வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போமா! (1)

0

பவள சங்கரி

’நாம்’ நாமாகவே இருப்பதற்கு நம் எண்ணங்களே காரணம். நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் நம்மை நல்வழிப்படுத்தி, வெற்றிக்கனியை எட்டிப் பறிக்கச் செய்யும் என்ற நம்பிக்கை உடையவர் நீங்கள் என்பது உண்மையானால் இத்தொடர் உங்களை அக்காரியத்தை மென்மேலும் ஊக்குவிக்க வல்லது என்பது சத்தியம். நம்பிக்கை என்ற ஒன்றே வாழ்க்கையில் நம்மை உயரத்திற்கு இட்டுச் செல்லக்கூடியது. நம் எண்ணங்கள் மேம்படும்போது நம் வாழ்க்கைத் தரமும் உயரும். நம் எண்ணங்களை எப்படி மேம்படுத்தப் போகிறோம் என்பதையே இத்தொடரில் விவாதிக்கப் போகிறோம். நல்ல எண்ணங்கள் மட்டுமே நம் சுய வல்லமையை ஊக்குவிக்கும் ஒரு உன்னத காரணி.

 உறுதியான எண்ணத்தால் உயர்ந்து நிற்போம்!

நற்சிந்தையாலும், நல்ல ஆரோக்கியத்தினாலும், நல்லொழுக்கத்தினாலும் உயர்ந்து நிற்பதால் வெற்றிக்கான அடித்தளத்தை உறுதியாக்கிவிட்டோம் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ளும்போது இடையில் வரும் தடைகளை எளிதாகத் தகர்த்தெறியும் வல்லமை பெறுகிறோம். இதனால் உங்கள் பயணத்தில் அன்பைத் தவிர வேறு எந்தக் காரணத்திற்காகவும் எவருக்காகவும் நீங்கள் தலை வணங்கத் தேவையில்லை..

முதலில் நம் உடலளவில் உயர்ந்து நிற்போமே. ஒரே ஒரு உடல் மொழியால் ஓராயிரம்  எண்ணங்களை உணர்த்தக்கூடும். அத்தகைய உடலை முதலில் சரியாகக் கையாள வேண்டியது அவசியம். முத்ற்பார்வையிலேயே வெளித்தோற்றம் மட்டுமே ஒருவரை எடை போடச் செய்கிறது. கருப்போ, சிகப்போ, நெட்டையோ, குட்டையோ, செல்வந்தரோ, வறியவரோ எவராயினும் நம் புறத்தோற்றம் எப்படி இருந்தாலும், நாம் அதை வெளிப்படுத்தும் விதமே நம்மைப் பற்றிய மதிப்பீட்டை உருவாக்குகிறது.

தன்னம்பிக்கை உடைய ஒருவர் தம் தோற்றம் மூலமே அதனை எளிதாக அடுத்தவரை உணரச் செய்ய முடியும். வளைந்து, நெளிந்து, கூனிக் குறுகி ஒருக்காலும் நிற்க மாட்டார் தன்னம்பிக்கை உடையவர். பாரதியின் நிமிர்ந்த நன்னடை பார்த்தவுடன் மரியாதை அளிக்கக்கூடிய தோற்றப் பொலிவைக் கொடுக்கக் கூடியது. அந்த நிமிர்ந்த நன்னடைக்கு மனதில் நம்பிக்கை வேறூன்றியிருக்க வேண்டும். அந்த நம்பிக்கைக்கு அச்சாரம் என்பது நேர்மையும், சுய கட்டுப்பாடும், உண்மையான உழைப்பும்தான்.

தெருவோரத்தில் மசாலாப் பொறிக்கடலை கடை போட்டு பிழைப்பு நடத்தும் ஒருவர், சுறுசுறுப்பான வியாபார நேரத்தில், பம்பரமாய்ச் சுழலுகிறார். ஒரு பாத்திரத்தில் இரண்டு கை பொறியை அள்ளிப்போட்டு அதில் துருவிய கேரட், பீட்ரூட், கொத்தமல்லி இலைகள், கொஞ்சம் புதினாத் தொக்கு, எல்லாம் போட்டு, இறுதியாக மசாலாப் பொடியும், மிளாகய்த்தூள், உப்பு கலந்த கலவையையும் அப்படியேத்தூவி, அதன் மீது சிலத் துளிகள் எலுமிச்சைச் சாறும் தெளித்துக் கொடுப்பார். சுவையான சுவைதான் போங்கள். நாம் இங்கு அந்தச் சுவையில் மெய்மறந்து இருக்கும் போது, அந்த வழியாகக்  கடந்து போகும் ஒரு இரு சக்கர வாகன ஓட்டியின் கண்களில் பறந்து போய் விழுந்த அந்த மிளகாய்ப்பொடி படுத்திய பாடு, மனிதர் ஒரு பெரிய விபத்திலிருந்து தப்பி வந்தார் பாவம். இதை அறியும்போது அந்த மசாலாப்பொறிக் கடைக்காரர் எப்படி நிமிர்ந்த நன்னடையுடன் நடமாட இயலும். அவர் தூவும் அந்த மசாலாப் பொடிகள் அடுத்தவரின் பார்வைகளை பதம் பார்க்காதவாறு ஒரு மறைப்பான் வைத்து தம் சமுதாய அக்கறையை வெளிப்படுத்தியிருந்தால் அவர் அடுத்தவர் முன்போ, தம் மனசாட்சியின் முன்போ கூனிக்குறுகி நிற்க வேண்டியதில்லை. அடுத்தவர் வந்து முறைப்படுத்த வேண்டும் என்று எண்ணாமல் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டாலே தலை நிமிர்ந்து நிற்கலாமே.

தூக்கணாங்குருவிக் கூட்டைப் பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு பெருத்த ஆச்சரியமாக இருக்கும். மரத்திலோ, குட்டிச் சுவற்றிலோ, கிணற்றினுள்ளோ,  அப்படியே தொங்கிக் கொண்டிருக்கும் அதை அது எப்படித்தான் கட்டியிருக்குமோ என்று. எத்தனை பொறுமை வேண்டும். ஒவ்வொரு புல்லாகக் கொண்டு வநது கீழே விழுந்தாலும் மீண்டும், மீண்டும் பொறுக்கி எடுத்து கூடாக்கிவிடும். காற்று பலமாக வீசினாலும், ஆடுமே தவிர அறுந்து விழாது. ஒரு சின்ன குருவிக்கு இருக்கும் அந்த வல்லமை ஆறறிவு படைத்த நமக்கு இல்லாமலா போகும்?

தொடரும்

படத்திற்கு நன்றி :

http://www.great-inspirational-quotes.com/stand-tall-like-the-sunflower.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.