மறியிடைப் படுத்த மான் பிணை….
முனைவர். ப. பானுமதி
காலம் வெகுவாக மாறி விட்டது. ஒரு காலத்தில் தமிழ்ச்சமுதாயம் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தது. ஒரு பெரிய கூடம் (ஹால்) இருக்கும். குறைந்தது 20 பேரை நிம்மதியாகப் படுத்து உறங்க வைக்கும் கொள்ளளவு அந்தக் கூடத்திற்கு இருக்கும். ஒரே நேரத்தில் முப்பது அல்லது 40 பேருக்குப் பந்தி வைக்க வேண்டும் என்னும் கொள்கை அளவும் அதற்கு இருக்கும். இதை பட்டாசாலை என்று கூறும் வழக்கம் இருந்துள்ளது. இதற்கு அடுத்து அங்கணம் என்று கூறப்படும் சின்ன பட்டாசாலை ஒன்று இருக்கும். இதிலும் சுமார் 20 பேர் படுக்கலாம். இது இன்னும் சில வீடுகளில் நிலா முற்றம் எனப்படும் நிலவொளி உள்ளே விழும் அமைப்பில் கம்பிகள் மட்டும் மேற்கூறையாகப் போட்டு அமைந்திருக்கும்.
இவை தவிர, ரேழி ஒன்று இருக்கும். முன்னறைக்கும் வாசலுக்கும் இடைப்பட்ட பகுதியைத்தான் ரேழி என்று கூறுவது வழக்கம். அறை என்று சொன்னால் பொதுவாக ஒன்றோ இரண்டோ அறைகள் சின்னஞ்சிறிய அளவில் இருக்கலாம். ஒன்று அந்த வீட்டு மாப்பிள்ளை வந்தால் தங்க வைப்பதற்கு. மாப்பிள்ளைகள் வந்தால்….? கூடி கும்மாளம் அடிக்க வேண்டியதுதான். மற்றொன்று சாமான்கள் வைக்கும் ஸ்டோர் ரூம். மற்றபடி சமையல் அறை ஒன்று பெரிதாக இருக்கும். ஒத்தார் ஓர்ப்படிகள் ஒன்றாய்க் கூடி கும்மியடிக்கும். தப்பு தப்பு சமையல் செய்யும் இடம்.
ஆமாம் இப்போது எதற்கு இந்த வாஸ்து சாஸ்திரம் என்று கேட்கத் தோன்றுகின்றதா? தோன்றவில்லை என்றால் நீங்கள் ஏதோ இயந்திரத்தனமாக இந்தக் கட்டுரையைப் படிக்கத் தொடங்கி உள்ளீர்கள் என்று பொருள்.
சங்க இலக்கிய மான் குடும்பத்துக் காட்சி ஒன்றை இப்போது கூறுவது இக்கட்டுரைப் பொருளுக்குப் பொருத்தமாக இருக்கும். தமிழில் எதைச் சொல்லப் புகுந்தாலும் சங்கத்தில் இருந்து எடுத்துக்காட்டிச் சொல்வது தமிழுக்குப் பெருமை என்பதை விடவும் அதைச் சொன்னவருக்கே பெருமை அதிகம் . “எத்தனைதான் தேக்கு இருந்தாலும் பர்மா தேக்கு போல வராது என்பார்கள். அது போலத்தான் பக்தித்தமிழ், பாமரத்தமிழ், இலக்கியத்தமிழ் என்று பல சொன்னாலும் சங்கத்தமிழ் என்பதில் உள்ள பெருமை மற்ற எதிலும் இல்லை” என்று பேரா. தி. இராசகோபாலன் சொல்வார். விளக்க முற்படும் எந்தச் செய்திக்கும் சங்கச் சான்றே தங்கச் சான்றாக ஒளிவீசும் என்பதில் ஒருவருக்கும் ஐயம் இருக்காது. உயர் மதிப்பையும் அள்ளித் தருவது. தமிழனின் அறவியல், அறிவியல், உடலியல், உளவியல் நுட்பத்தை எடுத்துக் கூறும் சான்றுகளின் கருவுலமும் அதுவே எனலாம்.
தான் காதலித்த தலைவனோடு உடன் போக்கு சென்று விடுகிறாள் தலைவி. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்து விடுகின்றது. அப்போதும் அவளது தாயும் தந்தையும் அவள் மீது கோபத்துடன் இருக்கின்றனர். ஆனால் அவளை வளர்த்தச் செவிலித்தாயால் அப்படி இருக்க இயலவில்லை. அவள் சென்று தலைவியைப் பார்த்துவிட்டு வருகிறாள். தான் கண்டு வந்த காட்சியைச் சொன்னால் நற்றாய் மனம் மாறி, தலைவி மீது கொண்டுள்ள சினத்தை மாற்றிக் கொள்வாள் என்று நினைக்கிறாள். தலைவியின் கடிமனைக்குச் சென்று வந்த செவிலி உவந்த உள்ளத்தினளாய் நற்றாய்க்குப் பின்வருமாறு கூறுகிறாள்.
மறியிடைப் படுத்த மான்பிணை போல,
புதல்வன் நடுவணன் ஆக நன்றும்
இனிது மன்றஅவர் கிடக்கை; முனிவின்றி
நீல் நிற வியலகம் கவைஇய
ஈனும் உம்பரும் பெறலருங்குரைத்தே!
காட்டில் குட்டியை ஈன்ற காதல் மான்கள், குட்டி இடையில் படுத்திருக்க அதனைத் தழுவிக் கலைமானும்(ஆண்மான்) பிணை மானும் (பெண்மான்) படுத்திருக்குமாம். அது போல, புதல்வன் நடுவே படுத்திருக்க, அவனைத் தழுவியவாறு தலைவனும் தலைவியும் படுத்திருக்கும் காட்சி இனிமையானது. பரந்து விரிந்த நீல வானத்தைத் தழுவிக்கொண்டிருக்கும் இந்த மண்ணுலகத்திலும் இதற்கு அப்பாற்பட்ட தேவர் உலகமாகிய விண்ணுலகத்திலும் இந்தக் காட்சி கிடைப்பது அரிது என்று கூறுகிறாள். இதில் தலைவன், தலைவி இருவரும் தம் குழந்தை மீது கொண்ட காதலை விளக்குகிறாள். இருவரது அன்பையும் பற்றி கூறுகிறாள். அப்போதும் மனம் மாறாத நற்றாயைப் பார்க்கிறாள். மற்றொரு காட்சியையும் கூறுகிறாள்.
“புதல்வன் கவையினன் தந்தை; மென்மொழிப் புதல்வன் தாயோ இருவரும் கவைஇயினள்
இனிது மன்ற அவர் கிடக்கை
நனி இரும் பரப்பின் இவ்வுலகுடன் உறுமே”
உன் மகள் எப்படிப் பட்ட தாயாக இருக்கிறாள் தெரியுமா? தலைவன் தன் புதல்வனாகிய உன் பேரனைத் தழுவியபடி படுத்திருக்கிறான். உன் மகளோ தான் ஈன்றெடுத்த மகனான உன் பெயரனையும் தன் காதல் தலைவனையும் ஒரு சேர ஒரு தாயாக தழுவிக்கொண்டு படுத்திருக்கிறாள் என்னும் கருத்து தொணிக்கப் பாடுகிறாள். அப்போதும் சினம் தணியாத தாய்க்கு அங்கு அரங்கேறிய மற்றொரு காட்சியையும் படம் பிடிக்கிறாள்.
புதல்வன் கவைஇய தாய் புறம் முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை, பாணர்
நரம்பு உளர் முரற்கை போல
இனிதால் அம்ம! பண்புமார் உடைத்தே!
இப்போது புதல்வனை அரவணைத்துக் கொண்டு படுத்திருக்கிறாள் தலைவி. அவளின் முதுகுப் புறத்தைத் தழுவி, விருப்பத்தோடு படுத்துக் கொண்டிருக்கிறான் தலைவன். அவர்களை அவ்வாறு காண்பது மிகவும் இனிய காட்சி. அது பாணர்கள் தங்கள் யாழின் நரம்புகளை மீட்டி இசைக்கும் இசையைப் போல இனியது; மிகுந்த பண்பும் உடையது” என்கிறாள். இப்படிப் பட்ட அழகொளிரும் இல்லறக் காட்சிகளை அமைக்கிறார் பேயனார் என்னும் சங்கத் தமிழ்ப் புலவர்.
பூனைக் குட்டிகளைப் பாருங்கள். தாய்ப்பூனை அருகில் இருக்கும்போது பாதுகாப்பு உள்ளது என்னும் உணர்ச்சியில் அச்சமற்று நன்கு உறங்கும். தாய்ப்பூனை வெளியில் சென்றிருக்கும்போது அவை அச்சத்துடன் திரு திருவென விழித்துக் கொண்டிருக்கும்.
ஐந்தறிவே உள்ள மான்கள் தங்கள் குட்டியை அணைத்துக் கொண்டு படுக்கின்றன என்கிறது முதல் பாடல். வீட்டு விலங்குகளான பூனை, நாய் முதல் சிங்கம், புலி முதலிய விலங்கினங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட பருவம் வரைத் தம் மக்களைத் தனியாகப் படுக்க வைப்பதில்லை.
நம் பண்டைய பண்பாட்டுத் தமிழர்கள் தங்கள் குழந்தையைத் தனியாகப் படுக்க வைத்ததில்லை. ஒரு வேளை செல்வந்தர்களின் இல்லங்களில் இணையர் தனியறையில் படுக்க நேர்ந்தால் அவர்களின் குழந்தைச் செல்வங்கள் பாட்டன், பாட்டியுடன் கதை கேட்டு, பாட்டுக் கேட்டு மகிழ்வாகப் படுத்துறங்கும்.
கூட்டுக் குடும்பம் நலிந்து தனிக்குடும்பம் மலிந்த, நாகரிகத்தில் முற்றிப்போன இன்றைய சமுதாயத்தில் தனியறையில் குழந்தைகளைப் படுக்க வைப்பதும் மலிந்து போனது. எட்டுக்கு எட்டு அறை ஒன்றில் குழந்தையையும் அதற்கென ஒரு கணிப்பொறி மற்றும் இத்யாதி இத்யாதிகளையும் வாங்கி அடைத்து விடுகின்றனர். அணைப்பாரற்ற அந்தக் குழந்தை அன்பு, பாசம் என்னும் ஏக்கத்தால் மூச்சு முட்டியபடியே உறங்குகிறது. உயிர் வாழ்கிறது.
இதனினும் பெருங்கொடுமை மகிழ்வுந்துப் பயணம். இப்போதெல்லாம் அம்மாவும் அப்பாவும் வெளியில் செல்கின்றார்கள் என்றால் குழந்தைகள் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கின்றன. காரணம் காரில் முன் இருக்கையில் கணவனுடன் மனைவிதான் அமர வேண்டும். இது இன்றைய நாகரிகம். அதாவது கணவரது எஜமானியாம் மனைவி. அவர்கள் இருவரும் பாட்டுக் கேட்டுக்கொண்டோ, அல்லது ஆங்கிலத்தில் பேசிக்கொண்டோ தம் குழந்தையைச் சட்டை செய்யாமல் முன்பக்க இருக்கைகளில். அந்தக் குழந்தையோ பின் இருக்கையில் சோர்ந்த வாடிய முகத்துடன் ஜன்னலில் இருந்து வெளியே வெறித்துப் பார்த்தபடி.
இந்நிலையில் அக்குழந்தைக்கு எப்படி மன ஆரோக்கியம் இருக்கும்? அக்குழந்தையின் உலகம் எந்திரங்களாக ஆன பின்பு அக்குழந்தையும் பாசம், பந்தம், அன்பு, கருணை, இரக்கம் என்னும் நற்பண்புகள் எதனையும் புரிந்து கொள்ள முடியாத எந்திரமாகவே ஆகிவிடுகின்றது. அதனால் எதிராளியின் துன்பத்தைக் கூடப் புரிந்து கொள்ளவோ, உதவவோ முடியாமல் போய்விடுகின்றது. சற்று அழுத்தமாகக் கூறவேண்டுமென்றால் எதிராளியைத் துன்புறுத்துவதும் கூடிப் போகிறது என்று கூறலாம். குழந்தைகள் வளரும்போது இக்குணமும் படிப் படியே வளர்ந்து வன்முறையாளர்களாக அவர்களை மாற்றிவிடுகின்றது.
இளமையில் தம்மைத் தனிமைப் படுத்திய பெற்றோர்களை முதுமையில் அவை தனிமைப் படுத்திவிடத் துடிக்கின்றன. முதியோர் இல்லங்களில் பெற்றோர்களைப் போடுகின்றன. ஐந்தில் விளைவுதுதான் விளைவு. குழந்தையின் பத்து வயதிற்குள் அதன் சிந்தையில் என்ன நற்பண்புகள் பதிகின்றதோ அதுதான் எப்போதும் ஒளிவிடும். இவற்றை உணராது ஐயோ முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டனவே என்று அங்கலாய்த்தலில் ஒரு பயனும் விளையப் போவது இல்லை.
ஆய்வு என்று எதையும் மேற்கொள்ளாத சங்கத் தமிழன் இந்த உளவியல் சார்ந்த உண்மைகளை உணர்ந்தவன். இதற்குச் சான்றுகளே மேற்கூறிய பாடல்கள்.
ஆனால் இதனை இத்தனை ஆண்டுகள் கழித்து ஆய்ந்து கண்டவர்கள் டென்மார்க் ஆய்வாளர்கள். 2 முதல் 6 வயது வரையிலான 500 குழந்தைகளை ஆய்வு செய்த. டென்மார்க் ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர். நன்னா ஓல்சன் கூறுவதாவது, “பெற்றோருடன் உறங்கும் குழந்தைகள் உடல் மற்றும் மன நலத்துடன் இருக்கிறார்கள் என்கின்றனர். முக்கியமாக பாதுகாப்பு உணர்வு இருப்பதால் நிம்மதியாக உறங்குகின்றனர். ஹார்மொன்கள் அளவாகச் சுரக்கின்றன. அவர்களது செரிமானம் சீராக இருக்கறது. அதனால் அவர்கள் குண்டாவதில்லை.
தனியாக உறங்கும் குழந்தைகள் அச்சத்துடன் சரியாக உறங்குவதில்லை. தூக்கத்தில் தொந்தரவு ஏற்பட்டால், அது ஹார்மோன்களைப் பாதித்து உடல்பெருக்கத்தைத் தூண்டும். சரியான உறக்கமின்மையால் உண்ட உணவு சரியாக செரிப்பது இல்லை. அதன் காரணமாகக் குண்டாக இருக்கின்றனர். பெற்றொருடன் படுத்து உறங்கும் குழந்தைகளைவிட தனியாகப் படுத்து உறங்கும் குழந்தைகளின் உடல் எடை மூன்று மடங்கு கூடுதலாக உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது” என்கிறார்.
“மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”
என்பார் திருவள்ளுவர். மழலைகளின் மெய்யை வருடுவது குழந்தைக்கு இன்பம் தரும். பெற்றோர்க்கு பேரின்பம் தரும். அந்த இன்பப் போதையில் மூழ்கித் திளைத்த மீசைக்காரனும்,
“கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி!
உன்னைத் தழுவிடலோ, கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி!”
என்று பாடிப் பரவசமடைந்து படிப்போரையும் பரவசத்துள் ஆழ்த்துகின்றான்.
குழலையும் யாழையும் தம் இனிய குரலில் இசைத்து நம்மை இன்பமாக இசைவிக்கும் மழலைகளைத் தனியாக உறங்க விடாதீர்கள். ஏக்கத்தின் தவிப்பில் உழலவும் விடாதீர்கள். இனியேனும் பெற்றோர்கள் விழித்துக்கொள்வீர்களாக. தங்கள் குழந்தையை பதமாக அணைத்து இதமாக உறங்க வைப்பீர்களாக! ஒரு மன, உள நோயற்ற குழந்தையின் பெற்றோர் என்னும் பெருமையுடன் உலாவருவீர்களாக!
naturally like your web site but you have to check the spelling on several of your posts. Several of them are rife with spelling issues and I find it very bothersome to tell the truth then again I will certainly come back again.