இந்த வார வல்லமையாளர்!
திவாகர்
நாடகம் என்பது நிச்சயமாக கேளிக்கைக்காகவோ பொழுதுபோக்குக்காகவோ நடத்தப்படுவதில்லை என்பதை ஆதிகாலம் முதலே நம் முன்னோர்கள் தெரியப்படுத்தி வந்தார்கள். ஏழாம் நூற்றாண்டு மகேந்திரவர்மன் தன் நாடகங்கள் மூலம் சமூகத்தின், மதங்களின் சீர்கேட்டை விமர்சித்து எழுதி அந்த நாடகங்கள் இன்றளவும் புகழ்பெற்று விளங்குகின்றன. முத்தமிழின் முக்கியமான பகுதி கூட நாடகத்தமிழ்தான். தேசங்களில் அநீதியான ஆட்சியாளர்களை விமர்சிக்கவும் அவர்களின் நீசத்தனத்தை மக்கள் மத்தியில் பரப்பி அவர்களின் போக்கை நீக்கவும் வீதி நாடகங்கள் பெரிதும் பயன்பட்டுவந்தன என்பதை எத்தனையோ இலக்கிய சரித்திர ஆதாரங்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.
காலப்போக்கில் நாடகம் நடத்தும் முறையிலும் அதை அரங்கேற்றும் முறையிலும் எத்தனையோ புதுமைகள் ஏற்பட்டாலும் அதன் அடிப்படைக் கருத்தானது அதாவது பாமரமக்களுக்கு எடுத்துச் செல்லும் நல்ல கருத்துகள் எந்நாளும் மாறப்போவதில்லைதான். மிக நாகரீகமாகவும் மிக நவீன வசதியிலும் வாழும் இந்தக் கால கட்டத்திலும், எத்தனைதான் தொலைக்காட்சியும், திரைப்படமும் நம் வாழும் முனறையிலேயே வந்து நம் பொழுதைப் போக்கினாலும் நாடகத்துக்கென ஒரு பங்கு நம் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறது.
நாடகநடிகர்களின் வாழ்க்கை முழுவதையும் நாம் சாதாரணமாக அலசிப்பார்த்தால் மேடைதான் அவர்கள் உலகம். மேடையில் அவர்கள் அன்றைக்குத் தோன்றும் கதாபாத்திரங்கள்தான் அவர்கள் வாழ்க்கை, மேடையில் நேரடியாகக் கிடைக்கும் ரசிகர்களின் பெருத்த கரகோஷம்தான் அவர்கள் மூச்சுக்காற்றுக்குத் தேவைப்படும் பிராணவாயு. இவர்களுக்கு குடும்பம், வயிற்றுக்கு சாப்பாடு இவையெல்லாம் கூட இரண்டாம்பட்சம்தான். மேடை வாழ்க்கையை அர்த்தமுள்ள ஒன்றாக உணர்கிறார்கள், இவர்கள்.
ராஜபார்ட் ரங்கதுரை என்றொரு திரைப்படம் பார்த்திருப்பீர்கள். ஒரு கூத்தாடியின் கதை அது. சிவாஜி கூத்தாடியாக நடித்து கலக்கியிருப்பார். அதைப் போலவே நாடகமேடையில் இன்றைய வாரம் ஒரு நாடகத்தினைக் காண நேர்ந்தது. நாடகத்தையே லட்சியமாகக் கொண்டு தன் வாழ்க்கையை வழிநடத்திச் செல்லும் நாடக நடிகனின் கதை. நாடகத்தின் பெயரே ‘நாடகம்’ என்று வைத்திருக்கிறார் திரு ஒய்.ஜி.மகேந்திரா. நாடகம் முன்னேறவும் இடர் வந்தபோதும் கைவிடாமல் நாடகத்தை நடத்திக் காட்டும் நாடகக் கலைஞராக வந்து அந்த நாடக நடிகனின் பாத்திரத்திலேயே வாழ்ந்து காட்டியிருக்கிறார் திரு ஒய்.ஜி. மகேந்திரா. அவருக்கு நாடகத் திலகம் என்று பட்டம் உண்டு. அந்தப் பட்டத்தின் பெயருக்கு ஏற்றவாறு நாடகத்தைப் போற்றிப் பாதுகாக்கவேண்டிய அவசியத்தை சமூகத்துக்கு உணர்த்துகிறார்.
நாடகங்கள் பாதுகாக்கப்படவேண்டும். எதிர்காலத்திலும் வளம்பெற வேண்டிய அளவுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை நம் சமுதாயத்துக்கு இருக்கிறது. நாளைய தலைமுறை அப்படியே ரோபோ’வுக்கு மாறினாலும் கூட அந்தப் புதுமைக்கேற்ப நாடகங்கள் சமூகத்துக்கு நல்ல கருத்துகள் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். தமிழுக்கு அழிவில்லை என்பது உண்மையானால் அந்தத் தமிழின் ஒரு அங்கமான நாடகத்துக்கும் அழிவில்லைதானே.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாடகத்துறையில் இருந்து, ஒன்றாய்க் கலந்து, அதனோடே வாழ்ந்துகொண்டிருக்கும் நாடகத் திலகம் திரு ஒய்.ஜி.மகேந்திராவை வல்லமை இந்த வார வல்லமையாளராகக் கௌரவிப்பதில் மகிழ்ச்சியோடு பெருமையும் கொள்கிறது. நாடகங்களை நாம் எல்லோரும் போற்றவேண்டும்,என்ற கோரிக்கையோடு, எங்கள் வாழ்த்துகளையும் திரு ஒய்.ஜி.எம் க்கு வழங்கி மகிழ்கிறோம்.
நாடகத் துறையில் பல சாதனைகளைப் படைத்துள்ள, இந்தவார வல்லமையாளர் நடிகர் திரு.ஒய்.ஜி. மகேந்திரா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.