தை. அதனால் அவர் நேர்காணலுக்குப் போகச் சொன்னார்.

    நம்பிக்கு நேர்காணலுக்குப் போக விருப்பமில்லை. ஆனாலும் போகச் சம்மதித்தான். அதற்குக் காரணம் அவன் தந்தைமீதுஅவன் கொண்டிருந்த நம்பிக்கை. ஏனெனில் அவனுடைய தந்தை பிறரைப் போல் அன்றி மா, பலா, வாழை முதலானவற்றை நவீனமுறையில் பரிசோதித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரிடம் இருந்து தொழில் கற்பதை அவன் தன் பாக்கியமாகக் கருதினான். எனவே அவருடைய பேச்சை மதித்து நேர்காணலுக்குப் புறப்பட்டான்.

    நேர்காணல் மேகம் தவழும் மலையடிவாரத்தில் நடந்தது. அந்த ஊருக்கு அவன் முதல் முறையாக அப்போதுதான் போனான். பொதிகை மலையின் சாரல் அங்கு எதிரொலிக்கும் என்று அங்கு அறிமுகமான நண்பர் ஒருவர் சொன்னார். மிகவும் ரம்மியமாக இருந்தது காற்றில் வந்த வாசம். நம்பியின் மனம் ஏதேதோ நினைத்தது. கால்கள் காற்றில் மிதந்துகொண்டிருந்தன. அவனைப்போல் பலர் அப்படிதான் இருந்தார்கள்.

    சிலர் நம்பிக்கையுடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்கள் தம் தந்தையர்களால் என்பதை அங்குப் பேசிக்கொண்டிருந்த சிலரின் உரையாடல்களில் இருந்து அவன் தெரிந்துகொண்டான். அது அவனுக்கு வியப்பாக இருந்தது.

    சிலர் கருங்காக்கைகளின் படத்தைக் கையில் வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் வெண்கலச் செம்புகளில் தேவையில்லாமல் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய செயல்கள் நம்பிக்குப் புதுமையாகவும் வினோதமாகவும் தோன்றியது. அவர்களுடைய செயலை அவன் கவனித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த ஒருவர் அவனருகே வந்தார்.

    அவனைவிடச் சற்று உயரமாக இருந்தார். கொஞ்சம் கலராக இருந்தார். பார்க்க முரட்டுத்தனமாகத் தோன்றினார். அவர் முகத்தை உற்றுப்பார்த்தபோது தன்னைவிட வயதில் மூத்தவராக இருக்கலாம்  என்று நினைத்தான்.

    வந்தவர் என்ன தம்பி நேர்காணலுக்குப் புதுசா? என்றார்.

    “ஆமாங்க“ என்று வேகமாகத் தலையை ஆட்டிய நம்பிக்கு அவருடைய கேள்வியில் ஏதோ ஒன்று உள்ளதுபோல் தோன்றியது. ஆனால் அதைப் பற்றி அவரிடம் கேட்கவில்லை.

    நீங்கள்? என்ற அவனுடைய கேள்வியிலிருந்து அவ்விருவர் விவரங்களின் பறிமாற்றம் ஆரம்பமானது. ஊர், பிடித்தவை, நோக்கம் என்று நீண்டுகொண்டிருந்த உரையாடலுக்குத் தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தது. “நேர்காணலுக்கு வந்திருப்பவர்கள் அனைவரும் அருகிலுள்ள அறைக்குச் செல்லுங்கள்” என்ற ஒலி.

    நான் நீ என்று முண்டியடித்துக்கொண்டு அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள் நேர்காணலுக்கு வந்தவர்கள். அவர்களின் செயல்களைப் பார்த்து அவனுக்குச் சிரிப்பு வந்தது. அதைக் கவனித்த இளங்கோ சிரித்துக்கொண்டே வா! தம்பி நாமும் போகலாம் என்றார். அவருடைய இருக்கைக்குப் பக்கத்து இருக்கையில் நம்பி அமர்ந்துகொண்டான்.

    கஞ்சியின் மடிப்பு மறையாத வெள்ளாடை அணிந்திருந்த இருவர், கதராடைக்கு ஏற்ற பேண்ட் அணிந்திருந்த ஒருவர் என மூவர் அறைக்குள் நுழைந்தார்கள். நேர்காணலுக்கு வந்திருந்த எல்லோரும் எழுந்து நின்றார்கள். வந்தவர்கள் மேடையில் இருந்த நாற்காலிகளில் பவ்யமாக அமர்ந்தார்கள்.

    பிறகு ஒருவர்பின் ஒருவராக மூவரும் அடுத்தடுத்துப் பிரசங்கம் நிகழ்த்தினார்கள். சுமார் இரண்டு மணிநேரம் அமர்க்களப்பட்டது அந்த அறை. அவர்கள் பேசிய செய்திகளை இளங்கோ திருக்குறள் போல் இரத்தினச் சுருக்கமாக நம்பியின் காதுகளுக்கு மட்டும் கேட்குமாறு சொன்னார்.

    அவருடைய அந்த அறிவுக்கூர்மை அவனை மிகவும் வியப்படையச் செய்தது. முகம் பிரகாசமாகத் தோன்றியது அவனுக்கு. தன்னை மறந்து இருந்தவன்  “இப்போது பலாக்கனி தோலுரிக்கும் நிகழ்வு ஆரம்பமாக உள்ளது“ என்ற குரல் கேட்டு தன்னிலைக்குத் திரும்பினான்.

    நேர்காணலுக்கு வந்திருப்பவர்கள் பெயர் அகரவரிசைப்படி அழைக்கப்படும். அவ்வாறு அழைக்கப்படும் நபர் மேடைக்கு வந்து பலாக்கனியை உரித்துக் காட்டவேண்டும். சரியாக உரிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்! நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது! என்று நீண்ட சொற்பொழிவாற்றியவர் முதல் பெயரை வாசித்தார் அன்பு என்று.

    அறையில் ஒரே அமைதி நிலவியது. யார் அந்த அன்பு?. அவர் எப்படி பலாக்கனியின் தோலை உரிக்கப்போகிறார்? என்று பார்க்கவேண்டும் ஆவலில். நம்பியின் முகத்திலும் அது குடிகொண்டிருந்தது.

    சலனமின்றி மேடையேறிய அன்பு இல்லாத பலாக்கனியை இருப்பதாகப் பாவித்து அற்புதமாக உரித்துக்காட்டினார். அவர் பலாக்கனி உரித்தது தன்னுடைய தந்தையின் செயலை நினைவுபடுத்தியது. நம்பி மனம் சொல்லியது இவருக்கு வேலை உறுதியாகக் கிடைக்கும் என்று. மேடையில் இருந்த நடுவர்களும் மகிழ்ந்தார்கள். அவர்களில் ஒருவர் வாய்த்திறந்து பாராட்டினார் தம்பி! நீங்க அருமையாகத் தோலுரித்தீர்கள்! வாழ்த்துகள்! என்று.

    இரண்டாவதாக இளங்கோ! என்ற பெயர் ஒலித்தது.

    தன்னுடன் பேசிக்கொண்டிருந்தவர் எழுந்து செல்வதை ரசித்துக் கொண்டிருந்த நம்பி அவர் தோலுரித்துக் காட்டியதை ரசித்துப் பார்த்தான். இப்படியும் தோலுரிக்க முடியுமா என்று வியந்தான். அவன் உள்மனம் நினைத்தது இவருக்கும் வேலை நிச்சயமென்று.

    தன் இருக்கையில் அமர வந்தவரிடம் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்! என்றான். நன்றி! என்றவர் சலனமின்றி அமர்ந்தார்.

    அவரைத் தொடர்ந்து கமல் என்று பெயர் அழைக்கப்பட்டது. ஓ! இவன் பெயர் கமலா என்று நினைத்தபோது அவன் செம்பில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. “இப்போதும் அவன் தண்ணீர் நிரம்பிய சொம்பைக் கையில் வைத்துக்கொண்டுதான் இருக்கிறான்” என்று இளங்கோ கூறிய பிறகுதான் அது பிரமையல்ல என்று உணர்ந்தான்.

    கம்பீரமாக மேடை ஏறியவன் ஐஸ்கட்டியாக உருகினான். அவனுடைய செய்கையைக் கண்டுப் பொறுக்கமுடியாமல் பக்கத்திலிருந்த இளங்கோவைப் பார்த்தபோது அவர் புன்னகை சிந்திக்கொண்டிருந்தார் சலனமின்றி.

    அறையில் ஒரே சலசலப்பு. கடைசிவரை அவன் என்ன செய்கிறான் என்று யாருக்கும் புரியவில்லை. அவனுக்குப்பிறகு ஏழெட்டுபேர் அவ்வாறே தொடர்ந்தார்கள்.

    நம்பியின் முறை வந்தது. மேடைக்குச் சென்ற அவன் தனக்குத் தெரிந்த அளவில் பலாக்கனியை உரித்துக் காட்டினான். அவன் உரித்தவிதம் புதுமையாக இருந்ததாகப் பாராட்டினார் நடுவர்களில் ஒருவர். இளங்கோவும் அதையே சொன்னார்.

    அவனுக்குப் பிறகு மேடையேறியவர்களில் பலர் நன்றாகத் தோலுரித்தார்கள். சிலர் நடுவர்களின் பாராட்டுகளையும் பெற்றார்கள்.

    இந்நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த வேளையில் சிலர் நேரமாகிறது என்று நேர்காணலில் பங்குபெறாமல் தம் வீடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களில் கமலுடன் பயிற்சிபெற்ற மாணிக்கமும் அடக்கம்.

    நேர்காணல் முடிந்தது.

    சரியாக இரண்டு மாதங்கள் கழித்து பலாக்கனி எண்ணும் அந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியானது.

    அப்போது அன்புவும், இளங்கோவும் வயலில் விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் வேலைசெய்து கொண்டிருந்த வயலில் நடப்பட்டிருந்த நெல் நன்றாக விளைந்திருந்தது. அதிக மகசூல் கிடைக்கும் என்று அவர்கள் திடமாக நம்பினார்கள்.

    *****

    கதாசிரியர் – உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),
    திருப்பத்தூர், வேலூர்.

    Share
  • வரனா? வரமா?

     –சே.முனியசாமி

    ‘‘ரெண்டு புள்ளைகள கரசேத்தாச்சு.. இவனுக்கு ஒன்னும் அமைய மாட்டுதே. ஜோசியக்காரன் சொன்னதுபோல சொந்தத்துல பொண்ணெல்லாம்  அமையாது  மேற்கு தெசலைய தான் அமையும் போல… என் கவலையே அவந்தானு’’ பார்க்கிறவங்கிட்ட புலம்பிட்டே இருப்பாங்க கவின் அம்மா.

    கவின் அந்த ஊர்ல முதல் பட்டதாரி மட்டுமல்ல பி.எச்டி வரை படிச்சவன். பள்ளிப் படிப்பை முடிச்சு மேற்படிப்பிற்காக வெளியூர் போனவன் பதினேழு வருசமா படிப்பு படிப்புனு மூழ்கிட்டான். படித்துக் கொண்டேயிருக்கவும் வயது கடந்ததும் தெரியல. முற்றிய நெல்மணி போல வயசும் முப்பதுக்கும் மேல தாண்டியது.

    ஒருவழியாய்த் திருநெல்வேலி பக்கம் கல்லூரியில் பணி கிடைத்தது. கை நிரம்ப சம்பாத்யம் இல்லையென்றாலும் வெளியே நல்ல உத்தியோகத்தில் இருக்கேன் எனச் சொல்லுகின்ற அளவுக்கு இருந்தது. வயது ஒருபக்கம் கூடிக்கொண்டே யிருந்தாலும் நாலா பக்கமும் பெண் தேடுகிற போட்டாப் போட்டியில் உறவினர்கள் அக்கறை கொண்டிருந்தனர்.

    மாதத்திற்கு நான்கு முறையாவது ‘அந்த ஊர்ல பொண்ணு இருக்கு… இந்த ஊர்ல பொண்ணு இருக்குனு’ ஏதாவது தகவல் வந்துவிடும். ஏதோ ஒரு நம்பிக்கையில் சென்று பல ஏமாற்றங்களைச் சந்தித்தது கவினுக்கு புதிதல்ல. இவ்வாறு நாட்கள் புரண்டோடின. வேலை பார்க்கின்ற இடத்திலிருந்து ‘முப்பது கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பொண்ணு இருக்கு, டீச்சருக்கு படிச்சுருக்கு. டெட்டுல பாஸாகி இண்டர்வீயு போய்ட்டு வந்துருக்கு.. அடுத்த ரெண்டு மாசத்துல அரசு உத்தியோகம் கிடச்சரும்னு…’ பழக்கப்பட்ட மாணிக்கம் சார் மூலம் தகவல் கிடைத்தது. இவ்வளவு சொல்லியும் வேண்டமெனக் கூறினால் நன்றாக இருக்காதெனச் சரியென மொழிந்தான் கவின்.

     ‘‘தகப்பன் இல்லா பிள்ள … நல்ல பொண்ணுப்பா… உங்களுக்கு மேட்ச் ஆகும். நம்ம பார்த்ததுல செட் ஆகாம இருந்தது கிடையாதுனு..’’ அடுக்கிக் கொண்டே போனார் மாணிக்கம் சார். இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது எவ்வளவோ பாத்தாச்சு.. இதையும் பாத்துரலாமுனு கவின் மனதில் சிந்தனை ஊடுருவியது. இதுக்கு மேலையும் வேண்டாமெனச் சொன்னால் நல்லாயிருக்காது என எண்ணிப் பச்சைக் கொடி காட்டினான் கவின்.

    மாணிக்கம் சார் மத்திய அரசு ஊழியர். ஊரில் எல்லாராலும் மதிக்கக்கூடியவர். நாலு செய்தி தெரிந்தவரும்கூட. எங்காவது நல்லது கெட்டதுனா இவர்தான் முன்நிற்பார். அதனால் மாணிக்கம் சாருக்கு ஊர்ல மதிப்பு நிரம்பயிருந்தது. அவரை ஒரு தடவைப் பார்த்து பேசிப் பழகியதே தவிர மற்றபடி உறவுனு சொல்லிக்க முடியாத பழக்கம்.

    ‘தனக்குத்தான் சர்க்கார் வேலை இல்ல. தனக்கு வர்றவளுக்காவதுக்கு சர்க்கார் வேலையிருந்தா கொஞ்சம் உதவியாயிருக்குமென’ கவின் மனதில் துளிர்விட்டது. இப்படிச் சிந்தனையில் மூழ்கியிருக்கையில் ‘அடுத்த வாரம் பொண்ணு வீட்டுக்குப் போய் பொண்ண நேர்ல பாத்திடலாம் தம்பி…’ என மாணிக்கம் சார் சொன்னதும் தலையாட்டினான் கவின். உடனே தம்பி உங்க செல் நம்பரச் சொல்லுங்க எனக் கூறியதும், ஒன்பது ஏழு எட்டு ஆறு சைபர் எனத் தொடங்கி  சைபர்  எனக் கூறி முடித்தான். அப்படியே உங்க நம்பர்லயிருந்து ஒரு மிஸ்டுகால் கொடுங்க என்றதும் சில விநாடிகளில் மாணிக்கம் சார் எண்ணைச் சேமித்து நன்றி சார்னு விடைபெற்றான் கவின்.

    நியமிக்கப்பட்ட நாள் வந்தது. காலை பத்து மணியிருக்கும். கவின் எண்ணிற்கு மாணிக்கம் சார் அழைத்திருந்தார். வணக்கம் சார் என்றதும்,  ‘சாயந்தரம் நாலு மணிக்கு போகலாம்பா….’ அவங்க வீட்டுல உங்களப் பத்தியெல்லாம் சொல்லிட்டேன்பா… என மாணிக்கம் சார் கூறினார். சரிங்க சார் சரியான நேரத்திற்கு வந்துறேனு.. கூறி இணைப்பை துண்டித்தான்.  சரியாக மூன்று மணியிருக்கும் புது எண்ணிலிருந்து கவின் செல்லுக்கு அழைப்பு வந்தது. வழக்கம் போல வணக்கம் சொல்லுங்க என்றதும்…. ஒரு இளம்பெண்ணின் குரலில் ஹலோ…என்ற சப்தம் கேட்டு நிசப்தமாக இருந்தது. கொஞ்சம் சத்தத்தை உயர்த்தி  நீங்க யாருனு தெரிஞ்சுக்கலாமா? என்றான் கவின். உடைந்த குரலில் கண்ணீர் மல்க காரசாரமாய் மூன்று நிமிடங்கள் பேச்சு தொடர்ந்தது. ‘மாணிக்கம் சார் சொன்ன பொண்ணு பேசுறேன். இன்னைக்கு என்னைப் பொண்ணு பார்க்க வாரதீங்க..ப்ளீஸ்.. எண்ட்டா எதும் கேட்காதீங்க’….என்ற குரலில் புலம்பல் சத்தம் ஒலித்தது. ஏங்க எதும் பிரச்சனையா? என்ன காரணமுனு தெரிஞ்சுக்கலாமா? எனப் பல கோணங்களில் பரிவுடன் பேசினாலும் எதையும் கேட்காதீங்க ப்ளீஸ்…. புரிஞ்சுக்குங்க…ப்ளீஸ் என்ற பதில் மட்டும் வந்தது. முடிவாக நான் வரலையினா மாணிக்கம் சார அவமானப்படுத்தற மாறி ஆகிடும். ஏதோ பார்மாலிடிக்கு வந்துட்டு போயிடுறேனு சொல்லியும் தொடர்ந்து ப்ளீஸ் வராதீங்க… புரிஞ்சுகிடுங்க…. என்பது மட்டும் திரும்பத் திரும்ப வந்தது. கவின் எவ்வளவு சொல்லியும் கேட்டபாடில்லை. இணைப்பைத் துண்டித்து முகத்தை கழுவிக் கிளம்பத் தயாரானான்.

    சரியாய் நான்கு மணி. மாணிக்கம் சார் வீட்டை நோக்கிச் சென்றான். கவினைக் கண்டதும் வாப்பா… உக்காருப்பா என்றதும் அமர்ந்து கொண்டான். ப்ரெஞ்பேட் வைத்து தன் முகத்தை அழகுபடுத்திக் கொண்டிருந்தார். பத்து நிமிஷம் வைட் பண்ணுப்பானு… சென்று வெள்ளை நிற ஜிப்பா அணிந்ததும் போகலாம்னு கூறினார் மாணிக்கம் சார். கருமையான தோற்றதில் இருந்தாலும் நரைத்த தலையும், வெள்ளை நிற ப்ரெஞ்பேடும், ஜிப்பாவும் யாவரும் மதிக்கத்தக்க தோற்றத்தில் வெளிப்பட்டார். என் பைக்லேயே ரெண்டு பேரும் கிளம்பி போயிட்டு வந்தராலாம்பா என்றதும் பின்புறம் சீட்டில் ஏறி அமர்ந்த இருபது நிமிடத்தில் இருவரும் பெண் வீட்டை அடைந்தனர்.

    வண்டியை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் நுழைந்த போதுதான் தெரிந்தது, அது பொண்ணு வீடல்ல, மாணிக்கம் சாரின் நெருங்கிய உறவுமுறை பசீர் என்பவர் வீடென்று தெரிந்தது. பசீரும் மணியும் ஒரே உறவு முறையாய் இருந்தாலும் கால் நூற்றாண்டுகளுக்கு முன் இசுலாமிய மதம் மாறியவர். பஷீரின் மனைவி அரசு பள்ளியில் சத்துணவு அலுவலர். அதே பள்ளியில் அவருக்கு உதவியாக பணிபுரியும் பெண் பக்கத்து வீடு என்பதால் பாசமுடன் அப்பெண்ணுக்கு மண வாழ்வு அமைக்க முயற்சித்தனர் என்பதை அறிய முடிந்தது.

    பசீர் சாரிடம் நல விசாரிப்புகள் அதிகரித்துக் கொண்டேயிருந்து முடிவுக்கு வந்தது. பெண் வீட்டார் சார்பில் பெண்ணின் அம்மாவும் அண்ணனும் வந்திருந்தனர். ஒரு பொண்ணுதான் கஷ்டப்பட்டு படிக்க வைச்சுருக்கோம்… ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு கடன கப்பிய வாங்கி செய்றோம் என அவரவர் பங்கிற்கு தங்களால் முடிந்த சொற்களை அசைபோட்டனர்.. பின்பு கவின் பற்றிய பின்புலத்தை அறிமுக நோக்கில் மாணிக்கம் சார் ஏற்ற இறக்கமாய் கூறிமுடித்தார். சரிமா பொண்ண வரச் சொல்லுங்க என்ற பஷீர் சார் சத்தத்தைக் கேட்டதும் நிசப்தம் ஆகியது. இடப்புறமும் வலப்புறமும் தலா இரண்டு சிறுபிள்ளைகளுடன் குனிந்த தலையுடன் பட்டுச் சேலை கட்டி பொண்ணு வரவழைக்கப்பட்டாள். வாமா… வந்து இந்த காப்பியே எல்லாருக்கும் கொடுமா.. என கணத்த குரலில் பஷீர் சார் சத்தம் கேட்க எல்லார் கையிலும் காபி இருந்தது. தம்பி நீங்க ஏதாவது பேசறதாயிருந்தா பேசிக்கிடுங்க என்றார் மாணிக்கம் சார். எப்படா கிளம்புவோமுனு என்ற சிந்தை மட்டும் கவினை ஆட்கொண்டது. கவின் தன் பங்கிற்கு ஏதோதோ பட்டும் படாமலும் பேசினான். இவருதாமா உன்னை பாக்க வந்துருக்காரு …நீ எதும் பேசனும்னா பேசிக்கமானு பஷீர் சார் மெல்லிய குரலில் புன்னகைத்தார். பதினாறாம் வாய்ப்பாடு தெரியாதவனிடம் தப்பில்லாமால் முழுவதுமாய் சொல்லு என கண்டிக்கும்போது, ஏற்படும் கலக்கத்தைப்  போல கலங்கி நின்றது பொண்ணு. எதாவது பேசுமா…. இந்த மாறி டெட்டுல பாஸாகி இண்டர்வீயு போய்ட்டு வந்தாச்சு.. அடுத்த ரெண்டு மாசத்துல அரசு உத்தியோகம் கிடச்சரும்னு’ உன் வாயால சொல்லுமா? என பஷீர் சார் முணுமுணுத்தார்.  பிரமை பிடித்திருந்தது போல முகம் இருந்தது. முகத்தில் கண்களில் தவிர மற்ற இடங்களிலிருந்து வியர்வை நதியாய் பெருக்கெடுத்து ஓடியது. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைப் போல நடுக்கத்துடன் பஷீர் சார் சொன்னதை கவினைப் பார்த்து சொல்லத் தொடங்கியது….

    அங்கு குழுமியிருந்தவர்கள் பொண்ணுக்குக் கூச்சமாயிருக்குமென்று பேசி சிலாயித்தார்கள். அப்போதுதான் மூன்று மணிக்கு வந்த அலைபேசியில் இளம்பெண்ணின் குரல் நினைவுக்கு வந்தது. ‘‘ வந்துராதிங்க ப்ளீஸ்… நான் டெட்டுல பாஸ் ஆகல. மார்க் ரொம்ப கம்மி. ஆனா ரிசல்ட் வந்த போது, பஷீர் சார் மார்க் என்னமானு கேட்டார் பெயிலுனு சொன்னா தப்பா எடுத்துருவாங்கனு பயத்துல தொண்ணுத்தி மூனு மார்க்னு, அடுத்த வாரம் சென்னையில சர்டிபிக்கட் வெரிப்பிக்கேஷனு சொல்லிட்டேன். நான் பாஸ்னு நம்பித்தான் உங்கள வரச் சொல்லிருக்காங்க.. எனக்கு என்ன பண்றதுனு தெரியலனு…’’ சத்தம் குறுகி அழுகை சத்தம் மட்டும் காதில் ஒலித்தது. அனைத்தும் தெரிந்திருந்தும் ஒரு பெண்ணைத் துன்பத்திற்குள் இழுத்துச் சென்று விட்டோமே என்ற கவலை கவினை வாட்டியது. தொண்டைய கரகரத்து… வீட்டுல பெரியவங்கள்ட பேசிட்டுப் பதில் சொல்றேனு சொல்லிட்டு புன்னகைத்தவாறே மாணிக்கம் சார் பைக்ல ஏறி இருபது நிமிட பயணத்தைத் தொடங்கினான் கவின்.

    *****

    கதாசிரியர் – தமிழ் உதவிப்பேராசிரியர்,
    ஜெ.பீ. கலை அறிவியல் கல்லூரி, அகரக்கட்டு, தென்காசி,
    திருநெல்வேலி மாவட்டம்
    மின்னஞ்சல்: muniyasethu@gmail.com

    Share
  • நிறம் உதிர்க்கும் பட்டாம் பூச்சிகள்

    முனைவர் பா. ஜெய்கணேஷ்

    “முடிதான் இப்ப உன் பிரச்சனையா? வயசு முப்பது ஆயாச்சு. படிக்கிறேன்ற பேர்ல காலத்த ஓட்டிட்டு இப்ப வந்து நின்னுகிட்டு மாப்ள அப்படி வேணும் இப்படி வேணும்னு கேட்டா நாங்க என்ன பண்றது? இத்தோட ஐஞ்சி ஆறு பாத்தாச்சு. வரவன் மூஞ்சிய பாத்தா பரவால்ல. அவன் மண்டையதான் பாப்பன். அதுவும் டி.ஆர். மாதிரி முடி வேணும்னு சொல்ற. உங்க அப்பா கூடதான் கல்யாணத்துக்கு முன்னடி மண்ட முழுக்க முடி வச்சி இருந்தார். இப்ப பாரு பின்னடி இருந்து வழிச்சு விட்டாதான் முன்னடி வந்து நாலு விழுது. நான்லாம் குடும்பம் நடத்தல. அதுக்காக விட்டுட்டா போயிட்டன்னு” கலா சத்தமா பேசிக்கிட்டு இருந்தா.

    “அம்மா நிறுத்தும்மா. சும்மா ஏன் இப்படி கத்துற. நான் என்ன சொத்துபத்து வேணும், கார் வேணும், நல்ல வேல வேணும்னா கேட்டன். மண்டையில முடி இருக்கறவனாதான் கேட்டன். ஒன்னு முன் மண்ட வழுக்க, இன்னொன்னு பின் மண்ட வழுக்க, அப்புறம் ஒன்னு கூட்டிட்டு வந்தீங்களே அதுக்கு ரெண்டு பக்கம் பட்டயான்னு ஏறிக்கிட்டு கிடக்கு. அதல்லாம் கூட பரவா இல்ல இப்ப வந்துச்சே அது வழுக்க இல்ல மொட்ட. இப்படியா கூட்டிட்டு வந்து நிறுத்தி கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோன்னு சொன்னா நான் என்ன பண்ணுவன்” அப்படின்னு கோபத்துல கொப்பளிச்சா நிலா.

    “ஆவோன்னா அப்பா கல்யாணத்துக்கு முன்னடி எப்படி இருந்தாரு, இப்ப எப்படி இருக்காரு, பாரு பாருன்னு சொன்னா நான் என்ன பண்ணுவன். அவர் என் அப்பா. அவர் மண்டையில முடி இருந்தாலும் இல்லனாலும் பிரச்சன இல்ல. ஆனா நான் கட்டிக்கப்போறவன் மண்டையில நிச்சயமா முடி இருந்தே ஆகணும்.

    அதுவும் என் தலைவர் டி.ராஜேந்தர் மாதிரி இருந்தே ஆகணும். ஏன்னா அப்பதான் கல்யாணம் ஆயி, புள்ள பெத்து, வயசான கிழவியானாலும் அவருக்கு முடிகொட்டாது. நீ அப்பா தலைய சரியாப் பாக்கல. ஆனா நான் ரொம்ப விவரம்ல. முடி முன்னடி வந்து சரியணும். அப்படி இருக்கற மாப்பள எவன்னா இருந்தா கூட்டிக்கிட்டு வாங்க. இல்லனா  போய் வேலய பாருங்க”.

     “இது என்னடா வம்பா இருக்கு. ஊருல அந்தந்த அம்மாக்கு ஆயிரம் பிரச்சினைனா ஏன் பிரச்சன முடி பிரச்சனையா இருக்கே. ஊருல இருந்து சென்னைக்கு வர மாப்பிளலாம் முடியோடதான் வரானுங்க. ஆனா இங்கு வந்து உப்பு தண்ணியில குளிச்சாலே முடிலாம் தண்ணியோட வழிஞ்சி வழிஞ்சி ஓடிருதாம். இவ ஊரு பக்கம் எவனாவதுன்னு சொன்னா வேணாம்னு சொல்றா. சென்னை செட்டில்னா இந்தப் பிரச்சன.

    “முப்பத்தைஞ்சி வயசுக்காரன் கூட இருபத்தைஞ்சி, இருபத்தெட்டுனா சொல்லுங்க. அதுக்கு மேல வயசான பொண்ணுலாம் வேணாம்னு சொல்றானுங்கன்னு இந்த புரோக்கர் சொல்லிட்டுப் போறாரு. எனக்கே என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கிறன். போன மாசம் கூட நியூஸ்ல படிச்சன் ஒரு பையன் முடி வளக்கறன்னு போயி தப்பான சிகிச்சையால செத்துப்போனத. பாவம் இந்தப் பசங்க மட்டும் என்ன பண்ணுவானுங்க. முடிவளக்கறதுக்காக உயிரயே விட்டுடறானுங்கன்னு” புலம்பிக்கிட்டே பாத்திரங்கள கழுவி அடுக்கிவைச்சுக்கிட்டு இருந்தா கலா.

    “நீ என்ன வேணா சொல்லு. ஆனா நான் சொல்றதுதான் நடக்கணும்… சரிசரி நீ ஏதாவது தனியாப் பேசிக்கிட்டே இரு. நான் புவனா வீட்டுவரைக்கும் போயிட்டு வந்துடறன்”னு தன்னோட வண்டிய தள்ளிக்கிட்டு கிளம்பினா நிலா.

    இரு பக்கங்களிலும் சீராக நின்றிருக்கிற புளியமரங்களின் இடையே ஓடும் சாலையைக் கடந்து புவனா வீட்டு வாசலில் போய் நின்ற வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு முன்வாசல் வழியாக நிலா உள்ளே நுழைந்த போதே “என்னடி நிலா எங்க ஆளயே காணோம். ஊருக்கு வந்து நாளுநாள் ஆச்சாம். பாக்கவே முடியல” என்றாள் புவனா.

    “அத ஏண்டி கேக்கற எங்க அப்பாவும் அம்மாவும் மாப்ள பாக்கறன்ர பேர்ல உயிர எடுக்கறாங்க. மண்டையில முடி இல்லாதவங்களா கூட்டிக்கிட்டு வந்து நிறுத்தினா? நான் என்ன பண்ணுவன். அதான் வந்ததுல இருந்து ஒரே சண்ட. சண்ட போடவே நேரம் சரியாப் போச்சுடி” என்று சொல்லியபடியே அருகிலிருந்த சோபாவின் மீது அமர்ந்தாள்.

    “ஏண்டி மண்டையில முடி இருக்கறவனதான் கட்டிக்குவன்னு அடம்பிடிக்கற. முடிலாம் ஒரு பிரச்சனையா.அதான் உன் உயிர் நண்பன்னு ஒன்னு இருந்துச்சே அதுக்கு மட்டும் என்ன மண்டையில முடியா இருந்துச்சு. அததான ஆறு வருஷமா கட்டிக்கிட்டு அழுத.

    ஆமாம் இப்ப எங்கடி அவன ஆளயே காணோம். போன்ல கூட பேசறதா தெரியலயே. நான்லாம் உனக்கு பேருக்குத்தான் பிரெண்டு” என்று புவனா தொடங்கும்போதே,

    “இப்ப உனக்கு பேசறதுக்கு வேற எதுவுமே இல்லயா?” என்று எரிச்சலுடன் கேட்டாள் நிலா.

    “இல்ல எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். உங்களுக்குள்ள என்னதான் பிரச்சன. அந்த கதைய எனக்கு நீ முழுசா இதுவரை சொன்னதே இல்ல” என்று புவனா கேட்டுக்கிட்டே ஒரு ஆப்பிளை இரண்டு துண்டாக நறுக்கிவைத்தாள்.

    “ ஏண்டி ஆப்பிள். இன்ட்ரெஸ்டிங்கா திங்க நொறுக்குத்தீனி வேற எதுவுமே இல்லையா” என்று நிலா கேட்க கொஞ்சம் சலிப்புடன் “ஆப்பிள்தான் இருக்கு. அதயே தின்னு. இன்ட்ரெஸ்டிங்கா நீ உன் ‘நட்புக்காக’ கதையச் சொல்லு” என்றாள் புவனா.

    “அத இங்க சொன்னா யாருக்குமே புரியாதுடி. காலேஜ்ல நான் எம்.பில். படிச்ச சமயம். ஒருநாள் காலேஜோட பின்பக்கம் ஒரு அணில் அடிபட்டு கிடந்துச்சு. நான் பாத்துட்டு பதறியடிச்சு ஓடிப்போய் தூக்கிப் பாத்தான். மூச்சுவிடமுடியாம உயிருக்குப் போராடிக்கிட்டு இருந்துச்சு. கொஞ்ச நேரத்துல அது செத்தும் போயிருச்சு. எனக்கு என்ன பண்றதுனே தெரியல. அப்ப அங்க ஒல்லியா கருப்பா ஒரு உருவம் வந்து நின்னு இங்கதாங்கன்னு வாங்கி அத பத்தரமா பள்ளம் தோண்டி பொதச்சு மனுசங்களுக்கு சடங்கு பண்ற மாதிரியே பண்ணுச்சு.

    எங்கயோ அந்த அணில் நிம்மதியா தூங்குன உணர்வு கிடச்சி அது இறந்த உணர்வே இல்லாம ஆயிருச்சு எனக்கு. அப்புறம்தான் விசாரிச்சன் அது யாருன்னு. எம்.ஏ. படிக்கறாங்கன்னு சொன்னங்க. அடுத்தநாள் வராண்டவுல பாத்தன். கொஞ்சநாள்லயே பேச ஆரம்பிச்சு நல்லாப் பழகவும் ஆரம்பிச்சுருச்சு. இதோட வகுப்புலயே இருக்கற இன்னொருத்தனுக்கும் என்ன பிடிக்கும் போல. படிப்புலயே இதுக்கும் அவனுக்கும்தான் போட்டியாம்? அவனும் என் பின்னடியே திரிஞ்சான். இதால தாங்கிக்க முடியல போல. என்மேல இருந்த பாசம் கூட ஆரம்பிச்சுருச்சு.

    ஒருநாள் வந்து ஏன்கிட்ட நான் உன்ன விரும்பறன். கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டுச்சு.

    அந்த ஒரு கணம் அதிர்ச்சியா இருந்தாலும் கேட்டது அதுவா இருந்ததால என்னால மறுக்க முடியல.

    நானும் சரின்னு சொல்லிட்டேன். ஒருவாரம் ரொம்ப சந்தோஷமா இருந்தன். ஆனா எனக்குள்ள இருந்த அந்தக் குற்றஉணர்வு என்ன இயல்பா இருக்கவிடல. அத நான் சொல்லாம போனா பாவம் பண்ணவளா ஆயிருவன்னு அன்னைக்கு சொல்ல முடிவுபண்ணன்”.

    “என்னடி அப்படி ஒரு குற்ற உணர்ச்சி” என்று புவனா இடைமறித்துக் கேக்க “அதுவா இரு சொல்றன்னு” நிலா தொடர்ந்தா…

    “எனக்கு சின்ன வயசுல இருந்தே இருக்கற இதயப் பிரச்சன உனக்குத் தெரியும்ல. அதத்தான் அதுகிட்ட அன்னைக்கு சொன்னன். பின்னடி குழந்த பெத்துக்கறதுலயும் பிரச்சன இருக்கலாம்னு டாக்டர் சொன்னத சேத்தே சொன்னன். அந்த நிமிஷம் அது அந்த அணிலுக்குக் காட்டின இரக்கமும் பரிவும் என் கண்ணுக்கு முன்னடி வந்து நின்னுச்சு.

    கொஞ்சநேரத்துல வரன்னு எந்திரிச்சு போனதுதான் ஆளயே காணோம். அப்புறம் மாலையில போன் பண்ணுச்சு.“இங்க பாரு நிலா. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். நீயில்லாம நான் இல்ல. என்ன மாதிரி ஒரு ஆள இந்த உலகத்துலயே உன்னாலதான் பாத்துக்க முடியும்.ஆனா பொண்டாடியா இல்ல. ஒரு தோழியான்னு சொல்லுச்சு”.

    “எனக்கு ஒண்ணுமே புரியல. ஏன்னு கூட கேக்கல. காரணம் தெரிஞ்சதுதான். வாரிசு எவ்ளோ முக்கியம் ஒவ்வொருத்தருக்கும்னு நாம பாக்காததா. அத தர சக்தி இல்லாத நான் ஏன் அவ்ளோ ஆசப்படணும்னு நினைச்சன்.

    ஒண்ணும் சொல்லாம “பரவா இல்ல இந்த ஒரு வாரக் காதல் போதும் என் வாழ்க்கையில. யாரையும் காதலிக்கிற தகுதியும் எனக்கு இல்ல. நான் ஒரு தோழியாவே இருக்கன்னு” அன்னையில இருந்து ரெண்டு வருஷத்துக்கு முன்னடி வரைக்கும் அப்படியே தான் இருந்தன்.

    “அவன் பிரெண்டுன்னு சொன்னதும் பல்ல இளிச்சிக்கிட்டு போய் ரெண்டு வருஷம் முன்னடி வரைக்கும் உயிரக் கொடுத்த. அப்பறம் எப்படி ஒனக்கு ஞானம் பொறந்து அத விட்டுத் தொலைச்ச. அது பண்ணத நினைச்சா எனக்கே கடுப்பா வருது. நீ எப்படிதான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டியோ” என்று புவனா புலம்பினாள்.

    “எல்லா மனுஷங்களுக்கும் சுயநலம் இருக்கும். அதுக்காக நான் பொதுநலமா யோசிக்கறன்னு சொல்லல. ஒரு உயிரு என்னால வலி அனுபவிச்சிரக்கூடாதுன்னு மட்டும்தான் நினைச்சன். அதனாலதான் அத்தன வருஷமும் நான் ஒரு தோழியாவே இருந்தன். தோழின்னு மட்டும் இல்ல அதக் கடந்து சில நேரங்கள்ல ஒரு அம்மாவா, ஒரு சகோதரியாலாம் என்ன நானே கற்பனை பண்ணிக்குவன்”.

    ஏன் அப்படியெல்லாம் நான் யோசிச்சேன்னா அது என்ன விரும்பிட்டு இதயப் பிரச்சினையாலதான வேணாம்னு சொல்லுச்சு. அந்த குற்றவுணர்ச்சிக்காகத்தான் என்ன அது ரொம்ப பத்தரமா பாத்துக்கிறன்னும் பாத்துக்கிச்சு. எனக்கும் இந்த காதல் மேலலாம் நம்பிக்க இல்ல. நான் நினைச்ச எல்லாக் கதாப்பாத்திரங்களாகவும்  இருந்து அதோட துக்கங்கள்ல சந்தோஷங்கள்ல பங்கெடுத்துக்கறன்ற திருப்தி மட்டும் இருந்துச்சு.

    “சரி அவ்ளோ நம்பிக்கையில போன உங்க உறவுக்குள்ள வந்த சிக்கல் என்னதான்”. சொல்லண்டி மண்டையே வெடிச்சுரும் போல இருக்கு” எனக்குன்னு புவனா ஆர்வமாக கேட்டாள்.

    “அதுக்கு குழந்தைனா உயிரு. அதுவும் அழகான குழந்தையாத்தான் வேணும்னு தேடித் தேடி அழகான பொண்ணுங்களா காதலிச்சுகிட்டு இருந்துச்சு. ஆனா அதுங்களுக்கு எதுவும் இதப் பிடிக்கல”.

    “ஆமா ஆமா எல்லாம் உன்ன மாதிரி மூஞ்சியவே பாக்காம சரின்னு சொல்லிருங்களா? அணில பாத்தன், ஆட்டுக்குட்டிய பாத்தன்னு வேற ஒரு காரணம். மூஞ்சிய விட முழு மண்டையிலயும் முளைச்ச புல்லு, பூண்டெல்லாம் எப்ப போச்சுனே தெரியல. அப்புறம் எப்படி யாருக்கும் பிடிக்கும்னு” புவனா கடுப்பில் சொல்ல,

    “அதான் அதோட பிரச்சனையே. ஆனா தான் பிரச்சனைய அது புரிஞ்சிகிட்டதே கிடையாது. ஒவ்வொரு முறையும் நான் இத காதலிக்கறன், அத காதலிக்கறன்னு விதவிதமான பொண்ணுங்களோட போட்டாவா அனுப்பும். அதுல ஒரு பொண்ண இதுக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. அந்தப் பொண்ணுக்கும் இத கொஞ்சம் பிடிக்க ஆரம்பிச்சிருச்சு. அன்னையில இருந்து எப்ப பாத்தாலும் அந்தப் பொண்ணு உன்னவிட  ரொம்ப அழகு, அவ அவ்ளோ நல்லவ, அவள மாதிரி மனிதாபிமானம் இங்க யாருக்கும் இல்லன்னு ஒப்பிட்டுப் பேசிக்கிட்டே இருக்கும்.

    ரொம்ப பொறுக்க முடியாம ஒருநாள் சொல்லிட்டன். “இங்க பாரு நான் உனக்கு ஒரு தோழி அவ்ளோதான். யாரோடயும் என்ன ஒப்பிட்டுப் பேசாதன்னு சொன்னன்”.

    அப்போ அது சொல்லுச்சு. “உனக்குப் பொறாம. அந்தப் பொண்ணு எனக்குக் கிடச்சிட்டான்னு”.

    “எனக்கு என்ன பொறாம. எது கிடைச்சாலும்தான் நீ எப்படியும் தூக்கிப் போட்டுடப் போறன்னு” நான் சொல்ல அதுக்கு அது, “ உன்ன நான் வேணாம்னு சொன்ன மாதிரி அவள நான் வேணாம்னு சொல்லவேண்டி அவசியம் இருக்காது. ஏன்னா அவ எனக்கு அழகான குழந்தையப் பெத்துத் தரதுல அவளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல”ன்னு சொல்லுச்சு.

    “அதுக்கு நீ என்னடி சொன்ன. வச்சி வாங்கி இருக்கக்கூடாது” என்று புவனா கோபத்தோடு கேட்டாள்.

    “கேட்டா மட்டும் என்ன ஆகப்போகுது. எனக்கு ஒன்னு மட்டும் அப்ப விளங்குச்சு. அப்படி ஒரு வெள்ள மனசோட எங்கிட்ட அது பழகலன்றது. அப்பதான் முடிவு பண்ணன். அதோட இனியும் பேசினா நான் பைத்தியமா ஆயிருவன்னு.

    மொத மொதலா  இது என் கிட்ட காதல வந்து சொன்னப்ப பக்கத்துல இருந்த ஒரு பொண்ணு சொன்னா அக்கா இவர் மண்டையில முடியே இல்லன்னு”. ஆனா அப்ப அது எனக்குப் பெருசாத் தெரியல. அப்படிப்பட்ட இது என்னோட குறைய என்ன காயப்படுத்தற மாதிரியே என்கிட்ட வந்து சொல்லுதுனா என்ன பத்தி இத்தன நாளா என்ன நெனச்சி இருந்திருக்கும்னு எனக்கு அப்பதோணுச்சு. “நட்பும் கிடையாது, நான் தோழியும் கிடையாதுன்னு அப்ப முடிவு பண்ணன்”.

    ஆனா அதுகிட்ட நான் வெளிக்காட்டிக்காம “உனக்குன்னு ஒருத்தி கிடைச்சிட்டா. இனி நான் உன் கிட்ட பேசனா அது உனக்கு நல்லது இல்லன்னு சொல்லிட்டு அதுக்கப்பறம் பேசறதையே விட்டுட்டன்.இதுவரை அதுவும் என்கிட்ட பேசறதே இல்ல” அப்படின்னு நிலா சொல்லி முடிச்சப்ப புவனா ஏதோ ஒரு மிருகத்த பாக்கற மாதிரி வித்தியாசமா பாத்துக்கிட்டு இருந்தா.

    “எப்படி இத்தன வருஷம் பொறுத்துகிட்டு இருந்தடி. காதலிக்கறன்னு சொல்லி ஒரே வாரத்துல தோழியா மாத்துன ஒரு ஆளுக்காக அதோட அவ்ளோ வலியையும் உள்ள வாங்கிட்டு இருந்திருக்க… அப்பாடா ஒரு வழியா ஓச்சியே அதன்னு” புவனா அத ஒரு சாதனையா சொல்லிக்கிட்டு இருந்தப்ப நிலா எந்த உணர்வும் இல்லாம திண்ணையில உக்காந்து காலாட்டிக்கிட்டே இருந்தா.

    “பாத்தியா இதுக்குதான் இந்தக் கதைய நான் யார்கிட்டயும் சொல்றதே இல்ல.எனக்கு இருந்த இதயப் பிரச்சினையும் ஒரு வருஷத்துக்கு முன்னடியே சரிபண்ணியாச்சு. அதல்லாம் தான் உனக்குத் தெரியுமே”.

    “ஆமா ஆமா தெரியும். ஹோ அதுக்காகத்தான் இப்படி முடியோட மாப்பிளை தேடிக்கிட்டு இருக்கியா?”

    “அய்யோ பழி எடுக்கலாம் இல்லடி. சின்னவயசுல இருந்தே அப்படி இருக்கறவங்க எனக்குப் பிடிக்கும். முடி இல்லனாலும் மனசு இருக்கேன்னு இத எனக்குப் பிடிச்சுது. ஆனா அதோட மனசுல என்ன எவ்ளோ மோசமா நினைச்சி வச்சிருந்திருக்கு. தான் ஒரு பொண்ண ஏமாத்திட்டோமேன்ற குற்ற உணர்ச்சியில இருந்து தப்பிக்க அது என்ன சுமையா தூக்கிட்டு திரிஞ்சிதா எனக்கு இப்ப தோணுது. எனக்கே அருவருப்பாவும் கஷ்டமாவும் இருந்துச்சுடி. என்னமோ போது.

    ஆனா அதுக்காகலாம் முடியோட மாப்ள தேடல. நல்ல மனசு எதுன்னு தேடிக்கண்டு பிடிக்க இங்க கஷ்டம். இனி யாரையும் காதலிக்கவும் விருப்பம் இல்ல. வரவன் மனச ஒரேநாள்ல புரிஞ்சிக்கவும் முடியாது. குறைஞ்சபட்சம் முடியோடாவது இருக்கட்டுமேன்னு இருக்கு. அதனாலதான் இப்ப முடி இருக்கறது என்னோட லட்சியமா ஆயிருச்சு”.

    “நல்ல லட்சியம்டி. உனக்கு பின்னடி இவ்ளோ பெரிய கதை இருக்கும்னு பாத்தா முடிக்குப் பின்னடி இருக்கற ஒரு கதைய சொல்லிட்டுப் போற”.

    “சரி எனக்கு ஒரு சந்தேகம் நிலா”.

    “என்னடி சந்தேகம்”

    “ஆம்பளைக்கு முடி இல்லனா சொத்து வீடு வாசல் வேலன்னு ஏதேதோன்னு சொல்லி சம்மதிக்க வச்சிராங்க. பொண்ணுங்க சொட்டையா இருந்த எந்த ஆம்பளையாவது கட்டிக்குவானாடி”ன்னு புவனா கேட்டா.

    “முடி கீழ வரைக்கும் தொங்கணும்றதுதான் ஆம்பளைங்களோட ஆசையே. அப்படி இருக்கறப்ப எந்த ஆம்பளடி கட்டிக்குவான். ஆம்பளை பொம்பளை இன்றதே இங்க ஒரு சிந்தனைதான். எல்லாமே ஆம்பளைங்களால உருவாக்கப்பட்டது. முடி இருந்தாலும் இல்லனாலும் அவன கட்டிக்கணும். முடி இல்லாம போன வாழ்நாள் பூரா ஒரு பொண்ணோட நிலமை”…

    “யோசிக்கவே முடியலடி. சரி விட்டுருவோம்”. புவனா நான் வந்து ரொம்பநேரம் ஆச்சு. அம்மா தேடுவாங்க கிளம்பறன்.

    சிலநாட்கள் கழிச்ச பிறகு நிலாக்கிட்ட அவ அம்மா கலா “என்னடி இப்ப சந்தோஷமா. முடி நல்லா நெத்தி வரைக்கும் வந்து விழுற மாப்பளையாவே கிடைச்சிட்டான். பொதுவா முடி இல்லனாதான் அறிவு அதிகம்னு சொல்லுவாங்க. ஆனா நீ அறிவு வேணாம். முடிதான் வேணும்னு அடம்பிடிச்ச பாரு. என்னமோ போ”.

    “இப்ப ஒனக்கு ஒரு பிரச்சனையும் இருக்காதுன்னு நம்புறன். தட்டுலாம் மாத்தியாச்சு. கல்யாணத்தோட முதல்நாள்லயே மண்டபத்துல நிச்சயம் வச்சிகலாம்ல. இல்ல தனியா நிச்சயம் வக்கணுமான்னு”கலா கேட்டப்ப போம்மா “அவரோட நான் வாழவே ஆரம்பிச்சுட்டன் மனசுல. இப்ப போய் நிச்சயம் கிச்சயம்னு பேசிக்கிட்டிருக்கன்னு சொல்லி அப்படியே தூங்கிப் போனா”.

    காலையிலலேயே நிலாவுக்கு அவன்கிட்ட இருந்து ஒரு போன். “நிலா உன் கிட்ட ஒண்ணு சொல்லணும்”.

    “என்ன சொல்லுங்க”.

    “இல்ல நேத்து இரவு ஒரு கனவு”.

    “என்ன கனவு ஏன் இவ்ளோ பொறுமையா பேசறீங்க”..

    “திடீர்னு ஒருநாள் நான் தூக்கத்துல இருந்து முழிச்சு பாக்கறன். மண்டையில இருந்த ஒரு பக்கம் முடி தலைக்காணி மேல கிடக்குது. பதறியடிச்சு எந்திரிச்சுப் போயி பாத்ரூம்ல வாஷ்பேசின்கிட்ட நின்னு தலையில அள்ளி தண்ணி ஊத்தினா மிச்ச முடியும் கீழ கொட்டுச்சு. முக்கா வழுக்க தலை. ஏன் இப்படி எனக்குக் கனவு வரணும். ஒன்னுமே புரியல”.

    ”என்னது மண்ட வழுக்கையான கனவா”? என்று நிலா அதிர்ச்சியடைந்து கேட்க…

    “அது மட்டும் இல்ல இன்னோன்னு”.

    ”இதுவரைக்கும் நான் கண்ட கனவு எதுவுமே எனக்குப் பலிக்காம போனதே இல்ல நிலா”….

    Share
  • மூதாட்டியைப் புணர்ந்த முனியன்

    முனைவர் ஆ.சந்திரன்

    உதவிப்பேராசிரியர்

    தமிழ்த் துறை

    தூயநெஞ்சக் கல்லூரி

    திருப்பத்தூர் வேலூர்

    ————————————–

    மார்பெலும்பை நன்றாகக் கவ்விய தூண்டில் முள்ளின் இழுவிசையில் நடந்துகொண்டிருந்தது சுகமாய் இருந்தது. மங்களான வெளிச்சத்தில் கால்கள் தரையில் படும் இடமும் தெளிவாகத் தெரியவில்லை. நிலவின் ஒளியற்ற இருளில் கண்களுக்கு காட்சிகள் மங்களாகவே தெரிந்தது. தெளிவற்ற பிம்பங்களைப் பார்த்தவாறே மெல்ல நடந்துகொண்டிருந்தான் முனியன்.

    புருவத்தின் ஓரம் லேசாகக் கீரிச்சென்ற முள்ளின் சுவடு குருதியாய்க் கன்னத்தில் வழிந்தபோதுதான் இடது பக்கம் முள்செடிகள் இருப்பது அவனுக்குப் புரிந்தது. ஏனோ! அதுவும் அவனுக்கு இன்பமாகவே தோன்றியது.

    இருளின் அடர்த்தி மெல்ல மெல்ல கூடிக்கொண்டே இருந்ததால் கல்களை எச்சரிக்கையாக எடுத்துவைத்து மெல்ல நடந்துகொண்டிருந்தான்.

    சுற்றுமுற்றும் பார்த்து மெதுவாக நடந்துகொண்டிருந்த அவனுடைய கண்களில் தொலைவில் கொழுந்துவிட்டு எரியும் தீயின் ஒளி தென்பட்டது.

    ஓடும் ரயிலை எட்டிப்பிடிப்பவன் போல் வேகமெடுத்த அவனுடைய கால்கள் ஒளி வந்த அந்த இடத்தை அடைந்து பிறகுதான் நின்றன. பூனையைப் போல் மெல்ல அருகில் சென்றபோது அங்கு கண்ட காட்சி அவனுக்கு அதிர்ச்சியைத் தந்தது.

    அதற்குக் காரணம் யாருமற்ற அந்த வனாந்திரத்தில் ஒரு மூதாட்டி அடுப்பில் எதையே வேகவைத்துக் கொண்டிருந்தாள். அந்த இடத்தில் அவளைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.

    நரைத்த கூந்தல். சுருக்கங்கள் பீடித்த தேகம். தளர்ந்த நடை என அணிவகுத்து நின்ற உறவுகளைப் பெற்ற மகிழ்ச்சி அவளது முகத்தில் தெரிந்தது.

    கால்கடுக்க நெடுந்தூரம் நடந்த களைப்புடன் பசியும் கூட்டணி அமைத்து தாக்க மூதாட்டியிடம் உண்ண ஏதாவது கேட்கலாமா? என்று முனியன் யோசித்த போது, “இந்தா தம்பி” என்று ஒரு சிறு மண்பாண்டத்தில் எதையோ உண்ணத் தந்தாள்.

    பசியில் “அது என்ன என்று ஆராயுமுன்” வயிற்றில் அடைக்கலம் அடைந்தது.

    பசி நீங்கிய உடன் அந்த மூதாட்டியிடம் ஏதோ கேட்க வேண்டும் என்று நினைத்தான்.

    ஆனால் அதற்குள் அவன் பயணம் மீண்டும் தொடர்ந்தது.

    கொஞ்ச தூரம் நடந்ததும் அதுவரை இழுத்துவந்த தூண்டில் அவனை விட்டு திடீரென மறைந்தது.

    ஏன் தூண்டில் காணாமல் போனது? எங்கு போனது? தன்னை ஏன் இங்கு இழுத்து வந்தது? போன்ற கேள்விகள் அவனைத் தொலைத்துக் கொண்டிருந்தபோது, சர்ர்ர்…னு வந்த அம்பு ஒன்று அவனது மார்பில் ஊடுருவி புற்றில் நுழைந்த நாகம் போல் முதுகில் தலையை எட்டிப்பார்த்தது.

    அம்பைத் தொட்ட அவனது கரங்களை அருவி நீராய் பீரிட்ட குருதி நனைக்க சூரைக்காற்றில் சிக்குண்ட வாழை குலையாய்த் தலைசுற்றி மண்ணில் வீழ்ந்தான்.

    திடுக்கிட்டு அலறிஅடித்துக்கொண்டு எழுந்த முனியனுக்குத் தன் மார்பில் ஏதும் இல்லாததை அறிந்த போதுதான் அனைத்தும் கனவென்று புரிந்தது.

    கனவு அவனது நினைவைப் பின்னிக்கொள்ள உறக்கம் அவனை உதறிதள்ளிவிட்டு ஓடியது.

    எழுந்து விளக்கைப் போட போன போது மின்சாரம் தடைப்பட்டிருப்பது தெரிந்தது.

    படுக்கையில் ஊடல் கொண்ட காதலியுடன் போராடுவது போல் போரடித் தோற்றுப் போனதால் மீண்டும் மின்சாரம் வந்துள்ளதா? என்று பார்த்து ஏமாந்தவன், பூசையறையில் இருந்த மண் விளக்கை எடுத்து தீப்பந்தந்தைப் போல் எரியச் செய்தான்.

    ஜன்னல் வழியாக சில்லென்று வந்த காற்று அவனைத் தழுவத்துடித்தது. அவனுக்கும் அதே உணர்வு வந்தால் ஜன்னலை நோக்கிப் போனான்.

    வங்கி சேமிப்பில் சேர்ந்திருந்த பணத்தில் கட்டிய வீட்டில் நல்ல தரமான பளிங்கு கற்களை பலகடைகள் ஏறி இறங்கி தேர்வு செய்து பதித்தான். புதுமனை புகுவிழாவிற்கு வந்த நண்பர்கள் வீட்டை சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்த போது  “டிசைன் சூப்பர். செம்ம கலர். ஆனா.. யூ.பி. எஸ் போட்டிருந்தா நல்லா யிருக்கும்” என்று பேசிக்கொண்டிருந்தது முனியன் காதில் விழுந்தது. அதைக் கேட்காதவன் போல் அப்போது அவன் நடந்துகொண்டான்.

    தீப்பந்தம் போல் எரிந்த விளக்கில் வெளியான வேம்பின் வாடை அவனைத் தழுவிக்கொள்ள ஜன்னல் நோக்கி வந்தது.

    சில் காற்றில் தவழ்ந்து வந்த முல்லையின் மணமும் அகல்விளக்கில் இருந்து வந்த வேம்பின் மணமும் நான் நீ என மோதிக் கொள்வதை அவன் உணர்ந்தபோது வாழை இலையின் மேல் விழுந்த மழைத்துளிகள் அவன் காதில் சந்தடியில்லாமல் நுழைந்துகொண்டிருந்தன.

    ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தான். பூமித்தாயின் வயிறு நிறைந்திருந்தது. மின்மினி போன்ற மின்னலின் ஒளியில் அது நன்றாகத் தெரிந்தது.

    அப்போது கனவில் கண்ட மங்கிய இருள் அவனை வேதாளம் போல் பின் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

    மங்கிய வெளிச்சித்தில் பார்த்த மூதாட்டியின் முகமோ? அவள் தந்த உணவோ? தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவற்றைத் தெளிவாகப் பார்க்க பகீரதனாய் முயன்று கொண்டிருந்தான்.

    இறுதியாக வடக்கு நோக்கிச் செல்லும் பேருந்தில் ஏறி பயணப்பட்டான்.

    பாதியில் குறுக்கிட்ட ஆற்றில் வெண்ணிற அலைகள் திருடனைத் துரத்துவது போல் ஓடிக்கொண்டிருந்தது.

    சில மணிநேர பணயத்திற்குப் பிறகு பேருந்திலிருந்து இறங்கியவன் புற்களுக்கிடையே காலடிகள் பட்டுத்தேய்ந்த பாதையில் நடக்க ஆரம்பித்தான். தன் முதுகில் தொங்கிய பையை அவ்வப்போது சரிசெய்தபடியே நடந்துகொண்டிருந்தான்.

    உழவர்கள் வயலில் மூழ்கியிருந்தனர். அவர்களைக் கண்டு அஞ்சிய சர்ப்பம் ஒன்று முனியனின் பாதையில் நாலடிமுன்னார் உயிர் பிழைத்துக்கொள்ள ஓடியது. வளைந்து நெளிந்து தாவிக் குதித்தோடிய அதன் அழகை ரசித்தபடியே படம் பிடித்தவன் பாம்பின் உருவம் மறைந்ததும் அங்கிருந்து புறப்பட்டான்.

    அவனது இடப்பக்கத்தைத் தாக்கிக்கொண்டிருந்த சூரியனின் கதிர்கள் இப்போது அவனது தலையை மட்டும் குறிவைத்து தாக்க ஆரம்பித்தது. அதனால் களைத்துப்போனவன் பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தான். அதில் இருந்த தண்ணீரைத் தேடி அதை நாக்கில் படும்படிசெய்தான்.

    தன்னைக் கடந்து போன மேகத்துண்டுகளைப் பார்த்து அவ்வப்போது நன்றி கூறியவாறு நடந்துகொண்டிருந்தவன் நாவறண்டு தண்ணீர் எங்கு கிடைக்கும் என்று தேட ஆரம்பித்தான்.

    ஒரு வழியாக இடப்பக்கமாக இருந்த ஓரு நீரோடை அவனது கண்ணில் பட திருவிழாவில் தொலைந்த குழந்தையைத் திரும்பப்பெற்றவர் போல் அதை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றான்.

    மலையிலிருந்து பள்ளத்தை நோக்கிச் செல்லும் காட்டாற்றில் தண்ணீர் தெள்ளத் தெளிவாக இருந்தது.

    அதைப் பார்த்ததும் பருகவேண்டும் என்ற ஆவல் மேலிட தன்முதுகில் இருந்த பையை இறக்கி அருகிலிருந்த ஒரு சிறு கல்லின் மேல் வைத்தான். மெல்ல தண்ணீரின் மேற்பரப்பைத் தன் உள்ளங்கையால் இருபுறமும் விளக்கியபோது அவன் முன்னர் ஒரு சிட்டுக் குருவி படபடத்துக்கொண்டிருந்தைப் பார்த்தான்.

    பேருந்து நிறுத்ததில் இறங்கிபோது அக்குருவியைப் பார்த்ததாக ஒரு நினைவு அவனுள் தோன்றி மறைந்தது.

    அதே நினைவுடன் இருகையால் தண்ணீரை அள்ளி வாயருகே கொண்டு சென்றபோது அவன் காதுகளை அடைந்த அந்தக் குரல் கையிலிருந்த தண்ணீரை கை கழுவ செய்தது.

    “அண்ணே! அந்தத் தண்ணீரைக் குடிக்காதீங்க” என்று கத்தியபடி ஒரு சிறுவன் முனியனை நோக்கி மூச்சிறைக்க ஓடிவந்தான்.

    அது நல்ல தண்ணி இல்லண்ணே! குடிக்க தண்ணி வேணுமா? வாங்க என்று அழைத்தான்.

    “தண்ணீர் நல்லா தானே இருக்கு. ஏன் குடிக்கக் கூடாது?” என்று தெள்ளத் தெளிவாக இருந்த அதன் தோற்றம் அவனைக் கேட்க வைத்தது.

    ஆனால் கோவணத்துடன் இருந்த அச்சிறுவனிடம் அதைப் பற்றி ஏதும் கேட்க வில்லை.

    மஞ்சு புற்கள் நிறைந்த இங்கொன்றும் அங்கொன்றும் சிதறிக்கிடந்த தேயாத கால்தடங்கள் தென்பட்ட பாதையில் நடக்க ஆரம்பித்த சிறுவன் வலப்பக்கத்தில் கொஞ்ச தொலைவில் இருந்த பாறையைச் சுட்டிக்காட்டி “அதோ அந்தப் பாறையில் ஒரு சுனை இருக்கு. அங்க நல்ல தண்ணீ கிடைக்கும் வாங்க“ என்று கூறியவாறே தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

    “ஆமா? தம்பி நீ இங்க தனியா என்ன பண்ற? ஸ்கூல் போகறதுதில்லையா?” என்று முனியன் கேட்டான்.

    அம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல அதனால ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு மாடு மேய்க்க வந்துட்டேன்.

    என்ற பதிலைக் கேட்டு முனியன் அடுத்த கேள்வியைத் தயக்கமின்றி கேட்டான். என்ன வகுப்பு படிக்கிறாய் என்று.

    “எட்டாம் வகுப்பு“ என்று ஆங்கிலத்தில் கூறியது அவனது மண்டையில் ஆணி அடித்தது போல் அழுத்தமாய் பதிந்தது.

    தான் கனவில் கண்ட காட்சியைப் பற்றிக் கூறி மூதாட்டி பற்றி விசாரித்தான்.

    அவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த சிறுவன் புன்னகைப்பதாக அவனுக்குத் தோன்றினாலும் ஏன் சிரிக்கின்றாய் என்று கேட்கவில்லை.

    அதற்குள் தண்ணீர் இருந்த சுனையை அடைந்ததால் முனியன் தன்தாகத்தைத் தீர்த்துக்கொண்டான்.

    தாகம் தணிந்த தெம்பில் “தம்பி இங்க பாம்புமலை எங்கிருக்கு என்று கேட்க” சற்றும் தாமதிக்காத அந்தச் சிறுவன் வடக்கு திசையை நோக்கியிருந்த மலையைச் சுட்டிக்காட்டி “அதோ தெரியுதே அந்த ஆர்ப்பு மரக்காட்டைத் தண்டினால் நீங்கத் தேடிவந்தது கிடைக்கும்” என்று கூறிய சிறுவன் மாடுகள் பற்றிய நினைவு வந்தவனாய் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

    தன்னுடைய  இலக்கு கண்ணில் தெரிந்த தெம்பில் வேகமாக நடந்த முனியன் ஆர்ப்பு மரக்காட்டை நெருங்கியபோது தான் கனவில் கண்ட பாதை எதிர்படுவதாய் உணர ஆரம்பித்தான்.

    அதனால் இன்னும் வேகமாய் நடக்க ஆரம்பித்தான். இங்கொன்னும் அங்கொன்றுமாய் இருந்த நெல்லி மரங்களில் சிலவற்றில் மட்டும் நெல்லிக்காய் காய்த்திருப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே சென்றவனின் கண்முன்னர் பெரிய யானையை ஒத்த பாறை திடீரெனத் தோன்றியது. அதன் உச்சியில் பிரண்டைக் கொடிகள் பாம்புகள் போல் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.

    அதைக் கடந்தவனுக்கு பிரமிப்பு அதிகமானது அச்சு அசல் கடந்து வந்த மலையைப் போன்ற மற்றொரு மலை எதிரில் கம்பீரமாய் நின்றுகொண்டிருந்தது. அதைக் கடந்தவனுக்கு மயக்கம் வருவது போல் ஆனது. மீண்டும் ஒரு மலை அதே போல் இருந்தது.

    திரும்பிப் போய் விடலாம் என்று கூட அவன் நினைத்தான். ஆனால் ஏதோ ஒன்று அவனைத் தொடர்ந்து முன்னேறிச் செல்லத் தூண்டுவதாய் அவன் உணர்ந்தான்.

    ஏழு மலைகளைத் தாண்டியபோது இதுவரை கடந்துவந்த மலைகளை ஒன்று சேர்த்ததுபோல் பருத்த பாறை கண்ணில் பட்டது. அந்தப் பாறையின் நடுவில் ஒரு பெரிய நுழைவு வாயில் போன்ற தோற்றம் இருந்தது. அதனருகே சென்றான். அதுவரை உடன் வந்த சிட்டுக் குருவி திடீரெனக் காணாமல் போனது.

    தயக்கத்துடன் அந்த வாயிலினுள் நுழைந்தவன் கனவில் கண்ட மூதாட்டியை நேரில் பார்த்தான். ஆனால் இப்போது அவனுக்கு பிரமிப்பு ஏதும் ஏற்படவில்லை.

    அவனைப் பார்த்த அந்த மூதாட்டி தன்னிருக்கரங்களை நீட்டி அவனை தன்னருகே அழைத்தாள். அவளுடைய நெற்றியில் இருந்த திலகத்தைப் பார்த்தவாறே சென்று அருகில் நின்றான் பித்துப் பிடித்தவனாய்.

    நீட்டிய கரங்களால் அவனை ஆரத்தழுவினாள் அம்மூதாட்டி.. அவளுடைய கொங்கைகள் அவனுடைய மார்பில் ஈட்டியாய்த் துளைத்தது.

    அவளை விளக்க முயன்றகொண்டிருந்த போது மூதாட்டியின் சாயம் மெல்ல மெல்லவிலகியது.

    உடுத்தியிருந்த இருவரின் ஆடைகளும் மண்ணைத் தஞ்சமடைந்தன.

    இருவரின் சரீரங்களும் பாம்புகளாய்ப் பின்னிக்கொண்டு நின்றன.

    சூரியன் பூமியை நோக்கி வீசியெறிந்த ஒளிக்கதிர்களுக்கு அஞ்சி இருவரும் காற்றில் மறைத்துக்கொண்டார்கள்.

    அது சரி முனியன் பற்றி கூறும் நீ யார்? என்று கேட்கிறீர்களா?

    ம்…. ம்…. புரிகிறது

    ………………………… நான் தான் முனியனின் நிழல்.

    Share
  • குமரேசன் என்னும் கூத்தாடி

    முனைவர் பா. ஜெய்கணேஷ

    துறைத்தலைவர்,

    தமிழ் அறிவியல் மற்றும் கலையியல் புலம்

    எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்

    காட்டாங்குளத்தூர் – 603203

     

    “பொம்பள வேஷம் போட்டுடலாம். ஆனா ஒரு பொம்பளையா நடிக்கிறதுதான் கஷ்டம். ஏன்னா பொம்பளைக்கு இருக்குற நெளிவு சுளிவு வரலனா கல்லுவிட்டு எறிவானுங்க. கேவலமா திட்டுவானுங்க. ஆனா எனக்கு அந்தப் பிரச்சன இருந்தது இல்ல. என்னைக்கு நான் பொம்பள வேஷம் போட்டு நடிக்கணும்னு ஆரம்பிச்சனோ அன்னையில இருந்தே ஒரு பொம்பளைக்கு இருக்கக்கூடிய எல்லா உடல்அசைவும் எனக்கு வந்திருச்சு” அப்பிடின்னு தான் பையன் கிட்ட கூத்தாடி குமரேசன் சொல்லிக்கிட்டு இருந்தான்.

    ”அப்பா எனக்கு உன்கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேக்கணும்”

    ”கேளுடா மகனே… ஊருல அவன் அவன் கேக்காததையா நீ கேட்டுறப் போற”

    ”இல்லப்பா கூத்துல ராமன், பீமன், அருச்சுனன், இராவணன்னு இப்படி எத்தனையோ கதாப்பாத்திரம் இருக்க நீ மட்டும் ஏன்ம்பா பாஞ்சாலி, சீதைன்னு பொம்பளைங்களா நடிக்கணும்னு விருப்பப்பட்ட”.

                “சின்ன வயசுல கூத்துப் பாக்க எங்க அம்மா கூட போவண்டா. அம்மாவே தூங்கிரும். ஆனா நான் மட்டும் தூங்கவே மாட்டன். எவ்வளவு பெரிய ஆம்பள நடிகருங்க வந்தாலும் அங்க பெருசா கைத்தட்டல் இருக்காது. இப்ப நீ சொன்னியே பொம்பளைங்க அவங்க மாதிரி வேஷம் போட்டு ஆம்பளைங்க வந்து நிக்கறப்ப அந்த இடமே அதிரும்டா.

    காசு கொண்டு போய் குடுப்பாங்க நிறைய அவங்களுக்குதான். எல்லாரும் பாராட்டுவாங்க அவங்கள. இத பல ஊருக்காரங்க கூத்துலயும் பாத்துக்கிட்டே இருந்த நான் மெது மெதுவா என்னையும் மாத்திக்க ஆரம்பிச்சன். நான் பேசறது சாதாரணமாவே பொம்பள மாதிரிதான் இருக்கும். அதுவும் சேர்ந்து ஊருல போறவன் வரவன்லாம் உசுப்பேத்த எனக்கும் கூத்துல பொம்பளையா நடிக்கணும்னு ஆச வந்துருச்சுடா”.

    ”அதுக்கு என்ன பண்ண? எப்படி நடிக்க வந்த”?

    “எனக்கு பதினைஞ்சு வயசு இருக்கறப்ப அம்மா கிட்ட சொன்னன். அம்மா முதல்ல சொன்ன வார்த்தையே அடி செருப்பாலன்னுதான். ஆம்பள பையன சிங்கம் மாதிரி பெத்து வச்சிருக்கன்னு ஊருலலாம் சொல்லிட்டு திரியுறன் நானு. நீ என்னடான்னா பொம்பளையா வேஷம் போட்டு நடிக்கப்போறன்னு வந்து நிக்கிற அப்படின்னு” திட்டோட அடியும் சேர்ந்துதான் விழுந்துச்சு.

    ரெண்டுநாள் நான் கொலப்பட்டினி. அன்னைக்கு இரவு தூங்கறப்ப அம்மா தலமாட்டாண்ட வந்து உக்காந்து “டேய் பொம்பளயா நடிக்கிறதுல இருக்கற சிக்கல்லாம் உனக்கு தெரியாதுடா. சொன்னா புரிஞ்சிக்கோடான்னு” எவ்வளவோ சொல்லிப் பாத்துச்சு. நான் அப்பயும் அழுது அடம்பிடிச்சேன். அப்புறம் சமாதானமா “என்னமோ பண்ணுடான்னு” சொல்லிட்டுப் போயிருச்சு.

    அம்மா சொன்னதுல இருந்து முதல்ல நீளமா முடி வளக்க ஆரம்பிச்சன். மீசை, தாடி கொஞ்சம் வளந்தாக்கூட வழிச்சு விட்டுருவன். நான் கொஞ்சம் மாநிறம் வேறயா. அதனால எப்பவும் பாக்க அழகா இருக்கணும்னு மேக்கப் போட்டுக்கிட்டே இருப்பன்.

    ”ஏன்ம்பா பொம்பளைங்க யாரும் நடிக்காம ஆம்பளைங்க அவங்க வேஷம் போட்டு நடிச்சாங்க”…

    “அடேய் இந்தக் காலத்துலயே பல வீட்டுங்கள்ல பொம்பளைங்க நடிக்கறதுன்னா அவ்ளோதான். அந்தக் காலம்னா சொல்லவா வேணும். பொம்பளைங்க வீதியில இறங்கி நடிச்சாங்கன்னா வீட்டோட மானமே காத்துல பறந்த மாதிரி. அதனால நடிக்கவே விடமாட்டாங்க. அதுக்காகத்தான் என்ன மாதிரி பொம்பள வேஷம் போடத் தயாரா இருக்க ஆம்பளைங்கள நடிக்க வச்சாங்க”.

    ”சரி சரி நீ உன் கதைய சொல்லு”…

    “டேய் கதைகேட்டது போதும் உங்க அப்பா ராஜா தேசிங்கு கதைய… எந்திரிச்சி வந்து கஞ்சி குடிக்கற வழி பாருடா. அடுத்த வேள கஞ்சிக்கே வழி இல்லையாம். கதயப் பாரு கதய”…

    ”அம்மா இரும்மா… வரன். நானும் ரொம்பநாளா கேக்கனும்னு நினைச்ச கதை. கேட்டுட்டு வந்து கஞ்சி குடிக்கறன் இரு”.

    ”உங்க ஆத்தா அப்படித்தாண்டா. அவளுக்கு எப்பவுமே என்ன கண்டா எலக்காரம் தான்”

    ”அதவிடுப்பா நீ வா கதைக்கு…”

    ”பக்கத்து ஊருல இருக்கற ராவணன் கூத்துக் குழுவுக்கு நடிச்சு வந்த பொம்பள ஆளு கல்யாணத்துக்குப் பொண்ணு கிடைக்காம தற்கொலை பண்ணி செத்துருச்சாம். அந்த சமயத்துல ஆள் தேடிக்கிட்டு இருந்தாங்க. அப்பதான் நான் போய் பாத்தன். முன்னடி இருந்தவ நல்லா சிவப்பா இருப்பாளாம். நான் மாநிறம்ல. ரொம்ப யோசிச்சாங்க. ஒருவாரம் கழிச்சு வரச் சொன்னாங்க. ஒரு வாரம் வரைக்கும் வேற ஆள் கிடைக்கல. என்னையே சேத்துக்கிட்டாங்க.

    மூனுமாசம் பயிற்சி. எனக்கு இயல்பாவே உடல்மொழியும் குரலும் இருந்ததால என் குருவுக்கு சிக்கல் இல்லாம போயிருச்சு. நல்லாவே கத்துக்கிட்டன் எல்லாத்தையும்”…

    ”அப்புறம் முதல்நாள் முதல் கூத்து எங்க நடந்துச்சு. உனக்கு அந்தநாள் நினைவு இருக்காப்பா”

    ”அது மறக்கக்கூடிய நாள் இல்லடா? என் வாழ்க்கையவே புரட்டிப்போட்ட நாள் அது.  என்னோட வாழ்நாள் கனவு ஈடேறப்போற நாள்னு மேக்கப்லாம் போட்டுகிட்டு மேடையில போய் நின்னன். மேக்கப் போடறப்பவே விடல பசங்க என்ன டிரஸ் மாத்தவிடாம தொல்ல பண்ணிக்கிட்டே இருந்தாங்க. நான் மேடைக்கு வரதுக்குள்ளயே அங்கங்க சீண்டிக்கிட்டே இருந்தாங்க. இது என்னடா இம்சன்னு மேடைக்கு போய் நின்னப்ப ஊரே ஒரே கைத்தட்டல். பெருமையா இருந்துச்சு.”

    ”அப்புறம் என்ன? உனக்கு”…

    ”டேய் நடிக்கறப்ப காசுகுடுக்கறன்ற பேர்ல நான் ஆம்பள வேஷம் போட்ட பொம்பளன்னு தெரிஞ்சி கூட கண்ட இடத்துலயும் வந்து தொட்டானுங்க. வாய்க்கு வந்ததலாம் பேசினானுங்க. நான் நடிச்சு முடிக்கிறதுக்குள்ளயே ஒருவழி ஆயிட்டன்”.

    ”ஆனா அதல்லாம் பொறுத்துக்கிட்டுதாண்டா நடிச்சன் அதுக்கப்பறமும்”.

    ”சரி ஊருல உன்ன எல்லாரும் எப்படி பாத்தாங்க”…

    ”எல்லாரும் என்ன ஒன்பது, அலி, உஸ்ன்னே கூப்பிட ஆரம்பிச்சாட்டானுங்க. நான் எவ்ளோ சொல்லிப்பாத்தன். ஆம்பளையா இருந்து பொம்பளையா நடிக்க வந்த என்னையே இப்படி விரட்டறாங்கன்னா, உண்மையாவே பொம்பளையா மாறவங்க கதி என்னன்னு யோசிச்சன். அதுல இருந்து இன்னைக்கி வரைக்கும் அவங்கள கையெடுத்து கும்பிட ஆரம்பிச்சிட்டண்டா”…

    ”எனக்கு எங்க ஊருல ஒரு பொண்ண ரொம்ப பிடிக்கும். அழகா இருப்பா அவ. அவ பின்னடியே திரிஞ்சன்… அவளும் சிரிப்பா, ஆனா பேச மாட்டா. ஒருநாள் அவ பின்னடியே போய் நின்னனா”…

    ”என்ன நின்னனா, சொல்லு சீக்கிரம்”

    அவ திரும்பன சமயம் பாத்து உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். என்ன கல்யாணம் கட்டிக்கிறிங்களான்னு கேட்டன். அவ்ளோதான். அவ விழுந்தடிச்சு சிரிச்சா என்ன பாத்து. ”என்னது காதலிக்கிறிங்களா, கல்யாணம் பண்ணிக்கணுமான்னு கேட்டா”

    ”ஆமாம்னு சொன்னன். அடுத்து அவ கேட்டா பாரு”.

    “உங்களால புள்ள பெத்து தரமுடியுமான்னு. நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்ககூட நடந்து வந்தா நீங்க நடக்கற நடய பாத்து இந்த ஊரு என்ன சொல்லும். ஐயா சாமி நான் உங்கள பாத்து சிரிச்சது எல்லாம் உங்க நடையையும் குரலையும் கேலி பண்ணிதான். மூதேவிக்கு பாரு ஆசய கல்யாணம் கட்டிக்கணுமா நானு. போய் வேலயபாருன்னு” சொல்லி அனுப்பிட்டா…

    ”அப்பறம் எப்படி அம்மா மட்டும் உன்ன கல்யாணம் பண்ணிக்கிச்சு. அத நீ சொல்லவே இல்ல”…

    “காதல் ஆச காணாம போனதுல இருந்து கல்யாண ஆச வந்துச்சு. உங்க ஆயா எந்தெந்த ஊருலயோ போய் பொண்ணு பாத்துச்சு. அப்பன் ஆத்தாங்க ஒத்துக்கிட்டாலும் பொண்ணுங்க ஒத்துக்கல. வயசும் ஆயிருச்சு. ஒருத்தி கூட என்னக் கட்டிக்கில. வரவ எல்லாமும் என்னயும் சேத்து கிண்டல் பண்ணிட்டுதான் போனாளுங்க.

    ”அப்பறம் அம்மா மட்டும் எப்படிப்பா”

    “உங்க அம்மாவோட அப்பா ஒரு பெண் வேஷம் போடற கூத்தாடி. அந்த ஆளும் இறந்துபோயிட்டான். அநாதையா இருந்த உங்க அம்மா கிட்ட எங்க அம்மா பேச உங்க அம்மாவும் ஒத்துகிட்டா. அதனால இன்னைக்கு என்கூட அவ. எங்களுக்கு நீ.

    ”சரி அம்மா கூட உன்கூட எங்க போனாலும் கூடவே நடக்க மாட்டுது. உன்ன முன்ன போவவிட்டுட்டுப் பின்னதான் நடந்து வருது. அவங்க அப்பாவும் அப்படித்தான. அப்பறம் என்ன?”

    “நானும் அததாண்டா நினைச்சன். ஆனா இவ சொன்னா பாரு… ”பொம்பள வேஷம் போடற கூத்தாடிக்கு மட்டும் வாக்கப்பட்டுற கூடாதுன்னு என் வாழ்நாள்ல நினைச்சன். ஆனா என் விதி எங்க அப்பன் செத்து இவன கொண்டு வந்து விட்டுருச்சுன்னு இன்னைக்கும் திட்டிக்கிட்டு இருப்பாடா”. உனக்கு இதல்லாம் சொன்னா புரியாதுடா. சரி பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகலயா. நீ கிளம்பு முன்னடி போ. நான் பின்னடியே வந்து உங்க வாத்தியாரப் பாக்கணும்.

    ”அப்பா ஒன்னு சொல்லவா”?

    ”என்னடா”?

    ”நீ பள்ளிக்கூடம் பக்கம் மட்டும் வந்துராத. அம்மாவ நான் வரச்சொல்லிட்டன். பசங்கலாம் என்ன வெறுப்பேத்துறாங்க.. ஒன்பது பையன் ஒன்பது பையன்னு…

    Share
  • காதல் என்பது..

                                                      

                                                                            திவாகர்

     

    என் மனம் பூராவும் குழப்பத்தாலும் பயத்தாலும் தயக்கத்தாலும் இழுபட்டது. இவள் இப்படி இத்தனை வெளிப்படையாக இருப்பாள் என சற்றும் எதிர்பார்க்கவில்லைதான். இவள் ஏன் இப்படி கேட்கிறாள் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க நேரமில்லைதான். சட்டு புட்டென்று பதில் சொல்லிவிட்டு ஓடிவிட வேண்டிய சூழ்நிலை.. ஆனால் ஓட முடியுமா?

    ”ம்.. பரவாயில்லே.. உண்மையைத் தானே சொல்லறோம்.. உன் வைஃப் ஒண்ணும் சொல்லமாட்டாங்க.. என்ன சாரதா.. நான் சொல்லறது சரிதானே.. ம்.. பாருங்க எங்க மோகன் எவ்வளோ ஆவலா எதிர்பார்க்கிறார்ன்னு. கம் ஆன் ஆனந்த்.. நாம் ரெண்டு பேரும் காதலிச்சது உண்மைதானே.. பத்தோ பன்னிரெண்டோ காதல் கடிதம் எழுதிண்டோமே.. உண்மைதானே’

    ”ஆமாம் சார் ஆமாம்.. இவள் சொல்வது சரிதான்.. இவள் என் காதலி.. இரண்டு பேரும் உயிருக்குயிராக காதலித்தோம்.. ஆனால் கலியாணம்தான் செய்துகொள்ளவில்லை..” என்று சொல்லமுடியுமா.. அதுவும் யார் எதிரில் குறுகுறுவென அவளையேப் பார்த்துக் கொண்டிருக்கும் மனைவி சாரதாவின் எதிரில்..

    எனக்குதான் இத்தனை பயமே தவிர அந்த மோகன் மட்டும் அவள் சொல்வது போல ஆவலாக இருந்தான் என்பது என்னவோ உண்மைதான்.. சித்ராவே மறுபடியும் ஆரம்பித்தாள்.

    ”உனக்குத் தெரியாது ஆனந்த்.. நான் எத்தனையோ தடவை சொன்னாலும் இவர் ஒப்புக்கவே மாட்டார்.. நான் விளையாட்டுக்குச் சொல்றேன்னு கிண்டல் பண்ணுவார்.”

    அந்த மோகன் சிரித்தான்.. “ஹே சித்து.. இவர் முழிக்கற முழிலேர்ந்து தெரியறது.. இப்ப உன்னை நம்பறேன்.. டோண்ட் கம்பெல் ஹிம்.. மிஸ்டர் ஆனந்த்.. தப்பா எடுத்துக்காதீங்க.. இவ நிறைய தடவை உங்களைப் பத்தி சொல்லறச்சே நான் கிண்டல் பண்ணுவேனா.. இவ கொஞ்சம் சீரியஸ் டைப்.. அவ்வளவுதான்.. வாங்க ஸ்டார்பக்ஸ் போகலாம்.. ஒரு காபி சாப்பிட்டாதான் இவளுக்கு டென்ஷன் தீரும்.’

    லண்டன் ஐ எனும் அந்த சிறப்புமிக்க டூரிஸ்ட் இடத்தில்தான் இத்தனை குழப்பமும் நடந்தேறிக் கொண்டிருந்தன. மோகன் ஏதோ சுமுகமாக தீர்த்து வைப்பது போல பாவனை செய்தாலும் காபி அருந்தும்போதும் சித்ராவே மெதுவாக கேட்டாள்.

    ’ஆனந்த்.. போகட்டும். உனக்குதான் என் லவ் லெட்டர்லாம் ரொம்ப பிடிக்கும் இல்லையா? உங்கிட்டே என்னோட லவ் லெட்டர் ஏதானும்  இருந்தா கொடேன்.. இவர்கிட்டே காண்பிக்கணும்.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. இந்த லவ் லெட்டர் கான்செப்ட்டே இப்பல்லாம் கிடையாதா?.. நானும்  எழுதியிருக்கேன்னு சொன்னா இவர் சிரிக்கிறார்.. நீயா.. அப்படி என்ன எழுதுவே.. என்ன இருக்கு எழுத..?’ அப்படின்னு அப்பப்ப கேட்பார்.. இந்தக் காலத்து லவ்வோட கம்பேர் பண்ணறச்சே நாம் எவ்வளோ டீசெண்டா காதலிச்சோம்’னு இவர்கிட்டே சொன்னா இவருக்கு எதுவும் புரியாது. அப்படி என்ன இருக்கு அந்த டீசெண்டான லவ்வுல’ன்னு கேட்டு சிரிப்பார். உங்கிட்டே இப்போ என்னோட லெட்டர் ஏதுனா இருக்கா.. இவருக்குக் காண்பிச்சு எக்ஸ்ப்ளெயின் பண்ணனும்.. சொல்லேன் பிளீஸ்..’

    பன்னிரெண்டு வருடங்கள் கழித்து நான் இவளைப் பார்க்கிறேன்.. அதுவும் அவளுக்குப் பிடித்த லண்டன் மாநகரத்தில்.. அதே குரலினிமை.. அதே அழகு மயில்.. அதே சிரிப்பு.. அதே படபடப்பு..

    இல்லையென தலையாட்டினேன். அவளுடைய காதல் கடிதங்களெல்லாம் படிக்கப்பட்டதால்தான் இந்தக் காதலே நிறைவேறவில்லை.. அவை யாவையும் கருணை காட்டப்படாமல் கொளுத்தப்பட்டன என எப்படி இவளிடம் சொல்வேன். என் மௌனம் அந்த மோகனுக்குப் பிடிக்கவில்லை போலும். பேச்சை மாற்றினான். தன் குடும்பத்தைப் பற்றி சொன்னான். எங்களைப் பற்றி கேட்டான். வீட்டுக்கு ஒரு வார இறுதியில் வந்து இரண்டு நாள் தங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எங்களுக்கு வைக்கப்பட்டது. கொஞ்சநேரம் கழித்து லண்டனையும் சென்னையையும் கம்பேர் செய்த பேச்சுக்குப் பிறகு கிளம்பினோம். அவர்கள் கை குலுக்கி விடை பெற்றார்கள். கையை குலுக்கும்போது சித்ராவின் கை வேகமாக அழுத்தியதோடு ‘ரொம்ப தேங்க்ஸ்’ என்று சொல்லவும் சொல்லி விட்டு சென்றார்கள்.

    சாரதா என்னைப் போலவே அதிகம் பேசவில்லை. விந்தையாகப் பார்ப்பது போல பார்த்தாலும் இத்தனை நேரம் என்னவெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தாளோ.. வீட்டுக்குத் திரும்பும்போது கூட மௌனமாகத்தான் திரும்பினோம். ‘மாமா, பசங்ககிட்டே நாம் இவங்களையெல்லாம் பார்த்தோம்னு பெருமையா ஏதும் பீத்திக்காதீங்க.. அப்புறமா நாம பேசிக்கலாம்’, சாரதா காரை விட்டு இறங்குமுன் சொன்னவள்தான். அந்த அப்புறமா என்ற வார்த்தையில் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.

    என் சொந்த அக்காவின் ஒரே பெண்தான் சாரதா.. என் அக்காவை எங்கள் வீட்டின் எஜமானியாகத்தான் சிறிய வயதிலிருந்துதான் நான் பார்த்திருக்கிறேன். எனக்கும் என் அக்காவுக்கும் பதினான்கு வயது வித்தியாஸம். பெரிய பெண்ணாகவே நான் நினைவு தெரிந்த நாளிலிருந்து பார்த்துப் பழகினாலும் என் மீது ஏகப்பட்ட பாசம் வைத்திருப்பவள். அம்மாவை விட அக்காவிடம்தான் அதிகம் வளர்ந்தேன். அவள் கல்யாணம் ஆகி அடுத்த தெருவில்தான் குடித்தனம் போனதால் அவள் வளர்ப்புக்கு எவ்வித பஞ்சமும் ஏற்பட்டதில்லை. அவள் பெண்ணான சாரதாவோடு அதிகம் பழகவிடமாட்டாள். ஏன் என்று எனக்கும் புரியவில்லை அப்போது ஆனால் இனம் புரியாத ஒரு பயம் மட்டும் அவளிடம் உண்டு. என்னை கண்கொத்திப் பாம்பாக கண்காணிப்பாள். சிகரெட் பிடித்துவிட்டு இரண்டு சாக்லெட் வாயில் போட்டுக் கொண்டு மென்று தின்றாலும் கண்டுபிடித்து விடுவாள்.. அக்காவின் ஆணையே இந்த இரண்டு வீடுகளில் செல்லுபடியாகுமென்பது  இன்னொரு விஷயம். . இப்படிப்பட்ட அக்காவிடம்தான் சித்ரா ஒருமுறை சரியாக மாட்டிக்கொண்டு சிக்கினாள்.

    இஞ்ஜினீரிங் கல்லூரியில் சித்ரா எனக்கு இரண்டு வருடம் ஜூனியர். அழகு மயில். ஆமாம்.. ஒருமுறை அவள் மயில்நடனம் ஆடியபோதுதான் அந்த அழகில் மயங்கி விழுந்தேன்.. தைரியமாக அவளிடம் என் காதலைச் சொன்னபோது முதலில் சாதாரணமாக எடுத்துக்கொண்டவள் பிறகு என்ன நினைத்தாளோ.. முறுவலித்து ஏற்றுக் கொண்டாள். எத்தனையோ நண்பர்களுக்குத் தெரிந்தாலும் எங்கள் காதல் விவகாரம் என் வீட்டுக்குத் தெரியாதுதான். ’கல்லூரி காலத்து பருவ காதலாக இல்லாமல் நம் காதல் காலாகாலத்துக்கும் இனிக்கும் பரிபூரணக் காதல்’ என இவளே ஒவ்வொரு கடிதத்திலும் எழுதுவாள்தான். பளிச்சென இருக்கும் எழுத்துகள் எத்தனை முறை படித்தாலும் சுகமானது. ஒவ்வொரு சமயம் மனப்பாடமாக அப்படியே அவளிடமே சொல்வேன். அவளுக்கு ஆவல் அதிகம் பிறக்கும். அடுத்த கடிதம் இன்னமும் ஆழமாக இருக்கும். கல்லூரி படிப்பு முடிந்து  மேல்படிப்பும் முடித்து நான் வேலைக்குச் சென்றபின்னரும் அவள்தான் என் ஜீவநாடியாக இயங்கிவந்தவள். அவள் அருகே இல்லாத தருணத்தில் அவள் கடிதங்களோடு பேசிக்கொண்டு பைத்தியமாக மாறியிருந்த காலங்கள் அவை. அப்படிப்பட்ட சமயத்தில்தான் அந்த நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின் கதாநாயகி என் அக்கா. வில்லன் நான்.. அகப்பட்டு மாட்டிக்கொண்டு பலியானது சித்ராதான்.

    அன்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். அலுவலகத்தில் என்னை லண்டன் மாற்றியிருப்பதாக கடிதம் வாங்கிக் கொண்டு வந்திருந்தேன். இது கூட சித்ராவின் நீண்டநாள் கனவை நனவாக்கத்தான்.. அவளுக்கு லண்டன் மீது கொள்ளை ஆசை. ஆங்கில புதினங்களில் வரும் லண்டன் வர்ணனைகள் அவளை மிகவும் கவர்ந்தவை. ஷேக்ஸ்பியரின் பரம ரசிகை. 221பி, பேகர் ஸ்ட்ரீட் அவளது பிறந்த வீடாக நினைத்துப் பெருமை கொள்ளுவாள். அவளுக்கு மிகவும் பிடித்த ஷெர்லாக் ஹோம்ஸ் பாத்திரத்தின் நினைவு வீடான அந்த இடத்தை வாழ்க்கையில் ஒருமுறையாவது தரிசிக்கவேண்டும் என்பது அவள் ஆசை.  கல்யாணம் ஆனபின்னர் லண்டனில் செட்டில் ஆவது என்பது அவள் வாழ்வின் லட்சியம் கூட. அவளுக்காகவே என் அலுவலகத்தில் கொஞ்ச காலமாக கஷ்டப்பட்டு லண்டன் அலுவலகத்துக்கு வேலை செய்ய அனுமதி பெற்றவன். அன்று அந்த அனுமதி கிடைத்த மகா சந்தோஷத்துடன் இல்லம் வந்து சேர்ந்தவனுக்கு அங்கே நான் நேசிக்கும் சித்ராவும், என் பாசத்துக்குரிய அக்காவும், கையில் கடிதங்களுடன் காணப்பட்டார்கள். சித்ராவின் கண்கள் அழுது சிவந்திருந்தன. அக்காவோ அவனைப் பார்த்ததும் ஆக்ரோஷத்துடன் உலகத்தையே அழிக்கப்போகும் இராட்சஸி போல நடுக்கூடத்தில் நின்றிருந்தாள்.

    இந்தக் கோலத்தில் அங்கே என்ன நடந்திருக்கும் என என்னால் ஊகிக்க முடிந்தது. ஒரு ஓரமாக ஏதுமறியாத குழந்தை போல என் அம்மா நின்றிருக்க அவள் பக்கத்தில் இருந்த சித்ராதான் முன்னால் வந்தாள். ஒரே வார்த்தை.. ஒரு வார்த்தைதான் பேசினாள். ‘குட் பை ஆனந்த்.. இனி நமக்குள் எந்த உறவும் கிடையாது..” அழுதுகொண்டே சொல்லிவிட்டு வெளியே வேகமாக சென்று எங்கள் காரில் அமர்ந்துகொண்டு சென்று விட்டாள்.

    என் அக்கா உடனடியாக ஏதும் பேசவில்லை. அம்மாதான் ஏதோ சமாதானப்படுத்தினாள். வீட்டுக்குள்ளேயே குதிர் போல ஒரு அழகான பெண் எனக்காகக் காத்துக்கொண்டிருக்க ஏன் இன்னொரு பெண்ணை நாடினேன் என்று அம்மா கேட்கும்போது முதலில் புரியவில்லை. பிறகுதான் சாரதாவைப் பற்றிப் பேசுகிறாள் என்பது புரிந்தது. நான் அப்பாவியாக அக்காவைப் பார்த்தேன். காதலைப் பற்றியும் காதலி பற்றியும் எரிச்சல் கொண்டிருந்த அக்காவிடம் எந்தக் கருணையும் இல்லை. கடகடவென சமையலறை சென்றவள் நான் கத்தக் கத்த எந்த இரக்கமும் காட்டாமல் அத்தனைக் கடிதங்களையும் எரியும் ஸ்டவ்வின் நீல நெருப்புக்கு இரையாக்கி தன் எரிச்சலைத் தணித்துக் கொண்டாள். பிறகு என்னிடம் வந்தாள்.

    “சரி, இது இத்துடன் போகட்டும்.. இந்த விஷயம் அப்பாவுக்கும் தெரியவேண்டாம், சாரதாவுக்கும் தெரியவேண்டாம். யாருக்குமே சொல்லக்கூடாது. எம் மேலே சத்தியம்.. சரியா.. அம்மா, இதோ பார்.. நான் என் வீட்டுக்காரரிடம் பேசி நல்ல முகூர்த்தம் பார்க்கிறேன். செய்யவேண்டிய சீர் எல்லாம் குறையில்லாமல் செய்கிறேன்.. உன் பையனை இந்தக் கலியாணம் வரைக்குமாவது நீ ஜாக்கிரதையா பார்த்துக்கோ.. அவ்வளவுதான் சொல்வேன்..’ சொன்னவள் என்னை ஒரு முறை குரோதத்துடன் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டாள். அம்மாதான் சொன்னாள். முதல்நாள் அவள் வீட்டுக்கு வந்த போது என்னிடம் ஏதோ பேசவந்தாளாம். ஆனால் நான் கவனிக்காமல் ஏதோ கடிதங்களுடன் பேசிக்கொண்டிருந்தேனாம். கொஞ்சநேரம் கோபமாகப் பார்த்துவிட்டுப் போய்விட்டாள். காலையில் நான் ஆஃபீஸ் சென்றவுடன் வந்தவள் என் அறையில் நுழைந்து நான் என் பீரோவில் வைத்திருந்த கடிதங்களையெல்லாம் எடுத்துப் படித்து விட்டு கோபத்துடன் காரில் ஏறி என் நண்பர்களைப் பிடித்து அவர்கள் மூலமாக சித்ராவின் வீட்டுக்குப் போய் சண்டை போட்டு அவளைப் பயமுறுத்தி தன்னுடன் அழைத்துக் கொண்டு  இதோ இப்படிச் சொல்லவைத்துவிட்டாள்.

    வாழ்க்கையே சுக்கு நூறாகி உடைந்துவிட்டதை அன்றுதான் உணர்ந்தேன். அம்மாவிடம் அழுதேன். லண்டன் பயண கடித விவகாரத்தை சொன்னேன். கலியாணம் செய்துகொண்டு சாரதாவுடன் ஜாலியாகப் போயேன்’ என்று அப்பாவித்தனமாகப் பேசினாள் அம்மா.

    அடுத்த சிலநாட்களில் சித்ராவை நான் சந்திக்க எத்தனை முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. சே.. என்ன பைத்தியக்காரத்தனம் இது.. ஒரு அக்காக்காரி முறைத்தால் காதல் முறிந்துவிடுமோ. காதல் என்பது என்ன இத்தனை பலவீனமான உணர்ச்சியா? காதல் என்பது எத்தனை பலம் வாய்ந்தது என்பதை எப்படி உணர்த்துவது? அந்த காதல் உணர்வு இல்லையென்றால் கஷ்டப்பட்டு காதலிக்காக லண்டன் பயணம் வரை நான் ஏற்பாடு செய்திருப்பேனா? என் அக்காவுக்குப் பயந்துபோய் சித்ரா இப்படிச் செய்யலாமா.. எவ்வளவு ஆசை ஆசையாக லண்டன் வாழ்க்கையை ஊகித்து வந்தோம்? ஏய் சித்ரா பதில் சொல்லு.. ஒருமுறை என்னிடம் பேசு என்றெல்லாம் அவள் தோழிகள் மூலமாக செய்தி அனுப்பினாலும் அவள் வரவில்லைதான்.

    அடுத்த மாதத்தில் சாரதாவின் கழுத்தில் நான் கட்டிய தாலியுடன் லண்டன் பயணம் செய்யும்போது சாரதா மட்டுமே உண்மையான மகிழ்ச்சியில் இருந்தாள். அம்மாவும் அக்காவும் வெளியே மகிழ்ச்சியைக் காண்பித்தாலும் உள்ளுக்குள் ஏதோ பய உணர்வுடன் இருந்துகொண்டிருப்பது எனக்குத் தெரியும். நான் ஏதாவது எதிர் ஏற்பாடு செய்துவிடுவேனோ என்ற பயம் கடைசி வரையில் அக்காவுக்கு இருந்தது. நான் அப்படித்தான் தயார் நிலையில் இருந்தாலும் சித்ரா அசைந்து கொடுக்கவே இல்லையே.. இரண்டு கை தட்டினால்தான் ஓசை வரும்.

    ஆனால் அன்றிலிருந்து அக்கா தம்பி உறவு முறை முறிந்து போய்விட்டது என்பது வாஸ்தவம்தான்.. ஒரு புதிய மாமியாரைப் போலத்தான் பழகினேன்.. அக்காவும் அந்த தூரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவே விரும்பினாள் போலும். இந்த இலண்டனில் கடந்த பன்னிரண்டு வருட வாழ்க்கையில் இரண்டு முறை பிரசவத்துக்காக உதவி செய்யவும், ஒருமுறை கணவருடனும் இன்னொருமுறை அம்மா அப்பாவுடன் வந்திருந்தாள். ஒவ்வொரு முறையும் நான்கைந்து மாதங்கள் இருந்தாலும் இருவரும் ஏதோ மாமியார் மருமகன் உறவில் மட்டுமே இருப்பது போல நடந்துகொண்டாமே தவிர பழைய தம்பி நான் என்பதை போகப் போக மறந்துதான் போனேன். ஆனால் சாரதா மட்டும் என் மேல் அன்பையும் பாசத்தையும் பொழிகின்றவள். அவள் கூட இரண்டு முறை எங்களிடையே இருந்த தூரத்தைப் பற்றிக் கேட்டவள்தான். ‘என்ன இருந்தாலும் எங்கம்மா உங்களுக்கு சொந்த அக்காதானே மாமா, ஏன் இப்படி வித்தியாஸமா விலகிப் போய் பழகறீங்க’ என்று கேட்டதற்கு நான் சிரித்து மழுப்பி விடுவதால் அவளும் நாளாக நாளாகக் கண்டு கொள்வதில்லைதான். ஆனால் அக்காவைப் பார்க்கும்போதெல்லாம் சித்ராவின் நினைவு தவிர்க்கமுடியாதது என்பதை அக்கா அறிவாள்.. அவள் பெண் அறியமாட்டாள் இல்லையா..

    அதே போல நானாக என் அக்காவைக் கூப்பிட்டு இங்கே அழைத்துக் கொள்ளவும் விருப்பப்படவில்லை. அவளேதான் வருவாள். போவாள். இந்த விஷயத்தில் சாரதாவுக்கு ஏராளமான கோபம் கூட என் மீது உண்டு. அந்த கோபத்தையும் எப்போதாவது என் மீது பிரயோகிப்பாள். நான் கண்டு கொள்வது இல்லை கூட.

    அன்றிரவு பிள்ளைகளுக்கு வழக்கப்படி ஏதோ கதை சொல்லி தூங்க வைத்துவிட்டு படுக்கைக்கு வந்தேன். காத்திருக்கிறாள்.. தூங்காமல் காத்திருப்பாள் அவள் என்பது எனக்கும் தெரியும்தான்.

    கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. அவளே ஆரம்பித்தாள்.”மாமா, நமக்கு இந்த முதலிரவு இரண்டாவது இரவுன்னு மூவாயிரம் நாலாயிரம் இரவு வந்தாச்சு.. ஒருநாளாவது அந்தப் பெண்ணைப் பத்திப் பேசலையே ஏன்.. எனக்கு அது மட்டும்தான் பிடிக்கலே.. எங்கிட்டே சொல்லியிருக்கலாம் இல்லையா.. என்கிட்டே சொல்றதிலே ஏன் பயப்பட்டீங்க.. இப்ப பாருங்க.. அந்த சித்ரா புருஷன் ஹாயா சிரித்துக் கொண்டே எவ்வளோ ஈஸியா இந்த விஷயத்தை ஹாண்டில் பண்ணினான். நீங்க அங்க தவிச்ச தவிப்பு இருக்கே.. நல்லா கவனிச்சேனே..  எனக்கு பயங்கர கோபம் வந்து நானே ஏதாவது சொல்லிடலாம்னு கூட நினைச்சேன்..”

    அவளைப் பார்த்தேன்.. அவளுக்கு என் மேல் பூரண அன்பு சற்றும் குறையவில்லை என்பதும் புரிந்தது. அவள் முன்நெற்றியில் விழுந்த முடிக்கற்றைகளை பின்னுக்குத் தள்ளிக்கொண்டே கேட்டேன்.

    ‘உன்கிட்டே இதெல்லாம் சொல்லாதது என்கிற வரையில் நீ கேட்டது சரிதான். சாரு, நான் இதுக்குப் பதில் சொல்றதுக்கு முன்னாடி நான் உன்னை ஒரு கேள்வி கேட்கலாமா?” அவள் தலையை அழகாக அசைத்தாள்.

    “நீ யாரையாவது கல்யாணத்துக்கு முன்னாடி காதலிச்சிருக்கியா?”

    ”ஓ! இந்த மாமாவைத்தான் சின்னப்பலேர்ந்து மனசுக்குள்ளே காதலிச்சிருக்கேன்.” என்று என்னை இடித்தாள்.. ”ஆனா அது காதல் அது இதுன்னு சொல்லத் தெரியாது. சின்னப்பலேர்ந்து எங்கம்மா  எங்கிட்டே ‘உன் மாமாதான் உன்னைக் கட்டிக்கப் போறான்.. அதனால அடிக்கடி நீ அவனோட கிட்டக்கப் போய்ப் பழகக் கூடாது.. ந்னு ஒரு பயத்தை உருவாக்கிட்டா.. அதனால காதலா உங்ககிட்டே பழகறதுங்கறது என்னால அப்ப முடியலே.. காரணம் எங்கம்மாதான்.. அவ சொல்றதும் சரிதானே.. கல்யாணத்துக்கப்பறம் உங்க மாமா உன் கையிலதானடின்னு அடிக்கடி சொல்வாள். நீங்களும் நானும் ஒருவர் கையில் ஒருவர்தானே..”

    அவள் பேசுவதை ரசித்தேன். ’காதலை வெளிப்படையாக சொல்லாததற்குக் காரணம் அவள் அம்மாவாம். பைத்தியக்காரி, அதே அம்மாதான் என் காதலையும் உன்னிடம் வெளிப்படையாக சொல்லாததற்குக் காரணம்’ என்று சொல்லிவிடலாம்தான். ஆனால் சாரதா பாவம், மென்மையான மனசு அவளுக்கு.

    ‘சாரதா! இப்போ காலம் எவ்வளோ மாறிப் போச்சு பார்த்தியா.. ஒரு காலத்துல இப்படியெல்லாம் காதல் விவகாரம் இன்னிக்கு ஏற்படற மாதிரி வெளிப்பட்டால் உடனே குடும்பத்துல பெரிய குழப்பம்லாம் வரும்.. ஆனால் நீ எளிதா எடுத்துக்கற.. ஒருவேளை உன் மனசைப் புண்படுத்தக்கூடாதே’ன்னு நான் சொல்லலே’ன்னு இந்த விஷயத்தை எடுத்துக்கோ.. அவ்வளோதான்.”

    “அதெல்லாம் போகட்டும்.. ஆசை ஆசையா உங்களுக்கு ரொம்ப பிடிக்கறாமாதிரி லெட்டர்லாம் எழுதினாளாமே.. நான் சாயங்காலம் வந்ததும் உங்க பீரோவைக் கூட தேடினேன்.. கிடைச்சா அவளுக்கு போன் பண்ணி ரிடர்ன் பண்ணலாம்னு.. போன் நம்பர்லாம் ஷேர் பண்ணிண்டோமே.. ஆனா எதுவும் கிடைக்கலே”

    அடிப்பாவி, இவள் என்னை நம்பவே இல்லை. “என்ன சாரு இது… விட்டுடு’ன்னு சொன்னேன் இல்லே.. விட்டுடேன்..”

    அவள் விடவில்லை. “ஆமா.. அப்படி என்னதான் எழுதிப்பீங்க.. என்ன இருக்கு எழுத?” அந்த மோகன் கூட இதையே சொன்னான். சாரதா கொஞ்சநேரம் ஆழமாக யோசிப்பது போல பார்த்தாள்.

    ”ஆங்.. எனக்கு புரிஞ்சுபோயிடுச்சு மாமா.. இது கணவன் மனைவிக்குள்ள இருக்கற ஒரு ஈகோ பிரச்னை மாமா.. நல்லா யோசிச்சுப் பாருங்க.. எத்தனைதான் காலம் மாறினாலும், சொசைடி’ல ரொம்ப முன்னேற்றம்னு பேசினாலும் யாருமே தன்னோட பழைய காலத்து காதல் தோல்விக் கதையை சொந்தப் புருஷன்கிட்டேயே இப்படி பிரம்மாண்டமா பெருமை அடிச்சுக்க மாட்டாங்க.. அதுவும் பாருங்க சித்ரா அதைப் பத்தியே பேசினாளே தவிர இப்ப இருக்கறவிதத்தையோ என்ன செய்யறேங்கறதையோ எதுவும் பேசலே . எல்லாமே அவ புருஷன் சொன்னதுதான். அதனால சித்ரா உங்களை இன்னைக்கு சந்திச்சதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தியிருக்கா. அதாவது ஒரு பாயிண்ட் புருஷனை விட ஸ்கோர் பண்ணியே ஆகணும்னு வீம்பு.  இப்படி ஒருவேளை இருக்கலாம். சித்ராவின் பழைய காதல் கதையை அந்த மோகன் எப்பவும் கொஞ்சம் கீழ்ப்படுத்தி பார்த்திருக்கலாம். ஒரு வீம்புக்காக இவளும் இதைப் பெரிதுபடுத்தியிருக்கலாம். இந்தக் கால நாகரீகம்ங்கறதே கல்யாணத்துக்கு முன்னாடி பழகி இருக்கணும்’னு பேசறதுதானே. ஓருவேளை இந்த விஷயத்துல மோகன் இவளைப் புண்படுத்தி இருக்கலாம். அல்லது வேற ஏதாவது சொல்லி நோக அடித்திருக்கலாம். இதை ஒரு சவாலா எடுத்துண்டு சித்ரா சமாளிச்சே ஆகணும்ங்கிற மனநிலைல இருக்கணும். வாழ்க்கைல காதல் என்பது ஒரு வயசுல வருவது சகஜம்தான்.. அதை டீசெண்ட் லவ் இண்டீசெண்ட் லவ் நு எப்படி பிரிக்கிறாங்களோ..  ஆனா ரொம்ப ரொம்ப பிராக்டிகல் வாழ்க்கையா மாறிப்போன இந்த கால கட்டத்துல இந்த கல்யாணத்துக்கு முன்னாடி வந்த காலேஜ் காதல்லாம் ஒரு பெரிய பிரச்னையா மாமா? மக்கு மாமா.. இன்னிக்கு நீங்க நல்லா மாட்டிகிட்டீங்க.. அவ்வளவுதான் சொல்வேன்”. அவள் என் தலையை கலைத்துக் கொண்டே சிரித்தாள்..

    ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்தான் அறிவாளோ.. இந்த பெண்கள்தான் எவ்வளவு ஆழமாக சிந்திக்கிறார்கள். இவள் மட்டும் இப்படி ஒரு கோணத்தில் சொல்லாமலிருந்தால் நான் ஏதேதோ பைத்தியக்காரத்தனமாக நினைத்துக்கொண்டு இந்த இரவெல்லாம் முழித்துக் கொண்டிருப்பேனோ என்னவோ.. காதல் என்பது ஒவ்வொருத்தருக்கும் வேறு வேறு வகையில் உதவுகிறதோ.. அன்றைய தினம் அக்காவுக்கு இந்த காதல் என்பது எரிச்சலாகப் பட்டது. ஆனால் அதையே சாக்காக வைத்து எங்கள் கல்யாணத்தையும் உடனடியாக நடத்திவிட்டாள்., இதோ இன்று அவள் வயிற்றில் பிறந்த பெண் மிக அழகாக காதல் என்பதைப் பற்றி காலத்துக்கேற்றவாறு எடுத்துச் சொல்கிறாள். காதலில் விழுந்த சித்ராவோ அதே காதலை வைத்து தன்னைத் தூக்கிக் கொள்ளப் பார்க்கிறாள்.. ஆமாம்.. காலம் அது கழியக் கழிய காதலைப் பற்றிக் கூட ஒரு முதிர்ச்சியான அனுபவத்தைத் தருகிறதுதான். அன்று காதலை மறுத்த அக்கா செய்தது தவறுதான் ஆனால் இன்று அதன் பரிகாரமாக அவள் இப்படி ஒரு அருமை மகளைத் தனக்குப் பரிசாக அளித்திருக்கிறாள் என்றல்லவா படுகிறது.  ஏனோ அக்காவைப் பார்க்கவேண்டும் போலத் தோன்றியது.

    ”சாரு.. இப்பவே அக்காவுக்கு போன் பண்ணி விசாவுக்கு அப்ளை போட்டு இங்கே சீக்கிரம் வரவழையேன்.. ஒரு ஆறு மாசம் இருக்கட்டுமே. எனக்கு என்னவோ எங்க அக்காவிடம் பழைய தம்பியா இருக்கணும்னு ஆசை”

    என் திடீர் மாற்றம் சாரதாவுக்குப் புரியவில்லை. சம்பந்தமே இல்லாமல் தன் அம்மாவைக் கூப்பிடச் சொல்லும் என்னை ஆச்சரியம் விலகாமல் பார்த்தாள். ஆனால் அவள் எழுந்த துள்ளலில் அவள் மகிழ்ச்சியும் ஏராளமாக இருந்ததை கவனிக்கத்தான் செய்தேன்.

    Share
  • காதறுந்த ஜோசியம்

                                                                                  திவாகர்

    ’அறுபது வயது வந்தபின்னர்தாம் நாய் படாத பாடு படுவீர் அதுவரை உமது ராஜ்ஜியம்தான்’ என்று ஒரு உருப்படாத ஒரு காது பாதியாக அறுபட்ட ஜோசியன் ஒருவன் அவரது சின்ன வயதில் சொல்லிவிட்டு தன்னிடம் அடியும் வாங்கிக் கொண்டு ஓடியதை இப்போதெல்லாம் நினைத்துப் பார்த்து உருகி உருகிப் போனார் மாத்ருபூதம். இந்த இரண்டு வருடமாக தான் கஷ்டப்படுவது போல எந்த நாயும் கஷ்டப்படாதுதான்.. அவைகளுக்கு என்ன சுதந்திரமாக உலாவும் ஜீவன்கள். சௌகரியமாக வாழ்க்கைப் படவே பிறந்த ஜன்மங்கள். இருந்தாலும் அந்த ஜோதிடனுக்கு இந்த நாய்கள் மேல் என்ன வெறுப்போ.. நான் படும் வேதனையை நாய் மட்டுமே பட்டிருக்கும் என்பது போல அல்லவா சொன்னான்..

    ஆனாலும் அவன் சொன்னது உண்மைதானே.. தான் வேலை செய்து ரிடைர் ஆகும்வரை நம்மை யாராலும் அசைக்க முடிந்ததா.. ஆனால் இப்போது..

    ஆமாம். மாத்ருபூதம் தன் கடைசி மூன்று எழுத்துக்கு ஏதுவாக மற்றவர் கண்களுக்கு பூதமாகத்தான் காட்சி அளித்து வந்தார். பிறந்ததிலிருந்தே அழுது கத்தி புரண்டு தலையைத் தரையில் அடித்துக் கொண்டாவது எதையும் சாதித்துவிடுவான் இவன் என்று அவர் அம்மா தன்னைச் சிறு வயதில் புகழ்ந்தாளா இல்லை வயிற்றெரிச்சல் தாங்காமல் இகழ்ந்தாளா என்பதெல்லாம் அவர் அப்போது பெரிதாக நினைக்கவில்லைதான். பள்ளியிலும் கல்லூரியிலும் கூட பெரிதாக அப்படி ஒன்றும் சாதித்தவர் இல்லைதான். சதா கடிந்துகொண்டே இருக்கும் தன்னை அவர் நண்பர்கள்  இவரைச் சேர்த்துக் கொள்ளத் தயங்குவதைக் கூட அவர்கள் தன்னைக் கண்டு அச்சப்படுகிறார்கள் என்று பெருமையாக நினைத்துக் கொண்டு அந்த அச்சத்தை மேலும் வளர்த்து வந்தவர்தான்.

    ஆச்சரியம் என்னவென்றால் இவருக்கு  வாழ்க்கையில் இதுவரை அமைந்த அத்தனை பேரும் இவரைக் கண்டு அச்சப்படுகிறார்கள் என்றே நினைத்து மகிழ்ந்தவர்தாம். இந்தச் சமயத்தில்தான் அவருடைய ஜாதகத்தைப் பார்க்கவந்த அந்த காதறிந்த  ஜோதிடன் இவருக்குக் கல்யாணமும் வேலையும் அமோகமாக அமையும் என்றும் ஆனால் அறுபது வயது வந்தபின்னர் நாய் படாத பாடு படவேண்டி வரும் என்றும் அதற்குப் பரிகாரம் செய்தால் இவருக்கு நல்லது விளையும் என்றதோடு அந்தப் பரிகார விஷயம் தான் மட்டுமே அறியும் விஷயம் என்று பீற்றிக் கொண்டு சொன்னவனைத்தான் கோபத்தோடு கடிந்ததோடு மட்டுமல்லாமல் கையை வீசி ரெண்டு தட்டி விட்டு ஓடவைத்தவர்.

    கல்யாணி அந்த சங்கீத ராகத்துக்கு இணையாக இனிமையாக பேசக்கூடிய திறமை பெற்றவள். நல்ல பாடகி. பட்டி மன்ற பேச்சுகள் பல இடங்களில் கலந்து கொண்டு வாலி நல்லவனா இல்லை சுக்ரீவன் நல்லவனா என்று தலைப்புகளிலெல்லாம் இடத்துக்கேற்றவாறு மாறி மாறிப் பேசி இருவரையும் நல்லவராக்கிய கெட்டிக்காரி என்று பெயர் வாங்கியவள். அரசாங்கப் பள்ளியில் ஆசியையாக நல்ல உத்தியோகமும் பெற்றவள்தான்.  சக ஆசிரியைகளிடம் அவள் பேச்சுக்கு பெரிய மதிப்புண்டு. அப்படிப்பட்ட கெட்டிக்கார பேச்சுக்காரி ஸ்ரீமதி கல்யாணி மாத்ருபூதம் ஆனதும் அவரெதிரே மட்டும் ஊமையாக மாறிப் போனதுதான் மாத்ருபூதத்தின் ஜாதக விசேஷம்.

    கல்யாணம் ஆன முதல் நாளே மாத்ருபூதம் தன் சுய ரூபத்தை அவளிடம் காண்பித்தார். அவள் வேலைக்குச் செல்லக்கூடாது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அவள் தன்னிடம் எதிர்பேச்சு பேசக்கூடாது என்ற சத்தியத்தைக் கேட்டார். இவர் என்ன விளையாடுகிறாரோ என்று நினைத்தவள் வேண்டுமானால் எதிர்ப்பேச்செல்லாம் பேசாமல் இருக்க சத்தியம் செய்கிறேன் ஆனால் அரசாங்க வேலைக்குச் செல்லும் உரிமையைப் பறிக்கவேண்டாம் என்று கெஞ்சியதால் அவளிடம் பச்சதாபப்படுவது போல பட்டு அவளை மன்னித்துவிட்டு வேலைக்கு அனுப்பி வைப்பதாக பெரிய மனது பண்ணுவது போல சொன்னதும் இந்த கல்யாணி அசட்டுத் தனமாக எதிர்ப்பேச்சே பேசமாட்டேன் என்று சத்தியமும் செய்து கொடுத்துவிட்டாள்.  அந்த நிலையில் அவளுக்கு தன் அரசாங்க உத்தியோகமும் அதன் மூலம் தனக்குக் கிடைக்கும் பட்டி மன்ற அவகாசங்கள், பாட்டுக் கச்சேரிகளும் பறிபோகக் கூடாதே என்ற அச்சமும்தான் அப்படி செய்ய வைத்தது. அவ்வளவுதான் அடுத்த நாள் முதல் சதா பேசிக்கொண்டிருக்கும் கல்யாணி அவரைக் கண்டாலே பேச்சே வராதது போல நடந்து கொள்ள ஆரம்பித்தாள். இப்படிப்பட்ட அன்னியோன்யத் தம்பதிகள் இரண்டு பிள்ளைகளைக் கூடப் பெற்றுக் கொண்டது இன்னொரு ஆச்சரியம்தான்.

    கல்யாணிதான் வேறு வழியில்லாமல் இவருக்கு வாழ்நாள் முழுதும் வாழ்க்கைப் பட்டோமே என்ற வகையில் இப்படி நடந்துகொண்டாள் என்றால் இந்த ஆபீஸ் காரர்களுக்கு புத்தி எங்கே போயிற்று என்றே புரியவில்லை. அவர் ஆடும் ஆட்டத்துக்கு அவர் பாஸ் வளைந்துகொடுக்க அவர் கீழ் செய்யும் ஆட்களும் அப்படியே நடந்துகொள்ள மாத்ருபூத ராஜ்ஜியம் எந்தக் குறையுமில்லாமல் அலங்காரமாக அட்டகாசமாக அரங்கேறிக்கொண்டிருந்ததுதான். வீடு போனால் ஆபீஸ் இல்லையென்றால் மறுபடியும் வீடு.. யாரும் தொல்லை இல்லாமல் டி.வி. பார்ப்பது, நாவுக்குப் பிடிக்த பண்டங்களை நன்றாக சுவைத்துச் சாப்பிடுவது, அப்படி இப்படி வீட்டிலுள்ளோரை மிரட்டிக் கொண்டே இருப்பது, அவர்கள் பயத்தை ரசிப்பது, குறட்டை விட்டு தூங்குவது எப்போதாவது சினிமா டிராமா என்பது போல மிக ஜாலியாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.

    எங்கும் எல்லாமே இவர் இட்ட கட்டளைக்காகக் காத்திருப்பது போல நடந்தால் யாருக்குத்தான் அகங்காரம் வராது.. மாத்ருபூதத்துக்கு சற்று அதிகமாகவே வந்தது.. இதனால் கல்யாணிக்கும் பிள்ளைகளுக்கும் பல மனக் கஷ்டங்கள் வந்தாலும் வேறு வழியே இல்லாமல் பொறுத்துக் கொண்டனர். அட, அந்த அறுபது வயது நிறைவு முடிந்த அந்த நாளில் விழா எடுத்த நிலையில் கல்யாணியும் அழைக்கப்பட்டிருந்தாள். எத்தனை அட்டகாசமாக அரங்கேறியது அந்த விழா..

    மாத்ருபூதத்துக்கு அந்த நாள் பூதாகரமாக நினைவில் வந்து கொண்டே இருந்தது. அந்த நாள் தன் அலுவலக வாழ்க்கைக்கும் இல்லாமல் தன் அகங்காரத்துக்கும் சேர்த்தே கடைசி நாளாக அமைந்துவிட்டதுதான்.

    விழாவில் ஏதோ ஒரு பேச்சுக்காக கல்யாணியை ஒரு வார்த்தை பேசுமாறு கேட்டுக் கொண்டோரிடம் சிரித்துக் கொண்டே தன் கணவரைக் கை காட்டினாள். ‘ஆவர் ஒப்புக் கொண்டால் மட்டுமே தான் பேசுவதாக’ தைரியமாக அவரைக் காண்பித்து அனுமதி கேட்பது போல கேட்டாள். தலையில் அதுவரை சபையினரால் வைக்கப்பட்டிருந்த ஐஸானது இன்னமும் உருகாத நிலையில் தாராளமாகத் தலையை அசைத்து அவளிடம் நெருங்கி அவள் காதில் அனுமதி கொடுப்பதாக உளறியதும்தான் அவள் மேலும் மெதுவாகப் பேசினாள் அவரிடம்.

    ‘அது சரி, நான் சத்தியம் செய்திருக்கிறேனே நான் எதுவும் எதிர்வார்த்தைப் பேசறதில்லேன்னு.. பட்டிமன்ற பேச்சுக்காரி நான். கூட்டத்துல பேசறதுனா அப்படி இப்படின்னுதான் பேசிப்பழக்கம். உங்களை என்னையறியாம பேச்சோடு பேச்சா ஏதாச்சும் எதிர்வார்த்தைப் பேசிட்டா.. ஐயய்யோ நான் சத்தியத்தையெல்லாம் மீறமாட்டேன்?”

    ”ஐய்யய்ய.. அந்த சத்தியமெல்லாம் இப்போ ஒண்ணும் இல்லேம்மா.. நான் வாபஸ் வாங்கிட்டேன்னு நினைச்சுக்கோ..  நீ பாட்டுக்கு ரெண்டு மூணு வார்த்தை பேசு. என்னை ஒரு வார்த்தை சும்மா திட்டினாலும் சரி, பரவாயில்லே. இவங்க எல்லாம் ஜோக்கா நினைச்சு சிரிப்பாங்க பாரேன்..”

    மாத்ருபூதம் சாதாரணமாக சொல்லியிருக்கலாம்.. அல்லது பேசு என்று அனுமதி கொடுப்பது போல தலையசைத்திருக்கலாம்.. நீ திட்டினாலும் சரிதான் என்று நாவில் யாரோ புகுந்து சொல்வது போல சொல்லிவிட்டதுதான் அவருக்கு எதிரியாகப் போயிற்று.

    இத்தனைக்கும் இரண்டு வார்த்தைதான் பேசுவேன் என்று கூச்சமாகச் சொல்வது போல பாவனை செய்த அந்த பட்டிமன்ற பேச்சாளி முதல் இரண்டு வார்த்தைகளிலேயே சபை முழுவதையும் கல கலவென சிரிக்க வைத்து அவர்களை மயக்கத்தில் ஆழ்த்தித் தன் கட்டுக்குள் கொண்டு வந்தாள். மாத்ருபூதம் கூட வருந்திப்போனார்தான். இத்தனைநாள் இவள் பேச்சுக்களைக் கேட்காமல் போனோமே.. எத்தனை அற்புதமாகப் பேசுகிறாள் என்று ஆச்சரியம் கூட வந்தது அவருக்கு. இத்தனை பேசினாலும் தன்னைப் புகழ்கிறாள் இவள்.. ஒருவார்த்தை கூட திட்டாமல் பேசுகிறாள் என்பதிலும் அந்தக் கடினமனதுக்காரருக்குக் கண்ணில் கொஞ்சம் கண்ணீரும் வருவது போல கலங்கியதுதான். அரைமணி நேரம் கணவரைப் புகழ்ந்து தள்ளிய கல்யாணி தன் கணவருக்கு குழந்தை மனது என்றும் எப்போதும் அவருக்கு வாழ்க்கையின் கஷ்டம் தெரியாமல் வளர்த்து விட்டோம் என்றும் இனியும் அவர் கஷ்டத்தைக் காணவே கூடாது என்றும் மனமுருகி மாத்ருபூதத்தையும் உருக்கியவள் பேச்சு மயக்கத்திலிருந்த சபையைப் பார்த்து ஒரு கோரிக்கையை வைத்தாள்.

    ”தன் கணவருக்கு சொற்பக் கஷ்டம் வரக்கூட தன் மனம் சம்மதிக்கவில்லை என்றும், இனி என் கணவருக்கு வரும் நிதிகள் அனைத்தையும் தானே சரிபார்த்து சேவை செய்யப் போவதாகவும் அதற்குத் தன் கணவர் சம்மதத்துடன் அவர் வேலை செய்யும் இந்த நிறுவனமும் இன்று கொடுக்கும் தொகையுடன் இனி மாதா மாதம் அனுப்பும் பணத்தையும் தன் பேருக்கு அனுப்பி வைத்தால் தானே கணக்கு வழக்குப் பார்த்துக் கொண்டு எந்தக் குறையும் இல்லாமல் தன் கணவரைத் தன் கடைசி காலம் வரைக் காப்பாற்றும் பெரிய பொறுப்பைத் தான் ஏற்பதாகவும் கண் கலங்கச் சொன்னதை அந்தச் சபை ஆரவாரித்து ஏற்றுக் கொண்டது. மாத்ருபூதம் கண்கள் கலங்க எழுந்து நின்று கை தட்டித் தன் சம்மதத்தைத் தெரிவித்து ஒரு கடிதமும் கொடுக்க ஒப்புக் கொண்டார். உடனடியாக நிறுவனமும் அந்த நடவடிக்கையை ஏற்பாடு செய்வதாக ஒப்புக் கொண்டதோடு ஆதர்ச தம்பதியாக மாத்ருபூதம் தம்பதி விளங்குவதாகவும் கல்யாணியின் பதிபக்தி பார் போற்றவேண்டும் என்றும் அந்த அதிகாரிகள் போற்ற விழா இனிதே நிறைவேறியதுதான்.

    மாத்ருபூதம் நிஜமாகவே தான் அதிர்ஷ்டக்காரன் என்றுதான் நினைத்துக் கொண்டார். கல்யாணி சபைமுன்பாக இத்தனை பேசுவாள் என்று எதிர்பார்க்கவில்லைதான் அவர். ஆஹா கல்யாணி, என் இன்ப ராகமே, என் இனிய தேவதையே.. என் வாழ்வில் ஒளிவீசும் மாணிக்கமே என்றெல்லாம் கூவ வேண்டும் போலத்தான் இருந்தது அப்போது.. அந்த இன்பக் கனவோடுதான் அன்றிரவெல்லாம் கல்யாணி கல்யாணி என்று உளறிக்கொண்டே தூங்கவும் செய்தார்தான்.

    அடுத்த நாளும் இனிமையாகவே கழிந்தது. நிறுவனம் சென்று கடிதமெல்லாம் எழுதிக் கொடுத்து கல்யாணியின் பேரில் வந்த செக்கையும் பெற்றுக்கொண்டு அப்படியே கல்யாணியிடம் கொடுத்தவர்தாம். கல்யாணியின் வாயில் வந்த அத்தனை புகழ் வார்த்தையையும் மறுமுறைக் காதாரக் கேட்டு மகிழ்ந்தார், ஆஹா.. வயது அறுபதானால் மனுஷனுக்கு இந்த ஓய்வு கொடுக்கவேண்டும் என முதல் முதல் சட்டம் போட்ட அந்த முகம் தெரியாத வெள்ளைக்காரனுக்கு முதல் வணக்கம். இனி என்ன.. ஜாலியோ ஜாலிதான்.. கால் மேல் கால் போட்டுக் கொண்டு இனி பர்மெனண்டாக ஏஸி ரூமில் ஈஸிசேரில் உட்கார்ந்து கொண்டே அதாரிடி செய்ய வேண்டியதுதான்.. அப்படிச் செய்வதில் கூட கூடுதல் சுகம் இருக்கின்றதே. நினைத்தவுடனே தோன்றிய  அந்த மகிழ்ச்சி எனும் உணர்ச்சிக்கும் அதுவே கடைசி நாள் என்பதை அப்போது அவர் உணரவில்லைதான்..

    மறுநாள் அவரின் இனிய கல்யாணி காலையில் காபியைத் தராமல் கொஞ்சம் கடினமாக உலுக்கி எழுப்பினாள். கண்ணை விழித்துப் பார்த்தவரை அப்படியே உட்கார வைத்தாள். “ஏன்னங்க.. இன்னையிலேர்ந்து உங்களுக்குப் புது வாழ்வு.. நேத்து வரைக்கும் எப்படி இருந்தோம்னு இப்பவே மறந்துடுங்க.. உங்க உடல்நலன், மனநலன் இரண்டையும் பாத்துக்கறது என் பொறுப்புன்னு சபையிலே எல்லார் முன்னாடியும் சொல்லிட்டேன்.. நான் என் கடமையைச் செய்யறேன்.. நீங்க எதுக்கும் கோபப்பட மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க..” என்றவள் அவர் முகத்தைப் பார்த்தாள். அவர் சந்தோஷமாகத் தலையை அசைத்து ;சேச்சே நான் எதுக்குக் கோபப்படப் போகிறேன்.. உன் மேலயா?.. சத்தியமா வரவே வராதுன்னா.. உன் இஷ்டம்’ முகத்தில் ஏகப்பட்ட அசடு வழியப் பார்த்தவரைப் பார்த்து முறுவலித்தாள்.

    அந்த நாளில் ஆரம்பித்தது அவருக்கான சிரமதசை. ஏற்கனவே மாத்ருபூதத்துக்கு  சாதாரணமாக இருந்த ரத்த அழுத்தம், சுகர் போன்றவை பூதாகாரமாக ஆக்கப்பட்டு  அவருடைய சாப்பாட்டில் காண்பித்து நாக்கின் ருசியை ஒரேயடியாக அடக்கினாள் கல்யாணி. இதுவரை அவர் போய்க்கொண்டிருந்த காரின் ஓட்டுநர் நிறுத்தப்பட்டு அவரே அந்தப் பதவியையும் ஏற்கவேண்டும் என்று நயமாக வேண்டிக் கொண்டாள். வீட்டு வேலைக்காரி கூட ஒரு பொழுது வந்தால் போதும் என அறிவிக்கப்பட்டதோடு அவள் வேலையையும் அவருக்குப் பிரித்துக் கொடுத்தாள். அவர் உடல்நிலையைப் பாதுகாத்து வைப்பது தன் கடமை என்றும் குனிந்து குனிந்து ஒரு சில வேலைகள் செய்வதால் உடல்நலம் காக்கப்படும் என்றும் தினமும் அவரை உட்கார்த்தி வைத்து அரை மணி நேரம் லெக்சர் தரப்பட்டது. பேரம் பேசி வாங்குவது ஒரு கலை என்றும் வாழ்க்கை முடிவதற்குள் இந்த கலையை அவர் கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் தினம் காலையில் காய்கறி மார்க்கெட் செல்லும் வழக்கத்தையும் ஏற்படுத்தினாள். தான் இதுநாள் வரை பள்ளிக்கு பஸ்ஸில் சென்று வருவது அன்றோடு நிறுத்தப்பட்டதை ஒரு பெருமையாக அறிவித்தவள் அன்றுமுதல் தன்னைக் காரில் உட்கார்த்தி வைத்து அழைத்து வருவது இனி தன் கணவர் பொறுப்பாக ஏற்றுக் கொள்வதை தான் மகிழ்ச்சியோடு அங்கீகரிப்பதாக அவள் தலையை நிமிர்த்திக் கூறியது மாத்ருபூதத்தின் வயிற்றைக் கலக்கியது. வீட்டு வேலை போக இந்த பயம் தெளிந்த பிள்ளைகளும் போதாதற்கு மருமகப்  பெண்களும் கூடச் சேர்ந்து கொண்டு ஏகப்பட்ட சில்லறை வேலைகளைக் கொடுக்க அந்த வேலைகளை எப்படி இன்முகத்துடன் செய்யவேண்டும் என கல்யாணியே அறிவுரை கூறினாள். மதிய தூக்கம் சோம்பலைத் தரும் என்று சொல்லியதோடு அவர் ஈஸி சேரையும் குப்பையில் போட ஏற்பாடு செய்தாள். உட்கார்ந்து டி வி பார்க்கக் கூட நேரமில்லாமல் போவது கொஞ்சம் கொஞ்சமாக வலிக்கத் தொடங்கியது. சுவைக்காக அடக்கப்பட்ட நாக்கு போகப் போக எதிர்ப்பேச்சு பேசக்கூட இதமாகச் சொல்லிப் பதமாக அடக்கப்பட்டதாக உணர்ந்தார்.

    எத்தனைதான் கல்யாணத்தன்று அவள் கொடுத்த சத்தியம் வாபஸ் பெறப்பட்டாலும் அந்த சத்தியத்தை கல்யாணி இன்னமும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறாள்தான். எதையுமே மெல்லமாக அழுத்தமாகச் சொல்லியதோடு அதைச் செய்யத்தான் வேண்டுமென்று சொல்லாமல் சொல்லி கண்ணால் சைகை செய்வதை அடியோடு வெறுத்தார் மாத்ருபூதம்.. அத்துடன் வெளியே ஒய்யாரமாக காரில் இறங்கும்போது தெரிந்தவர் கண்ணில் பட்டால் அவரை விடாப்பிடியாக அழைத்து இவர்தான் என் கணவர் ஆனால் மற்றவரிடம் ரொம்பக் கூச்சப்பட்டு பேசுவார் என்றும் அசாதாரணமாகச் சொல்லி இவரையும் அங்கேயே ஊமையாக்கி தன்னையும் உயர்த்திக் கொள்ளும் கல்யாணியை அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பாட்டுக் கச்சேரிகளில் கல்யாணியின் இனிய கானத்தைக் கூட சரியாக இவரால் கேட்டு ரசிக்கமுடியவில்லை. பாட்டு முடியும்போது இவளுக்கு பாலோ அல்லது வென்னீரோ கொடுக்கவேண்டும்.. எந்தப் பாட்டின் முடிவில் சைகை செய்வாளோ என்றறியாமல் ஃப்ளாஸ்க்கோடு டென்ஷனோடு காத்திருக்கவேண்டும். தானாகப் போய் கொடுக்கவும் முடியாது. இப்படித்தான் ஒரு பாட்டுக்கச்சேரியின் மத்தியில் சற்று இடைவெளி கிடைக்க, ’ஐய்யோ பாவம்.. இத்தனை நேரமாய்ப் பாடுகிறாளே’ என இவரே மேடைக்குப் போய் பால் கொடுக்க அத்தனை பேர் மத்தியில் அதுவும் மைக்கில் கெட்டியாக ‘இப்படி மத்தியில் பால் சாப்பிட்டால் இவர்களெல்லாம் தப்பா எடுத்துப்பாங்க.. நான் கூப்பிடறேனே” என பவ்யமாக அவள் சொல்ல, அங்கே வந்திருந்த சபையோர் கேட்டு சிரிக்க இவருக்கு அவமானமாகப் போயிற்று. வேண்டாம் இனி அவளே கைநீட்டிக் கூப்பிடட்டும்.. இதே போல இன்னொருநாள் மாலைநேரத்தில் ஒரு பட்டிமன்ற பேச்சின் இடையில் தன்னை கைநீட்டிக் கூப்பிட்டு தண்ணீரை வாங்கிக் குடித்தவள். பத்தே நிமிட பேச்சு என்பதால் ஓடோடிப் போய்க் கொடுக்கவேண்டிய சூழ்நிலையில் உடல் கொஞ்சம் வேர்த்துக் கூட போயிற்றுதான்… கல்யாணியின் கணவனின் பொறுப்பான இந்த செயலை சபையிலேயே ஒவ்வொரு சமயம் இவளே பாராட்டி இவருக்கு கைதட்டல் வாங்கிக் கொடுத்தது கூட உண்டு. எதையும் வெளியே சொல்லாமல் உள்ளுக்குள்ளே அழுது வெளியே புன்னகை செய்யும் கலையை அன்றுமுதல் கற்றுக் கொள்ளத் தொடங்கினார்.

    அவள் பள்ளியில் கூட மாலை வேளைகளில் இவர் காத்திருக்கும் நேரத்தில் வேறு சில ஆசிரியைகள் இவரைக் கண்டு சிரித்து விட்டுப் போனாலும் இவருக்கு மட்டும் ஏனோ அந்தச் சிரிப்பு சற்று நக்கலாகவே பட்டது. இருந்தும் வேண்டுமென்றே நேரம் எடுத்துக் கொண்டு வந்த கல்யாணி, ’ஐயைய்யோ நான் உங்களை மறந்தே போய் அநாவசியமாக பிரின்ஸிகிட்டே பேசிக்கொண்டே நேரம் வேஸ்ட் பண்ணிவிட்டேன்.. ரொம்ப நேரம் காத்திருந்தீங்களோ’ என்று அப்பாவித்தனமாக ஒரு கேள்வியும் கேட்டும் ஒரு சிரிப்பும் சிரித்துவிட்டு ஒய்யாரமாக பின்சீட்டில் ஏறி உள்ளே மகாராணி போல உட்கார்ந்து தன்னைப் போகச் சொல்லி சைகை காட்டுவது அவருக்கு உள்ளுக்குள் எரிய வைக்கும்தான். வீட்டுக்குப் போனால் மறுபடியும் வீட்டு வேலை.. நேற்று அந்த லேடிஸ் டெய்லர் சரியாக ரவிக்கை தைக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அதைச் சரி செய்ய வேண்டி தன்னை அனுப்பினாலும் அனுப்புவாள். வேலைக்காரி வேறு இரண்டு நாட்கள் லீவு வேண்டுமென கேட்டபோது மூன்று நாள் வேண்டுமானால் எடுத்துக்கோ, என் கணவர் சமாளித்துக் கொள்வார் என்று பெருமையாகச் சொல்வது போல அனுப்பி வைத்தவள். அத்துடன் விட்டாலும் பரவாயில்லை.. இதையெல்லாம் செய்தால் தன் உடம்புக்கும் மனதுக்கும் நல்லது என்பதாக இவள் தினமும் ஒரு அரை மணி நேரமாவது கட்டாயப்படுத்திச் சொல்லும் உபன்யாசமும்.. தம்மால் ஒருவார்த்தை எதிர்த்துப் பேசாமல் இருக்கவைக்கும் அவள் சாமர்த்தியமும்.. சே.. என்ன லைஃப் இது.. ஜாலியாக வீடு, ஜாலியாக வேலை, டி.வி.. சுவையான சாப்பாடு, சுகமான தூக்கம் இவையெல்லாம் இனி எப்போது கிடைக்கும்?

    உண்மையாகப் பார்த்தால் அறுபதிலிருந்து ஓய்வு உடலுக்கும் மனதுக்கும் கட்டாயத் தேவை என்றுதானே எல்லா நிறுவனங்களும் வீட்டுக்கு அனுப்புகின்றன, ஆனால் காலையிலிருந்து இரவு வரை ஓய்வில்லாத இந்த அலைச்சல்.. இதற்கு விடுதலையே கிடையாதா?.. ஓடிவிடலாமா.. சேச்சே.. காசுக்கு எங்கே போவது.. எல்லாவற்றிற்கும் காரணமே இந்தக் காசு என்ற மாயாவிதான். நம்மிடம் மட்டும் இந்தக் காசு விளையாடிக் கொண்டிருந்தால் யாராவது ஒரு வார்த்தை பேசமுடியுமா..  நைச்சியமாகப் பேசி மாதாமாதம் வரும் பணத்திலிருந்து எல்லாவற்றையும் இவள் பேருக்கு மாற்றி விட்டாளே.. நிறுவனத்திடம் சொல்லி தன் பேருக்கு மாற்றிக் கேட்போமா.. முடியாது.. அவமானமாகப் போகும். அன்று சபையில் தன்னையும் சேர்த்து எல்லோரையும் கட்டிப்போட்டவள் பற்றி என்னவெனக் காரணம் சொல்வது.. அவர்களும் இதுதான் சாக்கு என்று பதவியில் இல்லாத தனக்கு ஒருமணிநேரம் நல்ல புத்தி சொல்கிறேன் பேர்வழி என நமக்கே சொல்லிக் காண்பிப்பார்கள். இந்தக் கல்யாணிதான் வெளிப்படையாக எனக்கு மாறாகப் பேசுவதும் செய்வதும் இல்லையே.. எல்லாமே என் நன்மைக்குதானே என்று சொல்லி மயக்கிவிடுவாளே..

    ஆஹா.. இப்போதுதான் புரிகிறது.. தான் மற்றவர்களை துன்புறுத்தி வேலை பெற்றோம், இவள் மயக்கிப்பேசியே தன்னைத் துன்புறுத்துகிறாள். அந்த காதறுந்தவன் ஏதோ பரிகாரம் செய்தால் நல்லது என்று சொன்னானே..  அப்போது அநாவசியமாக அவனையும் துன்புறுத்தி விட்டோம்.. பரிகாரம் செய்திருக்கவேண்டும்.. அவன் இப்போது எங்கே கிடைப்பான்..

    ஏன் சார்.. வலது காது பாதி அறுந்துருக்கும், கண் கொஞ்சம் குறுகலா இருக்கும். அடிக்கடி இமைகள் படபடவென துடித்துக் கொண்டே பேசுவார்.. குண்டு முகம்.. அப்பவே மீசை வெக்கலை.. நல்ல ஜோசியம் தெரிஞ்சவர்.. என்னா ஒரு அறுபத்தைஞ்சு வயசு இருக்கும்.. உங்களுக்கு அப்படி யாராவது தெரியுமா.. தெரிஞ்சா சொல்லுங்களேன்.. ஒரு பரிகாரம் பண்ணனும் சார்..

                                                                ==================

    Share
  • ஊதாப்பூக்கள்!

    சீனிவாசன் கிரிதரன் 

                                         

                                                தளர்ந்துபோன மரப்படிகளில் கால் வைத்தபோது அதன் வயது உணர்வுகளின் ஊடாக நெஞ்சை வருடியது. குழந்தையாக இருந்தது முதல் ஏறி ஓடிவிளையாடியதும், அதில் ஏறி  சாகசம் செய்த மற்றைய பருவங்களையும் உள்வாங்கிக்கொண்டு….இன்று தலை நரைத்த என் வயதையும்  தாண்டி அது வாழ்ந்துகொண்டிருக்கிறது. இன்றும் விலத்திக்கொள்ளாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் பல நினைவுகள் கூடவே என்னுடன் படி ஏறிக்கொண்டிருக்கின்றன. மேலே ஏறி பழுப்பேறிய  அந்த முதிரை மர கதவினை திறந்து கொண்டு உள்ளே சென்று கட்டிலில் அமர்ந்தபடி கதவின் பின்புறத்தில் ஒட்டியிருந்த பழுப்பேறிய காகிதத்தில் வரைந்திருந்த ஆவர்த்தன அட்டவணை கண்ணில்பட்டது. பல வருடங்கள் கடந்தும் இன்னும் கழற்றி ஏறிய மனமில்லாமல் அதனை விட்டுவைத்திருக்கும் அக்கா, காலம் எவ்வளவு வேகமாக போய்க்கொண்டிருக்கிறது, திறந்திருந்த யன்னலினுடாக பரபரப்புடன் இயங்கத்தொடங்கியிருக்கும் வீதியையும் கடை தெருவையும் பார்வையிட்டேன்.

                                            “தம்பி” என்று அம்மாவின் குரல் பாசத்தோடு ஒலித்தது. “என்னால ஏறிவரமுடியாது; இறங்கிவா. இறங்கிவந்து, ..முதலில குளித்து சாப்பிடு, அதற்கு முதலில இந்த டீ யை குடி” என்று நிறுத்தல் இல்லாமல் தொடர்ந்தார். எனக்கு நன்கு தெரியும், அவரால் இப்போது  மேலே ஏற முடியாது, வயதோடு கூடவரும் எலும்பு தேய்மானம் முழம் கால் சில்லில் வலியை கொடுத்திருந்தது.  இல்லையேல் மேலே வந்து மேசையில் தேநீரை வைத்துவிட்டு எனதருகில் அமர்ந்து தலையை தடவியபடி சுகம் விசாரித்திருப்பர்.

    “தங்கம், இதை மேசைல வை; தம்பி வந்து குடிக்கட்டும், என்னால இப்பெல்லாம் முடியாது, நான் இருக்கப்போறன்” என்றபடி அம்மாவின் குரல் மேலும் கேட்டது.

                                               படியால் இறங்கிக்கொண்டிருக்கும்போது ” வாங்க தம்பி ” என்றபடி தங்கம் என்றழைக்கப்படும் தங்கநேசம் மேசையில் தேநீர் கோப்பையை வைப்பது கேட்டது. எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்தே எமது பூர்விக கிராமத்தில் இருந்து எங்களது தூரத்து உறவினர் என்றவகையில் வந்துபோகும் உறவுகள், தங்கமும் அவளின் அப்பாவும்தான். கிராமத்திலிருந்து எங்களது நிலபுலம்களை பராமரிப்பதில் இருந்து அவற்றை பொறுப்பாக கொண்டு சேர்ப்பது வரை அவர்கள் என்றைக்கும் பின்நின்றதில்லை, அவ்வளவு நேர்மையாக அவர்கள் நடந்துகொண்டிருந்தார்கள். இடைக்கிடையே நாங்களும் பாடசாலை விடுமுறை நாட்களில் அங்கு தங்கியிருந்து வந்தது இன்றும் நல்ல ஞாபகமாகவே உள்ளது. பெரிய காணில் அமைந்த  அம்மாவின் நாற்சார வீடும், அதனை சுற்றி வளர்ந்திருந்த தென்னை மரங்களும், மா மரங்களும், வீட்டின் பின்புறமாக ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்காலும், பசைப்பசேலென கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியும் நெல் வயல்களும் இன்றும் மனதை விட்டு அகலாது.

                                                அப்பாவின் மரணத்தின்பின் அம்மாவிற்கு  துணையாக வந்தவள், தனக்கென வாழ்க்கையொன்றை அமைத்து கொள்ளாமலே அம்மாவுடன் தங்கிவிட்டாள்,  அம்மா எவ்வளவோ வற்புறுத்தியும்  அவள் ஒத்துக்கொள்ளவில்லை, தனக்கு ஒதுங்கிக்கொள்ள ஓரிடமும் பாதுகாப்பும்தான் தேவை என்றபடி ஒதுங்கிக்கொள்வாள், அம்மா பலதடவை கேட்டும் அவளிடம் அதே பதில்தான் விடையாகக் கிடைத்தது , இது அவளுடைய விருப்பம் என்றபடி அம்மாவும் விட்டுவிட்டார்.

                                                 மேசையில் இருந்த தேநீர் கோப்பையை எடுத்துக்கொண்டு அம்மா இருந்த இடத்தை நோக்கி நகர்ந்தேன். என்னை பார்த்தபடி ” மெலிஞ்சி போய்விட்டா போலிருக்கு , எத்தனை நாள் லீவு போட்டிருக்கு, எப்படி மருமகள், பிள்ளைகள் எல்லாம், ஒருத்தியையாவது கூட்டி வந்திருக்கலாம்தானே, சின்னவளை பார்க்க ஆசையாயிருக்கு, நீங்க இங்க எங்கயும் பக்கத்தில இருந்தா எனக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கும், அதுகளுக்கும் அப்பம்மாட பாசம் தெரியும், எல்லாம் கொடுப்பினைதான்….ம்ம்ம் ” என்றபடி எனது பதிலை எதிர்பார்த்தார். “எனக்கென்ன ஆசை இல்லையா உங்களுக்கு பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ள, பிள்ளைகள்ர படிப்பும் என்ட வேலையும், கொஞ்சம் தொலைவுலதான் இருக்க வேண்டி இருக்கு, அங்க எல்லாரும் சுகம், அடுத்த விடுமுறைக்கு கூட்டிவாறன், கொஞ்ச நாள் நிண்டு அப்பம்மாவோட சந்தோசமா இருந்தா போய்ச்சு, எனக்கு இரண்டு நாள் தான் டூட்டி லீவு,” என்றபடி தேநீர் அருந்தியபடி அம்மாவைப் பார்த்தேன். ஒரு மென்மையான சிரிப்புடன் என்னை பார்த்து ” என்னடா நான் சொல்லுறதில என்ன பிழை, எனக்கும் உங்கள்ல பாசம் இல்லையா, சொல்லு பார்ப்பம்” என்றார். ” ஓம் , சரிதான், அடுத்தமுறை பார்ப்பம்” என்றபடி எழுந்தேன் . ” பிரயாணம் ..சரியான களைப்பாக இருக்கும், ஒருதரம் நல்லா தலையில முழுக்கிற்று  வா, வந்து சாப்பிடு ” என்றபடி எனது தேநீர் கோப்பையை எடுத்துக்கொண்டு சமையலறையை நோக்கி நடந்தார். நடந்து சென்ற அம்மாவை உற்றுப்  பார்த்தேன், நன்கு நரைத்த தலைமுடி முதுகுவரை பின்னப்பட்டு இருந்தது.

                   தோளில் மாற்றுடைகளுடன் வெளியே வந்தேன்,  சுற்று சூழலில் நவீன மாற்றங்கள் எவ்வளவோ வந்திருந்தாலும், ஐம்பது வருடங்களுக்கும் மேலாக அதே கம்பீரத்துடனும் பழமை மாறாத தோற்றத்துடனும் இன்னும் வீடு இருந்தது. அப்பா தன் முயற்சியால் கட்டிய வீடு,  அந்த நேரம் சிறிய கடைத்தெருவை கொண்ட ஒரு நகரமாக இருந்ததால் வீட்டுடன் இரண்டு கடைகளும் சேர்த்தே கட்டியிருந்தார். திருமணம் முடித்த கையுடன் அம்மா புகுந்த வீடாகவே இங்கு வந்திருந்தார். கடைகளின் குத்தகை அப்போது பெரிதாக இல்லாவிட்டாலும் இப்போது அது அம்மாவிற்கு யாரிலும் பெரிதாக தங்கியிருக்காமல் தனது செலவுகளை பார்க்கக்கூடியதாக உள்ளது. அப்பாவின் முழு நினைவாக, எந்த ஒரு மாற்றமும் செய்யாமல், பழைமை மாறாமல் முறையாக பராமரித்து வருகிறார். இதன் பின்னர் எழுந்த வீடுகள் எல்லாம் சந்தை மதிப்பின்படி பார்த்து, உடைத்து புதிய கடைகளாவும் வீடுகளாவும் மாறியிருந்தன.  இந்த விடயத்தை பெரிது படுத்தாமல் அக்காவும் , அத்தானும் அம்மாவின் கனவுகளை சிதைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பது மனதுக்கு நிறைவாகவே இருந்தது. பழைமை மாறாத வீடுகள் நினைவு சின்னங்களாக சில சமயங்களில் அமைந்து போய்விடுகின்றன, வீடு என்பது எப்போதும் எம் கூடவே வருவது, வீட்டின் ஒவ்வொரு இடமும் மறக்க முடியாத பல நினைவுகளால் நிறைந்து போயிருக்கும். ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு நிகழ்வுகளை ஞாபகப்படுத்தும், அப்பாவின் மரண நிகழ்வும், அக்காவின் திருமணமும், அக்காவின் மக்கள் பிருந்தாவின் பிறப்பும் ஏன் எனது திருமண வரவேற்பும் இன்னும் பசுமையாகவே உள்ளது.

                                          வீட்டுப் படிக்கட்டுகளால் இறங்கி பின்புறமாக நடந்து கிணற்றடியை அடைந்த போது அதனை சுற்றி வளர்ந்திருந்த கமுகு மரங்கள் பச்சையும், மஞ்சளுமாக பாக்கு குலைகளைத் தாங்கி இருந்தன, சிறு வயதில் கமுகு மரத்தில் நெஞ்சில் காயம் வரும்வரை ஏறுவதும் பின்னர் சறுக்கிக்கொண்டு வருவதும் நினைவுக்குவந்தது, பழுத்துவிழுந்த கமுகு ஓலையில் அக்காவை இருத்தி இழுத்தி சென்றதும் ஞாபகங்களாக வந்தது. ” கவனம்! கல்லிலே பாசி கொஞ்சம் பிடிச்சிருக்கு, சறுக்கும்” என்ற எச்சரிக்கை தங்கத்திடமிருந்து வந்தது. ” அதை கொஞ்சம் தேய்த்து கழுவி விடு என்று சொன்னனான் மறந்து போய்விட்டதா தங்கம் ..” என்று கண்டிப்பான குரலுடன் அம்மா வெளியே வந்தார். ” எனக்கு பழக்கம்தானே அம்மா, நீங்க உள்ள போய் இருங்க ” என்றபடி சவரம் செய்துவிடு குளிக்க ஆரம்பித்தேன். கமுகு மரம் கிணற்றை சுற்றியிருந்தால் கிணற்று நீர் நல்ல குளுமையாக இருக்கும் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. அதை அனுபவித்தவர்களுக்கே தெரியும்.

                                                 சாப்பாட்டு மேசையின் கதிரையை இழுத்து அமர்ந்தபோது அம்மாவும் அருகேவந்து அமர்ந்துகொண்டார், ” சாம்பாரும், உனக்குப்பிடித்த பச்சமிளகாய்ச் சாம்பலும் செய்திருக்கிறன், இட்லியோட சாப்பிடு, பிருந்தாவிற்கு செய்த கொஞ்சம் தோசையும் இருக்கு, நல்லாயிருக்கும்; இரண்டுபேரும் வேலைக்கு போறதுதானே, அநேகமா எல்லாம் கடைலதான் என்ன?, அவன் என்ன, யாருக்கு என்று செய்கிறானோ இல்ல யாருக்கோ என்று செய்கிறானோ, சொல்லு பார்ப்பம், எல்லாம் வீட்டு சாப்பாடுக்குப்பிறகுதான் என்ன?” என்றபடி  எனக்கும் தனக்குமாக மெதுவாக சொன்னார். மல்லிகை பூ போன்ற இட்டலி, மிக மிருதுவாக இருந்தது, என் முன்னே இருந்த தட்டில் இட்லியை எடுத்து வைத்தபடி ” அம்மாடா கையால சாப்பிடுறதெண்டா ஒரு சந்தோசம்தான் என்ன “, என்றபடி இரண்டு தோசைகளையும் தட்டி வைத்துவிட்டு ” வயிறார சாப்பிடு” என்றபடி எனது முகத்தினை பார்த்தார். காலம் எவ்வளவு கடந்து போனாலும் அவற்றின் சுவையும் மணமும் மாறவேயில்லை, அம்மாவின் முகத்தை நிமிர்ந்துபார்த்தேன், ” என்னடா உப்பேதும் கூடிவிட்டதா?”, என்றார். “இல்லம்மா , எப்படி அதே கைப் பக்குவம்,  கொஞ்சம்கூட மாற்றமில்லாமல், எப்படி?”,

    என்றேன்.  “எல்லாத்துக்கும் மனம்தான் கரணம், யாருக்காக செய்றம் என்ற கேள்விக்கு பதில் இருந்தால் சரி”, என்றபடி ,தண்ணீர் கிளாஸினை அருகில் வைத்தபடி சமையல் அறை பக்கம் சென்றார்.

                                        ஒரு பதினைந்து பதினெட்டு வயது வரைக்கும்தான் ஒழுங்கான வீட்டு சாப்பாடு, பாசத்தோட இருத்தி பரிமாறுவதெல்லாம், கடந்து போனால் வெறும் நினைவுகளோடுதான் காலங்கள் கழிந்துபோகும். படிப்பு, கல்லூரி விடுதி,வேலை என்று வெளியே நகரும்போது தொலைக்கப்படும் வரம்கள் அதிகம். எனது சக நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது அடிக்கடி சொல்வேன், பத்து வயதில தொடங்கிய பார்சல் சாப்பாடு ( மதிய உணவு ) இன்றுவரைக்கும் இருக்கு, ஆறுதலாக, வீட்டில் ஒரு வேளை  தட்டில் சாப்பிடும் திருப்தி  எங்கும் கிடைப்பதில்லை, ஒரு கறியாக இருந்தாலும் அது அமிர்தம்தான்.

                        தங்கம் கூடையை எடுத்துக்கொண்டு சந்தைக்குப் போக ஆயத்தமானாள், “அம்மா , தம்பிக்கு என்ன சமைக்க ” என்றவள், எனதருகே வந்து, ” நாட்டு கோழி வாங்கிவரவா, அம்மா நல்லா அரைச்சி சமைப்பா, தம்பியும் முதல்ல நல்லா விரும்பி சாப்பிடுறதானே, என்ன சரியா” என்றபடி எனது பதிலை எதிர்பாத்துக்கொண்டு நின்றாள். “ம் ” என்றபடி தலையை ஆட்டினேன். ” அவனிடம் என்ன கேள்வி இருக்கு , நீ வாங்கிவா, என்ர கையால அவனுக்கு சமைக்கணும்” என்றபடி அம்மா உள்ளேயிருந்து எனதருகே வந்தார். தங்கம், வாசல் வழியாக வீதிக்கு இறங்கினாள்.

                                         “ஏனப்பா….. சரியா மெலிஞ்சி போய்ர போலிருக்கு…. சரியா உடம்ப கவனிக்கிறல்லபோல” என்று  நீண்டநேரம் அடக்கிவைத்திருந்த  தனது ஆதங்கத்தை வெளிவிட்டார். ” அப்படி ஒன்றுமில்லை , இப்ப வயது என்ன, ஐம்பதை நெருங்குதுதானே, மெலிவாஇருக்கிறது, ஆரோக்கியம்தானே அம்மா “, என்றேன். ” உங்களுக்கேதும் ” என்றபடி முகத்தினை பார்த்தேன். “எனக்கென்ன, இந்த  முழங் கால் வருத்தம் மட்டும்தான், சீனியோ, அந்த பிரசரோ…ஒன்றுமில்லை”, உடம்ப சரியா கவனிச்சிக்கொள்…குடும்பம் ஒன்று இருக்கல்லவா , அதுகளும் உன்ன நம்பித்தானே இருக்குதுகள்”, என்றபடி பெரு மூச்சொன்றை விடுத்தார். ” பிள்ளை வர எப்படியும் மாலையாகிரும், வங்கி வேலை என்றால் இப்படித்தான், பிருந்தாவும் பள்ளிக்கூடம் விட்டுவர எப்படியும் இரண்டு மணியாகிரும், அவரும் வெளிநாட்டில, வாறமாதம்தான் வாறதாம் என்று பிள்ளை சொல்லிற்று, நீ கொஞ்சம் போய் ஆறுதலாக படுத்துக்கொள்ள, எதனை மணிக்கு கூட்டம்” என்றபடி சமயலறைக்கு செல்ல எழுந்தார். ” எனக்கு பின்னேரம் 3  மணிக்குத்தான், சரி ” என்றபடி எனது அறையை நோக்கி படிக்கட்டுகளில் ஏறத்தொடங்கினேன்.

                                     மொத்தம் 27 படிக்கட்டுகள், சிறுவயதில்,பள்ளிக்கூடத்தில் கிடைக்கும் சிறிய சோக் துண்டுகளை கொண்டுவந்து படிகளில் ஒன்று முதல் இருபத்தேழு வரை எழுதியதை நினைக்கும்போது சிரிப்புதான் எழுகிறது. இறுதி படிக்கு கால்வைக்கும்போது கால்களில் வலுவற்றதன்மையும், நெஞ்சில் எதோ கனப்பதும், ஆழமாக மூச்சுவாங்குவதுமாக இருந்தது. எத்தனைதடவை ஏறி இறங்கியிருப்பன் புதிதாக என்ன?, விடை காணமுடியாமல் கதவை திறந்தபடி கட்டிலில் அமர்ந்தேன். பிரயாண களைப்பாக இருக்கும், வயதும் போய்க்கொண்டுதானே இருக்கிறது என்ற உணர்வுடன், திறந்திருந்த யன்னல்களூடாக மெதுவாக சூடேறிக்கொண்டிருக்கும் காலை வேளையை உள்ளேநுழைந்த காற்று உணர்த்தியது. வீட்டு வாசலுக்கும் வீதிக்கும் இடையே  இருந்த சிறிய நிலப்பரப்பில் நன்கு வளர்ந்திருந்த  கத்தா  மரத்தின் பரந்த நிழல் ஒரு குளுமையான சுற்று சூழலை ஏற்படுத்தி இருந்தது. இந்த கத்தா மரத்தை வைத்துக்கொண்டு அம்மாவும் தங்கமும் ஒருபாடமே நடத்தி முடித்து போடுவார்கள். முதலில் தங்கம்தான் தெடங்குவாள் ” ஏன் அம்மா, இந்த கத்தா மரத்த வெட்டிவிட்டால், இந்த காகம் கொக்கு எல்லாம் கூடு கட்டி, இந்த நிலத்தில எல்லாம் எச்சம் போடுறதெல்லாம் இல்லாமப்போய்விடும் என்னே “, என்று. அதற்கு அம்மா ” இந்த உலகம் நமக்கு மட்டும் இல்லையே, அதுகளுக்கும்தானே, எந்த சூழலில பாதுகாப்பும், சாப்பாடும் கிடைக்குதோ அங்கதான் அது கூடு கட்டும். அதுக்கு மரத்த வெட்டுறதுதான் வழியில்லை, அதையும் சேர்த்து வாழ பழகிக்கொள்ளுறதுதான் அதற்கு வழி” என்பார். ” என்னம்மா நீங்க, ஒவ்வொருநாளும் இந்த நிலத்தை கழுவி துப்பரவாக்கிற எனக்குத்தான் தெரியும் கை நோவு” என்பாள். “அது சரி, நீ கழுவி    துப்பரவாக்கிற தண்ணி எல்லாம் அங்க இருக்கிற பூ மரங்களுக்குப் பசளையாகப் போறது உன்ட கண்ணுக்கு தெரியாது, கைவலியும் கால்வலியும்”, என்றபடி பாடத்தை முடிப்பார். அம்மா, அப்பாவைப் போன்று படித்தவரில்லை என்றாலும், கிராமத்தில் இயற்கையுடன் கூடின வாழ்கை அவரை நன்கு வளர்த்தெடுத்திருந்தது.

                                       கடை தெருவின் அரவரங்களும், வீதியில் வாகனங்களின் இரைச்சல்களும் மெதுவாக கூடியிருந்தது. கட்டிலில் மெதுவாக சாய்ந்தாலும் மனம் நிற்றல் நிறுத்தல் அற்று ஓடிக்கொண்டே இருக்கிறது, எந்த கணத்தில் என்ன விடயம் வரும் என்ற கணக்கில்லாமல், ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டும் தொடர்பில்லாமலும், ஏன் இப்போது இந்த எண்ணம் என்ற கேள்விக்கு விடை இல்லாமலும் , அலைந்து கொண்டே இருக்கும்.  அப்பா இருக்கும்போது பின்னேரங்களில்  இங்குதான் ஓய்வாக இருந்து புத்தகங்கள் படித்துக்கொண்டிருப்பர், படித்த புதிய விடயங்களை சில சமயம் அம்மாவுக்கு விளகிக் கொண்டிருப்பார். அநேகமாக அவர் ஓய்வெடுப்பது இந்த அறையில்தான், “அப்பா” என்றபடி படியேறிக்கொண்டு தேநீர் கோப்பையுடன் உள்ளே  நுழையும்போது, கனிவாக ” வாப்பா” என்றபடி அருகில் இருத்தி முதுகை தடவியபடி எனது படிப்பு மற்றும் தேவைகளை கேட்ப்பார். “இந்தா உனக்கு பிடித்த மாதுளம் பழம், அணில் கடிக்காமல் நல்லா சேலையால சுத்தி கட்டி வைச்சிருந்தனான், நல்ல நிறமாயிருக்கு, நீயும் சாப்பிட்டு அக்காவுக்கும் கொடுத்து சாப்பிடு,” என்பர்.  தான் வாசித்த நல்ல கதைகளை எங்களுக்குப் பொருந்தக் கூடியமாதிரியும் அறிவுரையாகவும் சொல்வர். அவர் எங்களை கடிந்து பேசியது கிடையாது, ” ஏன் அப்பா,………இந்தப்  பிள்ளைகளோட கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கோ, சொல்லு கேட்காமல் இருந்திரப் போகுதுகள், பிறகு எனக்குத்தான் கஷ்டமெல்லாம்” என அம்மா சொல்லும் போது, சிரித்த படி அவர் , ” இயற்கைக்கு யாரும் இதை செய் அதை செய் என்று கட்டளை சொல்லுறதில்லை, அது தன்ர நியதிக்கு அது நடந்துகொண்டே இருக்கும், நாம அதைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள தேவையில்ல,  நாங்க கூடின அளவு அக்கறை காட்டிடத் தொடங்கினால்தான் அது தான் உண்மைல போகவேண்டிய பாதையை மாத்தி போடும், பிறகு எல்லாம் சிக்கலாகிடும்,  அவங்கட ஒவ்வொரு செயலையும் கவனமாக கரிசினையாக உற்றுப் பார்த்துக்கொள், அதுக்குள்ள அவங்க உனக்கொரு செய்தியை வைத்திருப்பாங்க, அதக் கவனமாக அறிந்துகொள் அது போதும், திருத்த வேண்டிய இடத்தில மட்டும் திருத்த வெளிக்கிட்டு, அதையும் எப்படி பாதிப்பில்லாமல் செய்யவேணும் என்பதையும் தெரிந்து கொள்ளணும்” என்பர். நாங்கள் அருகில் நிற்கிறோம் என்றெல்லாம் கவலைப் படமாட்டார், அதற்கு சிரித்தபடி ” இதை போய் உங்களிட கேட்டனே, நீங்களாச்சு பிள்ளைகளாச்சு, பிறகு வந்து இப்படி செய்து போட்டுதுகள் என்று கவலைப்பட போறிங்க” என்றபடி நகர்ந்து விடுவார். “அப்பா சொல்லுறது சரிதானே, எனக்கு இப்படிதான் சிந்திக்கேலும்….நீங்க சரியாய் நடப்பீங்க  என்று அப்பாவுக்கு தெரியும், பிறகேன் கவலை” என்பார். அப்பாவின் முகத்தை அண்ணாந்து பார்த்தபடி, இவர் எப்படியெல்லாம் சிந்திக்கிறார், என்று  ஆச்சரியமாக பார்ப்பேன். அப்பாவின் பாதுகாப்பு வலயம் ( Safe  zone  ) பெரியது, அதனால் அவரால் அப்படி சிந்திக்க முடிந்தது, அம்மாவுக்கு அப்படியில்லை மிக சிறியது; குடும்பம், மரியாதையை என்ற சிறிய வலயத்தை விட்டு வெளியில் பாதுகாப்பாக சிந்திக்க முடியாதிருந்ததை இப்போதுதான் உணர முடிகிறது.

                                                சிறிது தூக்கம்தான், உடன் கலைந்துவிட்டது. வீட்டைச்  சூழவும் மறக்க முடியாத நினைவுகள் நிறைந்தே இருக்கின்றன. சூழ இருக்கின்ற ஒவ்வொரு பொருட்களும், இந்த வீட்டினுள் வந்த வரலாறோடுதான் இருக்கின்றன. தேவையில்லை என்று வெளியேற்ற மனமும் இடம் கொடுப்பதில்லை. அது அங்கேயே இருந்துவிட்டுப் போகட்டும், எமக்கென்ன இடைஞ்சலா தருகிறது,  எப்பவோ ஒரு நாளைக்கு உதவும்,  என நாட்களை நகர்த்துவதுமுண்டு. பொருட்கள் என்றும் தனியாக இருப்பதில்லை அவற்றுடன் நினைவுகளும், கனவுகளும் சேர்ந்துதான் இருக்கின்றன, ஒரேபொருள் ஒவ்வொருவருக்கும் வேறான பார்வையைத்  தருவதுடன்,அந்த   நினைவுகளும், கனவுகளும் ஒவ்வொருவருக்கும்  வேறாகத்தான்  இருக்கின்றன.

                    எழுந்து சென்று,  திறந்திருந்த யன்னலூடாக வீதியைப் பார்வையிட்டேன். பார்த்துப்  பழகிய இடமென்றாலும், ஒவ்வொருகணமும் ஏதோ ஒரு மற்றம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது. ஒரு நாளைப் போல் இன்னொருநாள் இருப்பதில்லை. இருந்தாலும், இன்றுபோலவே நாளையும் இருந்துவிடாதா என ஏங்கிய கணங்கள், நாட்கள் எத்தனையோ. கண்கள் எதிலும் குறிப்பான பார்வையை தவிர்த்து, அன்று ஏங்கிய கணங்களையும், நாட்களையும் மனம் நாடிக்கொண்டே இருந்தது.

                                                 எவ்வளவோ மாறிப் போய்விட்ட சூழல்களும், அவற்றினுள் தம்மை மாற்றிக்கொள்ள முடியதுபோன சூழல்களும் சேர்ந்தே இருந்தன. மாற்றமடையாமல் இருந்த சூழல்கள்தான், எம்மோடு அதிக கதைகளைப் பேசும்,  வீதியின் எதிர் பக்கத்தில், என் பார்வையில் எப்போதும் படும் அந்த பஸ் தரிப்பிடம், பலதடவைகள் புதிய புதிய மாற்றங்களை கண்டாலும், அங்கு நின்று செல்லும் அநேகமானவர்கள் எமது சூழலுக்குரியவர்கள்தான்,  அவர்களின் வயதுக்கும் அதன் மாற்றத்துக்கும் நிறையவே தொடர்பிருந்திருக்கும். அவர்களின் வாழ்க்கைக்கும் நிறைவேறிய மற்றும் நிறைவேறாத பல எண்ணங்களுக்கும் தொடர்பிருந்திருக்கும்.

                      கண்கள் மீண்டும் வீதியின் மறுபக்கம் நோக்கியது, இன்னும் கடைத்தெருக்கள் முழுமையாக திறக்கப்படாமல், அன்கொன்றும்  இன்கொன்றுமாக திறந்திருக்கிறது, எனது கண்கள் அங்கு பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்த குமரன் சில்க்ஸ் கடையில் நிலைத்துநின்றது. இன்னும் திறக்கவில்லை, திறக்க பத்து மணியாகும், மூடுவதற்கு எப்படியும் இரவு ஒன்பதுமணிக்கு மேலாகும். பகல் நேரங்களை விட இரவு நேரங்களில்தான், கடையின் அழகு நன்றாக விளங்கும். சிறிய கட்டிடமொன்றில் ஆரம்பித்த கடை,  நன்றாகவே வளர்ச்சியடைந்துள்ளது. அதன் வளர்ச்சியின் ஒவ்வொரு காலகட்டமும் என்னை ஒருவகையில் இணைத்தே இருந்தது.

                                                 அக்காலத்தில் உயர்தர வகுப்புகளுக்கு செல்வதாக இருந்தால், இங்கிருந்து   அடுத்த நகரத்துக்குப் பஸ் மூலம்தான் செல்லவேண்டும்.           போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் எண்ணிக்கையும் அப்போது  குறைவு, பஸ்களில் ஆட்களும் அதிகம். தனியார் பஸ் சேவைகள் அப்போது இல்லை. எல்லாம் அரச சேவையாகவே இருந்தது. போக்குவரத்தில் இடர்பாடுகள் இருந்தாலும், பாடசாலைக்கான பஸ் சேவை திருப்திகரமாக இருந்தது. அப்போது இரண்டு நேர பாடசாலை , மலை மூன்று மணிக்கு பின்னர்தான் பாடசாலை விடும். அங்கிருந்து பஸ் நிலையத்துக்கு வந்து, ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு ஏறி இருக்கைகளை பிடிப்பதென்றால் அது ஒரு தனிப்பட்ட திறமைதான் வேண்டும். அந்த காலத்தில் புத்தக  பைகள் அதிகமாக  பாவனையில்  இல்லை, ஒருசிலரிடம்தான் இருக்கும், ஏனையோர் எல்லாவற்றையும் கைகளில்தான் வைத்திருப்பர், நானும் கூட.

                  ஒருநாள்  பாடசாலை முடிந்து, வந்து ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு  ஏறும் போதுதான் எனது கொம்பாஸ் பெட்டி கை தவறி நிலத்தில் விழுந்து மிதிபட்டபோது, கீழே இறங்கி எடுக்கமுடியாமல் தவித்தேன், கீழே இறங்கி வருவதென்பது முடியாதகாரியம். ஒருவாறு பஸ்சின் யன்னலினூடாக வெளியே எட்டி யாரிடமாவது உதவி கேட்கலாம் என்று முனைந்தபோதுதான்,   கொம்பாஸ் பெட்டியின் உள்ளே இருந்த பொருட்களை ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து, பெட்டியினுள் அடுக்கியபடி அவள்  என்னிடம் நீட்டினாள். அந்த கண்களில் இருந்த குழந்தை தானம் ,இந்த நினைவுபோல பசுமையாக உள்ளது, அவள் என்னுடைய நகர் பகுதியை சேர்ந்தவள்தான், வழமையாக ஒரே பஸ் நிலையத்தில் இருந்துதான் பாடசாலைப் பிரயாணம். அவளுடைய அந்த பொறுப்பான செயல் எதோ ஒருவகையில் என்னை ஈர்த்திருந்தது. ” தேங்க்ஸ் ” என்றபடி வாங்கிக்கொண்டேன். பின்னர்  அவளை எங்கு  காணும் போதும் ஒரு நன்றி உணர்வே மேலோங்கி நிற்கும். அப்போது அவள் சிறிய ஒரு பிள்ளை , ஒரு பத்தாவது தரத்தில்தான் படித்துக்கொண்டிருக்க வேண்டும். அழகிய கண்கள் எடுப்பான மூக்கு, நல்ல நிறம், மொத்தத்தில் திரும்பி ஒருதரம் பார்க்க வேண்டும் போல் தோன்றும் அழகு. நான் எதனையும் பெரிதாக பொருட்படுத்தாது எனது படிப்பிலே தீவிரமாக இருந்ததால், காலம் உரிய பாதையில் என்னை கொண்டு சென்றது, இருந்தாலும் எனது மேசையில் இருந்த அந்த கொம்பாஸ் பெட்டி அந்த காட்சியையும் அவளின் குழந்தைத்தனமான அந்த பார்வையும் எப்போதும் நினைவுக்கு கொண்டுவரும். ம்ம்ம்ம் …” நல்ல ஒரு பிள்ளை” என்ற வார்த்தை மனதில் உருவாகி மூச்சுக்காற்றில் வெளியேறும். சிறிது காலங்களின் பின் அவளை எங்கும் என்னால் காணமுடியாது போனது, அவளை பற்றி யாரிடமும் விசாரிக்கவும் அப்போது எனக்கு தோன்றவில்லை. ஆனால் அந்த கொம்பாஸ் பெட்டி மாத்திரம் எனது புத்தக அலுமாரியில் கிடக்கிறது  , பழையதாக்கிப் போய் பின்னர் புதியவை சில வாங்கியிருந்தாலும் , அது எதோ ஒரு நினைவு சின்னம் போல் கண்ணில் படும், எறிவதுக்கு மனமின்றி.

                                          கேட் திறக்கும் சத்தம் கேட்க ,  பஸ் நிலையத்தின் மீதிருந்த பார்வை மீண்டு  வீதியை ஒட்டியிருந்த வாசலை நோக்கியது. தங்கம் சந்தையிலிருந்து திரும்பியிருந்தாள். ” என்ன, நாட்டு கோழி வாங்கப்போறன் என்று போனாய், கிடைச்சுதா?, என்றபடி அம்மா வாசல் கதவுவரை செல்வது புரிந்தது. “தம்பிர அதிஷ்டம், நல்ல பாணி சேவல் ஒன்று கிடைச்சுது, அங்கேயே வெட்டி எடுத்து கொண்டுவந்தான்”, என்றபடி சமயலறைப் பக்கம் போவது புரிந்தது. ” தம்பி , தேத்தண்ணீ ஏதும் போட்டுத்தரையா?, சம்சாவும் வாங்கிவந்திருக்கன்”, என்ற படி கூடத்திட்க்குள் வந்தபடி கேட்டள்.  “இது என்ன கேள்வி, அவன் நித்திரையோ என்னவோ, சாப்பிட்டு எவ்வளவு நேரம், நீ தேத்தண்ணியை போடு, அவன் குடிப்பான், போட்டுவிடு சொல்லு”  என்றார் அம்மா. என்தொடர்பாக அவர்களின் சம்பாஷணை….. அவர்களே விடயத்தை முன்வைப்பார்கள் பின்னர் அவர்களே தீர்மானத்திற்கும் வந்துவிடுவார்கள்.  சிறிது நேரத்தின் பின் அம்மாவின் ” தம்பி” என்று கூப்பிடும் சத்தம் கேட்டது. “ஓம் வாறன்” என்றபடி கீழே இறங்கி வந்து, அம்மாவின் அருகில் அமர்த்தபடி , அவரின் மடியில் இருந்த சுழகில் நன்றாக தீட்டிடப்பட்டிருந்த கைக்குத்தரிசி இருந்தது, ” தம்பிக்கு கைக்குத்தரிசி இப்ப விருப்பமா, இப்பவும்  நாங்கதான் அவிச்சசு, காயவைத்து, குத்தி எடுக்கிறது. எனக்கென்னவோ இந்த தவிடதரிசித்தான் விருப்பம், வேணுமெண்டா போகக்குள்ள கொண்டுபோ, நேற்றுதான் பக்கத்தில குத்தியெடுத்த, இந்த காகத்துக்கு காவல் பாக்கிறதான் போதும் போதும் என்றகிரும்”, என்றபடி அரிசியினுள் கற்களை தேடிக்கொண்டிருந்தார். நான் சிறுவனாக இருந்த போது எமது வீட்டின் கிணற்றடிக்கு பக்கத்தில்தான் நெல்லினைக் கழுவி, பெரிய தாச்சியினுள்வைத்து , விறகடுப்பில் அவிப்பார்கள், நெல்லினை காயவைக்கும் போது, காகத்திற்கு காவல் பார்ப்பதற்கு,  கையில் ஒரு கம்பினை   தந்து,   என்னைத்தான் அம்மா வீட்டு விறாந்தையில் இருத்தி விடுவார். ஓடி விளையாட முடியாது. ஓரிடத்தில் இருந்தபடியே, அம்மாவை திட்டிக்கொண்டே இருப்பேன், இப்போது நினைக்கும்போது என்னவோ போலிருக்கிறது, எதிர்காலத்தை என்னவென்று அறிந்துகொள்ளாமல் எல்லாமே நடந்துகொண்டிருக்கிறது, தெரிந்துகொண்டால் வாழ்க்கையில் சுவாரசியம் எதுவும் இருக்காது, அன்று காகத்திற்கு காவல் வைத்ததை நினைத்து அம்மாவை எதிர்க்க முடியாவிடினும் மனதுக்குள்ளே திட்டிக்கொண்டதை நினைக்க, இப்போது கண்கள் நனைகின்றன.

                                         அப்பாவின் மறைவின்பின், அம்மாவின் தனிமை எங்கள் இருவராலும்தான் ஓரளவு தீர்க்கப்படக்கூடும் என்பதை உணர்ந்துகொள்ள அவ்வளவு காலம் தேவைப்படவில்லை. அம்மாவின் சிறிய சிறிய கனவுகளை நிறைவேற்றிக்கொள்ளும் ஊடகங்களாக எங்களை நாங்களே மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. கால ஓட்டத்தில் சந்தர்ப்பங்களும், அனுபவங்களும், சூழ்நிலைகளும் வாழ்க்கையின் புரிதலை நன்றாகவே கற்றுத்தந்திருந்தது. சூழ்நிலைகளும், அனுபவங்களும் மாற்றமடையும் போதுதான், தான் ஒரு தனியனல்ல என்பதும், முடிவெடுக்கும் சந்தர்ப்பங்களில்   சில சமயம் மற்றயவரின் முடிவுகளை எம் முடிவுகளாக ஏற்றுக்கொள்ளத்தான்  வேண்டும்  என்பதை அறியமுடிகிறது.

     சுழகில் இருந்த அரிசியை கிள்ளி வாயில் போட்டபடி , ” நல்லா காய்ந்திருக்கு , கொஞ்ம் இடிந்துபோய் இருக்குமே” என்றபடி அம்மாவின் முகத்தினை பார்த்தேன். “காகத்துக்கு காவல் பார்த்த அனுபவம் இருக்கத்தானே செய்யும்”, என்றபடி சிரித்தார். ” ம்… ம்….. ..கொஞ்சங் கூடத்தான் காய்ந்து போய்ற்று”, என்றபடி அவர் சமையலறை  பக்கம் நகர, தங்கம் தேநீருடன் சம்சாவையும் தட்டில் ஏந்தியபடி வந்து ” தம்பி ஆறிவிட போகுது , சூடா குடியுங்க ” என்று மேசையில் வைத்துவிட்டு அவளும் சமயலறைக்குள் சென்றாள்.

                                               தேநீர் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு, வாசலைத்  தாண்டி வெளியே வந்தபோது கத்தா மரத்தின் நிழல் வாசலை முற்றாக நிரப்பி, ஒரு குளுமையைப் பேணி இருந்தது, வெளவால்கள் கடித்துப் போட்டிருந்த கத்தா பழங்கள் சிதறி கிடந்தன. இப்போது அதை யாருமே தொட விரும்புவதில்லை, என்பது தெரிந்தது. அந்த நாட்களில் அவற்றை பொறுக்கி கல்லில் வைத்து உடைத்து அதன் விதையினை உண்டது இன்னும் ஞாபகமாகவுள்ளது. பாதாம் பருப்பின் சுவையினை ஒத்ததாக இருக்கும். வீதி வரை நீண்டிருக்கும் சீமெந்து தரை மீதிருந்த கத்தா பழங்களை கால்களால் தட்டிவிட்டபடி, கேட் வரைக்கும் நடந்து சென்று, வீதியின் எதிரே இருந்த பஸ் தரிப்பு நிலையத்தில் கண்கள் பார்வையை நிலை நிறுத்தின.

                                  அன்றொருநாள், வீதியில் அதிக நடமாட்டமில்லை, காலை 8  மணியளவில் இருக்கும், வெயில் வீதியை நிறைத்திருந்தது. பிராயணப் பையினை காலருகில் வைத்தபடி, இதே பஸ் தரிப்பிடத்தில் எனது பல்கலைக்கழக விடுதிக்கு செல்வதற்காக காத்துக்கொண்டிருந்தேன். பொறியியல் பீடத்தின் இரண்டாம் வருடத்தில் படித்துக்கொண்டிருந்த காலம். சற்று தொலைவில் கறுப்பு நிற, மடிக்கும் குடையினை பிடித்தபடி விரைவாக யாரோ  நடந்து வருவது உணரக்கூடியதாக இருந்தது. எனது கவனம், அது யாராக இருக்கலாம் என அறிந்துகொள்ள திரும்பியபோது, அவள் மிக அருகில் வந்திருந்தாள். யார் என தீர்மானித்துக்கொள்ள எனக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை, நன்றாகவே வளர்த்திருந்தாள், வயதுக்கேற்ற முதிர்ச்சி அவளின் முகத்தில் தெரிந்தது, ஒரு ஐந்து அல்லது ஆறு வருட இடைவெளிகள்  இருக்க வேண்டும், அன்று பார்ததன்பின் இன்றுதான் மிக அருகில் பார்க்கிறேன், ” மதிச்சிற்றிங்களா?”, என்றபடி எனது முகத்தினை ஆவலோடு, எனது பதிலை எதிர்பார்பதைபோல்,  முகத்தைப் பார்த்து கொண்டிருந்தாள்.” ம்ம்ம்ம், என்றபடி எனது தலையினை அசைத்தபடி , கொம்பாஸ் பாக்ஸ் ….” என்றேன். தலையை குனிந்தபடி ” ம் ம் ம்  இன்னும் அது ஞாபகம் இருக்குது போல” என்றாள். ” சின்ன காலத்தில கண்டதிற்கு பிறகு இப்பதான் காணுறான், நல்ல வளந்திற்றீர், இவ்வளவுகாலமும் எங்கபோய் இருந்தீர், இப்ப என்ன செய்யிறீர்”, என்றபடி அவளின் பதிலை எதிர்பார்த்தேன். ” அப்பாவிற்கு  இடமாற்றம் வந்ததோடு நாங்களும் அவரோடு போய்டம், உயர்தரம் வரைக்கும் படித்தான், அதுக்குமேல போகல, படிக்கவேணும் …., இப்ப யூனிவசிட்டி போய்விட்டதா கேள்விப்பட்டன், இப்ப நாங்க எல்லாரும் இங்க, ஊருக்கே வந்துவிட்டம்”, என்று, எதோ என்னிடம் ஒப்புவிக்கவேணும் போல சொல்லிக்கொண்டே போனாள். ” நான் இப்போ இரண்டம் வருடம், பொறியியல் படிக்கிறான்,  கொஸ்ட்லுக்கு போறதுக்குத்தான் நிற்கிறன், பஸ் வரவேண்டிய நேரம், இன்னும் காணல்ல, எப்படியும்  போய்சேர மலையாகிரும்”, என்றபடி அவளை பார்த்தேன், அதே குழந்தைத்தனமான அழகிய கண்கள், எந்த மாற்றமும் காணமுடியவில்லை, ” வீட்டுக்கு, லீவு விட்டல்தான் வாறதா”, என்றபடி எதோ ஒரு எதிர் பார்ப்புடன், கேட்டாள். “ம் ம் ..”.என்றபடி, தலையை அசைத்தபடி, அவளை பார்த்தேன். எதோ கேட்கக்கூடாததை கேட்டுவிட்டதை போலும், அதிகமாக எனது தனிப்பட்ட விடயங்களுக்குள் வந்துவிட்டோமா  என அவள் உணர்வது தெரிந்தது. ” ஏதாவது மேலும் படிக்கப் பாருங்கள், பின்னுக்கு உதவும்” என்றுவிட்டு பஸ் வரும் திசையை பார்த்ததபின். ” இப்ப எங்க போக வந்தனீங்க” என்றபடி அவளைப் பார்த்தேன். எனக்கு பதில் கூறுவதற்கு அவசரப்படுவதும், ஏன் இவ்வாறு கேட்கமாட்டேனா என அவள் எதிர்பாத்திருந்ததை போல் இருந்தது அவள் முகம். “கடைக்கு வந்தனான், நீங்க வீட்டில இருந்து ரோட்டை குறுக்கறுத்து போறது தெரிந்தது, அதுதான் , கதைக்கவேணும் போல இருந்தது, ஓட்டமும் நடையுமாக வந்தான்”, என்றாள்.  “ஏன் “, என்று கேட்கவேணும் போல் இருந்தது, ஆனால் அது முறையல்ல என உணர்ந்துகொண்டேன். பஸ் வந்து நின்றது, ஏறி யன்னலோரம் வந்து அமர்ந்து, யன்னலுக்கூடாக அவளை பார்த்தேன், அதே பார்வை , கையில் கொம்பாஸ் பொக்ஸ் இல்லை, ஆனால் நிறைய கனவுகள் இருப்பதை உணர்ந்துகொண்டேன்.

                                                     பஸ் பிரயாணம் முழுவதிலுமே அவள் நிறைந்திருந்தாள். குட்டித்  தூக்கங்களிடையே  தெளிவற்ற கனவுகள் மீட்டுப் பார்க்கமுடியாதவையாக இருந்தன. பல்கலைக்கழகத்தின் வாசலில் பஸ் நின்றதும், பஸில் இறங்கி பனிமூட்டம் நிறைந்த மலைப் பாதை ஊடாக நடந்து சென்றபோது, பின்னே சென்ற இருளில் மூழ்கிய பாதையைப் போல், அவளின் நினைவுகளின் ஆக்கிரமிப்பும் கரைந்து சென்றது.

                      தற்போதைய தொலைத்தொடர்பு வசதிகளை போல் எந்த முன்னேறிய வசதிகளும் அப்போது இல்லை, தபால்க் கடிதத்  தொடர்பு ஒன்றுதான் எமக்கு சாதாரணமாக கிடைக்கக்கூடிய ஒன்று. தொலைபேசி வசதி பற்றி பேசவேண்டியதில்லை, அவை வெறும் நான்கிலக்கங்களை மட்டுமே கொண்டிருந்தன. சிறு நகரங்கள் வரை மட்டுமே இவ் வசதி மட்டுப்படுத்தி இருந்தது. எப்போதோ இருந்துபோட்டு வரும் அம்மாவின் கடிதங்கள், அவரின் கையால் எழுதி அனுப்புவதனால், அவரின் கையெழுத்தும், எழுத்துப்  பிழைகளும் அவரே முன்னுக்கு நிற்பதைப்போல் உணர்வை தரும். வசதிகள் இருந்தும் வாய்ப்புகள் அமையாமல் போய்  கல்வியில் பின்தங்கி இருந்தாலும், அவர்களிடம் இயல்பாகவே அமைந்த முகாமைத்துவப் பண்பு, எங்களை கல்விக்கூடாக உயர்த்த வேண்டும் என்ற உந்தல்கள் என்பன, அப்பா இல்லாத போதும், தனியாக  இருந்து   இவற்றைச்  செயற்படுத்தியிருக்கிறார். அம்மாவுடன் பேசிக்கொள்வதாக இருந்தால் வீட்டுக்குத்தான் வரவேண்டி இருக்கும், அப்படி வந்தாலும் மணிக்கணக்காக அருகில் இருத்தி எனது தலையை கோதியபடிதான் முழு கதைகளும் பேசப்படும், இருந்த இடத்தை விட்டு எழமனமில்லாமல், பிடிக்குதோ பிடிக்கல்லையோ அவரின் பேச்சினை கேட்டுக்கொண்டே இருக்கவேணும் போல் இருக்கும், இவ்வாறு கட்டிப்போடும்  பாசம் எவ்வாறு  ஊப்படுகிறது என்பதை உணர்ந்து, அறிய மிக நீண்டகாலம் எமக்குத் தேவைப் படுகிறது.

                       வீட்டுக்கு திரும்பி இருந்த ஒரு சமயம்,  அவளை ஒரு தடவை தற்செயலக புத்தக கடை ஒன்றினுள் சந்திக்க கூடியதாக இருந்தது. நான் கடைக்குள் வந்த நேரம் அவள் என்னை கண்டிருக்க வேண்டும், இருந்தாலும் என்னை காணாததுபோல் பாவனை செய்துகொண்டு, ஏதோ புத்தகங்களைத் தேடிக்கொண்டிருப்பதுபோல் இருந்தாள். அவளுடைய பார்வையில் இருந்து விலகி, அவளுக்கு பின்புறமாக வந்த போது, புத்தகத் தேடுதலை விட்டு என்னை தேடுவது புரிந்தது.  தவறவிட்டுவிட்ட உணர்வும் ஏதோ வேதனை கலந்த கண் சுருக்கிய பார்வையும்  முகத்தில் வெளிப்பட்டது. “ஹலோ, என்ன புத்தகம், தேடவேணும் என்றால் , நானும் சேர்ந்து தேடித்தாறன்” என்றேன். எனது குரலை கேட்டு திரும்பியவள், தலையை தாழ்த்தியபடியே நின்றாள். “என்ன , என்ன புத்தகம்….” என்றேன். ” குமுதம், போன வார புத்தகம் கிடைக்கல, அதுதான் தேடிக்கொண்டு நின்றனான்” என்றாள். ‘அவ்வளவு என்ன விசேடம் அதில “என்றேன்.” என்ன? …குமுதம் படிக்கிறது இல்லையா” என்றாள். ” இல்ல , நேரம் இல்ல என்பதை விட , ஆர்வம் இல்ல, எல்லாம் படிப்போடு மட்டும் தான் ” என்றேன். ” எனக்கு நேரம் போகவேணும், அதுதான், இதுல   ‘சுஜாதா’ எழுதுற  ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற கதை  தொடராக வருது, நல்ல படியா போகுது, எனக்கு மதுமிதா என்ற பாத்திரம் பிடிச்சிருக்கு, ஒரு குழந்தை தனமான பாத்திரம், அடுத்தவாரம் என்னவரும், எப்படி போகும் என்று ….ஒரே  …” என்றபடி நிமிர்ந்து பார்த்தாள். இப்போது பழைய நிலைக்கு திரும்பியிருந்தது முகம், ” கிடைசிற்றுதா..” என்றேன். ” ம்..ஓ …இப்பதான் இங்கதான் கிடந்தது, ஒரு பிரதிதான் இருந்தது.” என்றாள். ” எப்ப வந்த, இப்படி எங்காவது சந்திச்சால்தான் கதைப்பிங்களாகும்”, என்றபடி எனது முகத்தினை பார்த்தாள். ” நேற்றுதான், வந்தான், அம்மா பேப்பர் எடுத்து வர சொன்ன , அதுதான் வந்த நான்” என்றபடி அவளை பார்த்து சிரித்து கொண்டு, வெளியே வந்தேன். என் பின்னல் வந்தவள் ,” எப்ப திரும்பி போறிங்க, டெலிபோன் கதைக்க அங்க வசதி ஏதும் இருக்கா”, என்றாள். ” ம்..ம் ஹு ம் …சாதாரணமா கிடைக்காது….கொஞ்சம்  அதுக்காக மினக்கடவேணும்…..ஏன் “, என்றபடி அவளை பார்த்தேன். ” இல்ல ..சும்மாதான் கேட்டனான், முடியும் என்றா ..இந்த தொடர் கதையை படிச்சு பாருங்க” என்றாள். ” பார்ப்பம் என்றபடி வெளியே வந்தேன். ” போயிற்றுவரன் ” என்றபடி வீதியில் இறங்கி நடந்தாள். திரும்பி ஒருதடவை பார்த்து சிரித்துவிட்டு ” அடுத்த முறை வந்தால், கதையைக் கேட்பன்” என்றாள். ” ம்.. பார்ப்பம்” என்றபடி வீட்டை  நோக்கி  நடந்தேன்.

     தொடர்சியாக அந்த கதையை படிக்கமுடியவில்லை,அதற்கேற்ற சுழலும் எனக்கு கிடைக்கவில்லை. மிக அண்மையில்தான் அந்த கதை திரைப்படமாக “ஆனந்த தாண்டவம்” என்றபெயரில் வந்திருந்தது. அவளுக்கு பிடித்த அந்த கதாபாத்திரம் ” மதுமிதா”,வை தமன்னா ஏற்றிருந்தார், மிக பொருத்தமான தேர்வு, தமன்னா. படத்தை பார்த்தபின்தான் கதையை, ஈ-புத்தகத்தில் படித்தேன். இந்தக் கதையின் தொடரின் முடிவுக்காக எவ்வளவு நாள் அந்த புத்தக கடையை ஏறி இறங்கி இருப்பாள்.

                                   “தம்பி” என்ற அம்மாவின் குரல் கேட்டு திரும்பினேன், “தோடம்பழம் கரைச்சனான், உள்ள வந்து, இருந்து குடி, கன நேரமா அங்கேயே நின்றுகொண்டிருக்கிறாய், கால் நோக்கப்போகுது, நல்ல நிழலா இருக்குது என்ன” என்றபடி அருகே வந்து, “கதிரை ஒன்றை எடுத்துவந்து போட்டுத்து, இருந்து குடியன் மகன், முந்தநாள் பெய்த மழைல நிலம் நல்ல குளிந்துபோய் இருக்கு” என்றபடி மீண்டும் உள்ளே சென்றார். அவர் பின்னல் நானும் நடந்தேன். அம்மா தந்த தோடம்பழச் சாறினை குடித்துவிட்டு , ஒரு பிளாஸ்டிக் கதிரையுடன் வெளியே வந்தேன். அன்றய தினசரி பத்திரிகையை என்னிடம் தந்துவிட்டு ” நேரம் போகல்லேண்ட இதை படிச்சுக்கொண்டு இரு, சமையல் இந்தா முடிந்திரும்” என்றபடி உள்ளே சென்றார். பத்திரிகையில்  நாட்டிலுள்ள அனைத்து வகையினருக்கும் தேவையான விடயங்கள் நிரப்பப்பட்டிருக்கும், எனக்காக மட்டும் என்ன இருக்கக்கூடும், ஓரிரு பக்கங்களில் தனிப்பட்ட எனக்கானவை முடிந்துவிடும், சிலர் பரீட்சைக்கு படிப்பதை போன்று ஓரெழுத்து விடாமல், கொடுத்த காசுக்கு நிறைவாக வசித்து  முடித்து விடுவார்கள்.            நிழலின் குளுமை இன்னும் இருந்தது, சீமெந்து தரையில் கதிரையினை போட்டு வீதியினை பார்த்தபடி அமர்ந்துகொண்டு பத்திரிகையினை புரட்டினாலும் அதில் நாட்டம்  இல்லாமல் இருந்தது. மடித்து மடியில் வைத்துவிட்டு,கதிரையில் சாய்ந்துகொண்டேன்.

                                     அன்று ஒருநாள் பல்கலைக்கழகத்தில் இருந்து திரும்பி இருந்தேன். பிரயாணத்தில் நல்ல தூக்கம் இருக்கவில்லை, சோர்வினால் ஒரே தூக்கமாக இருந்தது, எழும்பும்போது காலை ஒன்பதுக்கும் மேலாக இருந்திருக்கும், காலைச் சூரியனின் ஒளி கண்ணாடி யன்னலை சூடாகிக்கொண்டிருந்தது, எழுந்து சென்று யன்னலை திறந்தபோது சூரிய ஒளியுடன் மரநிழலில் தேங்கியிருந்த குளுமையான காற்றும் உள்ளே நுழைந்தது. கண்களை கசக்கி சோம்பல் முறித்தபடி மீண்டும் கட்டிலில் அமர்ந்தபோது மேசையில் வைக்கப்பட்டிருந்த தேநீர் கோப்பை கண்ணில் பட்டது, அம்மாதான் வைத்துவிட்டு போயிருக்கவேண்டும். எனது நித்திரையை குழப்பாமல் வைத்துவிட்டு சென்றிருக்கவேண்டும், அக்கா என்றால் நிட்சயமாக ” டேய் இன்னும் என்ன நித்திரை வேண்டிக்கிடக்கு ” என்றபடி எழுப்பிவிட்டுதான் சென்றிருப்பாள், தான் எனக்கு மூத்தவள் என்ற இடத்தினை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்கமாட்டாள், அவளுக்கு அப்படி ஒரு குணம்,

                                     இந்தநேரம்  அநேகமாக அவள் தனது வேலைக்கு புறப்பட்டிருப்பாள்; உயர்தர கல்வி முடிந்ததும் மேற்கொண்டு  படிப்பதை நிறுத்திவிட்டு, தான் வேலைக்கு போகவேண்டும் என்பதிலே குறியாக இருந்தவள்,  அவள் எதிர்பார்த்ததைப்போல் வங்கியிலும் வேலை கிடைத்திருந்தது. அது அம்மாவிற்கு பெரிய ஆறுதலாக இருந்தது. வீட்டு நிருவாகத்துக்கு போதியளவு வருமானம் இருந்தாலும், எனது படிப்பு செலவிற்கு அவளின் வருமானம் ஒரு பெரிய துணையாக இருந்தது. ” என்னதான் இருந்தாலும் உனது படிப்புக்கு நான்தான் செலவழிகிறான், விளங்கினால் சரி” என்பாள். “அக்கா தானே ” என்றதும், ” அது….” எனும்போது ஒருவித பெருமை அவளது முகத்தில் இழையோடும்.

                                      தேநீரை அருந்திவிட்டு அறையில் இருந்து வெளியே வந்து படிக்கட்டுகளால் இறங்கும்போது அம்மாவும் தங்கமும் எதோ உணர்வு பூர்வமாக கதைத்துக் கொண்டிருப்பது கேட்டது. எனது கால்கள் இறங்குவதை தவிர்த்து அவர்களின் கதையை கேட்பதிலே  கவனம் சென்றது. காலை உணவுக்கான ஆயத்தங்கள் முடிவடைந்து, சற்று ஆறுதலாக முன் மண்டபத்தில் அமர்ந்துகொண்டு அன்றய பத்திரிகையை பார்த்தபடி அவர்களிடையே புதினங்களும் , உள்ளக்கிடக்கைகளும் அலசல்களாக வெளிவரும். “இவரும் போய் பதினைந்து வருடம் ஆயிற்றுது, எதோ என்னால முடிந்த வரைக்கும் இருக்கிறதைக்கொண்டு படிப்பிக்கிறன், அவள் பெண்பிள்ளை, இப்ப வேலைக்கும் போறாள், காலாகாலத்துக்கு ஒரு கல்யாணம் காட்சிய அவளுக்கு செய்திட்டா, ஒரு பாரம் இறங்கிரும். இவன்ட படிப்பும் முடிய மூண்டுவருசம் எடுக்கும், பிறகு வேலதேட …..ம்” என்று தனது மனப் பாரத்தையும் , சலிப்பையும் வெளிவிட்டார். ” ஏன் அம்மா அதுகளுக்கென்ன, நல்லா ஒழுங்காதானே  வளத்திருக்கீங்க, உங்கட எண்ணத்தையும் சொல்லையும் மீறி அதுகள் என்னசெய்ய போகுதுகள்” என்று சமாதானப்ச் படுத்தினாள் தங்கம். ” இல்லடி , எல்லாம் சொல்லியா கிடக்குது, ஒன்றிருக்க ஒன்று நடந்திட்டா நான் தனியா இருந்து என்னசெய்வான், அவள் வீட்டோட  இருக்கிறதால எனக்கு ஒரு பயமும் இல்ல, இவன்தான் தூரத்தில போய் இருக்கிறவன், யார் எவர் எண்டு  தெரியாத பிள்ளையாரையும் பார்திற்றால்தான் எல்லாம் தவறா போயிரும், வளந்திற்றுகள் என்ர சொல்லுக்குள்ள நிக்குங்களோ தெரியாது” என்றபடி வசனத்தை முடிக்க முடியாமல் இருப்பதும், மூக்கு சிந்துவதுமாக இருந்தார்.  ” ஏனம்மா இந்தநேரம் இதுவெல்லாம் யோசித்து …..” என்றபடி

                                                 “தம்பியக் கூப்பிடட்டா “என்றாள். ” இல்ல இராப் பிரயாணம், சோர்வாயிருக்கும், இன்னும் கொஞ்ம் தூங்கட்டும், எழுப்பவேணாம் விடு”, என்றபடி பெருமூச்சொன்றை விட்டார். ” தம்பி , அவன் பொறுப்பான பிள்ளை அம்மா, நீங்க வீணா மனச போட்டு குழப்பிக்கொள்ளுறீங்க, பாருங்க , அவனுக்கு நீங்கதான் பேசி கல்யாணம் செய்விப்பீங்க”,  என்று நம்பிக்கையாகச்  சொன்னாள். ” அவளுக்கொரு கல்யாணம் நடந்து முடியிறவரைக்கும் எல்லாம் சரியா இருந்திரவேணும், இதைத்தான் அவர்ர படத்தைப்பார்த்து ஒவ்வொருநாளும் நான் கேட்டுகொள்ளுறது, யார் தலைல என்னென்ன எழுதிஇருக்கோ”, என்றபடி பத்திரிகையை மடிக்கும் சத்தமும், கதிரையை விட்டுஎழும் சத்தமும் கேட்டது.

                                 திரும்பவும் எனது அறைக்குச்  சென்று, கட்டிலில் சாய்ந்தபடி, அம்மாவின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும், எதிர்காலத்தை எதிர்கொள்ள அவர் முன்னே இருக்கின்ற சுமைகளும், என்னை எதோ செய்துகொண்டிருந்தது. அப்பா இல்லாமல் அவரின் தனியானதும் தனித்துவமுமான வழிநடத்தல் எந்த ஒரு தடையும் இல்லாமல் , அவரின் எண்ணப்படி நடந்துகொண்டிருந்தது. நிச்சயமாக எதிர்கால வாழ்கை தொடர்பாக எங்களின் சுய தீர்மானங்கள் அவரின் பாதையில் குறுக்கீடுகளை ஏற்படுத்தும். நட்பாகப் பழகும் பலரின் முகங்கள் ஞாபகத்தில் வந்து போய்க்கொண்டிருந்தன, பார்வைகள், கதை பேச்சுக்கள் , சந்தர்ப்பங்கள் எவ்வளவோ விடயங்களை மனம் சேமித்து வைத்திருந்து அசைபோட்டது, யாருமே அவ்வளவுதூரம் என்னுள் தாக்கத்தினை ஏற்படுத்தி இருக்கவில்லை, அந்த கொம்பாஸ் பெட்டி பெண்ணைத் தவிர. சில மதங்களுக்கு முன் அந்த புத்தக கடையில் சந்தித்ததன் பின் அவளைக் காணமுடியவில்லை. அம்மாவின் கனவுகளுக்கு எந்தொருவகையிலும் நான் தடையாக இருக்கக்கூடாது என்பதை ஏற்றுக்கொள்ள மனம் ஏனோ அச்சப்பட்டது. நான் ஏதும்  தவறக்கூடிய  சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேனா?, உறுதியாக எதையும் முடிவாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.  அம்மாவைச் சாதாரணமாக எதற்கும் எதிர்க்க முடியாது, அவரின் பாசத்தின் முன், எல்லாமே அடங்கிப்போய்விடும். எங்களைக் கட்டிப்போடும் ஆயுதம் , அது மட்டும்தான் அவரிடமிருந்தது.

                   இருந்தாலும், எங்கோ ஒரு மூலையில் அவளின் முகம் ஒழிந்துகொண்டு அடிக்கடி வந்து போனது. அழகிய அந்த கண்களும், அதற்கூடாக சொல்ல துடிக்கும் எண்ணங்களும், எனக்கு புரிந்திருந்தாலும் , வேண்டுமென்றே தற்காத்துக்கொள்ளும் நானும், சமநிலை படுத்த முடியாமல் எண்ணங்களும் ஏதோ ஒருவித மனச் சோர்வைத்  தந்திருந்தது.  என்னை நானே ஏமாற்றிக்கொள்கிறேனா?,விடை காணமுடியாது, தவிப்பாக இருந்தது. எழுந்து சென்று யன்னலுக்கூடாக வானத்தை வெறித்து பார்த்துக்கொண்டு நின்றேன், கூட்டமாக பறந்த பறவைகள், கலைந்து, இரட்டையாகப் பறந்து, ஒற்றையாய் தனியே பறந்துசென்றது.   வீசிய காற்றில் மடியில் கிடந்த பத்திரிக்கையின் பக்கங்கள் பட படத்தன, எண்ணங்கள் மீளவும் நியத்திற்கு திரும்பின.

                மடியில் இருந்த பத்திரிகையை கதிரையில் வைத்துவிட்டு எழுந்து, கேட் வரை நடந்தேன், வீட்டுக் கேற்றினை ஒட்டியதாய் அமைந்த ஒரு பொது நடை பாதையும் அதனை அடுத்து அமைந்த பிரதான பாதையும், நடை பாதை நெடுகிலும் சிறிய நிழல் மரங்களும்  பரபரப்பான இடமாக இருந்தாலும் , ஒரு அமைதியான அழகினை அவ்விடத்துக்கு தந்திருந்தது. எனது சிறுவயதிலிருந்தே  ஒரு ஆழமான நெருக்கத்தை    இந்த சூழல் என்னுடன் பேணி வந்தது , ஒரு    வருடத்தின், சில மாத காலா இடைவெளியினுள், ஊதா நிற பூக்களை இலை தெரியாமல் பூக்கும், ஒரு நிழல் மரம், அந்த நடை பாதைக்கு அருகே இருந்தது. நாள் முழுவதும் அப்  பூக்கள் விழுந்தவண்ணமே இருக்கும். தரை முழுவதும் பூக்கள் நிறைந்து கிடப்பது மிகுந்த அழகு. பாடசாலை செல்லும் நாட்களில் , அம்மரத்தின் அருகே நின்று பஸ் ஏறுவதற்குள், மரத்திலிருந்து விழுந்துகொண்டிருக்கும் பூக்களை ஓடி ஓடி கைகளால் பிடிப்பது அப்போது  ஒருவித சந்தோஷத்தைக் கொடுக்கும். சில வருடங்களின் முன்னர்தான் பிரதான வீதியின் விஸ்தரிப்பின் போது அதனை வெட்டி அகற்றப்பட வேண்டியதாயிற்று, ஆனாலும் அந்த நினைவுகள் இன்னும் பசுமையாகவே இருக்கின்றன.

                                          அந்த மரமிருந்த இடத்தினை  ஒருதரம் பார்க்கவேண்டும்போல் இருந்தது. அவ்விடத்தில்தான் அவளை, இறுதியாக சந்தித்தது ஞாபகமாக உள்ளது. பல்கலைக்கழக விடுதியில் இருந்து விடுமுறை ஒன்றிக்காக வந்திருந்த நேரம், ஒரு காலை நேரம், பொழுது போக்காக வீதி புதினம் பார்ப்பதற்காக கேட் அருகில் நின்றிருந்த வேளையில், அம் மரத்தின் அருகில் அவள் நடந்து வருவது தெரிந்தது, “ம் ..கண்டால் எதாவது கதைக்காமல் விடமாட்டாள்” என்று மனதுக்குள் எண்ணியபடி, என்முன்னால் நடந்து செல்லும்வரை காத்திருந்தேன். எதிர்பார்த்த அந்த கணங்களுக்குள் அவள் வரவில்லை, கேட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது, அந்த மரத்தடியில் நின்றவண்ணம் என்னை பார்த்து என்னை அவ்விடம் வருமாறு தலையை அசைத்து, சைகை செய்தாள். என்னவாக இருக்கும் என என்னால் எதையும் யூகித்துக்கொள்ள முடியவில்லை. கேட்டை திறந்துகொண்டு வெளியே வந்து, அவளருகில் சென்று “என்ன?” என்றேன். வழமையான அந்த குழந்தைத்தனமான முகபாவம் காணாமல் போயிருந்தது, நிறைய நாள்கள் துங்காதவள்போல் இருந்தாள். ” எப்பாவந்தனீங்க?” என்றாள், அதுவும் அதிக யோசனையின் பின் வருவதுபோல் இருந்தது. ” நேற்று…ஏன்?” என்றேன். ” இல்ல …ஒரு மூணுநாளா ….உங்களோட கதைக்கும் போல இருந்தது ….நேற்றும் வந்தான் ..காணல்ல”, என்றாள். “ம்…” என்றபடி , மதிலில் ஒரு காலினைஊன்றியபடி சாய்ந்து ” என்ன ஏதும் அவசரமோ?” என்றேன். கை விரல்களை இணைத்தபடி ,பெருவிரலால் உள்ளங்கையை அமர்த்தியபடி அவள் இருந்தது, ஏதோ ஒரு மனக்  குழப்பத்தில் அவள் இருப்பதை உணர்த்தியது .  “பிரயாண களைப்பில நான் வெளிய எங்கேயும் வரல, ம்……..என்னெண்டு சொன்னால் தானே எனக்கு தெரியும்.” என்றேன். ” எனக்கு என்னென்று சொல்ல தெரியல்ல…..சொல்லவும் வருகுதில்ல… உங்களுக்கு என்னப் பிடிக்குமா?.”, என்றுவிட்டு  தலையை தாழ்த்திக்கொண்டாள், என்னை நிமிர்ந்து பார்க்க முடியாதவளாய் மிகவும் தவித்தாள்,  ” பிடிக்கும் , ஒரு நட்பு என்ற நிலையில, ஏன்? …இப்ப இந்த கேள்வி” என்றேன். ” இல்ல …ஒன்றுமில்லை …” என்றபடி நடக்க முட்பட்டாள், கண்கள் சற்று சிவந்திருந்தன. ” பொறும்..இப்படி ஒன்றுமில்லை என்று போனா, நான் , எதை யோசிக்கிறது “, என்றேன்.  ” வீட்டில கல்யாணம் பேசுறாங்க,.. வெளில அனுப்பவாம்,..என்னக்கு போக பிடிக்கல்ல..” என்றபடி என்னை நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய பார்வையை எதிர் கொள்ள முடியாமல், பார்வையை தவிர்த்துக்கொண்டேன். அவளுக்கு என்ன பதிலை சொல்வதென்று முடிவெடுக்க முடியவில்லை. எந்தொருவகையிலும் அவளுக்காதரவான ஒரு பதிலையும் கொடுக்கவும் முடியவில்லை. அந்தக் குழந்தைத் தனமான பார்வையும், சிரிப்பும் எங்கோ மறைந்து போயிருந்தன, இந்த சூழ்நிலைக்குள் இருந்து எவ்வாறு வெளியே வருவதென்ற தவிப்புத்தான் இவ்வாறு என்னிடம் கேட்க தோன்றியதோ என மனதுக்குள் எண்ணிக்கொண்டேன்.  மீண்டும் அவள், ”  உங்களுக்கு என்னப்   பிடிக்குமா ?”, என்றாள். ” இல்ல எண்டு சொல்லமாட்டான், பிடிக்கும் , ஆனா என்னால, உனக்கு என்ன சொல்லுறதென்று சொல்ல முடியல்ல” என்றேன். ” மன்னிக்கணும், நான் சொல்லுறத சரியாய் புரிந்து கொள்ளுங்க, நான் எந்த நிபந்தத்தையும் உங்களுக்கு தரல்ல, மிக நீண்ட காலமாக ஒருவருக்கொருவரை தெரியும், சந்திச்சிருக்கிறம், கதைச்சிருக்கிறம் ……உங்களை எனக்கு பிடிக்கும், உங்களுக்கு சிலசமயம் என்னில் விருப்பம் இருந்திருந்தா , அத என்னட்ட சொல்ல சந்தர்ப்பம் இல்லாம போய் இருந்தா அதுதான் ……கேட்டனான், நான் கேட்டது பிழை என்றா மன்னிச்சிகொள்ளணும்.” என்றாள். எதோ என்னிடம் முழுவதும் ஒப்பித்துவிட்டது போல மூச்சு வாங்கினாள். என் மீது கவனம் இருந்தாலும் என்னை பார்வையை எதிர் கொள்ள முடியாதவளாய் இருந்தாள். என்னிடம் தெரிந்த  சிறு அசைவுகளுக்கும், நான் ஏதும் சொல்ல முயற்சிக்கிறேனா என எதிர் பார்த்தாள். “யோசித்து சொல்லுறன் என்றா, அது எனக்கு தேவையான பதில் இல்லை, அதுல நான் எதிர்பார்த்த உண்மையான உங்களுடைய விருப்பம் இருக்காது. உங்களுடைய வாழ்க்கைல எனக்கொரு சந்தர்ப்பம் இருக்குமா? இருக்காதா?, என்ற ஒரு ஆசை, அவ்வளவுதான்” என்றாள், எனது கண்களில் நீர் முட்டிக்கொண்டிருந்தது. எதுவும் பேச முடியாதவனாய் நின்றேன். ” வரவா , வாறன் , நான் இப்படி வந்து கேட்டதுக்கு மன்னிக்கணும், எனக்கு வேறுவழி தெரியல்ல , வீட்டில உங்கட நிலைமை என்னென்று என்னக்கு விளங்கும், எங்கட வீட்டில என்னென்னவோ எல்லாம் சொல்லிப் பாத்திட்டான், அவங்க யாருக்கும் அக்கறை இல்லை…..” என்றபடி கண்களை துடைத்துவிட்டு, என்னை பார்த்தாள், அந்த அழகிய கண்களை நான் உற்றுப் பார்த்தபடி கண்களை மூடிகொண்டேன்.  தலையை மெதுவாக அசைத்து ” சாரி ” என்றேன், ” ம் ” என்றபடி , அவ்விடத்தை விட்டு மெதுவாக என்னை திரும்பி பார்க்காமலே நடந்து சென்றாள். தெரு வளைவில் அவள் மறைந்துகொள்ளும் வரை பார்த்தபடியே இருந்தேன். கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது, துடைத்து விட்டாலும், மீண்டும் கண்கள் கண்ணீரால் நிறைந்துகொண்டது, மூச்சு சூடாக வெளியேறியது. நான் இவ்வளவு இறுக்கமானவனா?, என்னாலே என்னை நம்பமுடியவில்லை, கேட்டை  திறந்துகொண்டு உள்ளேவந்தேன். சமையல் அறையில் அவர்கள் உள்ளது தெரிந்தது, மாடிப் படிகளில் கால் வைக்கும் போது, என்னை அறியாமலே அழுகை வந்தது. அறைக்குள் வந்து கட்டிலில் சாய்ந்துகொண்டபோதும் , நடந்த நிகழ்வுகளின் தாக்கம் இன்னும் அதிகமாக இருந்தது. ” உன்னை எனக்கு நன்றா பிடிக்கும், ஆனா நான் கொடுத்துவைக்கல்ல” என்று எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன். எதோ யாருக்கும் தெரியாமல் கொலை ஒன்று செய்ததுபோல இருந்தது. பலநாட்கள் கனவுகளில் இந்த நிகழ்வு பலவடிவங்களில் என்னை பயமுறுத்திக்கொண்டிருந்தது.

    இந்நிகழ்வின்பின் அவளை எங்கும் காணமுடியவில்லை, மீண்டும் ஒரு விடுமுறை காலத்திட்க்கு  வீடிற்கு வந்தபோது அக்காதான் சொன்னால்,” அந்த போஸ்மாஸ்டர்ட மகளுக்கு இந்தியாவில பதிவு நடந்து , போனகிழமைதான் டென்மார்க் போனவளாம், உனக்கும் தெரியும் டா அந்த பிள்ளையை, இதாலதான் அடிக்கடி போய்வருவாள், நல்ல அடக்கமான பிள்ளை. அம்மாவுக்கும் அந்த பிள்ளையில ஒருகண் இருந்தது, உனக்கு குடுத்துவைக்கலையோ இல்ல அவளுக்கு   குடுத்துவைக்கலையோ தெரியாது, இருந்தா நல்ல சோடிபொருத்தமாக இருக்கும் என்ன? ” என்றபடி என்னைப் பார்த்தாள். ஒருகணம் உலகமே இருண்டு வருவது போல இருந்தது.என்னை கட்டுப்படுத்திக்கொள்ள மிகவும் கடினமாக இருந்தது, அருகில் இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டு , ” ம்” என்றேன் எந்த ஒரு உணர்வும் இல்லாமல். ” ஏன் டா, நான் இவ்வளவு கதைக்கிறேன், நீ என்னவோ ம் சொல்லுறாய், அப்ப உனக்குத்தான் கொடுத்துவைக்கல்ல” என்றபடி நகர்ந்தாள்.

                                             கசக்கி மூலையொன்றில் எறியப்பட்ட காகிதம்போல் , தேடுவராற்று கிடப்பதுபோல் இருந்தது. மீளத் திருத்தி எழுதமுடியாது, ஏறுக்கொள்வதில்தான் பிழைத்தல் தங்கியுள்ளது. எதிர்காலம் தனக்கொரு வழியை வைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. முடிந்தால் சுத்தகரித்துக்கொண்டு சேர்ந்து செல்வது இல்லையேல் மடிந்துபோவது, எமக்காக அது ஒருதடவையேனும்  தனிப்பட்ட முறையில் திரும்பிகூடப்பார்க்காது.

                                   “ஏன்டா ஒருமாதிரி இருக்கிறாய், என்ன?, நான் சொன்னது பிடிக்கலையா, சும்மா விடுடா ஸ்ரீதேவி இல்லாட்டி ஸ்ரீபிரியா, உனக்கென்ன, இனியா பிறந்து வர போகுதுகள், இங்க, உன்ட சேர்ட் எல்லாம் பழசாப் போய்கிடக்கு, பின்னேரம் வா , ஒருதரம் குமரனுக்கு போய்வருவம்” என்றாள். ” கொண்டுவந்த   சேர்ட் எல்லாம் கழுவி போட்டுத்தன், பழசு பட்டு போய்கிடக்கு, இரண்டு மூண்டு வாங்கி குடு பிள்ளை, அவன் வாயத் திறந்தொண்டும் கேக்கமாட்டான்”, என்றபடி அம்மா, எனது  காயப்போட்டிருந்த  சேர்ட்களை எடுத்துக்கொண்டு கிணற்றடி பக்கம் இருந்து,  மண்டபத்திற்குள் வந்தார். ” இப்ப நேரம் இருந்தா இரண்டுபேரும்  போயிற்றுவங்க” என்றார். எனக்கும் வெளியே எங்காவது போகவேணும் போல இருந்தது.” இப்ப போவமா”  என்றேன். ” வாடா, இப்பவும் நாங்கதான் தேடி தர வேணும், இண்டைக்கு நீயேதான் தெரிஞ்சி எடுக்கவேணும்.”, என்றபடி ஆயத்தமானாள்.

                              “குமரன் சில்க்ஸ்”, வீட்டின் முன்னுள்ள பிரதான வீதியின் மறுகரையில் இருந்தது, அந்த வீதியிலே ஒரு பெயர் சொல்லக்கூடிய அளவில் விலாசமான காட்சி அறையுடன் அமைந்திருந்தது. நீண்டகாலமாக எங்களது குடும்பத்தை அறிந்தவர்கள் என்பதால், போகும்போது தனிப்பட்ட வரவேற்பும் நல்ல தெரிவுகளை எடுத்து போடுவதிலும் பின்னிற்கமாட்டார்கள். தீபாவளியை முன்னிட்டு நிறைய ஆடைகள் வந்திருந்தன, எனக்கான   சேர்ட் தெரிவுகளில் அக்காதான்  முன்னின்றாள், ” நீ எப்பவும் இந்த மங்கின கலர்தான் எடுப்பாய், கொஞ்ம் வெளிப்பன கலராபோட்டுப்பார் எவ்வளவு எடுப்பாக இருக்கும். வந்து வாய்க்கணும் எனக்கொரு மச்சாள், உனக்கு பார்த்து பார்த்து எடுத்துத்தர” என்றபடி என்னை பார்த்து சிரித்தாள். எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.”பிடிச்சிருக்கடா,  நீ இப்படியெல்லாம் எடுக்கமாட்டாய்” என்றாள். ” ம் ” என்றபடி அவளுக்கு பின்னால் நடந்தேன். “ஒரு சாறி எடுக்கிறதென்ற நூறு சாறிய எடுத்து குலைச்சு போடுவம், எடுக்கிறத சரியாய் தெரிஞ்சி எடுத்திரவேணும்,” என்று தனக்குள் கூறிக்கொண்டே நடந்தாள். அவள் பின்னே விரைவாக நடந்து செல்லும்போது யாரோ கையால் தட்டுவது போன்று தெரிந்தது. திரும்பிப்பார்த்தேன். காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த மெலிந்த உயரமான ,அழகான சுடிதார் அணிந்த மனிதப் பொம்மை, அழகாக அபிநயித்தபடி, ஆடிட்க் கொண்டிருந்தது, விழுந்துவிடுமோ என்றபடி அதன் கையை பிடித்து நிறுத்தியபடி , அதன் முகத்தினை பார்த்தேன், என்னையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பது போலிருந்தது, அதே கண்கள், அதே பார்வை , எப்படி இது சாத்தியமானது, கண்களில் கண்ணீர்முட்டிக்கொண்டு வந்தது, தலையை குனிந்த படி மன்னிச்சிக்கொள் என்று வாய் முணுமுணுத்தது , பொம்மையின் பாதத்தில் கண்ணீர் துளியாய் துளித்துளியாய் விழுந்து கொண்டிருந்தது. ” என்னடா , அங்கேயே நிற்கிறாய் , வா போகலாம்”, என்ற அக்காவின் குரல், தூரத்தே ஒலித்தது, மீண்டும் பொம்மையை பார்த்துவிட்டு , தலையை குனிந்து கண்களை துடைத்தபடி வெளியேவந்தேன்.  திரும்பி பார்த்தேன், கண்ணாடி அறைக்குள் இருந்து என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை போல் இருந்தது. ” நான் எங்கும் போகல்ல உனக்காக இங்கே இருக்கிறேன்”, என சொல்வதுபோல் இருந்தது.

                                      அம்மா        வெளிவாசலுக்கு வந்தபடி ” அங்கென்ன செய்கிறாய் , சமையல் முடிஞ்சிது, வாவன்… சாப்பிட்டுத்து..கொஞ்சம் கண் அயர்ந்தா, நல்லா இருக்கும்” என்றார். அம்மாவின் குரலை கேட்டு திரும்பி, என்னை சுத்தகரித்தபடி ” வாறன் “, என்றேன். இவ்வளவு நேரமும் கேட் அருகே இருந்து வீதியை பார்த்துக்கொண்டிருந்ததால், தார் வீதியில் எழுந்த வெப்பக்காற்றில் முகம் சூடாகியிருந்தது. கத்தா மர   நிழலில் குளிர்ந்துபோய் இருந்த சீமெந்து தரையில் நடந்து வீட்டுக்குள் வரும் போது,  மெதுவாக வீசிய காற்றில் குளிர்ச்ச்சி  இருந்தது. “நேரம் இப்பதான் பன்னெண்டாகுது, உனக்கு பிடிச்சமாதிரித்தான் தங்கம் சமைச்சிருக்காள், நல்ல குஞ்சுத் திராயும் கீரிமீனும் சேர்த்து சுண்டலும் செய்திருக்கிறாள், சின்னன்ல உன்னக்கு இது சரியான விருப்பம், தெரிஞ்சி வைத்துக்கொண்டுதான் வாங்கிவந்திருக்கிறாள், அங்க ரவுணிலை இதெல்லாம் எங்க கிடைக்கப்போவுது, இப்படிவந்ததான் உண்டு “, என்றபடி  சாப்பாட்டு மேசையின் கதிரை ஒன்றை இழுத்தபடி , ” போய் முகத்தை கொஞ்சம் அலம்பி கழுவித்து வா , அலுப்பு தெரியாம நல்லா சாப்பிடலாம்” என்றார். உண்மைதான்  சாப்பிடமுன் கொஞ்சம் முகம் கை கால்  கழுவிற்று இருந்தால் நன்றாகவே இருக்கும். இது அவரின் அனுபவம். எமக்கும்தான். எவ்வளவோ மணமும் சுவையும் சாப்பாட்டில் இருந்தாலும், யாருக்காக சமைக்கிறார்கள் என்பதிலேயும் கை பக்குவத்திலும்தான் அதன் உள்ளடக்கம் தங்கிருக்கும், இங்கு அதற்கு எந்த குறையும் இருக்காது. இன்று என்னவோ என்னை அறியாமல் ஏற்படட மனக்குழப்பங்கள் வீட்டு சூழலுடன் ஒட்டிக்கொள்ளாமல் இருந்தது. ” எப்படிடா …நாட்டுக்கோழி கறி, நல்லா அரச்சாக்கியிருக்கு …நல்லமா  , திராய் எப்படி , போகக்குள்ள கொஞ்சம் கட்டித்தாறன் .. மருமகளுக்கும் பிள்ளைளுக்கும் கொடு, அங்க எல்லாம் இதுக்கு எங்க நேரம் இருக்கப்போவுது, கிடைக்கிறத அவிச்சு போட்டுத்து போறதான் என்ன, ஆ …அப்படித்தானே.”, என்றார் அருகில் வந்து அமர்ந்தபடி. ” எல்லாம் நல்லா இருக்கு அம்மா,   கட்டித்தாங்க கொண்டுபோறன்,” என்றேன் ஒரு ஒப்புதலுக்கு. உண்மையிலே சமையலில் எந்த குறையும் இல்லை குறை என்னில்தான் என்பதை உணர்ந்துகொண்டேன். ” என்ன மூன்று மணிக்கா கூட்டம் இங்கைருந்து போக ஒரு பதினைஞ்சு நிமிடம் போதும் என்ன .. நீ மேல போய் படு …ஒரு ரெண்டேகால் போல எழுப்பி விடுறன், ” என்றபடி எனது தட்டினை எடுத்துக்கொண்டு சமையலறை பக்கம் சென்றார்.

                          படிகளில் ஏறி அறையை அடைந்ததும் , திறந்துகிடந்த யன்னலூடாக காற்று நன்றாக வீசிக்கொண்டிருந்தது, அம்மா சொன்னதுபோல கொஞ்சம் தூங்கினால் நன்றாக இருக்கும் என்றபடி கட்டிலில் சாய்ந்துகொண்டேன், வீசிய காற்றில் என்னை அறியாமலே அயர்ந்துவிட்டேன். ” மாமா ” ..என்ற சத்தம் , தூக்கத்தினை நகர்த்தியது. எதிரே அக்காவின் மகள் பிருந்தா நின்றுகொண்டிருந்தாள், ” அம்மம்மாதான் எழுப்பிவிட சொன்ன மாமா ….காலைலயா வந்த …வருவீங்க என்று தெரிஞ்சிருந்தா ஸ்கூலுக்கு போகாம நின்றிருப்பான் “, என்றபடி அங்கிருந்த கதிரையில் அமர்ந்துகொண்டாள். ” இப்பதான் வந்ததா …எப்படிப்போகுது …படிப்பெல்லாம்.” என்றேன், ” நல்லம்…மாமா.. எக்ஸாமில் நல்லா மாக்ஸ் எடுத்திருக்கிறேன்  ” என்றாள். ” அம்மா உயர்தரத்தோட படிப்பை நிறுத்திட்டா …அது அந்த காலம் …இப்ப இங்க எல்லாவசதியும் இருக்குதானே ..நல்லா படிக்கவேணும்…என்ன” என்றேன், தலையை ஆட்டி” ஆம்” என்பதுபோல சைகை செய்தாள். ” வரக்குள்ள மாமியையும் பிள்ளைகளையும் கூட்டி வந்திருக்கலாம்தானே…எவ்வளவு காலம் நேர்லபார்த்து….அடுத்த முறை  வரக்குள்ள …கட்டாயம் கூடிவரனும் என்ன” என்றபடி தலையை சரித்தபடி இரங்கிக் கேட்டாள். “சரி ..கட்டாயம் கூட்டிவா றன்”, என்றதும் , “ம்..” என்றுவிட்டு ,படிகளில் துள்ளித் துள்ளி இறங்கி ஓடுவது கேட்டது. குழந்தை பருவம் …கவலைகள் இல்லாமல் அமைந்துவிடவேண்டும் ,  சமூகம் தொடர்பான அக்கறையான  பார்வை  அவர்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படும், கிடைத்ததைதானே வழங்கமுடியும்.

    புறப்படுவதற்கு ஆயத்தமானேன், யன்னலை மூடிக் கொள்வதற்கு யன்னல் அருகே நெருங்கி எதிரே இருந்த” குமரன் சில்க்ஸ்” இன் அந்த பிரமாண்டமான காட்சி அறை தெரிந்தது, எனது கண்கள் அந்த காட்சி பொம்மையை தேடியது. என்னால் மிக இலகுவாக அதனை அடையாளம் கண்டுகொள்ள முடியும், அந்த அபிநயம் , அந்த உடல் வாகு, எனது கண்கள் உன்னிப்பாக தேடிக்கொண்டு வந்தது. சற்று நேரத்தில்  கண்கள் அந்த காட்சியில் நிலைத்து நின்றது.  உயரமாக அழகிய உடை அணிந்த ஆண் பொம்மை  அதனருகே நன்றாக சேலை அணிந்து நின்றது அந்த  பொம்மை , இரண்டினதும் காலருகே ஆணும் பெண்ணுமாக இரண்டு சிறு குழந்தை பொம்மைகள், ஒருகுடும்பமாக ……….ஆச்சரியமாக இருந்தது, எனக்குள்ளே சிரித்துக்கொண்டேன் …அந்த பெண் பொம்மையின் பார்வை அந்த ஆண் பொம்மையை நோக்கி இருந்தது.  யன்னலை மூடிக்கொண்டு படிக்கட்டுகளால் இறக்கிவந்தேன், மனம் நன்கு தெளிவாக இருந்தது…….

      ( முற்றும்)

    Share
  • முதுகில் ஒரு குத்து

    நிர்மலா ராகவன்

     

    ஆராவமுது தன் டி.வி. சேனலின் வருமானத்தைப் பெருக்க வழி தேடிக்கொண்டிருந்த போதுதான் செந்தில் அந்த யோசனையைச் சொன்னான்.

    “அப்பா! எத்தனையோ பேருக்கு வெளியூருக்குப் போய் சுத்திப்பாக்க  ஆசை. ஆனா வசதி கிடையாது. ஒவ்வொரு மாநிலத்திலும் ரெண்டு மூணு  இடத்திலே பந்தயம் வெச்சு   இழுத்தடிக்கலாம்!”

    மலை ஏறி, பிறகு ஒரு கம்பியில் படுத்த நிலையில் ஆற்றைக் கடந்து,  மற்றும்  பிடிப்பிடியாக நெல்லை அள்ளி, (வழியில் இரு `பூதங்கள்’ அவர்களை மறித்து, பிடித்துத் தள்ள)  சேற்றில் ஓடி, அதற்கென வைக்கப்பட்டிருந்த கூடையில் நெல்லை நிரப்பி – இப்படி மனிதர்களின் உடல்பலம் மனோபலம் இரண்டையும் ஒருங்கே பரிசோதிக்கும் போட்டி அது. அமெரிக்காவில் பார்த்த நிகழ்ச்சியின் அப்பட்டமான காப்பி.

    பந்தயத்தில் ஜெயித்தால் பத்து லட்சம்!

    பல கிலோமீட்டர் நீளத்திற்கு வரிசை பிடித்து நின்றார்கள் எதிர்கால லட்சாதிபதிகள்.

    “பத்து வருடங்களாகியும் எங்களுக்குப் பிள்ளைப்பாக்கியம் இல்லை. அதற்கான சிகிச்சைக்குப் பணம் கிடைக்கும் என்ற ஆசையில்தான் இப்போட்டியில் சேர்ந்திருக்கிறோம்!” என்றாள் பூரணி. பருமனாக இருந்தாள். கணவர் புஜபராக்கிரமத்துடன் இருந்தார். வயது நாற்பதுக்குள்தான் இருக்கும் என்றாலும்,   அவர்களால் ஒன்றாக ஓடமுடியுமா? இல்லை, விரைவாக நடக்கத்தான் முடியுமா?

    `பாக்கிறவங்களுக்கு எல்லாரும் ஒரேமாதிரியாக இருந்தா அலுப்பு தட்டும்!’ என்ற செந்திலின் யோசனை அவர்களுக்குத் தெரியாது. “நம்பளை போட்டியிலே சேர்த்துக்கிட்டாங்க!” அப்போதே குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டது போல் பூரணி குதித்தாள்.

    அழகுப்போட்டியில் வென்ற இரு பெண்கள், விளையாட்டு வீரர்களான இரு இளைஞர்கள், குண்டும் ஒல்லியுமாக இரு ஆப்த நண்பர்கள்  என்று பத்து ஜோடிகளும் வெவ்வேறு விதமாக இருந்தார்கள்.

    “இரண்டு வயதான என் மகனுடைய இருதயச் சிகிச்சைக்கு வேண்டிய வசதி என்னிடம் இல்லை. அதற்காகத்தான் பெயர் கொடுத்தேன்.  என் உயிர்த்தோழி வந்தனாவும் என்னுடன்   பங்குபெற வந்திருக்கிறாள்!” என்ற கல்பனா வேறு மாநிலத்திலிருந்து வந்திருந்தாள். கணினித்துறையில் பட்டம் பெற்றிருந்தாள். பூரணியைவிட பத்து வயதாவது இளையவளாக இருப்பாள். போட்டி துவங்கியது. பல கேமராக்கள் ஒவ்வொருவரையும் தொடர்ந்து ஓடியபடி இருந்தன. வார இறுதியில் ஒரு மாநிலத்திலிருந்து வேறொன்றிற்குப் போகவேண்டும்.

    `கல்பனாவையும், வந்தனாவையும்பற்றி நாம் தவறாக முடிவெடுத்துவிட்டோம்!’ என்று பிற போட்டியாளர்கள் பொறாமையுடன் முணுமுணுக்கும் வகையில் ஆறில் நான்கு இடங்களில் அக்குழு முதலாவது இடத்தைப் பிடித்திருந்தனர்.

    பூரணிக்கோ, அவள் எண்ணியதுபோல, இலவச சுற்றுலாப் பயணம்போல் இருக்கவில்லை அந்த அனுபவம். மூச்சு வாங்கியது. காலை விந்தித்தான் நடக்க முடிந்தது.

    “அவங்களுக்கெல்லாம் வயசாகலே! குரங்குமாதிரி ஏறிக் குதிக்க முடியுது!” என்று பொருமினாள். “திரும்பப் போயிடலாமா?” என்று மனைவியைக் கேட்டார் பரசுராமன், அனுதாபத்துடன்.

    “அதெல்லாம் முடியாது!” அவள் குரல் தீர்மானமாக ஒலித்தது.  ஏழாவது மாநிலத்தில், `இந்த இரண்டு விளையாட்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்!’ என்ற அறிவிப்பு இருந்தது.  அது மட்டுமா!

    அதில் ஒன்றை முடித்ததும், அடுத்ததற்குப் போகமுடியாது, ஆங்கில எழுத்தான `U’ ஒரு கரும்பலகையில் வரையப்பட்டு இருந்தது. முதலில் போகும் குழு வேறு ஒரு குழு உறுப்பினரின் பெயர்களை மேலே எழுதி, தம் பெயரையும் பகிரங்கப்படுத்தி விட வேண்டும்.  அப்படிச் செய்தால், மேலே இருப்பவர்கள் இரண்டையும் முடித்தாகவேண்டும்.

    (`இதெல்லாம் அவசியமாடா? துரோகமில்ல?’ என்று ஆராவமுது தயங்கியபோது, ` இந்தமாதிரி ஏதாவது ஸ்டண்ட் செஞ்சாத்தான் எல்லாரும் இதைப்பத்தியே பேசுவாங்கப்பா. நம்ப ரேடிங்க் மேலே போகும்,’ என்று அவரைச் சம்மதிக்க வைத்திருந்தான் மகன்).

    `இது அசிங்கம்!’ என்று வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு, ஒருவரும் கரும்பலகையில் மற்றவர் பெயரை எழுதவில்லை.

    இறுதிச்சுற்று நான்கே குழுக்களுடன் ஆரம்பித்தது. உடலில் அடி, மிகவும் தாமதமாக வந்தார்கள் என்று மற்றவர்கள் விலக்கப்பட்டு இருந்தார்கள்.

    “கால் விரல்லே உணர்ச்சியே இல்லை!” என்று முனகியபடி பூரணி மலைமேல் ஏறமுடியாது உட்கார்ந்தாள்.  இவ்வளவு தூரம் கடந்ததே அதிசயம் என்று தோன்றியது பரசுராமனுக்கு. “எதுக்கும்மா  இந்த விபரீத விளையாட்டு? போதும்னு போயிடலாமே!” என்றார். அலைச்சலில் பூரணியின் இடுப்பில் சதை அவ்வளவாகத் தொங்கவில்லை என்பது மட்டும்தான் திருப்திகரமாக இருந்தது.

    “அதெல்லாம் முடியாது!” அவள் குரல் மீண்டும் தீர்மானமாக ஒலித்தது. “அது ரெண்டும் எங்கே காணோம்?” “யாரைக் கேக்கறே?”

    “கல்பனா, வந்தானாவைத்தான்!”

    “பாவம்!  நாம்ப வந்த பஸ்ஸிலே அவங்களுக்கு இடம் கிடைக்கலே.  வந்து சேர இன்னும் அரைமணியாவது ஆகும்”.

    “அப்பாடா! இப்பத்தான் எனக்கு நிம்மதியாச்சு. கிளம்புங்க. ஓய்வா இருக்கவா இங்கே வந்திருக்கோம்?” என்று அவரை விரட்டியபடி,  புதிய உற்சாகத்துடன் எழுந்தாள் பூரணி. கால்வலி போன இடம் தெரியவில்லை.  வழியில் ஒரு U!

    வழக்கம்போல் அதைக் கடந்துபோன கணவரை, “கொஞ்சம் இருங்க,” என்று தடுத்தாள் பூரணி. அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து, “எதுக்கு பூரணி?” என்று தடுக்கப்பார்த்தவரிடம்,   “இது பந்தயம். இங்கே  உணர்ச்சிங்களுக்கு இடம் குடுக்கக் கூடாது!” என்று மிரட்டலாகக் கூறியபடி, கல்பனா, வந்தனா என்று எழுதினாள்.

    பஸ் நிறுத்தத்தில் கியூவில் தங்களுக்கு இருபது இடங்களுக்கு முன்னால் நின்றிருந்த கல்பனாவிடம், `என் மனைவிக்கு நிக்கவே முடியவில்லை. ஒங்க இடத்தைக் கொடுத்தா நல்லாயிருக்கும்,’  என்று அவர் கெஞ்சியபோது, சற்றும் யோசியாது, `அதுக்கென்ன!’ என்று பெருந்தன்மையுடன் பின்னால் போன இளம்பெண் பரசுராமனின் நினைவில் எழுந்தாள். 

    வழக்கம்போல், அசுரவேகத்தில் பல தடைகளைக் கடந்துவந்த கல்பனா தன் குழுவின் பெயர் அங்கே எழுதப்பட்டிருப்பதைக் கண்டு அலறினாள்.

    “ஐயோ! இப்படி எங்கள் முதுகில் குத்த அவர்களுக்கு எப்படி மனம் வந்தது!” என்று கதற ஆரம்பித்தாள்.

    “திரு, திருமதி பரசுராமன்! வாழ்த்துகள்! நீங்கள் போட்டியில் முதலாவதாக வந்திருக்கிறீர்கள்!” என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் முகமெல்லாம் சிரிப்பாகக் கூறினார்.

    `இந்த மனிதர் சொன்னதைக் கேட்டு அவங்க பேரை எழுதாம இருந்திருந்தா?’ என்று எழுந்த எண்ணத்தை ஒதுக்கினாள் பூரணி. பொது இடம் என்றுகூடப் பாராது, கணவரைக்  கட்டி அணைத்துக்கொண்டு, முத்தமாரி பொழிந்தாள்.

    அவரால் அவளுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. குற்ற உணர்ச்சி மிகுந்தது.  அதற்கடுத்த வாரம் பரிசளிப்பு விழா. பத்து குழுக்களுக்கும் அழைப்பு அனுப்பி இருந்தார்கள். வந்தனாவின் வற்புறுத்தலால்  கல்பனாவும் வேண்டா வெறுப்பாக வந்திருந்தாள். பூரணியைப் பார்க்கவே பிடிக்காது, தலையை அதீதமாகக் குனிந்துகொண்டாள்.

    “பரிசுத்தொகையான பத்து லட்சம்..,” அறிவிப்பாளர் சற்று நிறுத்தி, ஒவ்வொரு குழுவினரையும் ஒரு பார்வை பார்த்தார்.  வாய் கொள்ளாத சிரிப்புடன், பூரணி எழுந்திருந்தாள்.

    “அத்தொகை கல்பனா-வந்தனா குழுவிற்கு அளிக்கப்படுகிறது!”  மேடையில் அமர்ந்திருந்த ஆராவமுது தலையை ஆட்டினார், அதை அங்கீகரிக்கும் வகையில்.

    “இதென்ன அநியாயம்! நாம்பதானே ஃபர்ஸ்ட் வந்தோம்!” என்று கணவரிடம் உரக்க முறையிட்டவளை “ஷ்!” என்று அடக்கினார் அவர்.

    (`அநீதிக்கும் ஏமாற்றத்துக்கும்  துணைபோகும் உங்கள் சேனலுக்கு இனி சந்தா கட்டமாட்டோம்’ என்று போட்டி முடிவை ஒருங்கே எதிர்த்த தொலைகாட்சி நேயர்களின் சீற்றத்துக்குப் பயந்து முடிவை மாற்றியதற்காக சேனலின் சொந்தக்காரரான ஆராவமுது தன்னைத்தானே பாராட்டிக்கொண்டார்.

    `நம்ப நாட்டு ஜனங்க இன்னும் தர்மம், நியாயம்னு கெட்டியா பிடிச்சுக்கிட்டு இருக்காங்கப்பா. நான் அதை யோசிக்காம போயிட்டேன்!’ – செந்தில் தன் தோல்வியை ஒப்புக்கொண்டிருந்தான்).

    “இப்போட்டியின் நோக்கம்  உடல் வலிமை, மனவலிமை இரண்டை மட்டும் பரீட்சை செய்வதில்லை. மனிதத்தன்மை என்றும் ஒன்றிருக்கிறது! பிறருக்கு உதவி செய்யாவிட்டாலும், அவர்கள் காலை வாருவது என்ன தர்மம்?” யாரோ எழுதிக்கொடுத்ததை உணர்ச்சியுடன் பேசினார் ஆராவமுது . “சராசரி என்று எடுத்துக்கொண்டால், பத்து இடங்களில் ஏழு இடங்களில் முதல் இடம் பிடித்திருக்கிறது கல்பனாவின் குழு.  திட்டமிடும் திறனாலும், எந்த நிலையிலும் நிதானத்தை இழக்காத குணத்தாலும் இறுதிச்சுற்றிலும் அவர்கள் வென்றிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால்..,” வெளிப்படையாகக் குற்றம் சாட்ட விரும்பாது, குறிப்பாக பூரணியைப் பார்த்தார்.  அவளுக்கு அவமானமாக இருந்தது. உதடுகளை இறுக்கிக்கொண்டு, கடைக்கண்ணால் கணவரை நோக்கினாள்.

    ஒரு  பெருமூச்சு எழுந்தது அவரிடமிருந்து. அது நிம்மதியை வெளிப்படுத்திய பெருமூச்சு! குறுக்கு வழியில், நல்லவர் மனதை நோகடித்து… அப்படியாவது ஒரு குழந்தை பெற வேண்டுமா? பிறக்கும் குழந்தை ஏதாவது குறையுடன் பிறக்காது என்பது என்ன நிச்சயம்? “போகட்டும், விடுங்க! இந்த ஒலகத்திலே எல்லாருமே ஏமாத்துக்காரங்களா இருக்காங்க, ” என்று அவரைச் சமாதானப்படுத்துவதில் இறங்கினாள் பூரணி. 

    Share
  • நித்திரை தொடராமல் கனவில்லை

    தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,
    கோவை.

    நித்திரை தொடராமல் கனவில்லை

    ஒரு வடிவம் உருவகப்படுகிறது. நீட்டிப்பிடித்த கைத்தலங்களின் இரயில். ஓவர் பிரிட்ஜிற்கு நேராக தெற்கிலிருந்து வருகின்ற இரயில். மரணம், ஃபாஸ்பென்டர் கூறியதுபோல தண்மையானதா? என்று இப்போது தெரியும். ’ஆக்ஷன்!’ கைகள் அசைந்தது. கைவரிசை கடக்கத்தான் வேண்டியிருந்தது. கொஞ்சம் கூட ஈடுபாடில்லை. பாதி தூரத்தை அடையும் முன்பு ஷோர்ட் ஃப்ரீஸ் செய்து கடைசி டைட்டில் அதன் மேல் ‘தி என்ட்’. மனதிற்குள் ஒரு மின்வெட்டு பாய்ந்தது.

    எ ஃபிலிம் ஈஸ்…………, எ ஃபிலிம் ஈஸ்………….. எ ஃபிலிம்…………….

    நினைவுகள் அவ்வளவும் அடங்கியது. கண்களை இறுக மூடினான்.மறுபடியும் அதை திறப்பதற்குள் எலக்ட்ரிக் ட்ரெயின் சென்று விட்டிருந்தது. ஏதோ ஒரு பெண் நெருக்கமாகப் பின்னால் நிற்கிறாள். தோள்வரை நீண்ட முடி. கண்ணாடி. நீல நிற ஜீன்ஸும், பிங்க் நிற டாப்பும். மாநிறம். தோளில் பை. கையில் ஆந்த்ரே ஆர்கோவ்ஸ் கியின் நூல். லான்ட்மார்க்கிலிருந்து வாங்கியிருப்பாள் புதியதாக இருந்தது.

    ‘இங்கேயே பாத்தது என்னோட அதிர்ஷ்டம். நான் வீட்டுக்கு வருவதாக இருந்தேன்’ அவள் கூறினாள்.

    “எதுக்கு?” கேட்காமலிருக்க முடியவில்லை. நினைத்திருந்தால் கொஞ்சம்

    மென்மையாக மயமாகக் கேட்டிருக்கலாம். சத்தத்தின் உச்சத்தை அவள் கவனிக்கவில்லை.

    “அறிமுகப்படுத்ததா என் பேரு சோஃபி”. அவள் கைநீட்டினாள். இளமை அவளது விரல் நுனிவரை நிறைந்து நின்றது. அதன் வீர்யம் தெரிய வந்தது.

    “முழுப்பெயர் சோஃபி எஸ்தர் ஆண்ட்ரூஸ்”, என்று கையை விடுவிக்கும் முன்பு கூறினாள்.

    நல்ல பெயர் என்று கூடக் கூறவில்லை. அவள் பாலத்தின் கைச்சுவரில் சாய்ந்து நின்றாள். காற்று வீசியது. முடியைக்கட்டி வைத்திருக்கவில்லை. அவள் முடியொதுக்காமல் எதையோ சாதித்த நினைப்பில், நோர்த் உஸ்மான் ரோட்டில் உள்ள அசோசியேஷன் ஆபீஸிலிருந்து முகவரிதேடி அடைந்ததைப் பற்றி விளக்குவதற்குள், பாலத்தின் வழியாக மூன்று வண்டிகள் கடந்துபோயின. ஓவர் பிரிட்ஜில் எப்போதும் வழக்கம்போல உள்ள கூட்டம்தான். இரயில்வே டிராக்கின் இருபுறத்திலும் வாழ்க்கையின் இரம்பல் ஓசை. நகரச்சுற்றுவட்டாரத்தில் ஆங்காங்கே சின்னச் சின்ன ப்ளெக்ஸ் போர்டுகள். பல காட்சிகள். மங்கிய வெயில், வறண்ட காற்று. இரும்புப் பாதையின் வழிகள் மறுபடியும் நிறைந்தது.

    “சரி……”அறிமுகப்படுத்துவதை அப்படியே முடித்துக் கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் அவள் அதற்கு ஒத்துவரவில்லை. அவளிடம் ஒரு சி.டி. இருந்தது. என்ன சி.டி.? அவளே தயாரித்தக் குறும்பட சி.டி. ஓ………. விஷ்வல் கம்யூனிகேஷனில் டிப்ளமோ படித்திருக்கிறாள் நல்லதுதான். அவள் தோள் பைக்குள் கையிட்டு சி.டி.யை வெளியே எடுக்க முயற்சித்தபோது அவசரமாக விலக்கினேன்.

    “வேண்டா, பாக்க நேரமிருக்காது”.

    “இன்னக்கே பாக்கணும்னு இல்ல சார்”

    “நா … கொஞ்சம் பிசி”

    “தெரியும் சார்”. அவள் அதற்குள் சி.டி.யை வெளியிலெடுத்திருந்தாள்.

    “நா எதுக்கு இத பாக்கணும். ஏதாவது ஷோர்ட் ஃபிலிம் பெஸ்டிவெலுக்கு அனுப்ப வேண்டியதுதானே”.

    “அதில்ல சார்”

    “அப்புறம்”

    “அதிகமா யாரிடமும் நா இத காமிக்கல. சாரோட கருத்து என்னான்னு தெரியணும் அதுதா”…

    “என்னோட கருத்திலொண்ணும் பெரிய காரியமில்ல…… போம்மா…”

    மீண்டும் காட்சியில் இரயில் வண்டிகளும், தற்கொலைக்கு முயற்சிப்பவர்களும், காத்துக் கிடக்கும் இரயில் பாலங்களும் வந்தன. அங்கே தூரத்தில் ஏதோ சேரிக்கி அருகில் புகைச்சுருளுகள் உயர்ந்தது. சிதையிலிருந்து வந்ததாக இருக்காது. அப்படி இருந்தாலும் சொல்வதற்கில்லை.

    “சார்………”

    திரும்பிப் பார்த்தேன். சோஃபி எஸ்தர் ஆண்ட்ரூஸ் போகவில்லை. முகத்தில் ஒரு விண்ணப்ப பாவம்.

    “ஒரு ரிக்வஸ்ட் இருக்கு சார். சாவகாசமாக சி.டி.யை பாத்தபின்னர்,

    “நான் அதுக்குத் தகுதியுடையவள்னா மட்டும் போதும்”.

    “புரியல”

    “எனக்கு சாரோட அசிஸ்டென்ட் ஆனா பரவால்லேன்னு இருக்கு. என்னோட பெரிய ஆச சார் அது”

    சத்தமாக சிரித்துவிட்டேன், அப்படி சிரிக்க முடியுமென்று எதிர்பார்க்கவில்லை. அது கட்டுப்பாட்டை மீறி வந்தது. ஒரு திருடன் பயணியின் முன்பு குதித்தது போன்ற சிரிப்பு. அப்பெண்ணின் முகத்தில் ஆச்சர்யம் படர்ந்திருந்தது. கண்களின் பார்வை கூர்மையானது.

    “நா ஒரு படம் எடுத்து வருஷம் ஏழாச்சு, ஒனக்கு அது தெரியாது இல்லயாம்மா…”

    மறுபடியும் சிரிப்பு அடக்க முடியவில்லை. இப்படி சிரிச்சு ரொம்ப காலமாச்சு. நல்ல ஜோக்குகள் சமீபமாக கேட்பதேயில்லை. கொஞ்சம் சிரிப்பதற்காக தொலைக்காட்சி சேனல்களைத் தேடிப்பார்த்தால் அதுவும் எல்லா துக்கமாத்தான் இருக்கும். சோஃபி எஸ்தர் ஆண்ட்ரூஸ். சிரிக்க வைக்கக் கூடிய பெரிய திறனாளி.

    ஒத்துக்காமல் முடியல

    “லுக். ஐ ஆம் சீரியஸ். ஜோக்குக்காக சொல்லல”.அவளின் முகபாவம் மாறியது.

    ”வேறு யாருடனும் வேலைசெய்யவிருப்பமில்லை. காத்திருக்கத் தயார்.”

    “எவ்வளவு நாள்?”

    “எவ்வளவு நாள் வேணும்னாலும். டு பி ப்ராங்க். ஐ ஹேவ் எ டெரிபிள் பேஷன் ஃபோர் யு. சாரோட எல்லா படமும் எனக்குப் பிடிக்கும்.

    “அதெல்லாமே முழுக்க தோல்வியடைந்தவை. அதெல்லா தெரியாது இல்லையா?”

    “தியேட்டர்களில வேண்டிய அளவு ஓடலேங்கறதுக்காக, அதெ அப்படி மதிக்கலாமா?”.

    “என்னமோ……. நா இப்போ அதோட பேருகூட நினைக்கறதில்ல”

    அவற்றில் ஒன்றுகூட மறுபடியும் கண்டெடுக்க முடியாது உயிரற்றவை. இல்லை அதிசயமொன்றும் சம்பவிக்காது.

    “சார் வாக்கிங் வந்தது தானே”?

    “உம்”

    “கொஞ்சநேரம் நானும் கூடவரட்டுமா?”

    ஒரு ஹெலிகாப்டரின் இரம்பல் சத்தம் கேட்டு முகமுயர்த்திய போது ‘லாடோள்ஸ்’ விற்ற ஞாபகம் வந்தது. ஹெலிகாப்டரில் தொங்கிநின்று நகர்வலம் வருகின்ற கிறிஸ்து உருவம் ஃபெல்லினியாவின் மேஜிக். அடுத்த நிமிடத்தில் சோஃபி எஸ்தர் ஆண்ட்ரூஸ் சி.டி. கைமாறினாள். அதுவும் மேஜிக். வானம் இருண்டது. கையில் சிடியுடன் நிற்கும்போதே பச்சைநிற பஸ்ஸில் சோஃபி குதித்து ஏறினாள். பின்னால் திரும்பி கொஞ்சமாக கைஆட்ட மறக்கவில்லை.

    பா…ய்…

    வீட்டின் தனிமைக்குத் திரும்பி வருவோமென்று நினைக்கவில்லை. சாவியெடுத்துக் கதவைத் திறந்தான். மக்கள் ஓடி வந்து கட்டிப்பிடிப்பதற்கோ, அவர்களின் அம்மா காபியும் கொண்டு சமையலறையிலிருந்து வெளியில் வருவதோ எதிர்பார்ப்பதற்கில்லை. குளிர்ந்த வரவேற்பறை, செய்தித்தாள்களும் புத்தகங்களும் ஆங்காங்கே சிதறிக்கிடந்திருந்தது. அவற்றின் காவல்காரன் என்பதுபோல சுவரில் சாப்ளினுடைய சல்யூட் மறுபடியும் பார்க்க முடிந்ததில் சந்தோஷம். கொஞ்சம் பிராண்டி குடிப்பது ஒருவேளை உறங்குவதற்கு உதவும். சியர்ஸ். இனி செய்ய வேண்டிய ஒரு செயல் சோஃபி எஸ்தர் ஆண்ட்ரூஸின் குறும்படம் பார்ப்பது. ’காஸ்பர் தோமஸ் என்ற வயதானவரின் கதை எழுபத்தி நான்கு வயதான அவர் பஸ்ஸை விட்டிறங்கி ஒரு பேகையும் பிடித்துக்கொண்டு கிராமத்தின் மிகப்பழமையான ஆலயத்தை நோக்கி நடந்தார். நிறைய கற்படிகள் ஏறினால்தான் ஆலய முற்றத்தை அடையமுடியும். அவர் தளர்ச்சியுடன் ஒவ்வொரு படியும் ஏறினார். அவர் முகத்தைப் பார்த்தால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாரத்தைத் தன் முதுகில் சுமக்கிறார் எனத்தோன்றும். கடந்தகால வாழ்க்கை வேதனை நிறைந்ததாக இருந்தது என்பதை அவருடைய அங்கங்கள் வெளிப்படுத்தின. தேவாலயக் கட்டடிடத்தின் வெள்ளை நிற முகப்போடு சேர்ந்து மின்னுகின்ற சிலுவை வானம் வரை உயர்ந்து நின்றது. காஸ்பர் தோமஸ், ஃபாதர் ஜோனின் முன்னால் வந்தார்.

    “யாரது? தெரியலையே……………” ஃபாதர் சொன்னார். ஃபாதருக்கு அம்பது வயதுக்கு மேலிருக்கும் மேசைமேல் உள்ள கம்ப்யூட்டரில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்.

    “என் பேரு காஸ்பர் தோமஸ்”. அவர் தன்னை அறிமுகப்படுத்தினார். ஃபாதர் இதற்கு முன்பு அவரைப் பார்த்ததில்லை. இருவரும் முற்றிலும் பழக்கமில்லாதவர்கள்.

    “நான் உட்காரட்டுமா?” அவர் கேட்டார்

    “ஐ ஆம் ஸோரி. நான் அதெ சொல்ல மறந்திட்டேன்” என்று திடுக்கத்தில் கூறினார் ஃபாதர். அவர் சந்தோஷப்பட்டார்.

    “நான் கொஞ்சகாலம் வெளியிலிருந்தேன். இதே ஊர்க்காரன் தான் நானும். திருமுழுக்கும், கல்யாணமும் இங்கதான் நடந்துச்சு”.

    “பார்க்க முடிந்ததில மனம் நிறைந்த மகிழ்ச்சி. நா இங்க சார்ஜெடுத்து ரொம்பக் காலமாகல” ஃபாதர் ஜோன் கூறினார்.

    “இங்கிருந்து போகும்போது ஜோஸஃப் கிழக்கன் காலேலச்சனாயிருந்தார்.” காஸ்பர் தோமஸ் கூறினார்.

    “அது ரொம்பக்காலமாச்சே” ஃபாதர் கேட்டார்.

    “ஆமா” அவர் கூறினார். இருவரும் நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஜன்னலுக்கு வெளியில் ஜாதி மரத்தின் இலைகள் காற்றில் ஆடின. மரத்திற்கு அப்புறம் பலப்பல செடிகள் கடும்பச்சை நிறத்தில் தளிர்த்திருந்தன.

    “இந்த வரவிற்குக் காரணம் ஏதாவது!…………”

    “உண்டு” அவர் அதைக்கூற கொஞ்ச நேரம் தயங்கினார். சுலபமாக மனம் திறக்கவில்லை.

    நாற்பது ஆண்டுகளாக அவர் சென்னை நகரத்தின் ஒரு மூலையில் பிஸினஸ் செய்து கொண்டிருந்தார். பிஸினஸிலும் வாழ்க்கையிலும் துணையானஹில்டா சில மாதங்களுக்கு முன்பு இறைவனடடி சேர்ந்துவிட்டாள். பிறகு அவருக்குத் தனிமைதான். ஒரு மகள் ஜெர்மனியில் மகன் அமெரிக்காவில் இரண்டாவது மகள் நெதர்லான்டில். அவங்க யாரும் போனதுகப்பறம் வரவேயில்லை. ஹில்டா இறந்தபோது அவர் அவர்களை மிகவும் எதிர்பார்த்தார் ஆனால் அவர்களின் துர்பாக்யம் வரமுடியல ஃபாதர் ஜோன் தனக்குத் அறிமுகமில்லாத ஹில்டாவின் ஆத்மாவிற்கு நித்ய சாந்தி வேண்டினார். காஸ்பர் தோமஸ் கவலையுடன் இருந்தார். சௌன்ட் ட்ராக்கில் கவலையில் ஸ்ருதி அது அப்படியே தொடர்ந்தது.

    கொஞ்சம் கூட பிராண்டி அதற்கிடையிலும் ஸ்க்ரீனிலிருந்து கண்ணெடுக்கவில்லை. காஸ்பர் தோமஸ் தனக்கு வேண்டி ஒரு கல்லறை செய்யச் சொல்லியிருந்தார். கோன்ட்ராக்ட் காரன் நதானியலும் ரெண்டு வேலக்காரர்களும், பார்வையாளராக ஃபாதர் ஜோனும். கல்லறைக் கட்டி முடித்து காஸ்பர் தோமஸ் மரணம் வரும் வரை காத்து மீதி நாட்களை இடவகயில் கழிக்கலாம் என்று தீர்மானித்திருந்தார். ஃபாதர் அவரின் தீர்க்கமான முடிவிற்குக் கீழ்படிந்தார். கல்லறை வேலை தீர்ப்பதற்கும், தொடர்ந்துள்ள வாழ்க்கைக்குமான பணம் போக மீதமிருக்கும் தனது வருவாய் அனைத்தையும் பள்ளிக்கு என வாக்குமூலம் கொடுத்தார். யாரோ மயானம் வழியாக வந்தார். அவர் உற்சாகமாக இருந்தார்.

    “என்னா அதிசயமிது? குஞ்ஞாச்சியா……….. நான் கொச்சும்மன்”

    காஸ்பர் தோமஸ் விழித்தார். குஞ்ஞாச்சி என்பதும் காஸ்பர் தோமஸின் பேர்தான். ஆனால் பல ஆண்டுகளாக அப்பெயரில் யாரும் அவரை அழைத்ததில்லை.

    “கொச்சும்மன்!” அவர் அற்புதப்பட்டார்.

    “ஆமாண்டா உங்கூட ஆத்திலயும் காயல்லயும் மீன்பிடிக்க வர்ற அதே நண்பந்தா. நாம நெறய வராலும், வற்றயும் கரிமீனுமெல்லா புடிச்சத மறந்திட்டியா?.

    கொச்சும்மன் அவசரமாகக் கூறினான். இருவரும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டனர். விதும்பினர் ஃபாதர் ஜோனும், நதானியலும், வேலைக்காரர்களும் செயலற்று நின்றனர். அவர் சிறு ஆறுகளில் விளையாடும் உயிர்களைப் பற்றியும், சேற்றில் பறந்து இறங்கும் பறவைகளைப் பற்றியும், வாத்தின் சிறகுகளைக் குறித்தும் கூறிக்கொண்டிருந்தனர். காஸ்பர் தோமஸ் என்ற குஞ்ஞாச்சியும், கொச்சும்மனும் இளமை நினைவில் துள்ளிக் கொண்டிருந்தனர். ஆற்றின் ஓரத்தில் நீர்ப்பறவைகள் சத்தமிட்டன. எங்கிருந்தோ ஒரு குக்கூ சத்தம்; மறு குக்கூ சத்தமும் கேட்டது. சேற்று வயலிலிருந்து பறவைகள் பறந்தன. ஆரவாரம் கேட்டு வாத்தின் கால்கள் நகர்ந்தன.

    “குஞ்ஞாச்சி எனக்கு என்னோட மனைவியையும் மக்களயும் பார்க்க வேண்டாமா?”

    “நானும் அதத்தா சொல்ல வந்தே” காஸ்பர் தோமஸ் கூறினார். அவர்கள் கைகள் கோர்த்தனர்.

    “நாங்க போறோம்” கொச்சும்மன் ஃபாதர் ஜோனைப் பார்த்து சொன்னான்.

    ஃபாதர் ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தார். அவருடைய காட்சியில் கொச்சும்மனும் காஸ்பர் தோமஸும் சிறுவர்களைப்போல நடந்து அகன்றனர். கொச்சும்மன் சத்தமாகக் கூப்பிடும்போது வீட்டிற்குப் பின்னால் உள்ள கோழிக்கூட்டிற்கருகில் ரஜீனாம்மா மீன் கழுவிக் கொண்டிருந்தாள். கோழிகள் நாலைந்து ரஜீனாம்மாவைச் சுற்றி நின்று கொண்டிருந்தன.

    “இங்க கொஞ்சம் வா என்னோட ரஜீனாம்மா…….” கொச்சம்மன் கத்தினான்.

    ரஜீனாம்மா கத்தியும் மண்சட்டியுமாக எழுந்தாள், சட்டியில் சின்னச்சின்ன மீன்கள்.

    “ரஜீனாம்மா … இது என்னோட சின்ன வயது நண்பன் குஞ்ஞாச்சி. நா சொல்லிருக்கேல்ல உங்கிட்ட ரொம்ப காலத்துக்கப்பறம் நாங்க ரெண்டு பேரும் பாக்கறோம். நா இதக் கொண்டாடுவே. நம்மோட சேவல் வாத்து எங்கே?”.

    கொச்சம்மன் நான்கு புறமும் பார்த்துக்கொண்டு இரைபிடிக்கத் தக்க நேரம் பார்த்து உற்சாகத்தோடு காத்துக் கொண்டிருக்கும் காட்டு விலங்கைப் போல தேடி மறைந்தார்.

    “இங்க உட்காரலாமே. அவர் இப்ப வருவாரு” ரஜீனாம்மா காஸ்பர் தோமஸிடம் கூறினாள்.

    எங்கிருந்தோ வாத்தின் அலறல் கேட்டது. கொச்சம்மனின் வெற்றியும் அதில் கலந்திருந்தது. நீரில் உயிரினங்கள் துடித்தது. கொச்சமனும் காஸ்பர் தோமஸும் ஒரு துணியின் இரண்டு முனையையும் பிடித்து குனிந்து நின்றனர். மீன்குட்டிகள் நிறைய துணியில் வந்தது. சில மீன்கள் ஈரத்தோடு குதித்தன. கொச்சமனும் அவன் நண்பனும் அவற்றை மீண்டும் தண்ணீரிலேயே விடுகின்றனர். இருவரும் ஆழமில்லாத நீர்ப்பரப்பில் தண்ணீரை கைகளால் சிதறிக் கொண்டு ஓடுகின்றனர். அடுத்தக் காட்சி பள்ளியில் வைத்து கொச்சமாவின் மகள் மெட்டீல்டாவின் திருமணச் சடங்கு. காஸ்பர் தோமஸ் மகிழ்ச்சியோடு நிற்கின்ற கொச்சமாவின் தோளில் கை வைத்தார். கொச்சமன் உணர்வுப்பூர்வமாக தனது கையை அக்கைகள் மீது வைத்து அமர்த்தினான். ‘எபனீசர்’ சவப்பெட்டிகளுக்கு நடுவில் காஸ்பர் தோமஸைக் காத்துக்கிடந்தார். சவப்பெட்டிகளிலொன்று சித்திரவேலைகள் முடிந்து ஜொலித்துக் கொண்டிருந்தது. அது காஸ்பர் தோமஸின் அவசியத்திற்கிணங்க எபனீசர் செய்து முடித்த வேலை. நதானியல் வேகவேகமாக நடந்து வந்தான்.

    ‘எடா நீ அந்த வெளிநாட்டுக்காரன எங்கயாவது பாத்தயா?”. அவன் எபனீசரிடம் கேட்டான்.

    “யார அந்த காஸ்பரையா?”

    “அவரையேதா”

    “அது சரி நானினி அவரத் தேடாத இடமில்ல. ஒன்னு பாத்தாலோ மின்னல் போல மறஞ்சிடறாரு………..

    “பிணம் எறக்கி வைக்குமளவுக்கு கல்லறயோட வேல முடிஞ்சு எவ்வளவு நாளாச்சுன்னு தெரியுமா?. கொச்சும்மனைப் பாத்தபின்ன அந்தப் பக்கமே வறல”.

    “அதோ அங்க பாரு” எபனீசர் கை நீட்டினான்.

    நதானியல் அங்கே பார்த்தான். பாதையருகில் ஒரு சைக்கிள் வந்து கொண்டிருந்தது. காஸ்பர் தோமஸ் அதன் பின்சீட்டில் ஒரு பாகமாகத் திரும்பி உட்கார்ந்திருந்தார். கொச்சம்மன் அழுத்தி ஓட்டிக் கொண்டிருந்தார். காஸ்பர் தோமஸின் கையில் கறுப்புநிற கரிமீன்கள் அவை வெயிலேற்று மின்னின.

    “கொஞ்சம் நில்லுங்க” நதானியலும் எபனீசரும் ஒரே குரலில் கூறினர். கொச்சம்மன் சைக்கிளின் வேகத்தை கொஞ்சம் கூட குறைக்கவில்லை.

    “நாங்க கொஞ்சம் வேலயா இருக்கோம்……..” காஸ்பர் தோமஸ் கூறினார். எபனீசர் ஏற்கனவே சொன்னதேதான் நடந்தது. ஒரு மின்னல் போல அவர்கள் மறைந்தனர். மெதுவாக ஸ்கிரீன் இமேஜுகள் இல்லாமல் ஆனது. அதில் ஒரு பெயர் தெளிந்தது.

    “சோஃபி எஸ்தர் ஆன்ட்ரூஸ்”.

    ஃபோனின் மறுமுனையில் அவள்……… நான் உறங்கவில்லையென்றும் நேரம் தவறி தான் அழைத்து தொந்தரவு செய்யவில்லை என்றும் உறுதிப்படுத்திக் கொண்டாள்.

    “படம் பாத்தீங்களான்னு தெரிவதற்காகத்தான்”.

    “ஆமாம் பாத்து இப்பத்தா முடிச்சேன். நல்லா இருக்கு”

    “ரியலி!………….”

    “உம்”

    அவள் குதூகலமடைந்தாள். பெரியநகரத்தின் இரவில் அலையின் அசைவுகள்.

    “நாளைக்கு பார்க்க முடியுமா?………..” சோஃபி கேட்கிறாள்,.

    ” ஏ முடியாது? பார்க்கலாமே”

    “குட் நைட்.”

    “குட் நைட்.”

    பிறகு உறங்க சென்றபோது சோஃபியின் கதாபாத்திரத்தின் முகம் தானாக நினைவுக்கு வந்தது. படத்தில் இல்லாத ஒரு க்ளோஸ்அப். …. ’காஸ்பர் தோமஸ்!’……………. ஏதோ கனவு கண்டு உறக்கத்தில் சிரிக்கிறார்.

    காட்சி மாய்வதில்லை
    ஒரு நிமிடம்
    இரண்டு நிமிடம்
    அவரின் உறக்கம் தொடர்ந்தது
    மூன்று ……
    நாலு ……
    அஞ்சு ……

    Share
  • குட்டி இளவரசன் (வயது வந்தோர்க்கான சிறுவர்நாவல்)

    கே.எஸ்.சுதாகர்

     

    கூரியரில் ஒரு பார்சல் மகனுக்கு வந்திருந்தது. கையெழுத்திட்டு அதைப் பெற்றுக் கொண்டபோது ஒரு ஏமாற்றம். பெட்டியின் உருப்படிக்கு அது பாரமற்று இருந்தது.

     

    அதை உடைத்து உள்ளே இருப்பதை மகன் காட்டினான். அது ’அப்பிள் மக் புக்’கில் ஒட்டக்கூடிய ஒரு பெரிய ஸ்ரிக்கர். அலுங்காமல் குலுங்காமல் நசியாமல் வந்து சேர்வதற்குத் தான் அந்தப்பெரிய பெட்டி. இரண்டுபேருமே சிரித்துக் கொண்டோம். அதன் பின்னர் அந்த ஸ்ரிக்கரைக் காட்டி ‘இது என்ன?’ என்று ஒரு போடு போட்டான் மகன். தூரத்தில் நின்று பார்த்த நான் ‘மலை’ என்றேன். பின்னர் சந்தேகம் வரவே கிட்டச் சென்று பார்த்துவிட்டு ‘தொப்பி’ என்றேன்.

     

    எத்தனையோ பேருக்கு நான் இப்படி வரவேண்டும், இதற்குத்தான் படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும், அவற்றையெல்லாம் பெற்றோருக்காக மூட்டைகட்டி வைக்கவேண்டி ஏற்பட்டுவிடுகின்றது. அதே போல் இந்தப்புத்தகத்தின் கதைசொல்லிக்கும் ‘தான் ஒரு ஓவியனாக வரவேண்டும்’ என்றொரு ஆசை இருந்திருக்கின்றது. ஆனால் பைலட் ஆகிவிடுகின்றார்.

     

    கதைசொல்லி ஆறு வயதாக இருக்கும்போது, இரையை சப்பிப் சாப்பிடாமல் முழுதாக விழுங்கும் பாம்பு (boa constrictor) ஒன்றின் படத்தைக் காண்கின்றான். அதன்பின்னர் அப்பிடியானதொரு படத்தை அவனும் வரைகின்றான். அது ஒரு மலைப்பாம்பு, யானையை விழுங்கிவிட்ட ஓவியம். அதை வயது வந்தவர்களுக்குக் காண்பிக்கின்றான். அவர்கள் அதனைத் தொப்பி என்கின்றார்கள். பின்னர் அவன் தான் கீறிய படத்திற்குள் ஒரு யானையை வரைந்தபோது அவர்கள் அவனது படத்தைப் புரிந்து கொள்கின்றார்கள். கூடவே அவனுக்கு ஒரு ஆலோசனையும் சொல்கின்றார்கள். அந்தப் படம் கீறும் வேலையை ஒருபுறம் போட்டுவிட்டு  வர         லாறு, பூமிசாஸ்திரம், கணிதம், இலக்கணம் போன்றவற்றைப் படிக்கும்படி சொல்கின்றார்கள். அதன்பின்னர் அவன் தனது ஓவியனாக வரும் எண்ணத்தைக் கைவிட்டு விடுகின்றான். வயது வந்தவர்கள் பொதுவாக, எதையும் தங்கள்பாட்டில் புரிந்து கொள்வதில்லை என்றும்  சலிப்பின்றி எப்போதும் சிறுவர்களுக்கு தமது கருத்துகளைத் திணித்து விடுகின்றார்கள் என்றும் சொல்கின்றார் கதைசொல்லி.

     

    எனது மகன் காட்டிய ஓவியம் அதுதான். யானையை விழுங்கிவிட்ட மலைப்பாம்பின் ஓவியம்.

     

    Antoine de_Saint Exupery பிரான்ஸ் தேசத்தில் 1900 ஆம் ஆண்டில் பிறந்தவர். இரண்டாம் உலகமகாயுத்தத்தின் போது இராணுவ உளவு விமானியாகப் பணியாற்றியவர். 1940களில் ஜெர்மனியர்கள் பிரான்சிற்குள் புகுந்தபோது அமெரிக்காவிற்கு தப்பியோடினார். 1943களில் வடக்கு ஆபிரிக்காவில் மீண்டும் விமானப்படையில் இணைந்தார். 1944 ஆம் ஆண்டு மத்திய தரைக்கடல் மேலாக உளவுப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஜெர்மனிய விமானப்படையினரால் அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இறந்தார். ‘Southern Mail’, ‘Night Flight’, ‘Wind, Sand and Stars’ என்பவை இவர் எழுதிய ஏனைய புத்தகங்கள்.

     

    ‘The Little Prince’ அமெரிக்காவில் இருந்தபோது இவர் எழுதிய நாவல் ஆகும். சிறிய கோள் ஒன்றிலே தனித்து வாழ்ந்த சிறுவனைப் பற்றிய கதை இது. ஒருதடவை ஆபிரிக்காவில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இவரது விமானம் சகாராப் பாலைவனத்தில் விபத்திற்குள்ளாகியது. இவரும் சக விமானியும் அதில் தப்பிப் பிழைத்தார்கள். அந்தச் சம்பவமே ‘குட்டி இளவரசன்’ எழுதுவதற்கு காரணமாகியது.

     

    நாவலின் பெயரும் – அந்தப் புத்தகத்திற்கான ஓவியங்களும் – குட்டி இளவரசன் ஒரு சிறுவர் இலக்கியமே என அடித்துச் சொல்கின்றன. அப்படியாயின் எப்படி இது வயது வந்தோர்க்கான இலக்கியம் ஆகும்? புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும்போதே, ‘குட்டி இளவரசன்’ வயது வந்தோர்க்கான சிறுவர் இலக்கியம் என்பது தெரிந்து விடுகின்றது. எல்லா வயது முதிர்ந்தோரும் ஒருகாலத்தில் சிறுவர்களாகத்தானே இருந்திருக்கின்றோம். அப்படியென்றால் எப்படி ஒரு சிலரால் அவர்களைப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது?

     

    பிரெஞ்சு மொழியில் (அந்துவான் து செந்த் எக்சுபெரி) வெளிவந்த இந்தப்புத்தகம் இதுவரை 180 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலகிலே அதிகமாக அச்சேறிய பைபிள், மார்க்கிரட் மிக்சல் எழுதிய Gone With The Wind இற்கு அடுத்தபடியாக உள்ள நூல் குட்டி இளவரசன். தமிழில் வெ.ஸ்ரீராம் + மதனகல்யாணி மற்றும் யூமா வாசுகி என்போரால் மொழிபெயர்க்கபட்டுள்ளது. இதன் ஆங்கில வடிவத்தை இணையத்தில் இலவசமாக தரவிறக்கிப் படித்துக் கொள்ளலாம்.

     

    ஒருதடவை மனித சஞ்சாரமற்ற சகாராப் பாலைவனத்தில், கதைசொல்லி தன்னந்தனியாகப் பறந்து கொண்டிருக்கும்போது விமானம் பழுதடைந்து விபத்திற்குள்ளாகின்றது. ஒருவாரத்திற்குப் போதுமான தண்ணீர் கையிருப்பில் இருந்தது. இரவு மணலில் படுத்துறங்குகின்றார். அதிகாலை சூரிய உதயத்தின்போது ஒரு குரல்,

    ”உங்களால் முடியுமானால் ஒரு ஆட்டின் படம் கீறித் தரமுடியுமா?”

     

    யாருமற்ற வனாந்தரத்தில் குட்டி இளவரசன் அறிமுகமாகின்றான். கதை தொடங்குகின்றது. குட்டி இளவரசனுக்கு விமானம் புதுமையாக இருக்கின்றது. தனது இருப்பிடத்தில் எல்லாம் சின்னதாக இருப்பதாகச் சொல்கின்றான். ஒரு பூ, மூன்று எரிமலைகள் மாத்திரமே அவனது உலகில் இருக்கின்றன. அவனே அந்த உலகத்தைச் சுத்திகரிக்கின்றான். அவனே பூவிற்கு நீர் ஊற்றுகின்றான். ஒவ்வொருநாளும் குட்டி இளவரசனின் உலகம் பற்றி புதிது புதிதாக அறிகின்றார் கதைசொல்லி. ஒருநாளில் 44 தடவைகள் சூரிய அஸ்தமனம் நிகழ்வதாகவும், தனது உலகில் புலிகள் இல்லை எனவும் கூறுகின்றான். தனது உலகிற்கு ரோசாச்செடி வந்தது எப்படி என்பது பற்றியும், தான் அந்த உலகத்தை விட்டுப் பிரிந்தது பற்றியும் கதை கதையாகச் சொல்கின்றான்.

     

    ஒவ்வொரு உலகத்திற்கு பயணம் செல்லும்போதும், குட்டி இளவரசன் கேட்கும் கேள்விகள் புதிர்த்தன்மை வாய்ந்ததாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளன. அரசன், தற்பெருமை கொண்ட மனிதன், மது அருந்துபவன், வியாபாரி, விளக்கேற்றுபவன், பூகோளசாஸ்திரி என ஒவ்வொரு கிரகத்திலும் அவன் சந்திப்பவர்களிடம் அவன் கேட்கும் கேள்விகள் நியாயமானவை. அவனது சிந்தனைகள் வளர்ந்தோரைக் காட்டிலும் வேறுபட்டவை. அவர்களது பதிலில் திருப்தியுறாத குட்டி இளவரசன், தன் முயற்சியில் என்றுமே மனம் தளராத விக்கிரமாதித்தன் போல, ஒவ்வோர் உலகாகச் செல்கின்றான். எந்த உலகை நான் தரிசிப்பது நல்லது என பூகோளசாஸ்திரியிடம் ஆலோசனை கேட்கின்றான்.

     

    அதன்பின்னர் பூகோளசாஸ்திரியின் ஆலோசனைப்படி பூமிக்கு வருகின்றான். அவன் வந்து சேர்ந்த இடம் ஆபிரிக்கா. பாம்பு, மலர், நரியென்று ஒவ்வொன்றாகச் சந்திக்கின்றான். கண்களால் பார்க்க முடியாததை இதயத்தால் பார்க்க முடியும் என்கின்றது நரி. ஓர் அரசனின் விரலைக் காட்டிலும் சக்தி வாய்ந்தவன் தான் என்கின்றது பாம்பு. அதன் பின்னர் விமான ஓட்டியான கதைசொல்லியைச் சந்திக்கின்றான். நட்புக் கொள்கின்றான். பாலைவனத்தின் தனிமையை குட்டி இளவரசனுடன் போக்கிக் கொள்கின்றான் கதைசொல்லி. வானில் தோன்றும் நட்சத்திரங்கள் வெறும் ஒளி அல்ல, அவை சிரிக்கின்றன, அதை உணருங்கள் என்று கற்றுத் தந்துவிட்டு பிரிந்து விடுகின்றான் குட்டி இளவரசன்.

     

    எப்பொழுதாவது ஆபிரிக்கா பாலைவனத்திற்கு பிரயாணம் செய்ய நேரிட்டால், அவனை நீங்கள் சந்திக்கக்கூடும் என்ற ஏக்கத்துடன் நாவல் முடிவடைகின்றது.

     

    நாவலை வாசிக்க வாசிக்க விரிந்து செல்கின்றது உலகம். குட்டி இளவரசன் ஒவ்வொரு உலகத்திலும் சந்திக்கும் அவர்கள், நாம் தினமும் காணும் மனிதர்களா? பூடகமாக அப்படித்தான் சொல்கின்றார்.

     

    இந்த நாவலையும், அந்துவான் து செந்த் எக்சுபெரியையும் கெளரவிக்கும் முகமாக பிரெஞ் தேசம் தமது ஐம்பது பிராங் நோட்டில் – குட்டி இளவரசன், மற்றும் யானையை விழுங்கிய மலைப்பாம்பு போன்ற படங்களை வெளியிட்டுள்ளது.

     

    இந்த நாவலை மையமாக வைத்துக் காலத்துக்குக் காலம் பல திரைப்படங்கள், நாடகங்கள், தொலைக்காட்சித்தொடர்கள் வந்துள்ளன.

     

    சிறுவர் இலக்கியங்கள் பொதுவாக வளர்ந்தவர்களால் தான் எழுதப்படுகின்றன. சிறுவர்கள் வாசிப்பதற்கும் பாடுவதற்கும் நடிப்பதற்கும் என இவை எழுதப்படுகின்றன. அதன் மூலம் சிறுவர்கள் இவற்றைக் கிரகித்துக் கொண்டு தமது மனவளத்தைப் பெருக்கிக் கொள்கின்றார்கள். இன்றைய காலகட்டத்தில் சிறுவர் இலக்கியங்களே அருகிவிட்டன.  வளர்ந்தோருக்கான ‘சிறுவர் இலக்கியம்’ பற்றிச் சொல்லத் தேவையில்லை.

     

    Share
  • ’மம்மி’யாரின் மறுமகள்!

    ’மம்மி’யாரின் மறுமகள்!
    சிறுகதை
    ரமணி

    “அம்மா, உன் மாமியார்-மாமனார் உன்னை ஆட்டிவெச்சது மாதிரி நான் ஆகவிடமாட்டேன்”, என்றேன் நான் உறுதியான குரலில்.

    “அதெல்லாம் போன தலைமுறை ஹேமா! நீயும் மாப்பிள்ளையும் ஐ.டி.கம்பெனில வேலை பார்க்கறதனால உங்க மாமியார்-மாமனார் நிச்சயம் அட்ஜஸ்ட் பண்ணிப்பா. அவாளுக்கு ஒரே குழந்தை, அதுவும் பிள்ளைங்கறதால, உன்னை சொந்தப் பொண் மாதிரி பார்த்துக்கறோம், கவலை வேண்டாம்னு கல்யாணம் முடிஞ்சு ஊருக்குக் கிளம்பறச்ச சொன்னால்லயா? அப்புறமென்ன?”

    எனக்கு அம்மா பேரில் முன்பிருந்த எரிச்சல் இப்போது சிரிப்பாக மலர்ந்தது.. என் பிறந்த வீட்டிலேயே சொந்தப் பெண்ணான நான்தான் எல்லா வீட்டு வேலைகளையும் அதுநாள் வரை செய்துவந்தேன்! என் தங்கை வசந்தாவும் ஒரே தம்பி சந்துருவும் தம் ’மம்மி-டாடி’யின் செல்லக் குழந்தைகளாக வளர்ந்தனர். ’நாளைக்கு மாமியார் ஆத்துல இடிச்சுக் காட்டுவா’ன்னு சொல்லியே என்னிடம் எல்லா வேலைகளையும் வாங்கி என்னைக் ’கொடுமைப் படுத்திய’ என் தாயார் இப்போ நாக்கு மேல பல்லைப்போட்டுப் பேசறா!

    “சொந்தப் பொண்ணா நீ என்னை ட்ரீட் பண்ணியே, அதுமாதிரி அவாளும் பண்ணினா நான் சும்மா இருக்கணுங்கறயா?”

    என் கேள்வி அம்மாவைச் சுட்டது அவள் முகத்தில் தெரிந்தது. “எல்லாம் உன் நன்மைக்குத்தான் பண்ணினேன். நீ எல்லா வேலையும் கத்துண்டு பொறுப்பா செஞ்சு பழகினாத்தானே நாளைக்கு உனக்குப் புக்காத்தில ஈஸியாகவும் பெருமையாவும் இருக்கும்? அப்பா-நான் ரெண்டு பேரும் ஸ்கூல் டீச்சரா இருந்து சம்பாதிச்சு உன்னைக் கஷ்டப்பட்டு இஞ்சினியரிங் டிகிரி படிக்கவெச்சதையும் நெனச்சுப்பாரு. சரி விடு, கல்யாணமாகி இந்த மூணு மாசத்தில உனக்கு அங்க எப்படி இருக்கு? அவாகிட்ட உனக்கு ஏதாவது குறை உண்டா?”

    “பெரிசா ஒண்ணுமில்லை. ஆனால், நான் சனி-ஞாயிற்றுக் கிழமைகள்ல மூணு வேளையும் சமையல் பண்ணிச் சுத்து வேலைகளையும் பார்த்துக்கணும்னு மாமியார் எதிர்பார்க்கறார்…”

    “நியாயம் தானே?”

    “என்ன நியாயம்? நானும் விஜய்யும் தினமும் போகவர ரெண்டு மணிநேரம் கம்பெனி கார்ல-பஸ்ல ட்ராவல் பண்றோமாக்கும்! அதைத் தவிரப் பத்து மணிநேரம் ஆஃபீஸ்ல அல்லல் படறோமாக்கும்! சனி-ஞாயிறு ரெண்டு நாள்தான் எங்களுக்கு ஓய்வு. சமயத்தில சனிக்கிழமை கூடப் போகவேண்டியிருக்கு. அந்த ரெண்டு நாள்ல நாங்க காலைல எழுந்துக்கறதுக்கே மணி ஏழு-ஏழரை யாயிறதில்ல! அப்புறம் எங்க சமையல் பண்றது? மாமியார் ஹௌஸ்வைஃப் தானே, பண்ணட்டுமே? நான்தான் சனி-ஞாயிறு ரெண்டு நாள்லயும் சாயங்கால காப்பி-டிஃபன், ராத்திரி டின்னர் ரெண்டும் பார்த்துக்கறேனே, அது போதாதா?”

    “உன் ஆத்துக்காரர் ஒண்ணும் சொல்லலையா?”

    “அம்மா கேட்டா நீ வீக்-என்ட் காலைலயும் சமைக்கணும்னு சொன்னார்.”

    “ரொம்ப மோசம்டீ! இந்தாத்துக்கு ஒரு மாட்டுப்பொண்ணு வந்தா அவள் அப்படிலாம் இருக்க நான் விடமாட்டேன்! ஐ.டி.-வேலைக்குப் போயிண்டே நீ இந்தாத்துல பெரும்பாலும் தினமும் ராத்திரி சமையல் பண்ணுவியே? புக்காத்தில வாரத்தில ரெண்டு நாளாவது எல்லாத்தையும் நீயும் உன் புருஷணும் பார்த்துண்டு அவா ரெண்டு பேர்க்கும் ரெஸ்ட் தர வேண்டியதுதானே? உங்க மாமியார் ஹவுஸ்வைஃப்-னாலும் மாமனார் ஒரு யூ.ஜி.ஸி. கல்லூரி முதல்வரா இருந்து ரிடயர் ஆனவர்தானே? மாமியார் தினமும் ரெண்டு வேளையும் சமையல் பண்ணிப் போடறா, மாமனார் உங்க ரெண்டு பேர்க்கும் காலை ப்ரேக்ஃபாஸ்ட் பரிமாறி, மத்யானம் சாப்பாட்டைக் கட்டிக் கொடுத்தனுப்பறார்னு சொன்னேல்ல, அதுமாதிரி யார் செய்வா சொல்லு? அவா அப்படி அட்ஜஸ்ட் பண்ணிண்டு இருக்கற போது நாமளும் கொஞ்சம் கிவ்-அண்ட்-டேக்-கா இருக்கணும். அப்பதான் ஏதும் பிரச்சனை இருக்காது.”

    “அவா அட்ஜஸ்ட் பண்ணிண்டிருக்கறது எனக்கு ரொம்பத் திருப்தி, சந்தோஷம் தாம்மா? ஆனாலும் நான் முதல்லயே சொன்ன மாதிரி, உன்னை உன் இன்-லாஸ் ஆட்டிவெச்ச மாதிரி என்னை இவா ஆட்டிவெச்சிடக் கூடாதுன்னுதான் நான் இவ்ளோ ஜாக்கிரதையா இருக்கேன். என் அதிர்ஷ்டம் விஜய்யும் எனக்கு சப்போர்ட் பண்றார். கொஞ்சம் இடம் கொடுத்தா எல்லாம் விஸ்வரூபம் எடுத்திரும்னு எனக்கு நல்லாத் தெரியும்.”

    “நீ சொல்றது ஒருவகைல சரிதான். இருந்தாலும் நமக்கும் கொஞ்சம் மனசாட்சி வேணும். நீங்க ரெண்டு பேரும் ஒரே கம்பெனி, காலைல எட்டரை-மணிக்குக் கார்ல ஒண்ணா போயி சாயங்காலம் பெரும்பாலும் ஏழரை மணிக்குக் கம்பெனி பஸ்ல திரும்பி வர்றேள் இல்லையா? வரும்போது ஆத்துக்கு வேண்டிய கறிகாய்-பழம், ஸ்நாக்ஸ் இது மாதிரி வாங்கிண்டு வரலாம் இல்லயா?”

    “ஏழெட்டு தரம் மாமியார் சொல்லிப் பார்த்தார்! டைட் ஆஃபீஸ் வேலல எப்படா வீட்டுக்கு வந்து விழுவோம்னு இருக்கறதால நாங்க பெரும்பாலும் இந்த வேலையை மறந்துடுவோம்! அதான் தினமும் மாலை மாமியார் கோவிலுக்கும், மாமனார் ஸ்கூட்டரை எடுத்துண்டு நண்பர்களைப் பார்க்கப் போறேன்னும் போறா இல்ல, அவாளே கறிகாய்-பழம்லாம் வாங்கட்டுமே?”

    “அப்ப நீங்க ரெண்டு பேரும் ஆத்துக்குன்னு என்னதான் செய்யறேள்?”

    “இப்ப நீதான் மாமியார் மாதிரி பேசறே! உனக்கு ஒருத்தி மருமகளா வந்தா அவள் பாடு பாவம்தான்! நாங்கதான் ரெண்டு பேரும் கைநிறைய சம்பாதிக்கறோமே? வேற என்ன செய்யணும்?”

    “உங்க சம்பளத்தை நம்பியா அவா இருக்கா? உங்க மாமியார்க்கு அவா குடும்பப் பூர்வீக சொத்திலேர்ந்து பணமா ஒரு பெரிய தொகை பங்கா வந்தததும், உங்க மாமனார்க்குக் குறைஞ்சது மாசம் முப்பதாயிரம் ரூபாய் பென்ஷனா வரும்னும் கல்யாணத்துக்கு முந்தியே உங்க அப்பா விசாரிச்சு வெச்சிருக்கார். இன்னிக்கு தேதில மாடியும் கீழுமா ஒரு பெரிய வீட்ல, சுத்தீவர தோட்டத்தோட, எல்லா வசதிகளும் இருக்கற அவா வீட்ல நீங்க இருக்கறதே உங்களுக்கு ஒரு பெரிய கொடுப்பினை. மாடி வீட்டுக்கு மாசம் பதினஞ்சாயிரமும், அது போக அவாளுக்குக் குரோம்பேட்ல இருக்கற மூணு-பெட்ரூம் ஃப்ளாட்லேர்ந்து வேற மாசம் பதினஞ்சாயிரமும் வாடகை வரது. அதனால, பணத்தைப் பொறுத்தவரைக்கும் உங்க சம்பாத்யத்தை நம்பி அவா இல்லேன்னு நல்லாத் தெரிஞ்சுக்கோ…”

    நான் ஒரு மருமகளாக நடந்துகொள்ளும் விதம் எனக்குச் சரியென்றே பட்டது. என்னை இவர்கள் ஆட்டிவைக்க விடமாட்டேன் என்று விஜய்யிடம் சொன்னபோது அவரும் அதை முழுமனதாக ஆமோதித்தார். என் மாற்றுப் பெற்றோர்களுக்கு அப்படியொன்றும் வயதாகி விடவில்லையே? மாமனார் அறுபத்திரண்டு வயதிலும் மாமியார் ஐம்பந்தேழு வயதிலும் விச்சாகத்தானே இருக்கிறார்கள்! தினமும் மூன்று வேளையும் சமையல்-டிஃபன் பண்ணுவதை மாமியார் உவந்தே செய்வதாக எனக்குத் தோன்றியது. நான் முடிந்தபோது உதவுவதிலும் அவர்கள் ஒன்றும் குறைகாணவில்லை என்றும் பட்டது.

    *** *** ***

    கல்யாணமாகி ஒன்பதாம் மாதம் பிறந்த வீடு சென்ற போது அம்மா தன் தொணதொண விசாரிப்பை வேறுவிதமாகத் தொடங்கினாள்.

    “கல்யாணமாகி மாசம் ஒம்பதாறது. காலா காலத்தில ஒரு பிள்ளையோ பொண்ணோ பெத்துக்க வேண்டியதுதானே? ஏதாவது விஶேசம் உண்டா? இதப்பத்தி ஒங்க மாமியார் என்ன சொன்னா?”

    “கல்யாணமாகி வந்த முதல் வாரமே மாமியார் நாங்க நாலு பேரும் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் சாப்பிடும்போது சொன்னார்: ’அடுத்த ஒரு வருஶத்தில ஒரு குழந்தையைப் பெத்துக்கோங்கோ! ஃபாமலி ப்ளானிங் அது-இதுன்னு தள்ளிப் போடாதீங்கோ. வேணும்னா ரெண்டாவது குழந்தைக்கு இடைவெளி விட்டுக்கலாம். காலாகாலத்தில பெத்துண்டாதான் எங்களால பேரனையோ பேத்தியையோ சீராட்டி வளர்க்க முடியும்…’”

    “நாங்க ரெண்டு பேரும் ஒப்புக்கு சரின்னு சொன்னோமே தவிர, எங்களுக்கு ஒரு வருஶத்திலேயே பெற்றோர் ஆறதுல இஶ்டம் இல்லை. ஆகட்டுமே ரெண்டு மூணு வருஶம், இப்பவே என்ன அவசரம்? அப்படி இவாளால பாத்துக்க முடியலேன்னா ஒரு பேபி-சிட்டரை ஏற்பாடு பண்ணிக்கறோம்!”

    “வாயாடி! இதுமாதிரி மாமியார்ட்ட சொன்னயா?”

    “நான் சொல்லலை, விஜய்தான் சொன்னார். அவாளுக்கு மூஞ்சி ஒரு மாதிரி ஆகி அதுக்கப்பறம் இதுபத்திப் பேச்சை எடுக்கல!”

    “ஸோ, உங்க தினப்படி வாழ்க்கை, நீ-மாப்பிள்ளை ஒரு துருவம், மாமியார்-மாமனார் ஒரு துருவம்னு ஒருத்தருக்கொருத்தர் அன்யோன்னியமா பேசிக்காம ஓடறதா?”

    “அப்படீல்லாம் இல்லைப்பா! நீங்க ரெண்டு பேரும் அனாவசியமாக் கவலைப்படறேள்.”

    “உங்க தினசரி வாழ்க்கையைப் பத்திச் சொல்லு, காலைல எழுந்ததுலேர்ந்து ராத்திரி தூங்கற வரைக்கும்…”

    “விஜய் கார்த்தால ஏழு மணிக்குதான் எழுந்திருப்பார். நான் ஆறு மணிக்கே எழுந்து குளிச்சு ஸ்வாமி ரூமை எட்டிப் பார்த்து சத்தமா ரெண்டு ஸ்லோகம் சொல்லிட்டு நெத்தில குங்குமம்-விபூதி கீத்தோட வந்து மாமியாரைக் கொஞ்சம் அசத்துவேன்! அவர் ஒரு சின்னப் புன்னகையோட எனக்கு காப்பி கலந்து தர்றதுக்குள்ள நான் எங்க லஞ்ச்-பாக்ஸ் தேய்ச்சு ரெடி பண்ணி, ப்ரேக்ஃபாஸ்ட் தட்டெல்லாம் எடுத்து டைனிங் டேபிள் மேல வெச்சிருவேன். சமயத்தில ரொட்டித் துண்டுக்கெல்லாம் வெண்ணை-ஜாம் தடவி வைப்பேன். இதுக்குள்ள மாமனார் சந்தியை முடிச்சிண்டு வேஷ்டிக்கு மேல துண்டைக் கட்டிண்டு சாப்பாடு கட்ட வருவார். நாங்க ரெண்டு பேரும் எட்டு மணிக்கு டிஃபன் பண்ணிட்டு சரியா எட்டரை மணிக்கு வண்டி வந்து கிளம்பிப் போவோம்.”

    “சாயங்காலம்?”

    “அதுதான் கொஞ்சம் ட்ரிக்கி! கம்பெனி பஸ்ஸைப் பிடிச்சுக் கேம்ப் ரோடுல இறங்கிப் பத்து நிமிஷம் நடந்து ஏழறை மணிக்கு ஆத்துக்குள்ள நுழையற போதே அப்பாடான்னு இருக்கும்! மாமியார் ஹால்ல டீவியை ஓடவிட்டு சமையல் கட்டுல இருப்பார். தினமும் சாயங்காலம் ஸ்கூட்டர்ல ஊர் சுத்தற மாமனார் அவா ரூம்ல உக்காந்து லேப்டாப்ல உலகத்தச் சுத்திண்டிருப்பார்! நாங்க தினமும் ஆஃபீஸ் ஃபுட்கோர்ட்ல நாலு மணி வாக்ல காபி-டிஃபன் சாப்ட்ருவோம். அம்மா-அப்பாட்ட ஹலோ சொல்லிட்டு விஜய் ஸ்டடி ரூம்ல நுழைஞ்சார்னா எட்டரை மணிக்கு சாப்பிடும் போதுதான் வருவார். எனக்கும் தினமும் ஃபேஸ்புக்-ல அரட்டை அடிக்கணும்! மாமியார்ட்ட ஏதாவது வேலை இருக்கான்னு கேட்டாத் தலைல கட்டிடுவார்னு தெரியும்! கொஞ்ச நேரம் குட்டிபோட்ட பூனை மாதிரி ஹால்ல குறுக்கும் நெடுக்குமா நடந்திண்டிருப்பேன்! அப்புறம் நைஸா நானும் ஸ்டடி ரூம்ல என் லேப்டாப் பார்த்திட்டு எட்டே-கால் மணிக்கு எங்க நாலு பேர்க்கும் சாப்பிடத் தட்டுவெச்சு, மாமியார் சமைச்சு வெச்ச பண்டங்களை டேபிள்ல கொண்டுவைப்பேன். சாப்பிடும் போது எல்லோரும் சிரிச்சு நல்லாத்தான் பேசிண்டிருப்போம். சாப்டதுக்கப்புறம் மாமியார் டீவில மூழ்கிடுவார். சமயத்தில வீட்ல பொதுவா இருக்கற டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்ல மேய்வார். நானும் விஜய்யும் எங்க லேப்டாப்பை எடுத்துண்டு ஒம்பதரை மணிக்கு பெட்ரூம் நுழைஞ்சு கம்ப்யூட்டர்ல இங்கிலிஶ் டீவி சீரியல் பார்த்துட்டு பத்தரை மணிக்குத் தூங்குவோம். அவா ரெண்டு பேரும் எப்போ தூங்கறா எப்போ எழுந்திருக்கறான்னு நாங்க குறிப்பா கவனிச்சதில்லை!”

    “நீ ரொம்ப லக்கி அக்கா! உனக்கு அவர் மாமியார் இல்லை; மம்மி மாதிரி பார்த்துக்கறதால ’மம்மி’யார்தான்!”, என்றாள் என் தங்கை.

    “அந்த ’மம்மி’யார்க்கு நீயும் ஒரு மாட்டுப் பொண்ணா இல்லாமா ’மறுமகளா’ நடந்துக்கறாயான்னு அப்பப்ப நிச்சயம் பண்ணிக்க”, என்றான் என் தம்பி.

    இவர்களுக்கு எங்கிருந்து இவ்வளவு வாய் வந்தது என்று எனக்கு ஆச்சரியாமாக இருந்தது. “அது எனக்குத் தெரியுமே! இவ்ளோ நாள் ஜாக்கரதையா இருந்திட்டேன் இல்ல? இனிமே கொஞ்சம் நல்ல பொண்ணாப் படம்காட்ட வேண்டியதுதான்!”

    *** *** ***

    அடுத்த மூன்று மாதத்தில் என் ’மம்மி’யார்-மாமனார் கொஞ்சம் தம் சுயரூபத்தைக் காட்டுவதுபோல் தெரிந்தது! ஒரு சனிக்கிழமை மதியம் நாங்கள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது கூடத்தில் குரல் கேட்டு விழித்துக்கொண்டேன். மெல்லிய குரலில் அவர்கள் பேசிக்கொண்டாலும் எனக்குத் தெளிவாகக் கேட்டது.

    “போன மாசம் ரெண்டு நாள் நாம மதுரைக்கு ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தபோது இவா ரெண்டு பேரும் வீட்ல சமைக்கவே இல்ல, பார்த்தேளா? கேட்டதுக்கு விஜய் சொன்னதா அவள் என்ன சொன்னா, ஞாபகம் இருக்கா? தினமும் வீட்டுச் சாப்பாடுன்னு போர் அடிச்சதுனால கேட்டரிங் ஆர்டர் பண்ணி காலம்பற-மத்யானம் சாப்ட்டாளாம். ராத்திரிக்கு ஜாலியா ஹோட்டல் போய் நார்த் இண்டியன் டிஶ்ஶஸ் சாப்டாளாம்.”

    “எனக்கும் அது பிடிக்கல பத்மா! இந்தப் பயலும் தோட்டத்துக்குத் தண்ணி ஊத்தாம செடியெல்லாம் வதங்கிப் போய் நான்தான் சரிபண்ணினேன்!”

    “ஆமாம், அவள் நித்யமல்லி, அரளிப் பூக்கூடப் பறிக்கலை! ரெண்டு வேளையும் ஸ்வாமி விளக்கக் ஏத்தினேன்னு சொன்னதுகூட சந்தேகம்தான்! இப்படிக் கொஞ்சம் கூட வீட்டுப் பொறுப்பு, குடும்பப் பொறுப்பு இல்லாம இவா இருக்கறதுக்கு ஒரு வழி பண்ணியே ஆகணும்!”

    “என்ன செய்யலாம் சொல்லு?”

    “என் சமையலை தினமும் சாப்டறது அவாளுக்கு போர் அடிக்குதில்ல? நம்ம குரோம்பேட் வீடுதான் இப்போ காலியா இருக்கே? அங்க போயி கொஞ்சநாள் தனியா இருந்துக்கோங்கோன்னு அனுப்சிடலாமா?”

    “இவா கொஞ்சநாள் தனியா இருந்து பழக வேண்டியதுதான். ஆனால் குரோம்பேட்ல கம்பெனி பஸ்ல இறங்கி ஆத்துக்கு வர ரொம்ப தூரம் நடக்கணுமே? அதனால ஒண்ணு செய்வோம். இவாள இந்தாத்தில தனியா விட்டுட்டு நாம அங்க போய்டலாம். ஒரு வருஷம் இருந்து இவா எப்படி சமாளிக்கறான்னு பார்ப்போம். நாளைக்குக் காலைல இதுபத்தி பேசி முடிவுசெய்வோம்…”

    எனக்குத் திகீரென்றது. அன்று மாலை அவர்கள் இருவரும் ஒரு கல்யாண ரிஸப்ஶன் சென்றுவிட, விஜய்யிடம் விஶயத்தைச் சொல்லி ஆலோசித்தேன். பேசாமல் அவர் தன் மம்மி-டாடிக்கு அவர்கள் எதிர்பார்க்கும் மகனாகவும், நான் என் ’மம்மி’யார்-மாமனாருக்கு ’மறுமகள்’ என்றும் மாறினால்தான் இதுவரை கிடைத்த சுகத்தை அனுபவிக்க முடியும் என்று தோன்றியது.

    அன்று இரவு அவர்கள் வீடு திரும்ப இரவு மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் எல்லோரும் காலை எட்டுமணி வாக்கில் எழுந்தால் போதும் என்று சொல்லிவிட்டு இருவரும் தூங்கச் சென்றனர்.

    *** *** ***

    மறுநாள் காலை என் ’மம்மி’யார்-மாமனார் எழுந்த போது சமையல் கட்டில் குக்கரின் விசில் கேட்டு அசந்துவிட்டனர்! ஸ்வாமி விளக்கேற்றி ஊதுபத்தி மணந்துகொண்டிருக்கப் பூவெல்லாம் பறித்து ஒவ்வொரு படத்திற்கும் வைத்திருந்தேன். கூடத்தில் நடு விளக்குச்சரத்தில் இருந்த எம்.பி.3 பிளேயர் மெதுவாக உமா மோகன் குழுவினர் பாடும் ஸ்தோத்திரங்களை ஒலித்துக் கொண்டிருக்க, நான் ஒரு தட்டில் இரண்டு டபரா-டம்ளர்களில் காப்பியின் மணம் மூக்கைத் துளைக்க, ஹால் சோஃபாவில் அவர்களை அமர்த்திக் கொடுத்தேன். விஜய் ஆழ்துளைக் கிணற்று மோட்டரைப் போட்டுவிட்டு, ஹோஸ் பைப்பால் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.

    “போன மூணு மாசமா நீ தூரமா இருந்து குளிக்கலை போலிருக்கே? ஏதாவது விசேஶமா?”

    “அப்படித்தான் போலிருக்கும்மா!”

    “சரி, சாயங்காலம் நம்ப ஃபேமலி லேடி டாக்டர் சாந்தாட்ட போய் செக் பண்ணிப்போம். விஜய்யும் கூட வரட்டும்.”

    *** *** ***

    Share
  • பெயரில் என்னமோ இருக்கு!

    நிர்மலா ராகவன்

     

    தன் சிநேகிதி வீட்டுக்குப் போய் திரும்பிய கமலம் படபடத்தாள்: “கன்னாபின்னான்னு பேர் வெச்சா இப்படித்தான் ஆகும்!”

    புத்தகத்தில் ஆழ்ந்திருந்த ரேணுகா நிமிர்ந்தாள். எதுவும் கேட்கவில்லை. அம்மா தானே சொல்வாள் என்று காத்திருந்தாள்.

    “மீனாட்சியோட பொண் வயத்துப் பேரனுக்கு துருவன்னு பேரு வெச்சா. ஸ்டைலா கூப்பிடறது த்ருவ். இப்போ என்ன ஆச்சு?”

    “என்னம்மா ஆச்சு?”

    “ரெண்டாவது குழந்தை பிறந்ததும், இந்தக் குழந்தையைக் கரிக்கிறாராம் அதோட அப்பா. ரெண்டு வயசுக் குழந்தையை அடிச்சுக்கொல்றாராம்!” என்னவோ, தானே அறைபட்டதுபோல் குமுறினாள். “சின்னக்குழந்தை கடையில பாக்கற சாமானையெல்லாம் கேக்கத்தான் செய்யும். அதுக்காக அடிப்பாளோ?”

    “சரி. இதுக்கும் துருவன்கிற பேருக்கும் என்ன சம்பந்தம்?”

    “அப்பா மடியில ஒக்காரணும்தானே அந்தப் பிள்ளையும் தவம் பண்ணினான்?”

    ரேணுகாவையும் கவலை பிடித்துக்கொண்டது. பெயர் சூட்டும்போது இன்னும் கவனமாக இருக்க வேண்டுமோ, பெற்றோர்?

    நல்ல வேளை, அவள் புராண காலத்து ரேணுகாவைப்போல் இல்லை.

    பூஜைக்கு ஆற்றில் நீர் மொண்டு வருவதற்காகப் போன முனிவர் பத்தினி ரேணுகா காந்தர்வக் காதலர்களின் சல்லாபத்தைப் பார்த்து சற்றே மயங்கினாளாம். அதற்குத் தண்டனையாக அவளுடைய தலையைக் கோடரியால் வெட்டும்படி மகனைப் பணித்தாராம் கணவர் ஜமதக்னி.

    பன்னிரண்டு வயதில், பழைய படங்களில் தோன்றிய சிவாஜி கணேசனைத் திரையில் பார்த்து மயங்கிய தானோ, கமலஹாசன், கார்த்தி, ஆர்யா என்று இன்றுவரை ஒவ்வொரு நடிகரையும் மனதால் நினைப்பதை நிறுத்தவில்லை.

    `ராமாயணத்திலே வர அகல்யாமாதிரி நான் கல்லாப் போகணும்னா, இருநூறு தடவை கல்லாகியிருப்பேன்! நல்லவேளை, அந்தக் காலத்திலே நான் பிறக்கலே!’ எத்தனை தடவை தங்கை பார்வதியிடம் அதைச் சொல்லிச் சிரித்திருக்கிறாள்!

    பதினேழு வயதில் படிப்பை முடித்துவிட்டு, “இதுக்குமேலே படிச்சா, வரன் கிடைக்கிறது கஷ்டம். அநியாயமா வரதட்சணை கேப்பா,” என்ற அம்மாவின் நியாயத்தை ஏற்றுக்கொண்டிருந்தாள் ரேணுகா.

    தனக்கு வரப்போகிறவருக்காவது நல்ல பெயர் இருக்கிறதா என்று பார்த்துத்தான் கழுத்தை நீட்ட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டாள்.

    முதல் வரன் ராமச்சந்திரன். ஜாதகம் கிடைத்திருந்தது.

    “எனக்கு இவன் வேண்டாம்மா,” என்றவளைப் பார்த்து அம்மா குழம்பினாள்.

    நிறையப் படித்திருந்தான். தரகரிடம் வரதட்சணையே வேண்டாம் என்று சொல்லியிருந்தானாம். ஒரே தங்கையும் கல்யாணமாகி வெளிநாட்டில் இருக்கிறாள். இதைவிட நல்ல வரன் கிடைக்குமா? மகளிடம் எடுத்துச்சொன்னாள்.

    “பேரைப் பாரு! அப்பா எது சொன்னாலும், அது சரியா, தப்பான்னு யோசிக்காம தலையாட்டுவான். நான் அந்த ராமரா இருந்தா, தசரதர்கிட்ட என்ன சொல்லியிருப்பேன் தெரியுமா?” என்று வீராவேசமாக ஆரம்பித்தவளுடன் மேலே பேசப் பிடிக்காது கமலம் அப்பால் நகர்ந்தாள்.

    எப்போதும் கேட்டதுதான். `நீங்க புத்தி கெட்டுப்போய் ரெண்டு மூணு தடவை கல்யாணம் பண்ணிண்டா, அதற்கு நானா பிணை?’ என்றிருப்பாள். ராமாயணமும் இந்த அளவுக்குப் பிரபலமாகி இருக்காது.

    அடுத்தது சுப்ரமணியன்.

    பயந்துகொண்டே அவன் பெயரைச் சொன்னாள் கமலம்.

    “நான் முதல் பொண்டாட்டியா, ரெண்டாவதா?”

    ஆச்சரியத்துடன், “எப்படிக் கண்டுபிடிச்சே?” என்றாள் கமலம். “மூத்தாள் போயிட்டாளாம். இந்த வரனுக்குச் சின்ன வயசுதான்! குழந்தையும் கிடையாது!”

    “முருகனுக்கு வள்ளி, தெய்வயானை. இந்த சுப்ரமணியனுக்கும் ரெண்டு வேணுமோ?”

    “பிடிக்காட்டா விட்டுடு. பிறத்தியாரைப்பழிக்காதே!”

    பெண்ணை அதிகமாகப் படிக்க வைத்தது தப்போ என்று யோசிக்க ஆரம்பித்தாள் தாய். எதர்க்கும் குதர்க்கம்தான். கேட்டால், `மூளை எதுக்கு? யோசிக்கத்தானே?’ என்பாள்.

    அடுத்து கிடைத்த ஹரிஹரனை கமலமே நிராகரித்துவிட்டாள் கமலம். `ஸ்ரீதேவி, பூதேவி’ என்று ஏதாவது ஆரம்பிப்பாள், மூளையைப் பயன்படுத்தும் மகள். எதற்கு வம்பு!

    தான் அந்தப் பிள்ளை துருவனைப்பற்றி இவளிடம் சொல்லியே இருக்கக்கூடாது என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள்.

    அதைவிடப் பெரிய தவறு, தகப்பனில்லாத பெண் கெட்டுவிடக்கூடாதே என்ற பரிதவிப்புடன் நாள் தவறாமல் அவளைத் தன்னுடன் கோயிலுக்கு அழைத்துச் சென்று இதிகாச புரணக்கதைகளெல்லாம் கேட்க வைத்ததுதான். சிறியவளென்று பார்வதியை வீட்டிலேயே விட்டுவிட்டுப் போனதால்தான் அவள் இன்று பரம சாதுவாக இருக்கிறாள்.

    “கிருஷ்ணனா? எப்பவும் பொண்களோடேயே சுத்திண்டு இருப்பான். ஜொள்ளுப்பார்ட்டி!”

    “நன்னாப் பாடுவானாம்!” சற்று நம்பிக்கையுடன் சொல்லிப்பார்த்தாள் கமலம்.

    “வேற வினையே வேண்டாம். ஆயர்பாடியில வளர்ந்த கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசிச்சுதானே எல்லாரையும் மயக்கினான்?”

    “ஒனக்குப்போய் வரன் பாக்கறேனே! இனிமே நான் ஒன்னோட கல்யாணப்பேச்சை எடுத்தா, `ஏண்டி?’ன்னு கேளு!’ என்று கத்திவிட்டு, அப்பால் நகர்ந்தாள் கமலம்.

    அம்மா இவ்வளவு கண்டிப்பாக இருப்பாள் என்று ரேணு எதிர்பார்க்கவில்லை. வயதோ இருபத்தாறு ஆகிவிட்டது! காதல் புதினங்கள் படித்துக்கொண்டும், வீட்டுக்குச் சாமான் வாங்கிப் போட்டுக்கொண்டும் காலத்தைக் கழித்தாள்.

    ஒரு நாள் சூபர்மார்க்கெட்டுக்குப் போயிருந்தபோதுதான் அவனைப் பார்த்தாள். பின்னாலிருந்து.

    என்ன உயரம், அமிதாப் பச்சன் மாதிரி! கடைச் சிப்பந்தியிடம் அவன் ஏதோ கேட்கையில், `எங்கோ கேட்ட குரலாக இருக்கிறதே! இது எந்த நடிகருடையது? சரத் பாபுவா?’ என்ற யோசனை எழுந்தது.

    அவன் இவளை நோக்கித் திரும்பினான்.

    ரேணுகாவிற்குத் தடுமாற்றம் ஏற்பட்டது. தான் வெறித்துப் பார்த்ததை தப்பாக எடுத்துக்கொண்டிருப்பானோ?

    “ரேணுதானே?”

    யாரிது, உரிமையுடன் தன் பெயரைச் சொல்வது?

    “சந்துரு! ஞாபகம் வருதா? ஒன் காதை முறுக்கி கணக்குச் சொல்லிக்கொடுப்பேனே?” சிரித்தான். பல்வரிசையும் அழகாக இருந்தது என்று குறித்துக்கொண்டாள் ரேணு.

    நிம்மதியுடன், சிரிப்பும் வந்தது. அவளுக்குப் பத்துப் பன்னிரண்டு வயதாக இருந்தபோது, மூன்றாவது வீட்டில் இருந்தவன்.

    அப்போதெல்லாம், “பாவம், சின்னப்பொண்ணுடா. ரொம்பத்தான் மிரட்டாதே. அன்பாச் சொல்லிக்குடு,” என்று அவனுடைய தந்தை அவளுக்குப் பரிவார்.

    “இப்போ என்ன பண்றே? `ஒன்கூடப் பேசறேன்’னு அறுக்காதே!” கலகலவென்று சிரித்தான்.

    “சில குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்கறேன்”.

    “என்ன பாடம்?”

    “கணக்கு!” இதைச் சொல்வதற்குள் அவளுக்கு வெட்கம் வந்துவிட்டது. முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

    சந்துரு பெரிதாகச் சிரித்தான்.

    அவனுடன் என்ன பேசுவது என்று புரியவில்லை. “ஒங்கப்பா சௌக்கியமா?” என்று கேட்டுவைத்தாள்.

    “இருக்கணும்,” என்றான். “என் தங்கை கல்யாணமாகி அங்கே இருக்கா. வீட்டையும், நிலபுலனையும் என்பேரில எழுதிவெச்சுட்டு, அவளோடேயே போய் இருக்கார்! அமெரிக்காவில எனக்குக் கிடைச்ச நல்ல வேலையை ஒதறிட்டு, நான் இங்கேயே வந்துட்டேன்னு அப்பாவுக்கு கோபம்.”

    மரியாதை குறித்து, “ஒரு நாள் ஆத்துக்கு வாயேன். அம்மா ஒன்னைப் பாத்தா ரொம்ப சந்தோஷப்படுவா,” என்று அழைப்பு விடுத்தாள் ரேணு.

    “இப்பவே வந்தா உள்ளே விடமாட்டியா?” மீண்டும் சிரிப்பு. “இன்னிக்குப் பண்ண முடியற காரியத்தை நாளைக்குன்னு ஒத்திப் போடக்கூடாது”.

    அவனுடைய காரில் பின்னால் உட்காரப்போனவளை, “முன்னாலேயே ஒக்காரு, வா!” என்று அழைத்தான் சந்துரு.

    அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தபோது, எதையோ இழந்ததுபோல் இருந்தது. எத்தனை தடவை ஜோடி ஜோடியாகப் போகும் தம்பதிகளையும் காதலர்களையும் பார்த்து ஏக்கப்பெருமூச்சு விட்டிருக்கிறாள்!

    முகமன் எல்லாம் முடிந்ததும், “ஒரு நாள் பொண்டாட்டியை அழைச்சிண்டு சாப்பிட வாடா, சந்துரு!” என்றாள் கமலம், உபசாரமாக.

    “நீங்க வேற, மாமி! எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலே”.

    ரேணுகா நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

    “ஒரு முப்பது வயசு இருக்காது ஒனக்கு? அமெரிக்காவில பொண்ணா இல்ல?”

    “எனக்கு வெள்ளிக்காரிகளைப் பிடிக்கலே. இங்கேதான் பொண்குழந்தை பிறக்கறபோதே கொன்னுடறாளே!” தனக்கு மனைவியாகும் பாக்கியம் பெறாத அந்தக் குழந்தைகளுக்காக வருத்தப்பட்டான். “இப்போ எல்லாருக்கும் ஒரே குழந்தைதான் இங்கே. அதுவும் பொண்ணா இருந்துட்டா, கேக்கவே வேண்டாம். தான் வெச்சதுதான் சட்டம்னு சாதிக்கும். சண்டை போடும். நிறைய பாத்துட்டேன். பயமா இருக்கு,” என்றான் சந்துரு.

    “எங்க பார்வதியைப் பண்ணிக்கிறயாடா? நீ கேக்கற பொண்ணுமாதிரி இருப்பா! பரம சாது, என்ற அம்மாவின்மேல் ரேணுவுக்கு வெறுப்பு ஏற்பட்டது. முதலில் தங்கைக்குக் கல்யாணமானால், அப்புறம் தன்னை யார் சீந்துவார்கள்?

    “ஏன் மாமி, ரேணுவை எனக்குக் குடுங்கோன்னா மாட்டேன்னு சொல்லிடுவேளா?”

    “இவ ஒன்னை ஆட்டிவைப்பா!” என்று கமலம் தயக்கத்துடன் கூற, “அதனால என்ன! காதை முறுக்கி, படிய வெச்சுடமாட்டேனா!” என்று சந்துரு சிரித்தான்.

    ரேணுவும் அந்தச் சிரிப்பில் பங்கு கொண்டாள்.

    “ஒரு வேடிக்கை, மாமி,” என்று எதையோ சொல்ல ஆரம்பித்தான் சந்துரு. “அப்பா என் ஜாதகத்தை தரகரிடம் குடுத்திருந்தாராம். யாரோ ஒரு பொண்ணு, இவன் பேரு எனக்குப் பிடிக்கலேன்னு சொல்லித்தாம்,” என்றவன், அந்தப் பெண் எதிரில் நிற்பதாகக் கற்பனை செய்துகொண்டு இரைந்தான்: “நீ என்னைப் பண்ணிக்காட்டா போயேன்! எங்காத்து கன்னுக்குட்டி புல் திங்காதா?”

    கமலம் கடைக்கண்ணால் மகளைப் பார்த்தாள். அவள் விறைப்பாக அமர்ந்திருந்தாள்.

    “நீங்களே சொல்லுங்கோ, மாமி. பேரில என்ன இருக்கு?”

    “அதானே! பேரில என்ன இருக்கு?” என்றவள் ரேணு.

    Share