பொய்யின்றி அமையாது உலகு

ரமணி பிரபா​தேவி

 

பொய் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் தவறாது இடம்பெற்று விடுகிறது. ஏதோவொரு தவிர்க்கவியலாச் சூழலில் உரைக்கப்படும் பொய்யானது வாழ்நாள் முழுவதும் நம்மைப் புரட்டிப்போடுகிறது. மறைக்கப்படும் உண்மை வெளிவராமல் போனவுடன் நம் தைரியம் தலைதூக்குகிறது. சிறு தவறை மறைக்கக் கூறப்படும் பொய்யானது  பாராட்டைப் பெற, குழப்பங்களைத் தவிர்க்க, மரியாதையை நிலைநாட்ட, கருத்து வேறுபாடுகளைக் களைய, அருகிலுள்ளோரை மகிழ்வூட்ட, வேலையில், கல்லூரிகளில், பள்ளிகளில் ஏன் சாவுப்படுக்கையிலே கூட எண்ணிலடங்காமல் அடுக்கப் படுகிறது.

முதல் முறை கூறப்படும் பொய் மீதான தயக்கமும், தடுமாற்றமும் அடுத்து வரும் முறைமைகளில் இருப்பதில்லை. எல்லோரும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொய் அரக்கனின் பிடியில் சிக்கிக் கொள்கிறோம். ஆனாலும் உண்மையை அறிந்தபின்னர் கூறப்படும் பொய்கள் நெருஞ்சியாய் மனதைத் தைக்கின்றன.

பொய், அதனை மறைக்க வரிசையாகக் கூறப்படும் பொய்களென எண்ணிக்கை உச்சத்தை அடைகிறது. பொய்களை ஏற்றுக்கொண்டே பழக்கப்பட்டுவிட்ட நாம், அதனூடேயே வாழத் தொடங்கிவிடுகின்றோம். தினசரி வாழ்வினில் பொய்யரக்கன் இரவுறக்கம் வரை நம்முடனேயே பயணப்படுகிறான். துயிலெழுந்தவுடனே பொய்யுடன் நாளைத் துவக்கி, பொய்களுடையே வாழ்ந்து போலியான வாழ்க்கையை வாழ்பவர் பலர்.

பொய்யின் சாராம்சம் யாதெனில், இது பிரிவினை கொள்வதில்லை. ஆண்,பெண், தாய் ,தந்தை ,குழந்தை, உற்றார் ,உறவினர், ஜாதி,மத பேதம் பாராமல் அனைவரிடமும் சரளமாய்ப் பொய் நாடகமாடுகிறது. பொய்களால் சூழ்ந்த இவ்வுலகம் பொய்மூட்டைகளினூடேயே இயங்குகிறது. சிறு பள்ளிக்குழந்தை முதல் தள்ளாடும் மூதாட்டி வரை அனைவரும் பொய்யினை ரசிப்பவர்கள்.

பொய்களில் புறக்கணிக்கப்படுபவை சில, புறந்தள்ளப்படுபவையும் சில, புரட்டிப்போடுபவை பல. சில நேரங்களில் உயரிய உண்மைகளை, அற்பமான பொய்கள் பின்தள்ளுகின்றன. உண்மையின் வலியைவிட, பொய்யின் அழகு முலாம்  எல்லோர்பாலும் எளிதாய் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

மிருகமாய்க் கிடந்து, இன்று எங்கோ உயரமாய்ப் போய்விட்ட மனித மூளை, அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் மட்டுமல்லாது, இதுபோன்றதொரு ஏமாற்றுதலிலும் முன்னேறிவிட்டது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.