தமிழ்த்​தேனீ

“அப்பிடி என்னப்பா நான் தப்பா சொல்லிட்டேன், ஒரு ஆம்பளைப் புள்ள இருக்கு, ஆனாலும் வீட்டுக்கு அழகு பொம்பளைப் புள்ளைதான், அதுனாலே ஒரு பொம்பளைப் புள்ளையப் பெத்துக்குடுன்னுதானே சொன்னேன், எனக்கு ஒரு பேத்திவேணும்னுதானே கேட்டேன்.”

“என்னை நீங்கதான் பெத்தீங்க. அதுக்காக  எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு உங்களுக்கு நெனைப்பா? இது எங்க வாழ்க்கை நாங்கதான் ப்ளான் பண்ணனும். எல்லாமே  நீங்க சொல்லித்தான் நாங்க தெரிஞ்சிக்கணுமா? நீங்க சொல்றதைத்தான் கேட்டு நடக்கணுமா? எதிலே தலையிடறது எதிலே தலையிடக் கூடாதூன்னு தெரிஞ்சு நடந்துக்கணும் பெரியவங்க.” என்று எரிந்து விழுந்த மகன் சேகரை  தீர்க்கமாகப் பார்த்து,

“இதோ பாரு உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நான் சொல்லலை, ஏதோ எங்களுக்கு தெரிஞ்சதை சொல்றோம். கேட்டா கேளு, வேணாம்னா விட்டுட்டுப் போயேன். அதுக்கு ஏன்  எரிஞ்சு விழறே?

அனுபவப்பட்டவங்க  சொல்வாங்க. அதைக் கேக்கறதும் கேக்காததும் உங்க இஷ்டம். எல்லாம் உங்க நல்லதுக்குதான் சொல்றோம்”  என்றார் சபேசன்.

“அப்பா நீங்க இனிமே எங்க விஷயத்திலே தலையிடாதீங்க, எங்களுக்கும் வயசாச்சு, நாங்க பாத்துக்கறோம்” என்றான் சேகர்.

“டேய்! நான் உன்னோட அப்பாடா!  நான் ஒண்ணும் தப்பா சொல்லலே.”

“சரிப்பா. போதும் உங்க அட்வைஸ். உங்க வேலையைப் பாத்துட்டுப் போங்க” என்றான் சேகர்.

சூழ்நிலையின் கனம் ஏறிக்கொண்டே இருந்தது . மருமகள் சிந்துஜா  “ஏங்க எதுக்கு இப்பிடி தூக்கி அடிக்கறா மாதிரி பேசறீங்க?” என்றாள்.

“இப்போ நீ உள்ளே போறியா! அனாவசியமா என் கோவத்தைக் கிளறாதே! மரியாதையா உள்ளே போயிடு” என்று எரிந்து விழுந்தான் சேகர்.

“இதோ பாருப்பா! நீ இவ்ளோ கோவக்காரனா இருப்பேன்னு நான் நெனைக்கலே. என்னதான் இருந்தாலும் அப்பாங்கற ஸ்தானத்துக்காவது, அப்பிடியும் இல்லேன்னா வயசுக்காவது மரியாதை குடுத்து பேசுவேன்னு நெனைச்சேன்.

இனிமே இந்த வீட்டுப் படி ஏறமாட்டேன், இனிமே உங்கிட்ட பேசவே மாட்டேன், நான் வரேன்… இல்லே… போறேன்” என்று  சொல்லிவிட்டு ஆத்திரத்துடன் வெளியேறினர்  சபேசன்.

இரவு பக்கத்தில் சிந்துஜா புரண்டு படுத்து அவன்மேல் கையைப் போட்டுக்கொண்டு “நீங்க நடந்துக்கறது எனக்கு கொஞ்சமும் பிடிக்கலே, இப்பிடி அப்பாவை அவமானப்படுத்தி அனுப்பறது சரியில்லேன்னு தோணுது.

அமைதியா இருங்க உங்களுக்கு அடிக்கடி கோவம் வருது, எரிச்சல் படறீங்க. அதுனாலேதான் அப்பா உங்களை எதுக்கும் டாக்டர்கிட்டே போயி செக்கப் பண்ணிக்கோன்னு சொன்னாரு.  ஒரு பொம்பளைப் புள்ளையை பெத்துக் குடுன்னு சொல்றாரு; நல்லதுதானே சொல்றாரு, அதுக்கு எதுக்காக இவ்ளோ வார்த்தைகளை வளத்து  அவரோட சண்டை போட்டு  அவர் மனசைப் புண்படுத்தி அனுப்பினீங்க.

‘அழ அழச் சொல்வர் தமர்’  அப்பிடீன்னு சொல்வாங்க. நம்ம மேலே அக்கறை இருக்கறவங்கதான் நல்லதை சொல்வாங்க” என்றாள்.

சிந்துஜா சொல்வது  உண்மைதானே என்று தோன்றியது சேகருக்கு.

சேகருக்கு அவன் மேலேயே வெறுப்பாய் இருந்தது, கோவம் கோவமாக வந்தது, சில விஷக்கடி வேளைகள் நம்மைத் தூண்டி தேவையில்லாமல் பேசவைத்து சூழ்நிலைகளைக் கெடுத்து விரோதங்களை உண்டாக்குகிறது.

அந்த நேரங்களில்  சற்றே அமைதியாக இருக்கலாமே, ஏன் இப்பிடி நான் நிலை குலைஞ்சு போறேன்?  என்று தன்னைத் தானே நொந்தபடி படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த  சேகருக்கு தூக்கம்  பிடிக்கவில்லை.

எழுந்து வரண்டாவில் நின்று ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து புண்பட்ட நெஞ்சத்தை புகை விட்டு ஆற்றிக் கொண்டிருந்தான்.

யோசித்துப் பார்த்ததில் அப்பிடி என்ன அப்பா தப்பா சொல்லிட்டாரு, எல்லா அப்பாவும் சொல்றதுதானே, மனம் குமைந்துகொண்டிருந்தது. வெறுப்புடன் அந்த சிகரெட்டை தூக்கி எறிந்துவிட்டு படுக்கையில் வந்து படுத்தான் சேகர்.

வாசலில்  அழைப்பு மணி ஒலித்தது. மணியைப் பார்த்தான் சேகர். இரவு மணி இரண்டு. யாரு இந்த நேரத்திலே? அழைப்பு மணி விடாமல் ஒலிக்கவே கதவைத் திறந்தான் சேகர்.

பக்கத்துவீட்டு பாஸ்கர் “என்ன சேகர் இப்பிடித் தூங்கறீங்க?” என்று கூறிவிட்டு மேலும் ஏதோ சொல்ல வாயெடுத்தார்.

“ஏங்க பாதி ராத்திரிக்கு கதவைத் தட்டி உபதேசம் செய்யறீங்க? எதுக்கு வந்தீங்க? அதைச் சொல்லுங்க” என்றான் எரிச்சலோடு சேகர்.

“இல்லேங்க. உங்க தோட்டத்திலேருந்து ஏதோ புகை வாசனை வருது. நெருப்பும் தெரியுது அதைச் சொல்லி எச்சரிக்கலாம்னு வந்தா எரிஞ்சு விழறீங்க” என்றார் பாஸ்கர்.

பதறிப் போயி “அடேடே! மன்னிச்சுக்கோங்க! வாங்க, போயி பாக்கலாம்” என்றபடி தோட்டத்துக் கதவைத் திறந்து பார்த்தான் சேகர்.

செடிகளிலேருந்து கீழே விழுந்து மூலையில் சேகரித்து வைத்திருந்த இலைச் சருகுகள் எரிந்து கொண்டிருந்தன. நல்ல வேளை இன்னும் சற்று நேரம் கவனிக்காமல் இருந்திருந்தால் அப்படியே ஜன்னலுக்குத் தீ பரவி இருக்கும்.

பாஸ்கரும் சேகரும் நிறையத் தண்ணீர் கொட்டி அதை அணைத்துவிட்டு பதட்டத்தால் எழுந்த வியர்வைப் பெருக்குடன் பெருமூச்சு விட்டுக் கொண்டே  தோட்டத்தில் இருந்த திண்ணையில் உட்கார்ந்தனர்.

“ரொம்பத் தேங்க்ஸ் பாஸ்கர்! சரியான நேரத்துக்கு வந்து உதவினீங்க. நாந்தான் அவசரப்பட்டு  உங்ககிட்ட எரிச்சல் பட்டேன். மன்னிச்சிருங்க” என்றான் சேகர்.

“அட! அதை விடுங்க! சரி, வாங்க போயி தூங்கலாம்” என்றபடி பாஸ்கரும் போன பின் கதவைத் தாப்பாள் போட்டுவிட்டு பதட்டம் தணிய சற்றே குளிர்ந்த நீரைக் குடித்துவிட்டு வந்து படுத்தான்.

காலையில் எழுந்து குளித்துவிட்டு  வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான் சேகர். அழைப்பு மணி ஒலித்தது,  “சிந்து, போயி யாருன்னு பாரு. எனக்கு நேரமாச்சு நான் கிளம்பணும்” என்றபடி சாக்ஸை போட்டுக்கொண்டு ஷூவை மாட்டினான் சேகர்.

கதவைத் திறந்தாள் சிந்துஜா. “அடேடே! வாங்க மாமா!  உள்ளார வாங்க” என்று அழைத்துவிட்டு, “ஏங்க மாமா வந்திருக்காரு” என்றாள்.

வாசலில் இவனையே பார்த்தபடி நின்றிருந்தார் சபேசன். “வாங்கப்பா” என்றான் சேகர். “நல்ல வேளைப்பா, பக்கத்துவிட்டு பாஸ்கர் சொன்னார். பதறிப் போயி ஓடிவந்தேன். உனக்கு ஒண்ணும் காயம் படலியே” என்றார். “அதெல்லாம் ஒண்ணும் இல்லேப்பா,  உக்காருங்க” என்றான் சேகர்.

சிந்துஜா காப்பியைக் கொண்டு வந்து கையில் கொடுத்துவிட்டு “சாப்பிடுங்க மாமா” என்றாள். காப்பியை ஒரு முழுங்கு குடித்துவிட்டு நிமிர்ந்து,

“சேகர், நம்ம வம்சத்திலே எனக்கு பிள்ளையா வந்து பொறந்திருக்கே. என்னோட அப்பா சொல்லும்போது நானும் இப்பிடித்தான் அவர் மேலே எரிஞ்சு விழுந்தேன். உன்னைவிட அதிகமா வார்த்தைகளைக் கொட்டினேன். ஆனா இப்போ ஒரு பொம்பளைப் புள்ளெ இருந்திருந்தா என் மேலே அன்பா ஆதரவா இருக்கும்னு தோணுது. அனுபவசாலிகள் சொல்றத அலக்‌ஷியம் செய்யக் கூடாதுன்னு இப்போ தோணுது. காலம் கடந்த ஞானோதயம்.

அது சரி நீ என்னோட பிள்ளைதானே, நம்ம வம்சத்தோட கோவம் அப்பிடியே எறங்கி இருக்கு உனக்கும். நானும் கொஞ்சம் நிதானமாப் பேசியிருக்கலாம்.

நான் நேத்து உன்னைப் புண்படுத்தறா மாதிரி பேசிட்டேன். இதோ பாரு நான் இது வரைக்கும் யார் கிட்டேயும் மன்னிப்பு கேட்டதே இல்லே.

இந்தக் கோவம்கிற நெருப்பை அணைக்காம அப்பிடியே வெச்சிருந்தா அது நீரு பூத்த நெருப்பு மாதிரி எப்போ எதைப் புடிக்கலாம்னு காத்துகிட்டே இருக்கும். அதான் அந்த நெருப்பை அணைச்சிடலாம்னு வந்தேன்.

என் வாழ்க்கையிலே இது வரைக்கும் நான் யார்கிட்டேயும் மன்னிப்பு கேட்டதில்லே, முதன் முதலா உங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன். ஏன்னா எனக்கு நீ  வேணும்ப்பா ,உன்னை விட முக்கியம் எனக்கு எதுவுமே  இல்லே” என்றார் நாத் தழுதழுக்க.

சேகருக்கு அடி வயிற்றிலிருந்து விம்மிக்கொண்டு  ப்ரவாகமாய்ப் பொங்கி வழிவதற்கு இடம் தேடி அவன் கண்களின் வழியே தாரை தாரையாய் கண்ணீர் பொங்கிற்று.

“அப்பா! நான்தான் உங்ககிட்ட மன்னிப்பு கேக்கணும், நாந்தான் உங்களைப் புண்படுத்திட்டேன்” என்றபடி அவரைத் தழுவிக்கொண்டு அவர்மேல் சாய்ந்து கொண்டான்  சேகர்.

சபேசனுக்கு இரண்டு வயதுப் பையன் சேகரை தோளில் சுமந்தபடி தட்டாமாலை சுற்றியது நினைவுக்கு வந்தது.

கண்களில் துளிர்த்த ஆனந்தக் கண்ணீரை புடவைத் தலைப்பால் ஒற்றி எடுத்துவிட்டு “ஏங்க, உங்களுக்கு ஆபீசுக்கு நேரமாச்சு” என்றாள் சிந்துஜா.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தட்டாமாலை

  1. கதையோ, கிதையோ! தேனீ ஐயா அன்றாட நடைமுறையை அறவுரையாக படைத்திருக்கிறார். எத்தனையோ உரையாடல்களில் ஒன்று. அதில் ஒரு பாடம். தேனீ ஐயா தான் புகை விட்டு ஆற்றுவதில் மன்னன் ஆச்சே.
    இன்னம்பூரான்

Leave a Reply

Your email address will not be published.