Category: சிறுகதைகள்

கதைகள்

  • ஆக்கிரமிப்பு

    கோதை நாராயணன்

    “என்னடி ஆச்சு… பெரிய கப்பல் கவிழ்ந்தாப்புல கன்னத்துல கை வைச்சுண்டு… நான் வருவது கூட தெரியாம…?

    “ஏன்னா… நம்ம 51 F  சுகன்யா இருக்காளே குழந்த…?”

    “யாரு.. நம்ம விகாஷினி குட்டியோட அம்மாவை தான சொல்ற… அவளுக்கென்ன இப்போ புது அறிமுகம் ?”

    “முதல்ல சொல்லுறத கேளுங்கோ…! அவ தன் ஆத்துகாரரோட டைவர்ஸ் வாங்க போறாளாம் ….” சொல்லும் போதே சரஸ்வதி மாமிக்கு மூச்சிறைத்தது .

    “பின்னே அவா அவா  ஆத்துக்காரரோட தான் டைவர்ஸ் வாங்க முடியும் …ஹா ..ஹா ..” சிரித்தார் சுந்தரம் .

    “உங்களுக்கு எல்லாமே கேலியா போச்சு … நான் பெத்த பிள்ளையாட்டம் நினைச்சுண்டு இருந்தேனே இப்டி பண்றாளே … காலையில வந்து ஒரு பாடு சுகன்யா அழுதுண்டு தான் தீர்மானமா இருக்கிறதா சொல்லிட்டு போய்ட்டான்னா … அதுல இருந்து மனசு கிடந்து அடிக்கிறது … நல்ல பொண்ணு… ரகுவிற்கும் என்ன குறைச்சல் அவனும் நல்ல பையன்… பின்ன ஏன் இவாளுக்கு புத்தி இப்டி போறது?”

    சுந்தரம் பதிலளிக்கும் முன்னே, இண்டர்காம் 51 H யிலிருந்து வர “ஆமா கௌசி .. உனக்கு எப்ப தெரியும் ?” சுந்தரத்திடம் புலம்பியவற்றின் தொடர்ச்சியை போனில் தொடர்ந்தாள் சரஸ்வதி.

    அந்த ப்ளாட்டில் நிறைய பேர் குடியிருந்தாலும் சரஸ்வதி மாமி மற்றும் சுகன்யாவுடன் சேர்த்து ஒரு நாலு குடும்பம் மட்டும் மிகவும் ஒன்றுக்குள் ஒன்றாக பழகி வந்தார்கள். இதில் குழந்தை இல்லாத தம்பதிகளான  சுந்தரம் – சரஸ்வதி தம்பதிகள் மட்டுமே வயதில் பெரியவர்கள். இதில் சுகன்யா – ரகுவும் காதல் மணம் புரிந்து இந்த பிளாட்டிற்கு குடி வந்த போது சரஸ்வதி அவர்களுக்கு பெருமளவு அரவணைப்பு கொடுத்தாள். சுகன்யாவிற்கு தலைபிரசவம் ஆன போது இவளே முன் நின்று அனைத்தும் பார்த்தாள். குழந்தை விகாஷினி என்றால் அனைவருக்கும் உயிர். ரகுவும் சுகன்யாவும் வேலைக்கு சென்ற பின் இவர்கள் மூன்று குடும்பங்கள் மட்டுமே மாற்றி மாற்றி குழந்தையை பார்த்து கொண்டார்கள். இந்த இரண்டு வருடமாக தான் விகாஷினி ஸ்கூலுக்கு சென்று வருகிறது. இந்த தருணத்தில் தான் சுகன்யா டைவர்ஸ் குண்டை தூக்கி போட்டு விட்டு சென்றாள்.

    தொடர்ந்து வந்த நாட்களில் மாமி புலம்பி புலம்பி அடிக்கடி மற்ற தேவகி ,கௌசி இவர்களுடன் ஆலோசனை கூட்டம் போட்டு போட்டு ஓய்ந்தாள் .

    சுந்தரமும் இரு முறை லிப்டிலும், கீழே பார்க்கிங்கிலும் சில முறை ரகுவை பார்க்க நேர்ந்தது. பிரச்னை என்றால் அதில் ஆண் என்ன பெண் என்ன… பெண்களாவது புலம்பி அழுது தீர்த்து கொள்கிறார்கள். ஆண்கள் தங்களுக்குள்ளேயே இறுக்கி கொண்டு… ம்…. ரகுவின் முகமும் தொங்கி போய் தான் இருந்தது. சுந்தரத்தை கண்ட போதெல்லாம் சங்கடமாய் ஒரு சிரிப்பு வலுக்கட்டயமாய் உதிர்த்து விட்டு மொபைலை காதில் சொருகி கொண்டான்.

    அன்று அலுவல் முடிந்து வீட்டிற்கு வந்த சுந்தரத்தை சரஸ்வதி, “ஏன்னா … நா… ஒண்ணு சொல்லட்டுமா …?”

    “ஒண்ணு என்ன எத்தனை வேணா சொல்லு…”

    “ப்ச் … நா … சீரியஸா பேசிண்டுருக்கேன் நீங்க தமாஸ் பண்ணாம கேளுங்கோ ….!”

    “சுகன்யாவும் ரகுவும் டைவர்ஸ் வாங்க போறா …” “பத்து நாளா இத மட்டும் தான் நீ என்கிட்டே சொல்லிட்டு இருக்க தெரிமோ … வேற ஏதாவது புது விஷயமா …?”

    ஒரு நிமிஷம் சுந்தரத்தை முறைத்து விட்டு, “என் மனதுக்கு நீங்க போய் பேசி பார்த்தா, அவா மனசு மாறுவான்னு தோன்றதுன்னா …..”

    “ஏன் என்ன பார்த்தா தான் மடையன்னு தோண்றதா உனக்கு … இங்க பாரு சரசு … இப்ப எல்லாருமே படிச்சவளா தானே இருக்கா … அதனால அவா தீர்மானத்துல நாம தலையிடக் கூடாதுடி … உணர்வுகளுக்கு மீறிய புரிதல் இந்த காலத்துல யாருக்கு இருக்கு?”

    “நீங்க போய் பேசி பார்த்துட்டு விடுடின்னு சொல்லுங்கோ நா கேட்குறேன் … எனக்கு மனசு ஆறவே மாட்டேங்குது … விகாஷினியை நினைச்சு பாருங்கோ… அவளுக்காக போய் பேசுங்கோ …!”

    விகாஷினி பேரை கேட்டதும் சுந்தரத்திற்கு மறுக்க முடியவில்லை .

    மறுநாள் ரகுவின் வீட்டிற்கு சென்ற சுந்தரம் பேசி தோற்று தான் திரும்பினார் .

    அவர் வரவுக்காகவே காத்திருந்த சரஸ்வதி, “சொல்லுங்கோ … போனேளா … பேசினேளா … மனசு மாறினாளா…?”

    புன்னகையை உதிர்த்த சுந்தரம், “பிரியத்தான் போறாங்களாம்…!”

    “அட …ராமா …!”

    “ஆனா அவா பிரியமா இருக்க வைக்கிறது ரொம்ப சுலபம் சரஸ்வதி …..!”

    விழிகளில் ஆச்சரியமாய், “அட …எப்டினா … அத சொல்லுங்கோ முதல்ல …. எப்டி … அதானே நமக்கு வேணும் ?”

    “சரஸ்வதி நம்ம காலம் போல இப்போ இல்ல … இரண்டு பேரும் வேலைக்கு போறா, நிறைய மக்களை சந்திக்கிறா, வீட்டில் இருக்கும் நேரமும் குறைவு, கல்யாணத்துக்கு முன் பேசிய அளவில் பாதி கூட கல்யாணத்திற்கு பின் பேசுவது இல்லை … முக்கியமா மனசு விட்டு பேசுவது இல்லை …. சரி, நீ என்ன பண்ற நம்ம மலை முருகர் கோவிலுக்கு நாம எல்லாரும் ஞாயிற்றுக்கிழமை போவோம் … சுகன்யாவையும் ரகுவையும் நீ எப்டியாவது சம்மதிக்க வை கோவிலுக்கு வர… அப்புறம் நான் சொல்லுற படி நீயும் பேசு… நம்ம கௌசி -வெங்கடேஷ், தேவகி -கண்ணன்  அவா ஆத்து குட்டீஸ் என எல்லோரும் போவோம் … சுகன்யா-ரகுவை சைலண்ட்டா அட்டாக் பண்ணுவோம்” என சுந்தரம் பேச பேச குஷியானாள் மாமி.

    ஞாயிறும் வந்தது.

    மலை மீது நின்று கொண்டு கீழே பார்க்கும் போது நாம் மட்டும் உயரத்தில் இருக்கும் இறுமாப்பு அனைவர் முகத்திலும். நான்கு குடும்பங்களும் முருகரை தரிசித்து விட்டு மனநிறைவுடன் அருகிலுள்ள ஒரு பார்க் போன்ற இடத்திற்கு வந்தமர்ந்தனர். சாப்பிடுவதற்கு சரஸ்வதி மாமி எல்லாருக்கும் புளியோதரையும், தயிர் சாதமும் கொண்டு வந்திருக்க, மற்றவர்கள் தின்பண்டங்கள் என அந்த இடமே களைக்கட்டியது. குட்டீஸ் ஒரு பக்கம் விளையாட ஆரம்பிக்க, மாமி, கௌசி, தேவகி, சுகன்யா என பெண்கள் ஒரு குழுவாகவும், சற்று தொலைவில் சுந்தரம் தலைமையில் ஆண்கள் ஒரு குழுவாகவும் தனி தனியாக அரட்டை கச்சேரியை ஆரம்பித்தனர்.

    கௌசி மெதுவாக, “சுகன்யா இந்த புடவை உன் நிறத்திற்கு எடுப்பா இருக்கு … யாரோட செலெக்ஸன் …?”

    “இது …” என சுகன்யா ஆரம்பிக்கும் முன்னே வெங்கடேசின் குரல் அழைக்க, ஒரு நிமிஷம் என கௌசி எழுந்து சென்றாள்.

    திரும்பிய கௌசி ,”வண்டியில் தண்ணீர் பாட்டில் மறந்துட்டார் போய் எடுத்து கொடுத்துட்டு வரேன் …ம் …சொல்லு …சுகன்யா….?”

    “இது …..”

    “என்ன இங்க பட்டிமன்றம் …..”கேட்டபடியே அங்கு வந்த சுந்தரம், தேவகியை கண்ணன் அழைப்பதாக கூற தேவகி எழுந்து சென்றாள் .

    இப்பிடியாக சில முறை சுந்தரம் இவர்கள் பக்கம் வந்து வந்து போனார் .

    சுகன்யாவிற்கு எரிச்சலே வந்தது, என்ன பெண்கள் இவர்கள் ? எதற்கு எடுத்தாலும் அடிமை போல், எடுபிடி போல் ஓடிக்  கொண்டு என நினைக்க…

    இதே நாடகம் அங்கு ரகுவின் முன் சுந்தரத்தின் மூலம் நடந்தேறிக்  கொண்டிருந்தது .

    மனதிற்குள் சலித்த ரகு என்ன மனிதர் இவர் சரியான பொண்டாட்டி தாசனாய் இருப்பார் போலவே. நினைத்தவனாய் சுந்தரத்தை பார்த்து “என்ன மாமா இது… உங்களுக்கு கோபமே வராதா …?”

    “யார் சொன்னது எனக்கு கோபம் வராதுன்னு… அழகா வரும், வந்தா உடனே நம்ம ப்ளாட் கார்டன் இருக்கோன்னோ அங்க போய் மண்வெட்டி எடுத்து தேவை இல்லாத களைகள் எல்லாத்தையும் கொத்தி கொஞ்ச நேரம் சுத்தபடுத்திடுவேன். கோபமும் ஒரு வகை ஆற்றல் தானே. அதை களைகளின் மேல் காமிச்சுட்டா அங்க இடமும் சுத்தமாகும், என் மன வேகமும் அடங்கிடும். அப்புறம் கொத்தின களைப்புல மாமி கையாள சூடா காப்பி கிடைக்காதான்னு தோணிடும். சரஸ்வதியும் ஒண்ணுமே நடவாத மாறி சூப்பரா ஒரு கும்பகோணம் டிகிரி காப்பியை எடுத்துண்டு வருவா பாரு… எல்லா கோபமும் பறந்திடும்.  ரகு கணவன் -மனைவிக்குள்ள கோபம் வரலாம் ஆனா வெறுப்பு வரக் கூடாது. கோபம் வருவதற்கு ஒரு காரணம் இருக்கிற மாறி நான் அவள விரும்பினதுக்கும் பல காரணம் இருக்குமோன்னோ, அத யாரும் திருமணத்திற்கு அப்புறம் நினைக்கிறதே இல்ல… நா கொஞ்ச நாழி அத நினைச்சுப்பேன்… அழித்து அழித்து செய்ய வாழ்க்கை என்ன வரைபடமா ரகு? ஹ ஹ ஹா ….” தான் பெரிய ஜோக் அடித்தாற் போல் சிரித்தார் சுந்தரம்.

    சுருக்கென்று இருந்தது ரகுவிற்கு…

    குழந்தைகள் ஓடி வர, எல்லாருக்கும் பசி வயிற்றை கிள்ளியது. வட்டமாக அமர்ந்து ஒருவருக்கொருவர் பரிமாறி சாப்பிட, ரகு-சுகன்யா முகங்கள் மட்டும் எதையோ சிந்தித்த படியே இருந்தது.

    குழந்தைகள் அப்பளத்திற்கு சண்டையிட கௌசியும், தேவகியும் அவரவர் குழந்தைகளை அதட்ட, விகாஷினி தனக்கு தான் அப்பளம் என அடம் பிடித்து கொண்டிருந்தாள்.

    “சரி .. சரி .. விடுங்க குட்டீஸ் … பாவம் விகாஷினி தாய்-தகப்பன் ஆதரவில்லாம வளர போற குழந்த, அவளுக்கு கொடுங்க முதல்ல …!!” கூறிய சரஸ்வதியை இரண்டு ஜோடி தீக்கண்கள்  நோக்கின. மற்றவர்கள் எதார்த்தமாய் சாப்பிட்டு கொண்டிருக்க விகாஷினி குட்டி தனக்கு அப்பளம் கிடைத்த சந்தோஷத்தில் கை கொட்டி சிரித்தது.

    வீடு திரும்பும் போது ரகுவும் சுகன்யாவும் வேனில் சேர்ந்து அமர்ந்திருக்க சுந்தரம் சரஸ்வதியை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தார். கச்சிதமாக எல்லாம் முடிந்த திருப்தி அனைவர் முகங்களிலும்.

    அடுத்து வந்த நாட்களில் ரகு-சுகன்யா வீட்டிலிருந்து டைவர்ஸ் பத்தி எந்த தகவலும் இல்லை. நாட்கள் வாரங்கள் ஆகி, வாரங்கள் மாதங்கள் ஆனபோது விகாஷினிக்கு தம்பி வர போகும் செய்தி மட்டும் வந்தது.

    செய்தி கேட்ட சரஸ்வதி, “ஏன்னா … உங்களுக்கு மெடல் தான் கொடுக்கணும் போங்கோ … வார்த்தைக்கு வார்த்தை டைவர்ஸ்ன்னு பேசினவாளை இப்டி சமத்தா ஆக்கிட்டேளே … ஆனா எனக்கு ஒரு சந்தேகம் ..?”

    “வந்துட்டுதா?”

    “இல்ல நம்ம ப்ளாட்டுல கூட ஒரு கெட் டுகதர் வச்சு இருக்கலாமேன்னா … அத விட்டுட்டு அவ்ளோ தூரம் மலை முருகர் கோவிலுக்கு போய் … ஏன்னா அந்த முருகர் அவ்ளோ சக்தி வாய்ந்தவரான்னா?”

    “புத்திசாலி முருகர்!!!!!!”

    “.!!!!…” மாமி முழிக்க…

    “இல்லையா பின்ன சுத்தமா செல் போன் டவர் கிடைக்காத இடமா பார்த்துல கோயில் கொண்டு இருக்கார்……!!!!!!!!!!”

    “ஆ …” வென்று தன் ஆத்துக்காரரின் சமோசிதத்தை எண்ணி அயர்ந்து நின்றாள் மாமி .

    Share
  • தக்காளி சட்னி!

    திவாகர்

    அன்புள்ள ராகிக்கு

    (ராகி எனப் பெயரைக் கூப்பிடுவதை விட எழுதும்போது அவ்வளவு நன்றாக இல்லையென்று நன்றாகவே தெரிகிறது என்றாலும் ராகினி என்று உன் முழுப்பெயரையும் எழுதினால் எங்கே நீ கோபித்துக் கொள்வாயோ என்றுதான் நான் வீட்டில் உன்னை சாதாரணமாகக் கூப்பிடுவது போலவே எழுதிவிட்டேன்)

    அது சரி, இருக்கட்டும், அடடா..கோபித்துக் கொள்ளாதே.. இதோ கடிதம்.. இனிமேல்தான் ஆரம்பிக்கிறேன்.

    உபயக்ஷேமம். (இப்படித்தான் என் தாத்தா எனக்கு ‘கார்டு’ போடும்போது எழுதுவார், என்ன அர்த்தம் என்று கேட்காதே)

    இப்பவும் உன் நலத்துக்கு அடிக்கடி கடிதம் எழுது (இதுவும் தாத்தாவின் பாணி). நிற்க! (இப்படி எழுதிவிட்டேன் என்பதற்காக நீ நிற்பதாக நான் கனவிலும் நினைக்கமாட்டேன்.. இப்படி எழுதுவதெல்லாம் ஒரு சம்பிரதாயம்)

    நீ சிம்லா சென்று இன்றைய தினத்தோடு ஏழு நாட்கள் ஆகிவிட்டது. உன் அக்கா உடல்நலம் மோசமாகிவருவதால் நீ போய் மூன்றுமாதம் பணிவிடைகள் செய்வதாய்ச் சொல்லிவிட்டுப் போனவள்தான். ஆனால் இந்த ஏழு நாட்களுக்கே நான் எவ்வளவு கஷ்டப்பட்டுவிட்டேன் என்று ஆயிரம் முறை உனக்கு என் மொபைல் போனில் சொல்லிவிட்டேன்.. இருந்தாலும் எழுத்தில் சொல்வதும் என் கடமையாக நான் கருதுவதால் இங்கே இப்படி எழுதத் தோன்றியது.

    நானும் யோசித்துப் பார்த்துவிட்டேன். அதுதான் தினமும் நினைத்தாலே மொபைலில் பேசுகிறோமே, நீ சொல்லியபடி கடிதம் எல்லாம் எழுதத்தான் வேண்டுமா’ என்று நினைத்து நினைத்துப் பார்த்து ஓய்ந்து விட்டேன்.. எத்தனைதான் உன் அக்கா ஆசைப்படுகிறாளாக இருக்கட்டுமே,.. தங்கையின் புருஷன் தங்கைக்கு அடிக்கடி கடிதம் எழுதுகிறானோ இல்லையோ என்று கவலைப்படுகிறாளே என்று வாரத்துக்கு ஒருமுறையாவது ஒரு கடிதம் என எழுதி போஸ்ட் செய்துவிடுங்கள், கடைசி காலத்தில் அவள் சந்தோஷப்படட்டும் என்று நீ சொன்னாலும், கடிதம் எழுதுவது எப்படி என்பது இப்போதெல்லாம் மறந்துபோய்விட்டது. இன்று மாலை கூட இந்தக் கடிதம் பற்றி யோசித்துக் கொண்டே கார் ஓட்டியதால், எதிரே ஒரு எருமை மாடு மீது முட்டப்போய் அது என்னை ஒரு மாதிரியாக பார்வை பார்த்துவிட்டு தப்பித்துக் கொண்டதை நான் உனக்கு மொபைலில் சொல்லவில்லைதான். மரணம் வரும்போது எல்லோருக்கும் எருமை வாகனத்தான் எதிர்வருவான் எனச் சொல்வார்கள்.. அந்த எருமைக்கு கார்வாகனத்தான் நான் எமனாகத் எதிரே தெரியப் பார்த்தேன். நல்லகாலம் எமனின் கருணை, எமன் வாகனமான எருமை தப்பித்தது. இருக்கட்டும்..

    இரவு பத்து மணிக்கு இந்தக் கடிதம் எழுதுவதற்காக மேஜை முன்னால் உட்கார்ந்தேன்.. மணி இரண்டாகிவிட்டது.. இன்னமும் எனக்கு என்ன எழுதவேண்டும் என்று தெரியவில்லை. எல்லாவற்றையுமே மொபைலில் பேசிவிட்டோமே.. இன்னமும் எழுதுவதற்கு என்ன இருக்கிறது என்று பார்த்ததில் உன்னிடம் சொல்லாமல் விட்டதையெல்லாம் நினைவுக்குக் கொண்டு வருகிறேன். இரு இரு.. இதோ வந்துவிட்டது..

    5மாடியில் சுப்பு மாமி (அந்த மாமியின் நிஜப் பெயர் கூட எனக்குத் தெரியாது.. அந்தப் சுப்புப் பையனுக்கு அம்மா என்பதால் இப்படிக் கூப்பிட்டே என்னையும் பழக்கிவிட்டாய் – உடனே அந்த மாமியின் பேர் தெரிஞ்சு உங்களுக்கு என்ன ஆகணும் என கேட்காதே, நான் ஒரு வார்த்தைக்குச் சொன்னேன் என்பதோடு நான் எவ்வளவு நல்லவன் என்பதையும் நீ புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகச் சொன்னேன்) சரி, விஷயத்துக்கு வருகிறேன். அந்த சுப்பு மாமியின் மூன்றாவது தங்கை அருணா நான் சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுவதாக அவளாகவே நினைத்துவிட்டு இரவுச் சாப்பாடாக சப்பாத்தியும் தக்காளி சட்னியுமாக வந்தாளா.. அவளிடம் நானும் வீட்டில் சப்பாத்திதான் செய்துகொண்டேன் என்று சொன்னேனா.. அவள் சப்பாத்தியை திரும்ப எடுத்துக் கொண்டு அந்தத் தக்காளிசட்னியை மட்டுமாவது சாப்பிட்டுப் பாருங்கள்’ என்று சொன்னதோடு தக்காளி சட்னியில் புதுமாதிரியாக மிளகாய்க்குப் பதிலாக மிளகும் புளிக்குப் பதிலாக எலுமிச்சையும் பிழிந்து செய்திருப்பதாகவும் சொன்னதால் அதை வாங்கிக் கொண்டேன்.. அவள் பெங்களூரில் அடிக்கடி இதைச் செய்வதாகவும் அவள் புருஷன் எப்போதெல்லாம் கோபித்துக் கொள்கிறானோ, அப்போதெல்லாம் இந்தத் தக்காளி சட்னியைக் காண்பித்தாலே போதும், பெட்டிப்பாம்பாய் சுருண்டு விடுவான் என்றும், அப்படிப்பட்ட தக்காளி சட்னியை நிறையவே எனக்குக் கொடுத்திருப்பதாயும், அடுத்தநாள் சாப்பிட்டால் இன்னமும் ருசியாக இருக்குமே என்பதால் நாளையும் சாப்பிடுங்கள் என்று அவள் தாராள மனப்பான்மையோடு பீற்றிக் கொண்டதையும் எப்படியாவது உன்னிடம் மொபைலில் சொல்லத்தான் வேண்டுமென்று நினைத்தேன்.. ஆனால் நீ அவகாசம் கொடுக்கவில்லையே.. உன் அக்காவைப் பற்றிப் பேசிப்பேசி நீ களைப்பாகக் கடைசியில் தூங்கப்போவதாகவும் காலை வரை மொபைல் அடித்து டிஸ்டர்ப் பண்ணவேண்டாம் என்று கட்டளையும் கூடவே போட்டதால் நான் மறுபடியும் மெனக்கெட்டு உனக்கு போன் போட்டு இந்த விஷயத்தைச் சொல்லவில்லை.

    சரி, தக்காளி சட்னி விஷயத்துக்கு வருகிறேனே.. நான் அதை மட்டும் வாங்கி அவளை அனுப்பதற்காக தேங்ஸ் சொல்லிவிட்டு ருசித்துப்பார்த்து நாளைக் காலை எப்படி இருந்தது என்று சொல்கிறேன்’ என்று அவளை உடனடியாக அனுப்பப் பார்த்தேன்.. அவள் உடனே போகாமல், ’என்ன சார்.. நீங்களும் எப்பவாவது கோபப்பட்டால் உங்கள் மனைவியை இந்த தக்காளி சட்னி செய்து போடச் சொல்லுங்கள், ஒரு நிமிஷத்தில் உங்கள் கோபம் எகிறிப் போய் சாந்தமாகிவிடுவீர்கள்.. இந்த அருணா சொன்னதாக உங்கள் மனைவிக்கு சொல்லுங்கள் சார்’ என்று இலவச அட்வைஸ் ஒன்றும் கொடுத்துவிட்டுதான் மாடி ஏறினாள். (இப்படித்தான் அவள் பெயரையும் நான் தெரிந்துகொண்டேன் என்பதையும் நீ நம்பவேண்டும்)

    பாவம், அவளுக்குத் தெரியாது.. நான் கோபமே படாத ஜன்மம் என்பதும், உனக்கு தக்காளி என்றாலே அலர்ஜி என்பதால் நம் வீட்டு சமையலில் தக்காளிக்கே வேலை இல்லை என்பதும், அதே சமயத்தில் இதைவிட ருசியான புதிய வகை சமையல்கள் செய்து கலக்கி வருபவள் நீ என்பதையும் எப்படி அவளுக்குத் தெரியவைப்பேன். (கலக்கி வருபவள் என்றால் வேறு ஏதாவது அர்த்தம் பண்ணிக்கொள்ளாதே). சரி, அதை விடு.. உனக்குப் பிடிக்காத அந்த தக்காளி சட்னியை எதற்கு இரண்டு வேளையும் நம் வீட்டில் வைப்பானேன் என்று ராத்திரி சாப்பிடும்போதே அத்தனையும் சாப்பிட்டு அவர்கள் கொடுத்த கிண்ணத்தையும் கழுவிவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்.

    தக்காளி சட்னி அப்படி ஒன்றும் ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவுக்கு ருசியாக இல்லை என்பதை மட்டும் சொல்லிவிடுகிறேன்..எலுமிச்சை போட்டதால் ருசி அப்படி இப்படி மயக்கப்பார்த்தது என்பது என்னவோ உண்மைதான் என்றாலும் போயும் போயும் தக்காளி சட்னியில் யாராவது எலுமிச்சை பிழிவார்களா என்ற அறிவார்ந்த கேள்வியும் எனக்கு நானே கேட்டுக் கொண்டதால் அந்த ருசி மயக்கத்திலிருந்து கொஞ்சம் வெளியே வந்தேன்.. அதுவும் பெங்களூர் தக்காளி என்பதால் கொஞ்சம் மேல் ருசிக்கு எலுமிச்சை புளிப்பு தேவை என்று போட்டிருக்கலாம் என்றும் சமாதானம் செய்து கொண்டுதான் சாப்பிட்டேன்.  இன்னமும் கேட்டால் நாளை மறுபடி இவள் கீழே இறங்கும்போது என்னைப் பார்த்துவிட்டால், இதைப் பற்றிக் கேட்டால் என்ன சொல்லி சமாளிக்கலாம், எப்படி மறுபடியும் வாங்காமல் இருக்கலாம் என்று ஒரு யோசனையும் கூட இந்தக் கடித விவகாரத்தோடு மூளையின் இன்னொரு பகுதியில் ஓடிக் கொண்டிருக்கிறது.  இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் உன்னிடம் நாளை மொபைலில் போன் போட்டு அட்வைஸ் வாங்கலாம்தான்.. ஆனால் மொபைலில் மறுபடியும் ஆதியோடு அந்தமாய் இந்தத் தக்காளி சமாசாரத்தை உனக்குச் சொல்வதால் உனக்குக் கோபம் வரலாம்..ஏன் இப்படி அடுத்தவர் சாப்பாடுக்கு அலைகிறீர்கள் என்ற கிண்டல் வரலாம், ஒருவேளை ராத்திரியே ஏன் சொல்லவில்லை என்று கேள்வியும் கேட்கலாம்.. ஏன் அத்தனை சட்னியையும் ராத்திரி நேரத்திலேயே விழுங்கித் தொலைத்தீர்கள் என்று எரிச்சலாய்ப் பேசலாம், ஏதாவது வயிற்றைக் கலக்கி ஒன்று கிடக்க ஒன்று ஆனால் அந்த ராத்திரியில் எந்த டாக்டரிடம் ஓடுவீர்கள் என்று கேட்கலாம் (இப்போது வரைக்கு எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்பது வேறு விஷயம்).. எனக்குப் பிடிக்காத அந்தச் சட்னியை தூரக்கொட்டாமல் ஏன் ஒரு பிடி பிடித்தீர்கள் என்ற கேள்வியும் உன்னிடமிருந்து வரலாம். அதனால் நாளைக் காலையும் உன்னிடம் இந்தத் தக்காளி சட்னி விஷயமாகப் பேசப்போவதில்லை.. எனக்கு இன்னொரு விஷயமும் முக்கியம்.. அதாவது உனக்கு தக்காளி என்றாலே அலர்ஜி என்பது கூட தெரியுமென்பதால் இதைச் சொல்லி உன் எரிச்சலைக் கிளப்புவானேன்.. அதனால் இந்தக் கடிதத்தில் இந்தத் தக்காளி சட்னி விவகாரத்தினையும் முடித்துக் கொள்கிறேன்.

    இந்தக் கடிதம் உனக்கு எப்போது கிடைக்குமோ தெரியாது. நான் மட்டும் நாளைக் காலையே மௌண்ட்ரோடு போஸ்ட் ஆபீஸ் சென்று போஸ்ட் செய்து விடுகிறேன். எப்படியும் இரண்டு நாளைக்குப் பிறகுதான் இந்தக் கடிதம் உனக்குச் சேரும் என்பதால் இரண்டு நாள் இதைப் பற்றி மொபைலில் பேசப்போவதில்லை.. உனக்குப் பிடிக்காத விஷயத்தை உனக்கு மொபைல் போன் போட்டுத்தான் பேச வேண்டுமா.. நீயே சொல். உனக்குப் பிடிக்காத செயலை என்றாவது நான் செய்திருக்கிறேனா?

    மற்றவை ஏதாவது ஞாபகத்துக்கு வந்தாலும், மறுபடியும் இதைப் போல ஏதேனும் இடர் வந்தாலும் கட்டாயமாக அடுத்த வார கடிதத்தில் உனக்குத் தெரியப்படுத்துகிறேன்.

    எழுத மறந்துவிட்டேனே.. உன் அக்காவின் உடல்நலத்தை விசாரித்ததாகச் சொல்லவும்.

    உன் அன்புள்ள கணவன்.

    படத்திற்கு நன்றி: http://lorakrulak.com/2010/08/tomatoes/

    Share
  • வல்லமைச் சிறுகதைகள் – நூல் வெளியீடு

    Manavaalan.pmd

    ஐக்கியா டிரஸ்ட் நிறுவனம் மற்றும் வல்லமை இணைய இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தையும், ஐக்கியா டிரஸ்ட் நிறுவனரும் மற்றும் எழுத்தாளருமான திரு. வையவன் அவர்கள் ’வல்லமைச் சிறுகதைகள்’ என்ற பெயரில் நூலை மிக அழகாக வெளியிட்டிருக்கிறார்கள். டபுள் கிரவுன் அளவில், 102 பக்கங்களில், எழுத்தாளர்களின் படங்களுடனும் சுருக்கமான அறிமுகத்துடனும் இந்நூல் வெளிவந்துள்ளது. வாசுவின் பல்வண்ண ஓவியங்கள், அட்டையை அலங்கரிக்கின்றன. திரு வையவன் அவர்களுக்கும், இந்த போட்டியில் பங்கு பெற்ற கதைகளிலிருந்து சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ள திரு வெங்கட் சாமிநாதன் மற்றும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கும் வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகளும், நன்றியும். பங்கு பெற்ற அனைத்து படைப்பாளர்களுக்கும் பாராட்டுகள்.

    அன்புடன்
    பவள சங்கரி.

    ரூ.100 விலையுள்ள இந்த நூல், கிடைக்குமிடம்:

    தாரிணி பதிப்பகம்,
    பிளாட் எண்: 4-ஏ, ரம்யா பிளாட்ஸ்,
    32/79, காந்தி நகர் 4ஆவது பிரதான சாலை,
    அடையாறு, சென்னை – 600020
    மின்னஞ்சல்: vaiyavan.mspm@gmail.com

    என்னுரை

     ஐக்கியா தொண்டு நிறுவனம் மற்றும் நம் வல்லமையும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டிக்கு மகத்தான ஆதரவு அளித்திருக்கும் அனைத்து படைப்பாளர்கள் மற்றும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி.  2012 – 2013 ஆம் ஆண்டிற்கான சிறுகதைப் போட்டி இனிதாக முடிந்திருக்கிறது. . நல்ல படைப்புகள் வாசகர் மனதில் என்றும் நீங்காத இடம் பெற்றுவிடுகிறது. இது போன்று நிலைத்து நிற்கச் செய்யும் படைப்புகளை ஊக்குவிப்பதே  இப்போட்டியின் முக்கிய குறிக்கோள். அந்த வகையில் நம் படைப்பாளிகள் அனைவரும் பாராட்டும், வாழ்த்தும் வாசகர்களிடமிருந்து பின்னூட்டமாகவும் பெற்று வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற ஊக்கங்களே மேலும் ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கக்கூடியது. ஆக, வாசகர்களின் முழுமையான ஈடுபாடும் மிக அவசியமாகிறது. தமிழ் சிறுகதை இலக்கியங்களின் வளர்ச்சிப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் ஐக்கியா டிரஸ்ட் நிறுவனர் திரு வையவன் அவர்களின் பேராதரவுடன் நடத்தப்பட்டிருக்கும் போட்டியில் பங்குபெற்ற  சிறுகதைகளை பொறுமையாக வாசித்து அதற்கான மதிப்பீட்டை பாரபட்சமின்றி வழங்கி வந்திருக்கும் பிரபல விமர்சகர் உயர்திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் நம்முடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கே உரிய தனிப்பட்ட பாணியில் விமர்சனங்கள் சுவை கூட்டின. அதன் மூலம் தங்களை  மேலும் செம்மையாக்கிக் கொள்ள எழுத்தாளர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது.  ஐக்கியா நிறுவனத்தின் உரிமையாளர், எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர், திரு வையவன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதையை எழுதியவருக்கு தாம் அறிவித்திருந்தபடி மாதாமாதம், பரிசுத் தொகையை அனுப்பியிருந்தார். அவருடைய முழுமையான ஒத்துழைப்பு நமக்கு பெரிய பலமாக அமைந்திருந்தது. அனைத்திற்கும் மகுடம் சூட்டியது போல பிரபல எழுத்தாளர் திரு நாஞ்சில் நாடன் அவர்கள் மாதப்பரிசு பெற்ற அனைத்துக் கதைகளையும் பொறுமையாக வாசித்து அதிலிருந்து பரிசுக்குரிய ஒரு கதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். அனைத்து கதைகளுக்கும் அருமையான விமர்சனமும் கொடுத்து எழுத்தாளர்களை மேலும் ஊக்குவித்திருக்கிறார். அவருக்கும் நம்முடைய நன்றியும்,  மனம் நிறைந்த பாராட்டுகளும் உரித்தாகுக.

    ஒரு எழுத்தாளனுக்கு செய்யும் சிறப்பை வைத்து அந்த நாட்டை மதிப்பிடலாம் என்பார்கள். அந்த வகையில் இந்த சிறுகதைப் போட்டி பல எழுத்தாளர்களை சிறப்பித்திருக்கிறது. இந்த 2013ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ள சமகால சிறுகதை எழுத்தாளரான, 82 வயதான கனேடிய எழுத்தாளர் அலைஸ் மன்றோ அவர்கள் மனிதரின் நலிவுற்ற நிலைமைகளையும், தலைமுறை வேறுபாடுகளையும்  மையமாகக்கொண்டு எழுதிய சிறுகதைகளுக்காக இந்த பரிசை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவருடைய கதைகள் அனைத்தும் தெளிவாகவும், உளவியல்பூர்வமான ஆதாரங்களுடன் இருபதனாலேயே இவருக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நோபல் சபை அறிவித்துள்ளது. 1.24 மில்லியன் அமெரிக்க டாலரை பரிசாகப் பெறப்போகும் அலைஸ் ஏற்கனவே புக்கர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஒரு சிறுகதையை உருவாக்க ஆறு முதல் எட்டு மாதங்கள் எடுத்துக்கொள்வதாகக் கூறும் இவரது  முதல் தொகுப்பான, Dance of the happy shades (1968) வாசகர் கைகளுக்குக் கிடைக்க இருபது ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து 15 தொகுதிகள் வெளியாகியுள்ளன. கடைசி தொகுப்பு Dear Life 2012ல் வெளியாகியுள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக புனைவுக்கதைகளைப் படைத்துக் கொண்டிருப்பவர் அலைஸ் மன்றோ. அந்த வகையில் நல்ல சிறுகதை இலக்கியங்கள் சரித்திரம் படைக்கலாம் என்பதற்கு அலைஸ் மன்றோ ஒரு முன்னுதாரணம். தமிழில் நல்ல சிறுகதைகள் நிறைய வரவேண்டும். நம் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் நல்ல சிறுகதைகள் எதிர்காலத்தில் நிலைத்து நிற்கும்.  இன்று வெற்றி வாகை சூடி நிற்கும் அனைத்து எழுத்தாளர்களும் மென்மேலும் உயர்ந்து நிற்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட பனிரெண்டு கதைகளில் சில புதிய பார்வைகளை தந்தவர்கள் உண்டு அவர்கள் லட்சிய உலகை முன்னிறுத்துகிறார்கள். சிலர் ஒப்புக்கொள்ளப்பட்ட மதிப்புகளைத் திரும்பச் சொல்கிறார்கள் சிலர்  அலங்கார வார்த்தைகளை, உணர்ச்சிப் பெருக்கெடுத்துக் கொட்டுகிறார்கள். வார்த்தைகள் வெள்ளமாகப் பெருக்கெடுக்கின்றன. திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள் ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றி கூறியுள்ள நுணுக்கமான செய்தியை பகிர்ந்து கொள்வது மற்றவர்களையும் ஊக்கப்படுத்தலாம்.

     பழமைபேசி தன் அனுபவங்களிலிருந்து ஒரு புதிய உலகை நமக்குப் படிக்கத் தருகிறார்  தன்னுடைய ஒவ்வொரு கதையிலும் வாழ்க்கையின் வெவ்வேறு அனுபவங்களை நம் முன் மிகத்திறமையுடன் வைக்கிறார். அன்னிய சூழலில் தொடர்ந்து இருந்த போதிலும், பிறந்த மண்ணின் வாசம் விடாது, அதே  சமயம் வாழும் அன்னிய மண்ணின் சூழலில் ஆழ்ந்த அனுபவம் நிறைந்த வாழ்நிலைகளை எழுதுகிறவர்

    வித்தியாசமாக எழுதிப் பார்க்கிறார்கள். அவர்கள் முயற்சி வரவேற்கத்தக்கது. கவிதை வடிவில் எழுதுகிறார்கள். ஒரு பொழுதின் நகைச் சுவையை எழுதிப் பார்க்கிறார்கள். துப்பறியும் கதை எழுதிப் பார்க்கிறார்கள். இப்புதிய முயற்சிகளில், தேமொழியின் துப்பறியும் கதை முயற்சி வந்தவற்றுள் படிக்க சுவாரஸ்யமாக சிறப்பாக வந்துள்ளது

    புதிய எழுத்தாகவே தோன்றவில்லை. பழகிய கை மாதிரிதான் இருக்கிறது எழுத்தின் தேர்ச்சி. அந்தச் சூழலின் சித்திரம். பார்வதி ராமச்சந்திரனின் கதையை இப்படித்தான் சொல்ல விரும்புகிறேன்.

    மாதவன் இளங்கோவின்  கதை முழுதும் கடைசி வரை ஒரு அயல் நாட்டின் கலாச்சார மேலாதிக்கத்தின் அகங்காரம் எனத் தோன்றினாலும் கடைசியில் அங்கும் மனித வாழ்வின் அவலங்கள் வேதனைகள் சில நமக்குக் கடைசி வரை புரியாமலேயே போகின்றன. எல்லா இடத்திலும் நாடுகளிலும் கலாச்சாரங்களிலும் மனிதம் இல்லாமல்  போய்விடுவதில்லை. ப்ரஸ்ஸல்ஸும் மயிலாப்பூரும் இணையாதவை. இணைக்க முடியும் என்று  ஒரு நல்ல விஷயத்தைத் தான் எழுதியிருக்கிறார்.

    அதே மனிதப்பண்புகள், தான் மில்லியன் டாலர்கள் கணக்கில் நஷ்டப்பட்டாலும் மனித உயிரின் பாதுகாப்பு முக்கியம் என்ற உணர்வு.சரி இப்படித்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்படுகின்றனவா எங்கிலும் என்பது தெரியவில்லை. இருப்பினும் அது இன்னமும் உயிர்த்திருப்பது காணும் ஒரு இடத்தையாவது காண முடிகிறதே.

     மணி ராமலிங்கத்தின் கதை தடம் மாறும்போது திரும்ப தடம் வந்து சேரும் மனிதப் பண்பைச் சொல்கின்றன. மணி பேசாப் பொருளை எவ்வளவு தூரம் பேசவும் வேண்டும், பேசாது ஒதுங்கவும் வேண்டும், என்று தானே எல்லைக் கோடு இட்டு விளையாடியிருக்கிறார். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் அதற்குரிய அழகுகளோடுதான் இருக்கிறது. குழந்தைப் பருவம், பள்ளி வாழ்க்கை, போலத்தான் விளையாட்டுப் பருவமும்.  அங்கும் மனித உறவுகள் உண்டு, மனிதனின் பலங்களும் பலவீனங்களும் பங்கு கொள்கின்றன. அது ஒரு கால கட்டம் இருப்பினும் பின்னர் அந்தக் கட்டம் முடிந்து திரும்பிப் பார்க்கும் போது கடந்த உறவுகளும் அதன் சந்தோஷங்களும் மனதை பின்னும் ஒரு nostalgia வோடு பாதிக்கின்றன.  மணி மிகத் திறமையாக, convincing -ஆக அந்த அனுபவங்களையும் பின்னர் ஒரு ஏக்க உணர்வோடு திரும்பிப் பார்த்தலையும் எழுதியுள்ளார். யாரும் தொடாத அனுபவ தளம். வாழ்க்கையின் ஒரு பகுதி.

    ஜெயஸ்ரீ ஷங்கர் கதை இது காறும் அவர் வல்லமையில் எழுதிய கதைகளிலிருந்து  நாலடி கோபுரங்கள் மாறுபட்டது.  தாய் தந்தையரால் கூட உதறிவிடப்பட்ட ஒரு குள்ள மனிதனின் அனுபவங்கள், கேலியும் தனக்கு மறுக்கப்பட்ட வாழ்க்கையும் கூட பாதிக்கவில்லை. அதெல்லாம் சரி. கடைசியில் லிப்டிலிருந்து குழுந்தையைக் காப்பாற்றியது – இது நடக்கலாம் தான் ஆனால் – இது வரை இயல்பாக எழுதப்பட்டது இங்கு இந்த சம்பவம் உருவாக்கப்பட்டு சேர்க்கப்பட்டது போலத் தோன்றுகிறது.

    மிகச் சிக்கலான ஒரு ஆளுமை தன்  அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சின்னச் சின்ன கஷ்டங்கள், மனப் பிரள்வுகள், தன் இச்சைக்கும் மற்றோர் எதிர்பார்ப்புக்கு வாழும் முரண்களுமான நிரந்தர மனப் போராட்டம். ஆணாகப் பிறந்தும் பெண்மை சார்ந்த விருப்பங்கள் மறைத்தே மறைந்தே தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தங்கள் தன் திருமணத்திற்குப் பின்னும் தொடர்கிறது.  இதன் உண்மை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் கதை சொல்ல சம்பவங்கள், விருப்பங்கள் நம்பக வட்டத்துக்கு வெளியே போவதில்லை. நன்றாக, திறமையுடன் எழுதப்பட்டுள்ளது. – அரவிந்த் சச்சிதானந்தனுக்கு வாழ்த்துகள்.

     சுதாகர் எழுதியுள்ள காட்சிப் பிழை என்ற கதை, நாடு இழந்தாலும், வாழ்க்கை சிதைந்தாலும், மனித சுபாவம் மாறுவதில்லை. அது நாடு கடந்தாலும், வாழ்க்கையின் கடைசிப் படியில் இருந்தாலும், வெறுப்பையும், தன் ego -ஐயும் துறக்கத் தயாராயில்லை. இது வாழ்க்கையின் யதார்த்தம்.

     மன்னிக்கத் தயாராக இருக்கும் அமீரும் தனனை அவமானப்படுத்திய மாமாவை மன்னிக்கத் தயாராக இல்லாத பாலாவும், அப்பாவுக்காகவாவது எல்லாத்தையும் மறந்து ஒரு வார்த்தை சொல்லலாமே என்னும் செல்வியும், மரணப்படுக்கையிலும் தன் வீராப்பை மறக்காத தெமெட்ட கொட மாமாவும் அவரவர் இயல்புப்படி நம் முன் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். அனாவசிய வார்த்தைகள் இல்லை. செயற்கையாக சித்தரிக்கப்பட்ட லட்சிய நோக்கு இல்லை. உணர்ச்சிக் கொப்பளிப்பு இல்லை. மனித சுபாவம் சிலரது சூழலும் வாழ்க்கையும் என்ன மாற்றம் பெற்றாலும். மாறுவதே இல்லை.  சிக்கனமான எழுத்து. இயல்பான மனிதர்கள். எனக்கு மிகவும் பிடித்த எழுத்து.

    அனைவருக்கும் வாழ்த்துகள் நண்பர்களே.

    அன்புடன்

    பவள சங்கரி

    ஆசிரியர்

    வல்லமை இணைய இதழ்.

    Share
  • குலதெய்வம்

    சு. கோதண்டராமன்

          ரயில் சென்னையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. சுந்தரேசனின் மனம் மும்பையின் நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் தான் எத்தனை மாற்றங்கள்!  இன்று ரயிலில் பயணம் செய்வோம் என்று நேற்று இந்நேரம் அவன் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. வலுக் கட்டாயமாக அல்லவா என்னை ரயில் அனுப்பி வைத்து விட்டாள். என் நலத்தை விரும்பித் தான் சொல்கிறாள். எப்படியாவது இந்த இக்கட்டிலிருந்து தப்பினால் சரி என நினைத்துக் கொண்டான்.

          நேற்று ஜோதிடரைச் சந்தித்தது இவ்வளவு நீண்ட பயணத்தில் கொண்டு விடும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. தொழில் மந்தம் என்பது தற்போது உலகில் எல்லா நாடுகளுக்கும் உள்ள பிரச்சனை. ஆனால் இவன் விஷயமே வேறு. தென்னை மரத்தில் தேள் கொட்ட, பனை மரத்தில் நெறி கட்டியது என்கிற மாதிரி அமெரிக்காவிலிருந்து இவனுடைய சிறு தொழிலுக்கு மூலப் பொருள் அனுப்பி வந்த கம்பெனி மூடப்பட, இவன் தொழில் படுத்து விட்டது. அதே பொருளை உள் நாட்டில் ஒரு நிறுவனத்தில் வாங்கப் போய் இவனுடைய சரக்கின் தரம் குறைந்தது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராகக் கழன்று விட்டனர். வங்கியில் முடிந்த அளவுக்குக் கடன் வாங்கியாகிவிட்டது. தொழிலாளர்களையும் வேலையை விட்டு நீக்க முடியவில்லை. அடுத்த மாதம் சம்பளம் கொடுக்க வழி இல்லை என்ற நிலையில், அந்தப் பாலக்காட்டு ஜோதிடரைப் பற்றி அவன் மனைவி சொன்ன போது அரை மனதாக ஒப்புக் கொண்டான். அவனுக்குப் பொதுவாக, ஜோதிடம் மாந்திரீகம் இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லை. என்றாலும் துன்பம் மிகும்போது யார் எது சொன்னாலும் கேட்கக் கூடிய மன நிலைக்கு வந்து விடுகிறோம் அல்லவா?

          ஜோதிடர் சோழி போட்டுப் பார்த்து என்னென்னவோ கணக்குகள் போட்டு, “நீங்கள் குல தெய்வத்தை மறந்து விட்டீர்கள். அதனால் தான் உங்களுக்கு இத்தனை தொல்லைகள்” என்றார். அவனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. இவன் குல தெய்வத்தை மறந்ததனால் அமெரிக்கக் கம்பெனி மூடப்பட்டது என்பது அறிவுக்குப் பொருத்தமாக இல்லை. என்றாலும் எதிர் வாதம் செய்யும் மன நிலையில் அவன் இல்லை.

          “குல தெய்வம் என்றால் என்ன?” சோதிடரைக் கேட்டான். “உங்கள் குலத்துக்கு என்று ஒரு தெய்வம் இருக்கும். உங்கள் மூதாதையர் வணங்கி வந்திருப்பார்கள். வீட்டில் பெரியவர்கள் அல்லது உங்கள் தாயாதி பங்காளிகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று சொன்னார்.

          தெய்வம் ஒன்று தான், அதைப் பலரும் பல பெயர்களில் வணங்குகிறார்கள் என்பது தான் அவனுடைய கல்வி அவனுள் ஏற்படுத்தியிருந்த நிலைப்பாடு. இவர் ஏதோ உன்னுடைய குலத்துக்கு என்று ஒரு தனித் தெய்வம் இருக்கிறது என்கிறார். அப்படியே இருந்தாலும் வணங்காமல் விட்டு விட்டதால் அது துன்பம் கொடுத்துப் பழி வாங்குகிறது என்றால் அதைப் போய்த் தெய்வம் என்று எப்படி ஏற்றுக் கொள்வது? அவன் குழம்பிக் கொண்டிருந்தான்.

          அவன் மனைவிக்கு அந்தக் குழப்பம் எதுவும் இல்லை. வீட்டுக்கு வந்தவுடன் “நம் குடும்பத்துக்குக் குல தெய்வம் எது?” என்று அவனுடைய அம்மாவிடம் கேட்டாள்.

          “கொட்டூர் ஐயனார்னு சொல்வாங்க. நானே ஒரு தடவை தான் கல்யாணம் ஆன புதுசில் போயிருக்கிறேன். இவனுடைய அப்பாவுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. என் மாமனார் வற்புறுத்தி கல்யாணம் ஆன கையோடு அழைத்துப் போனார்.”

                    “அது எங்கே இருக்கு?’

                    “மாயவரம் போய் பஸ்ஸிலே போனோம். எந்தப் பக்கம்னு தெரியல்லே.”

          மணி பத்து ஆயிற்று. கால தாமதம் செய்யாமல் அவனது மனைவி தத்காலில் தாதர் எக்ஸ்பிரஸ்ஸில் சென்னைக்கு ஒரு டிக்கெட் புக் செய்தாள். கூகுள் ஆண்டவர் உதவியால் மாயூரம் என்ற மாயவரம் என்பது தற்போது மயிலாடுதுறை என்று அழைக்கப்படுகிறது என்பதையும் சென்னையிலிருந்து நாள் பூராவும் அடிக்கடி பஸ் போகிறது என்ற விவரத்தையும் தெரிந்து கொண்டாள். “மயிலாடுதுறையில் இறங்கி கொட்டூருக்குப் போகும் வழியை விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள். நான் நாளைப் பயணத்துக்கான ஆகாரம் தயார் செய்கிறேன்” என்று உள்ளே போய்விட்டாள். இவனைப் பேசவே விடவில்லை.

          அவன் அம்மா முழு விவரத்தையும் தெரிந்து கொண்டு, “போய்ப் பார்த்து விட்டு வா. எந்தத் தெய்வமாவது கண்ணைத் திறக்கட்டும்” என்று சொன்னாள்.

          நம்பிக்கை இல்லாவிட்டாலும் வேறு வழி இல்லாததால் அவன் இதற்கு உட்பட்டான். இரவு தாதரிலிருந்து கிளம்பியாயிற்று. பன்னிரண்டு மணி நேரம் பயணம் பெரும்பாலும் தூக்கத்தில் போய் விட்டது. இன்னும் பன்னிரண்டு மணி நேரம் பகல் பொழுது போக வேண்டும். இதுவே சென்ற வருடமாக இருந்தால் அவன் ரயில் பயணத்தில் நேரத்தை வீணாக்கமாட்டான். விமானத்தில் வந்து போய் விடுவான். ஆனால் இன்று நிலைமை வேறு. விமானக் கட்டணத்துக்கு உள்ள காசில் ஒரு தொழிலாளிக்குச் சம்பளம் கொடுக்கலாம். பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டான்.

          காலையில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இறங்கி பல பேரை விசாரித்த பின் ஒரு நடத்துனர் சொன்னார், “கொட்டூர் தானே? ஏறி உக்காருங்க.”

          அரை மணி கழித்து, கொட்டூர் நிறுத்தத்தில் இறக்கி விட்டு விட்டு பேருந்து போய் விட்டது. இறங்கினவன் திரு திரு என்று விழித்தான். கண்ணுக்கெட்டியவரை வீடா வேறு கட்டிடங்களா காணப்படவில்லை. எங்கு பார்த்தாலும் பசுமையான வயல்கள் தான். இப்படி நடுக்காட்டில் இறக்கி விட்டுப் போய் விட்டார்களே, விசாரிக்கலாம் என்றால் ஒரு மனித ஜீவனைக் கூடக் கண்ணில் காணோமே என்று அலுத்துக் கொண்டான்.

          அங்கே ஒரு மண் சாலை பிரிந்து சென்றது. அதன் முகப்பில் ஒரு காங்கிரீட் முகப்பு வளைவு தென்பட்டது. அதில் கொட்டூர் ஐயனார் கோவில்  கும்பாபிஷேக விழா வளைவு என்று எழுதி இருந்தது. இந்தச் சாலையில் போக வேண்டும் போல் இருக்கிறது. எவ்வளவு தூரம் போக வேண்டுமோ, சரி போவோம். வந்தாயிற்று. எது வந்தாலும் அனுபவிக்கத் தான் வேண்டும் என்று நினைத்துக் கொண்டு நடந்தான்.

          ஊர் எல்லையிலேயே ஐயனார் கோவில் இருந்தது. பூட்டி இருந்தது. அங்கே விளையாடிக் கொண்டிருந்த பையன்களிடம் கேட்டான். “இந்தக் கோவில் எப்போ திறப்பாங்க?’

          “பூசாரியார் வீட்டுக்குப் போய்க் கேளுங்க. வாங்க அழைச்சிட்டுப் போறேன்.”

          பூசாரி வீடு மண் குடிசை. முன்னும் பின்னும் தோட்டம். கொல்லையில் மாட்டுக்குத் தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த பூசாரி சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தார்.

          “வாங்க, எங்கேருந்து வரீங்க?’

          “மும்பையிலிருந்து. இந்த ஐயனார் எங்களுக்குக் குல தெய்வம்னு சொன்னாங்க. பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்.”

          “நீங்க இது வரைக்கும் இங்கே வந்ததில்லையே? யாரு வீடுன்னு தெரியல்லியே. உங்க அப்பா பேரு என்ன?”

                    “ராமநாதன்.”

                    “ராமநாதனா? தெரியல்லியே. உங்க தாத்தா பேரு?’

                    “சாம்பசிவம்.”

                    “ஓகோ, நம்ம சாம்பசிவம் ஐயா பேரனா நீங்க? ரொம்ப வருஷத்துக்கு முந்தி உங்க அப்பா ஒரு தடவை வந்துட்டுப் போனாரு. ரொம்ப நாளா குல தெய்வத்தை மறந்துட்டீங்க. பரவாயில்லே. இப்பவாவது நினைச்சுக்கிட்டு வந்தீங்களே. இந்த ஐயனார் ரொம்ப சக்தி வாய்ஞ்சவருங்க. ஒரு நடை வந்துட்டுப் போய்ட்டால் நினைச்ச காரியம் நடக்கும். நடத்திக் குடுத்துடுவாரு.”

          “அபிஷேகம் பண்ணணும். எவ்வளவு ஆகும்?”

          “காசு கிடக்குங்க. வீட்டிலே மாடு கறக்குது. பால் எடுத்துக்கலாம். கொல்லையிலே தென்னை மரம் இருக்கு. இளநீ பறிச்சுக்கலாம். நல்லெண்ணை மட்டும் கால் லிட்டர் வாங்கினாப் போதும். அதுக்குள்ள காசைக் குடுங்க. அப்புறம் காசு இருந்தா எனக்கு ஏதாவது தட்சிணை கொடுங்க. உங்க தாத்தா வருஷம் தவறாமே வந்துட்டுப் போவாரு. அவரு இந்நேரம் போயிருப்பாருன்னு நினைக்கிறேன். இருந்தா வராம இருக்க மாட்டாரு. உங்க அப்பா அம்மா எல்லாம் நல்லா இருக்காங்களா?”

          “அப்பா போய் இருபது வருஷம் ஆவுது. அம்மா மும்பையிலே என்னோட இருக்காங்க.”

          “சரி. பல் விளக்கீட்டிங்களா?”

          “இல்லே. மயிலாடுதுறையிலே பஸ் ஏறி நேரே இங்கே தான் வரேன்.”

          “சரி. பையை இங்கே வைங்க. பையனை அனுப்பறேன். தோப்புக்குப் போய்ட்டு வாங்க. அங்கேயே குளத்திலே பல் விளக்கிட்டு வாங்க. வந்ததும் டீயைக் குடிச்சிட்டு கோவிலுக்குப் போகலாம். கோவில் கிணத்திலேயே குளிச்சிடலாம். மத்தியானம் ஒரு மணிக்குள்ளே பூசை முடிஞ்சு பிரசாதம் வாங்கிக்கலாம். இந்த ஊரிலே ஓட்டல் கீட்டல் கிடையாது. அதனாலே இந்தப் பிரசாதம் தான் மதியத்துக்கு உங்களுக்கு. திரும்ப மும்பை தான் போறீங்களா, இங்கே பக்கத்திலே வேறே வேலை இருக்கா?”

          “இன்னிக்கி சாயங்காலம் மயிலாடுதுறைலே பஸ் ஏறி நாளைக் காலைலே ஏழு மணிக்கு சென்னையிலே ரயிலைப் பிடிக்கணும்.”

          பூஜைகள் எல்லாம் திட்டமிட்டபடி நடந்தது. பத்து மணிக்கு நாளைய தாதர் எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் புக் செய்யலாம் என்று நினைத்திருந்தான். அங்கே சுற்றுவட்டாரத்தில் ப்ரௌசிங் சென்டர் என்று எதுவும் இல்லை என்பது தெரிந்தது. சரி, பரவாயில்லை. நாளை அன்ரிசர்வ்டில் போக வேண்டியது தான் என்று தீர்மானித்துக் கொண்டான்.

          முப்பத்தைந்து வருடமாகத் தன்னை வந்து பார்க்கவில்லை என்பதற்காக எப்படி எல்லாமோ காய்களை நகர்த்தித் தன்னை இங்கு வரவழைத்த அந்த ஐயனாரைத் தரிசனம் செய்து கொண்டான். கோவிலிலேயே சாப்பிட்டுவிட்டுக் கிணற்றங்கரையில் கை கழுவி விட்டு வரும்போது தான் ஐயனாருக்கு இன்னும் கோபம் தணியவில்லை என்பது தெரிந்தது. படி தடுக்கிக் கீழே விழுந்து விட்டான். கையை ஊன்றி எழுந்திருக்க முயலும்போது கையில் பயங்கர வலி.

          பதறிக் கொண்டு ஓடி வந்தார் பூசாரி. “படி இருக்கு, பார்த்து வரக்கூடாதா? சம தரையிலேயே நடந்து பழகி இருப்பீங்க போல. மெதுவா எழுந்திரிங்க.”

          எழுந்தான். தாங்க முடியாத வலி. கையைத் தூக்க முடியவில்லை. பூசாரி பார்த்தார். “கை எலும்பு முறிஞ்சிருக்குங்க. அது தான் இந்த வலி வலிக்குது. வலது கையாச்சே. ரொம்பக் கஷ்டமா இருக்குமே. வாங்க வீட்டுக்குப் போவோம். மருந்து போட்டுக்கலாம்.”

                    “இங்கே பக்கத்திலே டாக்டர் யாராவது இருக்காங்களா?”

          “டாக்டரா, மயிலாடுதுறைக்குத் தாங்க போகணும். எலும்பு முறிவுக்கு டாக்டர் கிட்டே போய்ப் பிரயோஜனமில்லீங்க. நல்ல வேளை, நாளைக்குப் புதன் கிழமை. தென்னமரக்குடி வைத்தியரு இருப்பாரு. நீங்க இங்கே தங்கிடுங்க. காலையிலே நான் அழைச்சி்ட்டுப் போறேன்.”

          “நடந்தாலே கை அதிருது. ஒரு சைக்கிள்  கிடைச்சுதுன்னா என்னை மெதுவா பஸ் ஸ்டாப்பு வரைக்கும் கொண்டு விட்டிருங்க. நான் பஸ் புடிச்சு மயிலாடுதுறையிலே டாக்டர் யார் கிட்டேயாவது காட்டிக்கிறேன்.”

          “தம்பி, நான் உங்களுக்கு நல்லதுக்குச் சொல்றேன். டாக்டர் கிட்டே போனீங்கன்னா கையைக் கோணல் மாணலா வெச்சு மாவுக் கட்டு போட்டுடுவாங்க. அப்புறம் ஆயுசுக்கும் கை வளைஞ்சே இருக்கும். அப்புறம் உங்க சௌகரியம்.”

          அதற்குள் வீடு வந்து சேர்ந்தது. மும்பைக்காரருக்கு கை முறிஞ்சு போச்சுங்கிற தகவல் கிடைச்சு தெரு வாசிகள் அனைவரும் கூடிவிட்டார்கள். எல்லோரும் ஒரு முகமாக, “டாக்டர் கிட்டே போகாதீங்க தம்பி. எந்தெந்த ஊரிலே இருந்தோ இங்கே தென்னமரக்குடிக்கு வராங்க. டாக்டர் கிட்ட போய் கையைக் கோணலாக்கிக்கிட்டவங்க இங்கே வந்து சரி பண்ணிட்டுப் போறாங்க. இந்த வட்டாரத்திலே விவரம் தெரிஞ்சவங்க இங்கே தான் வருவாங்க” என்று உரிமையோடு உபதேசம் செய்தார்கள்.

          வேறு வழி இல்லை. பதினெட்டாம் நூற்றாண்டின் மூட நம்பிக்கைகளிலேயே  வாழும் இந்த ஊரில் மாட்டிக் கொண்டு விட்டோம். இந்த மக்களின் தயவு இல்லாமல் இங்கே எதுவும் நடக்காது. இவர்கள் சொன்னதைக் கேட்டுத் தான் ஆகவேண்டும்.

          பூசாரி கையில் ஏதோ எண்ணையைத் தடவி விட்டு ஒரு பழைய துணியைக் கொண்டு கட்டுப் போட்டார். கையை அசைக்காமல் இருக்க கழுத்திலே சேர்த்துக் கட்டிவிட்டார். வீட்டுத் திண்ணையில் ஒரு கயிற்றுக் கட்டிலைப் போட்டு, “இதிலே படுத்துங்க. காலைலே பொழுது விடிஞ்சதும் போகலாம்” என்றார்.

          மறுநாள் காலையி்ல் பூசாரி அவனைச் சைக்கிளில் பின்புறம் உட்கார வைத்து பஸ் நிறுத்தத்துக்கு அழைத்து வந்தார். மூன்று பஸ் மாறி மெதுவாகத் திருப்புகலூர் வந்தார்கள். ஒரு ஆட்டோ பிடித்து தென்னமரக்குடியை நோக்கிப் போனார்கள். போகிற வழியில் “திருப்புகலூர் பாடல் பெத்த தலங்க. அப்பர் முத்தி அடைஞ்ச ஊரு. இதோ வருது பாருங்க, திருக்கண்ணபுரம். சௌரிராஜப் பெருமாள். கோவிலும் பெரிசு. பாருங்க. குளமும் பெரிசு. தென்னமரக்குடி வைத்தியம் என்று பல ஊர்களில் பல பேர் வைத்தியம் செய்றாங்க. அது எல்லாம் போலி. இப்போ நாம போற இடம் தான் உண்மையான பரம்பரை வைத்தியர்” என்று ஏதேதோ சொல்லிக் கொண்டு வநதார் பூசாரி. இவனுக்கு அதை எல்லாம் கேட்கக் கூடிய மன நிலை இல்லை.

          ஒரு வாய்க்கால் கரையில் ஆட்டோ நின்றது. இரண்டே வீடுகள் தான் அங்கே. ஒரு வீட்டு வாசலில் ஆளோடியில் மக்கள் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள். பலர் வெளியில் நின்று கொண்டும் அடுத்த வீட்டில் இருந்த டீக்கடையில் டீ குடித்துக் கொண்டும் இருந்தார்கள்.

          சட்டை அணியாத வைத்தியர் வந்து ஆளோடியில் தரையில் உட்கார்ந்தார். நோயாளிகளும் உதவிக்கு வந்தவர்களும் அவரைச் சுற்றி இருந்தார்கள். அந்த சூழ்நிலையைப் பார்த்தால் அது வைத்திய சாலை என்ற எண்ணமே ஏற்படவில்லை அவனுக்கு.

          ஒவ்வொருவராகப் பார்த்து வெளியேற வெளியேற கூட்டம் உட்கார்ந்தபடியே முன் நோக்கி நகர்ந்தது.          இவரிடம் வைத்தியம் செய்து என்ன ஆகப் போகிறதோ என்று பயம் ஏற்பட்டது. பூசாரிக்குத் தெரியாமல் பஸ் ஏறி மயிலாடுதுறை போய் விடலாமா என்று தோன்றியது.

          இவனுடைய முறை வந்தது. கையை அமுக்கிப் பார்த்துவிட்டு, “எலும்பு ஒடஞ்சிருக்குங்க. சிம்பு வெச்சுக் கட்டுப் போடறேன். பெசல் எண்ணை தரேன். கட்டின் மேலேயே எண்ணையை தினம் மூணு வேளையும் போட்டு வாங்க. அடுத்த புதன்கிழமை வாங்க. வரும் போது ஒரு கோழி முட்டையும், கொஞ்சம் உளுத்தம்மாவும் கொஞ்சம் வெள்ளைத் துணியும் கொண்டு வாங்க என்றார். மூங்கில் சிம்புகளை வைத்துக் கட்டுப் போட்டார்.

          எண்ணை எவ்வளவு வேணும் என்று வைத்தியர் கேட்டதற்கு “அம்பது ரூபாய்க்குக் குடுங்க” என்றார் பூசாரி. ‘ஃபீஸ்’ என்று இழுத்தான். “எண்ணைக்கு மட்டும் தாங்க காசு வாங்கறது” என்றார் வைத்தியர்.

          இன்னும் ஒரு வாரம் இங்கே தங்கணுமா? போச்சு. எல்லாத் திட்டங்களும் மண். தொழிற்சாலை ஏற்கெனவே தள்ளாடிக் கொண்டு இருக்கிறது. நானும் இல்லாவிட்டால் சர்வநாசம் தான். ஐயனார் மேல் கோபம் கோபமாக வந்தது. வந்து பார்க்கவில்லை என்று தண்டனை. வந்து பார்த்ததற்கும் தண்டனையா? கை வலியை விட மன வலி தான் பெரிதாக இருந்தது.

          பூசாரி வீட்டுக்கு அழைத்து வந்தார். கைதி போல உணர்ந்தான். “இன்னும் ஒரு வாரம் நீங்க என் வீட்டிலேயே தங்கிடுங்க. ஊருக்குப் போன் போட்டுச் சொல்லிடுங்க. ஒண்ணும் யோசனை பண்ணாதீங்க. உங்க தாத்தா குடும்பமும் எங்க தாத்தா குடும்பமும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணா இருந்தவங்க. சந்தோஷமா இருங்க. ஐயனாரு கை விட மாட்டாரு.”

          என்ன சொல்வது என்று தெரியவில்லை. வீட்டுத் திண்ணையில் கட்டிலே கதியாகக் கிடந்தான். முடிந்த போது ஐயனார் கோவிலில் போய் உட்கார்ந்தான். ஊர் மனிதர்கள் அடிக்கடி வந்து நலம் விசாரித்து விட்டுப் போனார்கள். இந்தக் கிராம வாசிகளுக்குத் தான் எத்தனை பாசம். நான் இவர்களுக்கு என்ன செய்தேன் என்று நினைக்கிறான். ஏதேனும் செய்தால் தான் பாசம் காட்ட வேண்டும் என்ற வணிகக் கலாசாரத்தில் வளர்ந்தவன் அவன்.

          பூசாரி கோவில், வயல் வேலைகளுக்குப் போன நேரம் போக மீதி நேரத்தில்  இவனை நன்றாகக் கவனித்துக் கொண்டார். வேளா வேளைக்கு அவரது மனைவி சாப்பாட்டை ஒரு கிண்ணத்தில் போட்டு ஸ்பூனுடன் கொடுத்தாள். இடது கையால் சாப்பிடப் பழகிக் கொண்டான்.

          பொழுது போக வேண்டுமே.

          “வீட்டிலே டீவி இருக்குங்க. கரண்ட் தான் கிடையாது. ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம் தான் வரும். அதுவும் எப்ப வரும்னு சொல்ல முடியாது.”

          அவனுக்கு ஒரே பொழுது போக்கு பூசாரியின் மகனும் அவனுடைய நண்பர்களும் தான். இவனுடைய இளமைப் பருவம் சென்னை நகரில் கழிந்தது. கிராமப் புறங்களைப் பார்க்கவோ அந்த வாழ்க்கை முறையைப் பற்றி அறியவோ அவனுக்கு வாய்ப்புக் கிட்டியதில்லை. இப்பொழுது வாய்ப்பும் கட்டாய ஓய்வும் கிடைத்து, சிறுவர்கள் மாமரத்தில் கயிறு கட்டி ஊஞ்சல் ஆடுவதையும் கிட்டிப் புள், கோலி, பம்பரம் விளையாடுவதையும், சிறுமிகள் பாண்டி விளையாடுவதையும், ‘ஆலாப் பொறுக்கி, ஆரோட சேத்தி’ என்று நீளமாகப் பாட்டுப் பாடிக் கொண்டே கற்களை விட்டெறிந்து பிடிக்கும் விளையாட்டையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

          அவ்வப்போது பூசாரி வந்து தன் குடும்பக் கதையைச் சொல்வார். “எனக்கு நாலு பசங்க. இங்கே இருக்கிறவன் தான் கடைசி. பெரியவன் டிரைவிங் கத்துக்கிட்டான். இப்போ துபாயிலே இருக்கான். ரெண்டாவது பையன் ஃபிட்டர் தொழில் கத்துகிட்டு கும்மாணத்திலே வேலை  பாக்கிறான். மூணாவது பய அங்கேயே இஞ்சினீரிங் காலேஜிலே படிக்கிறான். பெரியவன் அனுப்பற பணத்திலே தாங்க அவன் படிப்பு நடக்குது. இப்ப பெரியவனுக்குக் கல்யாணம் ஆயிடிச்சின்னா அவன் தம்பிக்குப் பணம் அனுப்பறது நின்னு போயிடும். ஒரு நல்ல எடம் வந்திருக்கு. தம்பி படிப்புக்காக அவனுடைய கல்யாணத்தை ஒத்திப் போடறதும் சரியில்லே. பார்ப்போம். ஐயனாரு ஏதாவது வழி காட்டுவாரு.”

          பூசாரி மட்டுமல்ல, அந்த ஊர் ஆண்கள் ஒவ்வொருவரும் இவனிடம் வந்து தங்கள் சொந்தக் கதை முழுவதையும் சொல்லிக் கொண்டார்கள். இதையெல்லாம் என்னிடம் ஏன் சொல்கிறார்கள், கேட்டு எனக்கு என்ன உபயோகம் என்று நினைத்தாலும் வேறு வழி இல்லாமல் கேட்டுக் கொண்டான்.

          அதே போல, இவனைப் பற்றியும் ஒவ்வொருவரும் குடைந்து குடைந்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அடுத்தவருடைய சொந்த விஷயங்களில் தலையிடுவது தவறு என்ற நாகரிகம் தெரியாத காட்டு வாசிகள் என்று நினைத்தான். முதலில் தன்னைப் பற்றி அரை குறைத் தகவல்களை மட்டுமே வெளியிட்டவன் பின்னர் மனம் மாறி இவர்கள் தங்களைப் பற்றி முழுமையாகச் சொல்லிக் கொள்வது போல என்னிடமும் எதிர்பார்க்கிறார்கள். சொல்வதில் என்ன தவறு என்று நினைத்து எல்லாவற்றையும் சொல்லிவிட்டான், தனது தொழிற்சாலை தள்ளாட்டத்தில் இருப்பது உள்பட.

          ஒருநாள் பூசாரியின் பையன், “வித்தை காட்டறேன் பாருங்கடா” என்று அக்கம் பக்கத்துப் பையன்களைக் கூட்டி வந்தான். ஒரு நூலில் ஒரு சிறு கல்லைக் கட்டி நூலின் மறு முனையை ஒரு குச்சியில் தொங்க விட்டான். மற்ற பையன்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்து அந்த நூலில் வைத்தான். நூல் எரிந்தது. அதில் கட்டப்பட்டிருந்த கல் கீழே விழுந்தது. “இது தான் வித்தையாக்கும்” என்று பையன்கள் கேலி செய்தார்கள். “இருங்கடா, இன்னும் இருக்குடா” என்று சொல்லி விட்டு வேறு ஒரு நூலை எடுத்தான். அதில் ஏதோ பச்சிலைச் சாற்றைத் தடவினான். சற்று நேரம் காய வைத்து விட்டு முன்பு போல் அதில் கல்லைக் கட்டித் தொங்க விட்டான். இப்பொழுது அதைப் பற்ற வைத்தான். நூல் எரிந்தது. கரியாயிற்று. ஆனால் கல் விழவில்லை. மற்றப் பையன்கள் வாயைப் பிளந்தார்கள்.

                    “எப்படிடா? டேய் எனக்குச் சொல்லிக் குடுடா.”

                    “மூணு நாள் பட்டினி கிடக்கிறியா, அப்ப தான் சொல்லித் தருவேன்.”

          இதைப் பார்த்துக் கொண்டிருந்த போது சுந்தரேசனுக்கு மூளையில் பளிச்சென்று ஒரு மின்னல் தோன்றியது. மூலப் பொருள் தரக் குறைவைச் சரி செய்ய ஒரு வழி புலப்பட்டு விட்டது. ஒரு வருஷமாக மூளையைக் கசக்கிக் கொண்டபோது கிடைக்காத திட்டம் ஒரு வாரமாக அதைப் பற்றிச் சிந்திக்காத போது தோன்றியது.

          “தம்பி, இங்கே வா, எனக்கு அந்த வித்தையைச் சொல்லிக் குடு, நான் மூணு நாள் பட்டினி கிடக்கிறேன்” என்றான்.

          “உங்களுக்குச் சொல்லித் தரேண்ணே. நீங்க பட்டினி எல்லாம் கிடக்க வேண்டாம். வேறே ஒண்ணும் இல்லீங்க. முருங்கை இலைச் சாறு அது ”

          அடுத்த புதன் கிழமை வந்தது. தென்னமரக்குடிக்கு அழைத்துப் போனார் பூசாரி. வைத்தியர் கட்டைப் பிரித்தார். கையில் ஒவ்வொரு இடமாக அழுத்திப் பார்த்துக் கொண்டே வந்தார். குறிப்பிட்ட ஓரிடத்தில் கட்டை விரலால் பலமாக அழுத்தினார். வலி தாங்காமல் ஆ என்று அலறினான் அவன். அடுத்த கணம் வலி மாயமாக மறைந்தது. எட்டு நாட்களாக கையில் இருந்த கனம் குறைந்தது. கை என்று ஒன்று இருப்பதான உணர்வே இல்லை. வைத்தியர் முட்டையையும் உளுத்தம் மாவையும் குழைத்துக் கை முழுவதும் பற்றுப் போட்டார். ஒரு வெள்ளைத் துணியை வைத்துக் கட்டினார்.

          “நாளைக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு கட்டை அவுத்துட்டு வெந்நீரை விட்டுக் கழுவி துன்னூத்தைப் பூசுங்க. ஒரு வாரத்துக்கு எண்ணெயைத் தடவிங்க. நீங்க உங்க ஊருக்குப் போகலாம்.”

          வெளியில் வந்ததும் பூசாரி சொன்னார், “ஒரு வாரம் எண்ணை போட்டதிலே எலும்பு தசை எல்லாம் இளகி ரப்பர் கணக்கா ஆயிருச்சு. இப்போ அது தன் இடத்திலே சரியா ஒக்காந்துகிச்சு. டாக்டர் கிட்ட போனீ்ங்கன்னா, அன்னிக்கே சேத்து வைச்சுக் கட்டுப் போடுவாங்க. தசை விறைப்பா இருக்கறப்போ எலும்பைப் பொருத்தினா அது முசிறிக்கிட்டுத் தான் இருக்கும். அதிலே ஒரு சின்னப் பிசிறு இருந்தாலும் கை கோணிப் போயிடும். இப்படி இளக்கிக் கட்டறது தான் இயற்கையான நிலைக்குக் கொண்டாரும்” என்றார்.

          “இதுவே மும்பையிலே இருந்தா எக்ஸ்ரே, ஆப்பரேஷன், ஸ்டீல் பிளேட் வைக்கறதுன்னு அம்பதாயிரம் ரூபாய் செலவு வெச்சுடுவாங்க. நீங்க வெறும் அம்பது ரூபாயிலே முடிச்சுக் குடுத்துட்டீங்க. ரொம்ப நன்றிங்க. இன்னிக்கு சாயங்காலம் பஸ்ஸிலே சென்னைக்குப் போறேன்” என்றான்.

          “எங்களை எல்லாம் நெனப்பிலே வெச்சுங்க” என்றார்.

          “உங்களை மறக்க முடியுமா? உங்க பையனையும் மறக்க முடியாது. இந்த ஒரு வாரம் ஓய்வு எடுத்ததிலே எனக்கு ஒரு புது வழி புலப்பட்டிருக்கு. ஐயனார் அருளாலே, அது வெற்றிகரமா முடிஞ்சுதுன்னா, என் தொழில் நிமிர்ந்துடும். அப்புறம் உங்க பையனோட காலேஜ் படிப்பை நான் பார்த்துக்குவேன்” என்றான்.

          “எல்லாம் நல்லபடியா நடக்கும் ஐயனாரு கை விடமாட்டாரு. போய்ட்டு வாங்க.”

          மூன்று மாதம் கழித்து பூசாரிக்குப் போன் வந்தது. “தொழில் நல்லா நடக்குது. உங்க மூணாவது பையன் ஃபோன் நம்பரைக் குடுங்க. அவன் காலேஜ் ஃபீஸ் எவ்வளவு, யார் பேருக்குப் பணம் அனுப்பணும்கிற தகவலை வாங்கிக்கிறேன், அத்தோட உங்க சின்னப் பையனுக்கும் என் நன்றியைச் சொல்லுங்க” என்றான் சுந்தரேசன்.

          “நன்றி ஐயனாருக்குத் தாங்க சொல்லணும். வருசா வருசம் வந்துட்டுப் போங்க” என்றார் பூசாரி.

    Share
  • பாதை மறந்த பருந்து …!

    ​ஜெயஸ்ரீ ஷங்கர்

    எங்கடீ அந்தப் பயல்?

    போய்ட்டான்…..

    போயிட்டானா…..? ஆத்த விட்டே போயிட்டானா அவன்..?

    ம்ம்ம்ம்

    அவ்வளவு பெரிய மனுஷனாயிட்டானா அவன்..? அவன் என்னைக் கண்டிக்கலாம்…நான் அவனைக் கண்டிக்கப்டாதோ..?

    அ ….ஹாங் …..அது….வேறொண்ணுமில்லடீ …..கிளிக்கு ரெக்கை முளைச்சுடுத்து…..ஆத்தவிட்டேப்  பறந்து போயிடுத்தூ ……..!

    பாலூட்டி வளர்த்த கிளி

    பழம் கொடுத்து பார்த்த கிளி…..

    நான் வளர்த்த பச்சைக் கிளி..

    நாளை வரும் கச்சேரிக்கு…..

    செல்லம்மா…எந்தன் செல்லம்மா…..!

    திடுமென மின்வெட்டானதால் தொலைகாட்சி கண்ணை மூடி திடீர் சாமியாரானது.

    அதனால் என்ன…?  வீட்டுக்குள்ள தான் கதையும் பாட்டும் நடந்து கொண்டே இருக்கிறதே. அந்த கௌரவப் பாட்டு போனால் என்ன… இருக்கவே இருக்கிறது… வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக் விதை…..!

    இட்டிலித் தட்டிலிருந்து ஒவ்வொரு இட்டிலியாகப் பெயர்த்து ஹாட் பாக்ஸில் போட்டு வைத்த சாரதா, பஞ்சு பஞ்சாக வெள்ளை வெளேரென்று மல்லியப் பூக் கணக்கா இருந்த இட்டிலிகளைப் பார்த்து, ஆஹா…எம்புட்டு அழகா இருக்கு…பார்க்கும்போதே திங்கச் சொல்லி நாக்கு நம நமங்குதே…. சாரதா… இட்டிலில உன்னை அடிச்சுக்க ஆளே இல்லடீ…. என்று  இல்லாத காலரை இழுத்து விட்டுக் கொண்டு தனக்குத் தானே தட்டிக் கொண்ட சாரதா, சடக் கென்று திரும்பிப் பார்த்தபோது… அங்கே கைகள் இரண்டையும் கதவில் முட்டுக் கொடுத்தபடி மகன் சிவராமன்  நின்று இவளையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

    “என்னடா சிவராமா… எப்ப வந்தே… யார் மேலே என்ன கோபம்?….அதான்…கோபம் கண்ணுல கொப்பளிக்குதே… அப்படி என்ன ஆச்சு உனக்கு?”

    “இன்னும் என்ன ஆகணும்….? சைக்கிள் பஞ்சர்… நான் பிளஸ் டூ படிக்கேல ‘அரசு மூலமா அம்மா’ கொடுத்த சைக்கிள் இது. இம்புட்டு நாள் ஓடிச்சே அதே பெருசு… என் கையில பஞ்சர் ஓட்டக் கூட காசு இல்ல… இனிமேட்டு நான் அதைத் தொட மாட்டேன்… அதான்.. அப்படியே காயலான் கடையில வித்துட்டேன்.”

    “எம்புட்டுக்கு? அந்தக் ரூபாயை என்ன செஞ்சே? இங்கிட்டு தா என் கையில.”

    “ஆமா… துருப்பிடிச்ச சைக்கிளுக்கு கட்டு கட்டாத் தூக்கிக் கொடுத்தாங்க. நான் அதை தோல் பையில எடுத்தாந்திருக்கேன். நூறு ரூபாய் கூட தர மாட்டேன்னு சொல்லிட்டான்… நீ என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது. எனக்கு நாளைக்கே புதுசா ‘ஹோண்டா’ பைக் வேணும். வாங்கித் தாங்க. இல்லாட்டி வீட்டுப் பக்கமே வரமாட்டேன்.”

    “டேய்.. சிவா… ஒரு வேலையை பிடிச்சுக்கடா… பெறவு உனக்கு என்ன வேணுமோ அத நீயே உன் சொந்த பணத்துல வாங்கிக்கிறலாம். அப்பா இந்த வீட்டை லோன் போட்டு வாங்கியிருக்காரு… மாசா மாசம் ஹவுசிங் லோனும் வட்டியுமே அவரோட கையைக் கடிக்குது. நாளைக்கே ‘ஹோண்டா’ பைக்கைக் கொண்டான்னு கேட்டா எப்புடி, உங்கப்பா என்ன ராக்கொள்ளையா அடிக்கப் போறாரு..?” இட்டிலிக்குத் தோதாகத் தொட்டுக் கொள்ள கொத்தமல்லிச் சட்னி அரைத்து எடுத்து கிண்ணத்துக்குள்  வைத்தபடியே அவனைப் பார்க்கிறாள் சாரதா.

    “நீ தலை எடுத்தாத் தான் நாங்க நிமிர முடியும். நீ தெனம் ஏதாச்சும் ஒண்ணு சொல்லிட்டு வரே. படிச்சு முடிச்சு ஒரு வருஷமாகப் போவுது.. இன்னும் நீ உட்கார்ந்த இடத்துலயே இருந்தீன்னா….எப்புடி.? நெனச்சுப் பாரு. உனக்குன்னு குடும்பம் ஆக வேணாமா?

    வேலை இருந்தாத்தான மேல்கொண்டு நடக்கும்..? உன் நெலம புரிஞ்சு யோசிடா தம்பி.”

    “எல்லாம் என் நெலம புரிஞ்சுதான் நான் இருக்குறேன். இந்தத் தீவாளிக்கு ஏதாச்சும் கேட்டனா..? நீயே சொல்லு… நல்ல துணி மணி வாங்கித்தரச் சொன்னா… நீ வேலைக்கிப் போற பவுசுக்கு புதுசு கேட்குதோ..?ன்னு நொண்டிடியடிப்பீங்க.

    வெடி வாங்கித் தரச் சொன்னா, நான் கஷ்டப்பட்டு சம்பாரிச்ச பணத்த நீ புஸ்வாணம் விடத் தேவையில்லன்னு சாக்கு சொல்லுவீங்க. இதெல்லாம் எதுக்குண்டு தான் நான் வாயைப் பொத்திகினு இருக்கேன். நான் என்னா இப்ப உன்னிய எனக்குக் கலியாணம் முடிச்சு வெய்யினா கேட்டேன்.. ஒரு பைக்கு தானே கேட்டேன்… அதுக்கு ஏன் இப்படி நொய்யி நோய்யின்னு பேச வைக்கிறே?

    ஆனாலும் இன்னாம்மா நீ….எப்பப் பாரு ‘இல்லே பாட்டுப் பாடி’ அழுதுக்கிட்டு. என் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் எப்பிடி இருக்கானுவுங்க தெரியுமா? நான் ஒருத்தன் மட்டும் தான் பஞ்சத்துக்கு பெறந்த பரதேசி. ம்ஹும்…..அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு நாளைக்கு புது பைக் வேணும். அம்புட்டுத் தான். அந்தாள லோன் போடச் சொல்லு…இல்லாட்டி நீ உன் நகையை வித்து எனக்கு பைக் வாங்கிக் கொடு…நான் சம்பாதிச்சு உனக்கு நகை பண்ணிப் போடறேன்.”

    “போடா உன் வேலையைப் பார்த்துட்டு… நகையை விக்கணுமாம்? தங்கம் என்ன தெருவிலயா போட்டுக் கூவி கூவி விக்கிறாங்க. இவன் வாங்கித் தருவானாம்… நான் நம்பி… நல்ல கதையா இருக்குது? அப்பா காதுல விழுந்துச்சுன்னா அம்புட்டுத்தேன். போ இங்கிட்டிருந்து.. வேற வேலை எதுனா இருந்திச்சின்னாப் போய்ப் பாரு.”

    “எம்மா…..அவரு இருக்காரா.? வந்தாச்சா?”

    “யார்ரா….அவுரு…?”

    “அதான் உன் புருஷன்….!”

    “வாயை மூடு…! அப்பான்னு மருவாதியாக் கூப்பிடு  …! அவரு அப்பமே வந்துட்டாரு.”

    “இப்ப எங்க? யார்கிட்ட போன்ல என்னியபத்தி குத்தம் குறை சொல்லி பாரதம் படிக்கிறாரா?”

    “ரூம்ல…..க்ரானிகல் நியூஸ் பேப்பர்ல க்ராஸ் வார்ட் வருமே..அத்த எடுத்து வெச்சுக்கிட்டு  மண்டையைப் போட்டுக் குழப்பிட்டு இருப்பாரு..!”

    “அவுரு அதுக்குக் கூட சரிப்பட்டு வர மாட்டாரு.”

    “அவரு பாட்டுக்கு என்னத்த செஞ்சாலும் நீ ஏண்டா… தப்பாவே நினைக்கிறே ? பெத்தவங்களை, பெரியவங்களை வாய்க்கு வந்தபடில்லாம்  பேசிடக் கூடாது சிவராமா… எம்புட்டு வாட்டி சொல்லுறது. மரியாதையாப் பேசக் கத்துக்கண்டு. அம்மா எப்பவும் நல்லது தான் சொல்லுவா. நான் சொல்லுறதையாச்சும் நீ கேளுப்பா.”

    “அவரு மட்டும் என்னிக்காச்சும் யாருக்காச்சும் மரியாதை கொடுத்து பேசிருக்காரா?அட்லீஸ்ட் உனக்காச்சும்….! நீயே கேட்டுப் பாரு. அது… வேறொண்ணுமில்லம்மா… தான் தான் சம்பாதிக்கிறோம்னு மண்டை கர்வம்… திமிர்… கொழுப்பு… அந்தாளுக்கு…! இவரப்  போயி யார்மா உன் தலைல கட்டி வெச்சது..! சுயநலம் பிடிச்ச ஆளு.”

    “வாயை மூடுடா…!”

    “ஏன்…உன் புருஷனைச் சொன்னா உனக்குக் கோவம் பொத்துக்கிட்டு வருது? காலைல ஒரு நூறு ரூபாய் கேட்டதுக்கு, நாக்கைப் பிடுங்கறாப்பல எம்புட்டு கேள்வி கேட்குறாரு. நீயும் கேட்டுக்கிட்டு தானே வாயை மூடிட்டு இருந்தே. எனக்கு இப்ப நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது. நாளைக்கு எனக்கு புது பைக் கண்டிப்பா வேணும்.”

    “இப்ப நீ உன் பேருக்குப் பின்னாடி ஒரு வாலைக் ஒட்ட வெச்சிருக்கியே, பிஏ டிகிரி வாலு…! அது மட்டும் என்ன சும்மா வந்து தர்மத்துக்கு ஒட்டிக்கிச்சா. அவரில்லாமல் உன் பேருக்கு பின்னாடி பட்டம் பறக்குமா? நெனெச்சுப் பாரு.. அன்னிக்கு ஆயிரமாயிரமா  உன் படிப்பு செலவுக்குக் கொட்டினவர் தான்… இப்பத் தான் நூறு ரூபாய்க்கு கணக்கு கேட்குறாரு… எதுக்குன்னு விஷயத்தைச் சொல்லி வாங்கிட்டு போறது தானே நீ..? உனக்கென்னாத்துக்கு அம்புட்டு ரோஷம்?”

    “சரி…சரி….இப்ப நீயே அவுரு காதுல போட்டு வெய்யி, எனக்கு ஹோண்டா பைக்கு வேணுமின்னு..சொல்றியா?”

    “திடுதிப்புன்னு பைக் வேணுமுன்னா துட்டுக்கு எங்கிட்டுப் போறது. நீ கேக்குறதும் அநியாயமால்ல இருக்குது.”

    “நீ அந்தாளுக்கு வக்காலத்துக்கு வரே பாரு….! ஒழுங்கா இருக்குறவனையும் கிரிமினல் பண்ணிடுவீங்க ரெண்டு பேருமா சேர்ந்து…! நான் போறேன்.”

    “இந்தாடா… கையைக் அலம்பிட்டு வா… சூடா இட்டிலியும், மல்லி சட்னியும் செஞ்சிருக்கேன்… போட்டுத் தரேன்… தின்னுட்டு தொலை.. என் கோபத்தைக் கிளறாத. வீட்டை விட உனக்கு உன்னோட உருப்படாத ஃப்ரெண்ட்ஸ் தான் முக்கியமா போயிட்டாங்க இல்லே…? பசிக்குமில்ல… இந்தா இட்டிலி,  தட்டையாச்சும் கையால வாங்கு.”

    “அதென்னமோ நீங்களே தின்னுங்க….நான் போறேன்…!”

    “டேய்….இப்ப இந்தத் தட்டை நீ வாங்கப்போறியா இல்லியா..? இப்பிடி யார் மேலயாச்சும் எப்பப்பாரு கோபப்பட்டுக்கினு சாப்பிடாமப் போனே… பெறவு சோத்துக்காக தெருநாய் கணக்கா அலைய வேண்டியது தான். நெனப்பிருக்கட்டும்.” எச்சரிக்கும் குரலில் எரிச்சலோடு அம்மா நீட்டிய தட்டை வெடுக்கெண்டு பிடுங்கிய சிவராமன் நேரே வாசலுக்கு நடக்கிறான்.

    “சிவராமா…எங்கடா….போறே…!”

    “ம்ம்ம்….தெருநாய் கணக்கா அலையப் போறேண்டு  சாபம் கொடுத்தீல்ல, அதான்… எப்படின்னு பார்க்கப் போறேன். என்ன இந்த உலகத்துல நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் இருக்கறதா உங்களுக்கு நினைப்பா… உங்களுக்குத் தான் என்னிய விட்டா யாருமில்லை. அதைத் தெரிஞ்சுக்கங்க  முதல்ல. எனக்கு ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ். என் பேரைச் சொன்னால் உசுரக் கூடக் கொடுப்பாங்க. தெருநாய் மாதிரி அலையப் போறேனாம்… நெனப்பப் பாரு.” கோபத்துடன் கத்திக் கொண்டே வாசல் படியில் கையில் தட்டோடு இறங்கி நிற்கவும்,

    எங்கிருந்தோ ஓடி வந்த தெருநாய் இவன் முன்னே வாலாட்டிக் கொண்டு நின்று நிமிர்ந்து இவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தது,

    “அண்ணே…ரொம்பப் பசிக்குது…ஏதாச்சும் இருந்தா நீயாச்சும் போட மாட்டியா”  அந்தக் கண்களின் பாஷையைப் புரிந்து கொண்ட சிவராமன் சற்றும் யோசிக்காமல் தட்டிலிருந்த இட்டிலிகளை அந்த நாய்க்கு வைத்தான்.

    அவனை நன்றியோடு நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு, குனிந்து கொண்டு வாலாட்டியபடியே ஒரு இட்டிலியை கவ்விக் கொண்டது.

    “எம்புட்டுத் திமிரு இருந்தா நீ இந்தக் காரியம் செய்வே…? விலைவாசி விக்கிற விலையில, நாய்க்கு இட்டிலி கேக்குதோ? எம்புட்டு தகிரியம் திங்கக் கொடுத்தா அப்பிடியே தெருவுல நாய்க்குப் போட ..!  உனக்கு இனிமேட்டு இங்க  சோறு கிடைக்காது. எந்த நாய் உனக்குச் சோறு போடுதுன்னு நானும் பார்க்கறேன்” உள்ளிருந்து தான் கண்ட காட்சியில் கோபப்பட்டுக் கொண்டு ஓடிவந்த சாரதா. ஏதோ தன் மகன் செய்யக் கூடாத காரியத்தை செய்து விட்டது மாதிரி கத்தித் தீர்த்தாள் .

    “இன்னொருவாட்டி உனக்கு யாரு இப்படி இட்டிலியைப் போட்டு கையில நீட்டப் போறாங்க… இப்படியே பட்டினி கெட..அப்பவாச்சும் புத்தி வருதாப் பாப்போம்.”

    “யாருக்கு வேணும்…?  இந்தா இட்டிலி தட்டைப் பிடி.

    போம்மா… நீயும் உன் இட்டிலியும் வீணாப்போன சட்டினியும்..! யாருக்கு வேணும்..?” கனன்று கொண்டிருந்த மொத்த கோபத்தையும்  கதவில் காண்பித்து விட்டு, விடு விடென்று வாசல் கேட்டை ஓங்கி அடித்துச் சார்த்திவிட்டு மறைகிறான் சிவராமன்.

    துர்வாசர் புனர்ஜென்மம் எடுத்து … அப்படியே இவன் மூக்கு மேலே அட்டென்ஷன்ல நிக்கிறாரு போல. வயசுப் பிள்ளைக்கு இத்தனை கோபம் ஆகாதுப்பா. அலுத்துக் கொண்டே காலித்தட்டை எடுத்துக் கொண்டு சமையலறை நோக்கிப் போகிறாள்.

    பாவம் சிவராமன்… அவன் மட்டும் என்ன செய்வான். ‘வெறும் பி.ஏ  வுக்கு இங்க வேலையில்லைப்பா’… என்று சொல்லி அவனை ஓவ்வொரு கம்பெனியும் நிராகரிக்கும்போதேல்லாம்… ‘சார்… இது உப்புப் போட்டு தின்ன பி.ஏ ஸார் ‘ என்று உரக்க கத்திவிட்டு வரவேண்டும் போலத் தானிருக்கும்.

    சாரதாவுக்கு  தாகம் தொண்டையை அடைக்க, ஃப்ரிட்ஜைத் திறந்து தண்ணீர் பாட்டில் எடுக்கக் குனிந்து பார்க்கும் போது தான் தெரிந்தது.. பேருக்கு ஒரு பாட்டில் கூட அங்கு இல்லை…

    ‘கஷ்டம் கஷ்டம்….ஒரு பாட்டில் தண்ணீர்  கூட பிடிச்சு வைக்க ஒரு மனுஷன் கிடையாது இங்கே… எல்லாம் நானே தான் செய்ய வேண்டியிருக்கு. நான் தண்ணியப்  பிடிச்சு ஃப்ரிட்ஜ்ல வெச்சா மாத்திரம், ஒரு மணி நேரத்தில் அத்தனை பாட்டிலையும் காலி பண்ணி உருட்டி விடத் தெரியும். அங்க பாரு… ஏதோ பறக்கும் தட்டு வி​ளையாடினாப்போல மூலைக்கு மூலை காலி பாட்டிலும், காப்பி டம்பளரும் சிதறிக் கிடக்கறத. இந்த லட்சணத்துல இவிங்களுக்கு  கோபத்துக்கு ஒண்ணும் குறைச்சலில்லை.’ முனகியபடியே குடத்துத்திலிருந்து ஒரு  சொம்பில் தண்ணீரை மொண்டு எடுத்து கட கடவென்று குடித்ததும்… உடம்பு முழுதும் புத்துணர்ச்சி பரவியது போலிருந்தது அவளுக்கு.

    “சாரதா” உள்ளிருந்து கணவரின் குரல்….!

    “இதோ….வந்துட்டேங்க!” இவளின் பதிலும்.

    “உன் சீமந்தப் புத்திரன் வந்தாச்சா….இல்லை இன்னும் பொறுக்கிட்டு தான் இருக்கானா?”

    “நானா கண்டேன்….என்னிய ஏன் இப்ப வேண்டாத வம்புக்கு இழுக்கறீங்க ? நீங்களாச்சு உங்க புள்ளயாச்சு..”

    “இப்படி விட்டேத்தியா பதில் சொல்ல எப்பக் கத்துகிட்டே..? யார் சொல்லிக் கொடுக்கிறாங்க… அந்தப் பொறம்போக்கா …?” என்று கேட்டபடியே உள்ளிருந்து வரும் கணவரைப் பார்க்கப் பார்க்க எதிர்த்துப் பேச நாக்குத் துடித்தது. அடக்கிக் கொண்டாள். ‘இப்ப நான் என்ன சொன்னாலும் இவர் கிட்ட எடுபடாது….வீணா சண்டை வளரும்… வேண்டாம்’ என்று மனதை அடக்கி வைத்தாள்.

    “என்ன பண்ணிருக்கே….போடு. தின்னுட்டு தூங்கறேன். நான் ஒருத்தன் அதுக்கு மட்டும் தானே இருக்கேன்னு உங்க ரெண்டு பேருக்கும் நினைப்பு.”

    “என்ன க்ராஸ் வார்ட்ல வார்த்தைங்க  ஒண்ணும் சரியா வந்து விழலையா? அதான் இங்க வந்து கொட்டறீங்களா..? நமக்கு இருக்கறதே ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு கருவேப்பலை கொத்தாட்டம் ஒத்தப் பிள்ளை… அத்தப் போயி நீங்களே பொறம்போக்குன்னு சொன்னா எப்பிடிங்க?” இட்டிலியை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தவள் அதை அப்படியே டைனிங் டேபிள் மீது வைத்து விட்டு, எமெர்ஜென்சி கைவிளக்கை எடுத்து வர மீண்டும் சமையலறைக்குள் நுழையும்போது போன மின்சாரம் ரீங்காரமாய் வந்தது.

    ஊதா…..ஊதா…..

    ஊதாக் கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்

    நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்….

    நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்…

    ரோஜா……ரோஜா…..கலரு பொம்மி…

    உனக்கு யாரு  மம்மி…..!

    ஏய் நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடணும்…!

    ஏய் நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடணும்…!

    ஊதா……ஊதா…..!

    தொலைக்காட்சிப் பெட்டியில் வருத்தப் படாத வாலிபர்கள் ஆடிக் கொண்டிருக்க… சாரதாவுக்கு எரிச்சல் வந்தது.

    உன் தலையில் அம்மிக் கல்லைத் தூக்கிப் போடணும்.. பாட்டைப் பாரு பாட்டை…..டொக்கென்று  டிவியை  அணைத்து விட்டு, கரையான்கள் மாதிரி சினிமா உலகத்துக்குள்ளார நுழைஞ்சுட்டானுங்க.. இவனுங்களாலத் தான் வளருற புள்ளைங்க கெட்டுக் குட்டிச் சுவராப் போறாய்ங்க. ஏற்கனவே நாடு தள்ளாடுது… இனிமேட்டு ஒரு ‘கௌரவமும்’ பார்க்க முடியாது….எல்லாம் டண்டனக்கா தான். அம்புட்டு  சானல்லயும் இதேப்  பாட்டைப் போட்டு மோசம் செய்யுது.

    “சாரதா… பார்த்தீல்ல உலகத்த… அதான் சொல்றேன்.. அந்தக் கருவேப்பலைக் கொத்து நாளைக்கு உன்னோட சாவிக்கொத்தைப் பிடுங்கிட்டு ஓடும் போது தான் உனக்கு மண்டேல ஏறும்… அது வரைக்கும் பாசம் கண்ணை மறைக்கும்.”

    “அப்ப நீங்க உங்கம்மா அப்பாகிட்ட அப்படித்தான் செஞ்சீங்களா…? நீங்க அவுங்க இருக்குற வரைக்கும் அவுங்களை உங்க உள்ளங்கையில வெச்சுத் தானே தாங்கு தாங்குன்னு தாங்கினீங்க..? உங்க ரத்தம் தான அங்கிட்டும் ஓடுது… உங்க பிள்ளையும் உங்கள மாதிரி தான இருப்பான். பார்த்துக்கிட்டே இருங்க. என் வாக்குத் தான் பலிக்கப் போவுது.”

    “கிளிச்சுச்சு. நீ கனவு காணுற அந்தக் காலமெல்லாம் மலையேறிப் போச்சுடி… நீ இன்னும் புரியாதவளா இருக்கே. நாலு இடம் போனாத் தான் உலகம் தெரியும். நீ கிணத்துத் தவளை. உன்னோட உலகம் சமையல்கட்டும் எச்சப்  பாத்திரமும் மட்டும் தான். அக்கம் பக்கம் வம்படிக்கக் கூட  ஒஞ்ஜோட்டு புள்ளைங்க இங்கன யாரும் கிடையாது. எல்லாருமே ரெண்டு சம்பாத்தியக் குடும்பமாப் போச்சு. ஞாயித்துக் கிழமை தவுற மத்த நாள்ல பூட்டு தானே வீட்டை காக்குது. எங்க ஆபீஸ் அக்கவுண்டண்ட் பார்த்தசாரதி இருக்காரில்ல…?”

    “ஆமா… அவருக்கு என்னாச்சு? ஹார்ட் அட்டாக்கா..? அல்லது அவுரு வீட்டாண்ட திருட்டுப் போயிரிச்சா..?”

    “ஏண்டி…உனக்கு நல்லதே தோணாதா?”

    “இப்பல்லாம் நல்லதே நடக்க மாட்டேங்குதே. எங்கிட்டுப் பார்த்தாலும் இப்படித் தான இருக்குது…அதான்..நீங்க சொல்லுங்க.

    அப்ப அவுருக்கு என்னாச்சு?”

    “ஹார்ட் அட்டாக் தானா தான் வருமா என்ன..? பெத்ததுங்க நெஞ்சுல ஓங்கிக் குத்தாமல் செய்கையால குத்தினாலும் வலி  வரும்… அவரோட பையன் ரெண்டு மூணு நாளா வீட்டுக்கே வரலையாம். ஆபீசுக்கும் போகலையாம். திடீர்னு நேத்து வந்து மாலையும் கழுத்துமா வீட்டு வாசல்ல வந்து நின்னானாம்.”

    “அடப் பாவமே…..! ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிகிட்டானா…?”

    “நானே சீரியஸ் விஷயம் சொல்ல வாரேன். உனக்கென்ன  இப்ப ராகத்தோட பாட்டுக் கேட்குது..? நீயும் இப்பல்லாம் இந்தப் பாளா போற டிவி யைப் பார்த்து ரொம்பவே கேட்டுப் போயிட்டே. எப்பப்பாரு…..ஏதாச்சும் பாடிக்கிட்டு….!”

    “ம்ம்ம்… சரி, சாரி… சொல்லுங்க…சொல்லுங்க என்னாச்சு? அவரு ஏத்துக்கிட்டாரா.? பார்த்தசாரதி பக்கா அய்யங்காரு குடும்பம்… அந்த மைதிலி மாமி செய்யுற புளியோதரை தொட்டாலே கை மணக்கும்… இல்லீங்க.”

    “ஆமாங்க…!” என்று தன் குரலை பெண் குரல் போல மாற்றிச் சொல்லிக் காட்டியவர், “என்னை முழுசா சொல்ல விட மாட்டியே… சரி ஒண்ணும் வேண்டாம்… உன் மரமண்டைக்கு தீனியை தவிர  வேற ஒண்ணும் ஏறாதுன்னு தெரிஞ்சு போச்சு. இட்டிலியைப் போடு.”

    “என்னங்க நீங்க….அப்படி என்னத்த சொல்லிப்புட்டேன்னு இம்புட்டு கோபம் உங்களுக்கு…? மேல சொல்லுங்க..இட்டிலி எடுத்து வெக்கிறேன்.”

    “கூட வேலை பார்குற ஒரு தெலுங்குக்கார பிள்ளைய . கல்யாணம் கட்டி கூட்டிட்டு வந்திருக்கான். இவரு பெத்த பிள்ளையின்னு கூட நினைக்காம, போடா வெளிலன்னு துரத்தி விட்டுட்டு இத்தோட முடிஞ்சி போச்சுன்னு சொல்லி ரெண்டு பக்கெட் தண்ணியை தலயில் கொட்டிக்கிட்டாராம்.”

    “அதனால ஜலதோஷமில்ல பிடிச்சிருக்கும். இப்பக் கிடந்து வருத்தப் பட்டு என்ன பிரயோஜனம்.? ஆரம்பத்திலிருந்து கண்டிச்சு வெச்சிருந்தா இப்ப இந்த நிலை வராதில்ல. இப்ப என்னாச்சு..? பெத்தத தொரத்திட்டு ரெண்டு பெருசும் அழுதுகிட்டு  நிக்கிறாங்களா?  பாவம்ங்க…அவுங்க.”

    “அதான் சாரதா …நானும் சொல்றேன்….இன்னைக்கு அவருக்கு,  நாளைக்கு நமக்குன்னு ஆயிடக் கூடாதில்லையா..?”

    “அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுங்க..நம்ம பையன் தங்கக்குடம். அந்த வளிக்கெல்லாம் போயிறமாட்டான்.”

    “ஆமா..உன்கிட்ட வந்து சொன்னான்… இப்படியே அவனைத் தலையில ஏத்தி வெச்சுக் கெரகமாடிக் கொண்டாடு. அவன் அப்படியே உன்னை நசுக்கிட்டு உருளப் போறான். உன் பாசம் உன் கண்ணை,  காதை,வாயை அடைச்சிடுத்து.. என்ன செய்யறது. உனக்கெல்லாம் பட்டாக் கூடத் தெரியாது..”

    “வயசுப் பசங்க கொஞ்சம் அப்படி இப்படித் தான் இருக்குங்க, நாம பெரியவங்க அவங்களை கொஞ்சமாச்சும் நம்பணும். எல்லாத்தையும் ஒரே மாதிரி பார்த்தால் கஷ்டமில்லையா. இதோ… இப்ப இட்டிலி கூட திங்காமல் தெருநாய்க்கு போட்டுட்டு கோபத்தோட வெளிய கெளம்பிட்டான். நீங்க எப்பப்பாரு நீங்க அவனை எதாச்சும் சொல்லி அவன் மனசை வேதனை செய்யுறத மொதல்ல கொஞ்சம் நிப்பாட்டுங்க. உலகம் தெரியாத பிள்ள அவன். இப்பத்தான் அவனுக்கு நல்லது கேட்டது விளங்குது.”

    “அவனுக்காடி உலகம் தெரியாது. உலகத்தைக் கூறு போட்டு வித்துப்புடுவாங்குங்கடி. அவனும் அவன் கூட்டாளிங்களும். அவன் முழியப் பார்த்தாலே எனக்கு அவன் ஏதோ தகிடுதத்தம் பண்ணிட்டு வந்த மாதிரியே இருக்கும். என்னியப் பார்த்தாலே திருட்டு முழி முழிக்கிறான். அவனை எப்படி நம்பச் சொல்றே நீ?”

    “ஹலோ…!” என்று இழுத்த சாரதா “நம்ம முழில கொஞ்சமாச்சும் அவனுக்கும் இருக்குமில்ல. என்னமோ நம்ம ராஜபார்வை பார்க்கிறாப்பல, அவனை என்ன வேணா உங்க இஷ்டத்துக்கு சொல்லிக்கிருங்க. ஆனா அவனைத் திருடு, கொறடுன்னு மட்டும் எதாச்சும் சொன்னீங்கன்னா எனக்குக் கெட்ட கோபம் வரும், இப்பமே சொல்லிட்டேன்… ஆமா.”

    “அவனைச் சொன்னா உனக்கு பாசம் பொத்துக்கிட்டு வந்துடுமே. எப்டியோ நீ அவனுக்கு அசாத்தியச் செல்லம் கொடுத்து, அவனும்   கெட்டு குட்டிச்சுவரா போயாச்சு. இனிமேட்டு சாண் போனா என்ன முழம் போனா எனக்கென்ன? நேத்திக்கி நான் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வரும்போது வழக்கமா வர வழில வராமல் தீபாவளிக் கூட்டமா இருந்திச்சேன்னு  கொஞ்சம் சுத்தி வந்தேன் பாரு… வரக்குள்ள அங்கன  ஒரு பெட்டிக்கடையில நம்ம அய்யா செம ஸ்டைலா நிக்கிறாரு… சாம்பிராணிப் பொகை  போடுற சாயுபு கணக்கா. ஊதி ஊதி புகையை விட்டுக்கிட்டு… கூடவே இன்னும் ரெண்டு தத்தாரிப் பசங்க, இவனுக்கு ஜால்ரா போட. அப்டியே… வண்டியை விட்டு எறங்கி ரெண்டு சாத்து சாத்தினா என்னன்னு தோணிச்சு. இருந்தும் கட்டுப் படுத்திகிட்டேன். எதுக்குத் தெரியுமா?”

    “அச்சச்சோ…..என்னது…! .சிகரெட் பிடிக்கிறானா..? எதுக்கு சாத்தாம விட்டீங்க..?”

    “என் மானம் போயிறக் கூடாது பாரு….அதுக்காண்டி தான், கண்டுக்கிடாம விட்டுட்டேன். அதான் இன்னிக்கி காலீல நூறு ரூபாய் கேட்டான் பாரு… அப்ப சேர்த்து வெச்சு நான் கொடுத்த டோசுல, இனிமேட்டு வாயில கொள்ளிக்கட்டையை செருகும்போது அவனுக்கு நான் சொன்ன நெனப்பு தான் வரும் பாரு..! “புலம்பிக் கொண்டே இட்டிலியை சாப்பிட்டு முடித்தவர் எழுந்து கையலம்பிவிட்டு பெரிதாக ஒரு ஏப்பம் விட்டுவிட்டு படுக்கையை நோக்கி கொட்டாவி விட்டுக் கொண்டே போனார்.

    “என்னங்க நீங்க…இப்படி ஒரு குண்டைத் தூக்கி போட்டுட்டு போறீங்க. நம்ம சிவராமனா சிகரெட் பிடிக்கிறான் ..? எனக்குத் தெரியவே தெரியாது. ஆச்சரியமா இருக்குதே. நம்பவே முடியலீங்க.”

    “சிவராமன்னு பேரு வெச்சா சிகரெட்டெல்லாம் பிடிக்க மாட்டான்னு நினைச்சியாக்கும்? இதுக்கெல்லாம் அவன் ஊருக்கும் உனக்கும் பத்திரிகை வெச்சுட்டுத் தான் ஆரம்பிப்பானா என்ன..? ஹ ஹா….நம்பவே முடியலியாம். இப்படிப் பிள்ளையை நம்பினா, மத்ததெல்லாம் எப்புடி நம்ப முடியும்? சொல்லுறவங்களக் கூட நம்ப முடியாது. எப்பிடியோ போ, எனக்குத் தூக்கம் வருது.”

    “இருங்க…..அவன் வரட்டும் இன்னிக்கு. நான் ரெண்டுல ஒண்ணு பார்த்துப்புடறேன். அவன….!” கடைசி இட்டிலி தொண்டைக்குள் இறங்காமல் அடைக்கவும், சாரதா  தட்டை எடுத்துக் கொண்டு எழுந்தவள்… ‘இன்னும் இவனால என்னவெல்லாம் பிரச்சனைகள் வரப்போகுதோ…? முருகா…..அந்தப் பிள்ளைக்கு நல்ல புத்தியைக் கொடுத்து ஒரு நல்ல வேலையையும்  கொடுத்து உட்கார வெச்சிடேன், உனக்குப் பழனிக்கு வந்து பாலாபிஷேகம் செய்யறேன்.’

    அதற்குள் வாசல் கேட்டுத் திறக்கும் சப்தம் கேட்டு எட்டிப் பார்த்த சாரதாவுக்கு , சிவராமனின் முகத்தைப் பார்த்ததும் கொஞ்சம் ஆறுதலாகவும் நிறைய கோபமும் சேர்த்தே வந்தது.

    அவன் உள்ளே வரக் காத்திருந்தவள் போல…

    “வர வர உன் போக்குவரத்தே சரியில்லை….ஆமா…நீ சிகரெட் பிடிக்கிறியா?  எங்க ஊது… பார்க்கலாம். அம்புட்டுப் பெரியவனாயிட்டியா  நீ? அப்பா…அன்னிக்கி  உன்னிய தெருவுல சிகரெட்டு பிடிக்கிறதைப் பார்த்துபுட்டு வந்து இங்க குதி குதின்னு குதிக்கிறாரு….என்னமோ நான் தான் உன் கையில திணிச்சு புகை விடுடா மகனேண்டு  சொன்ன மாதிரியும்.. அதான் நீ கேட்ட ரூபாயைக் கூட தராம உன்னை காலீல திட்டினாராம். ஏன் தான் இப்படியெல்லாம் செய்யுறியோ?”

    “நீங்க பாட்டுக்கு யாரையோ பார்த்துட்டு நான் தான்னு சொன்னால், அதுக்கெல்லாம் நான் பொறுப்பு ஏத்துக்கிட முடியாது.” கோபத்துடன் கத்திவிட்டு சாப்பிடாமல்,  டிவியைப் போட்டவன் அதை  இன்னும் சற்றுப் பெரிதாக வைத்துக் கொண்டு அதைத் தீவிரமாகப் பார்ப்பது போல சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான் சிவராமன்.

    “இப்பவாச்சும்…வந்து சாப்பிடு வா…!” பாசம் மேலிட்டது சாரதாவுக்கு.

    “நான் சாப்பிட்டாச்சு.”

    “சமைச்சது அம்புட்டும் வீணாப் போகுதில்ல….உன் கோபத்தை சாப்பாட்டு மேல ஏன் காமிக்கிறே?”

    “அதான் வாசல்ல நாய் இருக்கே,இனிமேட்டு அதுக்குப் போடு….நன்றியாவாச்சும் இருக்கும்…அதான வேணும் உங்களுக்கு..!”

    “ஏண்டா இப்படில்லாம் பேசறே..? என்னாச்சுடா உனக்கு…..மூஞ்சியே சரியில்லை..வெளில எதாச்சும் பிரச்சனையா? மூஞ்சியே பேய் அரைஞ்சாப்பல இருக்குது….?”

    “காசில்லாம சுத்தினா மூஞ்சி பேயறைஞ்சாப்பல தான்மா இருக்கும். எனக்கு வெளில ஒரு பிரச்சனையும் இல்ல…அம்புட்டும் வீட்டுக்குள்ளாற தான். அதான் பைக் வாங்கித் தரச் சொல்லிருக்கேன். சொன்னியா அவுருகிட்ட. என்ன சொன்னாரு.”

    “ம்ம்ம்…சொல்றேன்….சொல்றேன்….” என்று நகர்ந்தவள்,

    இவனோட இப்பப் பேசினா சண்டை வளரும், ஊகித்தபடி “டேய்..சிவராமா ,கதவை சார்த்தி பூட்டு….நான் படுக்கப் போறேன். பசிச்சா எடுத்துப் போட்டு சாப்பிடு. ஐயோ ராமா…இந்த இடுப்பு இந்த வலி வலிக்கிதே…அயோடெக்ஸ் எங்கிட்டு இருக்கோ..தேடணும்” சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்று மறைந்தாள் சாரதா.

    “யாரை நம்பி நான் பொறந்தேன்..

    போங்கடாப் போங்க…
    என் காலம் வெல்லும்,
    வென்ற பின்னே வாங்கடா வாங்க…
    குளத்திலே தண்ணியில்லே
    கொக்கும் இல்லே மீனும் இல்லே
    பெட்டியிலே பணமில்லே
    பெத்த புள்ளே சொந்தமில்லே…
    தென்னைய பெத்தா இளநீரு
    பிள்ளைய பெத்தா கண்ணீரு
    பெத்தவன் மனமே பித்தம்மா
    பிள்ளையின் மனமே கல்லம்மா…

    “ஆமா…..இவனுங்க வேற…கல்லு…மண்ணுன்னு… சொல்ல வந்திட்டாய்ங்க” அவசரமாக டிவியை அணைத்தான் சிவராமன்.

    அறைக்குள் அப்பாவும் அம்மாவும் காரசாரமாய் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் ஹால் வரைக்கும் கேட்டது.

    இவனுக்கும் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவர்களும் உரக்கப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

    “இவனெல்லாம் உருப்பட மாட்டாண்டி…..இவனுக்கெல்லாம் நீ வக்காலத்து வாங்கிட்டு வராத….பைக்கும் கிடையாது…அவனுக்கு எந்த சோக்கும் கிடையாது.உருப்படாத பய…. நடந்து போகச்சொல்லு. அப்பத்தான் சொகத்தோட அருமை தெரியும். நம்ம நிம்மதியைக் கெடுக்கறதே அவனுக்குப் பொளப்பு. எத்தனை பசங்க படிச்சமா வேலைக்குப் போனமான்னு இருக்குறாங்க…நமக்குன்னு…என் கர்மம்….!நாட்டுல என்ன வேலையா இல்லே….? இவனுக்கு சொகுசா உட்கார்ந்து தண்டச் சோறு தின்னக் கேக்குது.

    நீ பேசாம படுடி….பிள்ளைக்கு பைக்கு வேணுமாம் பைக்கு…. அவனுக்கு இன்னைக்கு பைக்கு வேணும்பான் ..நாளைக்கு புதுசா செல்ஃபோன் வேணும்பான். அவன் கேக்குறத பறிச்சுக் கொடுக்க எல்லாம் மரத்துலயா முளைச்சு நிக்குது. பெத்தவங்க கஷ்டம் தெரியாத பயபுள்ள… நடுத்தெருவுல நிப்பாட்டினாத்தான் வெவரம் வெளங்கும். நானும் இவன் வயசைத் தாண்டி வந்தவன் தான..ம்க்க்க்க்க்க்க்க்…” என்று செருமிய சத்தம் கேட்டதும்…சிவராமனின் கன்னத்தில் அறைந்தது போலிருந்தது அந்த வார்த்தைகள்.

    ‘இதுக்கெல்லாம் நான் வருத்தப் படமாட்டேன்…இவிங்களுக்கும் நான் யாருன்னு காமிக்கணும்….இது போல உருப்படாத அப்பன்களுக்கு  உணர்த்தணும். எப்பயும் நான் என்ன இப்பிடியேவா இருந்துடப் போறேன்..? என்னவோ சொல்லுவாங்களே..ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு.இவங்க இப்படித் தான். திருந்தாதவிங்க. எப்பப் பாரு கேள்வி கேட்டு கொடஞ்செடுத்து உசுர வாங்கிருவாய்ங்க. இவிங்களுக்கு சம்பாதிச்சாப் போதும்…அது எப்பிடியிருந்தா என்ன?’ சடக்கென்று எழுந்திருந்த சிவராமன் தனக்கு தேவையானதை எடுத்து ஒரு பையில் திணித்துக் கொண்டு கிளம்பினான்.

    ‘இப்படிப்பட்ட அப்பா,அம்மா இருக்கிறதாலத் தான் நாட்டுல கொலை, கொள்ளை, செயின் ஸ்னாட்ச்சிங், ஜேப்படி எல்லாம் சர்வ சாதாரணமா நடக்குது. இங்கன இருந்தாத் திட்டியே கொன்னுருவாய்ங்க.’

    ‘வீட்டை விட்டே ஓடிறலாமா..? ஓடிறலாம் ..அப்பத்தான் இவிங்க ரெண்டு பேத்துக்கும் என்னோட அருமையும் புரியும்.’

    டிவி ஸ்க்ரீனில் ஒரு வெள்ளைத் தாளை ஒட்டியவன்,

    “நான் உருப்படுவதற்காக போகிறேன்

    ஒரு வீட்டு நாய்த் தெருநாயாகிறது

    நிம்மதியாக இருங்கள்.”

    சிவப்பு ஸ்கெட்ச் பேனாவால் அதன் மேல் கொட்டை எழுத்தில்  எழுதிவிட்டு விளக்கை அணைத்துவிட்டு, மெல்லக் கதவைச் சார்த்திவிட்டு  வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

    வீடு இருளில் மூழ்கிப் போகிறது.

    வாசற்படி கடந்து தெருவுக்கு வந்ததும், அங்கு ஓரமாகப் படுத்திருந்த தெருநாய் இவனைப் பார்த்ததும் வேகமாக எழுந்து நின்று சோம்பல் முறித்து விட்டு தலையை நிமிர்த்திக் கொண்டு இவனைப் பார்த்து, “இந்நேரத்துக்கு இங்கிட்டுப் புறப்பட்ட…’?… விடாமல் குறைக்க ஆரமபித்தது. வீட்டை விட்டு நடக்க நடக்க…நாயும் தொடர்ந்து குரைத்துக் கொண்டே வந்தது.

    முதல் முறையாக வீட்டை விட்டு வெளியேறிப் போகிறோம் என்றதும், அவனையும் அறியாமல் ஒரு பயம் வந்து அவனை சூழ்ந்து கொண்டது. நாம சொன்னது போலவே திருடனாகி விடுவோமோ? போலீஸ் லத்தியால் முட்டிக்கி முட்டி அடி வாங்கிக் கம்பி எண்ணுவோமோ? காசு கிரிமினல் ஆக்கிடும்… யாரும் தட்டிக் கேட்க ஆளில்லையின்னா நல்லவன் கூட கிரிமினல் ஆயிறுவானே. நான் செய்யுறது மட்டும் சரியா? நான் இப்போ எங்கிட்டுப் போவேன்?

    கால்கள் வீட்டைக் கடந்து நடக்க நடக்க, மனம் நொண்டியடித்தது. உள்ளிருந்து பொங்கி வந்த எண்ணங்கள்  வீட்டுக்குள் அவனை இழுத்தது. மனசாட்சி சாட்டையை உருவியது. ‘அம்மா பாவம்….அப்பாவும் பாவம்..!’ தன்னை உணர்ந்ததும் பாசம் மேலிட்டது.

    “பெத்தவன் மனமே பித்தம்மா
    பிள்ளையின் மனமே கல்லம்மா.”.

    காதுக்குள் பாடல் வரிகள் மீண்டும் ஒலித்தது. சரியாகத் தான் சொல்லியிருக்காங்க. நான் தான் புரிஞ்சுக்கலை.

    சிவராமன் அந்த நாயைப் பார்க்கிறான். அதுவும் உடனே நின்று இவனைப் பார்க்கிறது .

    எனக்குத் தெரிஞ்சு நான் உனக்கு இன்னிக்கு மட்டும் தான் இட்டிலி வெச்சேன். அதுக்கே நீ  இப்படி வாலாட்டிக்கிட்டு பின்னாடியே வாரியா …இல்லே… நான் இங்கன இல்லாத போனா உனக்கு நாளைக்கி சோறு கிடைக்காதேன்னு குரைக்கிரியா …சீ …போ….! துரத்திப் பார்க்கிறான்.

    ச்சே….நானும் ஏன் உன்னைத் துரத்தோணம்?

    அதுவும் வாலை ஆட்டியபடியே குரைத்துக்  கொண்டே கூட வருகிறது.

    தெரு முழுதும் கடந்திருப்பான். சிவராமன்… நாய்க்குக் கூட நன்றியும், கடமை உணர்வும் இருக்கு… எனக்கில்லையே..? அப்பா சொல்வதிலும் நியாயம் இருக்கு. அவர் சரி தான். நான் தான் மாறணும் .தெரு திரும்புவதற்குள் அவன் மனம் திரும்பிவிட்டது. சிவராமன்  வீட்டை நோக்கித் திரும்புகிறான்.

    தான் எழுந்த வேலை முடித்துவிட்டு ஓடிச்சென்று வாலைச் சுருட்டிக் கொண்டு மீண்டும் ஓரமாகப் போய்ப்  படுத்துக் கொள்கிறது அந்த நாய்.

    பூனை போல மறுபடியும் வீட்டுக்குள் நுழைந்து கொண்டு கதவைச் சார்த்திக் கொள்கிறான் சிவராமன்.

    நுழைந்ததும், முதல் வேலையாக ,அவன் எழுதி ஒட்டிய வெள்ளைத் தாளை டீவி ஸ்க்ரீனிலிருந்து பிய்த்து, ‘ஒரு தெருநாய் என்னை உருப்பட வெச்சிருச்சு’ என்று சொல்லிக் கொண்டே அதைத்  துண்டு துண்டாக கிழித்து ஜன்னல் வழியாக வீசுகிறான்.

    Share
  • ஆணிவேரின் நம்பிக்கை

    கோதை நாராயணன்

    பயத்தில்  வேர்த்து கொட்டியது யாழினிக்கு …..

    நேற்று அவ்ளோ தூரம் சொன்ன பிறகும் ஏன் இப்படி பண்ணினான் குமார்? கேள்விகள் மனதை குடைந்தன… அவசரமாக தன் செல்போனை எடுத்து கெளதமை அழைத்தாள்.

    “ஹலோ, கெளதம்… நான் குமாரோட ஹாஸ்டலில் இருந்து பேசுறேன்… குமார் ஹாஸ்டலை காலி பண்ணிட்டு ஊருக்கே போய்ட்டானாம்… நீ கொஞ்சம் சீக்கிரம் நாம எப்போதும் மீட் பண்ற இடத்துக்கு வா… அர்ஜெண்டா பேசணும்…!”

    “இன்னும் பத்து நிமிஷத்தில் அங்க இருப்பேன் யாழினி… டோன்ட் ஓரி “

    ஹாஸ்டல் நிர்வாகியிடம் திரும்பி ,”ஓ.கே சார்… குமார் எதுவும் போன் பண்ணினா…. நான் வந்தேன்னு சொல்லுங்க. நன்றி!”

    “ஏம்மா… எதுவும் தப்பு தண்டாவாம்மா?”

    “அப்டியெல்லாம் இல்ல சார்…” என சிநேகமாய் புன்னகைத்து விட்டு தன் ஸ்கூட்டியை பூங்காவை நோக்கி பறக்க விட்டாள்.

    இவளுக்கு முன்னே அங்கு காத்திருந்த கெளதம், “என்னாச்சு யாழினி குமாருக்கு? நாம தான் நேத்து அத்தனை தூரம் அவனுக்கு நம்பிக்கை கொடுத்தோமே! அப்புறம் என்ன?”

    “தெரியலடா… நேத்து நம்மகிட்ட காட்டின அவங்க அம்மாவோட லெட்டர் குப்பையில் கிடந்தது”

    எழுப்பதைந்து வயதானவளின் இரத்தின எழுத்துக்கள்… குண்டு குண்டாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய்… ஒரு சில நாட்களுக்கே  சமைக்க அரிசி இருப்பதாகவும், எப்படியோ சமாளிப்பதாகவும், வேலை கிடைத்ததா என்பது பற்றியும் கேட்டு கொண்டிருந்த ஒரு வளமான வறுமை கடிதம் கசங்கிய நிலையில் யாழினி கையில்.

    “அத்தோடு அவன் மெடிக்கலில் வாங்கிய தூக்க மாத்திரை பில்லும் இருந்ததுடா.”

    “ப்ச்… இவனுக்கு ஏன் இப்படி புத்தி போகுது. எனக்கு கோவம் தான் வருது. இப்ப என்ன பண்ணலாம்?”

    “நீ உடனே கிளம்பி அவன் ஊருக்கு போய் அவனை காப்பாத்து எப்டியாவது. நா சுதா வீட்டுக்கு போறேன்.”

    “அவளுக்கு தெரியுமா விசயம்?”

    “தெரியல யாருக்கோ கிளம்பும் போது கண் கலங்கிய படியே போன் பேசினானாம்”

    “இவனுக்கெல்லாம் காதல்!”

    “நீ டென்ஷன் ஆகாத கெளதம். டோன்ட் வேஸ்ட் டைம். கிளம்பு” என அவனை அனுப்பி விட்டு சுதாவைத் தேடி போனாள்.

    குமார், யாழினி, கெளதம் மூவரும் ஒரே கல்லூரியில் படித்து நல்ல ரேங்க்கில்  பாஸ் செய்தவர்கள். வேலைத் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் கிடைத்த பாடு இல்லை. இதில் குமார் தான் மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவன். அதுவும் அவன் தாய் தந்தைக்கு பிள்ளை பாக்கியமே இல்லாமல் இருந்து பின் வெகு வெகு வருடங்களுக்கு பின் பிறந்தவன். தாயின் கொஞ்ச நஞ்ச நகைகளையும் விற்று படித்தாயிற்று. முடித்தவுடன் வேலை என கனவு கண்டவனுக்கு தகுந்த வேலை கிடைக்காமல் அல்லாடும் நிலை. தான் காதலிக்கும் சுதாவின் வீட்டிலோ வேலை இல்லாத குமாரின் நிலை கேள்விக்குறியாக பார்க்கப்பட்டது .

    முதல் நாள் தன் தாயிடம் இருந்து வந்த கடிதத்தையும் காண்பித்து, சுதாவின் அப்பா சற்று கேவலமாக தன்னை பேசியதை பற்றியும் கூறி கண்ணீர் விட்டான். இனி வேலை கிடைக்காத பட்சத்தில் தான் உயிரை மாய்த்து கொள்ள போவதாக நம்பிக்கையற்று பேசினான்.

    பஸ்சை விட்டு இறங்கிய கெளதமுக்கு சுத்தமான காற்றும், பச்சை மண் வாசனையும் காந்தமாக இருந்தது. இந்த சூழ்நிலையில் வளர்ந்தவனா குமார். கொடுத்து வைத்தவன் என மனதில் நினைத்தபடியே நடந்தான். சிறிய ஊர் என்பதால் குமாரின் வீட்டை எளிதாக கண்டு பிடித்தான். வீடு உள் பக்கமாக பூட்டி இருந்தது.

    “குமார்!… குமார்…!”

    வேகமாக கதவு திறக்கப்பட்டது. திறந்த குமாருக்கு எதிர்பாராமல் அங்கு நின்ற கெளதமை பார்க்க அதிர்ச்சியாக இருந்தது.

    “வ…வ… வாடா… நீ… எங்க?” வேர்த்து கொட்டி இருந்தது. இடக்கையை அவசரமாக மறைத்தான். மாத்திரைகள்…!!

    விடு விடுவென்று  உள் நுழைந்த கெளதம், குமாரின் கன்னத்தில் பளார் என்று அறைந்தான்.

    கெளதமின் அடியை எதிர்ப்பாராத குமார் நிலைகுலைந்து போனான்.

    “கொழுப்படா உனக்கு? நானும் யாழினியும் எவ்ளோ தூரம் படிச்சு படிச்சு சொன்னோம், அதுக்கு அப்புறமும் இப்டியொரு மடத்தனமான முடிவுக்கு வந்து இருக்கேன்னா… உன்னையெல்லாம் எப்படி நண்பன்னு சொல்றது?”

    “இல்லடா… நேத்து சுதாவின் அப்பா ரொம்ப கேவலமா பேசிட்டார்டா!”

    “பேசட்டும். அதற்கென்ன… மகளுக்கு தகுந்த பாதுகாப்பு வேணும்னு அவர் நினைக்குறதுல என்ன தப்பு?”

    “ஒவ்வொரு வார்த்தையும்…”

    “பதிலுக்கு நல்ல நம்பிக்கையான வார்த்தைகளை கொடுத்து இருக்க வேண்டியது தானே அவருக்கு? அத விட்டுட்டு உயிரை போக்கி கொள்ள துணிவது கெட்டிகாரத்தனமா?”

    “சுதாவின் அழுகை என்னை தூங்கவிடலைடா…” சொல்லும் போதே குமாரின் கண்கள் குளமாகியது.

    “பெரிய்ய்ய்ய இவன்… காதலிக்கும் பெண்ணுக்கு நம்பிக்கை கொடுக்க முடியாத உனக்குக்கெல்லாம் எதுக்குடா காதல்? யாழினியின் மாமா சிபாரிசு செய்தாரே அந்த வேலையாவது இப்போதைக்கு ஒத்துக்கோ…”

    “அது என் சொந்த முயற்சி இல்லையே!”

    “ஓ! சுதாவின் அப்பா பேசினா அவமானமா இருக்கு, சுதா அழுதா தாங்க முடியல, சிபாரிசுல வேலை கிடைச்சா உன் தன்மானம் இடிக்குது… சோ… இப்டி சத்தம் இல்லாம உயிரை விட்டுட்டா எல்லா பிரச்சனையும் தீர்ந்திடும் இல்லையா?”

    குமார் பேச எத்தனிக்கும் தருவாயில் வாசல் கதவு கிறீச் என சத்தமிட இருவரும் திரும்பினர்.

    நெற்றியில் வழிந்த வேர்வையை சேலை முந்தானையால் துடைத்தபடியே “ஸ்ஸ்… என்ன வெயிலு!” நன்கு கருத்த மேனி, ரவிக்கை அணியாத கண்டாங்கி சேலை, காதுகளில் பாம்படம், கையில் ஒரு ஓலை பெட்டியுடன் விரல்களை குடையாக புருவத்தின் மேல் வைத்து, “யாரு குமாரு… உன் சேக்காழியா…?”

    “ஆமாம்மா!” எனக் கூறிய குமார் தாயாரின் கையிலிருந்த பெட்டியை பார்த்தான். அதில் அரிசி, பருப்பு, காய்கறி என ஒரு பத்து நாளைக்கு தேவையான சாமான்கள் இருந்தன.

    “என்னம்மா இது? யார்கிட்டயும் போய் கடன் வாங்கினயா?”

    “இல்ல ராசா. நேத்து தினக்கூலிக்கு ஒரு ஆள் குறையுதுன்னு  மேலத்  தெரு அண்ணாச்சி சொன்னாக, அதான் போனேன். அதுல தான் இது. இந்த கட்டைல உசிரு இருக்கிற வரைக்கும் எம் மவனுக்கு நா உழச்சு சோறு போடாம யாரு போடுவா… நீ கவலை படாதேய்யா. வேல கிடைக்குறப்போ கிடைக்கட்டும். உக்காந்து பேசுங்கய்யா இரண்டு பேரும்” என கூறிய படியே நிலைப்படியை உராய்ந்த படியே அடுப்படிக்கு சென்றாள் மோர் கொண்டு வர.

    சொடேர் என்று இருந்தது குமாருக்கும், கெளதமுக்கும். ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்க முடியாமல் வார்த்தைகள் தொலைந்து நின்றனர், பெரியவளின் நம்பிக்கைக்கு முன் தோற்று.

    மறு நாள் வீட்டிலிருந்து சந்தோசமாக கிளம்பினான் வருங்கால தொழிலதிபதி குமார். முதலீடாக அவன் கோல்டு மெடல்கள் அவன் பையில்.

    முன்னேற்றத்தை தேடும் சிந்தனை  மட்டுமே அவன் முகத்தில்…

    Share
  • நெடுஞ்சாலையில் ஒரு பயணம்

    நிர்மலா ராகவன்

    ஒங்களுக்கு எதையாவது ஒழுங்கா பண்ணத் ​தெரியுதா?

    கண்ணுக்கு எட்டியவரை நீல வானும், நீலக் கடலுமாக அழகு கொப்பளித்தது அந்த இடத்தில். அந்த இனிமையைக் குலைப்பதுபோல், அபஸ்வரமாக ஒலித்தது விசாலியின் கட்டைக் குரல்.

    தன்னைத் தாக்கிய மனைவியின் குரல் காதில் விழுந்தும், தற்காலிகமாகச் செவிடாகி விட்டதுபோல் வாளாவிருந்தார் பராங்குசம். எல்லாம் முப்பது வருட இல்லற வாழ்வில் பெற்ற விவேகம்தான்.

    ஆரம்பத்தில், `ஏன் ​தெரியாது? ஒன்னைக் கல்யாணம் பண்ணிக்கலே?` என்று வீராவேசமாகக் கேட்டுவிட்டு, அந்த வார்த்தைகளால் தோன்றிய பூரிப்பை மறைக்க முயன்றபடி, `போதும். ரொம்பத்தான் வழியாதீங்க!` என்று அவள் கடிந்துகொண்டது மறக்கக் கூடியதா!

    அது ஏன், தான் எது செய்தாலும் இவளுக்கு மாற்றுக் குறைவாகவே படுகிறது என்று யோசித்து யோசித்து, அவர் முடியெல்லாம் உதிர்ந்ததுதான் கண்ட பலன். அவரால் விசாலியைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

    தன்னால் அவளுக்கு புத்திர பாக்கியத்தைக் கொடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு மிக, அவள் தன்னைக் குறைத்து மதிப்பிடும்போது அசட்டுச் சிரிப்பு சிரித்துவிடுவது, இல்லை ஊமையாகிவிடுவது என்று புத்திசாலித்தனமாக முடிவெடுத்திருந்தார்.

    இதனால், மனைவியிடம் பராங்குசத்துக்கு அன்பு இல்லை என்று எண்ணிவிடக் கூடாது.

    இல்லாவிட்டால், அவள் தற்செயலாகச் சொல்வதுபோல், “என் சிநேகிதி புவனா இருக்காளே, மாசாமாசம் மாரிப், போர்ட் டிக்ஸன் (PORT DICKSON), பங்கோர்னு (PANGKOR) ஏதாவது பீச்சுக்குப் போறாளாம். அவ மகனுக்கு ஆடிசம்னு ஏதோ வியாதியாம். தானே பேசிக்குவான். அப்படியே பேசினாலும், ரோபாட் பேசறமாதிரி, உணர்ச்சியில்லாமதான். யார்கிட்ட என்ன பேசறதுன்னு ​தெரியாது. டாக்டர் சொன்னாராம், அடிக்கடி கடல்ல குளிச்சா, நல்ல உடற்பயிற்சி, அதனால அவனும் கட்டுக்கடங்கி இருப்பான்னு!” என்று, விசாலி ஏக்கத்துடன் விவரித்தபோது, அவளைக் கேட்காமலேயே தீபகற்ப மலேசியாவின் கிழக்குப் பகுதியிலிருந்த செராட்டிங் (CHERATING) கடற்கரைக்கு அவளை அழைத்துப் போக திட்டமிட்டிருப்பாரா!

    அவள் தோழி போகாத இடம் என்பதால், விசாலி அவளிடம் பெருமையாகப் பேசிக் கொள்ளவும் முடியும் என்று கணக்குப் போட்டிருந்தார்.

    “இப்ப எதுக்கு கடலும், மண்ணாங்கட்டியும்?” என்று முதலில் பிகு செய்துகொண்டவள், கோலாலும்பூர் புடு (PUDU) பகுதியிலுள்ள வெளியூர் பஸ் நிறுத்தத்துக்கு வந்ததும் கலகலப்பானாள்.

    `ஒங்களுக்கு எதையாவது ஒழுங்கா பண்ணத் ​தெரியுதா?` என்று அன்று பூராவும் அவள் கேட்காததுபற்றி பராங்குசத்துக்கு ரொம்ப மகிழ்ச்சி. பேருந்தின் முன்னிருக்கையில் விரல்களால் தாளம் போடலானார்.

    சும்மாவா நாட்டுக்கு `மலாயா` என்று பெயர் வைத்திருந்தார்கள்! மலைப் பாதையில் சுற்றிச் சுற்றிப் போனபோது, விசாலிக்குத் தலைசுற்றல் வந்தது. நல்லவேளை, அவர் தாராளமாக பன்னிரண்டு வெள்ளி கொடுத்து, ஒரு கிலோ திராட்சைப் பழத்தை வாங்கி வந்திருந்தார். மனைவி ஒரு விரலால் நெற்றியைச் சுட்டி, சுழற்றும் போதெல்லாம், ஒரு பழத்தை அவள் வாய்க்குள் போட்டார்.

    பஸ்ஸிலிருந்து இறங்கியவுடனேயே விசாலிக்குத் தெம்பு வந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், “ஒங்களுக்கு எதையாவது ஒழுங்கா பண்ணத் ​தெரியுதா? கடற்கரைக்குப் போக ஆசையா இருக்குன்னு ஒங்ககிட்ட வந்து நான் கேட்டேனா? வயத்தைப் புரட்டுது. டிவி தொடர்வேற விட்டுப் போயிடும்,” என்று பாய்ந்திருப்பாளா?

    அவள் பழையபடி ஆனதில் அவருக்குத் திருப்தியாக இருந்தது.

    `நான் என்னம்மா கண்டேன், இந்த பஸ்காரன் டோலுக்குப் பயந்து, இப்படி சுத்திச் சுத்தி வருவான்னு!` என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டார். உரக்கச் சொல்லி, அதற்கு வேறு அவள் ஏதாவது பதிலடி கொடுத்து வைத்தால்?

    `மௌனம் தங்கத்திற்குச் சமானம்,` என்று ஆங்கிலத்தில் சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்!

    கடற்கரையிலேயே அமைந்திருந்த சிறு சிறு மர வீடுகளுள் ஒன்றில் நுழைந்தார்கள். மலாய் கம்பத்து (கிராமிய) பாணியிலான குடில். தரையிலிருந்து மூன்றடி மேலே இருந்தது. எல்லாம், வருடம் முழுவதும் கொட்டும் மழைக்கான எச்சரிக்கைதான். வீட்டைத் தாங்க, நான்கு மூலைகளிலும் மரத்தூண்கள். அதன் அடியில், தாய்க்கோழியின் பின்னால், ஆசிரியரைப் பின்தொடரும் சிறு பிள்ளைகள்போல், கோழிக்குஞ்சுகள் அணிவகுத்துச் சென்றன.

    அந்தப் புதுமாதிரியான சூழ்நிலையில், விசாலி குதூகலித்தாள். “தேவலியே! ஒங்களுக்குக்கூட உருப்படியா ஒரு காரியம் பண்ணத் ​தெரியுதே! எப்படி இந்த இடத்தைப் பிடிச்சீங்க?” என்று அவள் பாராட்டியபோது, சொர்க்கமே ​தெரிந்தது பராங்குசத்திற்கு.

    காலையிலும், மாலையிலும் சமுத்திர ஸ்நானம், இடையில் சாப்பாடு, தூக்கம் என்று பொழுதை உல்லாசமாகக் கழித்தார்கள். இந்திய உணவு கிடைக்காததை விசாலி ​பெரிது பண்ணவில்லை என்பது பற்றி பராங்குசத்துக்கு நிம்மதி.

    சில சமயம், அவர்கள் குடில் வாசலிலிருந்த வராந்தாவில் போடப்பட்டிருந்த நிறம் மங்கிப்போன பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்தார்கள், ஓய்வாக. ஜட்டி மட்டுமே அணிந்து, அல்லது முழு நிர்வாணமான மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள், மணலில் வீடு கட்டி, அவைகளின்மீது சிப்பிகளையோ, அல்லது கடற்கரையைச் சார்ந்து இயற்கையாகவே வளர்ந்திருந்த சவுக்கு மரங்களின் கூரான இலைகளையோ வைத்து அழகுபடுத்துவதை கண்கொட்டாது பார்த்தபடி இருந்த விசாலி ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.

    அதை ஓரக்கண்ணால் கவனித்த பராங்குசத்துக்கு அவள்மேல் பரிதாபம் பொங்கியது. `நல்லா தூங்கினியா?` `அடுத்த தடவை பினாங்கு போகலாம், என்ன? அங்க சாப்பாடு நல்லா இருக்கும்,` என்று பரிந்தார்.

    மூன்று இரவுகள் போனதே ​தெரியவில்லை.

    முதல் நாளே விசாலி கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள், `என்னால இனிமே அந்த பாடாவதி பஸ்ஸில ஏற முடியாது. ஏதாவது டாக்ஸி பாருங்க!` என்று.

    அவளது கட்டளையைச் சிரமேற்கொண்டு, இந்த வாடகைக் காரை ஏற்பாடு செய்திருந்தார் பராங்குசம்.

    வண்டியோட்டியை ஒரு பார்வை பார்த்தாள் விசாலி. அவ்வளவுதான். (இப்போது கதையின் முதல் வரியை நினைவுபடுத்திக் கொள்ளவும்).

    கணவர் பரிதாபமாக, “இப்பல்லாம் இங்கேயிருந்து கே.எல் (K.L, கோலாலும்பூர்) போக நானூறு வெள்ளியாம். 280 கிலோமீட்டர் தொலைவில்ல! இவன் ஒருத்தன் மட்டும் முன்னூறு சொன்னான். அதான்..,” என்று இழுத்தார். `இதுக்கே பஸ் கட்டணத்தைவிட மூன்று மடங்கு அழணும், ​தெரியுமா? ஒன் பிடிவாதத்தினாலதான் இப்படி!` என்ற விமரிசனத்தை சாமர்த்தியமாக மறைத்தார்.

    “இந்த ஆளோட முகமே சரியா இல்ல. எலும்பா இருக்கான். கண்ணு வேற கலங்கி இருக்கு. சரியான போதைப் பித்தன்! எப்படித்தான் அவ்வளவு தூரம் ஓட்டப் போறானோ!” டிரைவர் தமிழனில்லை என்ற ​தைரியத்தில், அவள் அங்கலாய்ப்பு உரக்கவே ஒலித்தது.

    பராங்குசத்துக்குக் கூசியது. ஒருவரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, அவரைப் பற்றி இழிவாகப் பேசுவது யாராக இருந்தாலும்… அது அவரது ஆசை மனைவியாகவே இருந்தாலும்… அது தப்புதான் என்று தோன்றிற்று அவருக்கு. ஆனால், அவள் வாயை அடக்கப்போய், அவள் ஏட்டிக்குப் போட்டியாக கத்த ஆரம்பித்தால்.., மொழி ​தெரியாதவராக இருந்தாலும், இன்னொருவரால் புரிந்துகொள்ள முடியாதா, என்ன!

    மௌனம் என்ற ஒன்றுதான் பல சமயங்களில் எப்படி கை கொடுக்கிறது என்ற அயர்ந்துபோய் அமர்ந்திருந்தார்.

    காரோட்டி, “ஸாயா (நான்).. யாஹ்யா!” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, கையை நீட்டியபோது, விசாலி திகைத்துப்போனாள். ஒரு வினாடி தயங்கிவிட்டு, கையை நீட்டினாள்.

    முன் கதவைத் திறந்து, பராங்குசம் ஏற யத்தனித்தபோது, “இந்த புரோடான் ஸாகா (PROTON SAGA, மலேசியாவில் தயாரிக்கப்படும் கார்), அதோட டிரைவர் மாதிரியே, பாத்தா பரிதாபமா இருக்கு. பின்னால ஒக்காந்தா, எனக்கு மறுபடியும் வயத்தைப் புரட்டும். என்னால முடியாதுப்பா!” என்றபடி, அவரைத் தள்ளாத குறையாக முன்னால் ஏறிக்கொண்டாள். `அம்பது வயசு ஆகப்போகுது. ஆம்பளைங்க பக்கத்தில ஒக்காந்தா, என்னா தப்பு! அதான் கையைக் குலுக்கியாச்சே!` என்று முணுமுணுத்துக்கொண்டாள்.

    காரை ஓட்ட ஆரம்பிப்பதற்குள், காரோட்டி நிறைய நிபந்தனைகள் விதித்தார்.

    “நான் மெதுவாத்தான் போவேன். முந்தி பென்ஸ் கார் வெச்சிருந்தேன். அதில நூத்துப் பத்து என்ன, நூத்து நாப்பதுகூடப் போகலாம். ஆனா, இதில..,” என்று சிரித்தவர், “இன்னிக்குக் காரை மெகானிக்கிட்ட விடறதா இருந்தேன்,” என்று ஏதோ சாக்குபோக்கு சொல்ல ஆரம்பித்தார்.

    உள்ளே குளிர்சாதன வசதி இருந்ததென்று பெயர்தான். சன்னல் கண்ணாடியை முழுமையாக அடைக்க முடியாதுபோக, வெளியே வீசிய அனல்காற்றும், அந்த நெடுஞ்சாலையில் விரைந்துகொண்டிருந்த பிற வாகனங்கள் பெருமூச்சாக விட்ட புகையும் உள்ளே நுழைந்தன.

    பற்களைக் கடித்துக்கொண்டு, விசாலி தூங்க முயற்சித்தாள். மனதுக்குள் சுலோகம் சொல்லிப் பார்த்தாள். இருப்பினும் ஒன்றரை மணிக்குமேல் அவளால் தாக்குப்பிடிக்க இயலவில்லை.

    “நல்ல காடி வெச்சிருக்கான் இந்த ஆளு! பஸ்ஸே தேவலாம்னு இருக்கு,” என்று, தலையைத் திருப்பி, கணவரிடம் கூறினாள்.

    “என்ன சொல்றாங்க?” என்று விசா​ரித்தார் யாஹ்யா.

    “பாத்ரூம் போகணுமாம்!” சமயோசிதமாகப் புளுகினார் பராங்குசம்.

    “கே.எல் போக இன்னும் எத்தனை நேரமாகும்?” இத்தனை நேரம் டிரைவரின் பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்ததில், அவருடன் பேசும் துணிவு வந்திருந்தது விசாலிக்கு.

    “இன்னும் மூணு மணியாவது ஆகும். நாம்ப என்ன, வால்வோ கார்லேயா போறோம்?” என்று சிரித்துவிட்டு, “நீங்க ரெண்டுபேரும் போயிட்டு வாங்க,” என்று விடை கொடுத்தார்.

    கதவை உள்பக்கத்திலிருந்து திறக்கும் சாதனம் உடைந்து போயிருந்தது. அசட்டுச் சிரிப்புடன், “இன்னிக்குக் காரை மெகானிக்கிட்ட விடறதா இருந்தேன்,” என்றபடி, யாஹ்யா வெளியே வந்து, திறந்துவிட்டார்.

    “எனக்கென்னமோ சந்தேகமா இருக்குங்க. அந்த ஆளு பத்துப் பதினஞ்சு நிமிஷத்துக்கு ஒருவாட்டி எதையோ குடிக்கறான். எல்லாத்துக்கும் சிரிக்கறான். தண்ணியில ஏதாவது போதை மருந்து போட்டு கலக்கியிருப்பானோ?”

    அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாது, “அந்தப் பக்கம் இருக்கு,” என்று அநாவசியமாக, பெண் படத்தைக் கதவில் தாங்கியிருந்த கழிப்பறையைக் காட்டிவிட்டு, தன்பாட்டில் விரைந்தார் பராங்குசம்.

    விசாலி திரும்ப வரும்போது, அவள் கரத்தில் கொட்டையில்லாத கொய்யாத் துண்டங்கள் நிரம்பிய சிறிய பிளாஸ்டிக் கை.

    “இந்தாங்க!”

    கையை நீட்டினார் கணவர்.

    ஆனால், அவள் யாஹ்யாவை நோக்கி நீட்டிக்கொண்டிருந்தாள்.

    அவருடைய முகத்தில் நன்றி கலந்த முறுவல். “வேணாம்மா. என்னால சாப்பிட முடியாது!” என்றபடி, பல பற்களை இழந்திருந்த வாயைத் திறந்து காட்டினார். பின், “எனக்குத் தொண்டையில கான்சர்!” என்று அசாயாசமாகத் ​தெரிவித்தார். குரலில் வருத்தமில்லை. `இன்னிக்கு மழை வரும்,` என்று சொல்வதுபோல் இருந்தது.

    விசாலி அதிர்ந்தாள். பையைத் தவறவிட்டாள். நல்லவேளையாக, அது அவள் மடியில் விழுந்தது.

    “கீமோ சிகிச்சை குடுத்தாங்களா! அதில பல்லெல்லாம் போயிடுச்சு. என் வாயில உமிழ்நீர் சுரக்கிறதில்ல. அதனால, அப்பப்போ, கொஞ்சம் தண்ணியால நனைச்சுக்கணும்”.

    வருடந்தவறாது, கடலில் இருபதாயிரம் மைல் நீந்தி, மே மாதம் முதல் செப்டம்பர்வரை, இரவு வேளைகளில் செராட்டிங் கடற்கரைக்கு முட்டையிட வரும் ஆமையைப்போல, விசாலியின் தலை கழுத்துக்குள் நுழைந்தது.

    அதைக் கவனியாது, தன்பாட்டில் பேசிக்கொண்டே போனார் மற்றவர். “தொண்டையில ஓட்டை போட்டு, சாப்பாட்டை உள்ளே இறக்கலாம்னாங்க. எனக்குப் பிடிக்கல. வெண்டைக்காய், கீரை, கோபீஸ் எல்லாத்தையும் வேகவெச்சு அரைச்சு, சாதத்தோட திரும்பவும் ஒண்ணா அரைச்சுடுவேன். அதைக் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட ஒரு மணி நேரம் பிடிக்கும். அதனால வீட்டை விடறதுக்கு முந்தி சாப்பிட்டுட்டுத்தான் புறப்படுவேன்”.

    “வீட்டுக்கு வெளியே வந்தா, என்ன சாப்பிடுவீங்க?” விசாலியின் குரல் மங்கியிருந்தது.

    “ஐஸ்கிரீம். இல்லாட்டி, நல்லா மசிச்ச உருளைக்கிழங்கு — கெண்டகி சிக்கன் கடையில கிடைக்குதில்ல!” என்று மகிழ்ச்சியுடன் ​தெரிவித்தார்.

    போத்தலைத் திறந்து ஒரு ஸ்பூன் அளவு தண்ணீரை அவர் வாயில் கவிழ்த்துக்கொண்டபோது, ஏதேனும் பேச வேண்டும்போல இருந்தது அவளுக்கு. “ஒங்க வீடு செராட்டிங்கிலேயே இருக்கா?” என்று கேட்டுவைத்தாள்.

    “நான் கே.எல்.காரன்தாம்மா.  ஒரு கார் கம்பெனியில ​பெரிய வேலையில இருந்தேன். என்னோட நிலைமை இப்படி ஆனதும், எல்லாரும் என்னை விட்டுட்டுப் போயிட்டாங்க — பெண்டாட்டி, பிள்ளைங்ககூட!” லேசான வருத்தம் குரலில். “பென்ஸ் காரையும் விக்க வேண்டியதாப்போச்சு. மத்தவங்க கையை எதிர்பாக்கறது அசிங்கம், இல்லியா? அதனால, இங்கேயே ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக்கிட்டு இருக்கேன்”.

    “தனியாவா இருக்கீங்க?”

    யாஹ்யா ​​பெரிதாகச் சிரித்தார். “தனியாத்தானே வந்தேன்? தனியாத்தான் போகவும் போறேன்!” என்று தத்துவம் பேசிவிட்டுத் தொடர்ந்தார். “இது சின்ன கிராமம். அதனால மனுஷன் இன்னும் மனுஷனாவே இருக்கான். எனக்கு உடம்பு ரொம்ப முடியாட்டி, அக்கம்பக்கத்துக்காரங்க உதவி செய்வாங்க. நான் சொந்தமா தோட்டம் போட்டு, எனக்கு வேண்டியதைப் பயிரிட்டுக்கறேன். என் சிகிச்சை, மருந்துச் செலவுக்கு எல்லாம்… உடம்பு ஒத்துழைக்கறப்போ, இப்படி சவாரி ஏத்திக்கிட்டுப் போவேன். ஒரு நாளைக்கு ஐம்பது மாத்திரைகளை இல்ல விழுங்கித் தொலைக்க வேண்டியிருக்கு!”

    அங்கு சிறிது நேரம் மௌனம் நிலவியது. யாஹ்யா சொன்னவற்றை சீரணித்துக்கொள்ள முயன்றுகொண்டிருந்தாள் விசாலி. சிறிது யோசனைக்குப்பின், “நமக்கு ஏன் இப்படி வந்திடுச்சுன்னு ஒங்களுக்கு வருத்தமா இல்ல?” என்று துருவினாள்.

    “வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது! சாகாம யாராவது இருக்காங்களா? நாம்ப சாகறதுக்கு ஏதோ ஒரு வழி. அவ்வளவுதான். ஒல்லியா இருந்தா, ஏன் இப்படி ஒடிஞ்சு விழறமாதிரி  இருக்கேன்னு கேள்வி. முந்தி ரொம்ப குண்டா இருந்தேன். இருநூறு பவுண்டில்ல! அப்ப, `ஏன் இப்படி குண்டோதரனா இருக்கே?`ன்னு கேட்டாங்க!” சிரித்தார்.  “ஏன், ஏன்னு கேட்டுட்டு இருந்தா, அதுக்கு முடிவே இல்ல,” என்று அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கிவிட்டு, “இப்படிப் பேசிக்கிட்டே மெதுவா கார் ஓட்டறது ரொம்ப ரிலாக்ஸிங்கா இருக்கு. நான் ஏத்திட்டுப் போறவங்க எல்லாருமே ஒங்கமாதிரிதான் — அன்பாப் பழகறாங்க. அவங்க கஷ்டத்தை எங்கிட்ட சொல்லிக்கிறாங்க. போன வாரம் பாருங்க..!” என்று ஆரம்பித்தார்.

    பேசிக்கொண்டே வந்ததில், கண்ணாடி சரியாக மூடாத ஜன்னல்வழி உள்ளே வந்த புகையோ, வீடு வந்து சேர்ந்ததோ எதுவுமே ​தெரியவில்லை விசாலிக்கு. கைகளைக் கூப்பியபடி, யாஹ்யாவிடம் விடைபெற்றுக்கொண்டாள்.

    “சாமானை நான் எடுத்துக் குடுக்கறேன்,” என்றபடி யாஹ்யா பின்னால் விரைந்தபோது, விசாலி கணவரைப் பார்த்து முறைத்தாள். “நீங்க போய் எடுங்க. அதான் மூணு நாள் ஒரு வேலையும் செய்யாம, ஜாலியா இருந்தாச்சில்ல! இன்னும் என்ன சோம்பல்?”

    கார் கண்ணிலிருந்து மறைந்தபின், “எவ்வளவு குடுத்தீங்க?” என்று கேட்டாள். குரல் அனாவசியமாக, ரகசியமாக ஒலித்தது.

    “அதான் அங்கேயே சொன்னேனே — முந்நூறுதான்!” என்று அவர் அலட்சியமாகக் கூறியபோது, சற்றும் எதிர்பாராதவண்ணம், அவர்மேல் பாய்ந்தாள் தர்மபத்தினி.

    “நாம்ப எல்லாம் ஒரு தலைவலி, காய்ச்சலுக்கே என்ன அமர்க்களப்படுத்தறோம்! அவரு சொந்தக்காலில நிக்கறாரு, இவ்வளவு ​பெரிய வியாதியோட போராடிக்கிட்டு!” ஆத்திரத்தில் பெருமூச்சு வாங்கியது அவளுக்கு. “எதையுமே கூழா அரைச்சுத்தான் சாப்பிடுவாராமே, பாவம்! கூட ஒரு அம்பதோ, நூறோ போட்டுக் குடுத்திருந்தா குறைஞ்சா போயிடுவீங்க? ஒங்களுக்கு எதையாவது ஒழுங்கா பண்ணத் ​தெரியுதா?”.

    Share
  • தட்டாமாலை

    தமிழ்த்​தேனீ

    “அப்பிடி என்னப்பா நான் தப்பா சொல்லிட்டேன், ஒரு ஆம்பளைப் புள்ள இருக்கு, ஆனாலும் வீட்டுக்கு அழகு பொம்பளைப் புள்ளைதான், அதுனாலே ஒரு பொம்பளைப் புள்ளையப் பெத்துக்குடுன்னுதானே சொன்னேன், எனக்கு ஒரு பேத்திவேணும்னுதானே கேட்டேன்.”

    “என்னை நீங்கதான் பெத்தீங்க. அதுக்காக  எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு உங்களுக்கு நெனைப்பா? இது எங்க வாழ்க்கை நாங்கதான் ப்ளான் பண்ணனும். எல்லாமே  நீங்க சொல்லித்தான் நாங்க தெரிஞ்சிக்கணுமா? நீங்க சொல்றதைத்தான் கேட்டு நடக்கணுமா? எதிலே தலையிடறது எதிலே தலையிடக் கூடாதூன்னு தெரிஞ்சு நடந்துக்கணும் பெரியவங்க.” என்று எரிந்து விழுந்த மகன் சேகரை  தீர்க்கமாகப் பார்த்து,

    “இதோ பாரு உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நான் சொல்லலை, ஏதோ எங்களுக்கு தெரிஞ்சதை சொல்றோம். கேட்டா கேளு, வேணாம்னா விட்டுட்டுப் போயேன். அதுக்கு ஏன்  எரிஞ்சு விழறே?

    அனுபவப்பட்டவங்க  சொல்வாங்க. அதைக் கேக்கறதும் கேக்காததும் உங்க இஷ்டம். எல்லாம் உங்க நல்லதுக்குதான் சொல்றோம்”  என்றார் சபேசன்.

    “அப்பா நீங்க இனிமே எங்க விஷயத்திலே தலையிடாதீங்க, எங்களுக்கும் வயசாச்சு, நாங்க பாத்துக்கறோம்” என்றான் சேகர்.

    “டேய்! நான் உன்னோட அப்பாடா!  நான் ஒண்ணும் தப்பா சொல்லலே.”

    “சரிப்பா. போதும் உங்க அட்வைஸ். உங்க வேலையைப் பாத்துட்டுப் போங்க” என்றான் சேகர்.

    சூழ்நிலையின் கனம் ஏறிக்கொண்டே இருந்தது . மருமகள் சிந்துஜா  “ஏங்க எதுக்கு இப்பிடி தூக்கி அடிக்கறா மாதிரி பேசறீங்க?” என்றாள்.

    “இப்போ நீ உள்ளே போறியா! அனாவசியமா என் கோவத்தைக் கிளறாதே! மரியாதையா உள்ளே போயிடு” என்று எரிந்து விழுந்தான் சேகர்.

    “இதோ பாருப்பா! நீ இவ்ளோ கோவக்காரனா இருப்பேன்னு நான் நெனைக்கலே. என்னதான் இருந்தாலும் அப்பாங்கற ஸ்தானத்துக்காவது, அப்பிடியும் இல்லேன்னா வயசுக்காவது மரியாதை குடுத்து பேசுவேன்னு நெனைச்சேன்.

    இனிமே இந்த வீட்டுப் படி ஏறமாட்டேன், இனிமே உங்கிட்ட பேசவே மாட்டேன், நான் வரேன்… இல்லே… போறேன்” என்று  சொல்லிவிட்டு ஆத்திரத்துடன் வெளியேறினர்  சபேசன்.

    இரவு பக்கத்தில் சிந்துஜா புரண்டு படுத்து அவன்மேல் கையைப் போட்டுக்கொண்டு “நீங்க நடந்துக்கறது எனக்கு கொஞ்சமும் பிடிக்கலே, இப்பிடி அப்பாவை அவமானப்படுத்தி அனுப்பறது சரியில்லேன்னு தோணுது.

    அமைதியா இருங்க உங்களுக்கு அடிக்கடி கோவம் வருது, எரிச்சல் படறீங்க. அதுனாலேதான் அப்பா உங்களை எதுக்கும் டாக்டர்கிட்டே போயி செக்கப் பண்ணிக்கோன்னு சொன்னாரு.  ஒரு பொம்பளைப் புள்ளையை பெத்துக் குடுன்னு சொல்றாரு; நல்லதுதானே சொல்றாரு, அதுக்கு எதுக்காக இவ்ளோ வார்த்தைகளை வளத்து  அவரோட சண்டை போட்டு  அவர் மனசைப் புண்படுத்தி அனுப்பினீங்க.

    ‘அழ அழச் சொல்வர் தமர்’  அப்பிடீன்னு சொல்வாங்க. நம்ம மேலே அக்கறை இருக்கறவங்கதான் நல்லதை சொல்வாங்க” என்றாள்.

    சிந்துஜா சொல்வது  உண்மைதானே என்று தோன்றியது சேகருக்கு.

    சேகருக்கு அவன் மேலேயே வெறுப்பாய் இருந்தது, கோவம் கோவமாக வந்தது, சில விஷக்கடி வேளைகள் நம்மைத் தூண்டி தேவையில்லாமல் பேசவைத்து சூழ்நிலைகளைக் கெடுத்து விரோதங்களை உண்டாக்குகிறது.

    அந்த நேரங்களில்  சற்றே அமைதியாக இருக்கலாமே, ஏன் இப்பிடி நான் நிலை குலைஞ்சு போறேன்?  என்று தன்னைத் தானே நொந்தபடி படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த  சேகருக்கு தூக்கம்  பிடிக்கவில்லை.

    எழுந்து வரண்டாவில் நின்று ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து புண்பட்ட நெஞ்சத்தை புகை விட்டு ஆற்றிக் கொண்டிருந்தான்.

    யோசித்துப் பார்த்ததில் அப்பிடி என்ன அப்பா தப்பா சொல்லிட்டாரு, எல்லா அப்பாவும் சொல்றதுதானே, மனம் குமைந்துகொண்டிருந்தது. வெறுப்புடன் அந்த சிகரெட்டை தூக்கி எறிந்துவிட்டு படுக்கையில் வந்து படுத்தான் சேகர்.

    வாசலில்  அழைப்பு மணி ஒலித்தது. மணியைப் பார்த்தான் சேகர். இரவு மணி இரண்டு. யாரு இந்த நேரத்திலே? அழைப்பு மணி விடாமல் ஒலிக்கவே கதவைத் திறந்தான் சேகர்.

    பக்கத்துவீட்டு பாஸ்கர் “என்ன சேகர் இப்பிடித் தூங்கறீங்க?” என்று கூறிவிட்டு மேலும் ஏதோ சொல்ல வாயெடுத்தார்.

    “ஏங்க பாதி ராத்திரிக்கு கதவைத் தட்டி உபதேசம் செய்யறீங்க? எதுக்கு வந்தீங்க? அதைச் சொல்லுங்க” என்றான் எரிச்சலோடு சேகர்.

    “இல்லேங்க. உங்க தோட்டத்திலேருந்து ஏதோ புகை வாசனை வருது. நெருப்பும் தெரியுது அதைச் சொல்லி எச்சரிக்கலாம்னு வந்தா எரிஞ்சு விழறீங்க” என்றார் பாஸ்கர்.

    பதறிப் போயி “அடேடே! மன்னிச்சுக்கோங்க! வாங்க, போயி பாக்கலாம்” என்றபடி தோட்டத்துக் கதவைத் திறந்து பார்த்தான் சேகர்.

    செடிகளிலேருந்து கீழே விழுந்து மூலையில் சேகரித்து வைத்திருந்த இலைச் சருகுகள் எரிந்து கொண்டிருந்தன. நல்ல வேளை இன்னும் சற்று நேரம் கவனிக்காமல் இருந்திருந்தால் அப்படியே ஜன்னலுக்குத் தீ பரவி இருக்கும்.

    பாஸ்கரும் சேகரும் நிறையத் தண்ணீர் கொட்டி அதை அணைத்துவிட்டு பதட்டத்தால் எழுந்த வியர்வைப் பெருக்குடன் பெருமூச்சு விட்டுக் கொண்டே  தோட்டத்தில் இருந்த திண்ணையில் உட்கார்ந்தனர்.

    “ரொம்பத் தேங்க்ஸ் பாஸ்கர்! சரியான நேரத்துக்கு வந்து உதவினீங்க. நாந்தான் அவசரப்பட்டு  உங்ககிட்ட எரிச்சல் பட்டேன். மன்னிச்சிருங்க” என்றான் சேகர்.

    “அட! அதை விடுங்க! சரி, வாங்க போயி தூங்கலாம்” என்றபடி பாஸ்கரும் போன பின் கதவைத் தாப்பாள் போட்டுவிட்டு பதட்டம் தணிய சற்றே குளிர்ந்த நீரைக் குடித்துவிட்டு வந்து படுத்தான்.

    காலையில் எழுந்து குளித்துவிட்டு  வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான் சேகர். அழைப்பு மணி ஒலித்தது,  “சிந்து, போயி யாருன்னு பாரு. எனக்கு நேரமாச்சு நான் கிளம்பணும்” என்றபடி சாக்ஸை போட்டுக்கொண்டு ஷூவை மாட்டினான் சேகர்.

    கதவைத் திறந்தாள் சிந்துஜா. “அடேடே! வாங்க மாமா!  உள்ளார வாங்க” என்று அழைத்துவிட்டு, “ஏங்க மாமா வந்திருக்காரு” என்றாள்.

    வாசலில் இவனையே பார்த்தபடி நின்றிருந்தார் சபேசன். “வாங்கப்பா” என்றான் சேகர். “நல்ல வேளைப்பா, பக்கத்துவிட்டு பாஸ்கர் சொன்னார். பதறிப் போயி ஓடிவந்தேன். உனக்கு ஒண்ணும் காயம் படலியே” என்றார். “அதெல்லாம் ஒண்ணும் இல்லேப்பா,  உக்காருங்க” என்றான் சேகர்.

    சிந்துஜா காப்பியைக் கொண்டு வந்து கையில் கொடுத்துவிட்டு “சாப்பிடுங்க மாமா” என்றாள். காப்பியை ஒரு முழுங்கு குடித்துவிட்டு நிமிர்ந்து,

    “சேகர், நம்ம வம்சத்திலே எனக்கு பிள்ளையா வந்து பொறந்திருக்கே. என்னோட அப்பா சொல்லும்போது நானும் இப்பிடித்தான் அவர் மேலே எரிஞ்சு விழுந்தேன். உன்னைவிட அதிகமா வார்த்தைகளைக் கொட்டினேன். ஆனா இப்போ ஒரு பொம்பளைப் புள்ளெ இருந்திருந்தா என் மேலே அன்பா ஆதரவா இருக்கும்னு தோணுது. அனுபவசாலிகள் சொல்றத அலக்‌ஷியம் செய்யக் கூடாதுன்னு இப்போ தோணுது. காலம் கடந்த ஞானோதயம்.

    அது சரி நீ என்னோட பிள்ளைதானே, நம்ம வம்சத்தோட கோவம் அப்பிடியே எறங்கி இருக்கு உனக்கும். நானும் கொஞ்சம் நிதானமாப் பேசியிருக்கலாம்.

    நான் நேத்து உன்னைப் புண்படுத்தறா மாதிரி பேசிட்டேன். இதோ பாரு நான் இது வரைக்கும் யார் கிட்டேயும் மன்னிப்பு கேட்டதே இல்லே.

    இந்தக் கோவம்கிற நெருப்பை அணைக்காம அப்பிடியே வெச்சிருந்தா அது நீரு பூத்த நெருப்பு மாதிரி எப்போ எதைப் புடிக்கலாம்னு காத்துகிட்டே இருக்கும். அதான் அந்த நெருப்பை அணைச்சிடலாம்னு வந்தேன்.

    என் வாழ்க்கையிலே இது வரைக்கும் நான் யார்கிட்டேயும் மன்னிப்பு கேட்டதில்லே, முதன் முதலா உங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன். ஏன்னா எனக்கு நீ  வேணும்ப்பா ,உன்னை விட முக்கியம் எனக்கு எதுவுமே  இல்லே” என்றார் நாத் தழுதழுக்க.

    சேகருக்கு அடி வயிற்றிலிருந்து விம்மிக்கொண்டு  ப்ரவாகமாய்ப் பொங்கி வழிவதற்கு இடம் தேடி அவன் கண்களின் வழியே தாரை தாரையாய் கண்ணீர் பொங்கிற்று.

    “அப்பா! நான்தான் உங்ககிட்ட மன்னிப்பு கேக்கணும், நாந்தான் உங்களைப் புண்படுத்திட்டேன்” என்றபடி அவரைத் தழுவிக்கொண்டு அவர்மேல் சாய்ந்து கொண்டான்  சேகர்.

    சபேசனுக்கு இரண்டு வயதுப் பையன் சேகரை தோளில் சுமந்தபடி தட்டாமாலை சுற்றியது நினைவுக்கு வந்தது.

    கண்களில் துளிர்த்த ஆனந்தக் கண்ணீரை புடவைத் தலைப்பால் ஒற்றி எடுத்துவிட்டு “ஏங்க, உங்களுக்கு ஆபீசுக்கு நேரமாச்சு” என்றாள் சிந்துஜா.

    Share
  • நிலவைக் கண்டால் நீலா

    சு. ​கோதண்டராமன்

    “சுப்பையா, கொண்டைக் கடலை மாலை கட்டி வைச்சிருக்கேன். ஆபீசுக்குப் போகும்போது சிவன் கோவில்லே தட்சிணாமூர்த்திக்குப் போட்டுட்டு வேண்டிக்கிட்டுப் போப்பா” என்றார் தாய்.

    “சரிம்மா” என்றான்.

    “மறந்துடாமல் எடுத்துக்கிட்டுப் போ” என்று வலியுறுத்தினார்.

    அவனா மறப்பான்? இது அவன் தலையாய வேலை ஆயிற்றே!

    எத்தனையோ தெய்வங்களுக்கு எத்தனையோ விதமான மாலைகள் போட்டாகி விட்டது. சிவனுக்கு வில்வ மாலை 25 வாரம். அம்பாளுக்கு ரோஜாப்பூ மாலை 21 வாரம். செவ்வாய்க்கு அரளி மாலை 7 வாரம். துர்க்கைக்கு எலுமி்ச்சை மாலை 36 வாரம். அனுமாருக்கு வெத்திலை மாலை 18 வாரம். ஒரு தடவை சோளிங்கர் போய் நரசிம்ம சுவாமிக்கு ஏலக்காய் மாலை கூடச் சாற்றி வந்தான். அந்த வரிசையில் இப்பொழுது தட்சிணாமூர்த்திக்கு வியாழன் தோறும் கடலை மாலை போட்டுக் கொண்டிருக்கிறான். கடுகு மாலை, மிளகு மாலை, சீரக மாலை தான் பாக்கி. இனி யாராவது புதிய சோதிடர் வந்து அதைப் போடச் சொன்னால் அதற்கும் தயாராகத் தான் இருக்கிறான். இத்தோடு 15 வாரங்கள் ஆகிவிட்டது. இன்னும் 3 வாரங்கள் பாக்கி. அதற்குள் நல்ல சேதி எதாவது வருகிறதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்.

    எதற்காக? இதெல்லாம் எதற்காக?

    எல்லாம் அவன் திருமணத்திற்காகத் தான். வயது 36 ஆகிவிட்டது. இரண்டு அண்ணன்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வயது முறையே 40, 38 ஆகிறது. 16 வருஷம் முன்பு பெரிய அண்ணனுக்கு பெண் தேட ஆரம்பித்த பெற்றோர்கள், சின்ன அண்ணனையும், பிறகு இவனையும் அதில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். விளம்பரம் கொடுக்காத பத்திரிகை இல்லை, பதியாத திருமணத் தகவல் நிலையம் இல்லை. நண்பர்கள், உறவினர்கள் எல்லாரிடமும் சொல்லி வைத்திருக்கிறது. யாருக்கும் திருமணம் ஆகிற வழியைக் காணோம். அண்ணன்கள் இரண்டு பேரும் அலுத்துப் போய், அந்த எண்ணத்தையே கை விட்டு விட்டார்கள்.  இவனுக்கு மட்டும் இன்னமும் நம்பிக்கை இருக்கிறது.

    இருந்தாலும் இந்த சாமி எல்லாம் சுத்த மோசம், ஒரு சாமிக்காவது கொஞ்சம் நன்றி உணர்ச்சி இருக்கணுமே என்று கோபம் வந்தது சுப்பையாவுக்கு. அவன் ஒரு அரசாங்க ஊழியன். மிகவும் நேர்மையானவன். கை நீட்டி லஞ்சம் வாங்கிவி்ட்டால் அந்த வேலையை முடிக்காமல் அன்று வீட்டுக்குப் போக மாட்டான். தன் அளவு நேர்மை இல்லாவிட்டாலும், ஓரிரு மாதம் தாமதமாகவாவது சாமி தன் வேலையை முடித்துக் கொடுத்தால் பரவாயில்லை என்று நினைக்கிறான். இதை வெளியில் சொல்லிக் கொள்ளவும் முடியவில்லை. அவன் பேசுவது எந்த சாமி காதிலாவது விழுந்து, அது அவனுக்குக் கொடுப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அருளைத் தடுத்து நிறுத்திக் கொண்டால் என்ன செய்வது என்று பயமாக வேறு இருக்கிறது.

    லஞ்சம் வாங்கலாமா, தப்பில்லையா?  இந்தக் கேள்வியை வேறு யாரும் கேட்பதற்கு முன் அவனே கேட்டுக் கொள்வான். என்ன செய்வது? சோதிடர்களுக்கும் அவர்கள் சொல்லும் பரிகாரங்களுக்குமே ஒவ்வொரு மாதமும் ஐயாயிரம், பத்தாயிரம் என்று ஆகிறது. இதற்காகத் தான் கை நீட்டித் தொலைக்க வேண்டியிருக்கிறது. எந்த சாமியாவது கருணை காட்டிக் கல்யாணம் செய்து வைத்து விட்டால் அப்புறம் இந்த அதிகப்படி செலவுகளும் இராது, பாவம் செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படாது என்று அவனே சமாதானப்படுத்திக் கொள்வான்.

    பெரிய பண்டிட் முதல் மரத்தடி சோதிடர் வரை எல்லாரையும் பார்த்தாகி விட்டது. கிளி ஜோஸ்யம், கீரி ஜோஸ்யம், பல்லி ஜோஸ்யம், பாம்பு ஜோஸ்யம் என ஒன்றும் பாக்கி இல்லை.

    ஒரு முறை 5000 ரூபாய் கட்டணம் கட்டி ஐந்து நட்சத்திர ஓட்டலில் முகாம் இட்டிருந்த ஒரு ஆந்திர ஜோஸ்யரிடம் ஜாதகம் பார்த்தான். அவர் இந்த மாதம் குரு பெயர்ந்த உடன் கண்டிப்பாகத் திருமணம் நிச்சயம் ஆகும் என்றார். குருவும் பெயர்ந்தார். அடுத்த ராசிக்குப் போவதற்கும் ஆயத்தம் ஆகிவிட்டார். எந்த சேதியையும் காணோம்.

    அடுத்த தடவை ஒரு மரத்தடி சோதிடர் கண்ணில் தென்பட்டார். நெற்றி நிறைய சந்தனமும், குங்குமமும், கழுத்து நிறைய ருத்ராட்சமும் அவரைப் பார்த்தாலே தெய்வீகமாக இருக்கவே அவரிடம் ஜாதகத்தைக் காண்பித்தான். பழைய சோதிடர் சொன்னது பலிக்கவில்லை என்பதையும் சொன்னான். அவர் நன்றாக ஆராய்ந்து பார்த்துவிட்டு, “எந்த மடையன் சொன்னது குரு பலம் வந்தால் உங்களுக்குக் கல்யாணம் ஆகுமென்று? உங்கள் ஜாதகத்தில் குரு நீசனாகி விட்டான். அவன் எந்த ராசியில் இருந்தாலும் உங்களுக்கு ஒன்று தான். உங்களுக்கு ஏழாம் இடத்திலே புதன் உச்சமாக இருக்கிறான். அதனாலே, புத தசை ஆரம்பிக்கும் போது தான் உங்களுக்குத் திருமண வாய்ப்பு” என்றார்.

    “அது எப்போ ஆரம்பிக்கும்?”

    “இன்னும் மூணு வருஷம் இருக்கு.”

    “மூணு வருஷமா? கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க.”

    “இதிலே எல்லாம் பேரம் பண்ண முடியாதுங்க. கிரகங்களுக்குப் பூர்வ பலன் என்று ஒன்று உண்டு. அதாவது முறையான அதிகாரம் வருவதற்கு முன்னதாகவே பலன் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். அதற்கு நீங்கள் புதன் கிழமை தோறும் மஞ்சள் வேட்டியைக் கட்டிக்கொண்டு நவக் கிரகத்தை 9 முறை அங்கப் பிரதட்சிணம் செய்ய வேண்டும்.”

    அப்படியே செய்தான். மூன்று வருஷமும் முடிந்துவிட்டது. பூர்வ பலனும் வரவில்லை, அபர பலனும் வரவில்லை.

    ஒரு முறை பத்திரிகைகளில் மணமகன் தேவை பகுதியை மேய்ந்து கொண்டிருந்தபோது “திருமணத் தடையா? பிரபல நேமாலஜிஸ்ட் நெற்குன்றம் நீலமேகத்தைச் சந்தியுங்கள். எத்தனையோ பேர் பலன் பெற்றுள்ளனர்” என்று ஒரு விளம்பரத்தைப் பார்த்தான். அவரிடம் போனான். நேமாலஜிஸ்ட், நியூமராலஜிஸ்ட், ஜெம்மாலஜில்ட், பொட்டாலஜிஸ்ட் என்று பல பட்டங்கள் அவருடைய பெயருக்குப் பின் இருந்தன.

    “உங்க பேரு?”

    “சுப்பையா”

    “என்ன ஸ்பெல்லிங் போடறீங்க? ”

    “எஸ் யூ பி பி ஏ ஐ ஒய் ஏ.”

    “கூட்டுத் தொகை 2 வருது. உங்க பிறந்த தேதி? ”

    “3-1-1977”

    “கூட்டுத் தொகை 1 வருது. உங்களுக்கு நினைச்ச காரியம் எதுவுமே நடக்காதே. வாழ்க்கையே ரொம்பக் கஷ்டமா இருக்குமே.”

    “ஆமாங்க. 12 வருஷமா முயற்சி பண்ணியும் திருமணம் நடக்கல்லிங்க.”

    “எப்படி நடக்கும்? எப்படி நடக்குங்குறேன்? ”

    “ஏன்? ”

    “பிறந்த தேதிப்படி நம்பர் 1. பேரு பார்த்தா 2 வருது. ஒண்ணாம் நம்பர் கொடுக்க நினைக்கிறதை ரெண்டாம் நம்பர் தடுத்துடுது. பிறந்த தேதியை மாத்த முடியாது. பேரை மாத்தினாத் தான் எதுவும் நல்லது நடக்கும்.”

    “அப்படியா? ”

    “உங்க பேரிலே ரெண்டு பி வருதுல்ல, ஆங்கில ரெண்டாவது எழுத்து பி. அதுக்குப் பதிலா ப்பி, அதாவது 16வது எழுத்து, அதைப் போட்டுங்க. உங்களுக்கு அதிருஷ்டம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.”

    “அப்படியா? ”

    “எஸ் யூ ப்பி ப்பி ஏ ஐ ஒய் ஏ. இதிலே மூணு விசேஷம் இருக்கு. கூட்டுத் தொகை ஒண்ணு வருது. அதனாலே இதுக்கும் தேதிக்கும் இருந்த பகை போயிடுது. ப்பி ப்பி ன்னு வரது நாதஸ்வர ஓசை இல்லியா? மங்கள வாத்யம். கல்யாணம் நிச்சயம். இப்ப பேரிலே வர ப்பையா என்பது சிறு வயதுப் பையனைக் குறிக்கும். அதனாலே நீங்க வயசானது தெரியாம என்னிக்கும் சின்னப் பையனாவே இளமையா இருப்பீங்க.”

    “அப்படியா? ”

    “இந்தப் பேரை தினம் 307 தடவை எழுதிப் பாருங்க அந்த மாதிரி 307 நாள் செய்யணும். அதோட, இந்த நீலக் கல் மோதிரம் தரேன். இது விலை 10,000 ரூபாய் தான். இது உங்க நம்பருக்கு அதிருஷ்டக் கல். அப்புறம் பாருங்க. உங்களைக் கையிலே பிடிக்க முடியாது.”

    மோதிரத்தை வாங்கிக் கொண்டு வந்தான்.

    307 நாளும் ஆயிற்று. கையெழுத்து வேள்வியும் முடிந்தது. ஒண்ணாம் நம்பரின் அதிருஷ்டம் இன்னமும் அவன் ஒண்டிக் கட்டையாகத் தான் இருக்கிறான்.

    “ஏண்டா தம்பி, இந்த நாடி சோதிடம்னு சொல்றாங்களே, அப்படியே பலிக்குதாமே, அதை வேணா ஒரு தடவை பார்த்து விடலாமே” என்றார் அவன் தாய்.

    விசாரித்துக் கொண்டு வைதீஸ்வரன்கோவிலுக்குப் போனான். அங்கே நகர் வலம் வந்த போது இருபது முப்பது இடத்தில் நாடி ஜோதிடம் என்று போர்டுகள் தொங்கின. அதிலே யார் மிகச் சரியாகச் சொல்வார் என்று தெரியவில்லை. சரி, கோவிலுக்குப் போய் சாமியையே கேட்டு விடுவோம் என்று போனான். அங்கே பிரகாரத்தில் நான்கு பேர் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் பேச்சுக் கொடுத்ததில் வழி புலப்பட்டது.

    “பிருகு நாடி ஜோதிடம் என்று போர்டு போட்டிருப்பது தான் ஒரிஜினல், மற்றதெல்லாம் போலி” என்றார்கள்.

    பிருகு முனிவர் பல லட்சம் வருஷங்களுக்கு முன்னே உலகத்தி்ல் எல்லா நாடுகளிலும் எல்லாக் காலத்திலும் பிறக்கப் போகும் மனிதர்களுடைய ஜாதகத்தை எல்லாம் தனித் தனி ஓலைகளில் எழுதி முத்து என்பவரிடம் கொடுத்தாராம். அவர் நாடி முத்து என்று பெயர் பெற்றார். அவருடைய பரம்பரையினர் எல்லோருமே நாடி முத்து, நாடி ரத்தினம் என்ற பெயரைத் தான் மாற்றி மாற்றி வைத்துக் கொள்வார்களாம்.

    “தற்போது இருப்பவர் பெயர் நாடி முத்து. அவரிடம் இருப்பது தான் பிருகு முனிவர் கையால் எழுதின ஓலைகள். மற்றவர்கள் எல்லாரும் செராக்ஸை வைத்துக் கொண்டு பிழைக்கிறார்கள்” என்றார்கள்.

    நாடி முத்துவை நாடிப் போனான். முன் அறையில் ஒரு வரவேற்பாளர் இருந்தார். “நாடி ஜோஸ்யம் பார்க்க வந்திருக்கிறேன்” என்றான்.

    “உடனே பார்க்க முடியாது. 190 பேர் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் 191வது நபராக உங்களைப் பதிவு செய்து கொள்வோம்.”

    பணம் கட்டிவிட்டுக் கேட்டான், “நான் எப்போ வரணும்?”

    “ஒரு நாளைக்கு 12 பேருக்கு மேலே பார்க்கக் கூடாதுன்னு பிருகு முனிவர் சொல்லி இருக்கார். அதனாலே உங்களுக்கு நாளை முதல் 16வது நாள் மாலை 4 மணிக்குத் தான் அப்பாயிண்ட்மெண்ட்” என்றார்.

    அடுத்த 16வது நாள் அலுவலகத்துக்கு விடுப்பு போட்டுவிட்டு நாடிமுத்துவிடம் போனான்.

    போய் உட்கார்ந்ததும் நாடிமுத்து அவன் முகத்தை உற்றுக் கவனித்தார். “நீங்க இந்த நேரத்துக்கு வருவீங்கன்னு பிருகு முனிவர் சொல்லி இருக்கார். அதனாலே நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம். உங்கள் ஜாதகத்தை எடுத்துத் தருகிறேன், பாருங்கள்” என்றார்.

    உள்ளே போய் ஒரு ஓலையை எடுத்து வந்து படிக்கத் தொடங்கினார். ‘பார் பார் முருகனைப் பாரதிவேகமா மயில் மேலே வரார் பார்’ என்றார்.

    “உங்க பேரு முருகனுடைய பேர்களில் ஒன்று தானே?” என்றார்.

    அவன் தந்தை சுப்பிரமணிய பாரதியிடம் பற்றுக் கொண்டவர். அதனால் அவனுக்கு பாரதியின் செல்லப் பெயராகிய சுப்பையா என்ற பெயரை வைத்திருந்தார். இந்த ஜோதிடருக்கு அது தெரிந்திருக்கிறதே, பாரதி பெயரைக் கூடச் சொல்லி விட்டாரே என்று அதிசயித்தான்.  அது மட்டுமல்ல, அவனுடைய தந்தை தாய் பெயரையும் மறைமுகமாகக் குறிப்பிட்டார். பிறந்து மூன்று மாமாங்க காலம் ஆகியும் அவன் கன்னி கழியாமல் இருப்பது பற்றியும் குறிப்பிட்டார். தை மாதம் தாலி கட்டும் வேளை வந்து விட்டது என்றும் கூறினார். மிகுந்த மகிழ்ச்சியோடும் நம்பிக்கையுடனும் வீட்டுக்கு வந்தான்.

    தை வந்து போயிற்று. தாலியைத் தொடும் பாக்கியம் கிட்டவில்லை. பிருகு முனிவரிடம் போய் ஏமாற்றி விட்டீர்களே எனச் சண்டை போட வேண்டும் என்று போனான். விவாகக் காண்டம் பார்க்க வேண்டும் என்று மறுபடியும் ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு வெயிட்டிங் லிஸ்டில் வைத்து பத்து நாள் கழித்து வரச் சொன்னார்கள்.

    போனான். நாடி முத்து மீண்டும் அவனுடைய ஓலையை எடுத்து வந்தார். அதை நன்றாக ஊன்றிக் கவனித்து விட்டு, “உங்களுக்கு சர்ப்ப தோஷம் இருக்கிறது, அதைச் சரி செய்யும் வரையில் திருமணம் ஆகாது என்று பிருகு முனிவர் சொல்கிறார்” என்றார்.

    “அதை எப்படிச் சரி செய்வது?”

    “சர்ப்ப யாகம் செய்ய வேண்டும். பத்தாயிரம் ரூபாய் ஆகும்.”

    “சர்ப்ப யாகமா? புராணத்தில் பரீட்சித்து ராஜா தான் எல்லாப் பாம்புகளையும் யாக குண்டத்தில் விழ வைத்து சர்ப்ப யாகம் செய்ததாகச் சொல்வார்கள். அந்த மாதிரிப் பாம்புகளை எல்லாம் பிடித்து ஹோமம் செய்ய வேண்டுமா? இது சாத்தியமா?”

    “கவலைப்படாதீங்க. செய்ய முடியாத பரிகாரம் எல்லாம் பிருகு முனிவர் சொல்ல மாட்டார். மாவால் பாம்பு மாதிரி செய்து ஹோமம் செய்வார்கள். அந்த மந்திரம் தான் முக்கியம்.”

    பத்தாயிரம் கொடுத்தான். மூன்று மணி நேரம் அவனைப் புகையில் திணற விட்டார்கள். ஹோமம் முடிந்த பின், நாடி முத்து அவனைக் கூப்பிட்டு, “ஹோமம் செய்தது மட்டும் போதாது. நீங்கள் ஒரு முறை காளஹஸ்திக்குப் போய் ஒரு இரவு அங்கே கோவிலில் படுத்து வாருங்கள்” என்றார்.

    அதையும் செய்தான். தூங்கும்போது எவரோ அவன் பர்ஸை அடித்துக் கொண்டு போய்விட்டார்கள். நல்ல வேளை. ஏடிஎம் கார்டு தனியாக வேறு இடத்தில் வைத்திருந்ததால் வீடு வந்து சேர முடிந்தது.

    எண்கண் என்ற முருகன் தலத்தில் சாமியார் ஒருவர் குறி சொல்வதாகக் கேள்விப்பட்டு அங்கே போனான். சாமியார் ஆஞ்சநேயர் படத்தின் முன் அவனை உட்கார வைத்தார். படத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்தார். அதில் ஒரு மைப் பொட்டு வைக்கப்பட்டிருந்தது. அதையே உற்றுப் பார்த்தார்.

    “உங்க பேரு சுப்பையாவா?”

    “ஆமாங்க.”

    “உங்க ஊரு கும்பகோணமா?”

    “ஆமாங்க.”

    “உங்க தெருக் கடைசியிலே ஒரு குளம் இருக்கா?”

    “ஆமாங்க.”

    “உங்க வீட்டுக்கு முன்னாலே ஒரு வேப்ப மரம் இருக்கா?”

    “ஆமாங்க.”

    “வீட்டின் கொல்லையில் ஒரு நெல்லி மரம் ரொம்ப நாளாக் காய்க்காமல் இருக்கா?”

    “ஆமாங்க.”

    நேரில் பார்த்தது போல புட்டுப் புட்டு வைக்கிறாரே என்று வியப்பில் அப்படியே உறைந்து விட்டான்.

    “உங்களுக்குக் கல்யாணம் ஆகல்லைன்னு ரொம்ப நாளா வருத்தமா இருக்கீங்க.”

    “ஆமாங்க.”

    “உங்க அண்ணன்கள் ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகல்லை.”

    “ஆமாங்க.”

    “வீட்டிலே தோஷம் இருக்கு அதனாலே தான் இப்படி எல்லாம் நடக்குது. எலுமிச்சம் பழம் மந்திரிச்சுத் தரேன். அதை ஒரு கயிற்றில் கட்டி வீட்டு வாசலில் தொங்க விடுங்க. ஓரு மாசத்திலே நெல்லியும் காய்க்கும், உங்களுக்கும் திருமணம் ஆகும். கிழக்குத் திசையிலிருந்து ஒரு பெண் வரதா ஆஞ்சநேயர் சொல்றார். உங்களுக்கு வரப் போற மனைவி பேரு நீலான்னும் சொல்றார்.”

    ஒரு வருஷம் ஆகிவி்ட்டது. எலுமிச்சம்பழம் காய்ந்து சுருங்கி வாசலில் தொங்கிக் கொண்டிருக்கிறது. நெல்லியும் காய்க்கவில்லை, நீலாவும் வரவில்லை.

    அண்ணன்மார்களின் கதி தான் தனக்கும் என்ற முடிவுக்கு வந்து விட்டான். ஆனால் அவன் தாய் அவனுக்கு நம்பிக்கை ஊட்டினார், “உனக்குன்னு ஒருத்தி இனிமேலா பிறக்கப் போகிறாள்? எங்கேயோ இருக்கிறாள், வரத் தான் போகிறாள்” என்று.

    அவனும் கிழக்கிலிருந்து வரும் ரயில்கள் பஸ்களில் எல்லாம் நீலா வந்து இறங்குகிறாளா என்று பார்த்துக் கொண்டிருக்கிறான். ஏதேனும் நிழல் அசைந்தால் அது நீலாவாக இருக்கக் கூடுமோ என்று பரபரக்கிறான். நிலவைக் கண்டால் என் நீலாவின் முகம் இப்படித் தான் இருக்குமோ என்று மயங்கி நிற்கிறான்.

    நீங்கள் யாராவது நீலாவைப் பார்த்தால் விரைவில் இந்த மஜ்னுவை வந்து சந்திக்கச் சொல்லி அனுப்புங்கள்.

    Share
  • ஓடாதே…

    ரிஷி ரவீந்திரன்

    ”ஓடாதே…”

    அம்மா பயத்துடன் கத்திக்கொண்டிருந்தார்.

    10 வயது துருதுருப்புடன் எப்பொழுதும் நான் ஓடி விளையாடுவதைப் பார்த்து எங்கள் வீட்டில் அனைவருமே “ஓடாதே” என எச்சரிப்பர். இதிலென்ன அதிசயம்…? இது எல்லார் வீட்டிலும் சகஜம்தானே…?

    அடடா… நான் என்னைப் பற்றி உங்களுக்குச் சொல்லவேயில்லையே..! நான்…?

    என் பெயர் சீனிவாசன். என்னை சீனு என்றே செல்லமாக அழைப்பர். நான் என் அண்ணனின் தம்பியா அல்லது மகனா என்று தெரியவில்லை.

    என்ன தலை சுழல்கின்றதா….?

    வெங்கடேஷ் அண்ணாவின் உடலிலிருந்து செல்லினை எடுத்து க்ளோனிங்க் முறையில் உருவாக்கப்பட்ட இந்த உலகின் முதல் க்ளோனிங் குழந்தை.

    உலகமே என்னை உருவாக்கத் தடைசெய்தது… கடவுளுக்கும் இயற்கைக்கும் செய்யும் கொடுமை என எச்சரித்தனர்.

    யார் சொன்னது க்ளோனிங் குழந்தை என்றால் அலட்சியம் செய்து வளர்ப்பார்கள் என்று…? எங்கள் வீட்டிற்கு வந்து பாருங்கள்… என் மீது பொழியும் அன்பு மழைக்கு நான் என்ன தவம் செய்தேனோ…? குறிப்பாக வெங்கடேஷ் அண்ணா என் மீது காட்டும் பரிவும் அன்பும் அபரிமிதமானது. ஒருவேளை அவரது உடலிலிருந்து செல்லெடுத்து நகலெடுக்கப்பட்டதால் என் மீது அபரிமிதமான பாசமோ…? அனைவரும் என்னை ஓடாதே என்று அன்பால் எப்பொழுதும் எச்சரித்துக் கொண்டிருப்பர்.

    ஒரு நாள் ஓடி விளையாடி விட்டு வீட்டிற்கு வந்தேன். அப்பொழுது நான் ஜன்னலில் ஏறி ஹேய் என்று கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி பயப்பட வைக்கவேண்டும் என எண்ணி ஜன்னலருகே சென்றேன். அம்மாவும் வெங்கடேஷ் அண்ணாவும் பேசிக்கொண்டிருந்தனர். பேச்சில் என் பெயர் அடிபடவே நான் உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தேன்.

    “டேய் வெங்கடேஷ்…. கொஞ்சம் பொறுடா… அவனுக்கு இப்பத்தான் 10 வயசு ஆகுது…. அவனோட உடம்பு நல்லா வளரட்டும்… அப்பொழுது தான் அவனோட உடல் உறுப்புக்கள் நல்ல ஆரோக்யமாக இருக்கும்… இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள அவனோட இதயத்தை எடுத்து உனக்கு ட்ரான்ஸ்பிளாண்ட் பண்ணிடலாம்… மீதி உறுப்புக்களை நல்ல விலைக்கு வித்துடலாம்…”

    Share
  • சுதந்திரம்!…

    நடராஜன் கல்பட்டு 

     

    “அப்பா இப்பொ கல்யாணத்துக்கு என்னப்பா அவசரம்?  இப்பொதான் எனக்கு பதினாறு வயசாகுது. நான் காலேஜுக்குப் போயி படிச்சு பட்டம் வாங்கணும்பா.  சங்கீதத்துலெ இன்னும் நெறய கத்துக்க வேண்டியது இருக்குப்பா.  பல மேடேலெ ஏறிக் கச்சேரி பண்ணணும்.  பத்து பேரு சொல்லணும், “மீனாட்சி கச்சேரியா?  மிஸ் பண்ணக் கூடாதுப்பா” ன்னு.  சித்திரம் நெறெய வரையணும்.  சிறுகதையும் எழுதணும்பா.”

    “அவ்வொளோ தானா இன்னும் எதுனா பாக்கி இருக்குதா?”

    “தோணுற போது அப்பொப்போ சொல்லறேம்ப்பா.”  சிரித்துக் கொண்டே ஒடுகிறாள் மினாட்சி.

    சுந்தரத்தின் மனம் ஐந்தாண்டுகள் பின்னே செல்கிறது.  மனைவி மரணப் படுக்கையில்.  அவன் கையைப் பிடித்துக் கொண்டு சன்னக் குரலில் கெஞ்சுகிறாள், “நாளெக் கடத்தாமெ என் அண்ணன் மவன் மதியழகன் கையிலெ நம்ம பொண்ணெப் புடிச்சுக் கொடுத்துடுங்க.  அதான் அவளுக்கு வாள்க்கெ பூரா காவலா இருக்கும்.”  கண்களைத் துடைத்தபடி, “சரி சரி” என்கிறார் அவர்.  அவளும் கண்களை மூடினாள் நிரந்தரமாய்.

    கொடுத்த வாக்கெக் காப்பாத்த வாணாம் சுந்தரம்?  அதனால தான் மீனாட்ச்சி “வாணாம்பா”ன்னு சொன்னாலும் கேக்காமெ கல்யாண்த்தெ நடத்தி முடித்தார்.

    மீனாட்சி புகுந்த வீடு சென்றடைந்தாள்.  வீடு சிறிய ஓட்டு வீடுதான்.  பக்கம் பக்கமாகப் பல வீடுகள் அந்தத் தெருவில்.  விட்டிலே மதியழகனைத் தவிற வேறு யாரும் கிடையாது  அவன் ஆத்தா போய் இரண்டு வருடங்களுக்குள்ளேயே அப்பனும் போய்விட்டான்.  கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை.  தனிக் கட்டை அவன்.

    மதி சுய தொழில் செய்பவன்.  வீடுகளுக்கு வெள்ளை, பெயின்டு அடிப்பவன்.  காலை எட்டு மணிக்குக் கிளம்பிப் போனால் இரவு ஒன்பது மணிக்கோ பத்து மணிக்கோதான் திரும்புவான், தனியாக அல்ல உடலுக்குள்ளே சில பாட்டில்கள் சாராயத் தண்ணியோடு.

    மணமாகி ஒரு வாரம் கழிந்தது.  வாசலில் வந்த மல்லிகைப்பூவில் இரு முழம் வாங்கி வீட்டில் இருந்த ஒரே சாமி படத்துக்கு ஒரு முழம் வைத்துத் தானும் வைத்துக் கொண்டாள் தலையில் மிச்சத்தை மீனாட்சி,.

    இரவு வந்த மதி கத்தினான் வீட்டிற்குள் காலடி வத்ததும், “என்னடீ இது வீடு பூரா பொண நாத்தம்?”

    “மல்லிகெ நல்லா இருந்தீச்சு வாசமா இருக்குமேன்னு நாந்தான் வாங்கினேன்.”

    “மல்லிகெயுமாச்சு மண்ணாங் கட்டியு மாச்சு. இதெப் பாகுறப்போல்லாம் எங்க ஆத்தா நெப்புதான் வருது.  அவொ மஞ்சளோடெ போய்ட்டான்னு மல்லிகெப் பூவெ மாலெ மாலெயா வாங்கி சாத்தி இருந்தாங்க. தூக்கி எறிடீ வாசல்லே.”, என்று கத்தினான் மதி எட்டு வீட்டிற்குக் கேட்கும் படியாக.

    கண்களில் இருந்து வழிந்த நீரைத் துடைத்தபடி தலையிலும் படத்திலும் இருந்த மல்லிகைப் பூ சரத்தை எடுத்து வாசலில் வீசினாள் மீனாட்சி.

    வீட்டில் தனிமையில் வாடிய மீனாட்சி தன்னுடன் கொண்டு வந்திருந்த சுருதிப் பெட்டியை வைத்துக் கொண்டு தான் கற்ற சில பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பாள் தன் பொழுதைப் போக்கிட.  தான் பாடுவதை சுவர்கள் தான் கேட்டுக் கொண்டிருக்கின்றன என்று எண்ணிவந்த மீனாட்சிக்கு ஒரு அதிர்ச்சி.

    ஒரு நாள் அவள் பாடிக் கொண்டிருந்த போது ஜன்னலருகே ஒரு உருவம் நகர்ந்தது போல் தெரியவே வாசல் கதவைத் திறந்து பார்த்தாள்.  அங்கு ஒரு பத்து பன்னிரெண்டு வயதுள்ள சிறுவன் நின்று கொண்டிருந்தான்.

    “யாரு நீ?  எதுக்கு எங்க வீட்டு ஜன்னல் கிட்டெ நிக்கிறெ?”

    “அக்கா எம் பேரு பாலு.  பக்கத்து ஊட்டுலெதான் இருக்கேன்.  எனக்கு பாட்டுன்னா ரொம்பப் புடிக்கும்.  எங்கெ பாட்டு வந்தாலும் நின்னு கேட்டு கிட்டு இருப்பேன்.  எங்கூடப் படிக்குற பசங்களெல்லாம் என்னெ ‘ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் வந்திடுச்சிடா’ ம்பாங்க.  தினோம் நீங்க பாடும் போது வாசல்லெதான் நின்னு கேட்டுகிட்டு இருப்பேன்.  இன்னிக்கித்தான் இவ்வொளோ நல்லாப் பாடுறாங்களே யாரு பாடுறதுன்னு பாக்கலாம்னு சன்னல் வழியே எட்டிப் பாத்தேன். தப்பு தாங்கா.  நீங்க சின்னஞ்சிறு கிளியேன்னு ஒரு பாட்டு பாடினீங்களே அதெ இன்னோரு வாட்டி பாடுங்க அக்கா.  அதெக் கேக்குற போதெல்லாம் என் செத்துப் போன அக்கா ஞாபகம் வரும்.  கண்ணுலெ தண்ணி தானா வரும்.  ஆனாலும் அந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் புடிக்கும்.”

    “சரி பாடறேன்.  வா உள்ளெ வந்து ஒக்காரு”, என்று சொல்லியபடி சுருதிப் பெட்டியை மீண்டும் இயக்க ஆரம்பித்தாள் மீனாட்சி.

    “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா” என்று மீனாட்சி ஆரம்பித்த உடனேயே கண்கள் குளமுடைக்க தலையைத் திருப்பிக்க் கொண்டான் பாலு.  அழுவது மீனாட்சிக்குத் தெரியக் கூடாது என்ற எண்ணமோ என்னவோ தெரியவில்லை.  அப்படியே திரும்பிய தலையை ஒரு 360 டிகிரி சுற்றி வீட்டின் சுவர்களை ஒரு நோட்டம் விட்டான்.  ஆங்காங்கே காகிதத்தில் வரைந்து ஒட்டப் பட்ட ஓவியங்கள்.  ஒன்றை விட ஒன்று அழகு.

    அமுத கானம் வந்து கொண்டிருந்தது மீனாட்சியின் வாயில் இருந்து.

    “உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில்

     உதிரம் கொட்டுதடி

    என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா

    என்னுயிர் நின்னதன்றோ?”

    என்று மீனாட்சி பாடியபோது பாலுவின் நெஞ்சில் உதிரம் கொட்டாததுதான் பாக்கி.  அவன் கண் முன்னே படுக்கையில் அவன் அக்கா, பேச இயலாத நிலையில்.  அவன் கைகளை அவளருகே நீட்ட மெல்ல முயற்சி செய்து அவன் கைகளைத் தொட்டாள்.  இருவர் கண்களிலும் கண்ணீர்.  அதுதான் அவர்கள் கடைசியாகப் பேசிக் கொண்ட மவுன வார்த்தைகள்.

    பாட்டு முடிந்தது.

    நினைவுகளை மாற்ற எண்ணி, பாலு கேட்டான், “அக்கா இதெல்லாம் நீங்க வரெஞ்சதா?”

    “ஆமாம். எனக்குப் போது போகலேன்னா படம் வரைவேன்.  இல்லேன்னா குட்டி குட்டி கதெய்ங்கெ எழுதுவேன்.”

    “கதெ கூட எழுதுவீங்களா?  பத்திரிகைகள்லெ ஒங்க ஓவியங்களெ, கதெய்ங்களெப் போட்டதுண்டா அக்கா?”

    “போடலாந்தான்.  யாரு அனுப்பறது?”

    “அக்கா எங்கிட்டெ குடுங்கக்கா.  நான் நம்மூர்லெ இருக்குற பத்திரிகெ ஆபீசுலெ கொண்டு சேக்குறேன்.”

    ஒரு வாரம் கழிந்தது.  ஒரு சனிக்கிழமை.

    கையில் ஒரு வாரப் பத்திரிகையை வைத்துக்கொண்டு மூச்சிறைக்க தாழ்ப்பாள் போடாதிருந்த கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்த பாலு கத்தினான், “அக்கா ஒங்களோட படமும், கதெயும் இந்த வாரம் வந்துருக்கக்கா ” என்று.

    வேலைக்குத் செல்லாமல் வீட்டில் படுத்திருந்த மதி கத்தினான், “எவண்டா அவன் எனக்குப் புதுசா மொளெச்ச மச்சான்?  நான் ஊட்டுலெ இல்லதபோது ரெண்டு பேருமா கொஞ்சிக் கும்மாளம் அடிக்கிறீங்களா?”

    பேச்சோடு நிற்கவில்லை மதி.  எழுந்து பளார் என்று பாலுவின் கன்னத்தில் அறைந்தான்.

    “சின்னப் பையனைப் போய்…” சொல்ல வந்ததை பூராவுமாகச் சொல்லி முடிக்க வில்லை அவள்.  மீனாட்சியின் கன்னத்தில் விழுந்தது அடுத்த அறை.

    “என்னடி? சின்னப் பையன் கேக்குதோ ஒனக்கு?  நான் கெளவனாயிட்டேனோ?”

    பாலு ஒன்றும் பேசாது வெளியே சென்றான்.  மீனாட்சியும் ஒன்றும் பதில் பேசவில்லை.  குடிகாரனிடம் நியாயமா பேச முடியும்

     மறு நாள் காலை ஏழு மணிக்கு எழுந்த மதி பல் துலக்கி விட்டு “ஏய் மீனாச்சி டீ கொண்டாடி நான் வேலெக்கு போவணும்” என்றான்.  ஐந்து நிமிஷம் ஆயிற்று.  மீனாட்சியைக் காணோம்.

    சமயல் அறைக்குள் சென்று பார்த்தான்.  அங்கும் அவளைக் காண வில்லை.  பக்கத்து வீட்டு வாசலில் நின்று கத்தினான், “ஏய் பாலூ வாடா வெளியே”, என்று.  பாலுவின் அம்மா வந்து சொன்னாள் “பாலு காலெலெயே வெளிலெ கெளம்பிப் போயிட்டானுங்களே.”

    “எங்கெ போனான்?”

    “சொல்லீட்டு போகலீங்களே.”

    ‘அவங்கூட ஓடிப் போயிருப்பாளோ?  இருக்காது.  எங்க போயிருக்கப் போறா களுதெ.  அப்பன் ஊட்டுக்குப் போயிருப்பா.  ராவிக்கு வந்துருவா.  நாம போவலாம் வேலெக்கு’ என்று மனதிற்குள் சொல்லியபடி வீட்டைப் பூட்டி சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டுக் கிளம்பினான்.

    இரவு மதி வீடு திரும்பியபோது வீடு பூட்டியபடி இருந்தது.  பக்கத்து வீட்டில் இருந்து சாவியை வாங்கிக் கொண்டு பூட்டை திறந்து ஊள்ளே சென்றான்.  வயிற்றில் பசி கொல்ல அடுப்பங்கரைக்குச் சென்றால் அங்கு பாத்திரங்கள் எல்லம் கவிழ்த்தபடி இருந்தன.  களுதெ வரட்டும்.  “நாளெக்கி அவளுக்கு வெச்சுக்கறேன் கச்சேரி”, என்றபடி தரையில் படுத்தான்.

    மறு நாள் காலை வீட்டுக் கதவை யாரோ தட்ட, மதி கதவைத் திறக்க, வாசலில் இரு போலீஸ்காரர்கள்.  அவர்களில் ஒருவர் கையில் இருந்த கடிதத்தை மதியிடம் நீட்டி, “நேத்து கடற்கரைலெ ரெண்டு பாடி ஒதுங்கீச்சு. ஒண்ணு சுமார் அம்புது வயசு ஆம்பிளெ.  இன்னோணு பதினாறு, பதினேளு வயசுப் பொண்ணு.  அக்கம் பக்கத்துலெ விசாரிச்சதுலெ இந்தப் பொண்ணு இந்த ஊட்டுலெதான் இருந்தீச்சுன்னு சொன்னாங்க. இதெப் படிச்சுப் பாருங்க” என்றார்.

    கடிதத்தை வாங்கிப் படித்தான் மதி.

    “நான் எண்ணியபடி வாழத்தான் சுதந்திரம் இல்லை எனக்கு.  சாகவுமா இருக்காது அது எனக்கு?  என்னை பிறர் கண் படாதபடி வைத்து, விஷமென மனம் நோக வார்த்தைகளைக் கக்கி, உடல் நோக அடித்து வளர்த்த என் புருசனின் கைகளுக்கு காப்புகள்தான் போட வேண்டும்.  நானும் அப்பாவும் செல்கிறோம் இவ்வுலகை விட்டு. இப்படிக்கு மீனாட்சி”.

    கடிதத்தைப் படித்த மதி, “அடிப்பாவீ, இப்படிப் பண்ணீட்டெயெடி” என்று கத்தியபடி ஓடப் பார்த்தான்.  அவனைத் தாவிச்சென்று பிடித்த போலீஸ்காரர், “நான் போடுறேன் காப்பு ஒங்க கைக்கு.  இ.பி.கோ. செக்ஷன் 306ன் கீழெ கேசும் ஏற்கெனவே பதிவு பண்ணி வெச்சிருக்காரு இன்ஸ்பெக்டர் ஐயா” என்றபடி மதியை போலீச் வண்டியில் ஏற்றினார்.

    தெருக் கோடியில் இருந்த பூங்காவில் வானொலியில் டி.கே. பட்டம்மாள் பாடிய

     “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

     ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்

    என்று ஆடுவோமே”

    என்ற பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது.

    மதியழகன் என்று அழகாகப் பெயர் வைத்தார்களேயொழிய அவன் மதி அழகில்லாமல் போய் விட்டதே என்ன செய்ய?  பெயர்வைக்கும் போது அவன் குணம் எப்படி இருக்கும் என்று தெரியாதே.

    என்று வரும் நாட்டுக்கு உண்மை சுதந்திரம்

     இந்த சாராயக் கடைகள் தானோ நிரந்தரம்

     

    Share
  • த்ரில்

    கோதை நாராயணன் 

    “ஏய்  உன் பட்டிக்காட்டு மச்சான் வந்துட்டாண்டி ….”

    “வாட் நான்சென்ஸ்… இன்னொரு தடவை என்னோட மச்சான்னு சொன்னீங்க நடக்கிறதே வேற….”

    “ஏண்டி நீ ப்ரொபசர் பொண்ணு அப்டிங்கறதுக்காக ஒன்லி ஃபார் சிட்டி பாயிஸ் அப்டின்னு ரூல் இருக்காடி… அவன் உன் சொந்த காரன் வேற…. “தோழிகள் மேலும் கலாய்க்க…

    “ஐயோ…. ஸ்டாப் திஸ் சில்லி திங்… ரித்திகா உண்மையிலேயே டென்ஷன் ஆக ஆரம்பித்தாள் .

    அவனும் அவன் மூஞ்சியும், ஐய…பேரப் பாரு துரைப்பாண்டி… அம்மாவை சொல்லணும் என்னமோ நன்றி கடனாம், அதுக்கு வேற கல்லூரியில் சீட் வாங்கி கொடுத்திருக்கலாமே… இப்டி நான் படிக்கிற,அதுவும் என் டிபாட்மெண்டெ… ஐயோ ஒவ்வொரு நாளும் ப்ரண்ட்ஸ் அடிக்கிற கொட்டம் தாளல… இதுக்கு ஒரு முடிவு கட்டணும்… தீர்மானித்தபடியே வகுப்புக்கு சென்றாள் .

    ப்ரொபசர் மல்லிகாவின் புதல்வி ரித்திகா, சிறு வயதிலேயே ரித்திகாவின் அப்பா பரலோக பதவி அடைந்து விட்டதால், தனி பெண்ணாக போராடி முன்னிலைக்கு வந்தவர் மல்லிகா. அப்படி அவர் கஷ்டப்பட்ட காலங்களில், மேல்படிப்பிற்கு பணம் கட்ட வழி இல்லாத ஒரு காலகட்டத்தில் பணம் கொடுத்து உதவியவராம் மயில்சாமி தாத்தா. அதற்கு நன்றி கடனாக தான் அவருடைய மகன் வழி பேரன் துரைப்பாண்டிக்கு, தான் வேலை பார்க்கும் அதே கல்லூரியில் சீட் வாங்கி கொடுத்தார். கிராமத்திலேயே  பிறந்து வளர்ந்து, பள்ளிப் படிப்பையும் முடித்தமையால் துரைப்பாண்டி இங்கு நகரத்திலேயே பிறந்து வளர்ந்து நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் தன் சக தோழர்களுக்கு நடுவில் அல்லோலபட்டுக் கொண்டிருந்தான்.

    மறுநாள் கல்லூரி சுற்றுலா செல்ல அனைவரும் ஆயத்தப்பட்டு கொண்டு இருந்தார்கள். அனைவர் மனதிலும் உற்சாகமும், குதூகலமும் …..

    ரித்திகாவும் தன் தோழிகளுடனும்,தோழர்களுடனும் அமர்க்களப்படுத்தி கொண்டு இருந்தாள். ப்ரொபசர் என்பதால் மல்லிகாவும் வேறு சில பேராசிரியர்களும் என ஒரு பெரிய படையே கிளம்பியது. மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் என இரண்டு பேருந்துகள் கிளம்பின .

    மல்லிகாவின் பைகளை கொடுக்க வந்த ரித்திகா மாணவர்களின் பேருந்திலேயே இருக்கும்படி ஆயிற்று. ரித்திகாவுக்கு அம்மாவின் மேல் ஒரே கோபம் .

    “போம்மா ….உன்னால தான் லேட் …”

    “சரி இப்போயென்ன ரித்தி… அடுத்த நிறுத்தத்தில் நீ இறங்கி மாறிக்கோ….”

    அவருக்கு தெரியாது அல்லவா அடுத்த நிறுத்தம் வரப்போவதே இல்லை என்று.

    “ப்ச்” என சலித்தபடியே தன் மாணவ தோழர்களுடன் போய் அமர்ந்து கொண்டாள் .

    அனைவரும் கை தட்டி பாட்டு பாடிய படியே பேருந்து சென்று கொண்டிருந்தது.

    “ஏலே …”

    “ஏ …துரைபாண்டி …!” மாணவர்கள் கிண்டலாக இப்படி தான் அழைத்து கொண்டிருந்தார்கள். இங்கும் அங்குமாக அவர்கள் இழுப்புக்கெல்லாம்  சிரித்தபடியே சென்று கொண்டிருந்தான்.

    ரித்திகாவுக்கு தமாசாக இருந்தது அவனைப் பார்க்க……கை தட்டி துரையை அழைத்தாள்.

    வேகமாய் வந்து நின்றான்.

    “போய் …பின்னாடி ராஜேஷ் கிட்ட வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வா ….”

    “சரி”யென …வெட்கமாய் சிரித்தபடியே சென்றான்.

    “கொடுமைடா சாமி” என முணுமுணுத்துக் கொண்டாள்.

    போன வேகத்தில் இல்லையென வந்தவனை …ப்ச் … என எரிச்சலாய் முறைத்து விட்டு தானே எழுந்து பின் சீட்டிற்கு சென்றாள்.

    ரித்திகாவை கண்டதும் சில ஆல்ஹகால் பாட்டில்கள் மறைக்கப்பட்டன…

    “என்ன ரித்தி ….?”

    “இல்ல …நானும் அப்போதிலிருந்து பார்த்துக்கிட்டு இருக்கேன், எல்லோரும் அப்பப்போ பின்னாடி சீட்டுக்கு வந்துட்டு போறீங்களே… அதான் நானும் வந்தேன்…”

    அசட்டு சிரிப்பு சிரித்தபடியே “இதையெல்லாம் கண்டுக்காத ரித்தி… உனக்கு தெரியாதாயென்ன?” — இது ராஜேஷ்.

    மறைக்கப்பட்ட பாட்டில்களை பார்த்த ரித்திகா, “ஐயோ! கர்மம் கர்மம்! ஏண்டா, இன்னும் நாம பார்க்க வேண்டிய இடத்தை ரீச் பண்ணவே இல்ல … அதுக்குள்ளவா ?”

    “இதெல்லாம் ஒரு த்ரில் ரித்தி… காலேஜ் டூர் அதிலும் இறுதி ஆண்டு ஒரு த்ரில் வேண்டாமா?” — இது ரவி.

    “ஒவ்வொரு நிமிஷத்தையும் என்ஜாய் பண்ணனும் ரித்தி” — இது ரிஷி.

    “அங்க முன்னாடி உங்க மாம் பிளஸ் மேம் இருக்கிறதால இப்டி பின்னாடி வந்துட்டு போறோம்” –அரவிந்த் கிண்டலாக.

    “ம்….அதுவரைக்கும் சந்தோஷம்” எனக் கூறி சிரித்தபடியே ரித்திகா தன் இருக்கைக்கு வர திரும்பிய கணப்பொழுதில் அது நடந்தது.

    எதிரே வந்த லாரியின் மேல் இவர்களது பேருந்து மோதுவதிலிருந்து காப்பாற்ற அருகிலிருந்த மரத்தில் லேசாக மோதி டிரைவர் வண்டியை நிறுத்த, நின்று கொண்டிருந்தமையால் ரித்திகாவால் சுதாரிக்க முடியாமல் போக, உடைந்த கண்ணாடி ஒன்று அவள் தோளில் பலமாக பதம் பார்க்க, இரத்த வெள்ளத்தில் மயங்கினாள் ரித்திகா.

    கூக்குரல் எடுத்து முதலில் கத்தி பின் நிலைமையை உணர்ந்த அனைவரும் படபடவென இறங்கினார்கள். மாணவர்கள் என்பதால் வேக வேகமாக செயல்பட்டார்கள்.

    மல்லிகா சத்தமாக அழ ஆரம்பித்தார் .”ஐயோ ரித்தி… கண்ணை முழிச்சு பாருடி…”

    “மேம்… டோண்ட் ஒரி மேம்… பக்கத்துல தான் ஹாஸ்ப்பிடல்… சீக்கிரம் போய்டலாம்”

    “டே ய்! வாங்கடா சீக்கிரம்”

    ஆம்புலன்ஸ் வரவழைக்கப் பட்டு அனைவரும் ஹாஸ்ப்பிடல் வந்து சேர்ந்தனர்.

    எமர்ஜென்சி பிரிவுக்கு அனுமதிக்கப்பட்ட ரித்திகாவை சோதித்து விட்டு வெளியே வந்த டாக்டரை அனைவரும் சூழ்ந்தனர்.

    அழுதபடியே மல்லிகா,”டாக்டர் ……..?”

    “நத்திங் டு ஒர்ரி… மயக்கம் இன்னும் கொஞ்ச நேரத்துல தெளிஞ்சுடும்… ஒரு மைனர் ஆபரேஷன் தோளில் பண்ணனும்… இரத்தம் ரொம்ப வெளியேறி இருப்பதால் உடனடியாக இரத்தம் தேவை… அதற்கு பிரச்சனை இருக்காது இல்​லையா…?”

    “பிரச்சனை இல்லை டாக்டர் அதற்கு என் மாணவர்கள் இவ்ளோ பேர் இருக்கிறார்கள் …” என திரும்பி தன் மாணவர்களை பார்த்தார்.

    ‘த்ரில்லில்’ ஈடுபட்டிருந்த அத்தனை மாணவர்களும் மல்லிகாவை எதிர் கொள்ள முடியாமல் திகைத்து பின்வாங்க, “நான் தருகிறேன் டாக்டர் என் இரத்தத்தை” எனக் கூறிய துரைப்பாண்டியின் குரல் மயக்கதிலிருந்த ரித்திகாவின் காதுகளுக்கு உயிராக ஒலித்தது.

    Share
  • தன்னைச் சுடும்!..

    ஜெயஸ்ரீ ஷங்கர்

     

    ஹேய்….இங்க பாரேன் கிரி….! மூணு மாசக் குழந்தையைக் கூட இந்த ‘மாண்டசரி ஸ்கூல்ல’ சேர்த்துக்கறாளாம். வெரி நைஸ்…இல்லபா …நல்லவேளையா இப்ப ..நம்ம கீட்ஸு க்கு நாளையோட அவன் பொறந்து நாலாவது மாசம் முடியப் போறது ..இன்னி வரைக்கும் இந்த ஹோர்டிங் அட்வெர்டைஸ்மென்ட் என் கண்ணுலயே படல பார்த்தியா..? டூ யு நோ திஸ் பிஃபோர் ரா….?

    நோ….பார்…….!

    தெரியாதுங்கறியா….? இல்ல ‘நோ பார்’னே சொல்றியா..

    இல்ல பார்கவி தெரியாதுன்னு சொல்றேன். நானும் உன்கூட சேர்ந்து இப்பத்தான் இதைப் படிக்கறேன்..

    யூ…சோம்பேறி …டெய்லி இந்த வழியாத் தானே வரே நீ…அதெப்படி உன் கண்ணுலேர்ந்து இவ்ளோ பெரிய ஹோர்டிங் தப்பிச்சது ?

    இதெல்லாம் உங்க கண்ணுக்குள்ள மட்டும் தான் சிக்கும் ….நான் பாட்டுக்கு ரேடியோ மிர்ச்சி கேட்டுக்கிட்டு எனக்கு முன்னாடி யார் வண்டி ஓட்டறா..? ஏதாவது அம்ச ஃபிகர் கண்ணுல மாட்டாதான்னு டைம் பாஸ் சைட் அடிச்சுண்டு இருப்பேன்..போயும் போயும் இதெல்லாம் யாருக்கு வேணும்? நான் தனியா வெளில வந்தாச்சுன்னா அவ்ளோ தான். சென்ட் பெர்செண்ட் பாச்சலர் ரா…!

    அதே .தான் நானும் திங் பண்ணேன்…உன்னைப் பத்தி….நீயே அதை அக்செப்ட் பண்ணீட்டே…ஹேய் மிஸ்டர் கிரி….நீ தான் மிஸஸ் பார்கவியாகி ரெண்டு வருஷமாயாச்சு….அதுக்கு அடையாளமா..?

    உன் கழுத்துல தாலி தொங்கலை….!

    ம்கும்….உன் காதுல கடுக்கண் மின்னறது மச்சான்….மண்டைக்கு சூடு போட்டுக்கோ சொல்லிட்டேன்….ஒழுங்கா ஆபீஸ் போனமா….வேலையை மட்டும் பார்த்தோமா…பார்கவிக்கும், கீட்சுக்கும் பிடிச்சதை வாங்கித் தந்தோமான்னு நல்ல பையனா லட்சணமா சமத்தா நடந்துக்கணம்…..சரியா….காரை ஒட்டிக் கொண்டிருந்த கிரியின் காதைத் திருகி அழகு காட்டினாள் பார்கவி.

    அங்க பாரேன்… பார்….அந்தப் பொண்ணு எப்படி பைக்குல அவனோட ஒட்டிக்கிட்டுப் போறாள்னு….நீயும் இருக்கியே….ஆயிரம் சொல்லு பைக் பைக்கு தான் கார் ….கார்…தான். இல்லியா பார்….!

    நீ திருந்தவே மாட்ரா ..! உன்னோட லொள்ளும்…ஜொள்ளும் ..

    என்னோட கவச குண்டலங்கள் மாதிரி…!

    வீட்டுக்கு வா…அம்மா காதுல போட்டு வைக்கிறேன்…..உன்னோட திருவிளையாடலை….! உங்கம்மா பண்ற அர்ச்சனைக்கு மட்டும் தான் நீ அடங்குவே..!

    வேண்டாண்டி…பார்….என் பாவமான மூஞ்சியைப் பாரேண்டி ..! அம்மாவுக்கு, ஆரம்பிச்சா நிறுத்தத் தெரியாதுன்னு உனக்கே தெரியுமே.

    .சரி.சரி…ஜோக்ஸ் அபார்ட்…..இப்ப விஷயத்துக்கு வா……நம்ம கீட்ஸுக்கு நல்ல ஸ்கூல் கிடைச்சாச்சு…நாளைக்கே போயி விசாரிக்கணம்….அட்ரெஸ மெசேஜ் பண்ணி சேவ்ல போட்டு வெச்சுக்கோ.

    கஷ்டம் கஷ்டம்..இவன் பொறந்து வெறும் நாலே மாசம் தானே ஆறது….அதுக்குள்ளே உனக்கு என்னாச்சு பார் .? இவ்ளோ அவசரப் படறே. அட…நான் தான் மறந்தே போய்ட்டேன்….நீ தான் ஒன்பது மாசம் முடிஞ்சதுமே ஹாஸ்பிடல்ல ரூம் போட்டு, இன்னிக்கு இந்த நட்சத்திரத்துல தான் என் குழந்தை பொறக்கணும்னு அடம் பிடிச்சு சிசேரியன் கேஸாச்சே.உன் கிட்ட என் பருப்பு வேகாது…..!.

    ஆஸ்பத்திரி வாசல்ல நாதஸ்வரம் ஏற்பாடு பண்ணி வெச்சு குழந்தை பொறந்த உடனே வாசிக்க சொல்லியிருந்தேனே அதை நீ பாராட்டவேயில்லை…கிரி ….!

    ஆமாமா…..அதான் குழந்தை பயத்தில், பிறந்ததும் இன்குபேட்டர்ல போய் படுத்துண்டான்…இதெல்லாம் என்னமோ…தெரியலை….நீ மட்டும் தான் அப்படியா இல்லை உன் குடும்பத்துல வேற யாராச்சும் இப்படி மரை கழண்ட கேஸுகள் இன்னும் இருக்கா…?

    உனக்குத் தெரியாதா….? இதெல்லாம் கூட வாஸ்து மாதிரி தான்…இப்பல்லாம் இதெல்லாம் ஃபேஷனாவே ஆயாச்சு.. இப்படில்லாம் பண்ணாதவா தான் குறைவு.

    நான் இதுல ஜீரோ….பட் நோ..பெயின் ……நோ கெய்ன்டி பார்….!

    ம்கும்…நோ பெயின் பட் கெய்ன்..கீட்ஸ்…!

    நான் உன்ன மாதிரி..என்னை மாதிரியெல்லாம் நம்ம குழந்தையை வளர்க்க மாட்டேனாக்கும். எனக்குன்னு ஒரு ப்ளான். என் கசின் சிஸ் திவ்யா தெரியுமா.?..ஞாபகம் இருக்கா?

    ம்ம்….அந்த பரட்டைத் தலை…..அச்சச்சோ….அந்த பாப் தலைவி…!

    அது…..! அவள்….குழந்தை வயித்தில இருக்கும்போதே அதுக்குன்னு எதோ ஒரு கிளாசுக்கு போயிருக்கா…அதனாலத் தான் அவ குழந்தை பிரேமுக்கு ஒரு வயசு தான் ஆறது…அதுக்குள்ளே புத்தகத்துல இருக்கும் அத்தனை படத்தையும் ஐடெண்டிஃபை
    பண்ணி டக்கு டக்கு ன்னு சொல்றானாம். இவளுக்கு ரொம்பப் பெருமையா இருக்காம்…போன வாரம் கூட ஃபோன் பண்ணிச் சொல்லி சந்தோஷப் பட்டாள் .

    ரொம்ப முக்கியம்….! இல்ல…..இல்ல….பிரேம் இப்பவே நம்ம கீட்ஸ் க்கு வில்லனாயிட்டானா..? ன்னு.

    என்ன நீ கிரி…..நம்ம கீட்ஸ் கூட அவனை மாதிரி வரவேண்டாமா…? அதுக்குத் தான் இந்த ஸ்கூல்.

    இந்த விஷயத்தில் நீ அவசரப் படாதே பார்…! அம்மாட்டயும் கேட்கணும்..அவாளுக்கு இதிலெல்லாம் நம்பிக்கையே இருக்காது நீ வேணாப் பாரேன்……எவனோ காசு பிடுங்க போடற ஐடியாவில் நீங்க முதலீடு செய்யாதேங்கோன்னு சொல்வா.

    ஆமாமா…அப்டித் தான் சொல்வா…நான் சொல்ற எதுக்கு உங்கம்மா உடனே அப்படியா சரின்னு சொல்லிருக்கா..?அதெல்லாம் கேட்டுண்டு இருந்தா நம்ம குழந்தை கடைசி பெஞ்சுல கண்ணைக் கட்டிண்டு உட்காரணம், பரவாயில்லையா..? உங்களுக்கு வேணா பரவாயில்லைன்னு இருக்கலாம்….என்னால முடியாது.ஐ வில் மேக் ஹிம் தி பெஸ்ட் கிட் …! உலகம் எவ்வளவு வேகமா போறது தெரியுமா? அதுக்கேத்த வேகம் இருந்தாத் தான் வர காலத்துல பிழைக்க முடியும்.

    வீட்டுக்குள் போனதும் என்ன மாதிரியான வாக்குவாதம் நடக்கப் போறதோ….இப்பவே மனத்தில் 70mm அளவுக்குத் திரை விழுந்து அதில் பார்கவி ஃபுல் ஸ்க்ரீனில் முறைத்துக் கொண்டு தெரிந்தாள் . அதை ஜூம் அவுட் பண்ணுவதற்குள் வீடு வந்து விட்டது.

    காரைப் பார்க் செய்து விட்டு, ஹேய்….கமான் பார்…..பி ரிலாக்ஸ்ட்….இங்கேர்ந்தே மூஞ்சியைத் தூக்கி வெச்சுக்காதே….அம்மா கண்டு பிடிச்சுடுவா…! ஒ கே. கூல் பேப்..கொஞ்சம் சிரியேன் .

    எனக்குத் தெரியாதா..? உங்கம்மாக்கு உடம்பெல்லாம் கண்ணுன்னு..இதுக்கொண்ணும் குறைச்சலில்லை…..ஈஈஈஈ ……போதுமா…?

    அது சரி…ரொம்ப வாராதே..! ரொம்ப ஜாஸ்தி….கொஞ்சம் குறைச்சுக்கோ பரவாயில்லை ‘சின்ன இ’ யே…போதும்.

    நான் என்ன இங்க ஈயாப் பிடிக்கறேன்….’சின்ன ஈ’ போதும்…வெ வெ வெ வெ ..கிரியைப் பார்த்து அழகு காட்டினாள்…இங்க பாரு .அம்மாக்கிட்ட எனக்கு நீ சப்போர்ட் பண்ணிப் பேசணம் ..புரிஞ்சுதா? நான் என் குழந்தைக்கு எது செஞ்சாலும் அவன் நல்லதுக்குத் தான் செய்வேன்.

    அது சரி…..எல்லாருக்குமே அப்படித்தான் குழந்தை மேல பாசம் உண்டு பார்.

    யார் இல்லைன்னா…..அப்டி இருந்தால் எனக்கு யார்ட்டயும் இதுக்காக கெஞ்சவே வேண்டாமே..நாளைக்கே அந்த ஸ்கூல்ல சேர்த்துடலாம்….இல்லையா?

    வீட்டுக்குள் நுழையும் வரை பேசிக் கொண்டே செருப்பைக் கழற்றி விட்டு, உள்ளே நுழைந்ததும்,

    ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டே ‘சரவணன் மீனாட்சி ‘ சீரியலில் ஐக்கியமாகி பார்த்துக் கொண்டிருந்த சுபத்ரா , ஊஞ்சலை நிறுத்தி விட்டு, ஷாப்பிங் போய்ட்டு வந்தாச்சா…? கீட்ஸ் பசிச்சு அழுதானா….முதல்ல அவனுக்கு திருஷ்டி சுத்திப் போடணம். என்றபடி ஊஞ்சலிலிருந்து இறங்கினாள் .

    ம்மா…..உன் மருமகள் சொல்வா….கேளேன்…..நம்ம கீட்ஸ்சை நாளையிலேர்ந்து ஸ்கூல்ல சேர்க்கப் போறாளாம்..

    என்னடாது கூத்தாயிருக்கு…?.பொறந்து நாலு மாசம் கூட கழியலை…இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கெல்லாம் யார் ஸ்கூலை கட்டி வெச்சுண்டு உட்கார்ந்திருக்கா . நன்னாருக்கு போ..!

    அதெல்லாம் இருக்கு. குழந்தை வயித்துக்குள்ள இருக்கும்போதே சொல்லித் தர ஸ்கூல் எல்லாம் கூட வந்தாச்சாம். பார்கவி சொல்றா. நமக்கு தான் இதெல்லாம் ஒண்ணும் தெரியலை.

    அதுக்குள்ளே ஸ்கூலாவது….கீலாவது … நான் இதுக்கு ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன். ப்ளே ஸ்கூலுக்கு போக மூணு வயசானவட்டு பார்த்துக்கலாம்.

    ம்மா…நீ கொஞ்சம் சும்மா இரேன்….கிரி அம்மாவின் வாயை அடைத்துக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்த பார்கவி,
    ஏன் நிறுத்திட்ட கிரி…நீயே அம்மாட்ட சொல்லியாச்சா..?

    இல்லையில்ல இப்பத் தான் சொல்லிண்டு இருக்கேன்.

    இதோ பார் பார்கவி…அவன் எல்லாம் சொன்னான்….ஆனா அதெல்லாம் நம்மாத்து குழந்தைக்கு இந்தக் கூத்தெல்லாம் ஒண்ணும் வேண்டாம். பொறந்து நாலு மாசம் ஆகும் குழந்தையை யாராவது ஸ்கூல்ல சேர்ப்பாளா ? இன்னும் முகம் பார்க்கவே முழுசா ஆரம்பிக்கலை.

    இப்பல்லாம் வயித்தில் இருக்கும் குழந்தைக்கே பாடம் சொல்லித் தர ஸ்கூல் இருக்கு தெரியுமா?

    அந்தக் கண்றாவியெல்லாம் நமக்கெதுக்கு? யாரோ பைத்தியம் பிடிச்சவா பண்ணினா நம்மளும் பண்ணணமா ? குழந்தைக்கு செர்லாக் கரைத்துக் கொண்டே சொல்லும் சுபத்ராவைப் பார்த்து,

    அதெல்லாம் ஒண்ணுமாகாதும்மா . கீட்ஸ் கண்டிப்பா இந்த ஸ்கூல்ல சேருவான். ஒரே வருஷத்தில் அத்தனையையும் கத்துப்பான்…நீங்களே பார்த்து அசந்து போயிடுவேள்.

    கிரிதரனை நாங்க அஞ்சு வயசுல தான் ஸ்கூல்லயே சேர்த்தோம்…அவனுக்கு என்ன படிப்பா வரலை…? அவன் அப்பா பள்ளிக் கூடம் போன வயசென்ன தெரியுமா..? பத்தோ பன்னெண்டோ…அவர் என்ன வக்கீலாகலையா?

    அது அந்தக் காலம்…நீங்க அந்தக் காலத்துலேயே இன்னும் இருந்தாக்கா நான் என்ன செய்றது? காலத்துக்கேத்தா மாதிரி மாறித் தானே ஆக வேண்டியிருக்கு. கோபத்துடன் அடம் பிடிக்கும் கீட்ஸின் வாயில் செர்லாக்கைத் திணித்தபடியே சொன்னாள் பார்கவி.

    அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் சொன்னால் கேளு. காலம் ஒண்ணும் அப்படியே தலை கீழா மாறிப் போகலை. கொஞ்சம் மாடர்னா இருக்கு..ஒத்துக்கறேன்.கட்டினவனை வாங்கோ…போங்கோ..ன்னு கூப்பிடறதிலிருந்து வா..போ..ன்னு பேசறது வரைக்கும்…மத்தபடி ஒண்ணும் பெரிய மாற்றம் இல்லை.

    நீங்க இந்த வீட்டுக்குள்ள இருந்துண்டு இவ்ளோ தான் மாற்றம்னு சொன்னா ஆச்சா?

    இல்லையே…டீவி சீரியல்ல இப்பத் தான் கேட்டேன்..சரவணனை மீனாட்சி…வாடா…போடான்னு ஏலம் போடறாளே, அதை வெச்சுத் தான் சொல்றேன். ஏன்….நம்மாத்தில் நடக்கலையா?

    இதைக் கேட்டதும், படக்கென்று குழந்தையை மடியிலிருந்து வாரியெடுத்து தோளில் சார்த்திக் கொண்டு கிண்ணங்களை தொப் தொப்பென்று கிட்சன் சிங்கில் போட்டு விட்டு விருட்டென்று படுக்கையறைக்குள் நுழைந்து கொண்டு கதவைச் சார்த்திக் கொள்கிறாள் பார்கவி.

    ஒண்ணுமே இல்லாததுக்கு இவ்ளோ கோபமா? சிவ சிவா….! இந்தக் காலத்துப் பொண்களுக்கு பேருக்கு ஆம்படையான் பேரைப் பின்னாடி வாலாட்டமா எழுதறாப்பல.முன்னால கோபிஷ்டின்னு சேர்த்தாலும் தேவலை போலத் தோணறது.

    டேய்…கிரி….நீங்க ரெண்டு பேரும் சாப்டாச்சா? வெளில வாசல்ல போயிட்டு வந்தாலே கூடவே ஏதாவது பிரச்சனையையும் சேர்த்து வாங்கீண்டு வந்தால் நான் என்ன பண்ணுவேன் ? எல்லார் சௌகரியம்…நான் சொல்லியாச்சு…கேட்டால் கேளுங்கோ…கேக்காட்டா எப்படியோ ஆகட்டும்….அறுத்தவ சொல்லு அந்த அடுக்களை முட்டும் தான் எந்த அம்பலமும் ஏறாதுன்னு தெரியும்…..இருந்தும் நான் மாமியார் பவுசு காட்டறேன் பார்…என் புத்தியைச் சொல்லணம் …அவாள்லாம் படிச்சவா….பல இடம் போறவா….வரவா……ம்ம்ம்ம்….டேய்…கிரி……பார்கவியை சாப்பிடக் கூப்பிடு. மத்தபடி அவளோட எந்த விஷயத்துலயும் நான் என் ஜலதோஷ மூக்கை நுழைக்கலை. சொல்லிக் கொண்டே வாஷ்பேசினை நோக்கிச் சென்று மூக்கைச் சீந்தி அலம்புகிறாள்.

    ம்ம்மா….போகட்டும் .விடேன்…நீ வீணா இதுல தலையிடாதே. அவளுக்கு நம்ம கீட்ஸ் ரொம்ப சின்ன வயசிலயே நிறைய படிச்சுடணம்னு ஆசைப்படறா . நான் ஏற்கனவே சொல்லிப் பார்த்தாச்சு…உனக்குத் தான் அவ குணம் தெரியுமே.

    நல்ல குணம்..!தான் பிடிச்ச முயலுக்கு மூணே காலுன்னு ….!

    கொஞ்சம் விட்டுப் பிடிச்சா சரியாயிடும்மா..!

    என்ன…தும்ப விட்டு வாலைப் பிடிக்கச் சொல்றே? நான் விடறேன் நீ பிடிச்சுக்கோ. நீயாச்சு…உன் பொண்டாட்டியாச்சு. நானா சம்பாத்திக்கறேன்…நானா காசு கட்டப் போறேன்…?

    அப்போ சும்மா இரேன்…!

    எப்பவும் நான் சும்மா இருந்தா உங்களுக்கு சந்தோஷம் தானேப்பா.

    ம்மா, பார்த்தியா கோச்சுக்கறே.

    இப்பல்லாம் உங்க காட்ல மழை…..ஜமாயிங்கோ. நான் ஏன் கோவிச்சுக்கப் போறேன்..? அந்தக் காலம் போலையா இந்தக் காலம்…அதான் இந்தக் காலத்துக்கு புதுசா கம்ப்யூட்டர் கொம்பு முளைச்சிருக்கே…!

    இந்த ஒரு வார்த்தை பச்சைக் கொடியில் , பார்கவி ‘கீட்ஸ்’ஸுக்கு அடுத்த நாளே அட்மிஷன் போட்டு விட்டாள். நம்ம கீட்ஸ் கிட்ட ஒரு போட்டோவை காண்பிக்க, அவன் எவ்வளவு உன்னிப்பா அதையே பார்த்துண்டு இருந்தான் தெரியுமா..?

    ஏதோ பெரிய விஷயமாக அதைச் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தாள்.

    ஆமா…..எல்லாம் சரி தான்..இதுக்கு அவாளுக்கு எவ்வளவு தட்சணை எடுத்து வெச்சேள் ?

    நாலு மாசத்திலேர்ந்து ஒரு வயசு வரைக்கும் இருபதாயிரம் ஃபீஸ். அதுக்கப்பறம் கூட பத்தாயிரம் ஆகுமாம்.

    பேஷ்….பேஷ்…ரொம்ப நன்னாருக்கு….முகம் பார்க்க ஆரம்பிக்கிற குழந்தைக்கு என்னத்தை அப்படி சொல்லித் தந்துடுவா? அப்போ என் பேரன் ஐஸ்டின் மாதிரியோ இல்லாட்டா அப்துல் கலாம் மாதிரியோ வரப் போறானா?

    இந்த நக்கல் தானேம்மா வேண்டாங்கறது…நிச்சயமா என்னை மாதிரியோ உங்க பிள்ளை மாதிரியோ இருக்க மாட்டான்…முகத்தில் பெருமை பொங்கச் சொன்னவள் குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள் .இவனும் ஏதாவது புதுசாக் கண்டுபிடிச்சு இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பான். அதுக்கு இப்பல்லாம் நிறைய ஆப்பர்ச்யூனிட்டி இருக்கு. இவாளுக்குத் தான் இனிமேல் நிறைய ஓபனிங்ஸ். அம்மா…இன்னைக்கு நிஜம்மா நீங்க இவனுக்கு திருஷ்டி சுத்திப் போடுங்கோ…அப்டியே எனக்கும்…! என்று சொன்ன பார்கவியைப் பார்த்து,

    அது சரி….! என்னமோடிம்மா …உன் ஆசைக் கனவு ஜெயிச்சால் நான் நல்ல மாமியார்…தான்..என்று கேலியாகச் சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைகிறாள் சுபத்ரா.

    என்னம்மா நீங்க…இதுக்குப் போயி அலட்டிகறேள். ஐம் சாரிம்மா…..கெஞ்சலான குரலில் ஐஸ் வைத்து சொல்வதைக் கேட்டதும் சுபத்ராவும் உருகித் தான் போனாள்.

    காலச் சக்கரச் சுழற்சியில் பத்து வருடங்களை முழுங்கியிருந்தது. சுபத்ரா தெய்வமாகி சட்டத்துக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள்….மென் மேலும் பதவி உயர்வில் கிரி நேரமே இல்லாமல் தவித்தான். பார்கவி கூடிப்போன பத்து கிலோவை தன் உடம்பிலிருந்து கரைக்க அரும்பாடு பட்டு டயட்டில் தவித்துக் கொண்டிருந்தாள். கீட்ஸ் மட்டும் பத்து வயது சிறுவனா அல்லது இருபது வயது வாலிபனா என்று அனைவரையும் சிந்திக்க வைத்தான்.

    கீட்ஸ்…படிச்சுட்டியா…ஹோம் வொர்க் பண்ணியாச்சா?

    ஓவர்….நத்திங் பெண்டிங். படிக்க ஒண்ணுமேயில்லை …ஐம் கோயிங் டு வாட்ச் மூவி நௌ .

    மா….இட்ஸ் ஸோ போரிங் …எனக்கு வெளில போகணும்….கார் சாவி தாயேன் ..ஒரு ரவுண்ட் போயிட்டு வரேன்..

    அய்யய்யோ வேண்டாம்டா ப்ளீஸ்….!

    ….ம்ம்ம்மா……ஐ கான்ட் டாலரேட் யூ .மாம்…நீங்க சும்மாயிருங்க ..எனக்கு இப்பவே காரை எடுத்துண்டு வெளில போகணும்…நான் போறேன்…பை….என்று துள்ளிக் குதித்து வெளியில் ஓடும் போது, பார்கவி ஆடித்தான் போவாள்.

    ஒண்ணா….ரெண்டா….பத்து வயதுப் பையனுக்கு என்ன தோணுமோ, அதெல்லாம் அவனுக்கு மூணு வயசிலயே தெரிஞ்சு போன மாதிரியும், இப்போ அவன் ஒரு காலேஜ் படிக்கிற பையனைப் போல நடந்து கொள்ளும்போது மனசு கலங்கித் தான் போனது பார்கவிக்கு.

    நாளாக நாளாக , இதுவே பெரிய தலைவலியாகிப் போனது அவளுக்கு.

    டாட்….எனக்கு ஐ போன், வேணும்….ப்ளூ ரே கேம் சிடீஸ் வாங்கிக்கறேன்…ஒரு டென் தௌசண்ட் செக் எழுதுங்கோ.

    இவன் பார்க்கும் தோரணையில், கிரியின் கை, தானாக செக்கில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விடும்.

    டாட்…எனக்கும் ஒரு பேங்க் அக்கௌண்ட், கிரெடிட் கார்ட் எல்லாம் வேணும்..ப்ளீஸ் டூ இட். ஒரு பெரிய பிஸ்னெஸ் பண்ணப் போறேன்….கேமிங்….!

    போச்சுடா…! ரெண்டு கைகளையும் தலையில் வைத்துக் கொள்வார்.

    ஸ்கூல் டீச்சர் தினசரி போன் செய்து, உங்க சன் கீட்ஸ் மத்த பசங்களைக் கெடுக்கிறான்….பர்ஸ்ட் ரேங்க் மட்டும் வாங்கினாப் போதாது…மத்தவங்களுக்கு இடைஞ்சலா இருக்கக் கூடாது..அவனுக்கு நாங்க டபிள் ப்ரமோட் பண்ணி வேற கிளாஸ்ல போடலாம்னு யோசிக்கறோம்..ஹி இஸ் ஓவர் ஸ்மார்ட்…வெரி வெரி இன்டெல்லிஜென்ட். அதான்…என்று தயங்க.

    பெருமை ஒரு பக்கம் இருந்தாலும்…..இது எங்கே கொண்டு விடுமோ என்று அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு பயந்து கொண்டே இருந்தாள் பார்கவி.

    ஒரு நாள் அவள் பயந்தது கூட நடந்தது.

    டபிள் பிரமோஷனில் இன்னும் துளிர் விட்டுப் போனது கீட்ஸ்ஸுக்கு. தன்னுடன் படிக்கும் பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுக்கப் போக, மைனர் பெண்ணின் கவனத்தைச் சிதறல் செய்கிறான் என்று அவர்கள் வீட்டிலிருந்து நாலு பேர்கள் இவர்கள் வீட்டை முற்றுகையிட்டு எச்சரித்து விட்டுப் போகையில், பார்கவிக்கும், கிரிக்கும்…கீட்ஸ்ஸுக்குமிடையே பூகம்பமே வெடித்தது.

    கடைசியில் இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் பார்கவி நீ ? நீ நினைச்சது ஒண்ணு …நடக்கறது ஒண்ணாச்சே….ஆரம்பத்தில் அம்மா சொன்னதைக் கேட்டிருந்தால்…இப்படியெல்லாம் நடந்திருக்காதோ என்னவோ.?

    கற்றுக்கொள்ளும் வயதில் அத்தனையும் தெரிந்து விட்ட நிலையில் அடுத்தது என்ன என்ற தேடலின் உச்சியில் இருந்தாலும் அங்கு அவனுக்கென்று ஒன்றுமே இல்லாதது போலவும்…உலகப் பாடத்தில் கற்றுக் கொள்ளவென்று எதுவுமே தனக்கு இல்லை என்றும் உணர்வுகளோடு நடந்தான் கீட்ஸ்.

    எப்போதும் எல்லோரையும் பார்க்கும் போதும் தனக்கு மட்டும் எல்லாம் தெரிந்து விடுகிறது என்ற ஆளுமையும் அதிகார உணர்வும் மேலோங்கிய அவனை யார் கண்டாலும் ‘திமிர் பிடித்தவன்’ பெரிய கர்வம் பிடிச்சவன்….என்றெல்லாம் பட்டம் கொடுத்து கேலி பேசுவார்கள். இவன் வருவதையும் தவிர்ப்பார்கள்.

    பட்டமும், கேடயமும், பரிசுக் கோப்பைகளும் ஒரு புறம் நிரம்பி வழிந்தாலும்…அதைத் தரை மட்டமாக்கும் நிகழ்வுகளும் கூடவே நடக்கத் தொடங்கி அவனை நிலை குலைய வைத்தது.

    அது கோபமாக வெளியேறத் துவங்கிய போது பார்கவிக்கும் கிரிக்கும் பிள்ளைப் பாசத்தைக் கடந்து ‘இவனை வைத்துக் கொண்டு சமாளிப்பது கடினம் என்று தோன்றியது’.

    பார்…இப்பப் பார்….! எவ்ளோ சொன்னேன்…அப்பவே சொன்னேன்…இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு. உலகத்தோட ஒத்துப் போகத் தெரியாமல் உன்னோட பேராசைக்கு நம்ம பையனை பலியாடாக ஆக்கி வைச்சுட்டியே..

    டாக்டரே சொல்லிட்டார். அதுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இன்ஃ பாக்ட் சின்னக் குழந்தையா இருக்கும்போதே அவன் படு சுட்டி..ஹைபர் ஆக்டிவ் சைல்ட். தெரிஞ்சுக்கோ. வாட்ஸ் நெக்ஸ்ட்….! இது இப்ப அவனை மனசுக்குள் ரொம்பப் படுத்தறதுன்னு நினைக்கறேன்.

    அவனை ஒரு சைக்கியார்டிஸ்ட்ட அழைச்சிண்டு போனால் எல்லாம் சரியாய்டும். பார்கவி சமாதானப் படுத்தினாள் .

    இப்பத் தானே பதினைந்து வயசாறது. அதுக்குள்ளே எங்க வந்து நிக்க வெச்சுட்டான் பாரேன் ? பார்.கிரி புலம்பிக் கொண்டிருந்தான்..எல்லாம் உன்னால…வந்த வினை.

    அதே சமயம் அவனைப் பாராட்டு கிரி…..அவன் ஷேர் ட்ரேட் பண்றான்….ரியல் எஸ்டேட்ல என் பேர்ல இன்வெஸ்ட் பண்ணிருக்கான். லேப்டாப் ரிப்பேர் பண்றான்…கம்ப்யூட்டர் அசெம்பிள் பண்றான்…இதெல்லாம் அவனோட பிளஸ்…தெரியுமா?
    வி ஷுட் கவுண்ட் ஹிஸ் குட் திங்க்ஸ் டூ…! எவ்ளோ அட்வான்ஸ்டா திங் பண்றான்.

    அவனுக்கு எது வேணும் எது வேண்டாம்னு நம்மால சிந்திக்க முடியலை. நம்ம நினைக்கறது எல்லாமே அவனுக்கு அவுட் டேட்டட்டா இருக்கு. இப்பவாவது உனக்கு புரியறதா? என்னால நிம்மதியா இருக்க முடியலை பார்.

    இதெல்லாம் ரொம்ப காமன் தான்…கிரி. நாம தான் இன்னும் கொஞ்சம் அவனுக்கேத்தா மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்.

    நாம பண்ணிக்கலாம்….வெளி உலகம் பண்ணிக்குமா? போடா சர்தான்னு சொல்லிட்டுப் போகும். எல்லாத்துலயும் நான் தான் டாப்பு மீதியெல்லாம் டூப்புன்னு இருந்தா, ஹௌ எனி ஒன் வில் டாலரேட் திஸ்.? இப்பக் கூட ஒரு நல்ல ஃப்ரெண்ட் இல்லை அவனுக்கு.

    நீ சொல்றாப்பல லாப்டாப், கம்ப்யூட்டர், ன்னு எல்லாத்தையும் பிரிச்சு மேயறான்…சரி தான். அதே நேரம் அவனுக்குக் கோபம் வந்தால் அதே கம்ப்யூட்டரைத் தூக்கிப் போட்டு உடைக்கிறானே. கேட்டது கிடைக்கலைன்னு தெரிஞ்சா சுவத்துல ஓங்கி குத்தி தன் கையைத் தானே காயப் படுத்திக்கறானே….எல்லாம் அவனுக்கு சாதகமா நடக்கணும்னு யோசிக்கறானே இதெல்லாம் தப்பில்லையா ? அஃப் கோர்ஸ்….அது ஜெனெடிக்னு வெச்சிக்கலாம்.

    கோபத்தில் தன் கையிலிருந்த காப்பி டம்ப்ளரைத் தூக்கி எறிகிறாள் பார்கவி.

    இத…இத….இதத் தான் சொன்னேன்…என்று கிரி சொல்லவும்

    பார்கவி ‘ஓ’ வென தலையில் அடித்துக் கொண்டு அழுகிறாள்.

    சரி…சரி….ஸாரி …அழாதே…நீ மட்டும் என்ன செய்வே.?..நாளைக்கு டாக்டர்கிட்ட போகலாம். அப்பாயின்ட்மென்ட் வாங்கிடறேன் சரியா…அவளை சமாதானப் படுத்தி விட்டுப் படுத்துக் கண்களை மூடிக் கொள்கிறார் கிரிதரன். வழக்கம் போலவே தூக்கம் அவருக்கு ‘டா டா…பை பை ‘ சொல்லிக்கொண்டு ஓடியது. எத்தனை இரவுகள் தூக்கம் போயிருக்கும்..? தூக்கம் மட்டுமா…அப்படியே தலையைத் தடவிப் பார்க்கும் போது மொழு மொழுவென்று வழுக்கைத் தலையில் விரல்கள் வழுக்குகிறது.

    அடுத்த நாள் இரவு…!

    என்னங்க மேடம் இது…இதுக்குப் போயா உங்க பையனுக்கு கவுன்சிலிங் பண்ண அழைச்சிட்டு வந்தீங்க. தயவுசெய்து உங்க வீணான கவலையை விட்டுத் தள்ளுங்க. நான் அவன்கிட்ட தனியாப் பேசிப் பார்த்த பிறகு தான் இதைச் சொல்றேன்….உங்க சன் செம ஸ்மார்ட். மூளைதான் அவனோட மூலதனம். எங்க போனாலும் பின்னிப் பெடலெடுப்பான் . டோன்ட் வொர்ரி. என்ஜினீயரிங் சேர்த்து விடுங்க…கோல்ட் மெடல அள்ளிட்டு வந்திடுவான். அப்பப்பப்பப்பா….எதைக் கேட்டாலும் டக்கு டக்குன்னு நெத்தியடியா பதில் சொல்ற பிள்ளைய கைல வெச்சிட்டு நீங்க கலங்கினா…ஐம் சாரி….உங்களைத் தான் பார்க்கறவங்க தப்பு சொல்லுவாங்க…சம்திங் ராங்ன்னு…! இப்ப இருக்குற காலத்துக்கு இவ்ளோ ஸ்பீட் ரொம்ப ரொம்ப அவசியம். உங்களுக்கு இப்பப் புரியாது. போகப் போகப் பாருங்க..!

    டாக்டர் சொல்லியனுப்பியத்தை நினைத்துக் கொண்டே கண்களை வெறுமனே மூடியபடி படுத்திருந்தாள் பார்கவி.

    நிம்மதியா தூங்குவதா…..? இவ்வளவு இண்டெலிஜெண்ட் கீட்ஸ்ஸுக்கு ஏன் அடிக்கடி விரக்தி வருகிறது…? கோபம் வருகிறது?
    வீட்டிலும் இருக்கப் பிடிப்பதில்லை…..பள்ளியில் இருக்கவும் பிடிப்பதில்லை…..மனம் அமைதியில்லாமல் அலைபாய்கிறது.
    எங்க போனாலும் தனக்கு மிஞ்சியவர் யாருமே இல்லைங்கற ஒரே எண்ணத்தில் தானே நுழைகிறான். அவனுக்குள் இருக்கும் சுபீரியர் தாட்ஸ் தான் எல்லாத்துக்கும் காரணம். அவன்கிட்ட சொல்லிப் புரிய வைக்கலாம்னு நினைச்சால்..பேசவே விட மாட்டேங்கறான். என்னன்னு சொல்லறது..?

    நாட்களும் வாரங்களும் மாதங்களுமாக ஓடி வருடங்களைக் கடத்திச் சென்றன.

    மனசுக்குள் புகுந்து கொண்டு இறங்க மறுத்த வருத்தம் பார்கவியின் வயதை இருபது வருடங்கள் கூட்டியது.சுகரும், இரத்த அழுத்தமும் கூட துணைக்கு வந்து அவளுடன் கைத்தடி போலச் சேர்ந்து கொண்டது.

    பாதி நாட்கள் வீட்டுக்கே வராமல், படிப்பையும் முடிக்காமல் கீட்ஸ், இமயமலை வரைக்கும் சென்று வந்து…மாம்….ஐ லைக் ஒன்லி ஹில்ஸ்…அதும் ஹிமாச்சல் ..நான் அங்கயே கூட போய் இருந்துக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்…..கீட்ஸ் இதைச் சொன்னதும், அவள் தலையில் இமயமலையையே ஏற்றி வைத்தது போலிருந்தது பார்கவிக்கு.

    என்னடா சொல்றே….கீட்ஸ்..? உனக்கு இப்பத்தான் முப்பது வயசாகுது….ஒரு கல்யாணம் காட்சி செய்யாமல்…குடும்பம்னு ஒண்ணு இருந்தால் இந்த மாதிரி தாட்ஸ் எல்லாம் வராது…! வாழ வேண்டிய வயசில் நீ இப்படிச் சொல்றது கொஞ்சம் கூட சரியில்லை.

    மாம்….டாட்…நீங்க தான் நான் இன்னும் சின்ன வயசா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க..பட் ….எனக்கு இந்த மெட்டீரியல் வேர்ல்ட்ல எதுவும் பெரிசா இருக்கறதாத் தெரியலை. ஐ ஹேட் எவெரிதிங். ப்ளீஸ் லீவ் மீ அலோன். ஐ கான்ட் ஸ்டே எனிமோர் ஹியர்.
    ஐ நீட் பீஸ்….அமைதி மட்டும் தான் நிரந்தரம்…அது தான் எனக்கு வேணும்.இந்த உலகம் ரொம்ப ஸ்லோ…அதனால தான் ஒரு அமைதியான இடத்தில் என்னை அமைதியாக்கிக்க பழகிக்கப் போறேன்..ஏன்னா எனக்கு இந்த மைண்ட் ஸ்பீட் பிடிக்கலை.

    இதைக் கேட்டு அதிர்ந்தே போனாள் பார்கவி. அவள் தலை தானாகக் குனிந்தது. கிரிதரன் விழிகளில் கண்ணீர் நிறைந்த பார்வை அவனது அம்மாவின் படத்தின் மேல் விழுந்தது.

    இந்த வார்த்தை தான் அவர்களை பெற்றவர்களாக அழைத்து மதித்து அவன் பேசிய கடைசி பேச்சு. அன்று தான் கீட்ஸை அவர்கள் கடைசியாகப் பார்ப்பது என்பதை அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.

    மகன் கிளம்பிப் போய் வீடு வெறிச்சென்று சூனியம் பிடித்தாற்போலிருந்தது. ஒரே நாளில் அனைத்தையும் இழந்த செல்வந்தரின் நிலை போல உணர்ந்த இருவருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்படுத்துவது போல ஒரு அழைப்பு மணி அடித்தது.

    மீண்டும் மகன் வந்து விட்டானோ….? ஓடிச்சென்று கதவைத் திறந்த பார்கவியால் நம்ப முடியவில்லை.

    அங்கு, கையில் ஆறு மாதக் குழந்தையுடன் அழகானப் பெண்றொருத்தி “ஐ ம் தீட்சா…திஸ் இஸ் கீட்ஸ்’ஸ் சன்…” சொல்லிக் கொண்டே பார்கவியைத் கடந்து வீட்டுக்குள் நுழைகிறாள்.

    Share
  • சம்பத்து – கிம்பத்து

    சு. ​கோதண்டராமன்

          “உனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் இருக்கா, கிம்பத்து? நாம ஃபோர்த் ஃபார்ம் படிக்கும்போது ஒரு நாளைக்கு எங்க ஸான்ஸ்கிரிட் வாத்யார் வழக்கம் போல மேஜை மேலே சாய்ஞ்சு தூங்கிண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து, கல்வி அதிகாரி வரார். நாங்க ஜன்னல் வழியாப் பாத்துட்டு, சார், சார், டிஈஓ வரார் சார் என்று எழுப்பினோம். மனுஷன் பதட்டமே படாமல், தஸ்மாத் னு சொல்லிண்டே நிமிர்ந்தார். இவர் நிமிர்றதுக்கும் டிஈஓ உள்ளே நுழையறதுக்கும் சரியா இருந்தது.

          “என்னங்காணும் என்னைப் பாத்த உடனே தஸ்மாத்துங்கிறீர். வெய்யறீரா, என்ன அர்த்தம் தஸ்மாத்துன்னான்னு கேட்டார் அதிகாரி.

          “தஸ்மாத் னா அதனாலேன்னு அர்த்தம்னார் இவர்.

          “அதனாலேன்னா இதுக்கு முன்னாடி ஏதோ சொல்லிக்கிட்டு இருந்தீர்னு ஆகுதே. நீங்க மேஜையிலே குப்புறப் படுத்துத் தூங்கினதைப் பார்த்தேனேன்னார் அவர்.

          “கும்பகர்ண ஏவம் நித்ராயாம் மக்னஹன்னு முதல்லே சொன்னேன். நீங்க அதை விட்டுட்டு தஸ்மாத்தை மட்டும் புடிச்சிண்டிருக்கேளேன்னார் இவர்.

          “அதுக்கு என்ன ஓய் அர்த்தம்னார் அவர்.

          “இப்படியாகக் கும்பகர்ணன் தூக்கத்திலே ஆழ்ந்திருந்தான்னு அர்த்தம்.

          “தத்ரூபமா நடிச்சுக் காட்டறீரோ, சரி, சரி போம்ன்னுட்டார் வந்தவர்.”

          “இதைக் கேளு சம்பத்து, அதே வருஷம் எங்க தமிழ் வகுப்பிலே நடந்ததைக் கேளு. தமிழ் ஐயா இலக்கண வகுப்பு நடத்திண்டிருந்தார். எனக்குத் தூக்கம் சொக்கித்து. ஐயா என்னை எழுப்பி, கிம்பத்து எழுந்திரு. நான் சொன்னது காதிலே விழுந்ததான்னார்.

          “நன்னா விழுந்தது ஐயான்னேன்.

          “தேமாங்கா, புளிமாங்கான்னா என்னன்னு விளக்கம் சொல்லு பார்ப்போம்னார்.

          “புளி மாங்காய்ங்கிறது ஆவக்காய் ஊறுகாய். தே மாங்காங்கிறது தேனிலே ஊறப்போட்டு முரப்பா பண்றதுன்னேன். பெஞ்சி மேலே ஏறுடான்னார். நான் ஏறினேன். நாலு பக்கத்து ஜன்னல் வழியாவும் பார்த்துட்டேன் ஐயா. எந்த மரத்திலேயும் மாங்கா இல்லேன்னேன். எல்லாரும் கொல்லுன்னு சிரிச்சப்பறம் எனக்கு முழிப்பு வந்தது.”

          கிழவர்கள் இருவரும் சிரித்து மகிழ்ந்தார்கள்.

          “என்னவோ கிம்பத்து, பார்க்கிலே வந்து உன்னோட பேசிண்டிருக்கிற ஒரு மணி நேரம் தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு. வீட்டிலே அந்தக் கிழவி படுத்தற பாடு தாங்கல்லே. சித்த நாழி ஒக்கார விடமாட்டா. ரேஷன் கடைக்குப் போ, எலக்ட்ரிக் பில் கட்டு, பால் கார்டு வாங்கிண்டு வான்னு வெரட்டிண்டே இருக்கா.”

          “சேலை இல்லேன்னு சின்னாயி கிட்டப் போனாளாம். அவ ஈச்சம்பாயைக் கட்டிண்டு எதிர்க்க வந்தாளாம்கிற கதையா இருக்கு. எங்காத்துக் கதையும் ஒண்ணும் கொறச்சல் இல்லே. என் பேத்தி இருக்கே மகா ராட்சசி. அப்படியே அச்சு அவதாரம் பாட்டி. சித்த நாழி உக்கார விடாது. தூக்கிண்டு அங்கே போ, இங்கே போன்னு வெரட்டிண்டே இருக்கு. குழந்தையைப் பெத்தவா ஜாலியா ஆபீசுக்குப் போயிடறா. என் ஆம்படையாளான்னா எனக்கு அடுப்பங்கரையிலே வேலை இருக்கு, சித்த குழந்தையைப் பாத்துக்கப்படாதான்னு வெரட்டறா. மத்தியானம் ஆச்சுன்னா, நான் டீவிலே சீரியல் பாக்கணும், குழந்தையைத் தூங்கப் பண்ணுங்கோன்னு உத்திரவு. அதுவானா தூளிலே படுத்துண்டு கை விடாம ஆட்டிண்டே இருங்கறது. சித்த கண்ணை அசந்தா அலறி ஊரைக் கூட்டறது குட்டிப் பிசாசு. எங்கேயாவது போய் ஒரு வாரம் நிம்மதியா இருந்துட்டு வரலாம் போல இருக்கு. நம்ம அருமை அவாளுக்கும் அப்பத் தான் புரியும்.”

          “எனக்கும் அப்படித்தாண்டா இருக்கு. திருப்பதிலே வாலண்டியர் வேணும்னு பேப்பர்லே போட்டிருக்கான். ஒரு வாரம் தான் வேலையாம். போய்ட்டு வரலாமா?”

          “சரி, போகலாம். விசாரிச்சுப் பாரு.”

          *     *     *     *     *

          “ஹலோ, திருப்பதிக்கு வாலண்டியர் வேணும்னு கேட்டிருக்கேளே, நானும் என் சினேகிதரும் வரலாம்னு இருக்கோம்.”

          “என்ன வயசாறது?”

          “ரெண்டு பேருமே அறுபத்தஞ்சு தான்.”

          “உடம்பிலே எந்த வியாதியும் இல்லியே?”

          “சுகர் பிரஷர் எதுவும் இல்லே. அம்மா பிசைஞ்சு போட்ட பழையது மகிமை. கல்லுக்குண்டு மாதிரி இருக்கோம்.”

          “சரி. பேரைச் சொல்லுங்க.”

          “என் பேரு சம்பத்து. என் சினேகிதர் பேரு கிம்பத்து.”

          “அது என்ன பேரு, வடக்கத்திக்காரரா?”

          “இல்லே. நம்மூர் தான். கிருஷ்ணசாமின்னு பேரு. சின்ன வயசிலேருந்து ஒண்ணாப் படிச்சோம். எப்போதும் ரெண்டு பேரும் சேர்ந்தே இருப்போம். அதனாலே மத்த பசங்கள்ளாம் சம்பத்து- கிம்பத்துன்னு பேரு வெச்சுட்டா. அதுவே நிலைச்சுப் போச்சு.”

          “சரி, இன்னிக்கு ராத்திரி 9 மணிக்கு வேன் புறப்படறது. சத்திய நாராயணர் கோவிலுக்கு வந்துடுங்க.”

          *     *     *     *     *     *

          “ஏண்டா வயசைக் கொறைச்சுச் சொன்னே?”

          “எழுபதுன்னு உண்மையான வயசைச் சொன்னா சேத்துக்க மாட்டா. கவலைப் படாதே. பர்த் சர்ட்டிபிகேட் எல்லாம் கேக்க மாட்டா.”

          *     *     *     *     *     *     *

          “உனக்கு எங்கேடா ட்யூட்டி கிம்பத்? உன்னோடே சேத்துப் போடுன்னேன். கேக்க மாட்டேன்னுட்டார் அந்த சூபர்வைசர். எங்கே வேகன்சி இருக்கோ அங்கே தான் போடுவாராம். வைகுண்டம் க்யூவிலே வரவாளை ரெகுலேட் பண்ணுன்னுட்டார். நாள் பூரா நின்னு நின்னு காலை வலிக்கறதுடா.”

          “எனக்கு செருப்பு பாத்துக்கற வேலை. ஒரு புள்ளையாண்டான் கம்ப்யூட்டரை வெச்சிண்டு ஒக்காந்திருந்தான். நான் வரவா பாதுகை எல்லாம் வாங்கி ராக்கிலே வெச்சுட்டு அந்தப் பொந்து நம்பரைச் சொன்னா அவன் ரசீது அடிச்சுக் குடுப்பான். நாள் பூரா குனிஞ்சு நிமிந்து பெண்டு கயண்டு போச்சுடா. நாளைக்கி நாம இதிலேருந்து கயண்டுட வேண்டியது தான். என்ன சொல்றே?”

          “பண்டரிபுரம் போறோம், ஒரு வாரம் ஆகும்னு சொல்லிட்டு வந்திருக்கோம், நினைவு இருக்கா. இப்ப போய் நின்னா, என்ன ஏதுன்னு ஆயிரம் கேள்வி வரும். பேசாம கீழ்த் திருப்பதிக்குப் போயி ஒரு லாட்ஜிலே தங்கிட்டு சொன்ன தேதிக்கு வீட்டுக்குப் போயிடலாம்.”

          “சரிடா.”

                    *              *              *              *              *              *              *

          “என்னடா இது, இந்த லாட்ஜிலே மேனேஜர்லேருந்து ரூம் பாய் வரைக்கும் நம்மையே சுத்தி சுத்தி வரான். ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு தடவை கதவைத் தட்டறான். நிம்மதியா இருக்க விடமாட்டானுக போல இருக்கே.”

          “நம்மைத் தீவிரவாதின்னு சந்தேகப்படறாண்டா. நான் வெத்திலை வாங்கக் கீழே போனப்ப, அவா தெலுங்கிலே பேசிண்டிருந்தது காதிலே விழுந்தது. இளம் தம்பதிகளா வருவா, வயசான தம்பதிகளா வருவா, இள வயசுக்காரா ரெண்டு பேர் சினேகிதாளா வருவா. ரெண்டு கிழவாளா இதுவரைக்கும் வந்ததில்லே. தீவிர வாதிகள் தான் சந்தேகம் வராம இருக்கணும்னு கிழவாளைப் புடிச்சு அனுப்பி இருக்கான்னு பேசிண்டிருந்தா.”

          “சரி. இந்த எடம் சரிப்படாது. எனக்குத் தெரிஞ்சவர் ஒத்தர் முதியோர் இல்லம் நடத்தறார். அவர் கிட்டே கேக்கறேன், பேயிங் கெஸ்டா ஒரு அஞ்சு நாளைக்கு இருக்கலாமான்னு.”

          “சரி. உடனே கேளு.”

          *     *     *     *     *     *     *

          “என்னவோ தெரிஞ்சவர்னு சொன்னியேன்னு பாத்தேன். செமத்தியா வேலை வாங்கறார்டா. இங்கே பணம் குடுத்தவா, குடுக்காதவா, பர்மனெண்டா இருக்கறவா, டெம்பரரியா இருக்கறவா எல்லாரும் சமம். நமக்கு நாமேங்கிறார். பெஞ்சைத் துடை, எலையை எடுத்துப் போடு, தண்ணியை எடுத்து வைன்னு வெரட்டிண்டே இருக்கார்டா.”

          “வேலை கூடச் செஞ்சுடலாம் போல இருக்கு. மத்தக் கிழங்கள்லாம் பேசற பேச்சு புடிக்கல்லே. உங்க பையன் வெளிநாட்டிலே இருக்கானாங்கிறது ஒண்ணு. புள்ளே மாட்டுப் பொண்ணு வீட்டை விட்டு வெரட்டிட்டாளான்னு கேக்கறது இன்னொண்ணு. இவாளுக்குப் பதில் சொல்ல முடியல்லே.”

          “சும்மாத் தான் நாலு நாளைக்கு வந்திருக்கோம்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறா. குடைஞ்சு குடைஞ்சு கேள்வி கேட்டுண்டே இருக்கா. பகல்லேயும் தூங்க முடியல்லே. ராத்திரிலேயும் கொசுக்கடி தூங்க முடியல்லே. நாளைக்குக் காலம்பற ஊரைப் பார்க்க போய்ச் சேர்நதுடுவோமா?”

          “அது தான் சரி. கஷ்டமோ, நஷ்டமோ நம்ம வீடு தான் நமக்கு சொர்க்கம்.”

    Share
  • நிமிர்ந்த நினைவு

    நிர்மலா ராகவன்

    ஒரு ​பெரிய காம்பவுண்டுக்குள் இருந்தது அந்த சிறிய வீடு. வாசலைச் சுற்றி உயரமான சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. மூடப்பட்ட கேட்டில் பெரிய  பூட்டு. ஏதோ சிறை போன்றிருந்தது.

    அலுவலகத்தினுள் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு மாது. எதிரே, ரேணு — குனிந்த தலையுடன். நகத்தைக் கடிக்க வேண்டுமென்ற துடிப்பை அடக்கிக்கொள்ள பெரும் பிரயத்தனப் பட்டுக்கொண்டு.

    “பெரிய படிப்பு படிச்சவங்க நீங்க! இந்த இடத்துக்கு வரலாமா?” அங்கலாய்ப்புடன் கேட்டாள் லீலா.

    `என்றுமே என் உலகம் தனிதான்!` என்ற அயர்ச்சி எழ, ரேணுவின் முகத்தசைகள் இறுகின.

    அவ்வீட்டில் பெண்களும், குழந்தைகளும் மட்டும்தான். பன்னிரண்டு வயதுக்குமேல் ஆன எந்த ஆணுக்குமே அதற்குள் நுழைய அனுமதி கிடையாது. அவளைப் போன்றே கணவனிடம் வதைபட்டு, காவல் துறை அனுப்பியதாலோ, அல்லது தன்னிச்சையாகவோ வந்திருந்த, மலாய், சீனர் உள்பட, மற்றும் இருபது பெண்கள் அந்த ஆதரவு மையத்தில் இருந்தாலும், அவர்களைப்போல் தன் மணவாழ்க்கையின் அவலத்தை உரக்கப் பகிர்ந்துகொள்ளவோ, அல்லது தினசரி யார் என்ன வேலை செய்வது என்று வாய்ச்சண்டையில் பொழுதைப் போக்கவோ அவளால் முடியவில்லை.

    இல்லத் தலைவியான லீலாவின் பரிதாபத்தை எதிர்கொள்ள முடியாது முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

    ஏழெட்டு ஆண்டுகளாக பெரும்பாடுபட்டு மறைத்து வைத்திருந்த அவலம் இப்படி பகிரங்கமாகி விட்டதே என்ற அவமானம்.

    காலையில் படுக்கையில் படுத்தபடியே கண்களைத் திறந்தபோது, தான் எங்கே இருக்கிறோம் என்றுகூட புரியாது திகைத்துப்போய், சொல்லவொண்ணாத பயம் மேலெழ, மீண்டும் கண்களை இறுக மூடிக் கொண்டது நினைவுக்கு வந்தது.

    பயம்…பயம்…

    கிட்டத்தட்ட பத்து வருடங்களாக. அதாவது, திருமணமாகி ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே, வேறு எந்தவித உணர்ச்சியுமே மனிதப் பிறவிக்குக் கிடையாது என்பதுபோல் அல்லவா பயம் அவளை அலைக்கழிந்திருந்தது!

    `அது என்ன சில வருடங்கள்?` உள்மனம் கடுமையாக ஆட்சேபித்தது.

    லீலா ஏதோ சொல்வதுகேட்டது. “சீனச்சி, `எதுக்கும் இருக்கட்டும்`னு புருஷனுக்குத் ​தெரியாம, அப்பப்போ கொஞ்சம் பணத்தைப் பதுக்கி வைச்சுக்குவா. பிள்ளைங்களுக்கு விவரம் ​தெரியற வயசு வந்ததும், அவங்ககிட்ட சொல்லிட்டு, தனியா போயிடுவா. ஆயுசு பூராவும் அடி வாங்கிச் சாக மாட்டா. மலாய், தமிழ்ப் பொண்ணுங்கதான் இப்படி — கட்டினவன் என்ன செஞ்சாலும், பொறுத்துப்போறது!” உணர்ச்சியற்ற குரலில் சொன்னதைக் கேட்டால், பல​பேரிடம் இதையே திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கலாம் என்று ஊகிக்கும்படி இருந்தது. “ஒங்களுக்குத்தான் சுய சம்பாத்தியம் இருக்கே! தனியா போயிருக்கலாமே!”

    ரேணு மௌனம் சாதித்தாள்.`அவர் மாறுவாரென்று நம்பிக்கிட்டு இருந்தேன்,` என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனம் என்று அவளுக்கே புரிந்தது.

    “ஒங்க வீட்டுக்காரருக்கோ வேலை இல்லை. என்னமோ தில்லுமுல்லு பண்ணினதில, வக்கீல் தொழில் செய்யற லைசன்சைப் பிடுங்கிக்கிட்டாங்க. நீங்க அப்படியா! சரி.. எப்படிப் பாத்தாலும், ஒங்க கைதானே ஓங்கியிருக்கணும்? ஆனா, நெசமாவே அவரோட கை ஓங்கி இருந்திருக்கு. அதுக்கு ஒங்க ஒடம்பு முழுவதும் அத்தாட்சி!” நம்ப முடியாதவளாக தலையை ஆட்டிக்கொண்டாள் லீலா. “எத்தனை எலும்பு முறிஞ்சிருக்கு! பொறுமைக்கும் ஒரு அளவு கிடையாதா, என்ன ரேணு? இங்க வந்து சேர்ந்திருக்காட்டி, ஒங்க உசிரே போயிருந்தாக்கூட ஆச்சரியமில்லை”. வதைபட்ட பெண்களுக்கு நல்வாழ்வு காட்டுவதிலேயே தன் காலத்தைச் செலவழித்திருந்தவள் லீலா. “இப்படி சுவரையே வெறிச்சுப பாத்துக்கிட்டிருக்காம, ஏதாவது பேசுங்க. நீங்க எல்லாத்தையும் மனம்விட்டுச் சொன்னாதான்  நாங்க ஒங்களுக்கு உதவ முடியும். நீங்களும் ஒரு தீர்வு காண முடியும்”.

    “தீர்வா?”

    “அதான், திரும்ப ஒங்க கணவர்கிட்ட போகப்போறீங்களா, இல்ல விவாகரத்துக்கு மனு போடப்போறீங்களான்னு..”

    “விவாகரத்து வேணாம்..” அவசரமாகச் சொன்னாள் ரேணு. கல்லூரி நாட்களில், அறிவார்த்தமாகத் தன்னுடன் பேசிப் பழகி, மரியாதையாக நடத்திய கிரியை இனி காண்போமா என்ற ஏக்கம் எழுந்தது.

    “நீங்க எந்த முடிவு எடுத்தாலும் எங்க பக்கபலம் உண்டு. ஆனா, திரும்பத் திரும்ப ரத்தக்களரியா இங்கே திரும்பி வரமுடியாது. எங்க விதிப்படி, ஒருத்தர் மூணு தடவைதான் வரலாம்”.

    உடல் உயரமாக இருந்தாலும், குறுகியபடி எதிரே அமர்ந்திருந்தவளின் மன இறுக்கத்தைக் குறைக்க ஒரே வழி தான் நிறைய பேசுவதுதான் என்று அனுபவத்தில் உணர்ந்திருந்த லீலா, “எனக்கு ஒண்ணுதான் புரியல. ஒங்களைப்பத்தி நீங்க பெருமையா நினைச்சு நடந்திருக்கணும். அது எப்படி  ஒங்களை இவ்வளவு மட்டமா ஒருவர்.., அது ஒங்க கணவரே ஆனாலும், நடத்த விட்டீங்க? ப்ளீஸ் ரேணு!  என்னை ஒரு தோழியா நினைச்சுச் சொல்லுங்க!”

    தோழி!

    இதுநாள்வரை தனக்கு நெருக்கமான ஒரு தோழிகூட கிடையாது என்ற உண்மை கசப்பாக அடிநாக்கில் படிந்தது. ரேணு விம்மினாள்.

    அவளை அழவிட்டுக் காத்திருந்தாள் மற்றவள்.

    எல்லாப் பெண்களையும்போல் தான் எந்த ஆடவனையும் சார்ந்து வாழ முடியாது என்றுதான் ரேணு நினைத்திருந்தாள், கிரியைச் சந்திக்கும்வரை. அந்த நினைப்பின் வித்து பக்கத்து வீட்டுக் கிழவர் அவளது ஆடைகளைக் களைந்து, ஏதேதோ செய்தபோது அவளது உள்மனத்தில் ஆழமாக விழுந்திருந்தது.

    தான் ஏதோ தப்பு செய்கிறோம் என்றவரை அந்தக் குழந்தை மனதுக்குப் புரிந்தது. ஆனால், பாவாடை அழுக்கானால்கூட திட்டும் தாயிடம் தாழிட்ட அறைக்குள் அடிக்கடி நடந்ததை எப்படிப் பகிர்ந்துகொள்வது?

    அவளால் முடிந்ததெல்லாம் தன் உடலை ஆக்கிரமிக்கும் தாத்தாவைக் கண்டு பயப்படுவது ஒன்றுதான். அந்த பயமே அவருக்குச் சாதகமானது புரியும் வயதாகவில்லை அப்போது.

    அடுத்த வருடமே ரேணுவின் பெற்றோர் வேறு வீட்டிற்கு மாறிப் போய்விட்டாலும், அந்த நாட்களின் பாதிப்பு வாழ்நாட்கள் பூராவும் தன்னை உறுத்தும் என்று அப்போது ரேணு எதிர்பார்த்திருக்கவில்லையே!

    தான் மிகவும் கேவலமானவள், இல்லாவிட்டால் தன்னை ஒருவர் இப்படியெல்லாம் நடத்தி இருக்கமாட்டார் என்ற குற்ற உணர்ச்சி அவளோடு தானும் வளர்ந்தது. மற்ற பெண்களைவிட எப்போதும், எல்லாவற்றிலும் தான் ஒரு படி மேலே நிற்க வேண்டும் என்ற வீம்பு உண்டாயிற்று.

    பதினாறு வயதில் சக மாணவிகள் ஆண்களைப்பற்றி கூடிக் கூடிப் பேசி, காரணமில்லாமல் சிரித்தபோது, அந்த மாதிரி பேச்சுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்பதுபோல் விட்டேற்றியாக நடந்துகொண்டாள்.

    “இப்படி இந்த வயசிலேயே சாமியாரா இருந்தா, யாராலதான் கிளாசில எப்பவும் முதலாக வரமுடியாது?” என்றெல்லாம் வயிற்​றெரிச்சலுடன் அவர்கள் பேசியது அவள் காதிலும் விழாமல் இல்லை. தன்னைப் பார்த்துப் பிறர் பொறாமைப்படும் அளவுக்கு உயர்ந்திருப்பதை எண்ணி பெருமைப்பட முடியவில்லை. இப்படி எல்லாரிடமிருந்தும் மாறுபட்டுப் போனோமே என்ற வருத்தம்தான் எழுந்தது அவளுக்கு.

    அப்போதெல்லாம், தன்னை இப்படி ஒரு கேலிப்பொருளாக, அரைப் பைத்தியமாக ஆக்கி விட்டிருந்த அந்தக் கிழவரின்மேல் ஆத்திரம் மூளும். அவர் என்றோ இறந்து போயிருக்கக்கூடும். ஆனால் அவர் செயலின் பாதிப்பு நிரந்தரமாகத் தங்கிவிட்டது அவளிடம்.

    இனி என்னதான் யோசித்தாலும், நடந்ததை மாற்றவா முடியும் என்ற உண்மை உறைக்கையில், இரண்டு மூன்று நாட்கள் ஏதோ அடியற்ற பாதாளத்தில் விழுந்துவிட்டதைப்போல் இருக்கும். மிகுந்த பிரயாசை செய்து, மேல் எழுவாள். அத்தகைய சமயங்களில் கொழுகொம்பாக அமைந்தது படிப்பு. மேலும் மேலும் புத்தகங்களுக்குள்ளேயே மூழ்கி, தனித்துப் போனாள்.

    `இப்படியே இருந்துவிட்டால் போதும்,` என்று சிறிது நிம்மதி எழுந்தபோதுதான் கிரி அவள் வாழ்க்கையில் புகுந்தான்.

    ரேணுவின் போக்கே புதுமையாக, ஒரு சுவாரசியத்தை உண்டு பண்ணுவதாக இருந்தது அவனுக்கு. அவன் நெருங்க நெருங்க, அவள் ஒதுங்கிப் போனது சவாலாக இருந்தது.

    `மற்ற பெண்களைவிட நீங்கள்தான் எத்தனை வித்தியாசமாக இருக்கிறீர்கள்!`

    `எவ்வளவு விஷயம் ​தெரிந்து வைத்திருக்கிறீர்கள்! பூர்வ ஜன்ம வாசனையாகத்தான் இருக்க முடியும்`.

    கடல் அலையால் ஓயாது அலைக்கழைக்கப்படும் பாறாங்கல்லே நாளடைவில் தன் கூர்மையை இழந்து, உருண்டையாக ஆகிவிடுகிறது. இவள் கேவலம், உயரமும், ஒல்லியுமான பெண். சற்றுக் கூனல் வேறு என்று கணக்குப் போட்டான். மாற்ற முடியாதா, என்ன!

    `இன்னும் என்னென்ன செய்தால் இவளை வழிக்குக் கொண்டு வரலாம்?` என்று யோசித்து யோசித்து திட்டம் போடுவதே ​பேரின்பமாக இருந்தது. ஓடும் விலங்கை துரத்தித் துரத்திப் பிடிப்பதில்தானே வேடுவனுக்கு உற்சாகம்!

    நாலடி தள்ளியே நின்று, அறிவுபூர்வமாக எதையாவது விவாதிக்கும்போது அவள் முகத்தின் இறுக்கம் குறைகிறது என்று புரிந்துகொண்டான். வழக்கமான தனது மன்மத ஆட்டங்களைக் குறைத்துக்கொண்டு, பல்வேறு பொருட்களில் அமைந்த புத்தகங்களைத் தேடிப் படித்தான். மறுநாள் வாசகசாலையிலோ, உணவு விடுதியிலோ ரேணுவைத் `தற்செயலாகச்` சந்தித்து, தன் அறிவுத்திறமையை வெளிப்படுத்திக் கொண்டான்.

    `என்னை மாதிரியே இவரும் ஒரு தனிமை விரும்பி. ஓயாது படிக்கிறாரே! என்ன துயரமோ, பாவம்!` என்று ஆரம்பத்தில் பரிவு காட்டியவள், தனிமையிலேயே வாடும் இருவர் ஒருவரை ஒருவர் சார்ந்தால், வாழ்க்கை எத்துணை இனிமையாக இருக்கும் என்று எண்ண ஆரம்பித்தாள்.

    பழம் கனிந்துவிட்டதை உணர்ந்தான் கிரி. இவளை அனுபவித்துவிட்டு ஓடிவிட ஒத்துக்கொள்ளமாட்டாள், கல்யாணம் ஒன்றுதான் வழி என்பதைப் புரிந்துகொண்டிருந்ததால், தன் கோரிக்கையை மெள்ள வெளியிட்டான்.

    உடனே அவள் சம்மதித்தபோது, தன் ஆற்றலில் மிகுந்த கர்வம் உண்டாயிற்று கிரிக்கு.

    முதல் வருடம், அவன் என்ன பேசினாலும் மெய்மறந்து, அவனுடைய முகத்தையே பார்த்த மனைவியால் கிரியின் ஆண்மை பெருமிதம் கொண்டது.

    போகப் போக, ஒரு இளம்பெண்ணுக்குரிய துடிப்பு சற்றுமின்றி, கண்ணிலும் ஒளியின்றி அவள் மந்தமாக இருந்தது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

    அவனுடைய உடலின் நெருக்கத்தை அவள் வேண்டாவெறுப்பாகப் பொறுத்துப் போவதுபோல்தான் பட்டது.  `இவளுக்கு மரத்தால் செய்த உடம்பா என்ன,` என்ற ஆத்திரம் வந்தது அவனுக்கு.

    அவனுக்குப் புரியவில்லை, என்றோ மனதில் படிந்த பயம், அத்தருணங்களில் தன் உடலின் மேலேயே அவளுக்கு உண்டான அருவருப்பு, `இதெல்லாம் தவறு` என்ற உறுதியான எண்ணம் முதலியவைதான் அவள் போக்கிற்குக் காரணமென்று.

    புதுமோகம் எழுந்த வேகத்திலேயே மறைய, பிற பெண்களை நாடினான். மனைவியிடம் சிடுசிடுக்க ஆரம்பித்தவனுடைய போக்கை எந்தவித எதிர்ப்பும் காட்டாது அவள் ஏற்றது அவனுடைய ஆத்திரத்தை மேலும் அதிகப்படுத்தியது.

    `போயும் போயும் இப்படி ஒரு உம்மணாமூஞ்சியை மயக்கவா அவ்வளவு பாடுபட்டேன்!` நனவுலகத்தின் கசப்பை மாற்ற குடித்தான். குடித்ததால், இன்னும் கேவலமாக ஆனான்.

    ஒரு நாள் ரேணுவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் கிரி — ரசத்தில் உப்பு போட மறந்துவிட்ட குற்றத்துக்காக. உடனே, சம்பளத்தை அப்படியே தன் கையில் கொடுத்துவிடும் சாதுவான மனைவியைப் பகைத்துக் கொள்வதா சupதானா என்ற நினைப்பு எழுந்தது. ஆனால், ரேணுவின் கண்களில் அவனைவிட அதிக பயம் தென்பட்டபோது, அவனுக்குள் ஒரு பூரிப்பு. ஒரு போதை. தான் எப்படி வதைத்தாலும் இவள் எதிர்ப்பு காட்டமாட்டாள் என்று சந்தேகமற புரிந்தபோது, அவனுடைய கொடுமையும் அதிகரித்தது.

    `நான் ஒரு ஈனமான பிறவி. ஆண்கள் ஏதோ விதத்தில் என்னைப் பந்தாடுவதற்காகவே பிறந்து தொலைத்திருக்கிறேன் போலிருக்கிறது!` என்று, எது நடந்தாலும் அதைத் தன் குற்றமாக ரேணு ஏற்றது அவனுடைய போதையை அதிகரிக்கச் செய்தது.

    இரண்டு நாட்களுக்கு முன்னர், தேத்தண்ணீரில் சீனி குறைவாக இருந்ததென்று,  எண்ணை போத்தலால் நெற்றிப் பொட்டில் அடிக்கப்பட்டு, ரத்தம் பீறிட மயங்கிக் கிடந்தவளை பக்கத்து வீட்டினர் மருத்துவமனையில் சேர்த்திராவிட்டால், அந்தச் சமூக சேவகி சொல்லியதுபோல், இந்நேரம் அவள் கதை முடிந்திருக்கும்.

    ரேணுவின் நினைவோட்டம் நிகழ் காலத்தை வந்தடைந்துவிட்டதை முகத்தின்வழி உணர்ந்துகொண்ட லீலா தொடர்ந்து பேசினாள்: “மாஸ்டர்ஸ் பட்டமில்ல வாங்கி இருக்கீங்க! எவ்வளவு அறிவு! எவ்வளவு உழைப்பு! தனியார் பள்ளியில தலைமை அதிகாரியா இருக்கீங்க!”

    “உதவி தலைமை அதிகாரிதான்!” ரேணு முணுமுணுத்தாள்.

    “ச​உை. மத்தவங்க ஒங்களை இந்த அளவுக்கு தாழ்த்த எப்படி விட்டீங்க, ரேணு?”

    ரேணுவின் ஆள்காட்டி விரல் தன்னிச்சையாக வாய்க்குள் போய், மேல்பற்களுக்கும் கீழ்பற்களுக்குமிடையே மாட்டிக்கொண்டது.

    “அட, படிப்பை விடுங்க. படிச்சிருக்கீங்களோ இல்லியோ, நீங்களும் ஓர் ஆத்மா. ஓர் உயிர். நம்ப எல்லாருக்கும் சுதந்திரமா, பயமில்லாம வாழற உரிமை இருக்கு”. அழுத்தந்திருந்தமாக லீலா கூறியது மனதைத் தைத்தது.

    `இனியும் என்மேல் ஒருவர் ஆதிக்கம் செலுத்தி, கண்டபடி ஆட்டிவைக்க விடக் கூடாது`. உறுதி செய்துகொள்ள முயலும்போதே அது அவ்வளவு எளிதல்ல என்பதும் புரிந்தது.

    பிறருக்கு அடங்கியே பழகிவிட்ட நான் மாற முடியுமா?

    ஆனால், தான் இப்படியே இருந்தால், தன்மீது இன்னும் இன்னும் மதிப்பு குன்றி, வெறுப்பே தோன்றிவிடும் என்ற பயம் எழுந்தது.

    பயம்.

    இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் உணர்வுகள் முழுமையாக வளராத குழந்தையாக, எல்லா சந்தர்ப்பங்களிலும் பயந்து நடுங்கியே காலத்தைக் கழிப்பது!

    எந்த மனிதப்  பிறவியும் தனிமரமில்லை. `பிறருக்கு நன்மை செய்வதே வாழ்வெடுத்ததன் பயன்` என்று நினைக்கும் லீலா போன்ற நல்லவர்களும் இந்த உலகில் இல்லாமல் போகவில்லை.

    அந்த நிதரிசனமே துணிச்சலைத் தர, ரேணுவின் முகத்தில் சிறு நகை பூத்தது.

    லீலாவும் அதில் பங்கு கொண்டாள். “என்ன முடிவு எடுத்திருக்கீங்க? ரொம்ப அவசரப்படுத்தறேனோ?”

    “இல்ல.. மொதல்ல, ஒங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்,” ரேணு ஆரம்பித்தாள். “அப்போ எனக்கு ஏழு, இல்ல எட்டு வயசு இருக்கும்”. விம்மல் எழுந்தது, காலதாமதமாக.

    “எங்கம்மா என்னை பக்கத்து வீட்டில விட்டுட்டு, வேலைக்குப் போவாங்க..” பாம்புச் சுருளாய் இறுகிப் போயிருந்த நினைவுகள் சிறிது சிறிதாக நீள, குறுகியிருந்த ரேணுவின் நெடிய உருவமும் நிமிர ஆரம்பித்ததது.

    Share