கோதை நாராயணன்

“என்னடி ஆச்சு… பெரிய கப்பல் கவிழ்ந்தாப்புல கன்னத்துல கை வைச்சுண்டு… நான் வருவது கூட தெரியாம…?

“ஏன்னா… நம்ம 51 F  சுகன்யா இருக்காளே குழந்த…?”

“யாரு.. நம்ம விகாஷினி குட்டியோட அம்மாவை தான சொல்ற… அவளுக்கென்ன இப்போ புது அறிமுகம் ?”

“முதல்ல சொல்லுறத கேளுங்கோ…! அவ தன் ஆத்துகாரரோட டைவர்ஸ் வாங்க போறாளாம் ….” சொல்லும் போதே சரஸ்வதி மாமிக்கு மூச்சிறைத்தது .

“பின்னே அவா அவா  ஆத்துக்காரரோட தான் டைவர்ஸ் வாங்க முடியும் …ஹா ..ஹா ..” சிரித்தார் சுந்தரம் .

“உங்களுக்கு எல்லாமே கேலியா போச்சு … நான் பெத்த பிள்ளையாட்டம் நினைச்சுண்டு இருந்தேனே இப்டி பண்றாளே … காலையில வந்து ஒரு பாடு சுகன்யா அழுதுண்டு தான் தீர்மானமா இருக்கிறதா சொல்லிட்டு போய்ட்டான்னா … அதுல இருந்து மனசு கிடந்து அடிக்கிறது … நல்ல பொண்ணு… ரகுவிற்கும் என்ன குறைச்சல் அவனும் நல்ல பையன்… பின்ன ஏன் இவாளுக்கு புத்தி இப்டி போறது?”

சுந்தரம் பதிலளிக்கும் முன்னே, இண்டர்காம் 51 H யிலிருந்து வர “ஆமா கௌசி .. உனக்கு எப்ப தெரியும் ?” சுந்தரத்திடம் புலம்பியவற்றின் தொடர்ச்சியை போனில் தொடர்ந்தாள் சரஸ்வதி.

அந்த ப்ளாட்டில் நிறைய பேர் குடியிருந்தாலும் சரஸ்வதி மாமி மற்றும் சுகன்யாவுடன் சேர்த்து ஒரு நாலு குடும்பம் மட்டும் மிகவும் ஒன்றுக்குள் ஒன்றாக பழகி வந்தார்கள். இதில் குழந்தை இல்லாத தம்பதிகளான  சுந்தரம் – சரஸ்வதி தம்பதிகள் மட்டுமே வயதில் பெரியவர்கள். இதில் சுகன்யா – ரகுவும் காதல் மணம் புரிந்து இந்த பிளாட்டிற்கு குடி வந்த போது சரஸ்வதி அவர்களுக்கு பெருமளவு அரவணைப்பு கொடுத்தாள். சுகன்யாவிற்கு தலைபிரசவம் ஆன போது இவளே முன் நின்று அனைத்தும் பார்த்தாள். குழந்தை விகாஷினி என்றால் அனைவருக்கும் உயிர். ரகுவும் சுகன்யாவும் வேலைக்கு சென்ற பின் இவர்கள் மூன்று குடும்பங்கள் மட்டுமே மாற்றி மாற்றி குழந்தையை பார்த்து கொண்டார்கள். இந்த இரண்டு வருடமாக தான் விகாஷினி ஸ்கூலுக்கு சென்று வருகிறது. இந்த தருணத்தில் தான் சுகன்யா டைவர்ஸ் குண்டை தூக்கி போட்டு விட்டு சென்றாள்.

தொடர்ந்து வந்த நாட்களில் மாமி புலம்பி புலம்பி அடிக்கடி மற்ற தேவகி ,கௌசி இவர்களுடன் ஆலோசனை கூட்டம் போட்டு போட்டு ஓய்ந்தாள் .

சுந்தரமும் இரு முறை லிப்டிலும், கீழே பார்க்கிங்கிலும் சில முறை ரகுவை பார்க்க நேர்ந்தது. பிரச்னை என்றால் அதில் ஆண் என்ன பெண் என்ன… பெண்களாவது புலம்பி அழுது தீர்த்து கொள்கிறார்கள். ஆண்கள் தங்களுக்குள்ளேயே இறுக்கி கொண்டு… ம்…. ரகுவின் முகமும் தொங்கி போய் தான் இருந்தது. சுந்தரத்தை கண்ட போதெல்லாம் சங்கடமாய் ஒரு சிரிப்பு வலுக்கட்டயமாய் உதிர்த்து விட்டு மொபைலை காதில் சொருகி கொண்டான்.

அன்று அலுவல் முடிந்து வீட்டிற்கு வந்த சுந்தரத்தை சரஸ்வதி, “ஏன்னா … நா… ஒண்ணு சொல்லட்டுமா …?”

“ஒண்ணு என்ன எத்தனை வேணா சொல்லு…”

“ப்ச் … நா … சீரியஸா பேசிண்டுருக்கேன் நீங்க தமாஸ் பண்ணாம கேளுங்கோ ….!”

“சுகன்யாவும் ரகுவும் டைவர்ஸ் வாங்க போறா …” “பத்து நாளா இத மட்டும் தான் நீ என்கிட்டே சொல்லிட்டு இருக்க தெரிமோ … வேற ஏதாவது புது விஷயமா …?”

ஒரு நிமிஷம் சுந்தரத்தை முறைத்து விட்டு, “என் மனதுக்கு நீங்க போய் பேசி பார்த்தா, அவா மனசு மாறுவான்னு தோன்றதுன்னா …..”

“ஏன் என்ன பார்த்தா தான் மடையன்னு தோண்றதா உனக்கு … இங்க பாரு சரசு … இப்ப எல்லாருமே படிச்சவளா தானே இருக்கா … அதனால அவா தீர்மானத்துல நாம தலையிடக் கூடாதுடி … உணர்வுகளுக்கு மீறிய புரிதல் இந்த காலத்துல யாருக்கு இருக்கு?”

“நீங்க போய் பேசி பார்த்துட்டு விடுடின்னு சொல்லுங்கோ நா கேட்குறேன் … எனக்கு மனசு ஆறவே மாட்டேங்குது … விகாஷினியை நினைச்சு பாருங்கோ… அவளுக்காக போய் பேசுங்கோ …!”

விகாஷினி பேரை கேட்டதும் சுந்தரத்திற்கு மறுக்க முடியவில்லை .

மறுநாள் ரகுவின் வீட்டிற்கு சென்ற சுந்தரம் பேசி தோற்று தான் திரும்பினார் .

அவர் வரவுக்காகவே காத்திருந்த சரஸ்வதி, “சொல்லுங்கோ … போனேளா … பேசினேளா … மனசு மாறினாளா…?”

புன்னகையை உதிர்த்த சுந்தரம், “பிரியத்தான் போறாங்களாம்…!”

“அட …ராமா …!”

“ஆனா அவா பிரியமா இருக்க வைக்கிறது ரொம்ப சுலபம் சரஸ்வதி …..!”

விழிகளில் ஆச்சரியமாய், “அட …எப்டினா … அத சொல்லுங்கோ முதல்ல …. எப்டி … அதானே நமக்கு வேணும் ?”

“சரஸ்வதி நம்ம காலம் போல இப்போ இல்ல … இரண்டு பேரும் வேலைக்கு போறா, நிறைய மக்களை சந்திக்கிறா, வீட்டில் இருக்கும் நேரமும் குறைவு, கல்யாணத்துக்கு முன் பேசிய அளவில் பாதி கூட கல்யாணத்திற்கு பின் பேசுவது இல்லை … முக்கியமா மனசு விட்டு பேசுவது இல்லை …. சரி, நீ என்ன பண்ற நம்ம மலை முருகர் கோவிலுக்கு நாம எல்லாரும் ஞாயிற்றுக்கிழமை போவோம் … சுகன்யாவையும் ரகுவையும் நீ எப்டியாவது சம்மதிக்க வை கோவிலுக்கு வர… அப்புறம் நான் சொல்லுற படி நீயும் பேசு… நம்ம கௌசி -வெங்கடேஷ், தேவகி -கண்ணன்  அவா ஆத்து குட்டீஸ் என எல்லோரும் போவோம் … சுகன்யா-ரகுவை சைலண்ட்டா அட்டாக் பண்ணுவோம்” என சுந்தரம் பேச பேச குஷியானாள் மாமி.

ஞாயிறும் வந்தது.

மலை மீது நின்று கொண்டு கீழே பார்க்கும் போது நாம் மட்டும் உயரத்தில் இருக்கும் இறுமாப்பு அனைவர் முகத்திலும். நான்கு குடும்பங்களும் முருகரை தரிசித்து விட்டு மனநிறைவுடன் அருகிலுள்ள ஒரு பார்க் போன்ற இடத்திற்கு வந்தமர்ந்தனர். சாப்பிடுவதற்கு சரஸ்வதி மாமி எல்லாருக்கும் புளியோதரையும், தயிர் சாதமும் கொண்டு வந்திருக்க, மற்றவர்கள் தின்பண்டங்கள் என அந்த இடமே களைக்கட்டியது. குட்டீஸ் ஒரு பக்கம் விளையாட ஆரம்பிக்க, மாமி, கௌசி, தேவகி, சுகன்யா என பெண்கள் ஒரு குழுவாகவும், சற்று தொலைவில் சுந்தரம் தலைமையில் ஆண்கள் ஒரு குழுவாகவும் தனி தனியாக அரட்டை கச்சேரியை ஆரம்பித்தனர்.

கௌசி மெதுவாக, “சுகன்யா இந்த புடவை உன் நிறத்திற்கு எடுப்பா இருக்கு … யாரோட செலெக்ஸன் …?”

“இது …” என சுகன்யா ஆரம்பிக்கும் முன்னே வெங்கடேசின் குரல் அழைக்க, ஒரு நிமிஷம் என கௌசி எழுந்து சென்றாள்.

திரும்பிய கௌசி ,”வண்டியில் தண்ணீர் பாட்டில் மறந்துட்டார் போய் எடுத்து கொடுத்துட்டு வரேன் …ம் …சொல்லு …சுகன்யா….?”

“இது …..”

“என்ன இங்க பட்டிமன்றம் …..”கேட்டபடியே அங்கு வந்த சுந்தரம், தேவகியை கண்ணன் அழைப்பதாக கூற தேவகி எழுந்து சென்றாள் .

இப்பிடியாக சில முறை சுந்தரம் இவர்கள் பக்கம் வந்து வந்து போனார் .

சுகன்யாவிற்கு எரிச்சலே வந்தது, என்ன பெண்கள் இவர்கள் ? எதற்கு எடுத்தாலும் அடிமை போல், எடுபிடி போல் ஓடிக்  கொண்டு என நினைக்க…

இதே நாடகம் அங்கு ரகுவின் முன் சுந்தரத்தின் மூலம் நடந்தேறிக்  கொண்டிருந்தது .

மனதிற்குள் சலித்த ரகு என்ன மனிதர் இவர் சரியான பொண்டாட்டி தாசனாய் இருப்பார் போலவே. நினைத்தவனாய் சுந்தரத்தை பார்த்து “என்ன மாமா இது… உங்களுக்கு கோபமே வராதா …?”

“யார் சொன்னது எனக்கு கோபம் வராதுன்னு… அழகா வரும், வந்தா உடனே நம்ம ப்ளாட் கார்டன் இருக்கோன்னோ அங்க போய் மண்வெட்டி எடுத்து தேவை இல்லாத களைகள் எல்லாத்தையும் கொத்தி கொஞ்ச நேரம் சுத்தபடுத்திடுவேன். கோபமும் ஒரு வகை ஆற்றல் தானே. அதை களைகளின் மேல் காமிச்சுட்டா அங்க இடமும் சுத்தமாகும், என் மன வேகமும் அடங்கிடும். அப்புறம் கொத்தின களைப்புல மாமி கையாள சூடா காப்பி கிடைக்காதான்னு தோணிடும். சரஸ்வதியும் ஒண்ணுமே நடவாத மாறி சூப்பரா ஒரு கும்பகோணம் டிகிரி காப்பியை எடுத்துண்டு வருவா பாரு… எல்லா கோபமும் பறந்திடும்.  ரகு கணவன் -மனைவிக்குள்ள கோபம் வரலாம் ஆனா வெறுப்பு வரக் கூடாது. கோபம் வருவதற்கு ஒரு காரணம் இருக்கிற மாறி நான் அவள விரும்பினதுக்கும் பல காரணம் இருக்குமோன்னோ, அத யாரும் திருமணத்திற்கு அப்புறம் நினைக்கிறதே இல்ல… நா கொஞ்ச நாழி அத நினைச்சுப்பேன்… அழித்து அழித்து செய்ய வாழ்க்கை என்ன வரைபடமா ரகு? ஹ ஹ ஹா ….” தான் பெரிய ஜோக் அடித்தாற் போல் சிரித்தார் சுந்தரம்.

சுருக்கென்று இருந்தது ரகுவிற்கு…

குழந்தைகள் ஓடி வர, எல்லாருக்கும் பசி வயிற்றை கிள்ளியது. வட்டமாக அமர்ந்து ஒருவருக்கொருவர் பரிமாறி சாப்பிட, ரகு-சுகன்யா முகங்கள் மட்டும் எதையோ சிந்தித்த படியே இருந்தது.

குழந்தைகள் அப்பளத்திற்கு சண்டையிட கௌசியும், தேவகியும் அவரவர் குழந்தைகளை அதட்ட, விகாஷினி தனக்கு தான் அப்பளம் என அடம் பிடித்து கொண்டிருந்தாள்.

“சரி .. சரி .. விடுங்க குட்டீஸ் … பாவம் விகாஷினி தாய்-தகப்பன் ஆதரவில்லாம வளர போற குழந்த, அவளுக்கு கொடுங்க முதல்ல …!!” கூறிய சரஸ்வதியை இரண்டு ஜோடி தீக்கண்கள்  நோக்கின. மற்றவர்கள் எதார்த்தமாய் சாப்பிட்டு கொண்டிருக்க விகாஷினி குட்டி தனக்கு அப்பளம் கிடைத்த சந்தோஷத்தில் கை கொட்டி சிரித்தது.

வீடு திரும்பும் போது ரகுவும் சுகன்யாவும் வேனில் சேர்ந்து அமர்ந்திருக்க சுந்தரம் சரஸ்வதியை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தார். கச்சிதமாக எல்லாம் முடிந்த திருப்தி அனைவர் முகங்களிலும்.

அடுத்து வந்த நாட்களில் ரகு-சுகன்யா வீட்டிலிருந்து டைவர்ஸ் பத்தி எந்த தகவலும் இல்லை. நாட்கள் வாரங்கள் ஆகி, வாரங்கள் மாதங்கள் ஆனபோது விகாஷினிக்கு தம்பி வர போகும் செய்தி மட்டும் வந்தது.

செய்தி கேட்ட சரஸ்வதி, “ஏன்னா … உங்களுக்கு மெடல் தான் கொடுக்கணும் போங்கோ … வார்த்தைக்கு வார்த்தை டைவர்ஸ்ன்னு பேசினவாளை இப்டி சமத்தா ஆக்கிட்டேளே … ஆனா எனக்கு ஒரு சந்தேகம் ..?”

“வந்துட்டுதா?”

“இல்ல நம்ம ப்ளாட்டுல கூட ஒரு கெட் டுகதர் வச்சு இருக்கலாமேன்னா … அத விட்டுட்டு அவ்ளோ தூரம் மலை முருகர் கோவிலுக்கு போய் … ஏன்னா அந்த முருகர் அவ்ளோ சக்தி வாய்ந்தவரான்னா?”

“புத்திசாலி முருகர்!!!!!!”

“.!!!!…” மாமி முழிக்க…

“இல்லையா பின்ன சுத்தமா செல் போன் டவர் கிடைக்காத இடமா பார்த்துல கோயில் கொண்டு இருக்கார்……!!!!!!!!!!”

“ஆ …” வென்று தன் ஆத்துக்காரரின் சமோசிதத்தை எண்ணி அயர்ந்து நின்றாள் மாமி .

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ஆக்கிரமிப்பு

Leave a Reply

Your email address will not be published.