நிர்மலா ராகவன்

நண்பர்களும், மரக்கட்டைகளும்

பிறருக்கு நல்லது செய்ய நினைப்பவர்களை இக்காலத்தில் அபூர்வமாகத்தான் காணமுடிகிறது. உலகின் போக்கு இவர்களுக்கு கசப்பாக ஆகிவிடுவதில் என்ன அதிசயம்? நல்லவர்களை `முட்டாள்’ என்று கருதும் உலகத்தில் அல்லவோ இருக்கிறார்கள்!

எவரைப் பார்த்தாலும், `இவரிடமிருந்து எதைப் பெறலாம்?’ என்றே சிந்தனை நிலைத்திருக்கும் காரியவாதிகள் மலிந்திருக்கும் உலகம் இது. ஒன்றும் பெறமுடியாது என்ற நிலை வரும்போது காணாமல் போய்விடுவார்கள்.

பள்ளி நாட்களில் மிகச் சிலருடன் உண்டாகும் நட்பு நீடித்திருக்கும். இது மகிழ்ச்சி அளிக்கும் சமாசாரம். ஏனெனில், உத்தியோகம் பார்க்கும் பருவம் வந்தால், பெரும்பாலோர்க்கு போட்டி, பொறாமை, புறம்பேசுவது போன்ற வேண்டாத குணங்களும் கூடவே எழுந்துவிடுகின்றன. அதனால் யாரையும் எளிதாக நம்புவது கடினம்.

நட்பு பலப்படுத்தும்

நாம் அறியாமலே நமக்குள் சில திறமைகள் இருக்கும். அவர்களை வெளிக்கொணர்பவர்களின் நட்பு நம்மை பலப்படுத்தும் தன்மையது.

கதை

நல்ல உத்தியோகத்திலிருந்த இளைஞர் பாஸ்கர். “எனக்கு இசை என்றால் கொள்ளை ஆசை. சிறு வயதில் எங்கள் குடும்பம் ஏழ்மையில் மிகவும் அவதிப்பட்டது. அதனால் கற்க இயலவில்லை,” என்று குறைப்பட்டார்.

“இப்போது கற்றுக்கொள்ள என்ன தடை? போயேன்!” என்றார் நண்பர் எரிச்சலாக. (நமக்கு நன்மை செய்ய நினைப்பவர்கள் எப்போதும் இனிமையாகத்தான் பேசுவார்கள், பேசவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது).

முகம் மலர, உடனே ஓர் இசை வகுப்பில் தன் பயணத்தை ஆரம்பித்தார் பாஸ்கர்.

`இனி நீ பாட்டு கற்றுக்கொண்டு என்ன லாபம்? கச்சேரியா செய்யப்போகிறாய்?’ என்ற ரீதியில், கேலிச்சிரிப்புடன் நண்பர் பேசியிருந்தால்?

(முகத்தில் சிரிப்பு மாறாது எப்போதும் இருப்பவர்களே சந்தேகத்துக்கு உரியவர்கள். இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதில்லை. பிறரைக் கவர (ஏமாற்ற?) வேண்டும் என்ற நோக்கம்தான்!)

`நம்மால் செய்ய முடியாததை இவன் சாதித்துவிடப்போகிறானே!’ என்ற கலக்கமும் சிலரை அப்படிப் பேச வைக்கிறது.

நம் மன நிம்மதிக்காக அப்படிப்பட்டவர்களைத் தவிர்க்க வேண்டும். முடியாவிட்டால், அவர்கள் கூறுவதையாவது அலட்சியம் செய்ய வேண்டும்.

கச்சேரி செய்யும் அளவுக்கு இசைத்திறன் வளராவிட்டால் என்ன? பாடும்போதே மகிழ்ச்சியும், பின்னர் திருப்தியும் கிடைக்கிறதே, போதாதா?

ஒருவருக்கு அவரது மகிழ்ச்சிதான் முக்கியம் – அவரது செய்கை பிறருக்குத் தீங்கு விளைவிக்காததாக இருக்கும்வரை.

நம் குறைகளையே நாம் பெரிதாகக் கருதி மறுகும்போது, நம் வருத்தத்தை மேலும் தூண்டிவிடுபவர்கள் நண்பர்களில் சேர்த்தியில்லை.

நெருங்கியவரெல்லாம் நண்பர்களா?

`உனக்கு என்னைவிட உன் பொழுதுபோக்குதான் முக்கியம்!’ என்று நெருங்கியவர் குறைப்பட்டால், அது நம் தவறல்ல.

பிடித்தமான பொழுதுபோக்கு மன இறுக்கத்தைக் குறைத்து, நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கூட்டும் வல்லமை படைத்தது. பிறருக்குப் பயந்து, நமது மகிழ்ச்சியை எதற்காக விட்டுக்கொடுக்க வேண்டும்?

நாம் அனுமதித்தாலே ஒழிய, பிறர் நம்மை ஆட்டுவிக்க முடியாது.

கேள்வி: யார் ஆட்டுவிக்கிறார்கள்?

பதில்: பிறர் நம்மை ஏற்க வேண்டுமே என்ற தாபத்துடன் சுயகௌரவத்தை விட்டுக்கொடுப்பவர்கள். இவர்களுக்குப் பிறரைப் பாராட்டவோ, மதிக்கவோ தெரிவதில்லை. தம் நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவழிக்கவும் வழி புரிவதில்லை. `பிறரை மேலே தூக்கிவிடும்போது நாமும் உயரலாமே!’ என்ற எண்ணமே இவர்களுக்கு உதிப்பதில்லை.

ஏன் ஆட்டுவிக்கிறார்கள்?

தம்மைப்போல் அல்லாதவர்களைக் கண்டு அச்சம் எழுவதால்.

எப்படி?

தம்மைப்போன்று இல்லாதவர்களையும் இழித்தும், பழித்தும் தம்மைப்போல் ஆக்க முயற்சிக்கிறார்கள். `என்னைப்போல்தான் பலரும் இருக்கிறார்கள்!’ என்ற திருப்தியாவது எழுமே! அப்படிச் செய்யும்போது, தாமும் கீழேயேதான் இருக்க நேரிடும் என்பது இவர்களுக்குப் புரிவதில்லை.

கதை

அப்போதுதான் முதன்முறையாக அவளைத் தூதரகத்தில் நடந்த விழாவொன்றில் சந்தித்திருந்தேன்.

“எழுதுவதைத் தவிர நீ வேறு என்ன செய்கிறாய்?” என்று கேட்டாள். (`உனக்கெல்லாம் எப்படி அழைப்பு கிடைத்தது?’ என்று வெளிப்படையாகக் கேட்டால் மரியாதைக்குறைவாக இருக்குமே!)

அவளுடைய உள்நோக்கம் புரிந்து, “உருப்படியாக ஒன்றுமில்லை!” என்று பதிலளித்தேன், அசிரத்தையாக.

“நானும் என் கணவரும் கோலாலம்பூர் பிரதான சாலையில் ஒரு பெரிய கட்டடத்தை வாங்கி, அதில் கல்லூரி நடத்துகிறோம், தெரியுமா?” என்று பெருமையுடன் தெரிவித்தாள்.

நான் அவளைப் பார்த்துப் பிரமிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் பெருமை பேசியவளைப் பார்த்து, “அப்படியா?” என்றேன், அலட்சியமாக.

நம் நம்பிக்கைக்கு உகந்த நண்பர்கள் இவ்வாறு நம்மைக் கவரவேண்டும் என்ற நோக்கத்துடன் எதையும் செய்யவோ, சொல்லவோ மாட்டார்கள். நம்மீது பொறாமையும் எழாது.

வாழ்க்கை ஒரு பயணம்

ஓரிடத்திலிருந்து இன்னொரு ஊருக்கு ரயிலில் பயணம் செய்கிறோம். வழியில் எத்தனையோ அசந்தர்ப்பங்கள். ரயில் தாமதமாக வருகிறது. பெட்டியில் ஒரே கும்பல், சத்தம். வாங்கும் உணவும் கெட்டுவிட்டதுபோல் இருக்கிறது. இத்தனையையும் சகித்துக்கொண்டு, நாம் செல்லுமிடத்திற்கு வந்து, அங்கு உறவினர்களைப் பார்த்ததும் கலகலப்பு மீண்டுவிடுகிறது. பட்ட கஷ்டங்களெல்லாம் வெறும் கதைகளாகிவிடுகின்றன.

இப்படித்தான் நம் தினசரி வாழ்க்கையில் எதிர்ப்படுகிறவர்களால் என்ன இடர் வந்தாலும், அவைகளால் மனம் தளராது இருப்பதே மகிழ்ச்சியைத் தக்கவைக்கும்.

இன்னலை விளைவிப்பவர்கள் — ஆற்று நீரில் மோதி விலகும் மரக்கட்டைகள். இவர்கள் நம்மை அதிகம் பாதிக்க விடக்கூடாது.

யாரைத்தான் நம்புவது?

நாம் எப்படி இருந்தாலும் ஏற்பவர்களே நல்ல நண்பர்கள். இவர்களுடன் சேர்ந்திருக்கையில் எளிதாகச் சிரிப்பு வரும். நம் உடலோ, மனமோ நொந்திருக்கையில், அதை நாம் சொல்லாமலேயே புரிந்துகொள்வார்கள். அப்போதெல்லாம் ஆறுதலாகப் பேசி, அல்லது பேச்சை வேறு திசையில் கொண்டு சென்று, நம் மனப்பாரத்தை லேசாக்குவார்கள்.

எண்ணிக்கை எதற்கு?

`எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்!’ என்று பெருமை பேசிக்கொள்பவர்கள் அவர்களில் எத்தனைபேர் உண்மையானவர்கள் என்று நினைத்துப்பார்க்கிறார்களோ?

நிறையச் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்வதைவிட சத்து நிறைந்த உணவு சிறிதாகிலும் போதுமே!

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *