தொல்காப்பியச் செய்யுளியலில் பேராசிரியரின் பாட பேதம்

3

-முனைவர் பா. கலையரசி

முன்னுரை

     தமிழின் வளமையும், இனிமையும் அதன்கண் உள்ள இலக்கிய, இலக்கணங்களில் பொதிந்து கிடக்கின்றது.  ஒரு மொழியின் உடல், இலக்கியமெனில், அவ்வுடலின் குருதி இலக்கணமாகும்.  அந்த வகையில், நம் மொழிக்குக் குருதியாய் அமைந்து நாட்டின் வரலாற்றினை அறிவதற்குரிய சான்றுகள் பலவற்றுள் ‘தொல்காப்பியம்’ என்ற இலக்கண நூலுக்கு முக்கிய இடம் உண்டு.
தொல்காப்பியம் மூன்று பகுதிகளைக் கொண்டது. தமிழ் ஒலிகளை ஆராய்வதை முதல் பகுதியும், சொற்கள், சொற்றொடர்களின் அமைப்பை ஆராய்வதை இரண்டாவது பகுதியும் விளக்குகிறது.  மூன்றாவது பகுதியான பொருளதிகாரம் தமிழிலக்கியத்தை ஆராய்ந்து உரைப்பதாய் அமைந்துள்ளது. அவற்றுள் குறிப்பாக, செய்யுளுக்கு இலக்கணம் கூறும் செய்யுளியலில் பேராசிரியர் காட்டும் பாடபேதத்தை மட்டும் இக்கட்டுரை ஆராய்ந்து தெளிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  

 

 

பேராசிரியரின் உரைத்திறன்

    தமிழ்ப் படைப்புகளில் நிரம்பிக் கிடக்கும் வளங்களை உணர்ந்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு வெளிப்படுத்தியவர்கள் உரையாசிரியர்கள்.  வேற்று மொழியும் நாகரிகமும் தமிழ்மண்ணில் புகுந்து தமிழ்ப் பண்பாட்டினை மறக்கச் செய்த போதெல்லாம், பழம்பெரும் இலக்கண, இலக்கியச் செல்வங்களை தமிழர்களுக்கு எடுத்துக்காட்டி, விளக்கித் தமிழ்மரபை வாழச் செய்த பெருமை உரையாசிரியர்களுக்கு மட்டுமே உண்டு.

      தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் இறுதி நான்கு இயல்களான மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் ஆகிய நான்கு இயல்களுக்கு மட்டுமே பேராசிரியரின் உரை இப்பொழுது கிடைக்கின்றது. இந்நான்கு இயல்களிலும் பேராசிரியர் தமக்கென ஒரு தனிநடையைக் கையாண்டு உரை யாத்திருப்பதால், இவரது உரைநெறியில் ஒரு தனித்தன்மையைக் காண இயலுகிறது.

      பேராசிரியரின் உரைநெறிகள் அனைத்தையும் பகுத்தாய்ந்து வகுத்து வரையறுத்தால், சிறந்ததொரு உரைநூலின் கோட்பாட்டையும் நம்மால் உருவாக்க இயலும்.

பாடபேதம் – விளக்கம்

      ஒரு சொல்லுக்கு மாற்றாகப் பொருளிலும், ஓசையின் அமைப்பிலும் ஒத்த சொற்கள் வருவது பாடபேதம் சுட்டி விளக்கல் எனப்படும். அதாவது, அசையின் அமைதியையும், ஓசையையும், தொடரமைப்பையும், பொருளையும் ஒத்து அமையக்கூடிய வேற்றுமைச் சொல்லைக் குறிப்பது இவ்வகை ஆகும்.

        மூல நூலிலுள்ள சொற்களுக்கும், பேராசிரியரின் உரையில் உள்ள சொற்களுக்கும் பாடவேறுபாடு குறிப்பிடப்பட்டிருப்பினும், பேராசிரியர் யாத்துள்ள சொற்கள் யாவும் எந்நிலையிலும் மூலநூலின் பொருளை சிதைக்கா வண்ணம் அமைந்திருப்பது பேராசிரியத்தின் தனிச் சிறப்பென்றே கொள்ளலாம்.

ஏனைய வுரியசை – ஏனவை உரியசை
“இயலசை முதலிரண் டேனவை உரியசை”

[தொல்-பொருள்-இளம்பூரணம்-314]

      என்ற சூத்திரத்திற்கு முதல் இரண்டு இயலசையும், ஏனைய உரியசையும் இயையும் தன்மையை உடையன எனப் பொருள் கொள்ளலாம். இயலசை என்பதற்கு இயற்கையால் இணையும் நேர், நிரை, என்பவற்றையும், இவை செய்யும் தொழிலைக் குறிக்கும் உரியசைக்கு நேர்பு, நிரைபு என்பவற்றையும் நேரடிப் பொருளாகக் கொள்ள வேண்டும்.  இச்சூத்திர உரையில் பேராசிரியரினின்று மாறுபட்ட இளம்பூரணர் ‘ஏனவை உரியசை’ என்று பாடங் கொண்டுள்ளார்.

      பேராசிரியர் ‘ஏனைய வுரியசை’ என்று குறிப்பிடுகிறார். எனவே, ஏனையவை என்பதே ஏனவை என்று திரிவதால் பேராசிரியரின் பாடத்தினின்று பிறந்ததே இளம்பூரணர் கொண்டுள்ள வேறுபாடும் என்பது இதன்கண் தெளிவாகிறது.

நிரையுறினும் – நிரை இறினும்

      இயலசையும் உரியசையும் கலந்து வரக்கூடிய ஈரசைச் சீர்களை ஆசிரியவுரிச் சீராகக் கொள்ள வேண்டும் என்பதை,

     “முன்னிரை யுறினு மன்ன வாகும் [தொல்-பொருள்-பேராசிரியம் – 326]

      என்ற செய்யுளியல் சூத்திரம் தெளிவுற விளக்குகிறது.  இதில் பேராசிரியர் ‘நிரை யுறினும்’ எனவும், இளம்பூரணர் ‘நிரை இறினும்’ எனவும் பாடபேதம் காட்டியுள்ளனர்.

      நிரை இறினும் என்ற இளம்பூரணரின் பாடமானது நேர்பு, நிரைபு என்னும் உரியசைகளின் பின்னால் நிரை வந்து நிரையே ஈறாய் முடிந்து நிற்கும் முறைமையைச் சுட்டிக்காட்டுகிறது.  பேராசிரியர் கொண்ட நிரையுறினும் என்பது நிரையுதறுலைக் குறிக்கிறது. அதாவது, உரியசைகளான நேர்பு, நிரைபு ஆகியவற்றின்  பின்னால் நிரையசை வந்து மயக்கமுற்று, அது ஈரசைச் சீராய் மாறுவதைக் குறிப்பதாக அமைந்துள்ளது.  இவ்விடத்தில், சூத்திரப் பொருளையும் ஒப்பு நோக்கினால் பேராசிரியர் கொண்டுள்ள பாடம் நுட்பமுடையது என்பது தாமாகவே புலப்படும்.

கடியவும் படாஅ – கடியவும் பெறாஅ

      வெண்பா உரிச்சீரும் ஆசிரிய வுரிச்சீரும் கலித்தளையில் அடுத்தடுத்து முறைப்படி நிற்கும் தகைமையை உடையன என்ற கருத்தை,

      “கலித்தளை மருங்கிற் கடியவும் பெறாஅ”
[தொல்-பொருள்-இளம்பூரணம்-332]

என வரும் செய்யுளியல் நூற்பா விளக்குகிறது.

      ஆசிரியப்பாவில் கூறப்படவில்லையெனில், அது கலிப்பாவிலும் கூறப்படாது என்பதை உறுதிசெய்யும் வகையில் ‘கடியவும் படாஅ’ என்ற சொல்லை பேராசிரியர் பயன்படுத்தியுள்ளார். கடியவும் என்பதிலுள்ள மகர ஒற்று இறந்தது தழீஇய எச்சவும்மையாக நின்று ‘கடியவும் படாஅ’ என உரை செய்யப்பட்டுள்ளது.

      இதே பொருளில் இளம்பூரணர் ‘கடியவும் பெறாஅ’ என்று குறிப்பிட்டிருந்தாலும், தளை என்பன எல்லாம் எழுத்தெண்ணிச் சீர் வகுக்கப்படும் கட்டளையடியையே குறிக்கும் என்ற அடிப்படையை நிலைநிறுத்திப் பாடம் வகுத்த பேராசிரியரின் உரைத்திறன் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஓரொரு வழியே – ஒரோவொரு வழியே

செய்யுள் உறுப்புகளுள் ஒன்றான சீரின் ஒட்டுமொத்த வகையினை,

அந்நிலை மருங்கின் வஞ்சி யுரிச்சீ
      ரொன்றுத லுடைய வோரோர் வழியே”

[தொல்-பொருள்-பேராசிரியம் – 343]

      என்ற நூற்பா விளக்குகிறது.  இதில் “ஒரோவொரு” என இளம்பூரணரும், “ஓரொரு” எனப் பேராசிரியரும் பாடங்கொண்டுள்ளனர்.  இளம்பூரணரைப் போன்று ஒருவழி என்று மட்டும் உரைக்காமல், ‘ஓரொருவழி’ எனப் பேராசிரியர் சுட்டி உரைத்திருப்பதால் பத்து வஞ்சியுரிச்சீரும் ஆசிரியப்பாவில் மயங்கி வரும் இயல்புடையது என்பது தெளிவாகிறது.  எனவே, பேராசிரியரின் பாடத்தை பின்பற்றி ஆய்வது சீரின் வகைமை குறித்த தெளிவான சிந்தனைக்கு வித்திடுவது குறிப்பிடத்தக்கச் சிறப்பாகும்.

நேர்நிலை வஞ்சி – நேர்நிறை வஞ்சி

வஞ்சியுரிச் சீருக்குரிய எழுத்தின் வரையறையைக் குறிப்பிடும்,
          “சீர்நிலை தானே ஐந்தெழுத் திறவாது
            நேர்நிறை வஞ்சிக் காறும் ஆகும்”       [தொல்-பொருள்-இளம்பூரணம்-349]

      என்ற சூத்திரம் நேரீற்றுச் சீர்கள் அனைத்திலும் எழுத்துக்கள் நிற்கக் கூடிய நிலை ஐந்தெழுத்தை விட அதிகமாகப் பயின்று வராது என்பதையும், நிரையினை இறுதியாகக் கொண்டு வஞ்சியுரிச்சீர் வந்தால் அது ஆறெழுத்தினைப் பெறும் என்பதையும் விளக்குகிறது. மேற்காணும் நூற்பாவின் இரண்டாவது அடியில் வந்துள்ள நேர்நிறை என்பதையே இளம்பூரணர் பாடமாகக் கொண்டுள்ளார்.

      பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் இரண்டு அடிகளால் அமையப் பெற்ற இச்சூத்திரத்தின் முதலடியை ஒரு சூத்திரமாகவும், இரண்டாவது அடியை அதற்கடுத்த சூத்திரமாகவும் பிரித்து நேர்நிறைக்குப் பதிலாக நேர்நிலை எனப் பாடவேறுபாடு காட்டியுள்ளனர்.

      இளம்பூரணர் ஐந்தெழுத்தினைக் கொண்டு அதற்கு அதிகமாகாமல் வரக்கூடியவை நேரீற்றுச் சீர்கள் எனவும், ஆறு எழுத்தினைக் கொண்டவை நிரைவஞ்சி எனவும் இரு தொடர்களாக இணைத்துப் பொருள்கொண்டு ‘நேர்நிறை’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், சூத்திரத்தில் குறிப்பிடப் பெறும் வஞ்சியுரிச்சீர் இரண்டு சீர்களால் வருவதால் அதனை ‘சமநிலை வஞ்சி’ எனப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் குறிப்பிடுவது சமநிலையைக் குறித்து நிற்கிறது. இளம்பூரணரும், பேராசிரியரும் அவரவர் வகுத்துக் கொண்ட சூத்திர அடிகளுக்கு ஏற்ப அதன் பொருளையும், பாடத்தையும் மாறுபடக் குறிப்பிட்டுள்ள பாங்கு கூர்ந்து நோக்குவதற்குரியது.

குறிப்பிடத்தக்க பாட வேறுபாடுகள்: 

 • “பொழிப்பு மொரூஉவுஞ் செந்தொடை மரபு
  மமைத்தனர் தெரியி னவையுமா ருளவே”
  [தொல்-பொருள்-பேராசிரியம்- 402]
 • “தெரிந்தனர் விரிப்பின் வரம்பில ஆகும்”
  [தொல்-பொருள்-இளம்பூரணம்- 407]
  “தொடைநிலை வகையே யாங்கென மொழிப”
  [தொல்-பொருள்-இளம்பூரணம்- 408]
 • “துகளொடும் பொருளொடும் புணர்ந்தன் றாயிற்
  செவியுறைச் செய்யு ளதுவென மொழிப”
  [தொல்-பொருள்-பேராசிரியம்- 440] 

முடிவுரை:

   பேராசிரியர் பாடபேதம் சுட்டும்போது பிற உரையாசிரியர்களின் கருத்துக்களை எடுத்துக்காட்டித் தம் கருத்தை நிறுவுவது அவரின் தெளிந்த நோக்கை வெளிப்படுத்துகிறது.  செய்யுளியலில் மட்டும் பேராசிரியர் நூற்றி இருபதுக்கும் மேற்பட்ட பாடபேதங்களைச் சுட்டியுள்ளார்.  இக்கட்டுரையில் எடுத்தாளப்பட்டுள்ள அவ்வகைச் சில வேறுபாடுகள் இலக்கியப் பயிற்சிக்கு நல்லதோர் வழிகாட்டியாய் அமைவதோடு, செய்யுள் யாப்பதைக் கசடறக் கற்றுத் தெளிவுற விளக்கும் திறனாய்வாளர் பேராசிரியர் என்பதையும் நிறுவுகிறது.

*****

துணைநின்ற நூல்கள்

1) கணேசையர் [ப.ஆ], தொல்காப்பியம், பொருளதிகார மூலமும் பேராசிரியருரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.  இரண்டாம் பதிப்பு – 2007.

2) இளம்பூரணர் (உ.ஆ), தொல்காப்பியம், பொருளதிகாரம் பகுதி-3, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 2001.

3) இளங்குமரன், இரா., உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம், அப்பர் அச்சகம், சென்னை, 1971.

*****

கட்டுரையாசிரியர் – உதவிப் பேராசிரியர்,
தமிழ் உயராய்வுத்துறை,
சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரி,
மண்ணச்சநல்லூர்,
திருச்சி.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “தொல்காப்பியச் செய்யுளியலில் பேராசிரியரின் பாட பேதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *