​ஜெயஸ்ரீ ஷங்கர்

எங்கடீ அந்தப் பயல்?

போய்ட்டான்…..

போயிட்டானா…..? ஆத்த விட்டே போயிட்டானா அவன்..?

ம்ம்ம்ம்

அவ்வளவு பெரிய மனுஷனாயிட்டானா அவன்..? அவன் என்னைக் கண்டிக்கலாம்…நான் அவனைக் கண்டிக்கப்டாதோ..?

அ ….ஹாங் …..அது….வேறொண்ணுமில்லடீ …..கிளிக்கு ரெக்கை முளைச்சுடுத்து…..ஆத்தவிட்டேப்  பறந்து போயிடுத்தூ ……..!

பாலூட்டி வளர்த்த கிளி

பழம் கொடுத்து பார்த்த கிளி…..

நான் வளர்த்த பச்சைக் கிளி..

நாளை வரும் கச்சேரிக்கு…..

செல்லம்மா…எந்தன் செல்லம்மா…..!

திடுமென மின்வெட்டானதால் தொலைகாட்சி கண்ணை மூடி திடீர் சாமியாரானது.

அதனால் என்ன…?  வீட்டுக்குள்ள தான் கதையும் பாட்டும் நடந்து கொண்டே இருக்கிறதே. அந்த கௌரவப் பாட்டு போனால் என்ன… இருக்கவே இருக்கிறது… வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக் விதை…..!

இட்டிலித் தட்டிலிருந்து ஒவ்வொரு இட்டிலியாகப் பெயர்த்து ஹாட் பாக்ஸில் போட்டு வைத்த சாரதா, பஞ்சு பஞ்சாக வெள்ளை வெளேரென்று மல்லியப் பூக் கணக்கா இருந்த இட்டிலிகளைப் பார்த்து, ஆஹா…எம்புட்டு அழகா இருக்கு…பார்க்கும்போதே திங்கச் சொல்லி நாக்கு நம நமங்குதே…. சாரதா… இட்டிலில உன்னை அடிச்சுக்க ஆளே இல்லடீ…. என்று  இல்லாத காலரை இழுத்து விட்டுக் கொண்டு தனக்குத் தானே தட்டிக் கொண்ட சாரதா, சடக் கென்று திரும்பிப் பார்த்தபோது… அங்கே கைகள் இரண்டையும் கதவில் முட்டுக் கொடுத்தபடி மகன் சிவராமன்  நின்று இவளையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்னடா சிவராமா… எப்ப வந்தே… யார் மேலே என்ன கோபம்?….அதான்…கோபம் கண்ணுல கொப்பளிக்குதே… அப்படி என்ன ஆச்சு உனக்கு?”

“இன்னும் என்ன ஆகணும்….? சைக்கிள் பஞ்சர்… நான் பிளஸ் டூ படிக்கேல ‘அரசு மூலமா அம்மா’ கொடுத்த சைக்கிள் இது. இம்புட்டு நாள் ஓடிச்சே அதே பெருசு… என் கையில பஞ்சர் ஓட்டக் கூட காசு இல்ல… இனிமேட்டு நான் அதைத் தொட மாட்டேன்… அதான்.. அப்படியே காயலான் கடையில வித்துட்டேன்.”

“எம்புட்டுக்கு? அந்தக் ரூபாயை என்ன செஞ்சே? இங்கிட்டு தா என் கையில.”

“ஆமா… துருப்பிடிச்ச சைக்கிளுக்கு கட்டு கட்டாத் தூக்கிக் கொடுத்தாங்க. நான் அதை தோல் பையில எடுத்தாந்திருக்கேன். நூறு ரூபாய் கூட தர மாட்டேன்னு சொல்லிட்டான்… நீ என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது. எனக்கு நாளைக்கே புதுசா ‘ஹோண்டா’ பைக் வேணும். வாங்கித் தாங்க. இல்லாட்டி வீட்டுப் பக்கமே வரமாட்டேன்.”

“டேய்.. சிவா… ஒரு வேலையை பிடிச்சுக்கடா… பெறவு உனக்கு என்ன வேணுமோ அத நீயே உன் சொந்த பணத்துல வாங்கிக்கிறலாம். அப்பா இந்த வீட்டை லோன் போட்டு வாங்கியிருக்காரு… மாசா மாசம் ஹவுசிங் லோனும் வட்டியுமே அவரோட கையைக் கடிக்குது. நாளைக்கே ‘ஹோண்டா’ பைக்கைக் கொண்டான்னு கேட்டா எப்புடி, உங்கப்பா என்ன ராக்கொள்ளையா அடிக்கப் போறாரு..?” இட்டிலிக்குத் தோதாகத் தொட்டுக் கொள்ள கொத்தமல்லிச் சட்னி அரைத்து எடுத்து கிண்ணத்துக்குள்  வைத்தபடியே அவனைப் பார்க்கிறாள் சாரதா.

“நீ தலை எடுத்தாத் தான் நாங்க நிமிர முடியும். நீ தெனம் ஏதாச்சும் ஒண்ணு சொல்லிட்டு வரே. படிச்சு முடிச்சு ஒரு வருஷமாகப் போவுது.. இன்னும் நீ உட்கார்ந்த இடத்துலயே இருந்தீன்னா….எப்புடி.? நெனச்சுப் பாரு. உனக்குன்னு குடும்பம் ஆக வேணாமா?

வேலை இருந்தாத்தான மேல்கொண்டு நடக்கும்..? உன் நெலம புரிஞ்சு யோசிடா தம்பி.”

“எல்லாம் என் நெலம புரிஞ்சுதான் நான் இருக்குறேன். இந்தத் தீவாளிக்கு ஏதாச்சும் கேட்டனா..? நீயே சொல்லு… நல்ல துணி மணி வாங்கித்தரச் சொன்னா… நீ வேலைக்கிப் போற பவுசுக்கு புதுசு கேட்குதோ..?ன்னு நொண்டிடியடிப்பீங்க.

வெடி வாங்கித் தரச் சொன்னா, நான் கஷ்டப்பட்டு சம்பாரிச்ச பணத்த நீ புஸ்வாணம் விடத் தேவையில்லன்னு சாக்கு சொல்லுவீங்க. இதெல்லாம் எதுக்குண்டு தான் நான் வாயைப் பொத்திகினு இருக்கேன். நான் என்னா இப்ப உன்னிய எனக்குக் கலியாணம் முடிச்சு வெய்யினா கேட்டேன்.. ஒரு பைக்கு தானே கேட்டேன்… அதுக்கு ஏன் இப்படி நொய்யி நோய்யின்னு பேச வைக்கிறே?

ஆனாலும் இன்னாம்மா நீ….எப்பப் பாரு ‘இல்லே பாட்டுப் பாடி’ அழுதுக்கிட்டு. என் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் எப்பிடி இருக்கானுவுங்க தெரியுமா? நான் ஒருத்தன் மட்டும் தான் பஞ்சத்துக்கு பெறந்த பரதேசி. ம்ஹும்…..அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு நாளைக்கு புது பைக் வேணும். அம்புட்டுத் தான். அந்தாள லோன் போடச் சொல்லு…இல்லாட்டி நீ உன் நகையை வித்து எனக்கு பைக் வாங்கிக் கொடு…நான் சம்பாதிச்சு உனக்கு நகை பண்ணிப் போடறேன்.”

“போடா உன் வேலையைப் பார்த்துட்டு… நகையை விக்கணுமாம்? தங்கம் என்ன தெருவிலயா போட்டுக் கூவி கூவி விக்கிறாங்க. இவன் வாங்கித் தருவானாம்… நான் நம்பி… நல்ல கதையா இருக்குது? அப்பா காதுல விழுந்துச்சுன்னா அம்புட்டுத்தேன். போ இங்கிட்டிருந்து.. வேற வேலை எதுனா இருந்திச்சின்னாப் போய்ப் பாரு.”

“எம்மா…..அவரு இருக்காரா.? வந்தாச்சா?”

“யார்ரா….அவுரு…?”

“அதான் உன் புருஷன்….!”

“வாயை மூடு…! அப்பான்னு மருவாதியாக் கூப்பிடு  …! அவரு அப்பமே வந்துட்டாரு.”

“இப்ப எங்க? யார்கிட்ட போன்ல என்னியபத்தி குத்தம் குறை சொல்லி பாரதம் படிக்கிறாரா?”

“ரூம்ல…..க்ரானிகல் நியூஸ் பேப்பர்ல க்ராஸ் வார்ட் வருமே..அத்த எடுத்து வெச்சுக்கிட்டு  மண்டையைப் போட்டுக் குழப்பிட்டு இருப்பாரு..!”

“அவுரு அதுக்குக் கூட சரிப்பட்டு வர மாட்டாரு.”

“அவரு பாட்டுக்கு என்னத்த செஞ்சாலும் நீ ஏண்டா… தப்பாவே நினைக்கிறே ? பெத்தவங்களை, பெரியவங்களை வாய்க்கு வந்தபடில்லாம்  பேசிடக் கூடாது சிவராமா… எம்புட்டு வாட்டி சொல்லுறது. மரியாதையாப் பேசக் கத்துக்கண்டு. அம்மா எப்பவும் நல்லது தான் சொல்லுவா. நான் சொல்லுறதையாச்சும் நீ கேளுப்பா.”

“அவரு மட்டும் என்னிக்காச்சும் யாருக்காச்சும் மரியாதை கொடுத்து பேசிருக்காரா?அட்லீஸ்ட் உனக்காச்சும்….! நீயே கேட்டுப் பாரு. அது… வேறொண்ணுமில்லம்மா… தான் தான் சம்பாதிக்கிறோம்னு மண்டை கர்வம்… திமிர்… கொழுப்பு… அந்தாளுக்கு…! இவரப்  போயி யார்மா உன் தலைல கட்டி வெச்சது..! சுயநலம் பிடிச்ச ஆளு.”

“வாயை மூடுடா…!”

“ஏன்…உன் புருஷனைச் சொன்னா உனக்குக் கோவம் பொத்துக்கிட்டு வருது? காலைல ஒரு நூறு ரூபாய் கேட்டதுக்கு, நாக்கைப் பிடுங்கறாப்பல எம்புட்டு கேள்வி கேட்குறாரு. நீயும் கேட்டுக்கிட்டு தானே வாயை மூடிட்டு இருந்தே. எனக்கு இப்ப நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது. நாளைக்கு எனக்கு புது பைக் கண்டிப்பா வேணும்.”

“இப்ப நீ உன் பேருக்குப் பின்னாடி ஒரு வாலைக் ஒட்ட வெச்சிருக்கியே, பிஏ டிகிரி வாலு…! அது மட்டும் என்ன சும்மா வந்து தர்மத்துக்கு ஒட்டிக்கிச்சா. அவரில்லாமல் உன் பேருக்கு பின்னாடி பட்டம் பறக்குமா? நெனெச்சுப் பாரு.. அன்னிக்கு ஆயிரமாயிரமா  உன் படிப்பு செலவுக்குக் கொட்டினவர் தான்… இப்பத் தான் நூறு ரூபாய்க்கு கணக்கு கேட்குறாரு… எதுக்குன்னு விஷயத்தைச் சொல்லி வாங்கிட்டு போறது தானே நீ..? உனக்கென்னாத்துக்கு அம்புட்டு ரோஷம்?”

“சரி…சரி….இப்ப நீயே அவுரு காதுல போட்டு வெய்யி, எனக்கு ஹோண்டா பைக்கு வேணுமின்னு..சொல்றியா?”

“திடுதிப்புன்னு பைக் வேணுமுன்னா துட்டுக்கு எங்கிட்டுப் போறது. நீ கேக்குறதும் அநியாயமால்ல இருக்குது.”

“நீ அந்தாளுக்கு வக்காலத்துக்கு வரே பாரு….! ஒழுங்கா இருக்குறவனையும் கிரிமினல் பண்ணிடுவீங்க ரெண்டு பேருமா சேர்ந்து…! நான் போறேன்.”

“இந்தாடா… கையைக் அலம்பிட்டு வா… சூடா இட்டிலியும், மல்லி சட்னியும் செஞ்சிருக்கேன்… போட்டுத் தரேன்… தின்னுட்டு தொலை.. என் கோபத்தைக் கிளறாத. வீட்டை விட உனக்கு உன்னோட உருப்படாத ஃப்ரெண்ட்ஸ் தான் முக்கியமா போயிட்டாங்க இல்லே…? பசிக்குமில்ல… இந்தா இட்டிலி,  தட்டையாச்சும் கையால வாங்கு.”

“அதென்னமோ நீங்களே தின்னுங்க….நான் போறேன்…!”

“டேய்….இப்ப இந்தத் தட்டை நீ வாங்கப்போறியா இல்லியா..? இப்பிடி யார் மேலயாச்சும் எப்பப்பாரு கோபப்பட்டுக்கினு சாப்பிடாமப் போனே… பெறவு சோத்துக்காக தெருநாய் கணக்கா அலைய வேண்டியது தான். நெனப்பிருக்கட்டும்.” எச்சரிக்கும் குரலில் எரிச்சலோடு அம்மா நீட்டிய தட்டை வெடுக்கெண்டு பிடுங்கிய சிவராமன் நேரே வாசலுக்கு நடக்கிறான்.

“சிவராமா…எங்கடா….போறே…!”

“ம்ம்ம்….தெருநாய் கணக்கா அலையப் போறேண்டு  சாபம் கொடுத்தீல்ல, அதான்… எப்படின்னு பார்க்கப் போறேன். என்ன இந்த உலகத்துல நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் இருக்கறதா உங்களுக்கு நினைப்பா… உங்களுக்குத் தான் என்னிய விட்டா யாருமில்லை. அதைத் தெரிஞ்சுக்கங்க  முதல்ல. எனக்கு ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ். என் பேரைச் சொன்னால் உசுரக் கூடக் கொடுப்பாங்க. தெருநாய் மாதிரி அலையப் போறேனாம்… நெனப்பப் பாரு.” கோபத்துடன் கத்திக் கொண்டே வாசல் படியில் கையில் தட்டோடு இறங்கி நிற்கவும்,

எங்கிருந்தோ ஓடி வந்த தெருநாய் இவன் முன்னே வாலாட்டிக் கொண்டு நின்று நிமிர்ந்து இவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தது,

“அண்ணே…ரொம்பப் பசிக்குது…ஏதாச்சும் இருந்தா நீயாச்சும் போட மாட்டியா”  அந்தக் கண்களின் பாஷையைப் புரிந்து கொண்ட சிவராமன் சற்றும் யோசிக்காமல் தட்டிலிருந்த இட்டிலிகளை அந்த நாய்க்கு வைத்தான்.

அவனை நன்றியோடு நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு, குனிந்து கொண்டு வாலாட்டியபடியே ஒரு இட்டிலியை கவ்விக் கொண்டது.

“எம்புட்டுத் திமிரு இருந்தா நீ இந்தக் காரியம் செய்வே…? விலைவாசி விக்கிற விலையில, நாய்க்கு இட்டிலி கேக்குதோ? எம்புட்டு தகிரியம் திங்கக் கொடுத்தா அப்பிடியே தெருவுல நாய்க்குப் போட ..!  உனக்கு இனிமேட்டு இங்க  சோறு கிடைக்காது. எந்த நாய் உனக்குச் சோறு போடுதுன்னு நானும் பார்க்கறேன்” உள்ளிருந்து தான் கண்ட காட்சியில் கோபப்பட்டுக் கொண்டு ஓடிவந்த சாரதா. ஏதோ தன் மகன் செய்யக் கூடாத காரியத்தை செய்து விட்டது மாதிரி கத்தித் தீர்த்தாள் .

“இன்னொருவாட்டி உனக்கு யாரு இப்படி இட்டிலியைப் போட்டு கையில நீட்டப் போறாங்க… இப்படியே பட்டினி கெட..அப்பவாச்சும் புத்தி வருதாப் பாப்போம்.”

“யாருக்கு வேணும்…?  இந்தா இட்டிலி தட்டைப் பிடி.

போம்மா… நீயும் உன் இட்டிலியும் வீணாப்போன சட்டினியும்..! யாருக்கு வேணும்..?” கனன்று கொண்டிருந்த மொத்த கோபத்தையும்  கதவில் காண்பித்து விட்டு, விடு விடென்று வாசல் கேட்டை ஓங்கி அடித்துச் சார்த்திவிட்டு மறைகிறான் சிவராமன்.

துர்வாசர் புனர்ஜென்மம் எடுத்து … அப்படியே இவன் மூக்கு மேலே அட்டென்ஷன்ல நிக்கிறாரு போல. வயசுப் பிள்ளைக்கு இத்தனை கோபம் ஆகாதுப்பா. அலுத்துக் கொண்டே காலித்தட்டை எடுத்துக் கொண்டு சமையலறை நோக்கிப் போகிறாள்.

பாவம் சிவராமன்… அவன் மட்டும் என்ன செய்வான். ‘வெறும் பி.ஏ  வுக்கு இங்க வேலையில்லைப்பா’… என்று சொல்லி அவனை ஓவ்வொரு கம்பெனியும் நிராகரிக்கும்போதேல்லாம்… ‘சார்… இது உப்புப் போட்டு தின்ன பி.ஏ ஸார் ‘ என்று உரக்க கத்திவிட்டு வரவேண்டும் போலத் தானிருக்கும்.

சாரதாவுக்கு  தாகம் தொண்டையை அடைக்க, ஃப்ரிட்ஜைத் திறந்து தண்ணீர் பாட்டில் எடுக்கக் குனிந்து பார்க்கும் போது தான் தெரிந்தது.. பேருக்கு ஒரு பாட்டில் கூட அங்கு இல்லை…

‘கஷ்டம் கஷ்டம்….ஒரு பாட்டில் தண்ணீர்  கூட பிடிச்சு வைக்க ஒரு மனுஷன் கிடையாது இங்கே… எல்லாம் நானே தான் செய்ய வேண்டியிருக்கு. நான் தண்ணியப்  பிடிச்சு ஃப்ரிட்ஜ்ல வெச்சா மாத்திரம், ஒரு மணி நேரத்தில் அத்தனை பாட்டிலையும் காலி பண்ணி உருட்டி விடத் தெரியும். அங்க பாரு… ஏதோ பறக்கும் தட்டு வி​ளையாடினாப்போல மூலைக்கு மூலை காலி பாட்டிலும், காப்பி டம்பளரும் சிதறிக் கிடக்கறத. இந்த லட்சணத்துல இவிங்களுக்கு  கோபத்துக்கு ஒண்ணும் குறைச்சலில்லை.’ முனகியபடியே குடத்துத்திலிருந்து ஒரு  சொம்பில் தண்ணீரை மொண்டு எடுத்து கட கடவென்று குடித்ததும்… உடம்பு முழுதும் புத்துணர்ச்சி பரவியது போலிருந்தது அவளுக்கு.

“சாரதா” உள்ளிருந்து கணவரின் குரல்….!

“இதோ….வந்துட்டேங்க!” இவளின் பதிலும்.

“உன் சீமந்தப் புத்திரன் வந்தாச்சா….இல்லை இன்னும் பொறுக்கிட்டு தான் இருக்கானா?”

“நானா கண்டேன்….என்னிய ஏன் இப்ப வேண்டாத வம்புக்கு இழுக்கறீங்க ? நீங்களாச்சு உங்க புள்ளயாச்சு..”

“இப்படி விட்டேத்தியா பதில் சொல்ல எப்பக் கத்துகிட்டே..? யார் சொல்லிக் கொடுக்கிறாங்க… அந்தப் பொறம்போக்கா …?” என்று கேட்டபடியே உள்ளிருந்து வரும் கணவரைப் பார்க்கப் பார்க்க எதிர்த்துப் பேச நாக்குத் துடித்தது. அடக்கிக் கொண்டாள். ‘இப்ப நான் என்ன சொன்னாலும் இவர் கிட்ட எடுபடாது….வீணா சண்டை வளரும்… வேண்டாம்’ என்று மனதை அடக்கி வைத்தாள்.

“என்ன பண்ணிருக்கே….போடு. தின்னுட்டு தூங்கறேன். நான் ஒருத்தன் அதுக்கு மட்டும் தானே இருக்கேன்னு உங்க ரெண்டு பேருக்கும் நினைப்பு.”

“என்ன க்ராஸ் வார்ட்ல வார்த்தைங்க  ஒண்ணும் சரியா வந்து விழலையா? அதான் இங்க வந்து கொட்டறீங்களா..? நமக்கு இருக்கறதே ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு கருவேப்பலை கொத்தாட்டம் ஒத்தப் பிள்ளை… அத்தப் போயி நீங்களே பொறம்போக்குன்னு சொன்னா எப்பிடிங்க?” இட்டிலியை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தவள் அதை அப்படியே டைனிங் டேபிள் மீது வைத்து விட்டு, எமெர்ஜென்சி கைவிளக்கை எடுத்து வர மீண்டும் சமையலறைக்குள் நுழையும்போது போன மின்சாரம் ரீங்காரமாய் வந்தது.

ஊதா…..ஊதா…..

ஊதாக் கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்

நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்….

நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்…

ரோஜா……ரோஜா…..கலரு பொம்மி…

உனக்கு யாரு  மம்மி…..!

ஏய் நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடணும்…!

ஏய் நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடணும்…!

ஊதா……ஊதா…..!

தொலைக்காட்சிப் பெட்டியில் வருத்தப் படாத வாலிபர்கள் ஆடிக் கொண்டிருக்க… சாரதாவுக்கு எரிச்சல் வந்தது.

உன் தலையில் அம்மிக் கல்லைத் தூக்கிப் போடணும்.. பாட்டைப் பாரு பாட்டை…..டொக்கென்று  டிவியை  அணைத்து விட்டு, கரையான்கள் மாதிரி சினிமா உலகத்துக்குள்ளார நுழைஞ்சுட்டானுங்க.. இவனுங்களாலத் தான் வளருற புள்ளைங்க கெட்டுக் குட்டிச் சுவராப் போறாய்ங்க. ஏற்கனவே நாடு தள்ளாடுது… இனிமேட்டு ஒரு ‘கௌரவமும்’ பார்க்க முடியாது….எல்லாம் டண்டனக்கா தான். அம்புட்டு  சானல்லயும் இதேப்  பாட்டைப் போட்டு மோசம் செய்யுது.

“சாரதா… பார்த்தீல்ல உலகத்த… அதான் சொல்றேன்.. அந்தக் கருவேப்பலைக் கொத்து நாளைக்கு உன்னோட சாவிக்கொத்தைப் பிடுங்கிட்டு ஓடும் போது தான் உனக்கு மண்டேல ஏறும்… அது வரைக்கும் பாசம் கண்ணை மறைக்கும்.”

“அப்ப நீங்க உங்கம்மா அப்பாகிட்ட அப்படித்தான் செஞ்சீங்களா…? நீங்க அவுங்க இருக்குற வரைக்கும் அவுங்களை உங்க உள்ளங்கையில வெச்சுத் தானே தாங்கு தாங்குன்னு தாங்கினீங்க..? உங்க ரத்தம் தான அங்கிட்டும் ஓடுது… உங்க பிள்ளையும் உங்கள மாதிரி தான இருப்பான். பார்த்துக்கிட்டே இருங்க. என் வாக்குத் தான் பலிக்கப் போவுது.”

“கிளிச்சுச்சு. நீ கனவு காணுற அந்தக் காலமெல்லாம் மலையேறிப் போச்சுடி… நீ இன்னும் புரியாதவளா இருக்கே. நாலு இடம் போனாத் தான் உலகம் தெரியும். நீ கிணத்துத் தவளை. உன்னோட உலகம் சமையல்கட்டும் எச்சப்  பாத்திரமும் மட்டும் தான். அக்கம் பக்கம் வம்படிக்கக் கூட  ஒஞ்ஜோட்டு புள்ளைங்க இங்கன யாரும் கிடையாது. எல்லாருமே ரெண்டு சம்பாத்தியக் குடும்பமாப் போச்சு. ஞாயித்துக் கிழமை தவுற மத்த நாள்ல பூட்டு தானே வீட்டை காக்குது. எங்க ஆபீஸ் அக்கவுண்டண்ட் பார்த்தசாரதி இருக்காரில்ல…?”

“ஆமா… அவருக்கு என்னாச்சு? ஹார்ட் அட்டாக்கா..? அல்லது அவுரு வீட்டாண்ட திருட்டுப் போயிரிச்சா..?”

“ஏண்டி…உனக்கு நல்லதே தோணாதா?”

“இப்பல்லாம் நல்லதே நடக்க மாட்டேங்குதே. எங்கிட்டுப் பார்த்தாலும் இப்படித் தான இருக்குது…அதான்..நீங்க சொல்லுங்க.

அப்ப அவுருக்கு என்னாச்சு?”

“ஹார்ட் அட்டாக் தானா தான் வருமா என்ன..? பெத்ததுங்க நெஞ்சுல ஓங்கிக் குத்தாமல் செய்கையால குத்தினாலும் வலி  வரும்… அவரோட பையன் ரெண்டு மூணு நாளா வீட்டுக்கே வரலையாம். ஆபீசுக்கும் போகலையாம். திடீர்னு நேத்து வந்து மாலையும் கழுத்துமா வீட்டு வாசல்ல வந்து நின்னானாம்.”

“அடப் பாவமே…..! ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிகிட்டானா…?”

“நானே சீரியஸ் விஷயம் சொல்ல வாரேன். உனக்கென்ன  இப்ப ராகத்தோட பாட்டுக் கேட்குது..? நீயும் இப்பல்லாம் இந்தப் பாளா போற டிவி யைப் பார்த்து ரொம்பவே கேட்டுப் போயிட்டே. எப்பப்பாரு…..ஏதாச்சும் பாடிக்கிட்டு….!”

“ம்ம்ம்… சரி, சாரி… சொல்லுங்க…சொல்லுங்க என்னாச்சு? அவரு ஏத்துக்கிட்டாரா.? பார்த்தசாரதி பக்கா அய்யங்காரு குடும்பம்… அந்த மைதிலி மாமி செய்யுற புளியோதரை தொட்டாலே கை மணக்கும்… இல்லீங்க.”

“ஆமாங்க…!” என்று தன் குரலை பெண் குரல் போல மாற்றிச் சொல்லிக் காட்டியவர், “என்னை முழுசா சொல்ல விட மாட்டியே… சரி ஒண்ணும் வேண்டாம்… உன் மரமண்டைக்கு தீனியை தவிர  வேற ஒண்ணும் ஏறாதுன்னு தெரிஞ்சு போச்சு. இட்டிலியைப் போடு.”

“என்னங்க நீங்க….அப்படி என்னத்த சொல்லிப்புட்டேன்னு இம்புட்டு கோபம் உங்களுக்கு…? மேல சொல்லுங்க..இட்டிலி எடுத்து வெக்கிறேன்.”

“கூட வேலை பார்குற ஒரு தெலுங்குக்கார பிள்ளைய . கல்யாணம் கட்டி கூட்டிட்டு வந்திருக்கான். இவரு பெத்த பிள்ளையின்னு கூட நினைக்காம, போடா வெளிலன்னு துரத்தி விட்டுட்டு இத்தோட முடிஞ்சி போச்சுன்னு சொல்லி ரெண்டு பக்கெட் தண்ணியை தலயில் கொட்டிக்கிட்டாராம்.”

“அதனால ஜலதோஷமில்ல பிடிச்சிருக்கும். இப்பக் கிடந்து வருத்தப் பட்டு என்ன பிரயோஜனம்.? ஆரம்பத்திலிருந்து கண்டிச்சு வெச்சிருந்தா இப்ப இந்த நிலை வராதில்ல. இப்ப என்னாச்சு..? பெத்தத தொரத்திட்டு ரெண்டு பெருசும் அழுதுகிட்டு  நிக்கிறாங்களா?  பாவம்ங்க…அவுங்க.”

“அதான் சாரதா …நானும் சொல்றேன்….இன்னைக்கு அவருக்கு,  நாளைக்கு நமக்குன்னு ஆயிடக் கூடாதில்லையா..?”

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுங்க..நம்ம பையன் தங்கக்குடம். அந்த வளிக்கெல்லாம் போயிறமாட்டான்.”

“ஆமா..உன்கிட்ட வந்து சொன்னான்… இப்படியே அவனைத் தலையில ஏத்தி வெச்சுக் கெரகமாடிக் கொண்டாடு. அவன் அப்படியே உன்னை நசுக்கிட்டு உருளப் போறான். உன் பாசம் உன் கண்ணை,  காதை,வாயை அடைச்சிடுத்து.. என்ன செய்யறது. உனக்கெல்லாம் பட்டாக் கூடத் தெரியாது..”

“வயசுப் பசங்க கொஞ்சம் அப்படி இப்படித் தான் இருக்குங்க, நாம பெரியவங்க அவங்களை கொஞ்சமாச்சும் நம்பணும். எல்லாத்தையும் ஒரே மாதிரி பார்த்தால் கஷ்டமில்லையா. இதோ… இப்ப இட்டிலி கூட திங்காமல் தெருநாய்க்கு போட்டுட்டு கோபத்தோட வெளிய கெளம்பிட்டான். நீங்க எப்பப்பாரு நீங்க அவனை எதாச்சும் சொல்லி அவன் மனசை வேதனை செய்யுறத மொதல்ல கொஞ்சம் நிப்பாட்டுங்க. உலகம் தெரியாத பிள்ள அவன். இப்பத்தான் அவனுக்கு நல்லது கேட்டது விளங்குது.”

“அவனுக்காடி உலகம் தெரியாது. உலகத்தைக் கூறு போட்டு வித்துப்புடுவாங்குங்கடி. அவனும் அவன் கூட்டாளிங்களும். அவன் முழியப் பார்த்தாலே எனக்கு அவன் ஏதோ தகிடுதத்தம் பண்ணிட்டு வந்த மாதிரியே இருக்கும். என்னியப் பார்த்தாலே திருட்டு முழி முழிக்கிறான். அவனை எப்படி நம்பச் சொல்றே நீ?”

“ஹலோ…!” என்று இழுத்த சாரதா “நம்ம முழில கொஞ்சமாச்சும் அவனுக்கும் இருக்குமில்ல. என்னமோ நம்ம ராஜபார்வை பார்க்கிறாப்பல, அவனை என்ன வேணா உங்க இஷ்டத்துக்கு சொல்லிக்கிருங்க. ஆனா அவனைத் திருடு, கொறடுன்னு மட்டும் எதாச்சும் சொன்னீங்கன்னா எனக்குக் கெட்ட கோபம் வரும், இப்பமே சொல்லிட்டேன்… ஆமா.”

“அவனைச் சொன்னா உனக்கு பாசம் பொத்துக்கிட்டு வந்துடுமே. எப்டியோ நீ அவனுக்கு அசாத்தியச் செல்லம் கொடுத்து, அவனும்   கெட்டு குட்டிச்சுவரா போயாச்சு. இனிமேட்டு சாண் போனா என்ன முழம் போனா எனக்கென்ன? நேத்திக்கி நான் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வரும்போது வழக்கமா வர வழில வராமல் தீபாவளிக் கூட்டமா இருந்திச்சேன்னு  கொஞ்சம் சுத்தி வந்தேன் பாரு… வரக்குள்ள அங்கன  ஒரு பெட்டிக்கடையில நம்ம அய்யா செம ஸ்டைலா நிக்கிறாரு… சாம்பிராணிப் பொகை  போடுற சாயுபு கணக்கா. ஊதி ஊதி புகையை விட்டுக்கிட்டு… கூடவே இன்னும் ரெண்டு தத்தாரிப் பசங்க, இவனுக்கு ஜால்ரா போட. அப்டியே… வண்டியை விட்டு எறங்கி ரெண்டு சாத்து சாத்தினா என்னன்னு தோணிச்சு. இருந்தும் கட்டுப் படுத்திகிட்டேன். எதுக்குத் தெரியுமா?”

“அச்சச்சோ…..என்னது…! .சிகரெட் பிடிக்கிறானா..? எதுக்கு சாத்தாம விட்டீங்க..?”

“என் மானம் போயிறக் கூடாது பாரு….அதுக்காண்டி தான், கண்டுக்கிடாம விட்டுட்டேன். அதான் இன்னிக்கி காலீல நூறு ரூபாய் கேட்டான் பாரு… அப்ப சேர்த்து வெச்சு நான் கொடுத்த டோசுல, இனிமேட்டு வாயில கொள்ளிக்கட்டையை செருகும்போது அவனுக்கு நான் சொன்ன நெனப்பு தான் வரும் பாரு..! “புலம்பிக் கொண்டே இட்டிலியை சாப்பிட்டு முடித்தவர் எழுந்து கையலம்பிவிட்டு பெரிதாக ஒரு ஏப்பம் விட்டுவிட்டு படுக்கையை நோக்கி கொட்டாவி விட்டுக் கொண்டே போனார்.

“என்னங்க நீங்க…இப்படி ஒரு குண்டைத் தூக்கி போட்டுட்டு போறீங்க. நம்ம சிவராமனா சிகரெட் பிடிக்கிறான் ..? எனக்குத் தெரியவே தெரியாது. ஆச்சரியமா இருக்குதே. நம்பவே முடியலீங்க.”

“சிவராமன்னு பேரு வெச்சா சிகரெட்டெல்லாம் பிடிக்க மாட்டான்னு நினைச்சியாக்கும்? இதுக்கெல்லாம் அவன் ஊருக்கும் உனக்கும் பத்திரிகை வெச்சுட்டுத் தான் ஆரம்பிப்பானா என்ன..? ஹ ஹா….நம்பவே முடியலியாம். இப்படிப் பிள்ளையை நம்பினா, மத்ததெல்லாம் எப்புடி நம்ப முடியும்? சொல்லுறவங்களக் கூட நம்ப முடியாது. எப்பிடியோ போ, எனக்குத் தூக்கம் வருது.”

“இருங்க…..அவன் வரட்டும் இன்னிக்கு. நான் ரெண்டுல ஒண்ணு பார்த்துப்புடறேன். அவன….!” கடைசி இட்டிலி தொண்டைக்குள் இறங்காமல் அடைக்கவும், சாரதா  தட்டை எடுத்துக் கொண்டு எழுந்தவள்… ‘இன்னும் இவனால என்னவெல்லாம் பிரச்சனைகள் வரப்போகுதோ…? முருகா…..அந்தப் பிள்ளைக்கு நல்ல புத்தியைக் கொடுத்து ஒரு நல்ல வேலையையும்  கொடுத்து உட்கார வெச்சிடேன், உனக்குப் பழனிக்கு வந்து பாலாபிஷேகம் செய்யறேன்.’

அதற்குள் வாசல் கேட்டுத் திறக்கும் சப்தம் கேட்டு எட்டிப் பார்த்த சாரதாவுக்கு , சிவராமனின் முகத்தைப் பார்த்ததும் கொஞ்சம் ஆறுதலாகவும் நிறைய கோபமும் சேர்த்தே வந்தது.

அவன் உள்ளே வரக் காத்திருந்தவள் போல…

“வர வர உன் போக்குவரத்தே சரியில்லை….ஆமா…நீ சிகரெட் பிடிக்கிறியா?  எங்க ஊது… பார்க்கலாம். அம்புட்டுப் பெரியவனாயிட்டியா  நீ? அப்பா…அன்னிக்கி  உன்னிய தெருவுல சிகரெட்டு பிடிக்கிறதைப் பார்த்துபுட்டு வந்து இங்க குதி குதின்னு குதிக்கிறாரு….என்னமோ நான் தான் உன் கையில திணிச்சு புகை விடுடா மகனேண்டு  சொன்ன மாதிரியும்.. அதான் நீ கேட்ட ரூபாயைக் கூட தராம உன்னை காலீல திட்டினாராம். ஏன் தான் இப்படியெல்லாம் செய்யுறியோ?”

“நீங்க பாட்டுக்கு யாரையோ பார்த்துட்டு நான் தான்னு சொன்னால், அதுக்கெல்லாம் நான் பொறுப்பு ஏத்துக்கிட முடியாது.” கோபத்துடன் கத்திவிட்டு சாப்பிடாமல்,  டிவியைப் போட்டவன் அதை  இன்னும் சற்றுப் பெரிதாக வைத்துக் கொண்டு அதைத் தீவிரமாகப் பார்ப்பது போல சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான் சிவராமன்.

“இப்பவாச்சும்…வந்து சாப்பிடு வா…!” பாசம் மேலிட்டது சாரதாவுக்கு.

“நான் சாப்பிட்டாச்சு.”

“சமைச்சது அம்புட்டும் வீணாப் போகுதில்ல….உன் கோபத்தை சாப்பாட்டு மேல ஏன் காமிக்கிறே?”

“அதான் வாசல்ல நாய் இருக்கே,இனிமேட்டு அதுக்குப் போடு….நன்றியாவாச்சும் இருக்கும்…அதான வேணும் உங்களுக்கு..!”

“ஏண்டா இப்படில்லாம் பேசறே..? என்னாச்சுடா உனக்கு…..மூஞ்சியே சரியில்லை..வெளில எதாச்சும் பிரச்சனையா? மூஞ்சியே பேய் அரைஞ்சாப்பல இருக்குது….?”

“காசில்லாம சுத்தினா மூஞ்சி பேயறைஞ்சாப்பல தான்மா இருக்கும். எனக்கு வெளில ஒரு பிரச்சனையும் இல்ல…அம்புட்டும் வீட்டுக்குள்ளாற தான். அதான் பைக் வாங்கித் தரச் சொல்லிருக்கேன். சொன்னியா அவுருகிட்ட. என்ன சொன்னாரு.”

“ம்ம்ம்…சொல்றேன்….சொல்றேன்….” என்று நகர்ந்தவள்,

இவனோட இப்பப் பேசினா சண்டை வளரும், ஊகித்தபடி “டேய்..சிவராமா ,கதவை சார்த்தி பூட்டு….நான் படுக்கப் போறேன். பசிச்சா எடுத்துப் போட்டு சாப்பிடு. ஐயோ ராமா…இந்த இடுப்பு இந்த வலி வலிக்கிதே…அயோடெக்ஸ் எங்கிட்டு இருக்கோ..தேடணும்” சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்று மறைந்தாள் சாரதா.

“யாரை நம்பி நான் பொறந்தேன்..

போங்கடாப் போங்க…
என் காலம் வெல்லும்,
வென்ற பின்னே வாங்கடா வாங்க…
குளத்திலே தண்ணியில்லே
கொக்கும் இல்லே மீனும் இல்லே
பெட்டியிலே பணமில்லே
பெத்த புள்ளே சொந்தமில்லே…
தென்னைய பெத்தா இளநீரு
பிள்ளைய பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனமே பித்தம்மா
பிள்ளையின் மனமே கல்லம்மா…

“ஆமா…..இவனுங்க வேற…கல்லு…மண்ணுன்னு… சொல்ல வந்திட்டாய்ங்க” அவசரமாக டிவியை அணைத்தான் சிவராமன்.

அறைக்குள் அப்பாவும் அம்மாவும் காரசாரமாய் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் ஹால் வரைக்கும் கேட்டது.

இவனுக்கும் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவர்களும் உரக்கப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“இவனெல்லாம் உருப்பட மாட்டாண்டி…..இவனுக்கெல்லாம் நீ வக்காலத்து வாங்கிட்டு வராத….பைக்கும் கிடையாது…அவனுக்கு எந்த சோக்கும் கிடையாது.உருப்படாத பய…. நடந்து போகச்சொல்லு. அப்பத்தான் சொகத்தோட அருமை தெரியும். நம்ம நிம்மதியைக் கெடுக்கறதே அவனுக்குப் பொளப்பு. எத்தனை பசங்க படிச்சமா வேலைக்குப் போனமான்னு இருக்குறாங்க…நமக்குன்னு…என் கர்மம்….!நாட்டுல என்ன வேலையா இல்லே….? இவனுக்கு சொகுசா உட்கார்ந்து தண்டச் சோறு தின்னக் கேக்குது.

நீ பேசாம படுடி….பிள்ளைக்கு பைக்கு வேணுமாம் பைக்கு…. அவனுக்கு இன்னைக்கு பைக்கு வேணும்பான் ..நாளைக்கு புதுசா செல்ஃபோன் வேணும்பான். அவன் கேக்குறத பறிச்சுக் கொடுக்க எல்லாம் மரத்துலயா முளைச்சு நிக்குது. பெத்தவங்க கஷ்டம் தெரியாத பயபுள்ள… நடுத்தெருவுல நிப்பாட்டினாத்தான் வெவரம் வெளங்கும். நானும் இவன் வயசைத் தாண்டி வந்தவன் தான..ம்க்க்க்க்க்க்க்க்…” என்று செருமிய சத்தம் கேட்டதும்…சிவராமனின் கன்னத்தில் அறைந்தது போலிருந்தது அந்த வார்த்தைகள்.

‘இதுக்கெல்லாம் நான் வருத்தப் படமாட்டேன்…இவிங்களுக்கும் நான் யாருன்னு காமிக்கணும்….இது போல உருப்படாத அப்பன்களுக்கு  உணர்த்தணும். எப்பயும் நான் என்ன இப்பிடியேவா இருந்துடப் போறேன்..? என்னவோ சொல்லுவாங்களே..ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு.இவங்க இப்படித் தான். திருந்தாதவிங்க. எப்பப் பாரு கேள்வி கேட்டு கொடஞ்செடுத்து உசுர வாங்கிருவாய்ங்க. இவிங்களுக்கு சம்பாதிச்சாப் போதும்…அது எப்பிடியிருந்தா என்ன?’ சடக்கென்று எழுந்திருந்த சிவராமன் தனக்கு தேவையானதை எடுத்து ஒரு பையில் திணித்துக் கொண்டு கிளம்பினான்.

‘இப்படிப்பட்ட அப்பா,அம்மா இருக்கிறதாலத் தான் நாட்டுல கொலை, கொள்ளை, செயின் ஸ்னாட்ச்சிங், ஜேப்படி எல்லாம் சர்வ சாதாரணமா நடக்குது. இங்கன இருந்தாத் திட்டியே கொன்னுருவாய்ங்க.’

‘வீட்டை விட்டே ஓடிறலாமா..? ஓடிறலாம் ..அப்பத்தான் இவிங்க ரெண்டு பேத்துக்கும் என்னோட அருமையும் புரியும்.’

டிவி ஸ்க்ரீனில் ஒரு வெள்ளைத் தாளை ஒட்டியவன்,

“நான் உருப்படுவதற்காக போகிறேன்

ஒரு வீட்டு நாய்த் தெருநாயாகிறது

நிம்மதியாக இருங்கள்.”

சிவப்பு ஸ்கெட்ச் பேனாவால் அதன் மேல் கொட்டை எழுத்தில்  எழுதிவிட்டு விளக்கை அணைத்துவிட்டு, மெல்லக் கதவைச் சார்த்திவிட்டு  வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

வீடு இருளில் மூழ்கிப் போகிறது.

வாசற்படி கடந்து தெருவுக்கு வந்ததும், அங்கு ஓரமாகப் படுத்திருந்த தெருநாய் இவனைப் பார்த்ததும் வேகமாக எழுந்து நின்று சோம்பல் முறித்து விட்டு தலையை நிமிர்த்திக் கொண்டு இவனைப் பார்த்து, “இந்நேரத்துக்கு இங்கிட்டுப் புறப்பட்ட…’?… விடாமல் குறைக்க ஆரமபித்தது. வீட்டை விட்டு நடக்க நடக்க…நாயும் தொடர்ந்து குரைத்துக் கொண்டே வந்தது.

முதல் முறையாக வீட்டை விட்டு வெளியேறிப் போகிறோம் என்றதும், அவனையும் அறியாமல் ஒரு பயம் வந்து அவனை சூழ்ந்து கொண்டது. நாம சொன்னது போலவே திருடனாகி விடுவோமோ? போலீஸ் லத்தியால் முட்டிக்கி முட்டி அடி வாங்கிக் கம்பி எண்ணுவோமோ? காசு கிரிமினல் ஆக்கிடும்… யாரும் தட்டிக் கேட்க ஆளில்லையின்னா நல்லவன் கூட கிரிமினல் ஆயிறுவானே. நான் செய்யுறது மட்டும் சரியா? நான் இப்போ எங்கிட்டுப் போவேன்?

கால்கள் வீட்டைக் கடந்து நடக்க நடக்க, மனம் நொண்டியடித்தது. உள்ளிருந்து பொங்கி வந்த எண்ணங்கள்  வீட்டுக்குள் அவனை இழுத்தது. மனசாட்சி சாட்டையை உருவியது. ‘அம்மா பாவம்….அப்பாவும் பாவம்..!’ தன்னை உணர்ந்ததும் பாசம் மேலிட்டது.

“பெத்தவன் மனமே பித்தம்மா
பிள்ளையின் மனமே கல்லம்மா.”.

காதுக்குள் பாடல் வரிகள் மீண்டும் ஒலித்தது. சரியாகத் தான் சொல்லியிருக்காங்க. நான் தான் புரிஞ்சுக்கலை.

சிவராமன் அந்த நாயைப் பார்க்கிறான். அதுவும் உடனே நின்று இவனைப் பார்க்கிறது .

எனக்குத் தெரிஞ்சு நான் உனக்கு இன்னிக்கு மட்டும் தான் இட்டிலி வெச்சேன். அதுக்கே நீ  இப்படி வாலாட்டிக்கிட்டு பின்னாடியே வாரியா …இல்லே… நான் இங்கன இல்லாத போனா உனக்கு நாளைக்கி சோறு கிடைக்காதேன்னு குரைக்கிரியா …சீ …போ….! துரத்திப் பார்க்கிறான்.

ச்சே….நானும் ஏன் உன்னைத் துரத்தோணம்?

அதுவும் வாலை ஆட்டியபடியே குரைத்துக்  கொண்டே கூட வருகிறது.

தெரு முழுதும் கடந்திருப்பான். சிவராமன்… நாய்க்குக் கூட நன்றியும், கடமை உணர்வும் இருக்கு… எனக்கில்லையே..? அப்பா சொல்வதிலும் நியாயம் இருக்கு. அவர் சரி தான். நான் தான் மாறணும் .தெரு திரும்புவதற்குள் அவன் மனம் திரும்பிவிட்டது. சிவராமன்  வீட்டை நோக்கித் திரும்புகிறான்.

தான் எழுந்த வேலை முடித்துவிட்டு ஓடிச்சென்று வாலைச் சுருட்டிக் கொண்டு மீண்டும் ஓரமாகப் போய்ப்  படுத்துக் கொள்கிறது அந்த நாய்.

பூனை போல மறுபடியும் வீட்டுக்குள் நுழைந்து கொண்டு கதவைச் சார்த்திக் கொள்கிறான் சிவராமன்.

நுழைந்ததும், முதல் வேலையாக ,அவன் எழுதி ஒட்டிய வெள்ளைத் தாளை டீவி ஸ்க்ரீனிலிருந்து பிய்த்து, ‘ஒரு தெருநாய் என்னை உருப்பட வெச்சிருச்சு’ என்று சொல்லிக் கொண்டே அதைத்  துண்டு துண்டாக கிழித்து ஜன்னல் வழியாக வீசுகிறான்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.