-மேகலா இராமமூர்த்தி

மக்கள் வாழ்வை அறம்செறிந்த, பொருள்பொதிந்த, இன்பம் நிறைந்த வாழ்வாக மாற்ற வழிகாட்டும் ஒப்பற்ற நூல் நாலடியார் என்பதற்கு இத்துணை வாரங்கள் நாம் கற்றறிந்த நாலடியார் செய்யுட்களே அங்கை நெல்லியென சான்று பகர்பவை.

நானூறு பாடல்களில் நயமிகு கருத்துக்களை வகுத்தும் தொகுத்தும் சொன்ன நாலடியாரில் நாம் இதுவரை பயின்ற பாடல்கள் பல. அவற்றில் சிலவற்றை ஒருமுறை மீள்பார்வை செய்து இத்தொடரை நிறைவுசெய்வது சிறப்பாயிருக்குமென எண்ணுகின்றேன்.

அம்மனிதன் இங்குதான் நின்றான், இருந்தான், கிடந்தான், தன் சுற்றம் அலற இப்போது உலகவாழ்வை நீத்துச் சென்றான் என்று சொல்லும்வண்ணம், புல்லின்மேல் நீர்த்துளியாய், விரைந்து மறைந்தழியும் மானுட வாழ்வில், நாளை செய்குவம் என்று எந்த நல்லறத்தையும் ஒத்திப்போடாமல் இன்றே அதுவும் இன்னே செய்துமுடித்தலே நன்று.

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை – இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்.
  (நாலடி – 29)

மாந்தர்கள் ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி, பால் வேறுபாடின்றி, நரை திரை மூப்பு பிணி சாக்காடு என்பவற்றிற்கு உட்பட்டே ஆகவேண்டும். ஆகலின், அழியக்கூடிய யாக்கை மீதும், நிலையிலா எழில்கொண்ட காரிகையர் மீதும் பற்றுக் கொள்வதை ஒழிப்பதே  அறிவுடைமையாகும்.

கீழ்மக்கள் அறிவற்றவகையில் தம்மை ஏதேனும் தகாதசொல் சொல்லிவிட்டாலும் மேன்மக்கள் அதற்காகச் சினந்து வன்மொழிகளால் அவர்களைத் திருப்பித் திட்டமாட்டார்கள் என்று மேன்மக்களின் அருங்குணத்தைப் போற்றும் நாலடி, அதற்குக் காட்டும் சான்று நினைந்தின்புறத்தக்கது.

கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கௌவினார் ஈங்கில்லை – நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.
 (நாலடி – 70)

நல்ல நாள் கேட்டறிந்து, அந்நன்னாளிற் பலரும் அறியும்படி மணமுரசு கொட்டித் திருமணம்செய்து தன் காவலிற் புகுந்த மெல்லியளான அன்புடை மனையாட்டியும் அகத்திலிருக்க, ஒருவன் அயலான் மனைவியை அடையக் கருதும் பிறன்மனை நயத்தல் அறனில் இழிசெயலாகும்.

பல்லா ரறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணஞ் செய்து கடிப்புக்க – மெல்லியற்
காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
ஏதின் மனையாளை நோக்கு. 
(நாலடி – 86)

கைம்மாறு செய்யவியலா வறிஞர்க்கு உதவுவதே ஒரு நல்லாண்மகனின் கடமையாகும்; அஃதே உண்மையான ஈகையும் ஆகும். அதைவிடுத்துப் பதிலுதவி செய்யும் தகுதிபடைத்தார்க்கு உதவிடுதல் ’விளக்கமான கடன்’ என்னும் பெயருடைத்தேயன்றி அஃது ஈகையாகாது.

ஏற்றகைம் மாற்றாமை என்னானுந் தாம்வரையா
தற்றாதார்க் கீவதாம் ஆண்கடன் – ஆற்றின்
மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்
பொலிகடன் என்னும் பெயர்த்து
.  (நாலடி – 98)

ஊழ்க்கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட நாலடியின் ஆசிரியர்கள், பண்டை வினைகளின் பலனை ஒருவன் இப்பிறவியில் அனுபவித்தே தீரவேண்டும். பல பசுக்களின் இடையில் விடப்பட்டாலும் இளைய ஆன்கன்றானது தன் தாயினைத் தேடித் தெரிந்தடைதலைப்போலத் தொன்று தொட்டுவரும் பழவினைகளும் தன்னைச் செய்த உரிமையாளனைத் தப்பாமல் தேடியடையும் தன்மையுடையவை என்கின்றனர்.

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.  (
நாலடி – 101)

அழியா விழுச்செல்வமாகிய கல்வி கரையற்றது; ஆனால் மானுட வாழ்க்கையோ குறுகியது. இக்குறுகிய வாணாளில் நல்லனவற்றைக் கற்று அல்லனவற்றைத் தள்ளுதல் வேண்டும் என்பதை அழகிய உவமை வாயிலாய் விளக்குகின்றது நாலடி.

கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து. 
(நாலடி – 135)

பிறருடைய அந்தரங்கக் கருத்துக்களைக் கேட்டலிற் செவிடனாய், அயலார் மனைவியரைக் காமக் கருத்துடன் நோக்குதலிற் குருடனாய், தீயவான புறங்கூற்று மொழிகளைக் கூறுதலில் ஊமையனாய் ஒருவன் ஒழுகுவானாயின், அவனே மேன்மையுடைய மனிதனாவான். அவனுக்கு வேறாரும் அறமுரைக்கத் தேவையில்லை!

பிறர்மறை யின்கட் செவிடாய்த் திறனறிந்
தேதிலா ரிற்கட் குருடனாய்த் தீய
புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல் யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு. 
(நாலடி – 158)

எப்படிப்பட்டவரின் கேண்மை நன்று? எவருடையது தீது? என்பதற்கு நாலடி நவிலும் விளக்கமிது!

யானையை ஒத்த இயல்புடையாரது நட்பை நீக்கி, நாயை ஒத்த இயல்புடையாரது கேண்மையைத் தழுவிக் கொள்ளுதல் வேண்டும்; ஏனெனில், யானை பலநாள் பழகியிருந்தும் தன்னை வளர்த்த பாகனையே குற்றங்கண்டு கொல்லும்; ஆனால் நாயோ தன்னை வளர்த்தவன் சினத்தால் தன்மேல் வீசிய வேல் தன் உடம்பில் உருவி நிற்கும்போதினும் அவன்பால் கொண்ட அன்பால் வால்குழைத்து நிற்கும். எனவே பிழைபாராட்டாத இயல்புகொண்ட பண்பாளரையே அறிந்து நட்புச் செய்தல் வேண்டும்.

யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் – யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.
  (நாலடி – 213)

”தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்னும் புறநானூற்றுப் புலவர் பூங்குன்றனாரின்  பொன்மொழியையே சற்று விரிவாக்கி நாலடியின் ஆசிரியர்கள் மொழிந்த நற்பாட்டு இது! 

நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மே லுயர்த்து நிறுப்பானும் தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்.  
(நாலடி – 248) 

ஆதலால், நம் ஆக்கத்துக்கும் அழிவுக்கும் நாமே காரணம் என்பதையறிந்து பொறுப்போடு நடந்துகொண்டால் வெற்றி நிச்சயம்.

ஒருவன் ஒரு நூலைக் குறித்து அவையிலே பேசப்புகுமுன் பொழிப்புரை அகலவுரை நுட்பவுரை எச்சவுரை என்னும் நால்வகையுரைகளாலும் அந்நூலை ஆராய்ந்து தெரி(ளி)ந்து, அதன் விரிந்த பொருட்பெருக்கை அவையில் விளக்கிக் காட்டவேண்டும். அவ்வாறில்லையேல் அஃது உரையாகா!

பொழிப்பகல நுட்பநூ லெச்சமிந் நான்கின்
கொழித்தகலங் காட்டாதார் சொற்கள் – பழிப்பில்
நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட!
உரையாமோ நூலிற்கு நன்கு  
(நாலடி – 319)

பொன்னாற் செய்த கலத்தில் உணவூட்டிப் பாதுகாத்தாலும் நாயானது பிறர் எறியும் எச்சிற்சோற்றுக்குக் கண்ணிமையாமல் விழித்துக்கொண்டு காத்துக் கிடக்கும்.  அத்தன்மையாக, பெருமைக்குரியவனாகப் போற்றினாலும்  கீழ்மக்கள் செய்யும் செயல்கள் அந்நிலைமைக்கு மாறாகவும் வேறாகவுமே இருக்கும். இதனை நாம் உணர்ந்து அவர்களைத் திருத்தும் வீண்முயற்சியில் நம்மை வருத்திக்கொள்ளாதிருத்தலே நன்று. 

பொற்கலத் தூட்டிப் புறந்தரினும் நாய்பிறர்
எச்சிற் கிமையாது பார்த்திருக்கும் – அச்சீர்
பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யுங்
கருமங்கள் வேறு படும்.  
(நாலடி – 345)

குடும்ப விளக்காய் அகத்துக்கு ஒளியூட்டும் இல்லாள் இல்லாத இல்லம் சிறவாது. அது கண்கொண்டு பார்த்தற்கியலாததொரு கொடிய காடாகும்.

மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
இழைவிளக்கு நின்றமைப்பின் என்னாம் – விழைதக்க
மாண்ட மனையாளை யில்லாதான் இல்லகம்
காண்டற் கரியதோர் காடு
.  (நாலடி – 361) 

ஆகவே, ஒழுக்கமிகு மனையாளைக் காத்தோம்பி, கள்ளமனமும் பொருள்நோக்கமும் கொண்ட விலைமகளிரைவிட்டு விலகியிருப்பதே போற்றத்தக்க நல்லாண்மை என்கின்றது நாலடியார்.

இவ்வாறு நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நற்கருத்துக்களின் கருவூலமாய்த் திகழ்கின்ற நாலடி எனும் நூலடியொற்றி நாம் வாழ்ந்தால் நம் வாழ்வு வளம்பெறும் என்பது திண்ணம்.   

[முற்றும்]

*****

துணைநூல்:

1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்  பிள்ளை

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *