திவாகர்

’அறுபது வயது வந்தபின்னர்தாம் நாய் படாத பாடு படுவீர் அதுவரை உமது ராஜ்ஜியம்தான்’ என்று ஒரு உருப்படாத ஒரு காது பாதியாக அறுபட்ட ஜோசியன் ஒருவன் அவரது சின்ன வயதில் சொல்லிவிட்டு தன்னிடம் அடியும் வாங்கிக் கொண்டு ஓடியதை இப்போதெல்லாம் நினைத்துப் பார்த்து உருகி உருகிப் போனார் மாத்ருபூதம். இந்த இரண்டு வருடமாக தான் கஷ்டப்படுவது போல எந்த நாயும் கஷ்டப்படாதுதான்.. அவைகளுக்கு என்ன சுதந்திரமாக உலாவும் ஜீவன்கள். சௌகரியமாக வாழ்க்கைப் படவே பிறந்த ஜன்மங்கள். இருந்தாலும் அந்த ஜோதிடனுக்கு இந்த நாய்கள் மேல் என்ன வெறுப்போ.. நான் படும் வேதனையை நாய் மட்டுமே பட்டிருக்கும் என்பது போல அல்லவா சொன்னான்..

ஆனாலும் அவன் சொன்னது உண்மைதானே.. தான் வேலை செய்து ரிடைர் ஆகும்வரை நம்மை யாராலும் அசைக்க முடிந்ததா.. ஆனால் இப்போது..

ஆமாம். மாத்ருபூதம் தன் கடைசி மூன்று எழுத்துக்கு ஏதுவாக மற்றவர் கண்களுக்கு பூதமாகத்தான் காட்சி அளித்து வந்தார். பிறந்ததிலிருந்தே அழுது கத்தி புரண்டு தலையைத் தரையில் அடித்துக் கொண்டாவது எதையும் சாதித்துவிடுவான் இவன் என்று அவர் அம்மா தன்னைச் சிறு வயதில் புகழ்ந்தாளா இல்லை வயிற்றெரிச்சல் தாங்காமல் இகழ்ந்தாளா என்பதெல்லாம் அவர் அப்போது பெரிதாக நினைக்கவில்லைதான். பள்ளியிலும் கல்லூரியிலும் கூட பெரிதாக அப்படி ஒன்றும் சாதித்தவர் இல்லைதான். சதா கடிந்துகொண்டே இருக்கும் தன்னை அவர் நண்பர்கள்  இவரைச் சேர்த்துக் கொள்ளத் தயங்குவதைக் கூட அவர்கள் தன்னைக் கண்டு அச்சப்படுகிறார்கள் என்று பெருமையாக நினைத்துக் கொண்டு அந்த அச்சத்தை மேலும் வளர்த்து வந்தவர்தான்.

ஆச்சரியம் என்னவென்றால் இவருக்கு  வாழ்க்கையில் இதுவரை அமைந்த அத்தனை பேரும் இவரைக் கண்டு அச்சப்படுகிறார்கள் என்றே நினைத்து மகிழ்ந்தவர்தாம். இந்தச் சமயத்தில்தான் அவருடைய ஜாதகத்தைப் பார்க்கவந்த அந்த காதறிந்த  ஜோதிடன் இவருக்குக் கல்யாணமும் வேலையும் அமோகமாக அமையும் என்றும் ஆனால் அறுபது வயது வந்தபின்னர் நாய் படாத பாடு படவேண்டி வரும் என்றும் அதற்குப் பரிகாரம் செய்தால் இவருக்கு நல்லது விளையும் என்றதோடு அந்தப் பரிகார விஷயம் தான் மட்டுமே அறியும் விஷயம் என்று பீற்றிக் கொண்டு சொன்னவனைத்தான் கோபத்தோடு கடிந்ததோடு மட்டுமல்லாமல் கையை வீசி ரெண்டு தட்டி விட்டு ஓடவைத்தவர்.

கல்யாணி அந்த சங்கீத ராகத்துக்கு இணையாக இனிமையாக பேசக்கூடிய திறமை பெற்றவள். நல்ல பாடகி. பட்டி மன்ற பேச்சுகள் பல இடங்களில் கலந்து கொண்டு வாலி நல்லவனா இல்லை சுக்ரீவன் நல்லவனா என்று தலைப்புகளிலெல்லாம் இடத்துக்கேற்றவாறு மாறி மாறிப் பேசி இருவரையும் நல்லவராக்கிய கெட்டிக்காரி என்று பெயர் வாங்கியவள். அரசாங்கப் பள்ளியில் ஆசியையாக நல்ல உத்தியோகமும் பெற்றவள்தான்.  சக ஆசிரியைகளிடம் அவள் பேச்சுக்கு பெரிய மதிப்புண்டு. அப்படிப்பட்ட கெட்டிக்கார பேச்சுக்காரி ஸ்ரீமதி கல்யாணி மாத்ருபூதம் ஆனதும் அவரெதிரே மட்டும் ஊமையாக மாறிப் போனதுதான் மாத்ருபூதத்தின் ஜாதக விசேஷம்.

கல்யாணம் ஆன முதல் நாளே மாத்ருபூதம் தன் சுய ரூபத்தை அவளிடம் காண்பித்தார். அவள் வேலைக்குச் செல்லக்கூடாது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அவள் தன்னிடம் எதிர்பேச்சு பேசக்கூடாது என்ற சத்தியத்தைக் கேட்டார். இவர் என்ன விளையாடுகிறாரோ என்று நினைத்தவள் வேண்டுமானால் எதிர்ப்பேச்செல்லாம் பேசாமல் இருக்க சத்தியம் செய்கிறேன் ஆனால் அரசாங்க வேலைக்குச் செல்லும் உரிமையைப் பறிக்கவேண்டாம் என்று கெஞ்சியதால் அவளிடம் பச்சதாபப்படுவது போல பட்டு அவளை மன்னித்துவிட்டு வேலைக்கு அனுப்பி வைப்பதாக பெரிய மனது பண்ணுவது போல சொன்னதும் இந்த கல்யாணி அசட்டுத் தனமாக எதிர்ப்பேச்சே பேசமாட்டேன் என்று சத்தியமும் செய்து கொடுத்துவிட்டாள்.  அந்த நிலையில் அவளுக்கு தன் அரசாங்க உத்தியோகமும் அதன் மூலம் தனக்குக் கிடைக்கும் பட்டி மன்ற அவகாசங்கள், பாட்டுக் கச்சேரிகளும் பறிபோகக் கூடாதே என்ற அச்சமும்தான் அப்படி செய்ய வைத்தது. அவ்வளவுதான் அடுத்த நாள் முதல் சதா பேசிக்கொண்டிருக்கும் கல்யாணி அவரைக் கண்டாலே பேச்சே வராதது போல நடந்து கொள்ள ஆரம்பித்தாள். இப்படிப்பட்ட அன்னியோன்யத் தம்பதிகள் இரண்டு பிள்ளைகளைக் கூடப் பெற்றுக் கொண்டது இன்னொரு ஆச்சரியம்தான்.

கல்யாணிதான் வேறு வழியில்லாமல் இவருக்கு வாழ்நாள் முழுதும் வாழ்க்கைப் பட்டோமே என்ற வகையில் இப்படி நடந்துகொண்டாள் என்றால் இந்த ஆபீஸ் காரர்களுக்கு புத்தி எங்கே போயிற்று என்றே புரியவில்லை. அவர் ஆடும் ஆட்டத்துக்கு அவர் பாஸ் வளைந்துகொடுக்க அவர் கீழ் செய்யும் ஆட்களும் அப்படியே நடந்துகொள்ள மாத்ருபூத ராஜ்ஜியம் எந்தக் குறையுமில்லாமல் அலங்காரமாக அட்டகாசமாக அரங்கேறிக்கொண்டிருந்ததுதான். வீடு போனால் ஆபீஸ் இல்லையென்றால் மறுபடியும் வீடு.. யாரும் தொல்லை இல்லாமல் டி.வி. பார்ப்பது, நாவுக்குப் பிடிக்த பண்டங்களை நன்றாக சுவைத்துச் சாப்பிடுவது, அப்படி இப்படி வீட்டிலுள்ளோரை மிரட்டிக் கொண்டே இருப்பது, அவர்கள் பயத்தை ரசிப்பது, குறட்டை விட்டு தூங்குவது எப்போதாவது சினிமா டிராமா என்பது போல மிக ஜாலியாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.

எங்கும் எல்லாமே இவர் இட்ட கட்டளைக்காகக் காத்திருப்பது போல நடந்தால் யாருக்குத்தான் அகங்காரம் வராது.. மாத்ருபூதத்துக்கு சற்று அதிகமாகவே வந்தது.. இதனால் கல்யாணிக்கும் பிள்ளைகளுக்கும் பல மனக் கஷ்டங்கள் வந்தாலும் வேறு வழியே இல்லாமல் பொறுத்துக் கொண்டனர். அட, அந்த அறுபது வயது நிறைவு முடிந்த அந்த நாளில் விழா எடுத்த நிலையில் கல்யாணியும் அழைக்கப்பட்டிருந்தாள். எத்தனை அட்டகாசமாக அரங்கேறியது அந்த விழா..

மாத்ருபூதத்துக்கு அந்த நாள் பூதாகரமாக நினைவில் வந்து கொண்டே இருந்தது. அந்த நாள் தன் அலுவலக வாழ்க்கைக்கும் இல்லாமல் தன் அகங்காரத்துக்கும் சேர்த்தே கடைசி நாளாக அமைந்துவிட்டதுதான்.

விழாவில் ஏதோ ஒரு பேச்சுக்காக கல்யாணியை ஒரு வார்த்தை பேசுமாறு கேட்டுக் கொண்டோரிடம் சிரித்துக் கொண்டே தன் கணவரைக் கை காட்டினாள். ‘ஆவர் ஒப்புக் கொண்டால் மட்டுமே தான் பேசுவதாக’ தைரியமாக அவரைக் காண்பித்து அனுமதி கேட்பது போல கேட்டாள். தலையில் அதுவரை சபையினரால் வைக்கப்பட்டிருந்த ஐஸானது இன்னமும் உருகாத நிலையில் தாராளமாகத் தலையை அசைத்து அவளிடம் நெருங்கி அவள் காதில் அனுமதி கொடுப்பதாக உளறியதும்தான் அவள் மேலும் மெதுவாகப் பேசினாள் அவரிடம்.

‘அது சரி, நான் சத்தியம் செய்திருக்கிறேனே நான் எதுவும் எதிர்வார்த்தைப் பேசறதில்லேன்னு.. பட்டிமன்ற பேச்சுக்காரி நான். கூட்டத்துல பேசறதுனா அப்படி இப்படின்னுதான் பேசிப்பழக்கம். உங்களை என்னையறியாம பேச்சோடு பேச்சா ஏதாச்சும் எதிர்வார்த்தைப் பேசிட்டா.. ஐயய்யோ நான் சத்தியத்தையெல்லாம் மீறமாட்டேன்?”

”ஐய்யய்ய.. அந்த சத்தியமெல்லாம் இப்போ ஒண்ணும் இல்லேம்மா.. நான் வாபஸ் வாங்கிட்டேன்னு நினைச்சுக்கோ..  நீ பாட்டுக்கு ரெண்டு மூணு வார்த்தை பேசு. என்னை ஒரு வார்த்தை சும்மா திட்டினாலும் சரி, பரவாயில்லே. இவங்க எல்லாம் ஜோக்கா நினைச்சு சிரிப்பாங்க பாரேன்..”

மாத்ருபூதம் சாதாரணமாக சொல்லியிருக்கலாம்.. அல்லது பேசு என்று அனுமதி கொடுப்பது போல தலையசைத்திருக்கலாம்.. நீ திட்டினாலும் சரிதான் என்று நாவில் யாரோ புகுந்து சொல்வது போல சொல்லிவிட்டதுதான் அவருக்கு எதிரியாகப் போயிற்று.

இத்தனைக்கும் இரண்டு வார்த்தைதான் பேசுவேன் என்று கூச்சமாகச் சொல்வது போல பாவனை செய்த அந்த பட்டிமன்ற பேச்சாளி முதல் இரண்டு வார்த்தைகளிலேயே சபை முழுவதையும் கல கலவென சிரிக்க வைத்து அவர்களை மயக்கத்தில் ஆழ்த்தித் தன் கட்டுக்குள் கொண்டு வந்தாள். மாத்ருபூதம் கூட வருந்திப்போனார்தான். இத்தனைநாள் இவள் பேச்சுக்களைக் கேட்காமல் போனோமே.. எத்தனை அற்புதமாகப் பேசுகிறாள் என்று ஆச்சரியம் கூட வந்தது அவருக்கு. இத்தனை பேசினாலும் தன்னைப் புகழ்கிறாள் இவள்.. ஒருவார்த்தை கூட திட்டாமல் பேசுகிறாள் என்பதிலும் அந்தக் கடினமனதுக்காரருக்குக் கண்ணில் கொஞ்சம் கண்ணீரும் வருவது போல கலங்கியதுதான். அரைமணி நேரம் கணவரைப் புகழ்ந்து தள்ளிய கல்யாணி தன் கணவருக்கு குழந்தை மனது என்றும் எப்போதும் அவருக்கு வாழ்க்கையின் கஷ்டம் தெரியாமல் வளர்த்து விட்டோம் என்றும் இனியும் அவர் கஷ்டத்தைக் காணவே கூடாது என்றும் மனமுருகி மாத்ருபூதத்தையும் உருக்கியவள் பேச்சு மயக்கத்திலிருந்த சபையைப் பார்த்து ஒரு கோரிக்கையை வைத்தாள்.

”தன் கணவருக்கு சொற்பக் கஷ்டம் வரக்கூட தன் மனம் சம்மதிக்கவில்லை என்றும், இனி என் கணவருக்கு வரும் நிதிகள் அனைத்தையும் தானே சரிபார்த்து சேவை செய்யப் போவதாகவும் அதற்குத் தன் கணவர் சம்மதத்துடன் அவர் வேலை செய்யும் இந்த நிறுவனமும் இன்று கொடுக்கும் தொகையுடன் இனி மாதா மாதம் அனுப்பும் பணத்தையும் தன் பேருக்கு அனுப்பி வைத்தால் தானே கணக்கு வழக்குப் பார்த்துக் கொண்டு எந்தக் குறையும் இல்லாமல் தன் கணவரைத் தன் கடைசி காலம் வரைக் காப்பாற்றும் பெரிய பொறுப்பைத் தான் ஏற்பதாகவும் கண் கலங்கச் சொன்னதை அந்தச் சபை ஆரவாரித்து ஏற்றுக் கொண்டது. மாத்ருபூதம் கண்கள் கலங்க எழுந்து நின்று கை தட்டித் தன் சம்மதத்தைத் தெரிவித்து ஒரு கடிதமும் கொடுக்க ஒப்புக் கொண்டார். உடனடியாக நிறுவனமும் அந்த நடவடிக்கையை ஏற்பாடு செய்வதாக ஒப்புக் கொண்டதோடு ஆதர்ச தம்பதியாக மாத்ருபூதம் தம்பதி விளங்குவதாகவும் கல்யாணியின் பதிபக்தி பார் போற்றவேண்டும் என்றும் அந்த அதிகாரிகள் போற்ற விழா இனிதே நிறைவேறியதுதான்.

மாத்ருபூதம் நிஜமாகவே தான் அதிர்ஷ்டக்காரன் என்றுதான் நினைத்துக் கொண்டார். கல்யாணி சபைமுன்பாக இத்தனை பேசுவாள் என்று எதிர்பார்க்கவில்லைதான் அவர். ஆஹா கல்யாணி, என் இன்ப ராகமே, என் இனிய தேவதையே.. என் வாழ்வில் ஒளிவீசும் மாணிக்கமே என்றெல்லாம் கூவ வேண்டும் போலத்தான் இருந்தது அப்போது.. அந்த இன்பக் கனவோடுதான் அன்றிரவெல்லாம் கல்யாணி கல்யாணி என்று உளறிக்கொண்டே தூங்கவும் செய்தார்தான்.

அடுத்த நாளும் இனிமையாகவே கழிந்தது. நிறுவனம் சென்று கடிதமெல்லாம் எழுதிக் கொடுத்து கல்யாணியின் பேரில் வந்த செக்கையும் பெற்றுக்கொண்டு அப்படியே கல்யாணியிடம் கொடுத்தவர்தாம். கல்யாணியின் வாயில் வந்த அத்தனை புகழ் வார்த்தையையும் மறுமுறைக் காதாரக் கேட்டு மகிழ்ந்தார், ஆஹா.. வயது அறுபதானால் மனுஷனுக்கு இந்த ஓய்வு கொடுக்கவேண்டும் என முதல் முதல் சட்டம் போட்ட அந்த முகம் தெரியாத வெள்ளைக்காரனுக்கு முதல் வணக்கம். இனி என்ன.. ஜாலியோ ஜாலிதான்.. கால் மேல் கால் போட்டுக் கொண்டு இனி பர்மெனண்டாக ஏஸி ரூமில் ஈஸிசேரில் உட்கார்ந்து கொண்டே அதாரிடி செய்ய வேண்டியதுதான்.. அப்படிச் செய்வதில் கூட கூடுதல் சுகம் இருக்கின்றதே. நினைத்தவுடனே தோன்றிய  அந்த மகிழ்ச்சி எனும் உணர்ச்சிக்கும் அதுவே கடைசி நாள் என்பதை அப்போது அவர் உணரவில்லைதான்..

மறுநாள் அவரின் இனிய கல்யாணி காலையில் காபியைத் தராமல் கொஞ்சம் கடினமாக உலுக்கி எழுப்பினாள். கண்ணை விழித்துப் பார்த்தவரை அப்படியே உட்கார வைத்தாள். “ஏன்னங்க.. இன்னையிலேர்ந்து உங்களுக்குப் புது வாழ்வு.. நேத்து வரைக்கும் எப்படி இருந்தோம்னு இப்பவே மறந்துடுங்க.. உங்க உடல்நலன், மனநலன் இரண்டையும் பாத்துக்கறது என் பொறுப்புன்னு சபையிலே எல்லார் முன்னாடியும் சொல்லிட்டேன்.. நான் என் கடமையைச் செய்யறேன்.. நீங்க எதுக்கும் கோபப்பட மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க..” என்றவள் அவர் முகத்தைப் பார்த்தாள். அவர் சந்தோஷமாகத் தலையை அசைத்து ;சேச்சே நான் எதுக்குக் கோபப்படப் போகிறேன்.. உன் மேலயா?.. சத்தியமா வரவே வராதுன்னா.. உன் இஷ்டம்’ முகத்தில் ஏகப்பட்ட அசடு வழியப் பார்த்தவரைப் பார்த்து முறுவலித்தாள்.

அந்த நாளில் ஆரம்பித்தது அவருக்கான சிரமதசை. ஏற்கனவே மாத்ருபூதத்துக்கு  சாதாரணமாக இருந்த ரத்த அழுத்தம், சுகர் போன்றவை பூதாகாரமாக ஆக்கப்பட்டு  அவருடைய சாப்பாட்டில் காண்பித்து நாக்கின் ருசியை ஒரேயடியாக அடக்கினாள் கல்யாணி. இதுவரை அவர் போய்க்கொண்டிருந்த காரின் ஓட்டுநர் நிறுத்தப்பட்டு அவரே அந்தப் பதவியையும் ஏற்கவேண்டும் என்று நயமாக வேண்டிக் கொண்டாள். வீட்டு வேலைக்காரி கூட ஒரு பொழுது வந்தால் போதும் என அறிவிக்கப்பட்டதோடு அவள் வேலையையும் அவருக்குப் பிரித்துக் கொடுத்தாள். அவர் உடல்நிலையைப் பாதுகாத்து வைப்பது தன் கடமை என்றும் குனிந்து குனிந்து ஒரு சில வேலைகள் செய்வதால் உடல்நலம் காக்கப்படும் என்றும் தினமும் அவரை உட்கார்த்தி வைத்து அரை மணி நேரம் லெக்சர் தரப்பட்டது. பேரம் பேசி வாங்குவது ஒரு கலை என்றும் வாழ்க்கை முடிவதற்குள் இந்த கலையை அவர் கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் தினம் காலையில் காய்கறி மார்க்கெட் செல்லும் வழக்கத்தையும் ஏற்படுத்தினாள். தான் இதுநாள் வரை பள்ளிக்கு பஸ்ஸில் சென்று வருவது அன்றோடு நிறுத்தப்பட்டதை ஒரு பெருமையாக அறிவித்தவள் அன்றுமுதல் தன்னைக் காரில் உட்கார்த்தி வைத்து அழைத்து வருவது இனி தன் கணவர் பொறுப்பாக ஏற்றுக் கொள்வதை தான் மகிழ்ச்சியோடு அங்கீகரிப்பதாக அவள் தலையை நிமிர்த்திக் கூறியது மாத்ருபூதத்தின் வயிற்றைக் கலக்கியது. வீட்டு வேலை போக இந்த பயம் தெளிந்த பிள்ளைகளும் போதாதற்கு மருமகப்  பெண்களும் கூடச் சேர்ந்து கொண்டு ஏகப்பட்ட சில்லறை வேலைகளைக் கொடுக்க அந்த வேலைகளை எப்படி இன்முகத்துடன் செய்யவேண்டும் என கல்யாணியே அறிவுரை கூறினாள். மதிய தூக்கம் சோம்பலைத் தரும் என்று சொல்லியதோடு அவர் ஈஸி சேரையும் குப்பையில் போட ஏற்பாடு செய்தாள். உட்கார்ந்து டி வி பார்க்கக் கூட நேரமில்லாமல் போவது கொஞ்சம் கொஞ்சமாக வலிக்கத் தொடங்கியது. சுவைக்காக அடக்கப்பட்ட நாக்கு போகப் போக எதிர்ப்பேச்சு பேசக்கூட இதமாகச் சொல்லிப் பதமாக அடக்கப்பட்டதாக உணர்ந்தார்.

எத்தனைதான் கல்யாணத்தன்று அவள் கொடுத்த சத்தியம் வாபஸ் பெறப்பட்டாலும் அந்த சத்தியத்தை கல்யாணி இன்னமும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறாள்தான். எதையுமே மெல்லமாக அழுத்தமாகச் சொல்லியதோடு அதைச் செய்யத்தான் வேண்டுமென்று சொல்லாமல் சொல்லி கண்ணால் சைகை செய்வதை அடியோடு வெறுத்தார் மாத்ருபூதம்.. அத்துடன் வெளியே ஒய்யாரமாக காரில் இறங்கும்போது தெரிந்தவர் கண்ணில் பட்டால் அவரை விடாப்பிடியாக அழைத்து இவர்தான் என் கணவர் ஆனால் மற்றவரிடம் ரொம்பக் கூச்சப்பட்டு பேசுவார் என்றும் அசாதாரணமாகச் சொல்லி இவரையும் அங்கேயே ஊமையாக்கி தன்னையும் உயர்த்திக் கொள்ளும் கல்யாணியை அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பாட்டுக் கச்சேரிகளில் கல்யாணியின் இனிய கானத்தைக் கூட சரியாக இவரால் கேட்டு ரசிக்கமுடியவில்லை. பாட்டு முடியும்போது இவளுக்கு பாலோ அல்லது வென்னீரோ கொடுக்கவேண்டும்.. எந்தப் பாட்டின் முடிவில் சைகை செய்வாளோ என்றறியாமல் ஃப்ளாஸ்க்கோடு டென்ஷனோடு காத்திருக்கவேண்டும். தானாகப் போய் கொடுக்கவும் முடியாது. இப்படித்தான் ஒரு பாட்டுக்கச்சேரியின் மத்தியில் சற்று இடைவெளி கிடைக்க, ’ஐய்யோ பாவம்.. இத்தனை நேரமாய்ப் பாடுகிறாளே’ என இவரே மேடைக்குப் போய் பால் கொடுக்க அத்தனை பேர் மத்தியில் அதுவும் மைக்கில் கெட்டியாக ‘இப்படி மத்தியில் பால் சாப்பிட்டால் இவர்களெல்லாம் தப்பா எடுத்துப்பாங்க.. நான் கூப்பிடறேனே” என பவ்யமாக அவள் சொல்ல, அங்கே வந்திருந்த சபையோர் கேட்டு சிரிக்க இவருக்கு அவமானமாகப் போயிற்று. வேண்டாம் இனி அவளே கைநீட்டிக் கூப்பிடட்டும்.. இதே போல இன்னொருநாள் மாலைநேரத்தில் ஒரு பட்டிமன்ற பேச்சின் இடையில் தன்னை கைநீட்டிக் கூப்பிட்டு தண்ணீரை வாங்கிக் குடித்தவள். பத்தே நிமிட பேச்சு என்பதால் ஓடோடிப் போய்க் கொடுக்கவேண்டிய சூழ்நிலையில் உடல் கொஞ்சம் வேர்த்துக் கூட போயிற்றுதான்… கல்யாணியின் கணவனின் பொறுப்பான இந்த செயலை சபையிலேயே ஒவ்வொரு சமயம் இவளே பாராட்டி இவருக்கு கைதட்டல் வாங்கிக் கொடுத்தது கூட உண்டு. எதையும் வெளியே சொல்லாமல் உள்ளுக்குள்ளே அழுது வெளியே புன்னகை செய்யும் கலையை அன்றுமுதல் கற்றுக் கொள்ளத் தொடங்கினார்.

அவள் பள்ளியில் கூட மாலை வேளைகளில் இவர் காத்திருக்கும் நேரத்தில் வேறு சில ஆசிரியைகள் இவரைக் கண்டு சிரித்து விட்டுப் போனாலும் இவருக்கு மட்டும் ஏனோ அந்தச் சிரிப்பு சற்று நக்கலாகவே பட்டது. இருந்தும் வேண்டுமென்றே நேரம் எடுத்துக் கொண்டு வந்த கல்யாணி, ’ஐயைய்யோ நான் உங்களை மறந்தே போய் அநாவசியமாக பிரின்ஸிகிட்டே பேசிக்கொண்டே நேரம் வேஸ்ட் பண்ணிவிட்டேன்.. ரொம்ப நேரம் காத்திருந்தீங்களோ’ என்று அப்பாவித்தனமாக ஒரு கேள்வியும் கேட்டும் ஒரு சிரிப்பும் சிரித்துவிட்டு ஒய்யாரமாக பின்சீட்டில் ஏறி உள்ளே மகாராணி போல உட்கார்ந்து தன்னைப் போகச் சொல்லி சைகை காட்டுவது அவருக்கு உள்ளுக்குள் எரிய வைக்கும்தான். வீட்டுக்குப் போனால் மறுபடியும் வீட்டு வேலை.. நேற்று அந்த லேடிஸ் டெய்லர் சரியாக ரவிக்கை தைக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அதைச் சரி செய்ய வேண்டி தன்னை அனுப்பினாலும் அனுப்புவாள். வேலைக்காரி வேறு இரண்டு நாட்கள் லீவு வேண்டுமென கேட்டபோது மூன்று நாள் வேண்டுமானால் எடுத்துக்கோ, என் கணவர் சமாளித்துக் கொள்வார் என்று பெருமையாகச் சொல்வது போல அனுப்பி வைத்தவள். அத்துடன் விட்டாலும் பரவாயில்லை.. இதையெல்லாம் செய்தால் தன் உடம்புக்கும் மனதுக்கும் நல்லது என்பதாக இவள் தினமும் ஒரு அரை மணி நேரமாவது கட்டாயப்படுத்திச் சொல்லும் உபன்யாசமும்.. தம்மால் ஒருவார்த்தை எதிர்த்துப் பேசாமல் இருக்கவைக்கும் அவள் சாமர்த்தியமும்.. சே.. என்ன லைஃப் இது.. ஜாலியாக வீடு, ஜாலியாக வேலை, டி.வி.. சுவையான சாப்பாடு, சுகமான தூக்கம் இவையெல்லாம் இனி எப்போது கிடைக்கும்?

உண்மையாகப் பார்த்தால் அறுபதிலிருந்து ஓய்வு உடலுக்கும் மனதுக்கும் கட்டாயத் தேவை என்றுதானே எல்லா நிறுவனங்களும் வீட்டுக்கு அனுப்புகின்றன, ஆனால் காலையிலிருந்து இரவு வரை ஓய்வில்லாத இந்த அலைச்சல்.. இதற்கு விடுதலையே கிடையாதா?.. ஓடிவிடலாமா.. சேச்சே.. காசுக்கு எங்கே போவது.. எல்லாவற்றிற்கும் காரணமே இந்தக் காசு என்ற மாயாவிதான். நம்மிடம் மட்டும் இந்தக் காசு விளையாடிக் கொண்டிருந்தால் யாராவது ஒரு வார்த்தை பேசமுடியுமா..  நைச்சியமாகப் பேசி மாதாமாதம் வரும் பணத்திலிருந்து எல்லாவற்றையும் இவள் பேருக்கு மாற்றி விட்டாளே.. நிறுவனத்திடம் சொல்லி தன் பேருக்கு மாற்றிக் கேட்போமா.. முடியாது.. அவமானமாகப் போகும். அன்று சபையில் தன்னையும் சேர்த்து எல்லோரையும் கட்டிப்போட்டவள் பற்றி என்னவெனக் காரணம் சொல்வது.. அவர்களும் இதுதான் சாக்கு என்று பதவியில் இல்லாத தனக்கு ஒருமணிநேரம் நல்ல புத்தி சொல்கிறேன் பேர்வழி என நமக்கே சொல்லிக் காண்பிப்பார்கள். இந்தக் கல்யாணிதான் வெளிப்படையாக எனக்கு மாறாகப் பேசுவதும் செய்வதும் இல்லையே.. எல்லாமே என் நன்மைக்குதானே என்று சொல்லி மயக்கிவிடுவாளே..

ஆஹா.. இப்போதுதான் புரிகிறது.. தான் மற்றவர்களை துன்புறுத்தி வேலை பெற்றோம், இவள் மயக்கிப்பேசியே தன்னைத் துன்புறுத்துகிறாள். அந்த காதறுந்தவன் ஏதோ பரிகாரம் செய்தால் நல்லது என்று சொன்னானே..  அப்போது அநாவசியமாக அவனையும் துன்புறுத்தி விட்டோம்.. பரிகாரம் செய்திருக்கவேண்டும்.. அவன் இப்போது எங்கே கிடைப்பான்..

ஏன் சார்.. வலது காது பாதி அறுந்துருக்கும், கண் கொஞ்சம் குறுகலா இருக்கும். அடிக்கடி இமைகள் படபடவென துடித்துக் கொண்டே பேசுவார்.. குண்டு முகம்.. அப்பவே மீசை வெக்கலை.. நல்ல ஜோசியம் தெரிஞ்சவர்.. என்னா ஒரு அறுபத்தைஞ்சு வயசு இருக்கும்.. உங்களுக்கு அப்படி யாராவது தெரியுமா.. தெரிஞ்சா சொல்லுங்களேன்.. ஒரு பரிகாரம் பண்ணனும் சார்..

                                                            ==================

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “காதறுந்த ஜோசியம்

  1. கதை நல்லாஇருக்கு. இத்தனை ஆண்டுகள் கூடிவாழ்ந்தபின்னரும் இந்த வன்மம் ஒரு மனைவியிடம் இருக்குமா என்பது வியப்புதான்.

  2. வன்மமா? இல்லை இல்லை.. மனைவியைப் பொறுத்த்வரை வன்மமாக செய்வதாக நினைக்கவில்லை. ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சாதகமாகப் பயன்படுத்துவது பயன்படுத்திக் கொள்வது என்பது ஒரு கலை. பழகிப்போனால் சரியாகி விடும் என நினைக்கலாம் அல்லவா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *