பெருவை பார்த்தசாரதி

 

 

 

 

 

 

 

மன்னுபுகழ்க் காவிரி யாலெங்கள் நிலமொடு

====நன்செய் பயிர்களும் தழைத்ததொரு காலமாம்..!

தன்னிஷ்டம்போல் தமிழகமெங்கும் ஓடிய அது

====தண்ணீரின்றி வற்றியே தரையிலின்று குறுகியது..!

அன்றாடம் அலைததும்பும் அகண்ட காவிரிதான்

====இன்றும் வறண்ட காவிரியெனக் காட்சிதருகிறது..!

என்னவென இன்றதன் நிலையைச் சொல்வேன்

====என் நினைவலையில் நதிக்கரையே நிழலாடுது..!

 

என்னை மறப்பேன்! நதியில் அமிழும்போது

====எழுப்புமே கூழாங்கற்களென் நகவிரலை நெருடி..!

கன்னல் தமிழில் பாடிக்கொண்டே நீந்தும்போது

====கெண்டைமீனுமென் காலினழுக்கை நக்கி நீக்கும்..!

பொன்னிற மாலையில் நதிக்கரை மணலிலென்

====பொங்கும் நினைவைக் கவிதை யாக்கினேனின்று..!

என்னதான் நாமும் அறிவியலால் வளர்ந்தாலும்

====இயங்குமுயிர்க்கு நீர்தேவை! அது நதியிலில்லை..!

 

மன்னாவுலகில் மற்றவர் மெச்சிய பாரதத்தில்

====இன்னமும் வற்றாதஜீவ நதிகளுண்டு நீர்அறிவீர்.!

தென்னரங்கம் சூழவரும் காவிரிக் குழந்தையை

====திவ்யநதி கங்கைத் தாயுடனிணைத்து வைப்பீர்.!

தன்னிடம் தேவைக்கதிக மிருப்பதை..தானமாகத்

====தந்தருளும் மனநிலையை நதிமூலம் எழவைப்பீர்.!

அன்னமும் நீரும் இல்லையெனில் அதற்கொரு

====அர்த்தம் இராதெனும் உண்மையை நீரேற்பீரே.!

 

=========================================================

 

நன்றி:: தினமணி வெளியீடு:: 16-04-2018

 

நன்றி படம்:: கூகிள் இமேஜ்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *