=======================

திருச்சி  புலவர் இராமமூர்த்தி

————————————————–

 

நம்  நாட்டு வயல்களில் எரு விட்டு, நெல்நாற்றை நட்டு , நீர்பாய்ச்சி வளர்க்கிறோம். அந்த நாற்றுக்களில் பால் பிடித்து உயர்ந்து ,நெல் காய்த்து   முற்றிக்  கதிர்கள்  பெருத்து விளங்கும். பால் பிடித்த காலத்தில் நெற்பயிர் தலை நிமிர்ந்து நிற்கும். நெல் முற்ற, முற்றப்  பெரிய கதிர்கள் உருவாகும். அப்போது நெற்கதிரின் கனம் தாங்காமல்  பயிரே  தலை  சாய்ந்துத்  தரையை நோக்கும்.இதனைத்   திரைப்படங்களில்,

‘’பச்சை வண்ணச்  சேலைக்கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா!

     பருவம்  கொண்ட   பெண்ணைப் போல நாணம் என்ன  சொல்லம்மா!’’

என்று கண்ணதாசனும்,

‘’வளர்ந்து விட்ட பருவப்பெண்போல் உனக்கு வெக்கமா ? – தலை

     வளைந்து சும்மா பாக்குறியே  தரையின் பக்கமா, – உன்னை

வளர்த்துவிட்ட   தாய்க்குத் தரும்  ஆசை முத்தமா ?’’

என்று மருதகாசியும்  பாடுகிறார்கள்.

வயலில் நீர் பாய்ச்சுவதற்காகச்  சிறுவாய்க்கால்களை மண்வெட்டியால்  உருவாக்குவார்கள்! அதன் இருமருங்கிலும் மண்ணை அணைத்து  வரப்புக்களை அமைப்பார்கள்!  உயர்ந்து வளர்ந்த நெற்கதிர்கள்  நடு வரப்பில் தலை சாய்த்துக் கிடக்கும்.  பாத்தி பிரித்தாலும்  பயிர்கள் பாசத்துடன் ஒன்றையொன்று  தழுவிக் கிடக்கும் காட்சியைச் சேக்கிழார் பெருமான் பார்க்கிறார். அவர்,

‘’மொய்த்தநீள்  பத்தியின்பால்  முதிர்தலை வணங்கி ‘’

 

நிற்கின்றன என்கிறார். அந்தக் காட்சி சேக்கிழார் திருவுள்ளத்தில் , வேறோர் அழகிய காட்சியை நினைவுக்கு கொண்டு வருகின்றது. சிறந்த சிவனடியார்கள்  ஒருவரை ஒருவர் காணும்போது, சிவபக்தி மேலிடச் சிவனடியார்களையம் சிவனென்றே எண்ணித்  தலைதாழ்ந்து வணங்குகிறார்கள். அந்தக் காட்சியை இந்த நெற்பயிர்கள் நினைவூட்டுகின்றன.

நெல் நாற்று முளைத்து வளரும்போது பச்சைப் பாம்பு சூல்  கொண்டது போல் இடையில் பருத்து நுனியில் சிறுத்துக் காணப்படும். அதுவே மேலும் வளர்ந்து   முற்றாத கருக்காயுடன் இருந்தால், கீழானவர் சிறிது செல்வம் பெற்றால் எவ்வாறு தலை நிமிர்ந்து நிற்பாரோ அவ்வாறு நிற்கும், பின்னர் மேலும் வளர்ந்து தேர்ந்தெடுத்த நூற்கல்வியுடையார்  எவ்வாறு தலை வணங்கி நிற்பாரோ, அவ்வாறு தலைவணங்கிப் பயன்தரும்’’ என்று திருத்தக்க தேவர் சிந்தாமணியில்  கூறுகிறார்! இதனைச்

‘’சொல்லருஞ்  சூற்பசும்  பாம்பின் தோற்றம் போல்

 மெல்லவே    கருவிருந்    தூன்றி     மேலலார்

 செல்வமே   போல்தலை   நிறுவித் தேர்ந்தநூல்  

 கல்விசேர்  மாந்தரின் இறைச்சிக் காய்த்தவே!’’

என்று கூறுகிறார். இவ்வாறு திருத்தக்க தேவர் பொதுவாகக் கூறிய உவமையை சேக்கிழார் மேலும் செழுமைப்  படுத்துகிறார்!  கல்விசேர் மாந்தர் கடவுளை மறுப்பவரானால் , சரியாகி விடுமா? கற்றதனால் ஆய பயன் இறைவன் நற்றாள் தொழுவதல்லவா? ஆகவே கற்றவர் கடவுளின் சிறப்பையும் அறிந்தவர் ஆதல் வேண்டும். கதங்காத்துக்  கற்றடங்கியவனே , அறத்தை நிலை நாட்டுவான். கல்லாதவரும் கடவுளின் உயர்வை உணர்ந்தால் கற்றவரைவிடச் சற்று விரைவாகக் கடவுளின் அருகே செல்வர்!ஆகவே இறைப்பற்றில் நிலைத்தவர் எங்கும் இறைவனையே காண்பர்! கற்றவரின் பரிபக்குவம் கடவுள்  நிலையைக் காட்டிவிடும். இதனையறிந்த  சேக்கிழார் பெருந்தகை, விளைந்த நெல் வளைந்து வீழ்வதைச்  சிவனடியாரின் பணிவைக் காட்டும் எடுத்துக் காடாகக் காண்கிறார். அதனால்

‘’ பத்தியின் பாலர் ஆகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர் தத்தமில்  கூடினார்கள்‘’ என்றால்அங்கேயே தலையினால் வணங்குவர்  என்கிறார். அவ்வணக்கத்துக்குக் காரணம் அவர்கள் கல்விகற்றதன் பயனாகக் கடவுள் நெறியைக் கற்றமைதான். அவர்களே  வித்தகர். விளைந்த நெல்லும், முதிர்ந்த அறிவினரும் வளைந்து  வணங்குவது, இருவகையும்  முற்றிப் பக்குவம் பெற்றதால்தான்!

அக்காலத்தில்  திருஞான சம்பந்தர் திருவையாற்றில் வழிபாடு செய்து கொண்டிருந்தார்.அப்போதுஅருகில் உள்ள திருப்பூந்துருத்திக்கு திருநாவுக்கரசர் வருவதாகக் கேள்வியுற்றார். உடனே திருப்பூந்துருத்தி நோக்கிக் கிளம்பினார். அவர், இறைவன் அளித்த சிவிகையில் ஏறி விரைந்தார். திருப்பூந்துருத்தியை நெருங்கியவுடன்மிகுந்த ஆவலுடன், சிவிகை சுமந்து வந்தோரிடம் , ‘’எங்குற்றார்   அப்பர்!’’ என்று கேட்டார். உடனே விடைவந்தது! ‘’ உங்கள் சிவிகையைச்  சுமந்து வரும் பேறு  பெற்ற  அடியேன் இங்குற்றேன்!’’ என்ற குரல் சிவிகை  சுமப்பவருள் ஒருவராக நடந்து வந்த அப்பரடிகளிடமிருந்து வந்தது! துணுக்குற்றுக் கீழிறங்கிய  ஞானசம்பந்தர் அப்பரடிகளின் முன்னே தலைதாழ்த்தி வணங்கினார்!   இருவரும் பக்தியின் பாலராகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர்கள், ஆதலால்  எதிரெதிரே கண்டு வணக்கினர்!  இதனையே சேக்கிழார் பெருந்தகை,

‘’பத்தியின் பாலராகிப் பரமனுக்கு ஆளாம்  அன்பர்

 தத்தமில்   கூடினார்கள்  தலையினால்  வணங்குமாபோல் ‘’

என்று பாடினார். தேவாரமும் ‘’தலையே நீ வணங்காய்!’’  என்றும், ‘’ வாழ்த்த வாயும்  நினைக்க மடநெஞ்சும்  தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை.’’ என்றும் பாடுகின்றன! வயலின் நெற்பயிர்கள் தலை சாய்த்து வணங்கிக் கிடக்கின்றன. அதற்குக் காரணம், வயலில் விளைந்து கதிர் முதிர்ந்தமையால், அதாவது முழுப்பக்குவம் பெற்றமையே  ஆகும். அவை  ஞானம் முற்றிய சிவனடியார்கள் போலத்  தமக்குள் தலைவணங்கிக் கிடக்கின்றன! ஆகவே முற்றிய ஞானம் பெற்ற  அடியார்கள் போல,  நெல்லும் கதிர்முற்றிப் பக்குவம் பெற்ற  நிலையில் தலை சாய்த்து வணங்குகின்றன!  இனி முழுப்பாடலையும்  ஒருமுறை படிப்போம்.

‘’பக்தியின்    பாலராகிப்     பரமனுக்கு     ஆளாமன்பர்

  தத்தமிற்   கூடினார்கள் தலையினால்  வணங்குமாபோல்

  மொய்த்தநீள்   பத்தியின்பால்  முதிர்தலை  வணங்கிமற்றை

  வித்தகர்   தன்மைபோல  விளைந்தன  சாலி எல்லாம்!’’

தமிழிலக்கிய  நயமும், சைவ சமயப்  புலமையும் ஒருசேர விளங்கும் சேக்கிழார் பெருந்தகை இயற்றிய பற்பல  பாடல்களுள் இதுவும்  ஒன்று!

                                 ==============================================================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *