’மம்மி’யாரின் மறுமகள்!
’மம்மி’யாரின் மறுமகள்!
சிறுகதை
ரமணி
“அம்மா, உன் மாமியார்-மாமனார் உன்னை ஆட்டிவெச்சது மாதிரி நான் ஆகவிடமாட்டேன்”, என்றேன் நான் உறுதியான குரலில்.
“அதெல்லாம் போன தலைமுறை ஹேமா! நீயும் மாப்பிள்ளையும் ஐ.டி.கம்பெனில வேலை பார்க்கறதனால உங்க மாமியார்-மாமனார் நிச்சயம் அட்ஜஸ்ட் பண்ணிப்பா. அவாளுக்கு ஒரே குழந்தை, அதுவும் பிள்ளைங்கறதால, உன்னை சொந்தப் பொண் மாதிரி பார்த்துக்கறோம், கவலை வேண்டாம்னு கல்யாணம் முடிஞ்சு ஊருக்குக் கிளம்பறச்ச சொன்னால்லயா? அப்புறமென்ன?”
எனக்கு அம்மா பேரில் முன்பிருந்த எரிச்சல் இப்போது சிரிப்பாக மலர்ந்தது.. என் பிறந்த வீட்டிலேயே சொந்தப் பெண்ணான நான்தான் எல்லா வீட்டு வேலைகளையும் அதுநாள் வரை செய்துவந்தேன்! என் தங்கை வசந்தாவும் ஒரே தம்பி சந்துருவும் தம் ’மம்மி-டாடி’யின் செல்லக் குழந்தைகளாக வளர்ந்தனர். ’நாளைக்கு மாமியார் ஆத்துல இடிச்சுக் காட்டுவா’ன்னு சொல்லியே என்னிடம் எல்லா வேலைகளையும் வாங்கி என்னைக் ’கொடுமைப் படுத்திய’ என் தாயார் இப்போ நாக்கு மேல பல்லைப்போட்டுப் பேசறா!
“சொந்தப் பொண்ணா நீ என்னை ட்ரீட் பண்ணியே, அதுமாதிரி அவாளும் பண்ணினா நான் சும்மா இருக்கணுங்கறயா?”
என் கேள்வி அம்மாவைச் சுட்டது அவள் முகத்தில் தெரிந்தது. “எல்லாம் உன் நன்மைக்குத்தான் பண்ணினேன். நீ எல்லா வேலையும் கத்துண்டு பொறுப்பா செஞ்சு பழகினாத்தானே நாளைக்கு உனக்குப் புக்காத்தில ஈஸியாகவும் பெருமையாவும் இருக்கும்? அப்பா-நான் ரெண்டு பேரும் ஸ்கூல் டீச்சரா இருந்து சம்பாதிச்சு உன்னைக் கஷ்டப்பட்டு இஞ்சினியரிங் டிகிரி படிக்கவெச்சதையும் நெனச்சுப்பாரு. சரி விடு, கல்யாணமாகி இந்த மூணு மாசத்தில உனக்கு அங்க எப்படி இருக்கு? அவாகிட்ட உனக்கு ஏதாவது குறை உண்டா?”
“பெரிசா ஒண்ணுமில்லை. ஆனால், நான் சனி-ஞாயிற்றுக் கிழமைகள்ல மூணு வேளையும் சமையல் பண்ணிச் சுத்து வேலைகளையும் பார்த்துக்கணும்னு மாமியார் எதிர்பார்க்கறார்…”
“நியாயம் தானே?”
“என்ன நியாயம்? நானும் விஜய்யும் தினமும் போகவர ரெண்டு மணிநேரம் கம்பெனி கார்ல-பஸ்ல ட்ராவல் பண்றோமாக்கும்! அதைத் தவிரப் பத்து மணிநேரம் ஆஃபீஸ்ல அல்லல் படறோமாக்கும்! சனி-ஞாயிறு ரெண்டு நாள்தான் எங்களுக்கு ஓய்வு. சமயத்தில சனிக்கிழமை கூடப் போகவேண்டியிருக்கு. அந்த ரெண்டு நாள்ல நாங்க காலைல எழுந்துக்கறதுக்கே மணி ஏழு-ஏழரை யாயிறதில்ல! அப்புறம் எங்க சமையல் பண்றது? மாமியார் ஹௌஸ்வைஃப் தானே, பண்ணட்டுமே? நான்தான் சனி-ஞாயிறு ரெண்டு நாள்லயும் சாயங்கால காப்பி-டிஃபன், ராத்திரி டின்னர் ரெண்டும் பார்த்துக்கறேனே, அது போதாதா?”
“உன் ஆத்துக்காரர் ஒண்ணும் சொல்லலையா?”
“அம்மா கேட்டா நீ வீக்-என்ட் காலைலயும் சமைக்கணும்னு சொன்னார்.”
“ரொம்ப மோசம்டீ! இந்தாத்துக்கு ஒரு மாட்டுப்பொண்ணு வந்தா அவள் அப்படிலாம் இருக்க நான் விடமாட்டேன்! ஐ.டி.-வேலைக்குப் போயிண்டே நீ இந்தாத்துல பெரும்பாலும் தினமும் ராத்திரி சமையல் பண்ணுவியே? புக்காத்தில வாரத்தில ரெண்டு நாளாவது எல்லாத்தையும் நீயும் உன் புருஷணும் பார்த்துண்டு அவா ரெண்டு பேர்க்கும் ரெஸ்ட் தர வேண்டியதுதானே? உங்க மாமியார் ஹவுஸ்வைஃப்-னாலும் மாமனார் ஒரு யூ.ஜி.ஸி. கல்லூரி முதல்வரா இருந்து ரிடயர் ஆனவர்தானே? மாமியார் தினமும் ரெண்டு வேளையும் சமையல் பண்ணிப் போடறா, மாமனார் உங்க ரெண்டு பேர்க்கும் காலை ப்ரேக்ஃபாஸ்ட் பரிமாறி, மத்யானம் சாப்பாட்டைக் கட்டிக் கொடுத்தனுப்பறார்னு சொன்னேல்ல, அதுமாதிரி யார் செய்வா சொல்லு? அவா அப்படி அட்ஜஸ்ட் பண்ணிண்டு இருக்கற போது நாமளும் கொஞ்சம் கிவ்-அண்ட்-டேக்-கா இருக்கணும். அப்பதான் ஏதும் பிரச்சனை இருக்காது.”
“அவா அட்ஜஸ்ட் பண்ணிண்டிருக்கறது எனக்கு ரொம்பத் திருப்தி, சந்தோஷம் தாம்மா? ஆனாலும் நான் முதல்லயே சொன்ன மாதிரி, உன்னை உன் இன்-லாஸ் ஆட்டிவெச்ச மாதிரி என்னை இவா ஆட்டிவெச்சிடக் கூடாதுன்னுதான் நான் இவ்ளோ ஜாக்கிரதையா இருக்கேன். என் அதிர்ஷ்டம் விஜய்யும் எனக்கு சப்போர்ட் பண்றார். கொஞ்சம் இடம் கொடுத்தா எல்லாம் விஸ்வரூபம் எடுத்திரும்னு எனக்கு நல்லாத் தெரியும்.”
“நீ சொல்றது ஒருவகைல சரிதான். இருந்தாலும் நமக்கும் கொஞ்சம் மனசாட்சி வேணும். நீங்க ரெண்டு பேரும் ஒரே கம்பெனி, காலைல எட்டரை-மணிக்குக் கார்ல ஒண்ணா போயி சாயங்காலம் பெரும்பாலும் ஏழரை மணிக்குக் கம்பெனி பஸ்ல திரும்பி வர்றேள் இல்லையா? வரும்போது ஆத்துக்கு வேண்டிய கறிகாய்-பழம், ஸ்நாக்ஸ் இது மாதிரி வாங்கிண்டு வரலாம் இல்லயா?”
“ஏழெட்டு தரம் மாமியார் சொல்லிப் பார்த்தார்! டைட் ஆஃபீஸ் வேலல எப்படா வீட்டுக்கு வந்து விழுவோம்னு இருக்கறதால நாங்க பெரும்பாலும் இந்த வேலையை மறந்துடுவோம்! அதான் தினமும் மாலை மாமியார் கோவிலுக்கும், மாமனார் ஸ்கூட்டரை எடுத்துண்டு நண்பர்களைப் பார்க்கப் போறேன்னும் போறா இல்ல, அவாளே கறிகாய்-பழம்லாம் வாங்கட்டுமே?”
“அப்ப நீங்க ரெண்டு பேரும் ஆத்துக்குன்னு என்னதான் செய்யறேள்?”
“இப்ப நீதான் மாமியார் மாதிரி பேசறே! உனக்கு ஒருத்தி மருமகளா வந்தா அவள் பாடு பாவம்தான்! நாங்கதான் ரெண்டு பேரும் கைநிறைய சம்பாதிக்கறோமே? வேற என்ன செய்யணும்?”
“உங்க சம்பளத்தை நம்பியா அவா இருக்கா? உங்க மாமியார்க்கு அவா குடும்பப் பூர்வீக சொத்திலேர்ந்து பணமா ஒரு பெரிய தொகை பங்கா வந்தததும், உங்க மாமனார்க்குக் குறைஞ்சது மாசம் முப்பதாயிரம் ரூபாய் பென்ஷனா வரும்னும் கல்யாணத்துக்கு முந்தியே உங்க அப்பா விசாரிச்சு வெச்சிருக்கார். இன்னிக்கு தேதில மாடியும் கீழுமா ஒரு பெரிய வீட்ல, சுத்தீவர தோட்டத்தோட, எல்லா வசதிகளும் இருக்கற அவா வீட்ல நீங்க இருக்கறதே உங்களுக்கு ஒரு பெரிய கொடுப்பினை. மாடி வீட்டுக்கு மாசம் பதினஞ்சாயிரமும், அது போக அவாளுக்குக் குரோம்பேட்ல இருக்கற மூணு-பெட்ரூம் ஃப்ளாட்லேர்ந்து வேற மாசம் பதினஞ்சாயிரமும் வாடகை வரது. அதனால, பணத்தைப் பொறுத்தவரைக்கும் உங்க சம்பாத்யத்தை நம்பி அவா இல்லேன்னு நல்லாத் தெரிஞ்சுக்கோ…”
நான் ஒரு மருமகளாக நடந்துகொள்ளும் விதம் எனக்குச் சரியென்றே பட்டது. என்னை இவர்கள் ஆட்டிவைக்க விடமாட்டேன் என்று விஜய்யிடம் சொன்னபோது அவரும் அதை முழுமனதாக ஆமோதித்தார். என் மாற்றுப் பெற்றோர்களுக்கு அப்படியொன்றும் வயதாகி விடவில்லையே? மாமனார் அறுபத்திரண்டு வயதிலும் மாமியார் ஐம்பந்தேழு வயதிலும் விச்சாகத்தானே இருக்கிறார்கள்! தினமும் மூன்று வேளையும் சமையல்-டிஃபன் பண்ணுவதை மாமியார் உவந்தே செய்வதாக எனக்குத் தோன்றியது. நான் முடிந்தபோது உதவுவதிலும் அவர்கள் ஒன்றும் குறைகாணவில்லை என்றும் பட்டது.
*** *** ***
கல்யாணமாகி ஒன்பதாம் மாதம் பிறந்த வீடு சென்ற போது அம்மா தன் தொணதொண விசாரிப்பை வேறுவிதமாகத் தொடங்கினாள்.
“கல்யாணமாகி மாசம் ஒம்பதாறது. காலா காலத்தில ஒரு பிள்ளையோ பொண்ணோ பெத்துக்க வேண்டியதுதானே? ஏதாவது விஶேசம் உண்டா? இதப்பத்தி ஒங்க மாமியார் என்ன சொன்னா?”
“கல்யாணமாகி வந்த முதல் வாரமே மாமியார் நாங்க நாலு பேரும் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் சாப்பிடும்போது சொன்னார்: ’அடுத்த ஒரு வருஶத்தில ஒரு குழந்தையைப் பெத்துக்கோங்கோ! ஃபாமலி ப்ளானிங் அது-இதுன்னு தள்ளிப் போடாதீங்கோ. வேணும்னா ரெண்டாவது குழந்தைக்கு இடைவெளி விட்டுக்கலாம். காலாகாலத்தில பெத்துண்டாதான் எங்களால பேரனையோ பேத்தியையோ சீராட்டி வளர்க்க முடியும்…’”
“நாங்க ரெண்டு பேரும் ஒப்புக்கு சரின்னு சொன்னோமே தவிர, எங்களுக்கு ஒரு வருஶத்திலேயே பெற்றோர் ஆறதுல இஶ்டம் இல்லை. ஆகட்டுமே ரெண்டு மூணு வருஶம், இப்பவே என்ன அவசரம்? அப்படி இவாளால பாத்துக்க முடியலேன்னா ஒரு பேபி-சிட்டரை ஏற்பாடு பண்ணிக்கறோம்!”
“வாயாடி! இதுமாதிரி மாமியார்ட்ட சொன்னயா?”
“நான் சொல்லலை, விஜய்தான் சொன்னார். அவாளுக்கு மூஞ்சி ஒரு மாதிரி ஆகி அதுக்கப்பறம் இதுபத்திப் பேச்சை எடுக்கல!”
“ஸோ, உங்க தினப்படி வாழ்க்கை, நீ-மாப்பிள்ளை ஒரு துருவம், மாமியார்-மாமனார் ஒரு துருவம்னு ஒருத்தருக்கொருத்தர் அன்யோன்னியமா பேசிக்காம ஓடறதா?”
“அப்படீல்லாம் இல்லைப்பா! நீங்க ரெண்டு பேரும் அனாவசியமாக் கவலைப்படறேள்.”
“உங்க தினசரி வாழ்க்கையைப் பத்திச் சொல்லு, காலைல எழுந்ததுலேர்ந்து ராத்திரி தூங்கற வரைக்கும்…”
“விஜய் கார்த்தால ஏழு மணிக்குதான் எழுந்திருப்பார். நான் ஆறு மணிக்கே எழுந்து குளிச்சு ஸ்வாமி ரூமை எட்டிப் பார்த்து சத்தமா ரெண்டு ஸ்லோகம் சொல்லிட்டு நெத்தில குங்குமம்-விபூதி கீத்தோட வந்து மாமியாரைக் கொஞ்சம் அசத்துவேன்! அவர் ஒரு சின்னப் புன்னகையோட எனக்கு காப்பி கலந்து தர்றதுக்குள்ள நான் எங்க லஞ்ச்-பாக்ஸ் தேய்ச்சு ரெடி பண்ணி, ப்ரேக்ஃபாஸ்ட் தட்டெல்லாம் எடுத்து டைனிங் டேபிள் மேல வெச்சிருவேன். சமயத்தில ரொட்டித் துண்டுக்கெல்லாம் வெண்ணை-ஜாம் தடவி வைப்பேன். இதுக்குள்ள மாமனார் சந்தியை முடிச்சிண்டு வேஷ்டிக்கு மேல துண்டைக் கட்டிண்டு சாப்பாடு கட்ட வருவார். நாங்க ரெண்டு பேரும் எட்டு மணிக்கு டிஃபன் பண்ணிட்டு சரியா எட்டரை மணிக்கு வண்டி வந்து கிளம்பிப் போவோம்.”
“சாயங்காலம்?”
“அதுதான் கொஞ்சம் ட்ரிக்கி! கம்பெனி பஸ்ஸைப் பிடிச்சுக் கேம்ப் ரோடுல இறங்கிப் பத்து நிமிஷம் நடந்து ஏழறை மணிக்கு ஆத்துக்குள்ள நுழையற போதே அப்பாடான்னு இருக்கும்! மாமியார் ஹால்ல டீவியை ஓடவிட்டு சமையல் கட்டுல இருப்பார். தினமும் சாயங்காலம் ஸ்கூட்டர்ல ஊர் சுத்தற மாமனார் அவா ரூம்ல உக்காந்து லேப்டாப்ல உலகத்தச் சுத்திண்டிருப்பார்! நாங்க தினமும் ஆஃபீஸ் ஃபுட்கோர்ட்ல நாலு மணி வாக்ல காபி-டிஃபன் சாப்ட்ருவோம். அம்மா-அப்பாட்ட ஹலோ சொல்லிட்டு விஜய் ஸ்டடி ரூம்ல நுழைஞ்சார்னா எட்டரை மணிக்கு சாப்பிடும் போதுதான் வருவார். எனக்கும் தினமும் ஃபேஸ்புக்-ல அரட்டை அடிக்கணும்! மாமியார்ட்ட ஏதாவது வேலை இருக்கான்னு கேட்டாத் தலைல கட்டிடுவார்னு தெரியும்! கொஞ்ச நேரம் குட்டிபோட்ட பூனை மாதிரி ஹால்ல குறுக்கும் நெடுக்குமா நடந்திண்டிருப்பேன்! அப்புறம் நைஸா நானும் ஸ்டடி ரூம்ல என் லேப்டாப் பார்த்திட்டு எட்டே-கால் மணிக்கு எங்க நாலு பேர்க்கும் சாப்பிடத் தட்டுவெச்சு, மாமியார் சமைச்சு வெச்ச பண்டங்களை டேபிள்ல கொண்டுவைப்பேன். சாப்பிடும் போது எல்லோரும் சிரிச்சு நல்லாத்தான் பேசிண்டிருப்போம். சாப்டதுக்கப்புறம் மாமியார் டீவில மூழ்கிடுவார். சமயத்தில வீட்ல பொதுவா இருக்கற டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்ல மேய்வார். நானும் விஜய்யும் எங்க லேப்டாப்பை எடுத்துண்டு ஒம்பதரை மணிக்கு பெட்ரூம் நுழைஞ்சு கம்ப்யூட்டர்ல இங்கிலிஶ் டீவி சீரியல் பார்த்துட்டு பத்தரை மணிக்குத் தூங்குவோம். அவா ரெண்டு பேரும் எப்போ தூங்கறா எப்போ எழுந்திருக்கறான்னு நாங்க குறிப்பா கவனிச்சதில்லை!”
“நீ ரொம்ப லக்கி அக்கா! உனக்கு அவர் மாமியார் இல்லை; மம்மி மாதிரி பார்த்துக்கறதால ’மம்மி’யார்தான்!”, என்றாள் என் தங்கை.
“அந்த ’மம்மி’யார்க்கு நீயும் ஒரு மாட்டுப் பொண்ணா இல்லாமா ’மறுமகளா’ நடந்துக்கறாயான்னு அப்பப்ப நிச்சயம் பண்ணிக்க”, என்றான் என் தம்பி.
இவர்களுக்கு எங்கிருந்து இவ்வளவு வாய் வந்தது என்று எனக்கு ஆச்சரியாமாக இருந்தது. “அது எனக்குத் தெரியுமே! இவ்ளோ நாள் ஜாக்கரதையா இருந்திட்டேன் இல்ல? இனிமே கொஞ்சம் நல்ல பொண்ணாப் படம்காட்ட வேண்டியதுதான்!”
*** *** ***
அடுத்த மூன்று மாதத்தில் என் ’மம்மி’யார்-மாமனார் கொஞ்சம் தம் சுயரூபத்தைக் காட்டுவதுபோல் தெரிந்தது! ஒரு சனிக்கிழமை மதியம் நாங்கள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது கூடத்தில் குரல் கேட்டு விழித்துக்கொண்டேன். மெல்லிய குரலில் அவர்கள் பேசிக்கொண்டாலும் எனக்குத் தெளிவாகக் கேட்டது.
“போன மாசம் ரெண்டு நாள் நாம மதுரைக்கு ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தபோது இவா ரெண்டு பேரும் வீட்ல சமைக்கவே இல்ல, பார்த்தேளா? கேட்டதுக்கு விஜய் சொன்னதா அவள் என்ன சொன்னா, ஞாபகம் இருக்கா? தினமும் வீட்டுச் சாப்பாடுன்னு போர் அடிச்சதுனால கேட்டரிங் ஆர்டர் பண்ணி காலம்பற-மத்யானம் சாப்ட்டாளாம். ராத்திரிக்கு ஜாலியா ஹோட்டல் போய் நார்த் இண்டியன் டிஶ்ஶஸ் சாப்டாளாம்.”
“எனக்கும் அது பிடிக்கல பத்மா! இந்தப் பயலும் தோட்டத்துக்குத் தண்ணி ஊத்தாம செடியெல்லாம் வதங்கிப் போய் நான்தான் சரிபண்ணினேன்!”
“ஆமாம், அவள் நித்யமல்லி, அரளிப் பூக்கூடப் பறிக்கலை! ரெண்டு வேளையும் ஸ்வாமி விளக்கக் ஏத்தினேன்னு சொன்னதுகூட சந்தேகம்தான்! இப்படிக் கொஞ்சம் கூட வீட்டுப் பொறுப்பு, குடும்பப் பொறுப்பு இல்லாம இவா இருக்கறதுக்கு ஒரு வழி பண்ணியே ஆகணும்!”
“என்ன செய்யலாம் சொல்லு?”
“என் சமையலை தினமும் சாப்டறது அவாளுக்கு போர் அடிக்குதில்ல? நம்ம குரோம்பேட் வீடுதான் இப்போ காலியா இருக்கே? அங்க போயி கொஞ்சநாள் தனியா இருந்துக்கோங்கோன்னு அனுப்சிடலாமா?”
“இவா கொஞ்சநாள் தனியா இருந்து பழக வேண்டியதுதான். ஆனால் குரோம்பேட்ல கம்பெனி பஸ்ல இறங்கி ஆத்துக்கு வர ரொம்ப தூரம் நடக்கணுமே? அதனால ஒண்ணு செய்வோம். இவாள இந்தாத்தில தனியா விட்டுட்டு நாம அங்க போய்டலாம். ஒரு வருஷம் இருந்து இவா எப்படி சமாளிக்கறான்னு பார்ப்போம். நாளைக்குக் காலைல இதுபத்தி பேசி முடிவுசெய்வோம்…”
எனக்குத் திகீரென்றது. அன்று மாலை அவர்கள் இருவரும் ஒரு கல்யாண ரிஸப்ஶன் சென்றுவிட, விஜய்யிடம் விஶயத்தைச் சொல்லி ஆலோசித்தேன். பேசாமல் அவர் தன் மம்மி-டாடிக்கு அவர்கள் எதிர்பார்க்கும் மகனாகவும், நான் என் ’மம்மி’யார்-மாமனாருக்கு ’மறுமகள்’ என்றும் மாறினால்தான் இதுவரை கிடைத்த சுகத்தை அனுபவிக்க முடியும் என்று தோன்றியது.
அன்று இரவு அவர்கள் வீடு திரும்ப இரவு மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் எல்லோரும் காலை எட்டுமணி வாக்கில் எழுந்தால் போதும் என்று சொல்லிவிட்டு இருவரும் தூங்கச் சென்றனர்.
*** *** ***
மறுநாள் காலை என் ’மம்மி’யார்-மாமனார் எழுந்த போது சமையல் கட்டில் குக்கரின் விசில் கேட்டு அசந்துவிட்டனர்! ஸ்வாமி விளக்கேற்றி ஊதுபத்தி மணந்துகொண்டிருக்கப் பூவெல்லாம் பறித்து ஒவ்வொரு படத்திற்கும் வைத்திருந்தேன். கூடத்தில் நடு விளக்குச்சரத்தில் இருந்த எம்.பி.3 பிளேயர் மெதுவாக உமா மோகன் குழுவினர் பாடும் ஸ்தோத்திரங்களை ஒலித்துக் கொண்டிருக்க, நான் ஒரு தட்டில் இரண்டு டபரா-டம்ளர்களில் காப்பியின் மணம் மூக்கைத் துளைக்க, ஹால் சோஃபாவில் அவர்களை அமர்த்திக் கொடுத்தேன். விஜய் ஆழ்துளைக் கிணற்று மோட்டரைப் போட்டுவிட்டு, ஹோஸ் பைப்பால் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
“போன மூணு மாசமா நீ தூரமா இருந்து குளிக்கலை போலிருக்கே? ஏதாவது விசேஶமா?”
“அப்படித்தான் போலிருக்கும்மா!”
“சரி, சாயங்காலம் நம்ப ஃபேமலி லேடி டாக்டர் சாந்தாட்ட போய் செக் பண்ணிப்போம். விஜய்யும் கூட வரட்டும்.”
*** *** ***