இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் : (5) க்ரௌஞ்ச பக்ஷி
நடராஜன் கல்பட்டு
தூக்கணங்குருவி பற்றி எழுதிய போது அதன் துர் குணம் பற்றியும் நான் சொல்லிஇருந்தேன். ஆண் பறவை ஒரு கூடு கட்டி பின், ஒரு பெண் பறவை அதனுடன் ஜோடி சேர்ந்தவுடன், ஆண் மேலும் ஒன்று இரண்டு என பல கூடுகள் கட்டி பல புதிய ஜோடிகள் சேர்த்துக் கொண்டு வாழ்ந்திடும் என்று.
அதற்கு நேர் எதிர் ஆங்கிலத்தில் Sarus crane என்று அழைக்கப் படும் கிரௌன்ச பக்ஷி.
கொக்கு இனத்திலேயே மிக உயரமானது கிரௌன்ச பக்ஷி. இந்தப் பறவையை தென் இந்தியாவில் காண முடியாது. வட இந்தியாவில் ஹரியானா, டில்லி, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வயல் வெளிகளிலும் தரிசு நிலங்களிலும் இப் பறவைகளைக் காண முடியும்.
வால்மீகி ராமாயணம் பிறக்கக் காரண கர்த்தா என நமது புராண இதிகாசங்களிலும் சமிஸ்கிருத கவிதைகளிலும் இடம் பெற்றுள்ள பறவை இந்த கிரௌஞ்ச பட்சி. .
இப்பறவையின் ஓர் அபூர்வ குணம், ஒரு முறை ஜோடி சேர்ந்த பறவைகள் ஆயுள் பூராவும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாது. ஒரு பறவை இறந்து விட்டால் மற்றொன்று பிரிவாற்றாமையில் துணை பிரிந்த இடத்திலேயே சில நாட்கள் சுற்றிச் சுற்றி வந்து உணவு கூட உட்கொள்ளாமல் தன் உயிரை விட்டு விடும். கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உச்ச கட்ட உதாரணம் இப்பறவை.
கிரௌஞ்ச பக்ஷி கூடு அமைத்து முட்டை இட்டு குஞ்சு பொரித்து குஞ்சுகளை வளர்ப்பது ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரையில் ஆன நாட்களில். இது தன் கூட்டினை நீர் தங்கிய நெல் வயல்களின் நடுவே அமைக்கும். கூடு சுமார் மூன்றடி விட்டத்தில் வைக்கோல், நாணல் இவற்றால் அமைக்கப் பட்டு இருக்கும். இப்பறவை இடும் இரண்டு முட்டயினை அடை காப்பது அனேகமாக பெண் பறவைதான். குஞ்சுகள் வெளியே வந்தவுடன் அவற்றுக்கு உணவு அளிப்பது இரு பறவைகளுமே.
கிரௌஞ்ச பக்ஷி பறக்க ஆரம்பிப்பதோ பறப்பதோ பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும். போர் விமானங்கள் சுமார் முன்னூறு அடி நீளமுள்ள விமானம் தாங்கிக் கப்பல்களிலிருந்து ஆகாயத்தில் எழும்பும்போது, ஜம்போ ஜெட் விமானங்கள் சில கிலோ மீடர் தூரம் தரையில் ஓடிப் பின்னரே ஆகாயத்தில் எழும்புகிறதல்லவா ? அதுபோலத்தான் கனமான இந்தக் கிரௌஞ்ச பக்ஷிகளும் இறககைகளை அடித்துக்கொண்டு பல அடி தூரம் தரையில் ஓடிப் பின்னரே அகாயத்தில் எழும்பும். அதன் பின்னரும் அதிக உயரத்தில் பறக்காது.
பல மாநிலங்களில் மக்கள் இப்பறவைகளைக் கொல்வ தில்லை என்பதால் மனிதர்களைக் கண்டு இவை பயந்து ஓடுவதில்லை. நிலங்களில் வேலை ஆட்கள் வேலை செய்துகொண்டிருக்கும் போது அவர்களருகிலேயே பயமின்றி இவை இரை தேடிக் கொண்டு இருக்கும்.
“வெவ்வேறு திசையில் நோக்கினாலும் என்றுமே நாங்கள் இருவர்தான் ஜோடி”
இறைவன் படைத்த இயற்கையில் தான் எத்தனை வினோதங்கள்! எத்தனை காட்சிகள் !!
(வண்ணப் படங்கள் இணைய தளத்தில் இருந்து)