Category: home-lit

home-lit

  • வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போமா! (1)

    பவள சங்கரி

    ’நாம்’ நாமாகவே இருப்பதற்கு நம் எண்ணங்களே காரணம். நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் நம்மை நல்வழிப்படுத்தி, வெற்றிக்கனியை எட்டிப் பறிக்கச் செய்யும் என்ற நம்பிக்கை உடையவர் நீங்கள் என்பது உண்மையானால் இத்தொடர் உங்களை அக்காரியத்தை மென்மேலும் ஊக்குவிக்க வல்லது என்பது சத்தியம். நம்பிக்கை என்ற ஒன்றே வாழ்க்கையில் நம்மை உயரத்திற்கு இட்டுச் செல்லக்கூடியது. நம் எண்ணங்கள் மேம்படும்போது நம் வாழ்க்கைத் தரமும் உயரும். நம் எண்ணங்களை எப்படி மேம்படுத்தப் போகிறோம் என்பதையே இத்தொடரில் விவாதிக்கப் போகிறோம். நல்ல எண்ணங்கள் மட்டுமே நம் சுய வல்லமையை ஊக்குவிக்கும் ஒரு உன்னத காரணி.

     உறுதியான எண்ணத்தால் உயர்ந்து நிற்போம்!

    நற்சிந்தையாலும், நல்ல ஆரோக்கியத்தினாலும், நல்லொழுக்கத்தினாலும் உயர்ந்து நிற்பதால் வெற்றிக்கான அடித்தளத்தை உறுதியாக்கிவிட்டோம் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ளும்போது இடையில் வரும் தடைகளை எளிதாகத் தகர்த்தெறியும் வல்லமை பெறுகிறோம். இதனால் உங்கள் பயணத்தில் அன்பைத் தவிர வேறு எந்தக் காரணத்திற்காகவும் எவருக்காகவும் நீங்கள் தலை வணங்கத் தேவையில்லை..

    முதலில் நம் உடலளவில் உயர்ந்து நிற்போமே. ஒரே ஒரு உடல் மொழியால் ஓராயிரம்  எண்ணங்களை உணர்த்தக்கூடும். அத்தகைய உடலை முதலில் சரியாகக் கையாள வேண்டியது அவசியம். முத்ற்பார்வையிலேயே வெளித்தோற்றம் மட்டுமே ஒருவரை எடை போடச் செய்கிறது. கருப்போ, சிகப்போ, நெட்டையோ, குட்டையோ, செல்வந்தரோ, வறியவரோ எவராயினும் நம் புறத்தோற்றம் எப்படி இருந்தாலும், நாம் அதை வெளிப்படுத்தும் விதமே நம்மைப் பற்றிய மதிப்பீட்டை உருவாக்குகிறது.

    தன்னம்பிக்கை உடைய ஒருவர் தம் தோற்றம் மூலமே அதனை எளிதாக அடுத்தவரை உணரச் செய்ய முடியும். வளைந்து, நெளிந்து, கூனிக் குறுகி ஒருக்காலும் நிற்க மாட்டார் தன்னம்பிக்கை உடையவர். பாரதியின் நிமிர்ந்த நன்னடை பார்த்தவுடன் மரியாதை அளிக்கக்கூடிய தோற்றப் பொலிவைக் கொடுக்கக் கூடியது. அந்த நிமிர்ந்த நன்னடைக்கு மனதில் நம்பிக்கை வேறூன்றியிருக்க வேண்டும். அந்த நம்பிக்கைக்கு அச்சாரம் என்பது நேர்மையும், சுய கட்டுப்பாடும், உண்மையான உழைப்பும்தான்.

    தெருவோரத்தில் மசாலாப் பொறிக்கடலை கடை போட்டு பிழைப்பு நடத்தும் ஒருவர், சுறுசுறுப்பான வியாபார நேரத்தில், பம்பரமாய்ச் சுழலுகிறார். ஒரு பாத்திரத்தில் இரண்டு கை பொறியை அள்ளிப்போட்டு அதில் துருவிய கேரட், பீட்ரூட், கொத்தமல்லி இலைகள், கொஞ்சம் புதினாத் தொக்கு, எல்லாம் போட்டு, இறுதியாக மசாலாப் பொடியும், மிளாகய்த்தூள், உப்பு கலந்த கலவையையும் அப்படியேத்தூவி, அதன் மீது சிலத் துளிகள் எலுமிச்சைச் சாறும் தெளித்துக் கொடுப்பார். சுவையான சுவைதான் போங்கள். நாம் இங்கு அந்தச் சுவையில் மெய்மறந்து இருக்கும் போது, அந்த வழியாகக்  கடந்து போகும் ஒரு இரு சக்கர வாகன ஓட்டியின் கண்களில் பறந்து போய் விழுந்த அந்த மிளகாய்ப்பொடி படுத்திய பாடு, மனிதர் ஒரு பெரிய விபத்திலிருந்து தப்பி வந்தார் பாவம். இதை அறியும்போது அந்த மசாலாப்பொறிக் கடைக்காரர் எப்படி நிமிர்ந்த நன்னடையுடன் நடமாட இயலும். அவர் தூவும் அந்த மசாலாப் பொடிகள் அடுத்தவரின் பார்வைகளை பதம் பார்க்காதவாறு ஒரு மறைப்பான் வைத்து தம் சமுதாய அக்கறையை வெளிப்படுத்தியிருந்தால் அவர் அடுத்தவர் முன்போ, தம் மனசாட்சியின் முன்போ கூனிக்குறுகி நிற்க வேண்டியதில்லை. அடுத்தவர் வந்து முறைப்படுத்த வேண்டும் என்று எண்ணாமல் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டாலே தலை நிமிர்ந்து நிற்கலாமே.

    தூக்கணாங்குருவிக் கூட்டைப் பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு பெருத்த ஆச்சரியமாக இருக்கும். மரத்திலோ, குட்டிச் சுவற்றிலோ, கிணற்றினுள்ளோ,  அப்படியே தொங்கிக் கொண்டிருக்கும் அதை அது எப்படித்தான் கட்டியிருக்குமோ என்று. எத்தனை பொறுமை வேண்டும். ஒவ்வொரு புல்லாகக் கொண்டு வநது கீழே விழுந்தாலும் மீண்டும், மீண்டும் பொறுக்கி எடுத்து கூடாக்கிவிடும். காற்று பலமாக வீசினாலும், ஆடுமே தவிர அறுந்து விழாது. ஒரு சின்ன குருவிக்கு இருக்கும் அந்த வல்லமை ஆறறிவு படைத்த நமக்கு இல்லாமலா போகும்?

    தொடரும்

    படத்திற்கு நன்றி :

    http://www.great-inspirational-quotes.com/stand-tall-like-the-sunflower.html

    Share
  • மறியிடைப் படுத்த மான் பிணை….

    முனைவர். ப. பானுமதி


    காலம் வெகுவாக மாறி விட்டது. ஒரு காலத்தில் தமிழ்ச்சமுதாயம் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தது. ஒரு பெரிய கூடம் (ஹால்) இருக்கும். குறைந்தது 20 பேரை நிம்மதியாகப் படுத்து உறங்க வைக்கும் கொள்ளளவு அந்தக் கூடத்திற்கு இருக்கும். ஒரே நேரத்தில் முப்பது அல்லது 40 பேருக்குப் பந்தி வைக்க வேண்டும் என்னும் கொள்கை அளவும் அதற்கு இருக்கும். இதை பட்டாசாலை என்று கூறும் வழக்கம் இருந்துள்ளது. இதற்கு அடுத்து அங்கணம் என்று கூறப்படும் சின்ன பட்டாசாலை ஒன்று இருக்கும். இதிலும் சுமார் 20 பேர் படுக்கலாம். இது இன்னும் சில வீடுகளில் நிலா முற்றம் எனப்படும் நிலவொளி உள்ளே விழும் அமைப்பில் கம்பிகள் மட்டும் மேற்கூறையாகப் போட்டு அமைந்திருக்கும்.

    இவை தவிர, ரேழி ஒன்று இருக்கும். முன்னறைக்கும் வாசலுக்கும் இடைப்பட்ட பகுதியைத்தான் ரேழி என்று கூறுவது வழக்கம். அறை என்று சொன்னால் பொதுவாக ஒன்றோ இரண்டோ அறைகள் சின்னஞ்சிறிய அளவில் இருக்கலாம். ஒன்று அந்த வீட்டு மாப்பிள்ளை வந்தால் தங்க வைப்பதற்கு. மாப்பிள்ளைகள் வந்தால்….? கூடி கும்மாளம் அடிக்க வேண்டியதுதான். மற்றொன்று சாமான்கள் வைக்கும் ஸ்டோர் ரூம். மற்றபடி சமையல் அறை ஒன்று பெரிதாக இருக்கும். ஒத்தார் ஓர்ப்படிகள் ஒன்றாய்க் கூடி கும்மியடிக்கும். தப்பு தப்பு சமையல் செய்யும் இடம்.

    ஆமாம் இப்போது எதற்கு இந்த வாஸ்து சாஸ்திரம் என்று கேட்கத் தோன்றுகின்றதா? தோன்றவில்லை என்றால் நீங்கள் ஏதோ இயந்திரத்தனமாக இந்தக் கட்டுரையைப் படிக்கத் தொடங்கி உள்ளீர்கள் என்று பொருள்.

    சங்க இலக்கிய மான் குடும்பத்துக் காட்சி ஒன்றை இப்போது கூறுவது இக்கட்டுரைப் பொருளுக்குப் பொருத்தமாக இருக்கும். தமிழில் எதைச் சொல்லப் புகுந்தாலும் சங்கத்தில் இருந்து எடுத்துக்காட்டிச் சொல்வது தமிழுக்குப் பெருமை என்பதை விடவும் அதைச் சொன்னவருக்கே பெருமை அதிகம் . “எத்தனைதான் தேக்கு இருந்தாலும் பர்மா தேக்கு போல வராது என்பார்கள். அது போலத்தான் பக்தித்தமிழ், பாமரத்தமிழ், இலக்கியத்தமிழ் என்று பல சொன்னாலும் சங்கத்தமிழ் என்பதில் உள்ள பெருமை மற்ற எதிலும் இல்லை” என்று பேரா. தி. இராசகோபாலன் சொல்வார். விளக்க முற்படும் எந்தச் செய்திக்கும் சங்கச் சான்றே தங்கச் சான்றாக ஒளிவீசும் என்பதில் ஒருவருக்கும் ஐயம் இருக்காது. உயர் மதிப்பையும் அள்ளித் தருவது. தமிழனின் அறவியல், அறிவியல், உடலியல், உளவியல் நுட்பத்தை எடுத்துக் கூறும் சான்றுகளின் கருவுலமும் அதுவே எனலாம்.

            தான் காதலித்த தலைவனோடு உடன் போக்கு சென்று விடுகிறாள் தலைவி. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்து விடுகின்றது. அப்போதும் அவளது தாயும் தந்தையும் அவள் மீது கோபத்துடன் இருக்கின்றனர். ஆனால் அவளை வளர்த்தச் செவிலித்தாயால் அப்படி இருக்க இயலவில்லை. அவள் சென்று தலைவியைப் பார்த்துவிட்டு வருகிறாள். தான் கண்டு வந்த காட்சியைச் சொன்னால் நற்றாய் மனம் மாறி, தலைவி மீது கொண்டுள்ள சினத்தை மாற்றிக் கொள்வாள் என்று நினைக்கிறாள். தலைவியின் கடிமனைக்குச் சென்று வந்த செவிலி உவந்த உள்ளத்தினளாய் நற்றாய்க்குப் பின்வருமாறு கூறுகிறாள்.

                    மறியிடைப் படுத்த மான்பிணை போல,

    புதல்வன் நடுவணன் ஆக நன்றும்

    இனிது மன்றஅவர் கிடக்கை; முனிவின்றி

    நீல் நிற வியலகம் கவைஇய

    ஈனும் உம்பரும் பெறலருங்குரைத்தே!

    காட்டில் குட்டியை ஈன்ற காதல் மான்கள், குட்டி இடையில் படுத்திருக்க அதனைத் தழுவிக் கலைமானும்(ஆண்மான்) பிணை மானும் (பெண்மான்) படுத்திருக்குமாம். அது போல, புதல்வன் நடுவே படுத்திருக்க, அவனைத் தழுவியவாறு தலைவனும் தலைவியும் படுத்திருக்கும் காட்சி இனிமையானது. பரந்து விரிந்த நீல வானத்தைத் தழுவிக்கொண்டிருக்கும் இந்த மண்ணுலகத்திலும் இதற்கு அப்பாற்பட்ட தேவர் உலகமாகிய விண்ணுலகத்திலும் இந்தக் காட்சி கிடைப்பது அரிது என்று கூறுகிறாள். இதில் தலைவன், தலைவி இருவரும் தம் குழந்தை மீது கொண்ட காதலை விளக்குகிறாள். இருவரது அன்பையும் பற்றி கூறுகிறாள். அப்போதும் மனம் மாறாத நற்றாயைப் பார்க்கிறாள். மற்றொரு காட்சியையும் கூறுகிறாள்.

    “புதல்வன் கவையினன் தந்தை; மென்மொழிப்                                          புதல்வன் தாயோ இருவரும் கவைஇயினள்

    இனிது மன்ற அவர் கிடக்கை

    நனி இரும் பரப்பின் இவ்வுலகுடன் உறுமே”

    உன் மகள் எப்படிப் பட்ட தாயாக இருக்கிறாள் தெரியுமா? தலைவன் தன் புதல்வனாகிய உன் பேரனைத் தழுவியபடி படுத்திருக்கிறான். உன் மகளோ தான் ஈன்றெடுத்த மகனான உன் பெயரனையும் தன் காதல் தலைவனையும் ஒரு சேர ஒரு தாயாக தழுவிக்கொண்டு படுத்திருக்கிறாள் என்னும் கருத்து தொணிக்கப் பாடுகிறாள். அப்போதும் சினம் தணியாத தாய்க்கு அங்கு அரங்கேறிய மற்றொரு காட்சியையும் படம் பிடிக்கிறாள்.

    புதல்வன் கவைஇய தாய் புறம் முயங்கி

    நசையினன் வதிந்த கிடக்கை, பாணர்

    நரம்பு உளர் முரற்கை போல

    இனிதால் அம்ம! பண்புமார் உடைத்தே!

     

    இப்போது புதல்வனை அரவணைத்துக் கொண்டு படுத்திருக்கிறாள் தலைவி. அவளின் முதுகுப் புறத்தைத் தழுவி, விருப்பத்தோடு படுத்துக் கொண்டிருக்கிறான் தலைவன். அவர்களை அவ்வாறு காண்பது மிகவும் இனிய காட்சி. அது பாணர்கள் தங்கள் யாழின் நரம்புகளை மீட்டி இசைக்கும் இசையைப் போல இனியது; மிகுந்த பண்பும் உடையது” என்கிறாள். இப்படிப் பட்ட அழகொளிரும் இல்லறக் காட்சிகளை அமைக்கிறார் பேயனார் என்னும் சங்கத் தமிழ்ப் புலவர்.

    பூனைக் குட்டிகளைப் பாருங்கள். தாய்ப்பூனை அருகில் இருக்கும்போது பாதுகாப்பு உள்ளது என்னும் உணர்ச்சியில் அச்சமற்று நன்கு உறங்கும். தாய்ப்பூனை வெளியில் சென்றிருக்கும்போது அவை அச்சத்துடன் திரு திருவென விழித்துக் கொண்டிருக்கும்.

    ஐந்தறிவே உள்ள மான்கள் தங்கள் குட்டியை அணைத்துக் கொண்டு படுக்கின்றன என்கிறது முதல் பாடல். வீட்டு விலங்குகளான பூனை, நாய் முதல் சிங்கம், புலி முதலிய விலங்கினங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட பருவம் வரைத் தம் மக்களைத் தனியாகப் படுக்க வைப்பதில்லை.

    நம் பண்டைய பண்பாட்டுத் தமிழர்கள் தங்கள் குழந்தையைத் தனியாகப் படுக்க வைத்ததில்லை. ஒரு வேளை செல்வந்தர்களின் இல்லங்களில் இணையர் தனியறையில் படுக்க நேர்ந்தால் அவர்களின் குழந்தைச் செல்வங்கள் பாட்டன், பாட்டியுடன் கதை கேட்டு, பாட்டுக் கேட்டு மகிழ்வாகப் படுத்துறங்கும்.

    கூட்டுக் குடும்பம் நலிந்து தனிக்குடும்பம் மலிந்த, நாகரிகத்தில் முற்றிப்போன இன்றைய சமுதாயத்தில் தனியறையில் குழந்தைகளைப் படுக்க வைப்பதும் மலிந்து போனது. எட்டுக்கு எட்டு அறை ஒன்றில் குழந்தையையும் அதற்கென ஒரு கணிப்பொறி மற்றும் இத்யாதி இத்யாதிகளையும் வாங்கி அடைத்து விடுகின்றனர். அணைப்பாரற்ற அந்தக் குழந்தை அன்பு, பாசம் என்னும் ஏக்கத்தால் மூச்சு முட்டியபடியே உறங்குகிறது. உயிர் வாழ்கிறது.

    இதனினும் பெருங்கொடுமை மகிழ்வுந்துப் பயணம். இப்போதெல்லாம் அம்மாவும் அப்பாவும் வெளியில் செல்கின்றார்கள் என்றால் குழந்தைகள் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கின்றன.  காரணம் காரில் முன் இருக்கையில் கணவனுடன் மனைவிதான் அமர வேண்டும். இது இன்றைய நாகரிகம். அதாவது கணவரது எஜமானியாம் மனைவி. அவர்கள் இருவரும் பாட்டுக் கேட்டுக்கொண்டோ, அல்லது ஆங்கிலத்தில் பேசிக்கொண்டோ தம் குழந்தையைச் சட்டை செய்யாமல் முன்பக்க இருக்கைகளில். அந்தக் குழந்தையோ பின் இருக்கையில் சோர்ந்த வாடிய முகத்துடன் ஜன்னலில் இருந்து வெளியே வெறித்துப் பார்த்தபடி.

    இந்நிலையில் அக்குழந்தைக்கு எப்படி மன ஆரோக்கியம் இருக்கும்? அக்குழந்தையின் உலகம் எந்திரங்களாக ஆன பின்பு அக்குழந்தையும் பாசம், பந்தம், அன்பு, கருணை, இரக்கம் என்னும் நற்பண்புகள் எதனையும் புரிந்து கொள்ள முடியாத எந்திரமாகவே ஆகிவிடுகின்றது. அதனால் எதிராளியின் துன்பத்தைக் கூடப் புரிந்து கொள்ளவோ, உதவவோ முடியாமல் போய்விடுகின்றது. சற்று அழுத்தமாகக் கூறவேண்டுமென்றால் எதிராளியைத் துன்புறுத்துவதும் கூடிப் போகிறது என்று கூறலாம்.  குழந்தைகள் வளரும்போது இக்குணமும் படிப் படியே வளர்ந்து வன்முறையாளர்களாக அவர்களை மாற்றிவிடுகின்றது.

    இளமையில் தம்மைத் தனிமைப் படுத்திய பெற்றோர்களை முதுமையில் அவை தனிமைப் படுத்திவிடத் துடிக்கின்றன. முதியோர் இல்லங்களில் பெற்றோர்களைப் போடுகின்றன. ஐந்தில் விளைவுதுதான் விளைவு. குழந்தையின் பத்து வயதிற்குள் அதன் சிந்தையில் என்ன நற்பண்புகள் பதிகின்றதோ அதுதான் எப்போதும் ஒளிவிடும். இவற்றை உணராது ஐயோ முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டனவே என்று அங்கலாய்த்தலில் ஒரு பயனும் விளையப் போவது இல்லை.

    ஆய்வு என்று எதையும் மேற்கொள்ளாத சங்கத் தமிழன் இந்த உளவியல் சார்ந்த உண்மைகளை உணர்ந்தவன். இதற்குச் சான்றுகளே மேற்கூறிய பாடல்கள்.

    ஆனால் இதனை இத்தனை ஆண்டுகள் கழித்து ஆய்ந்து கண்டவர்கள் டென்மார்க் ஆய்வாளர்கள். 2 முதல் 6 வயது வரையிலான 500 குழந்தைகளை ஆய்வு செய்த. டென்மார்க் ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர். நன்னா ஓல்சன் கூறுவதாவது, “பெற்றோருடன் உறங்கும் குழந்தைகள் உடல் மற்றும் மன நலத்துடன் இருக்கிறார்கள் என்கின்றனர். முக்கியமாக பாதுகாப்பு உணர்வு இருப்பதால் நிம்மதியாக  உறங்குகின்றனர். ஹார்மொன்கள் அளவாகச் சுரக்கின்றன. அவர்களது செரிமானம் சீராக இருக்கறது. அதனால் அவர்கள் குண்டாவதில்லை.

    தனியாக உறங்கும் குழந்தைகள் அச்சத்துடன் சரியாக உறங்குவதில்லை. தூக்கத்தில் தொந்தரவு ஏற்பட்டால், அது ஹார்மோன்களைப் பாதித்து உடல்பெருக்கத்தைத் தூண்டும். சரியான உறக்கமின்மையால் உண்ட உணவு சரியாக செரிப்பது இல்லை. அதன் காரணமாகக் குண்டாக இருக்கின்றனர். பெற்றொருடன் படுத்து உறங்கும் குழந்தைகளைவிட தனியாகப் படுத்து உறங்கும் குழந்தைகளின் உடல் எடை மூன்று மடங்கு கூடுதலாக உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது” என்கிறார்.

         “மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

          சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”

    என்பார் திருவள்ளுவர். மழலைகளின் மெய்யை வருடுவது குழந்தைக்கு இன்பம் தரும். பெற்றோர்க்கு பேரின்பம் தரும். அந்த இன்பப் போதையில் மூழ்கித் திளைத்த மீசைக்காரனும்,

     

    “கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி!
    உன்னைத் தழுவிடலோ, கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி!”

    என்று பாடிப் பரவசமடைந்து படிப்போரையும் பரவசத்துள் ஆழ்த்துகின்றான்.

    குழலையும் யாழையும் தம் இனிய குரலில் இசைத்து நம்மை இன்பமாக இசைவிக்கும் மழலைகளைத் தனியாக உறங்க விடாதீர்கள். ஏக்கத்தின் தவிப்பில் உழலவும் விடாதீர்கள். இனியேனும் பெற்றோர்கள் விழித்துக்கொள்வீர்களாக. தங்கள் குழந்தையை பதமாக அணைத்து இதமாக உறங்க வைப்பீர்களாக! ஒரு மன, உள நோயற்ற குழந்தையின் பெற்றோர் என்னும் பெருமையுடன் உலாவருவீர்களாக!

    Share
  • போற்றி! போற்றி! தேவகுமாரா! போற்றி! போற்றி!

    இன்னம்பூரான்

     போற்றி! போற்றி! தேவகுமாரா! போற்றி! போற்றி!

    அவரொரு அதிசயப்பிறவி. அவனியில் அவரைப்போல் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. என் அகக்கண்ணுக்கு மட்டும் புலப்பட்ட தேவதூதர்கள் புஷ்பக விமானத்தில் வந்திறங்கி சைத்ய உபசாரங்கள் பல செய்து, அனாயாசமாகவல்லவோ அவரை சுவர்க்கலோகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஜனவரி 9, 2013; அன்றைய தினம் வழக்கம் போல்த்தான் பொல பொலவென பொழுது விடிந்தது. அவரும் சகஊழியர்கள் எல்லாரையும் கனிவுடன், கட்டித்தழுவி குசலம் விசாரித்தார். அது பல வருடங்களாக  அவருடைய அன்றாட வாடிக்கை. பிறகு தன்னுலகம் சுற்றி வந்தார். அவருடைய நண்பர்கள் பல இனங்களை சார்ந்தவர்கள். உக்ரம், வக்ரம், மக்கார் எல்லா குணாதிசயங்களும் உண்டு, அவர்களிடம். அவர் சம்பந்தப்பட்டவை, யாவரும் நேசிக்கப்பட்டவர்கள். அவர்களும் அவரவது பலவீனங்களை உதறி விட்டு, அவருடைய அரவணைப்பை அனுபவிப்பார்கள். பிரஹாரம் சுற்றிய பிறகு, வந்தபின், வழக்கம்போல் சொற்பமான காலை உணவு. ஒரு குட்டித்தூக்கம். அதுவே நீளாதூக்கம் ஆகி விட்டது, சார்! துக்கம் தாங்காமல் என் மனம் தேம்பித் தேம்பி அழுகிறது. ஏன்? உலகமே அழுகிறது.

    மனித ஜன்மங்களே! மனித நேயம் என்று புத்தகங்கள் எழுதி, சொற்மாரி பெய்து, அதைப் பொய்த்து, நடமாடுகிறீர்களே! இந்த தேவகுமாரரின் பெயர் ஆர்னி. அவர் ஒரு கம்பீரமான பூனை. லிண்டன் மிருகக்காட்சி சாலையில் அவர் தான் செவிலித்தாய். சிங்கக்குட்டிகளும், புலிக்குட்டிகளும், குரங்குக்குட்டிகளும் அவரால் தான் பேணி வளர்க்கப்பட்டன. அவற்றின் கூடைக்குள் நுழைந்து, கட்டித்தழுவும் போது, அவை அன்னையின் அரவணைப்பின் சுகம் உணர்ந்தன.

    எனக்கு நேரடியாகத் தெரிந்த உண்மை நிகழ்வு ஒன்று. ஒடிஷாவின் ஸிமிலிபால் பிராந்தியத்தில், ‘கைரி’ என்ற புலிக்குட்டி ஒரு வீட்டு செல்லப்பெண்ணாக வளர்ந்தாள். செவிலித்தாய் ப்ளாக்கி என்ற நாய். கைரியின் உருவத்தில் ஒரு சின்ன பின்னம் அளவு சைஸ். ஆனால், கைரிக்கு ப்ளாக்கியிடம் தான் பயம். ஒரு நாள் ப்ளாக்கிக்குக் குட்டிகள் பிறந்தன. கைரிக்கு அவற்றுடன் விளையாட ஆசை.  வாசற்படியில் வந்து கெஞ்சுகிறாள். அனுமதி டினைய்ட்! தன்னுடைய கூர்நகங்களை உள்ளிழுத்துக்காட்டி கெஞ்சுகிறாள். அனுமதீட். அப்பப்பா! என்ன விளையாட்டு! போங்கள்! அதுவல்லவோ தெய்வீகம்!

    சார்! இனி மேல்  எந்த மனிதன் உக்ரமாகவும், வக்ரமாகவும், மக்காராகவும் நடந்தால், மிருகத்துடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள், சார்! ப்ளீஸ்.

    இன்னம்பூரான்

    29 01 2013

    பி.கு: சோம்பல் இருந்தால் கூட, அதை முறித்து விட்டு, உசாத்துணையிலிருக்கும் ஆர்னியின் சித்திரத்தைக் க்ளிக்கி, ஒரு கும்பிடு போடுங்களேன்.

    உசாத்துணை:

    http://www.bbc.co.uk/news/uk-england-cambridgeshire-21244346

    Share
  • ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 2

    தொடுப்பவர் : ஜெயஸ்ரீ ஷங்கர்,
    சிதம்பரம்.

    எழுத்தாளரைப் பற்றிய விபரங்கள்

    1968

    குறுநாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா,

    சொந்த ஊர் : வத்தலக்குண்டு .

    பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனவர்.. தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டதன் பின், 1968 இல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்தவிகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம் கிடைத்தது.

    எழுதியுள்ளவை : 600க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 20 க்கும் மேற்பட்ட புதினங்கள், 60 க்கும் மேற்பட்ட குறும் புதினங்கள் , 60 க்கும் மேற்பட்ட சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள், 3 நெடிய நாடகங்கள், சில வசன கவிதைகள், நகைச்சுவை துணுக்கு எழுத்தாளராகவும் ஆனந்த விகடனில் 1987 இல் அறிமுகமாகப் பெற்றவர்.

    பெற்ற பரிசுகள்: தினமணி கதிர் நாவல் போட்டி, கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டி, லிலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு. அமுதசுரபி நாவல் போட்டி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது, திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு, தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு ஆகியன். ‘நம் நாடு’ எனும் சிறுவர் நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் யுக்ரெயின் மொழியாக்கம் 1987 இல் மாஸ்கோவில் நடந்த இந்தியக் கலைவிழாவில் வெளியிடப்பெற்றது.

    ஆங்கிலத்தில் 1975 இல் ஃ பெமினாவின் வாயிலாக அறிமுகம். 25 சிறுகதைகள், ஒரு மினி நாவல். ஆங்கில மரபுக் கவிதை  இராமாயணம் (1789 பாடல்கள்) , திருக்குறள், (Voice of Valluvar) காந்தியடிகளின் வாழ்க்கை நிகழ்வுகள் (Gandhi Episodes),  நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் (Pearls from the Prophet),  சத்தியசாயி பாபாவின் வரலாறு (The Living God at Puttaparthi )  ஆகியவை டாக்டர் கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் நடத்தும் POET  இல் தொடர்களாக வந்துள்ளன.

    விம்ன்ஸ் எரா , தி ஹிந்து, துக்ளக், மற்றும் இணையத்தில் திண்ணையிலும் தனது இன்றைய எண்ணங்களை எழுதிக் கொண்டு வருகிறார்கள்.

    சமீபத்தில் “செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி,  மன்னார்குடி” இந்த சமூக அமைப்பு இவரை “2012 க்கான சிறந்த பன்முக  எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து அதற்கான பரிசும் , விருதும் , கேடயமும் அளித்து  கெளரவித்துப் பெருமை சேர்த்துக் கொண்டது குறிப்பிடத் தக்கது.

    2. அதிர்ச்சி …!

    குறுநாவல்  எழுதியவர்:  ஜோதிர்லதா கிரிஜா.
    வெளியான வருடம்:  1970.

    இரண்டாவது  மலராக நறுமணம் வீசும் இந்த “அதிர்ச்சி ” என்கிற இந்த குறிஞ்சி மலரைப்  பறிக்கிறேன்..

    கதை குறிஞ்சிப்பூவாக மலர்ந்து கிட்டத்தட்ட 42 வருடங்கள் ஆகிவிட்ட போதிலும்  இன்னும் சிறுகதை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை நிரந்தரமாகப் பிடித்துக் கொண்டு படித்தவர் மனதை இறுக்கிப் பற்றிக்  கொண்டிருக்கிறது.

    மலரின் கூம்பு  இதழ்களைப் போலவே இதில் பாத்திரப் படைப்புகளும் கச்சிதமாக கூம்பாக உள்வாங்கி உணர்வுகளைக் கொத்துக் கொத்தாக மென்மையாக மனதைக்  கவர்கிறது.

    பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலரையொத்த இந்த குறுநாவலைப் படிக்கும் ஒவ்வொரு உள்ளமும் “இது போன்ற ஒரு கதையை இது வரை படித்ததில்லை….இனியும் யாரும் இவ்வளவு அழகாக எழுதவும்  மாட்டார்” என்று எண்ணாமல் இருக்க முடியாது. படிக்கும் போதே கதை பேசும் ‘அதிர்ச்சி’ அனுபவம் உண்டாவதும் உறுதி.

    இத்தனை ‘அதிர்ச்சி’ தரும் கதையில் அப்படி என்ன தான் இருக்கிறது..? குறிஞ்சி மலரை மலை சார்ந்த இடங்களில் உயரமான இடங்களில் மட்டுமே காணக் கிடைப்பது போல கதையைப் படிக்கும் போதே மலை ஏற்றம் தரும் உணர்வுடன் கொண்டு செல்வது புதுமை.

    கதையின் சாரம்:

    தனது  மனைவியை இழந்தவர் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் தனக்கு இரண்டாவதாக கல்யாணம் செய்து கொண்டு மேலும் அரை டஜன் குழந்தைகளைப் பெற்று, இருக்கும் இயலாமை , ஏழ்மை இரண்டும் தீராமல் போக, வயது வந்த பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்விக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லாது இருக்கும் ஒரு தகப்பன்.

    ஏழ்மை தனக்குத் தந்த வரமான வாழ்க்கையாக இரண்டாம் தாரமாக வாக்கப்பட்ட அவரின் மனைவி தான் வெறும் பிள்ளைப் பெறும் இயந்திரம் மட்டுமே எனபதைப் போல பத்து வருடத்தில் ஆறு குழந்தைகளைப் படைத்து படைப்பாளியாகப் பெருமை கொள்ளும் விதமாக ‘சித்தி’ யின்  பாத்திரப் படைப்பு.

    தாயை இழந்த மூத்த மகள் தன் தந்தை செய்த இந்த இரண்டாம் கல்யாணத்தை ஏற்க மனசில்லாமல்,மனதோடு புழுங்கி இப்படி செய்து விட்டாரே..என்று வேதனை பட்டு, ஆத்திரப் பட்டும், அதனாலேயே தனக்கு அன்னை முறையாக வந்த ‘சித்தி ‘ யைக் கூட மனசளவில் ஏற்காமல் தாயை நினைத்து வருந்துவது.

    குடும்பத்தின் கஷ்டத்தை மனதில் கொண்டு அக்கா, தங்கை இருவருமே மாலையில் பஜ்ஜியும், போண்டாவும் செய்து தெருத் தெருவாக நடந்து விற்பனை செய்ய, அந்த வியாபார நேரத்தில் நடக்கும் வியாபாரம் செய்கிறேன் என்று வீடுகளில் ஆண்கள் செய்யும்  பல வித அத்துமீறல்கள்.., அவர்களின்  வக்கிரங்கள் , ஒரு ஏழைப் பெண் தனது வாழ்வாதாரத்துக்கு உழைத்து சம்பாதிக்க முனைந்தாலும் அதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டு, அவர்களின் நைந்து போன உள்ளத்தைப் பார்க்காமல்…உடலைப் பார்த்து தனது வக்கிரங்களுக்கு வடிகால் தேட முயலும் போது…மேலும் உள்ளம் புண்ணாக…அங்கங்கு வியாபாரம் செய்வதையே நிறுத்தி விடுகிறார்கள்.இதற்கெல்லாம் விடிவே கிடையாதா? என்றும்  மனசு ஏங்க  வைக்கிறது.

    அக்காவுக்கு வயதாகியும் இன்னும் திருமணம் நடக்காமல் இருக்கிறதே என்று மனசுக்குள் கவலைப் பட்டு…அதைத் தனது அக்காவிடமே எடுத்துச் சொல்லி…நானா இருந்திருந்தால் ‘ஓடிப் போயிருப்பேண்டி அக்கா….ஓடிப் போயிருப்பேன்…’ என்று தனது ஆதங்கத்தை வெளிப் படுத்துகிறார் தங்கை ஜானகி. தங்களது பெருகிய குடும்பத்தின் ஏழ்மையை விரட்ட வீடு வீடாகச் சென்று பஜ்ஜியும் , போண்டாவும் வியாபாரம் செய்து பணம் கொண்டு வருவதனால் தான் தனது தந்தை நம் இருவரையும் திருமணம் செய்து வைக்காமல் வீட்டோடு வைத்துக் கொண்டிருக்கிறார். இதை நானே கேட்கிறேன்…என்று நேரம் பார்த்து தன்  தந்தையை கேட்கும்  அனல் பறக்கும் வார்த்தைகளைக்  கேட்டு அக்காவே தங்கையைத் திட்டுகிறாள்.

    தனது இயலாமையை உணர்ந்தாலும் இப்போது தன்னால் ஏதும் செய்ய இயலாது , மகளின் திருமணத்திற்கு வரதட்சிணை ஏதும் தந்து நடத்தி வைக்க  இயலாது என்று தெரிவித்ததும்…இப்பேர்பட்ட குடும்பத்தை விட்டு ஓடினாலும் பரவாயில்லை என்னும் தனது உணர்வுக்கு சரியான முடிவாக அவள்  மனதுக்குள் ஏற்றுக் கொள்கிறாள்.

    இந்நிலையில், அக்காவின் வாடிக்கையாக வியாபாரம் செய்யும்  பெட்டிக்கடைக்காரர் நடேசன் அவளைக் காதலிப்பதாகவும், தான் முதலியார் வகுப்பைச்  சேர்ந்தவர் என்பதால்  உள்ளூரில் மணந்து கொண்டு வாழ இயலாது என்பதால் எங்காவது வெளியூரில் சென்று வாழலாம்…அதற்கான  சம்மதம் கேட்டுக் கடிதம் எழுதித் தரவும். அதை வாங்கிப் படித்து மனம் ஏற்றாலும் , பரிபூரணமாக நடேசனைத் தானும் விரும்பினாலும், குடும்பத்தில் மூத்தவளாக இருந்து கொண்டு, தனக்கும் மனசுக்குப் பிடித்திருக்கிறது என்னும் ஒரே காரணத்தில் சுயநலமாக எண்ணி  தான் ‘நடேசனோடு ஓடிப் போனால்’ தன்  தங்கையின் திருமணம் தடைபட்டு விடுமே என்ற ஒரே நல்லெண்ணத்தில் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு அவரைத் நிராகரித்து, தவிர்த்து விடுகிறாள்.

    இருந்தும் சில நாட்கள் கழித்து நடேசனைப் பார்க்க வேண்டும் என்று மேலோங்கிய எண்ணத்தினால் அந்தப் பெட்டிக் கடைக்குச் செல்லும் போது  தான், அவர் அந்தக் கடையை வேறோருவருக்கு விற்று விட்டு சென்ற விஷயம். மனம் ஓடிந்தவளாக  வீடு திரும்பும் அக்கா இனி அவனைப் பார்க்கும் வாய்ப்பு தனக்கு இல்லை என்பதைப் புரிந்து கொண்டு வருந்துகிறாள். அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான் என்று தன்னைத் தேற்றி கொண்டு வளைய வரும் வேளையில்  தான் அவளது தங்கை ஜானகி தான் இரண்டு வருஷமாக அந்த ஊரின் மெயின் ரோட்டில் ஹோட்டல் வைத்து நடத்தும் கேசவன் நாயரின் தம்பி மாதவன் நாயரைத் தான் என்பவரை மனதார விரும்புவதாகவும், அவர்கள் வீட்டில் திருமணத்துக்கு  அவசரப் படுத்துவதாலும், அவர்கள் குடும்பத்தோடு கேரளாவுக்கு சென்று விடுவதால் தானும் அவர்களோடு சேர்ந்து சென்று விடலாம் என்னும் எண்ணத்தில் இருப்பதாகவும் சொல்கிறாள்.

    இரண்டு வருஷமாகச் சொல்லாமல் மூடி வைத்ததால், தங்கையின் எதிர்காலம் கருதி தனது காதலைக் கருக்கி விட்டேனே என்று மனதுக்குள் அழுதவளாக தனது அக்காவிடம் மட்டும் சொல்லி ஆசி வாங்கிச் செல்ல வரும் தங்கையின் தோளில் முகம் புதைத்து  மனத்தின் பாரம் இறங்க அடக்க முடியாமல் அழுகிறாள் அக்கா.

    அதில், கூடப் பிறந்த தங்கையைப்  பிரிகிறோமே  என்ற வருத்தத்தைத் தாண்டி தான் ஏமாந்து விட்டேனே என்ற  ஆற்றாமையும் சேர்ந்து கொண்டது அவளது  தங்கைக்குத் தெரியாது .

    பரிமளாவுக்கு  ஏற்பட்ட ‘அதிர்ச்சி’யை மிகவும் அழகாக எடுத்துக் கூறி தலைப்போடு கூடி கதை முடிகிறது.

    இனி , கொத்தாக குறிஞ்சி மலர் :

    இந்தக் கதையில் ஒரு சராசரி மனுஷியின் அத்தனை குணங்களும் பிரதி பலிக்கும் வண்ணம்
    இருக்கும் பாத்திரப் படைப்புகளைச் சித்தரித்திருப்பது யதார்த்தம். கதை முடிந்த பின்பும் கூட மனதைத் தாக்கி மௌனப் படுத்திவிடும் ‘அதிர்ச்சி’.

    இதோ.. மொட்டாக :

    விளக்கைச்  சுற்றி சுற்றிப் பறந்து கொண்டிருந்த விட்டில் பூச்சி கடைசியில் அதற்குள் விழுந்து விளக்கையும் அணைத்து தானும் அதிலேயே விழுந்து செத்துப் போய் கூடத்தை இருள் மயமாக்கியது. இந்த ஒரு நிகழ்ச்சி கூட தத்ரூபமாக எழுத்திலேயே ஒளியைக் காண்பித்தது .

    கதையின் ஆரம்பம்,  இருட்டை ஒளிமயமாக்க வேண்டி தீப்பெட்டி தேடும் நிலையில் கதையின் நாயகி வெளியே வருகிறாள். அந்த நேரத்தில் அந்த இருளில் தீப்பெட்டி தேடும் போதே…நமக்கு தன தங்கை, சித்தி, அப்பா..இறந்து போன தனது அம்மா என்று ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைக்கும் விதம் அருமை.

    விளக்கேற்றி அந்த இடத்தில் ஒளி வரும்போது, நம்மிடையே அந்தப் பாத்திரத்தின் பரிமளம் புரிபடுகிறது.

    மெல்ல இதழ் விரிகிறது :

    வெறுப்பு:

    தன்னைப் பெற்ற தந்தையாகவே இருந்தாலும், “அந்த விட்டில் பூச்சிக்கும் நாற்பது வயதுக்கு மேல் இரண்டாம் தடவையாகத் திருமணம் செய்து கொண்டு வேண்டாத குடும்பச் சுமையை இழுத்து விட்டுக் கொண்டிருக்கும் இந்த அசட்டு அப்பாவுக்குமிடையே எந்த வகையான வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கு ”  அந்தப் பூச்சி உயிரையே விட்டுத் தொலைத்து விட்டது. இந்த மனிதப் பூச்சியோ நானும் உயிர் வாழ்ந்து கொண்டு இன்னும் சில உயிர்களை பிறப்பித்துக் கொண்டு நானும் வாழ்கிறேன் என்று அரை உயிராய் வாழ்ந்து கொண்டிருக்கிறது…”  என்று எண்ணுமிடத்தில் வெறுப்பை உமிழ்கிறது.

    அருவருப்பு:

    படுக்கையில் விழுந்த எனக்குத் தூக்கம் வரமாட்டேன் என்றது. சித்திக்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த அவளுடைய ஐந்து குழந்தைகளையும் ஆறாவதாக அவள் வயிற்றுள் வளர்ந்து கொண்டிருந்த உயிரையும் நினைத்துப் பார்த்தபோது எனக்கு அருவருப்பாய் இருந்தது. ஆமாம்..என் தம்பி , தங்கைகள் என்கிற நினைப்பைக் காட்டிலும் சித்தியின் குழந்தைகள் என்கிற நினைப்பே மிகுதியாக நெஞ்சில் எழுகிறது.அப்படி நினைப்பது தப்பாக இருக்கலாம். ஆனால் அப்படித்தான் என்னால் நினைக்க முடிகிறது. இந்த வரிகள் மிதமிஞ்சிய ஒரு அருவருப்பை தன் உறவுகள் மீதே பொழிகிறது.

    நியாயம் :

    “ஆழ்ந்து சிந்திக்கும் போது சித்தியையோ அவள் பெற்றிருக்கிற குழந்தைகளையோ வெறுப்பது பாவம் என்றும் அம்மா செத்துப் போய் ஒரே வருடத்துக்குள் சித்தியை அழைத்துக் கொண்டு வந்தவரும் இத்தனை உயிர்களுக்கு படைப்பாளியுமான அப்பாவைத் தான் நியாயமாகப் பார்க்கப் போனால் வெறுக்க வேண்டும் என்று தோன்றுகிறது”. இந்த நியாயமும் பேசும் கதை.

    ஏக்கம்:

    “அம்மா….அம்மா தான். இன்றைய தேதியில் அம்மா உயிருடன் இருந்தால் இந்த வீடு இப்படி இருக்குமா என்பதைப் பற்றிய கற்பனையில் ஈடுபடாமல் இருக்க முடியவில்லை. அம்மா இருந்த வரையில் ஜானகியும் நானும் அவளது அன்பு மழையில் நனைந்து கொண்டு மகிழ்ச்சியும் சிரிப்புமாக வாழ்ந்து கொண்டிருந்தோம். வறுமை எங்களைச் சிறிதும் பாதிக்கவில்லை”. இந்த வரிகள் அம்மாவின் மேல் இருக்கும் ஏக்கத்தை  பிரதிபலிக்கிறது.

    பரிதாபம்:

    குழந்தை வேண்டும் என்று ஒருவன் ஆசைப்பட்டு அது பிறக்காமல் இருப்பது வேண்டுமானால் கடவுளின் செயலாக இருக்கலாம். வருஷா வருஷம் பெற்றுகொள்வது கூட ‘அவன்’ செயலா? அது ‘அவன்’ செயலோ,இல்லாவிட்டால் அவன் மேல் பழிசுமத்தும் அப்பாவின் செயலோ. அதன் விளைவு ‘அவள்’ அல்லவோ அனுபவிக்க வேண்டியிருக்கிறது..? என்னதான் இருந்தாலும் வருஷா வருஷம் வயிற்றைத் தூகிக் கொண்டு சித்தி பெற்றுப் பிழைப்பதை நினைத்துப் பார்த்தால் பாவமாகத் தான் இருக்கிறது. ஒரு பெண்ணின் நிலை கண்டு இன்னொரு பெண்  பரிதாபப் படும் வரிகள்.

    அவமானம்:

    “தங்க விக்கிரகம் மாதிரி மூக்கும் முழியுமாக ஒரு பெண்டாட்டி இருக்கையில் குறுகுறுவென்று என்னை என்ன அப்படிப் பார்க்க வேண்டிக் கிடக்கிறது? என் சாண் உடம்பும் ஒரு சாணாய் குறுகிப் போய்  விடும் எனக்கு. உச்சந்தலையில் தொடங்கி உள்ளங்கால் வரைக்கும் அவன் உற்றுப் பார்க்கும்போது பூமி பிளந்து அப்படியே என்னை விழுங்கி விடாதா என்று இருக்கும். சில பெண்கள் வேண்டுமானால் ஒருவேளை நம்மை ஒருவன் உற்றுப் பார்க்கிறாப்போல் அழகாய் இருக்கிறோம் என்பதில் கர்வப்பட்டுக் கொள்ளக்கூடும். ஆனால் எனக்கென்னவோ அந்த மாதிரி சமயங்களில் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வேண்டும்போல் அவமானமாக இருக்கும்”. ஒரு இளம் பெண்ணின் இயல்பான எண்ணம் இது. ஏழ்மை ஏற்படுத்தும் உணர்வில் இதுவும் சேரும்.

    கவலை:

    “மொத்தத்தில் பெரும்பாலோருடைய பார்வையே நன்றாகயில்லை. எல்லாம் மொய்க்கிற பார்வைகள். துகிலுரிக்கிற பார்வைகள், கற்பழிக்கிற பார்வைகள், இப்படித்தான். தங்கை ஜானகிக்கு இம்மாதிரியான தொந்தரவுகள் ஏற்பட்டனவா என்பது தெரியவில்லை”
    “ஜானகிக்கு இந்த மாதிரி தொந்தரவெல்லாம் வராமே இருக்கணுமே பகவானே” என்று அடிக்கடி வேண்டிக் கொள்வேன்”. இதில் ஒரு தாயின் கவலை தெரியும்.

    அலுப்பும் சலிப்பும் :

    “ஐயே…போதுமே! என் சந்தோஷமும் நானும்”
    கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு கவலைப் படுவதற்கென்றே கொஞ்ச நேரம் கூட ஒதுக்க முடியாத அளவுக்கு வேலைகள் உடம்பை வெட்டி முறிக்கிற நிலை கூட நாட்கள் கிடுகிடுவென்று ஓடுவதற்குக் காரணமில்லையா? – இதில் தெரியும்.

    ஆச்சரியம்:

    ஆச்சு. அடுத்த ஆண்டு பிறக்கும் போது என் இருபத்தாறாம் வயசும் பிறந்து விடும். “என்னது? எனக்கு இருபத்தஞ்சு வயசா முடியப் போறது? அடேயப்பா! இன்னும் அஞ்சு வருஷம் ஓடிடுத்துன்னா முப்பது வயசுன்னா ஆயிடும்?”

    கழிவிரக்கம்:

    “இந்த இருபத்தைந்து வருட வாழ்க்கையில் ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா’ என்று எவனும் என்னிடம் கேட்டது கிடையாது. ‘உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறேன்’ என்று எவனும் சொன்னதுமில்லை”. இந்த வரிகள் உள்ளத்தின் உணர்வை அப்படியே வெளிப் படுத்துகிறது.

    நிஜம்:
    பெண்கள் வீட்டுக்குள் வைத்துப் போற்றப்பட வேண்டியர்கள் என்று நம் பெரியவர்கள் வைத்திருப்பது பெண்களினுடயவும் இந்தச் சமூகத்தினுடையவும் ஒட்டுமொத்தமான நலனைக் கருதிதான் என்பதை என் அனுபவங்கள் அடிக்கடி எனக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

    ஆத்திரம்:

    “டூப் அடிக்கிறதைப் பார்த்தியோல்லியோ – சம்ஸ்க்ருத மந்திரம் சொல்ற வாயாலே சமஸ்கிருதம் செத்துப் போனதே இந்த மாதிரி ஆசாமிகளாலே தாண்டி ..! என்று எரிச்சலோடு என்னிடம் முணு முணுப்பாள் ஜானகி.
    எங்கள் கல்யாணத்தைப் பற்றி அசதிமறதியாகக் கூட மூச்சும் விட்டறியாத அப்பா அப்படித்தான் தயங்காமல் “பார்த்துண்டு தான் இருக்கேன்…ஒண்ணும் சரியா அமைய மாட்டேங் கிறதே” என்று புளுகும் போது”.

    பச்சாதாபம்:

    விருப்பமற்ற ஒரு பெண்ணைத் தொடுவதைக் காட்டிலும் மோசமான குற்றம் ஏதும் இருக்க முடியாது என்று தோன்றுகிறது. ஒரு பெண்ணை – அவள் சற்றும் இணங்காத போதும் – தொட்டுக் கற்பழிப்பது கொலை செய்வதைக் காட்டிலும் கொடியது. அம்மாதிரியான கொடுமைக்கு ஆளாகாமல் என் வானாளைக் கழித்துவிட வேண்டும்”. ஒரு மணமாகாத இளம் பெண்ணின் நியாயமான எண்ணம்.

    காதல்:

    அது தகாத உறவு. கூடாக் கனவு, யாருடைய ஏற் கையையும் பெற முடியாத தொந்தம் என்பது நன்றாக எனக்குத் தெரிந்திருந்த நிலையிலும் கூட இந்தப்  பாழும் மனசு ஏன் தான் இப்படி அவனையே சுற்றி சுற்றி வர வேண்டுமோ புரியவே இல்லை” அழகான வெளிப்பாடு.

    நாணம்:

    “மூஞ்சி சொல்றதோல்லியோ அப்ப அதையே கேட்டுக்கோடி” என்று சொல்லிவிட்டு நான் அவள் முகத்தைப் பார்க்காமலே கிடுகிடு என்று குழவியை ஆட்டினேன்.
    இருந்தாலும் சொல்லு சொல்லுன்னா என்னத்தைச் சொல்றது? ஏதாவது இருந்தாத்தானே சொல்றதுக்கு?
    “உன் குரலே காட்டிக் குடுக்கிரதுடி அக்கா”…என்று ஜானகி மெதுவாகச் சிரித்தாள் .
    “அப்படியே வெச்சுக்கோ போ..”
    தங்கையிடம் சொல்லத் தவிக்க நாணம் மூடும் காட்சி.

    திகைப்பு:

    (தந்தைக்கு மகள் செய்த உபதேசம்)
    வசிஷ்ட  மகரிஷி என்ன சொல்லியிருக்கார்ங்கறது தெரியாதா உங்களுக்கு? வயசுக்கு வந்த பெண்ணை மூணு வருஷத்துக்குள்ளே கல்யாணம் பண்ணி குடுக்கல்லேன்னா
    தனக்குப் பிடிச்ச எவநோடையும் போறதுக்கு ஒரு பொண்ணுக்கு முழு உரிமை உண்டுன்னும் அந்த மாதிரி செய்யற ஒரு பொண்ணோ இல்லேன்னா அவளை அழைச்சிண்டு போற ஆணோ குற்றவாளிகள் இல்லைன்னு அவரும் மனுவும் சொல்லியிருக்கிறதை நான் ஞாபகப் படுத்த வேண்டாம்னு பார்க்கறேன். தன பொண்ணு வயசுக்கு வந்த ஏழு மாசத்துக்குள்ளே ஒரு தகப்பன் அவளுக்குக் கல்யாணம் பண்ணி  வைக்கலைன்னா ஏழு கொழந்தைகளைக் கொன்ன பாவம் அவனுக்கு வந்து சேரும்னு மனு தர்ம சாஸ்திரத்திலே கூடத்தான் சொல்லியிருக்கு.இதெல்லாம் சமஸ்கிருதத்தைக் கரைச்சுக் குடிச்சிருக்கிற உங்களுக்குத் தெரியாதா என்ன?  சும்மா சமஸ்கிருதப் புஸ்தகங்களை வரிசையா அலமாரியிலே அடுக்கி வெச்சுட்டாப்லே  ஆச்சா? நாக்கில் பல்லைப் போட்டு அவள் கூசாமல் கேட்ட கேள்விகள். வயசு வந்த ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய குறைந்த பட்சக் கூச்சம் கூட இல்லாமல் ஜானகியா இப்படியெல்லாம் பேசுகிறாள் என்று எனக்குத் திகைப்பாய் இருந்தது.

    இயலாமை..:

    ”  இந்த ஆவணிக்குள்ளே  அக்கா கல்யாணம் நடந்தாகணும்..ஆமா..! குதிர் குதிரைப் பொண்ணுகளை வளர்த்து வெச்சிண்டு அவா சம்பாத்தியத்துலே வயிறு வளர்த்துண்டிருக்கேள்ன்னும் அதனாலே தான் எங்க கல்யாணத்தைப் பத்தின பிரக்ஞையே உங்களுக்கு இல்லைன்னும் ஊர்லே நாலு பேர் பேசற பேச்சு காதுலே விழரச்சே உங்களுக்கு அவமானமாய் இல்லே? நானாயிருந்திருந்தால் நாக்கைப் பிடுங்கிண்டு பிராணனை விட்டுடுவேன்..”
    ஜானகியின் ஒவ்வொரு சொல்லும் பச்சை மரத்தில் ஆணி அடித்தார் போல் பளிச் பளிச்சென்று வந்து விழுந்தது.

    விரக்தி:

    “பாவ புண்ணியம்” நாகரிக-அநாகரிகம் ” நீ சொல்ற ரசாபாசம்- இதுகளெல்லாம் பார்க்க வேண்டிய வீடுகள் வேறேடி . இந்த வீடு இல்லை”.

    அறிவுரை:

    இன்னிக்கு நம்ம அப்பா- அம்மாவுக்கு நாம என்ன மாதிரி மரியாதை காட்றோமோ அந்த மாதிரியான மரியாதையைத்தான் நாளைக்கு நம்ம குழந்தைகள் நமக்குக் காட்டும்..”

    குறும்பு:

    “கல்யாணமே ஆகக் காணோம். அதுக்குள்ளே குழந்தை-குட்டிக்குப் போயிட்டா இவ ..! வேடிக்கை தான்”.

    எகத்தாளம்:

    “ஓடிப் போயிருப்பேண்டி …ஓடிப் போயிருப்பேன் ” இருபத்தாறு வயசு வரைக்கும் தன் பொண்ணோட கல்யாணத்தைப் பத்தி யோசிக்காத தகப்பனுக்கு மரியாதை குடுக்கணுமாம் மரியாதை” – தங்கையின் எகத்தாளம்.

    துடிப்பு:

    “இந்த நடேசன் மொதலியார் ஜாதியிலே போய்ப் பொறந்து வெச்சிருக்கானே? பிராமண ஜாதியிலே பொறந்து தொலைச்சிருக்கப் படாதோ? என்று என் மனசு முட்டாள்தனமாக ஏங்கத் தொடங்கிற்று…என்ன பைத்தியக்காரத்தனம்?

    நேசம்:

    “பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலொழிய கலப்பு மணம் வெற்றியில் முடியாது என்பதையும் முக்கியமாக ஆணுக்கு அந்த மனப்பான்மை மிகுதியாக இருக்க வேண்டும் . பெற்றவர்களை விரோதித்துக் கொண்டு ஒருவனை நம்பி “அவனே கதி என்று ” ஓடி வருகிற ஒரு பெண்ணை அனுதாபத்தோடு பார்க்கும் பரந்த மனப்பான்மை ஆணுக்குள் இருக்க வேண்டும். ஏனென்றால் பெற்றவர்களுடைய அதிருப்தியும் விரோதமும் பெண்ணுக்கு பெரிய நஷ்டங்கள். புகுந்த இடத்திலும் அவள் மனப்பூர்வமாக வரவேற்கப்படுவதில்லை…என்கிற நிலையில் விட்டுக் கொடுக்கிற தன்மை பெண்ணைக் காட்டிலும் ஆணுக்குச் சற்று அதிகமாவே இருந்தால்தான் கலப்பு மனம் செய்து கொள்ளும் ஒரு பெண் நிம்மதியாக வாழ முடியும். இந்த நேசம் நடேசனின் கடிதத்தில் எதிரொலித்தது.

    மனசாட்சி:

    “நீ நிமிஷத்தில் ஓடிப் போயிடுவேடி. ஆனா அப்படி ஓடிப்போனவளுடைய தங்கையை யாரு கல்யாணம் பண்ணிப்பா நாளைக்கு? அதைப் பத்தி யோசிச்சுப் பார்த்தியா? உனக்காகப் பரிஞ்சு அப்பாகிட்டக் கன்னாப் பின்னான்னு பேசின ஜானகியுடைய வருங்கால வாழ்க்கையை உன்னுடைய காரியம் எந்த அளவுக்குப் பாதிக்கும்கிரதைப் பத்தி துளிக்கூட யோசிச்சுப் பார்ககாமே…”ஓடிப்போனா என்ன” என்று நீ நினைப்பது சுயநலமில்லையா ?

    கண்ணியம்:

    “உங்கள் பயன்தராத அன்புக்கு மற்றுமொரு முறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” – பரிமளாவின் முழுக் கடிதமும் வார்த்தைகளை கோர்த்த விதம் அருமை.

    ஆசை:

    “திடீரென்று ஒரு நாள் என் மன உறுதி சிதைந்து போயிற்று.நடேசனைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் கட்டுக்கு அடங்காமல் என்னுள் பொங்கிற்று. தொலைவில் நின்றாவது அவனது அன்பு முகத்தை ஒருதரமாகிலும் பார்த்து விடவேண்டும் போல் மனசு கிடந்து அடித்துக் கொண்டது. அந்த எனது ஆவலுக்குத் தடை போட முடியாமல் நான் வெகு நாட்களுக்குப் பிறகு அந்தப் பெட்டிக்கடைப் பக்கம் நடக்கலுற்றேன்” .

    ஏமாற்றம்:

    “அவுரு கடையை வித்துட்டுப் போயி அஞ்சாறு மாசத்துக்கு மேலே ஆகுதேம்மா”…..
    “இந்த ஊரை விட்டுப் போயிட்டாருங்கறது மட்டுந்தான் தெரியும். எங்கிட்டு இருக்காருங்குற வெவரம் தெரியலியேம்மா”
    இதைக் கேட்டதும் என் நெஞ்சுக்கூட்டினுள் ஒரு நரம்பு அருந்தாற்போல் இருந்தது.

    தைரியம்:

    “அன்னிக்குச் சொன்னேனோல்லியோ? அதைத் தான் காரியத்திலே காட்டப் போறேன்.அதாவது ஓடிப் போகப் போறேன்.”
    “..”

    பயம்:

    “பையன்  யாரு என்னன்னு தெரிஞ்சா அப்பா கட்டையை எடுத்துண்டு வருவா. நீ  கூட என்ன நினைப்பியோ தெரியல்லே”.

    தயக்கம்:

    “ரெண்டு வருஷமா எங்களுக்குள்ளே ‘இது’. உனக்குக் கல்யாணம் ஆனதுக்கு அப்பறந்தான் பண்ணிக்கணும்னு இருந்தேன். ஆனா அவா வீட்டிலே அவசரப்படுத்தறா …அதான்..”.

    பெருந்தன்மை:

    “நீ கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு தீர்மாநிசிருக்கிரதைப் பற்றி ரொம்ப சந்தோஷம் ஜானகி.
    ஆனா ரெண்டு வருஷமா இந்த விஷயத்தை என்கிட்டேர்ந்து மூடி மறைசிருந்திருக்கியே நியாயமா? என்று கேட்டேன்.
    அதனாலே எனக்கு எவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்குன்னு தெரியுமாடி உனக்கு ? என்று கேட்க முடியாமல் மனசுக்குள் பொருமினேன்.

    மகிழ்ச்சி:

    “அக்கா ! என்னை ஆசீர்வாதம் பண்ணுடீ” என்றவாறு அவள் திடீரென உணர்ச்சிவசப்பட்டு பாய்ந்து வந்து என்னைக் கட்டிக்கொண்ட போது, என்ன சொல்வது என்றே தோன்றாமல் அவள் முதுகைத் தடவிக் கொடுத்தேன்.
    “ஜானகி என்னோட ஆசீர்வாதம் எப்பவும் உனக்கு உண்டுடீ! அதை நீ கேட்டு வாங்கிக்கணு ம்னுட்டு இல்லை “- இப்படிச் சொல்லி விட்டு நான் அவள் தோளில் என் முகத்தை அழுத்திக் கொண்டேன்.

    துக்கம்:

    நான் அழுதது அதற்காக மட்டும் இல்லை என்றும் வேறு இன்னொன்றுக்காகவும்கூட என்றும் அவளுக்கு எப்படித் தெரியும்?

    மலர்க் கொத்தை நீட்டும் போது :

    “இந்த ஒரு அதிர்ச்சி கதைக்குள்….ஒரு பெண்ணின் அத்தனை மன உணர்வுகளும் அளவாக அழகாகச்  சேர்ந்து கொத்து மலராக நறுமணம் வீசி படிப்பவர்களை தன்னோடு கூடவே  இழுத்துக் கொண்டு செல்லும் உயிர்ப்பு இருக்கிறது.

    கதை வந்து நாற்பது வருடங்களுக்கு மேலே ஆனாலும் என்ன…? இன்னும் பூமி சுற்றும் வரையில், ஏழ்மை இருக்கும் வரையில்…இது போன்ற பரிமளாக்களும் ஜானகியும் எங்கேயோ இதே உணர்வுகளோடு திண்டாடிக் கொண்டும்,  போராடிக் கொண்டும்  தான் இருக்கிறார்கள்.

    எத்தனையோ விதத்தில் சமுதாய முன்னேற்றங்களும், மாற்றங்களும்  வந்திருந்த  போதிலும்  பூமிக்கடியில் வேர்கள் ஒன்றாக இருப்பது போல வாழ்வியலின் அடிப்படை என்றும் மாறாதது என்பதை உணர்த்தும் விதமாக ஆசையும் …ஆசாபாசங்களும் தீராது என்றும் ஆணித்தரமாக நம்மை நம்ப வைக்கிறது.

    இத்தனை வருட இடைவெளிகளுக்குப் பிறகு  இந்தக் கதையை படித்தாலும் “குடும்பம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் ” ஒரே குழந்தையோடு நின்றுவிடும் முன்னேற்றம் மட்டும் கண்கூடு.

    மேலும் பெண்களுக்கு மிதமிஞ்சிய சுதந்திரம் வீட்டிலும் வெளியிலும், படித்ததனால் நல மதிப்பு…தங்களின் வாழ்க்கையைத் தாங்களே முடிவு எடுத்துக் கொள்ளும் திறனும், தைரியமும் வாழ்வின் முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக தற்போது  நடை முறையில் வந்து விட்டது பாராட்டப் பட வேண்டிய விஷயம் தான் .

    தலைமுறை இடைவெளியில் ஆண்களில் கூட நல்ல எண்ணத்தில் முன்னேற்றமும் பரந்த மனமும், வரதட்சிணை விழிப்புணர்வும் மாற்றமாக வந்துள்ளது. எல்லாம் உயர்மட்டத்திலும் , மேல்மட்ட நடுத்தர வர்கத்திலும் வந்திருந்தாலும்….இன்னும் நடுத்தர, கீழ் மட்ட வர்கத்துக் குடும்பங்கள் அதே சூழலில் தான் உழன்று வருகின்றனர்.

    எந்த வகையான  மாற்றங்களிலும் கீழ், நடுத்தர, உயர்ரக மட்டங்கள் எப்போதும் மாறாமல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. எல்லோரும் பொருளாதாரத்தில் சமமாகும் காலம் என்றுமே வரப் போவதில்லை. மாற்றங்கள் மனதளவே  என்றாலும் சமுதாயத்தில் பொருளாதார மாற்றம் தான் வாழ்வியல் மாற்றமும் ஆகும். வாழ்க்கையில் கஷ்டப் படும் குடும்பமும், சுக போகமாய் வாழும் குடும்பமும் – இரு வேறு முனைகளாக என்றென்றும் நிரந்தரமாக இருக்கும். அது மாறாதது.

    மற்றபடி கதையின் சாரம் அன்றும், இன்றும், என்றும் ஒரே உணர்வின் சூத்திரத்தை தான் சொல்கிறது. அதிர்ச்சிக்குள் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம்.

    கதையின் நாயகி  ‘பரிமளா’ இந்தக்  கதையைத் தாண்டி மனசுக்குள் வந்து உலாவுகிறாள். இதயத்துக்குள் காலத்துக்கும் உறைந்து போகிறாள். இது தான் ‘அதிர்ச்சி’யின் வெற்றி.  காலம் கடந்தும் இந்தக் கதை மனிதனின் வக்கிர முகமூடியைக் கிழித்து நிஜத்தை சொல்லிக் கொண்டிருக்கும்.

    தத்ரூபமாக நாயகியை முன்னிறுத்தி கதை சொல்லிய அழகு தனி.. அனைவரும் அவசியம் இந்த எழுத்துக்கள் பேசுவதைப் படித்தால் கேட்கலாம்.
    ================================================================================================================

    Share
  • மகளிர் உடல்நலனும், கடமைகளும்!!

    மேகலா இராமமூர்த்தி

    “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!” என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. அத்தகைய மங்கையர் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் ஆற்றி வரும் பணிகள் அளவிடற்கரியன. பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் “நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும்” பெற்ற இன்றைய பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை எனலாம். வீட்டைப் பராமரிப்பது முதல் விண்வெளிக்குச் செல்வது வரை அவர்கள் செய்து வரும் பணிகள் அளப்பரியன. ஆனால் இவ்வளவு ஆற்றல் மிக்க பெண்கள் தங்கள் உடல்நலத்தில் போதுமான அக்கறை செலுத்துகின்றார்களா? என்றால், இல்லை என்றுதான் வருத்ததோடு சொல்லவேண்டியுள்ளது.

    திருமணத்திற்கு முன்பு வரை தாயும், தந்தையும் தங்கள் மகளின் உடல்நலனைக் கண்போல் காக்கின்றனர் (பெரும்பாலான குடும்பங்களில்). ஆனால் திருமணத்திற்குப் பிந்தைய காலகட்டம் தான் ஒரு பெண்ணின் வாழ்வில் முக்கியமான காலகட்டமாகத் திகழ்கின்றது என்பதில் இருவேறு கருத்துகட்கு இடமில்லை. ஏனெனில், பல்வேறு குடும்பப் பொறுப்புகள், குழந்தைப் பேறு, அலுவலகப் பணி, கணவனையும், வீட்டிலுள்ள பெரியோர்களையும் பேணுதல் போன்ற பல கடமைகளை அவள் கவனிக்க வேண்டியிருக்கின்றது. இத்தகைய முக்கியமான தருணத்தில் பெண்கள் தம் குடும்ப நலத்தோடு தங்கள் உடல் நலனிலும் தனிக் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.

    ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது அனுபவ மொழி. அத்தகைய நோயற்ற வாழ்வைப் பெறுவதற்கு முறையான, சரியான உணவு முறை அவசியம் என்பதனை எவரே மறுப்பர்? “உணவே மருந்து” என்பது ஆன்றோர் வாக்கு. தெய்வப் புலவர் திருவள்ளுவரும்,

    ”மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
    ஊறுபா டில்லை உயிர்க்கு.” என்கின்றார். உண்ணும் உணவானது நோயற்ற வாழ்வை வழங்குவதில் பெரும்பங்காற்றுகின்றது. அத்தகைய உணவின் தன்மை, உண்ணும் அளவு, காலம் ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு உண்ணுதல் நலம் பயக்கும்.

    உணவில் மாவுச்சத்து (carbohydrates), புரதச்சத்து (protein), மற்றும் கொழுப்புச்சத்து (fat) ஆகையவைப் போதுமான அளவில் இருக்கின்றதா என்பதை பெண்கள் (ஏன் அனைவருமே) கவனித்தில் கொள்ள வேண்டும். இதனைத் தான் ”சமச்சீர் உணவு” (balanced diet) என்று இன்றைய மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, குழந்தை பெறுகின்ற வயதில் (child-bearing age) இருக்கும் மகளிர்க்கு இச்சமச்சீர் உணவு மிகவும் முக்கியமானது. அப்போதுதான் பிறக்கும் குழந்தைகள் நல்ல உடல்நலத்தோடும், மன வளத்தோடும், குறைபாடுகள் இன்றியும் பிறக்க வாய்ப்பு ஏற்படும். அதுபோலவே, 50 வயதைக் கடந்த பெண்களுக்கு (குறிப்பாக இந்தியப் பெண்களுக்கு) அதிகப் படியான கால்சியப் பற்றாக்குறை காரணமாக எலும்புத் தேய்மான நோய் (osteoporosis) ஏற்படுகின்றது. இதனால் தவறி அவர்கள் எங்கேனும் கீழே விழுந்தால் கூட எலும்பு முறிவு (bone fracture) ஏற்பட்டு விடுகின்றது. இதனைத் தவிர்க்கப் பெண்கள் கால்சியம் சத்து நிறைந்த பால், தயிர், கீரை வகைகள், சோயா பீன்ஸ், ஆரஞ்சு, முட்டை போன்ற உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.

    உடல் நலனைச் சீர்குலைக்கும் பிற நோய்கள் என்று பார்த்தால் பரம்பரை நோய்களுக்கு முக்கியப் பங்குண்டு எனலாம். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் போன்றவை பொதுவான பரம்பரை நோய்களாக அறியப்படுபவை. 30 வயதிற்கு மேல்தான் இந்நோய்கள் தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கும். ஆகவே, தாய், தந்தையர்க்கு இத்தகைய நோய்கள் இருப்பின் அவர்களின் வாரிசுகளுக்கும் அவை வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அதனை உணர்ந்து மருத்துவ ஆலோசனையை நாடுவதும், மருத்துவர் பரிந்துரைக்கும் உணவு முறையினைக் கடைப்பிடிப்பதும் அவசியம்.

    இன்றைய மருத்துவ உலகம் பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றங்களையும், புரட்சிகளையும் கண்டு வருகின்றது என்றால் மிகையாகாது. சான்றாக, நுண் துளை அறுவை சிகிச்சை (laparoscopic surgery) ஓர் வரப் பிரசாதம் என்றே கூறலாம். இதன் மூலம் பல்வேறு சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் எளிதாகச் செய்யமுடிகின்றது. வெகு விரைவிலேயே இயல்பு வாழ்க்கைத் திரும்பவும் இயலுகின்றது.

    நவீன மருத்துவ வசதிகளை, முன்னேற்றங்களைப் பெண்கள் தங்கள் உடல் நலத்தை காக்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நோய்கள் வருவதற்கு முன்னமேயே தற்காப்பு மருத்துவப் பரிசோதனைகளைச் அவ்வப்போது செய்துகொள்வது நல்லது. குறிப்பாக 30 வயதினைக் கடந்த பெண்கள் 3 ஆண்டுகட்கு ஒரு முறை மார்பகப் பரிசோதனை (Mammogram) மற்றும் கருப்பைப் பரிசோதனை (Pap smear) போன்றவற்றைச் செய்துகொள்வது அவசியமானது. இதனால் மார்பகப் புற்றுநோய் (breast cancer), கருப்பைசார் புற்றுநோய்கள் (cervical cancer, endometrial cancer and ovarian cancer) ஆகியவை வராமலே தடுக்கவோ அல்லது ஏற்கனவே வந்திருந்தால் ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தவோ இயலும். அதைவிடுத்து, வீட்டு வேலைகள், அலுவலகப் பணிகள் ஆகியவற்றின் காரணமாகப் பெண்கள் தங்கள் உடல்நலனில் போதிய அக்கறை செலுத்தத் தவறினால் பல்வேறு நோய்கட்கு அவர்கள் ஆட்பட நேரும். அது அவர்களின் இனிய இல்லறத்தைப் பாதிக்கக்கூடும். ஏன்..அலுவலகப் பணிகளையும் செம்மையாகச் செய்ய இயலாது.

    அடுத்தபடியாக, பெண்கள் தங்கள் உடலைப் பேணுவதற்கு, கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்கு உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை பெரிதும் உதவுகின்றன. எனவே, எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும் அதற்கு இடையில் தினமும் (காலையோ அல்லது மாலையோ) 15 அல்லது 20 நிமிடங்களேனும் இத்தகைய பயிற்சிகளில் ஈடுபடுதல் அவசியம். யோகா, தியானம் போன்றவற்றை முறையாகப் பயின்று பின்பு பயிற்சியில் ஈடுபடுவதே சிறந்தது. இத்தகைய பயிற்சிகளினால் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும். வேலைகளைத் திறம்பட நிர்வகிக்கத் தேவையான ஆற்றலையும், புத்திக்கூர்மையையும் இவை அளிக்கும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்கின்றனர்.

    அலுவலகம் செல்லும் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவதோடு, நேர மேலாண்மையிலும் (time management) ஆற்றலும் பெற்றவர்களாக இருந்தால் இன்றைய விஞ்ஞான உலகில் அவர்களால் அனைத்து வேலைகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் சிறப்பாய்ச் செய்ய முடியும். நேர நிர்வாகம் என்பதனை அவர்கள் முதலில் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். வீட்டு வேலைகளை அவரவர் வயதிற்கும், அனுபவத்திற்கும் தக்கபடி வீட்டிலுள்ள அனைவர்க்கும் பகிர்ந்தளித்தல் வேண்டும். இவ்வாறு செய்வது பெண்களின் வேலை பளுவையும், உடல் சோர்வையும், மன அழுத்தத்தையும் குறைக்கும். இம்முறையை (வாய்ப்பிருப்பின்) அலுவலகத்திலும் பின்பற்றலாம். இதைத்தான் ”delegation of duties” என்று குறிப்பிடுகின்றனர்.

    குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய மற்றொன்று, தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தைப் பெண்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதே. வேலைகளுக்கு நடுவில் கிடைக்கின்ற சிறிதளவு ஓய்வு நேரத்தை மிகவும் பயனுள்ள வகையில் செலவழிக்கப் பெண்கள் பழக வேண்டும். தொ(ல்)லைக் காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவிட்டுக் குழந்தைகளோடு செலவிடுதல் வேண்டும். நல்ல கருத்துள்ள நீதிக் கதைகள், திருக்குறள் போன்றவற்றை அவர்களுக்குக் கற்பிக்கலாம். அவர்களின் பள்ளி அனுபவங்களையும், ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முறைகள் பற்றியும் கேட்டறியலாம். அவர்களோடு சிறிது நேரம் விளையாடலாம். இது போன்ற செயல்கள் குழந்தைகளுக்கு மனமகிழ்ச்சியை நிச்சயம் கொடுக்கும். அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களாக வாழ வழிகோலும்.

    எனவே, உடல் நலத்தையும், மன வளத்தையும் காக்கத் தேவையான உணவினையும், உடற்பயிற்சிகளையும், முறையான மருத்துவப் பரிசோதனைகளையும், சரியான திட்டமிடலையும் மேற்கொண்டால் இன்றைய பெண்கள் மேலும் பல சாதனைகளைப் புரியலாம், சரித்திரம் படைக்கலாம். வீடு, அலுவலகம், இரண்டையும் திறம்பட நிர்வகிக்கலாம்.

    Share
  • திருக்குறள் நெறிகளைப் பின்பற்றுகிறோமா?

    அண்ணாகண்ணன்

    திருக்குறள் குறித்துத் தமிழர்களுக்கு எப்போதுமே பெருமிதம் உண்டு. அந்தக் குறட்பாக்களை வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் எழுதி வைக்கிறோம். அரசுப் பேருந்துகளில், அரசு அலுவலகங்களில், பள்ளி – கல்லூரி – பல்கலைக்கழகங்களில், பல்வேறு அரங்குகளில்…  திருக்குறளைக் காண்கிறோம். நாளிதழ்களில் தினமும் குறளும் உரையும் இடம் பெறுகின்றன. தொலைக்காட்சிகளில் திருக்குறளை விளக்குகிறார்கள். இணையத்திலும் பற்பல தளங்களில் குறள் வீற்றிருக்கிறது. திருக்குறளின் பெயரால் அமைப்புகளும் விருதுகளும் உலகெங்கும் உள்ளன. பாடப் பகுதியில் திருக்குறளின் சில அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன. அது போக, 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவர்கள் பலரும் உள்ளனர். திருக்குறளை மேற்கோள் காட்டும் தமிழறிஞர்களும் அரசியல்வாதிகளும் இன்ன பலரும் பற்பலர். திருவள்ளுவர் நாளும் திருவள்ளுவர் ஆண்டும் வேறு இருக்கிறது.

    இப்படியெல்லாம் திருக்குறளைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகம், திருக்குறட் கருத்துகளை எந்த அளவுக்குப் பின்பற்றுகிறது? இந்தக் கேள்விக்கான பதில், நமக்கு உவப்பானது இல்லை.

    கள்ளுண்ணாமையை வலியுறுத்திய வள்ளுவருக்குக் குமரி முனையில் 133 அடி உயரச் சிலையைத் தமிழக அரசு அமைத்தது. அதே அரசுதான் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் அரசு மதுபானக் கடைகளைப் பட்டி தொட்டி முதல் பட்டணம் வரை தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மதுக் கடைக்கும் வணிக நிறுவனத்தைப் போல், விற்பனை இலக்கினை நிர்ணயித்து, வியாபாரத்தைப் பெருக்கி, பல்லாயிரம் கோடிகளை இலாபமாக ஈட்டி வருகிறது. அப்படியானால், வள்ளுவரைப் போற்றுவதன் பொருள் என்ன?

    ‘வள்ளுவர் கூறிய எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர், புலால் உண்ணாமையை வலியுறுத்தினார். அதற்காக இறைச்சி உண்பதை விட்டுவிட முடியுமா?’ என்று பேரா.சுப.வீரபாண்டியன், நானும் பங்கேற்ற ஒரு பட்டி மன்றத்தில் வினவினார். மாமிசம் உண்ணும் தமிழர்கள், வள்ளுவ நெறிப்படிதான் நடக்கிறார்களா?

    பிறனில் விழையாமை என்ற கோட்பாட்டினை வள்ளுவம் முன் நிறுத்துகிறது. ஆனால், வாய்ப்பு கிடைக்காத வரை மட்டுமே அவ்வாறு இருப்பது, பெரும்பாலோரின் இயல்பு. இதற்கு எண்ணற்ற சான்றுகளை நம் தெருக்களிலும் ஊடகங்களிலும் அன்றாடம் காணலாம்.  உடல் அளவில் பிறனில் விழைந்தவர்களைக் காட்டிலும் மனத்தளவில் விழைந்தவர்கள் பற்பல மடங்குகள் அதிகம் இருக்கும். மனச்சான்றின்படி நோக்கினால், இங்கும் குறளின் கருத்தினை நாம் பின்பற்றவில்லை.

    தாகத்திற்குத் தண்ணீர் கேட்டால், புட்டியிலும் நெகிழ்ம உறைகளிலும் அடைத்து வைத்துள்ளதைக் காசுக்கு விற்கிறார்கள். தொலைக்காட்சித் தொடர் ஓடும்போது கட்டிய கணவரே வந்தாலும் திரும்பிப் பார்க்காத இல்லத்தரசிகள் இருக்கிறார்கள். ‘கொட்டிக்கோ’ என்று சொல்லி, உணவு பரிமாறும் பண்பும் பல வீடுகளில் உள்ளது. நாம் விருந்தோம்பலைப் பற்றிப் பேசுவது தகுமா?

    கடவுள் இல்லை, இல்லவே இல்லை, கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றெல்லாம் சொன்ன பெரியாரின் மாணவர்கள், தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செலுத்துகிறார்கள். இவர்கள், கடவுள் வாழ்த்துப் பாடிய திருவள்ளுவரையும் போற்றுகிறார்கள்.

    பொய்யாமையை வலியுறுத்திய வள்ளுவரை முன்வைத்துக் கேட்கிறேன். பொய் சொல்லாத தமிழர்கள் எவ்வளவு பேர்? சிறிதோ, பெரிதோ, பொய் பொய்தானே? சரி, வாய்மை இருக்கிறதே என்கிறீர்களா? தீமையிலாத பொய்களைச் சொன்னவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?

    இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்தவர்கள் எவ்வளவு பேர்? மனத்துக்கண் மாசிலனாக வாழ்பவர்கள்? ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் எனக் கருதுபவர்கள்? இன்னும் வள்ளுவத்தில் கூறிய நெறிகளின்படி வாழ்பவர்கள் எங்காவது இருக்கிறார்களா? அறியேன்.

    நான் பார்த்த வரை வள்ளுவ நெறிகளில் தமக்கு வசதியான வெகு சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து, சில நேரங்களில் மட்டும் பின்பற்றுபவர்கள் சிலர் இருக்கிறார்கள். பிற நெறிகளை நினைத்துப் பார்ப்பதே அரிது. பலருக்கு ஏட்டுச் சுரைக்காய், கறிக்குதவாது; கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதே கொள்கை.

    போற்றுவது ஒன்றை, கடைப்பிடிப்பதோ வேறு ஒன்றை என்பதே தமிழரின் நிலைப்பாடோ? சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியுடன் அவர்கள் வாழ்வதற்கு வள்ளுவமே சான்று.

    வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

    வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

    என்ற பாரதியின் வரிகளுக்கு ஏதோ ஒரு பட்டிமன்றத்தில் ஒருவர் விளக்கம் தந்தார். வள்ளுவத்தை உலகிற்குத் தந்துவிட்டதால், உள்நாட்டில் அது இல்லை என நகைச்சுவைக்காக அவர் கூறினார். ஆனால், இந்தக் கூற்றில் ஓரளவு உண்மையும் உள்ளது.

    வள்ளுவத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் கூட புரிந்துகொள்ளலாம். அதைப் போற்றிக்கொண்டே கடைப்பிடிக்காததுதான் எனக்குப் புரியவே இல்லை. இந்த இரட்டை வேடம் எதற்காக?

    வள்ளுவர் சுட்டிய நெறிகள் அனைத்தும் அவர் ஒருவரே வகுத்தவை அல்ல. அவருக்கும் முன்பே பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்த நெறிகளைச் சீரமைத்து, அவர் வகுத்தும் தொகுத்தும் தந்துள்ளார். ஆதித் தமிழரின் சிந்தனை வளம் செறிந்த செவ்வியல் இலக்கியமே திருக்குறள். அப்படியானால், இவ்வளவு செழுமையான நெறிகளைக் கொண்டிருக்கும் ஒரு சமூகம், ஏன் அவற்றைப் பின்பற்றத் தயங்க வேண்டும்? பின்பற்ற மாட்டேன் என மறுக்க வேண்டும்?

    திருக்குறள் எழுதப்பட்ட காலத்திலிருந்தே அதற்கு முரணான செயல்களைக் கொண்டவர்களும் இருந்தே வருகிறார்கள். ‘நல்லவற்றை எடுத்துரைப்பது என் கடமை. அதைப் பின்பற்றுவது உன் விருப்பம்’ என்பதே தமிழரின் நடைமுறை. வன்முறையினால் ஒரு வழக்கத்தை நிலைநாட்டுவதை அவர்கள் விரும்பவில்லை. இயல்பாகவே மனத்திலிருந்து அது பூக்க வேண்டும் என்பதே நம் முன்னோரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இன்றும் எதைப் பின்பற்றுவது என்ற சுதந்திரம், நம் மக்களிடம் உள்ளது. அந்தச் சுதந்திரத்தை அவர்கள் முறையாக, முழுமையாகப் பயன்படுத்தினால் அது அவர்களிடம் நிலைக்கும்.

    வள்ளுவ நெறிகளைப் பின்பற்றாததால் இழப்பு, வள்ளுவத்திற்கு இல்லை; நமக்கே.

     படங்களுக்கு நன்றி:

    http://www.spiritofchennai.com/personalities/thiruvalluvar.htm

    http://en.wikipedia.org/wiki/File:Tiruvalluvar_Statue_Kanyakumari.jpg

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : ஈர்ப்பு விசை என்பது ஒருவித மாயையாய் இருக்கலாம் !

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=p_o4aY7xkXg

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0rocNtnD-yI

    [General relativity & Gravity]


    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    அஞ்ஞான உலகிலே இன்று

    விஞ்ஞானம் மாயையாய் ஆகிப் போச்சு !

    நியூட்டன் வடித்த ஈர்ப்பில் யுக்தி

    பியூட்டி இழந்தது !

    நிறைப் பளுவுக்கு ஏற்ப

    கோளின் காலவெளி வளைவு தான்

    ஈர்ப்பு விசை யென்று

    புதிதாய் விளக்கிய ஐன்ஸ்டைன்

    பொது ஒப்பியல் நியதியும் இப்போது

    பொய்யாகப் போகுமா ?

    புதிய பெயர் ஈர்ப்பு விசைக்கு

    “நுட்ப வடிவ வெளிப்பாடு”

    ஈர்ப்பு விசை

    வெப்பத் தேய்வு விசையென்று

    வெர்லிண்டே சொல்கிறார்

    காமாவின் பெரு வெடிப்பு விதிப்படி

    தாமாகப் பிரபஞ்சம் தோன்றியதும்

    புராணக் கதை யாகப் போகுது !

    படைப்போன் இன்றித்

    சுயமாய்ப் பிறந்த தாம் நமது

    பரிதிக் கோள் மண்டலம் !

    பால்வீதி விண்மீன் மந்தையில்

    காரண விளைவு விதியின்றி

    ஓரணுவும் தோன்றாது,

    மூலகம் ஆகாது

    மூலக் கூறாய்ச் சேராது

    உலகியற்றிய

    ஊழி முதல் ஏகாந்த மூலனின்றி

    ஏழுலகும் தோன்றுமோ ?

    குயவனின்றிப் பானைகள் தோன்றா

    மாயப் பிரபஞ்சத்தில்

    நிஜம் எது ? நிழல் எது ?
    +++++++++++++
    Fig 8 Einstein Manages Gravity

    “என் புதிய கண்ணோட்டத்தில் “ஈர்ப்பியல் விசை” என்னும் ஒன்றை நான் நம்புவதில்லை. தற்போதைய விஞ்ஞானம் ஈர்ப்பியல் பண்பாட்டைத் தவறான கருத்தோட்டத்தில் காண்கிறது. எப்படி இழுப்பியல் பண்பாடு [Elasticity] அணுக்களின் இயக்கத்தால் எழுகிறதோ அதுபோலவே ஈர்ப்பியல்பும் வெளியாகிறது. ஈர்ப்பு விசை என்பது ஒருவித வெப்பத் தேய்வு விசையே [Entropy Force]. அது இடம் மாறும் அண்டக் கோள்கள் அமைந்துள்ள அரங்கத்துக் கேற்ப மாறுகிறது. ஈர்ப்பு விசையும், பெரு வெடிப்பு நியதியும் ஒருவித மாயக் கருத்துகளே. [Gravity and The Big Bang Theory could be an illusion.”]

    டாக்டர் எரிக் வெர்லிண்டே [பேராசிரியர், ஆம்ஸ்டர்டாம் பல்கலைக் கழகம்]

    சனிக் கோளின் வளையங்களைச் சீராய்ச் சுற்ற வைக்கும் ஈர்ப்பு விசை, ஒழுங்கீனத்தை மிகையாக்கும் இயற்கைப் பண்பாட்டின் ஒருவிதக் கிளை விளைவே [Byproduct of Nature’s Propensity to maximize disorder (Entropy)]

    டென்னிஸ் ஓவர்பை [Dennis Overbye, Times Writer]

    “டாலமி [Ptolemy] ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கினார்! அது ஈராயிரம் ஆண்டுகள் நீடித்தன! நியூட்டன் ஒரு பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்தார்! அது இரு நூறாண்டுகள் நீடித்தன! இப்போது டாக்டர் ஐன்ஸ்டைன் ஒரு புதிய பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்! அது எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று யாருக்கும் தெரியாது!”

    ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856-1950)

    ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி தற்கால மானிட ஞானத்தில் உதயமான ஒரு மாபெரும் சித்தாந்தச் சாதனை.

    பெர்ட்ராண்டு ரஸ்ஸல் (1872-1970)
    fig-4-newton-einstein-gravity.jpg

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=R9FVFh3HYaY

    [ Michio Kaku on the 4 Forces of Nature. ]

    “நமது வலுவற்ற நெஞ்சம் உணரும்படி, மெய்ப்பொருள் ஞானத்தைத் தெளிவு படுத்தும், ஓர் உன்னத தெய்வீகத்தைப் பணிவுடன் மதிப்பதுதான் என் மதம். அறிவினால் அளந்தறிய முடியாத பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை உண்டாக்கிய ஓர் உயர்ந்த சக்தி எங்கும் நுட்ப விளக்கங்களில் பரவி யிருப்பதை ஆழ்ந்துணரும் உறுதிதான், என் கடவுள் சிந்தனையை உருவாக்குகிறது. ‘

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    “எனது ஒப்பியல் நியதி மெய்யென்று நிரூபிக்கப் பட்டால், ஜெர்மெனி என்னை ஜெர்மானியன் என்று பாராட்டும். பிரான்ஸ் என்னை உலகப் பிரமுகன் என்று போற்றி முழக்கும். நியதி பிழையானது என்று நிரூபண மானால், பிரான்ஸ் என்னை ஜெர்மானியன் என்று ஏசும்! ஜெர்மெனி என்னை யூதன் என்று எள்ளி நகையாடும்! “

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)

    ‘விண்டுரைக்க அறிய அரியதாய், விரிந்த வானவெளி யென நின்றனை! அண்ட கோடிகள் வானில் அமைத்தனை! அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை! மண்டலத்தை அணுவணு வாக்கினால் வருவது எத்தனை, அத்தனை யோசனை தூரம் அவற்றிடை வைத்தனை! பரிதி என்னும் பொருளிடை ஏய்ந்தனை! பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை! வாயு வாகி வெளியை அளந்தனை! விண்ணை அளக்கும் விரிவே சக்தி! ‘

    மகாகவி பாரதியார் (1882-1921)

    Four fundamental forces
    four forces of nature

    நூலிழை நியதிவாதி கூறுகிறார் : ஈர்ப்பு விசை, பெரும் வெடிப்பு என்பவை மாயையாய் இருக்கலாம்

    ஆம்ஸ்டர்டாம் பல்கலைக் கழகப் பௌதிகப் பேராசிரியர், எரிக் வெர்லிண்டே [Eric Verlinde] விஞ்ஞானிக்கு நியூட்டன், ஐன்ஸ்டைன் இருவரும் விளக்கிய “ஈர்ப்பியல் விசை மீது இப்போது நம்பிக்கை இல்லை. இது [2010- 2013] ஆண்டுகளில் பல விஞ்ஞானிகளை பெரு வியப்பில் தள்ளி இருக்கிறது ! எரிக் வெர்லிண்டே சாதாரண ஒரு விஞ்ஞானப் படிப்பாளி அல்லர். உலகப் புகழ்பெற்ற “நூலிழை நியதியை” [String Theory] முதன்முதல் விஞ்ஞானிகளுக்கு அறிவித்தவர். “ஸ்பைனோஸா பரிசு” [Spinoza Prize : The Dutch Nobel Prize] பெற்ற வெர்லிண்டர் ஈர்ப்பியல் விசையும், பெரு வெடிப்பு நியதியும் ஒரு மாயக் கோட்பாடாக இருக்கலாம் என்றொரு மாற்றுக் கருத்தைக் குறிப்பிடுகிறார். ஐன்ஸ்டைன் ஈர்ப்பு விசையைத் தன் பொது ஒப்பியல் நியதியாக விளக்குகிறார். ஈர்ப்பு விசை என்று ஒன்றில்லை. அதற்கு வெர்லிண்டை இடும் புதிய பெயர் “நுட்ப வடிவ வெளிப்பாடு.” [Microscopic Formulation, called Emergence].
    பிரபஞ்சத்தில் நான்கு வித அடிப்படை விசைகள் [Four Fundamental Forces of Nature] உள்ளன.

    1. ஒன்று அண்டக் கோள்களுக்கு இடையில் உள்ள ஈர்ப்பு விசை [Gravitational Force]. அதனால்தான் நாம் யாவரும் பூமியோடு ஒட்டி உலவுகிறோம்.

    2. இரண்டாவது மின்காந்த விசை [Electromagnetic Force]. அதாவது மின்காந்தக் கவர்ச்சி விசை.

    3. அணுக்கருத் துகள்களை [நியூட்ரான், புரோட்டான்] அணுவுக்குள் இறுக்கிப் பிணைத்துள்ள அழுத்தமான விசை [Strong Force in the Nucleus].

    4. கன உலோகங்களில் கதிரியக்கத் தேய்வால் [Radioactive Decay] மென்மை விசைப் பிடியிலிருந்து எளிதில் நீங்கும் அணுக்கருத் துகள்களின் வலுவற்ற விசை. [Weak Force in the Nucleus].

    Entropy

    Gravitational Force

    நாம் உணர்ந்த இயற்கை விசைகளிலே மேலான முறையில் பிரபஞ்ச ரீதியாக ஏற்றுக் கொள்ளப் படுவது ஈர்ப்பு விசையே. சூரியனும் அதைச் சுற்றி வலம்வரும் அண்டக் கோள்களும், அந்த சூரிய மண்டலம் போன்ற கோடான கோடி விண்மீன் மந்தை கொண்ட காலக்ஸிகளும் ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளாது பின்னிப் பிணைத்துச் சீராய் நகர்த்தி வருவது ஈர்ப்பு விசையே. ஈர்ப்பியல் விசை சக்தியுள்ள எல்லா வற்றையும் பாதிக்கிறது. சக்தியுள்ள எல்லாவற்றாலும் ஈர்ப்பு விசையும் பாதிப்படைகிறது. அகில ரீதியாக ஆளுமை செய்யும் ஈர்ப்பு விசையின் அடிப்படைச் சமன்பாடுகளரெல்லாம் “வெப்பத்துறை இயக்கவியல் விதிகளையும்” [Thermodynamics Laws], நீர்த்துறை இயக்கவியல் விதிகளையும் [Hydrodynamics Laws] ஒத்திருப்பதாக வெர்லிண்டே அழுத்தமாகக் கூறுகிறார். ஈர்ப்பியல் விசைக்குள்ள அவ்வித ஒருமைப் பாடுகளை இதுவரை யாரும் எடுத்து விளக்கியதில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
    முதல் பௌதிக விஞ்ஞானி கலிலியோ, ஐஸக் நியூட்டன் சுமார் 300 ஆண்டுகட்கு முன்பு கூறிய ஈர்ப்பியல் கோட்பாடு களை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மாற்றினார். 2010 ஆம் ஆண்டு ஜனவரியில் எரிக் வெர்லிண்டே வெளியிட்ட “ஈர்ப்பியலின் மூலத் தோற்றமும், நியூட்டன் விதிகளும்,” [On The Origin of Gravity and The Laws of Newton ] என்ற ஓர் ஆய்வு அறிக்கையில் ஈர்ப்பு விசை, பெரு வெடிப்பு இவற்றைத் தான் நம்பவில்லை என்று வெளியிட்டுள்ளார். மேலும் எரிக் வெர்லிண்டர் : “ஈர்ப்பியல் விசை யானது நாமறிந்த வெப்பத்துறை இயக்கவியல் விதிகளின் கிளை விளைவே [Consequence of the Laws of Thermodynamics] ” என்றும் கூறுகிறார்.

    Fig 1A How Gravity Works-1

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் படைத்த ‘ஒப்பியல் நியதி’

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் படைத்த ‘ஒப்பியல் நியதி ‘ [Theory of Relativity] அகில வெளி, காலம், பிண்டம், சக்தி [Space, Time, Matter, Energy] ஆகிய எளிய மெய்ப்பாடுகளை அடிப்படையாக் கொண்டு எழுதப் பட்டது! புது பெளதிகத் தத்துவமான அவரது நியதியைப் பலர் முதலில் ஒப்புக் கொள்ள வில்லை! ஆரம்பத்தில் பலருக்குப் புரிய வில்லை! ஆதலால் பலர் நியதியை எதிர்த்து வாதாடினர்! மானிடச் சிந்தனை யூகித்த மாபெரும் எழிற் படைப்பு, அவ்வரிய ‘ஒப்பியல் நியதி ‘ என்று கூறினார் ஆங்கிலக் கணித மேதை பெர்ட்ராண்டு ரஸ்ஸல். பல நூற்றாண்டுகளாய்ப் பரந்த விஞ்ஞான மாளிகையை எழுப்பிய, உலகின் உன்னத மேதைகளான, ஆர்க்கிமெடிஸ் [Archimedes], காபர்னிகஸ் [Copernicus], காலிலியோ [Galileo], கெப்ளர் [Kepler], நியூட்டன் [Newton], ஃபாரடே [Faraday], மாக்ஸ்வெல் [Maxwell] ஆகியோரின் தோள்கள் மீது நின்று கொண்டுதான், ஐன்ஸ்டைன் தனது ஒப்பற்ற அகில நியதியை ஆக்கம் செய்தார். ஐன்ஸ்டைன் படைத்து முடித்த பிறகு, இருபதாம் நூற்றாண்டிலும் விஞ்ஞான வல்லுநர்களான ஹென்ரி பாயின்கரே [Henri Poincare], லோரன்ஸ் [Lorentz], மின்கோவஸ்கி [Minkowski] ஆகியோர், ஒப்பியல் நியதியை எடுத்தாண்டு, மேலும் செம்மையாகச் செழிக்கச் செய்தனர். ஆதி அந்தம் அற்ற, அளவிட முடியாத மாயப் பிரபஞ்ச வெளியில் தாவி, ஈர்ப்பியல், மின்காந்தம் [Gravitation, Magnetism] ஆகியஇவற்றின் இரகசியங்களை அறிந்து, அணுக்கரு உள்ளே உறங்கும் அளவற்ற சக்தியைக் கணக்கிட்டு வெளியிட்டது, ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி!

    இரண்டாம் உலக மகா யுத்தத்தை விரைவில் நிறுத்த அணு ஆயுதத்தை உருவாக்குமாறு 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்கலின் ரூஸவெல்ட்டுக்கு ஆலோசனைக் கடிதம் எழுதியவர், ஐன்ஸ்டைன்! அக்கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதிய மூவர், ஐரோப்பிய யுத்தத்தின் போது அமெரிக்காவுக்கு ஓடி வந்த ஹங்கேரிய விஞ்ஞான மேதைகள்: லியோ ஸிலார்டு [Leo Szilard], எட்வர்ட் டெல்லர் [Edward Teller], யுஜின் வைக்னர் [Eugene Wignar]. ஹிட்லர் அணுகுண்டைத் தயாரிக்கும் முன்பே, அமெரிக்கா முதலில் உண்டாக்க வேண்டு மென்று, ஐன்ஸ்டைனை ஒப்பவைத்துக் கையெழுத்திட வைத்தவர்கள். அணுசக்தி யுகத்தை துவக்கி உலக சரித்திரத்தில் ஒப்பிலாப் பெயர் பெற்ற ஐன்ஸ்டைன், அணுகுண்டு பெருக்கத்தையும், சோதனைகளால் எழும் கதிரியக்கப் பொழிவுகள் தரும் அபாயத்தையும், தடுக்க முடியாமல் கடைசிக் காலத்தில் மனப் போராட்டத்தில் தவித்தார்!

    Relativity and gravity

    ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி

    ஒப்பியல் நியதி பொது, சிறப்பு என்று இரண்டு பிரிவுகளில் எழுதப் பட்டுள்ளது. சிறப்பு நியதியின் வாசகங்களில் ஒன்று: அகில வெளியில் எந்த முடத்துவக் கூண்டு நோக்கியிலும் [Inertial Frame of Reference] ஒளியின் வேகம் நிலையானது [Constancy of the Velocity of Light]. ஓர் இயங்கும் அண்டத்தின் [Moving Body] வளர்வேகம், சீர்வேகம் அல்லது தளர்வேகம் [Acceleration, Uniform motion, or Deceleration] எதுவும், அண்டம் வெளியாக்கும் ஒளியின் வேகத்தை பாதிக்காது! ஒளியைத் தூரத்தில் இருந்து எதிர்கொள்ளும் வேறு ஓர் அண்டத்தாலும் ஒளிவேகம் பாதிக்கப் படாது! உதாரணமாக 60mph வேகத்தில் ஓடும் ரயில் வண்டியிலிருந்து, ஒரு பந்தை 5mph வேகத்தில் வீசி எறிந்தால், அதைத் தரையில் நிற்கும் ஒரு மனிதன் கையில் பற்றும் போது, பந்து 55mph ஒப்பு வேகத்தில் [50+5=55mph Relative Velocity] அவனைத் தாக்குகிறது! ஆனால் வண்டி எஞ்சின் மின் விளக்கிலிருந்து 186,000 mps வேகத்தில் கிளம்பும் ஒளி தரை மனிதன் கண்களில் படும் போது, ஒளியின் வேகம் அதே 186,000 mps. இரயிலின் வேகம் பந்தின் ஒப்பு வேகத்தை மாற்றியது போல், ஒளியின் வேகத்தைப் பாதிப்பது கிடையாது. அதாவது ஒளிவேகம் ‘தனித்துவம் ‘ அல்லது ‘முதற்துவம் ‘ [Absolute] உடையது என்று கூறினார் ஐன்ஸ்டைன்! ஓளி வீசும் ஓர் அண்டத்தின் வேகம், அதிலிருந்து வெளியாகும் ஒளியின் வேகத்தை மாற்ற முடியாது!

    அடுத்த வாசகம்: அண்ட வெளியில் ஒளிவேகத்தை மிஞ்சிய வேகம் வேறு எதுவும் கிடையாது! அதாவது வெவ்வேறு கூண்டு நோக்கிகளில் நிற்கும் நபர்களுக்கு இடையே உள்ள ஒப்புவேகம், ஒளிவேகத்தை மிஞ்ச முடியாது! அகில வெளியில் ஒளி பயணம் செய்ய நேரம் எடுக்கிறது. ஒளியின் வேகம் வினாடிக்கு 186,000 மைல். ‘ஓளியாண்டு ‘ [Light year] என்பது தூர அளவு. அதாவது ஒளிவேகத்தில் ஓராண்டு காலம் செல்லும் தூரம்.
    fig-4-general-relativity.jpg

    கோடான கோடி விண்மீன்களின் தூரத்தை ஒளியாண்டு அளவியலில் தான் நிர்ணயம் செய்கிறார்கள். சூரிய ஒளி பூமியை வந்தடைய சுமார் 8 நிமிடம் ஆகிறது. அதாவது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரம் 91 மில்லியன் மைல் [186,000 x 8 x 60]. ஆகவே தூரத்தில் உள்ள ஓர் அண்டத்திலிருந்து எழும் ஒளி, பூமியில் நிற்கும் ஒரு நபரின் கண்களைத் தொடும் போது, அது பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பமான ஒரு நிகழ்ச்சி!

    விரிந்து கொண்டே போகும் விண்வெளி வளைவு!

    பொது ஒப்பியல் நியதி பிரபஞ்சத்தின் அமைப்பு எத்தகையது என்று ஆய்வு செய்கிறது. ஐன்ஸ்டைன் தனித்துவ, நிலைமாறாத [Absolute] அகிலத்தையோ, காலத்தையோ ஒப்புக் கொள்ளாமல் சில விஞ்ஞானிகள் ஒதுக்கித் தள்ளினார்! நோக்காளன் [Observer] அளக்கும் காலமும், வெளியும் அவன் நகர்ச்சியை [Motion] ஒட்டிய ஒப்பியல்பு உடையவை! ஆகவே நீளமும், காலமும் தனித்துவம் இழந்து விட்டன! அவை இரண்டும் அண்டத்தின் அசைவு அல்லது நோக்குபவன் நகர்ச்சியைச் சார்ந்த ஒப்பியல் பரிமாணங்களாய் ஆகிவிட்டன. வேகம் மிகுந்தால் ஒன்றின் நீளம் குன்றுகிறது; காலக் கடிகாரம் மெதுவாகச் செல்கிறது! விண்வெளியின் வடிவம் சதுரப் பட்டகமா [Cubical] ? அல்லது நீண்ட கோளமா ? ஒரு வேளை அது கோளக் கூண்டா ? அல்லது அது ஓர் எல்லையற்ற தொடர்ச்சியா [Unbounded Infinity] ?

    fig-3-gravity-probe-b.jpg

    fig-1a-gravity-probe-1.jpg

    அகில வெளியின் எல்லையைக் கணிக்க இருப்பவை இரண்டு கருவிகள்: பல மில்லியன் மைல் தொலைவி லிருந்து பூமியின் மீது, சுடரொளி வீசும் கோடான கோடிப் ‘பால் மயப் பரிதிகள் ‘ [Milky Way Galaxies] எழுப்பும் ஒளி, மற்றொன்று அவை அனுப்பும் வானலைகள் [Radio Waves]. ஒளி எல்லாத் திக்குகளிலிருந்தும் பூமியைத் தொடுவதைப் பார்த்தால், ஒன்று அது ஒழுங்கமைப்பு [Symmetrical Shape] உடையது, அல்லது முடிவற்ற தொடர்ச்சி கொண்டது போல் நமக்குத் தோன்றலாம். உண்மையில் அவை இரண்டும் அல்ல! ஐன்ஸ்டைன் கூற்றுப்படி பிரபஞ்சத்தை எந்த ‘முப்புற வடிவியல் ‘ [Three Dimensional Geometry] அமைப்பாலும் உருவகிக்க முடியாது. ஏனெனில் ஒளி நேர்கோட்டில் பயணம் செய்யாது தகவல் ஏதும் அனுப்பாததால், அண்ட வெளியின் எல்லை வடிவு நமக்குத் தெரிவதில்லை! ஐன்ஸ்டைனின் பொது ஒப்பியல் நியதி கூறுகிறது: ஓர் அண்டத்தின் பளு [Mass] விண்வெளி மீது, நடு நோக்கிய வளைவை [Curvature of Space towards the Centre] உண்டு பண்ணுகிறது. தனியாக வீழ்ச்சி [Free Fall] பெறும் ஓர் அண்டம், வேறோர் அண்டத்தின் வெளி வளைவுக்கு அருகே நெருங்கும் போது, முதல் அண்டம் அடுத்த அண்டத்தை நீள்வட்ட வீதியில் [Elliptical Orbits] சுற்றுகிறது. அண்ட கோளங் களின் ஈர்ப்பியல்புக்கு [Gravitation], ஐன்ஸ்டைன் வைத்த இன்னுமொரு பெயர் ‘வெளி வளைவு ‘ [Curvature]. ஐஸக் நியூட்டன் ஈர்ப்பியல்பைத் தன் பூர்வீக யந்திரவியலில் [Classical Mechanics] ஓர் உந்தல் [Force] என்று விளக்கினார்.

    Fig 4 Gravity Bends Light

    விண்வெளியை ஒரு மாளிகை வடிவாகவோ, கோள உருவாகவோ முப்புற அங்களவுகளால் [Three Dimensional] கற்பனை செய்ய இயலாது. ஐன்ஸ்டைன் கூற்றுப்படி அது நாற்புற அங்களவு [Four Dimensional] கொண்டது. அண்ட வெளியின் நான்காம் அங்களவு [Fourth Dimension], காலம் [Time]. கோடான கோடி அண்ட கோளங் களையும், ஒளிமயப் பரிதிகளையும் [Galaxies] பிரம்மாண் டமான பிரபஞ்சம் தன் வயிற்றுக்குள்ளே வைத்துள்ள தால், விண்வெளி வளைந்து வளைந்து, கோணிப் போய் [Curved & Distorted] விரிந்து கொண்டே போகிறது! அண்ட வெளியின் ஈர்ப்பு விசையால் ஒளியின் பாதை பாதிக்கப் படுகிறது நீண்ட தூரத்தில் பயணம் செய்யும் ஒளி, அண்டத்தின் அருகே நேர் கோட்டில் செல்லாது வளைந்தே போகிறது. தொலைவி லிருந்து வரும் விண்மீனின் ஒளி சூரிய ஈர்ப்பு மண்டலத்தின் அருகே சென்றால், அது உட்புறமாக சூரிய மையத்தை நோக்கி, நேர்வளைவு அல்லது குவிவளைவில் [Positive Curve] வளைகிறது. ஒளி சூரிய மண்டலத்தை நெருங்கும் போது, மையத்திற்கு எதிராக வெளிப்புறத்தை நோக்கி, எதிர்வளைவு அல்லது குழிவளைவில் [Negative Curve] வளைவதில்லை! 1919 ஆம் ஆண்டு சூரிய கிரகணத்தின் போது, இரண்டு பிரிட்டாஷ் குழுவினர், விண்மீன் பிம்பங்களின் வக்கிர போக்கைப் படமெடுத்து, ஐன்ஸ்டைன் கணித்ததுபோல் ஒளியின் நேர்வளைவு நிகழ்ச்சியை எடுத்துக் காட்டினர். ஐன்ஸ்டைன் ஒப்பியல் நியதியின்படி, சுமார் 25,000 மைல் சுற்றளவுள்ள பூமியில் ஓரிடத்திலிருந்து கிளம்பும் ஒளி, புவி ஈர்ப்பால் வளைக்கப் பட்டு, முழு வட்டமிட்டு புறப்பட்ட இடத்தையே திரும்பவும் வந்து சேர்கிறது.

    Fig 1C The Curved Space

    ஐன்ஸ்டைன் புவியீர்ப்பு ஆயும் விண்ணுளவி ஏவல்
    2004 ஏப்ரல் 20 ஆம் தேதி நாசா 700 மில்லியன் டாலர் [Gravity Probe-B] விண்ணுளவியை போயிங் டெல்டா-2 ராக்கெட் மூலமாகப் பூமியை 400 மைல் உயரத்தில் சுற்றிவர அனுப்பியது. அந்த விண்ணுளவி ஓராண்டுகள் பூமையைச் சுற்றி ஐன்ஸ்டைன் புவியீர்ப்புக் கோட்பாட்டை நிரூபிக்க ஆய்வுகள் புரியும். உளவி-B ஐன்ஸ்டைன் புதிய விளக்கம் தந்த வெளி, காலம் [Space, Time] ஆகியவற்றைச் சோதிப்பதுடன், அவற்றைப் புவியீர்ப்பு ஆற்றல் எவ்விதம் திரிபு செய்கிறது என்றும் உளவு செய்யும். ஐன்ஸ்டைனின் கோட்பாடுகளின் இரண்டு பரிமாணங்களை உறுதிப்பாடு செய்ய நான்கு கோள உருண்டைகள் கொண்டு சுற்றும் ஓர் ஆழி மிதப்பிக் கருவி [Gyroscope] விண்ணுளவியில் இயங்கி வருகிறது! உளவி யானது ஒரு வழிகாட்டி விண்மீனை [Guide Star IM Pegasi] நோக்கித் தன்னை நேர்ப்ப்டுத்திக் கொள்ளும். ஓராண்டுகளாக ஆழிக் குண்டுகளின் சுற்றச்சுகள் [Spin Axes] எவ்விதம் நகர்ச்சி ஆகியுள்ளன வென்று பதிவு செய்யப்படும்.

    Gravity Assist Flyby

    Gravity Assist Analogy

    ஈர்ப்பியல் உந்து சக்தி [Gravity Assist Flyby]

    [தொடரும்]
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Albert Einstein By: Frederic Golden, Time Magazine -Person of the Century [Dec 31, 1999]

    2. A Brief History of Relativity By: Stephan Hawking, Time Magazine

    3. Einstein ‘s Unfinished Symphony By: Madeleine Nash, Time Magazine

    4. The Age of Einstein By: Roger Rosenblatt, Time Magazine

    5. 100 Years of Einstein By: Gregory Mone, Popular Science [June 2005]

    6. Gravity Probe Launched By: Chad Cooper, Staff Writer, NASA Kennedy Space Center (Apr 2, 2004]

    7. http://www.thinnai.com/science/sc0317021.html [Author ‘s Article on Einstein]

    8. Einstein Probe Heads into Space BBC News.

    9. Einstein Mass Energy Equation Marks 100 Years By: Roland Pease BBC Science Writer.

    10 All Systems Go on Gravity Probe B Source NASA [April 30, 2004]

    11 Testing Einstein ‘s Universe: Gravity Probe B [Feb 2005]

    12. http://spaceplace.nasa.gov/what-is-gravity/

    13. http://www.esa.int/Our_Activities/Space_Science/What_is_gravity [July 13, 2004]

    14. http://en.wikipedia.org/wiki/Gravity_assist Gravity Swing or Flyby [January 12, 2013]

    15. http://www.wisegeek.org/what-is-gravity.htm What is Gravity [January 7, 2013]

    16. Gravity is an Illusion By : John Hudson [ July 14, 2010]

    17. http://en.wikipedia.org/wiki/Entropy What is Entropy [January 18, 2013]

    18. http://arxiv.org/pdf/1001.0785.pdf On the Origin of Gravity and the Laws of Newton By : Erik Verlinde [January 6, 2010]

    ***************

    S. Jayabarathan [jayabarat@tnt21.com] January 20, 2013

    http://jayabarathan.wordpress.com/

    YouTube – Videos from this email
    Share
  • பரமஹம்ஸரும் பவதாரிணியும்

     

    இசைக்கவி ரமணன்

    அவளுக் கென்றோர் மனமுண்டு! அதில்
    ஆயிர மாயிரம் குணமுண்டு!
    சிவனை நெஞ்சில் மிதித்திடுவாள், ஒரு
    சித்திர மலராய்ச் சிரித்திடுவாள்
    கவலைகள் யாவும் இவளேதான், ஒரு
    கலமாய் வருவதும் அவளேதான்!
    எவரும் எதுவும் அறியாமல், இவளே
    எதிரே புதிராய்த் திரிகின்றாள்!

    ஏதும் துவங்கிய முன்பேயே, அவை
    எல்லாம் விழுங்கி வியர்த்தவள்தான்
    ஏதோ மிஞ்சி இருப்பதுபோல்
    இன்றும் வீதியில் திரிகின்றாள்
    தீதும் நன்றும் இவள்கண்கள், இவள்
    சிந்திய சிரிப்பே நம்பெண்கள்
    கீதம் பாடும் கவிஞர் நெஞ்சில்
    கிளர்ந் தெழுந்திடும் கிரணங்கள்!

    உச்சி வெய்யில் வியர்வையிலே
    உடம்பில் ஒருவித நடுக்கம்போல்
    பிச்சியின் சினத்தின் உச்சத்தில்
    பெயர்ந்த சுகமே பக்தியடா!
    தன்னை மீறிய புதிரொன்று
    தன்னி லிருந்தே தோன்றியதை
    அன்னை உணர்ந்து வியக்கின்றாள்
    அதனைக் காண விழைகின்றாள்!

    எங்கே எப்படிக் காணுவது?
    எவ்விதம் தன்னைக் காணுவது?
    கங்கைக் கரையின் ஓரத்தில்
    கனலாய் பக்தி ஒதுங்கியது
    அங்கே பதுமை வடிவத்தில்
    அநந்த சக்தி ஒடுங்கியது
    எங்கும் காணாப் பேரின்பம், ஓர்
    ஏழையின் மூலம் துலங்கியது!

    பவதா ரிணியே கண்ணாடி
    பரம ஹம்ஸரே பக்தியதில்
    அவரை வைத்துத் தன்னைத்தான்
    கண்டு மகிழ்ந்தாள் பராசக்தி!
    சிவனே அறியாப் பேதையவள்
    சித்தம் சிலிர்க்க வைத்தவரை
    இவனா கவியில் பாடுவது?
    இலையா நதியைச் சூடுவது?

    பக்திக் கனலின் வெப்பத்தால்
    சக்தியின் பிடரியைப் பற்றியவர்
    சக்தி யென்னுமோர் மூர்க்கத்தை
    சற்றும் குறையா ஆக்கத்தை
    நற்கதி அனைவரும் பெறவேண்டி
    நட்டு வைத்தார் நடுவூரில்
    முக்தியும் இதற்கோர் ஈடில்லை, எந்த
    முடிவும் இதுபோல் சுகமில்லை!

    காளியின் கண்ணைப் பாருங்கள், அதில்
    பரம ஹம்ஸரே தெரிகின்றார்
    தூளியி லாடும் குழந்தைபோல்,
    தூண்டிற் புழுபோல், தோள்தேடும்
    தோழன் போல், ஒரு துணைவன்போல்
    துவண்டு புரண்டு துடிக்கின்றார்
    ஆளே யின்றி அத்வைத
    அருமை ஒருமையில் நிற்கின்றார்!

     
    அவளுக் காக அழுவதுபோல்
    ஆனந் தம்வே றொன்றில்லை
    அவளே கதியென விழுவதுபோல்
    அறிவொன் றிங்கே வேறில்லை
    அவளே தானாய்க் காண்கின்ற
    அனுபவம் போல்பிறி தொன்றில்லை
    பவதா ரிணியைக் காணுங்கள்
    பரம ஹம்ஸர்தான் தெரிகின்றார்!

    படத்திற்கு நன்றி :

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

    Share