தோலுரிக்கும் வேலை!
-முனைவர் ஆ.சந்திரன்
மெரினா கடற்கரையைக் வங்கக்கடல் விழுங்க முயன்றபோது அந்த தொழிற்சாலையை உலகமயமாக்குவதாக அறிவித்தார்கள். அப்படிச் செய்வதால் அந்நிறுவனத்திற்கு உலகம் முழுதும் கிளைகள் உருவாகும் என்ற அலர் காற்றில் மிக வேகமாகப் பரவியது. அந்தச் செய்தியைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தவர்களில் நம்பியும் ஒருவன். அவனுக்கு எதிர்காலம் மிகவும் பிரகாசமாகத் தோன்றியது. அவனைப் போல் பலர் அவ்வாறு நினைத்திருந்தார்கள் என்பது பிறகுதான் தெரிந்தது.
மெதுவாக நடக்கும் மக்கள் வாழும் ஊர். அங்குதான் அந்த தொழிற்சாலை வெகுகாலமாக நேர்மையாகச் செயல்பட்டு வந்தது. உலகமயமாக்கப்பட்ட உடனே அந்த தொழிற்சாலையின் தலைமையகத்தை எப்படியாவது தங்களுடைய தலைநகருக்குக் கொண்டுவந்துவிடவேண்டும் என்ற பகீரத முயற்சியில் சிலர் இறங்கினார்கள். அப்போது வேறு சிலர் அந்தொழிற்சாலை அங்கேயே இருப்பதுதான் சரியாக இருக்கும் என்று பெரிதும் விரும்பினார்கள்.
அவ்வாறு சொன்னவர்கள் மீது தாய்நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்ற வசை சொற்கள் வீசியெறியப்பட்டன. நம்முடைய மண்ணிற்கு அந்தத் தொழிற்சாலையின் தலைமையகம் வருவது நல்லதுதானே. அவ்வாறு வந்தால் நமக்கு இன்னும் கூடுதலான பலன்கள் கிடைக்குமல்லவா? என்று நம்பிக்குத் தோன்றியதால் தொடக்கத்தில் அவனுக்கும் அவர்கள் மீது கோபம் ஏற்பட்டது. ஆனால், பிறகு அவனுடைய நினைப்பு தவறாய்ப் போனதை அவன் புரிந்துகொண்டான்.
பலாப்பழங்களைப் பிரித்துச் சுவைப்பது; பலாக்கனிகளில் எத்தனை சுளைகள் இருக்கிறது என்று எண்ணிப்பார்ப்பது; சுவையுடையவற்றை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது எனப் பத்தம்சத் திட்டங்களை முதலில் செய்துமுடிப்பது “சிங்சங்” தொழிற்சாலையின் முதல் கட்ட நோக்கமாகச் சொல்லப்பட்டது. அதற்காகச் சில குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றில் பஞ்சக்குழுவும் அட்டக்குழுவும் முக்கியமானவை. ஏனெனில் அக்குழுக்களுக்குத்தான் இந்தப் பத்தம்சத் திட்டங்களைச் செயல்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்து.
தொடக்கத்தில் நாடு முழுவதிலும் இருந்து அக்குழுக்களுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களில் பலர் பலாக்கனிகளைப் பற்றிய விவரங்களை அறிந்தவர்களாக இருந்தார்கள். கனிகளை உண்ணவரும் காக்கைளை விரட்டுபவர்கள் சிலரும் அக்குழுவில் சத்தமில்லாமல் இணைந்து கொண்டார்கள்.
பெரும்பான்மையானவர்கள் ஆசைப்பட்டதுபோல் தொழிற்சாலை செயல்பட ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே தலைமையகம் தலைநகருக்கு மாற்றப்பட்டது. சிலரது அயராத முயற்சியால்தான் அது நடந்தது என்ற குரல் அடங்கச் சில காலம் ஆனது. அதன் பிறகு அந்தத் தொழிற்சாலையின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுவருகின்றன என்றும், பத்தம்சத் செயல்திட்டங்களை விரைந்து முடிக்க விரும்புகிறார் அதன் தலைவா் என்றும் ரூமர் காற்றில் பரவியது.
அப்போது மாம்பழத்தை ரசித்துக்கொண்டிருந்தவர்கள், வாழைப்பழங்களைச் சுவைத்துக் கொண்டிருந்தவர்கள், பூக்களின் வாசத்தை நுகர்ந்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் அவற்றைத் தூக்கி வீசியெறிந்துவிட்டுப் பலாப்பழங்களைத் தோலுரிப்பது எப்படி என்று கற்கத் தொடங்கினர்கள். அதற்குக் காரணம் பத்தம்சத் திட்டம் பற்றி வெளியான அந்த வதந்தி.
அப்போது நம்பி வாழை சாகுபடி பற்றியும் அவற்றின் வரலாறு பற்றியும் அவனுடைய தந்தையிடம் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தான். அவனிடம் சிலர் சொன்னார்கள் நீயும் பலாக்கனிகளைத் தேலுரிக்கக் கற்றுக்கொள். அப்படிக் கற்றுக்கொண்டால் உனக்கு உடனடியாக சிங்சங் நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்று.
அப்போது அதை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் மாங்கனி பயிரிடுவது பற்றி அறியத்தான் அவன் முதலில் விரும்பி இருந்தான். அவனுடைய அப்பாதான் அவனை வாழையைப் பயிரிடப் பழக்கினார். தொடக்கத்தில் விருப்பம் இல்லாமல் பயிற்சி மேற்கொண்டாலும் போகப்போக அது அவனுக்கு ரொம்பப் பிடித்துப்போனது. எனவே வாழைமரம் பற்றி முழுவதும் அறிந்து கொள்ளலாம். அதன்பிறகு வேண்டுமானால் பலாக்கனிப் பற்றிப் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் அவனுடைய எதிர்காலம் கருதி பலாப்பழம் பற்றிய பயிற்சிக்குத் தன் அப்பாவால் நிர்ப்பந்திக்கப்பட்டான். வேறு வழியில்லாமல் பலாப்பழம் சாகுபடி அதன் வரலாறு பற்றி விரிவாகக் கற்க ஆரம்பித்தான். கனிகளின் வரலாற்றைத் தேடிக்கொண்டிருந்தபோது ஓர் அழைப்பு அவனைத் தேடிவந்தது.
எதிர்ப்பார்த்தது போல் அந்த அழைப்பு சிங்சங் தொழிற்சாலையிலிருந்துதான் வந்திருந்தது. அப்போது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அந்த வேலைக்கு முழுவதும் தயாராகவில்லை என்று நினைத்திருந்தான். ஆனால் அந்த வேலைக்குரிய எல்லாத் தகுதியும் அவனுக்கு இருக்கிறது என்று நம்பினார் அவன் தந்தை. அதனால் அவர் நேர்காணலுக்குப் போகச் சொன்னார்.
நம்பிக்கு நேர்காணலுக்குப் போக விருப்பமில்லை. ஆனாலும் போகச் சம்மதித்தான். அதற்குக் காரணம் அவன் தந்தைமீதுஅவன் கொண்டிருந்த நம்பிக்கை. ஏனெனில் அவனுடைய தந்தை பிறரைப் போல் அன்றி மா, பலா, வாழை முதலானவற்றை நவீனமுறையில் பரிசோதித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரிடம் இருந்து தொழில் கற்பதை அவன் தன் பாக்கியமாகக் கருதினான். எனவே அவருடைய பேச்சை மதித்து நேர்காணலுக்குப் புறப்பட்டான்.
நேர்காணல் மேகம் தவழும் மலையடிவாரத்தில் நடந்தது. அந்த ஊருக்கு அவன் முதல் முறையாக அப்போதுதான் போனான். பொதிகை மலையின் சாரல் அங்கு எதிரொலிக்கும் என்று அங்கு அறிமுகமான நண்பர் ஒருவர் சொன்னார். மிகவும் ரம்மியமாக இருந்தது காற்றில் வந்த வாசம். நம்பியின் மனம் ஏதேதோ நினைத்தது. கால்கள் காற்றில் மிதந்துகொண்டிருந்தன. அவனைப்போல் பலர் அப்படிதான் இருந்தார்கள்.
சிலர் நம்பிக்கையுடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்கள் தம் தந்தையர்களால் என்பதை அங்குப் பேசிக்கொண்டிருந்த சிலரின் உரையாடல்களில் இருந்து அவன் தெரிந்துகொண்டான். அது அவனுக்கு வியப்பாக இருந்தது.
சிலர் கருங்காக்கைகளின் படத்தைக் கையில் வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் வெண்கலச் செம்புகளில் தேவையில்லாமல் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய செயல்கள் நம்பிக்குப் புதுமையாகவும் வினோதமாகவும் தோன்றியது. அவர்களுடைய செயலை அவன் கவனித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த ஒருவர் அவனருகே வந்தார்.
அவனைவிடச் சற்று உயரமாக இருந்தார். கொஞ்சம் கலராக இருந்தார். பார்க்க முரட்டுத்தனமாகத் தோன்றினார். அவர் முகத்தை உற்றுப்பார்த்தபோது தன்னைவிட வயதில் மூத்தவராக இருக்கலாம் என்று நினைத்தான்.
வந்தவர் என்ன தம்பி நேர்காணலுக்குப் புதுசா? என்றார்.
“ஆமாங்க“ என்று வேகமாகத் தலையை ஆட்டிய நம்பிக்கு அவருடைய கேள்வியில் ஏதோ ஒன்று உள்ளதுபோல் தோன்றியது. ஆனால் அதைப் பற்றி அவரிடம் கேட்கவில்லை.
நீங்கள்? என்ற அவனுடைய கேள்வியிலிருந்து அவ்விருவர் விவரங்களின் பறிமாற்றம் ஆரம்பமானது. ஊர், பிடித்தவை, நோக்கம் என்று நீண்டுகொண்டிருந்த உரையாடலுக்குத் தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தது. “நேர்காணலுக்கு வந்திருப்பவர்கள் அனைவரும் அருகிலுள்ள அறைக்குச் செல்லுங்கள்” என்ற ஒலி.
நான் நீ என்று முண்டியடித்துக்கொண்டு அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள் நேர்காணலுக்கு வந்தவர்கள். அவர்களின் செயல்களைப் பார்த்து அவனுக்குச் சிரிப்பு வந்தது. அதைக் கவனித்த இளங்கோ சிரித்துக்கொண்டே வா! தம்பி நாமும் போகலாம் என்றார். அவருடைய இருக்கைக்குப் பக்கத்து இருக்கையில் நம்பி அமர்ந்துகொண்டான்.
கஞ்சியின் மடிப்பு மறையாத வெள்ளாடை அணிந்திருந்த இருவர், கதராடைக்கு ஏற்ற பேண்ட் அணிந்திருந்த ஒருவர் என மூவர் அறைக்குள் நுழைந்தார்கள். நேர்காணலுக்கு வந்திருந்த எல்லோரும் எழுந்து நின்றார்கள். வந்தவர்கள் மேடையில் இருந்த நாற்காலிகளில் பவ்யமாக அமர்ந்தார்கள்.
பிறகு ஒருவர்பின் ஒருவராக மூவரும் அடுத்தடுத்துப் பிரசங்கம் நிகழ்த்தினார்கள். சுமார் இரண்டு மணிநேரம் அமர்க்களப்பட்டது அந்த அறை. அவர்கள் பேசிய செய்திகளை இளங்கோ திருக்குறள் போல் இரத்தினச் சுருக்கமாக நம்பியின் காதுகளுக்கு மட்டும் கேட்குமாறு சொன்னார்.
அவருடைய அந்த அறிவுக்கூர்மை அவனை மிகவும் வியப்படையச் செய்தது. முகம் பிரகாசமாகத் தோன்றியது அவனுக்கு. தன்னை மறந்து இருந்தவன் “இப்போது பலாக்கனி தோலுரிக்கும் நிகழ்வு ஆரம்பமாக உள்ளது“ என்ற குரல் கேட்டு தன்னிலைக்குத் திரும்பினான்.
நேர்காணலுக்கு வந்திருப்பவர்கள் பெயர் அகரவரிசைப்படி அழைக்கப்படும். அவ்வாறு அழைக்கப்படும் நபர் மேடைக்கு வந்து பலாக்கனியை உரித்துக் காட்டவேண்டும். சரியாக உரிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்! நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது! என்று நீண்ட சொற்பொழிவாற்றியவர் முதல் பெயரை வாசித்தார் அன்பு என்று.
அறையில் ஒரே அமைதி நிலவியது. யார் அந்த அன்பு?. அவர் எப்படி பலாக்கனியின் தோலை உரிக்கப்போகிறார்? என்று பார்க்கவேண்டும் ஆவலில். நம்பியின் முகத்திலும் அது குடிகொண்டிருந்தது.
சலனமின்றி மேடையேறிய அன்பு இல்லாத பலாக்கனியை இருப்பதாகப் பாவித்து அற்புதமாக உரித்துக்காட்டினார். அவர் பலாக்கனி உரித்தது தன்னுடைய தந்தையின் செயலை நினைவுபடுத்தியது. நம்பி மனம் சொல்லியது இவருக்கு வேலை உறுதியாகக் கிடைக்கும் என்று. மேடையில் இருந்த நடுவர்களும் மகிழ்ந்தார்கள். அவர்களில் ஒருவர் வாய்த்திறந்து பாராட்டினார் தம்பி! நீங்க அருமையாகத் தோலுரித்தீர்கள்! வாழ்த்துகள்! என்று.
இரண்டாவதாக இளங்கோ! என்ற பெயர் ஒலித்தது.
தன்னுடன் பேசிக்கொண்டிருந்தவர் எழுந்து செல்வதை ரசித்துக் கொண்டிருந்த நம்பி அவர் தோலுரித்துக் காட்டியதை ரசித்துப் பார்த்தான். இப்படியும் தோலுரிக்க முடியுமா என்று வியந்தான். அவன் உள்மனம் நினைத்தது இவருக்கும் வேலை நிச்சயமென்று.
தன் இருக்கையில் அமர வந்தவரிடம் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்! என்றான். நன்றி! என்றவர் சலனமின்றி அமர்ந்தார்.
அவரைத் தொடர்ந்து கமல் என்று பெயர் அழைக்கப்பட்டது. ஓ! இவன் பெயர் கமலா என்று நினைத்தபோது அவன் செம்பில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. “இப்போதும் அவன் தண்ணீர் நிரம்பிய சொம்பைக் கையில் வைத்துக்கொண்டுதான் இருக்கிறான்” என்று இளங்கோ கூறிய பிறகுதான் அது பிரமையல்ல என்று உணர்ந்தான்.
கம்பீரமாக மேடை ஏறியவன் ஐஸ்கட்டியாக உருகினான். அவனுடைய செய்கையைக் கண்டுப் பொறுக்கமுடியாமல் பக்கத்திலிருந்த இளங்கோவைப் பார்த்தபோது அவர் புன்னகை சிந்திக்கொண்டிருந்தார் சலனமின்றி.
அறையில் ஒரே சலசலப்பு. கடைசிவரை அவன் என்ன செய்கிறான் என்று யாருக்கும் புரியவில்லை. அவனுக்குப்பிறகு ஏழெட்டுபேர் அவ்வாறே தொடர்ந்தார்கள்.
நம்பியின் முறை வந்தது. மேடைக்குச் சென்ற அவன் தனக்குத் தெரிந்த அளவில் பலாக்கனியை உரித்துக் காட்டினான். அவன் உரித்தவிதம் புதுமையாக இருந்ததாகப் பாராட்டினார் நடுவர்களில் ஒருவர். இளங்கோவும் அதையே சொன்னார்.
அவனுக்குப் பிறகு மேடையேறியவர்களில் பலர் நன்றாகத் தோலுரித்தார்கள். சிலர் நடுவர்களின் பாராட்டுகளையும் பெற்றார்கள்.
இந்நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த வேளையில் சிலர் நேரமாகிறது என்று நேர்காணலில் பங்குபெறாமல் தம் வீடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களில் கமலுடன் பயிற்சிபெற்ற மாணிக்கமும் அடக்கம்.
நேர்காணல் முடிந்தது.
சரியாக இரண்டு மாதங்கள் கழித்து பலாக்கனி எண்ணும் அந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியானது.
அப்போது அன்புவும், இளங்கோவும் வயலில் விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் வேலைசெய்து கொண்டிருந்த வயலில் நடப்பட்டிருந்த நெல் நன்றாக விளைந்திருந்தது. அதிக மகசூல் கிடைக்கும் என்று அவர்கள் திடமாக நம்பினார்கள்.
*****
கதாசிரியர் – உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),
திருப்பத்தூர், வேலூர்.