அறிவழகனும் அவனது கூட்டாளிகளும்

-முனைவர் ஆ. சந்திரன் 

விண்ணை முட்டிநின்றது மலை.  அந்த மலையிலிருந்துதான் பேய் வரும் என்று பெரியவர் கூறியிருந்தார்.  அவன் அந்த மலையை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு எதுவும் தென்படவில்லை. எப்படியும் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவலால் பல நாட்கள் அவ்வாறு செய்தான்.

ஆனால் அவனது முயற்சி தோற்றுக்கொண்டே இருந்தது. அதனால் அவனுக்குப் பெரியவர் கூறியதன் மீது சந்தேகம் வந்தது. ஒரு வேளை பேய் பற்றிக் கூறியது பொய்யாக இருக்குமோ என்று நினைத்தான். அவரிடம் அது பற்றி எப்படிக் கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

அப்போது அவனது கூட்டாளிகள் வந்தார்கள். தன்னுடைய எண்ணத்தை அவர்களிடம் கூறினான் அறிவழகன். அதைக் கேட்டு அவர்கள் சிரித்தார்கள்.

“சரி சரி சிரிச்சது போதும் வாங்கடா விளையாடப் போகலாம்” என்றான் அந்த கூட்டத்திலேயே உயரமாக இருந்த ஒருவன். அவனை எல்லோரும் வளர்ந்துகெட்டவன் என்றுதான் அழைப்பார்கள். அவன்தான் அவர்களில் வயதில் மூத்தவன்.

பக்கத்தில் இருந்த மைதானத்தில் கபடி விளையாட ஆரம்பித்தார்கள்.

அப்போது அந்த வழியாக அந்தப் பெரியவர் சென்று கொண்டிருந்தார். அவர் பெயர் ஸ்ரீ ஸ்ரீ பால ராம கங்க சிங்கர். அவர் மீது அந்த ஊரில் உள்ளவர்களுக்கு நல்ல மதிப்பு இருந்தது. காரணம் அவர்தான் அந்த கிராமத்தில் அதிகம் படித்தவர். எல்லாரிடமும் சகஜமாகப் பேசுவார்.

அவரைப் பார்த்ததும் அவரிடமாவது இந்த சந்தேகத்தைக் கேட்கலாமா? என்று அறிவழகன் யோசித்தான்.

அதைப் புரிந்துகொண்ட கூட்டாளிகளில் ஒருவனான அந்த வளர்ந்துகெட்டவன் அதைக் கேட்டேவிட்டான். ஐயா! கொல்லிக்கட்டி பேய்னு ஒன்னு இருக்கா? என்று.

கொல்லிக்கட்டி பேயா? என்று வாய்ப்பிளந்த அவர், ”ஆமாம்! முன்னாடி இருந்தது. நான் என்னுடைய சின்ன வயசில பார்த்திருக்கிறேன். வெள்ளையாக இருக்கும். அதோட தலை வானத்திலும் கால்கள் பூமியிலும் இருக்கும். ஆனால் நம்ம ஊருக்கு மின்சாரம் வந்ததில் இருந்து அது வருவதில்லை” என்று பெருமூச்சு விட்டவர் தன் மூக்குக் கண்ணாடியைச் சரிசெய்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

இரவு மீண்டும் புலர்ந்தது.

அன்றும் வழக்கம் போல நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்தார்கள் அறிவழகனும் அவனுடைய கூட்டாளிகளும்.

மல்லாந்து படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தான் அறிவழகன். அவனுக்கு நட்சத்திரங்களை எண்ணுவதில் ஆர்வம் அதிகம். அவனுக்கு மட்டுமல்ல அவனுடைய கூட்டாளிகளுக்கும் அப்படித்தான். சில  நேரங்களில் யார் அதிகமாக நட்சத்திரங்களை எண்ணுகிறோம் பார்க்கலாம் என்று அவர்களுக்குள் போட்டி வரும்.

இரவு ஏழு மணியளவில் இம்மாதிரியான வாதம் துவங்கும். அவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கும் போதே உறங்கிவிடுவார்கள். மறுநாள் மீண்டும் அது தொடரும். அந்த  கிராமத்துச் சிறுவர்களின் வாடிக்கை அது.

எட்டொன்பது வீடுகளைக் கொண்ட அந்தக் கிராமத்தில் நான்கு பிரதான தெருக்கள் இருந்தன. அவற்றில் மூன்று தெருக்கள் கிழக்கு மேற்காக இருந்தன. அவற்றை இணைப்பது போல் அமைந்திருந்தது நான்காவது தெருவான சங்கத் தெரு. வாடைக் காற்றை வரவேற்கும் அத்தெருவில்தான் அறிவழகனின் வீடு இருந்தது.

அந்தத் தெருவில் வசிப்பவர்கள் இரவில் பெரும்பாலும் வாயிலுக்கு வெளியில் பாய்விரித்துப் படுத்துறங்குவது வழக்கம். இந்த வழக்கம் எவ்வளவு காலமாக உள்ளது என்ற கேள்விக்குப் பதில் யாருக்கும் தெரியாது. யாரும் அதைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பவில்லை.

அன்று வழக்கம் போல் வீட்டிற்கு வெளியே பாய்போட்டுப் படுக்கப்போனான் அறிவழகன். அவனுடைய கூட்டாளிகள் சிலரும் அவனுடன் இருந்தார்கள். அப்போது தான் அதைப் பற்றி அவர்கள் முதல் முறையாகக் கேட்டார்கள்.

கொல்லிக்கட்டி பேய். அது இரவு வேளையில் நடமாடும். வானளவு உயரத்திற்கு அது இருக்கும். வெள்ளையாக இருக்கும். அது நடந்துவரும் போது “ஜல் ஜல்” என்று சத்தம் வரும் என்று பேய் பற்றிக் கூறிக்கொண்டிருந்தார் பக்கத்து வீட்டுப் பெரியவர்.

அவர் பெயர் ஆனந்தன். அவர் கண்ணாடி அணிந்து கொண்டிருந்தார்.

சிறுவர்கள் குதூகலத்துடன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மின்விளக்கின் ஒளியில் அவர் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடி நன்றாகத் தெரிந்தது.

அவர் தொடர்ந்தார். ”தான் சிறுவனாக இருந்தபோது ஒருநாள் தன்னுடைய அப்பாவுடன் வயலுக்குச் செல்லும்போதுதான் முதல் முறையாக அப்பேயைக் கண்டதாகவும், அப்போது சிலீஸ்! சிலீஸ்! என்று அவருடைய அப்பா கூற அப்பேய் அவர்களை ஒன்றும் செய்யாமல் போய்விட்டதாகவும்” அவர் கூறினார்.

அக்கதையைக் கேட்ட சிறுவர்கள் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அறிவழகனுக்கு அது சுவாரசியமாக இருந்தது. கொல்லிக்கட்டிப் பேயைப் பார்க்க அவன் மனம் ஆவல் கொண்டது. பெரியவர் கூறிய வடிவம் அவன் மனதில் ஆழமாகப் பதிந்தது. அந்தப் பேய் இப்போதும் நடமாடிக்கொண்டுள்ளதா? என்று பெரியவரிடம் கேட்கலாம் என்று அவன் நினைத்தான்.

ஆனால் ஏனோ கேட்காமல் விட்டுவிட்டான்.

*****

கதாசிரியர் – உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)
திருப்பத்தூர், வேலூர்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க