மகளிர் உடல்நலனும், கடமைகளும்!!

மேகலா இராமமூர்த்தி

“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!” என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. அத்தகைய மங்கையர் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் ஆற்றி வரும் பணிகள் அளவிடற்கரியன. பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் “நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும்” பெற்ற இன்றைய பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை எனலாம். வீட்டைப் பராமரிப்பது முதல் விண்வெளிக்குச் செல்வது வரை அவர்கள் செய்து வரும் பணிகள் அளப்பரியன. ஆனால் இவ்வளவு ஆற்றல் மிக்க பெண்கள் தங்கள் உடல்நலத்தில் போதுமான அக்கறை செலுத்துகின்றார்களா? என்றால், இல்லை என்றுதான் வருத்ததோடு சொல்லவேண்டியுள்ளது.

திருமணத்திற்கு முன்பு வரை தாயும், தந்தையும் தங்கள் மகளின் உடல்நலனைக் கண்போல் காக்கின்றனர் (பெரும்பாலான குடும்பங்களில்). ஆனால் திருமணத்திற்குப் பிந்தைய காலகட்டம் தான் ஒரு பெண்ணின் வாழ்வில் முக்கியமான காலகட்டமாகத் திகழ்கின்றது என்பதில் இருவேறு கருத்துகட்கு இடமில்லை. ஏனெனில், பல்வேறு குடும்பப் பொறுப்புகள், குழந்தைப் பேறு, அலுவலகப் பணி, கணவனையும், வீட்டிலுள்ள பெரியோர்களையும் பேணுதல் போன்ற பல கடமைகளை அவள் கவனிக்க வேண்டியிருக்கின்றது. இத்தகைய முக்கியமான தருணத்தில் பெண்கள் தம் குடும்ப நலத்தோடு தங்கள் உடல் நலனிலும் தனிக் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.

”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது அனுபவ மொழி. அத்தகைய நோயற்ற வாழ்வைப் பெறுவதற்கு முறையான, சரியான உணவு முறை அவசியம் என்பதனை எவரே மறுப்பர்? “உணவே மருந்து” என்பது ஆன்றோர் வாக்கு. தெய்வப் புலவர் திருவள்ளுவரும்,

”மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு.” என்கின்றார். உண்ணும் உணவானது நோயற்ற வாழ்வை வழங்குவதில் பெரும்பங்காற்றுகின்றது. அத்தகைய உணவின் தன்மை, உண்ணும் அளவு, காலம் ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு உண்ணுதல் நலம் பயக்கும்.

உணவில் மாவுச்சத்து (carbohydrates), புரதச்சத்து (protein), மற்றும் கொழுப்புச்சத்து (fat) ஆகையவைப் போதுமான அளவில் இருக்கின்றதா என்பதை பெண்கள் (ஏன் அனைவருமே) கவனித்தில் கொள்ள வேண்டும். இதனைத் தான் ”சமச்சீர் உணவு” (balanced diet) என்று இன்றைய மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, குழந்தை பெறுகின்ற வயதில் (child-bearing age) இருக்கும் மகளிர்க்கு இச்சமச்சீர் உணவு மிகவும் முக்கியமானது. அப்போதுதான் பிறக்கும் குழந்தைகள் நல்ல உடல்நலத்தோடும், மன வளத்தோடும், குறைபாடுகள் இன்றியும் பிறக்க வாய்ப்பு ஏற்படும். அதுபோலவே, 50 வயதைக் கடந்த பெண்களுக்கு (குறிப்பாக இந்தியப் பெண்களுக்கு) அதிகப் படியான கால்சியப் பற்றாக்குறை காரணமாக எலும்புத் தேய்மான நோய் (osteoporosis) ஏற்படுகின்றது. இதனால் தவறி அவர்கள் எங்கேனும் கீழே விழுந்தால் கூட எலும்பு முறிவு (bone fracture) ஏற்பட்டு விடுகின்றது. இதனைத் தவிர்க்கப் பெண்கள் கால்சியம் சத்து நிறைந்த பால், தயிர், கீரை வகைகள், சோயா பீன்ஸ், ஆரஞ்சு, முட்டை போன்ற உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.

உடல் நலனைச் சீர்குலைக்கும் பிற நோய்கள் என்று பார்த்தால் பரம்பரை நோய்களுக்கு முக்கியப் பங்குண்டு எனலாம். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் போன்றவை பொதுவான பரம்பரை நோய்களாக அறியப்படுபவை. 30 வயதிற்கு மேல்தான் இந்நோய்கள் தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கும். ஆகவே, தாய், தந்தையர்க்கு இத்தகைய நோய்கள் இருப்பின் அவர்களின் வாரிசுகளுக்கும் அவை வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அதனை உணர்ந்து மருத்துவ ஆலோசனையை நாடுவதும், மருத்துவர் பரிந்துரைக்கும் உணவு முறையினைக் கடைப்பிடிப்பதும் அவசியம்.

இன்றைய மருத்துவ உலகம் பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றங்களையும், புரட்சிகளையும் கண்டு வருகின்றது என்றால் மிகையாகாது. சான்றாக, நுண் துளை அறுவை சிகிச்சை (laparoscopic surgery) ஓர் வரப் பிரசாதம் என்றே கூறலாம். இதன் மூலம் பல்வேறு சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் எளிதாகச் செய்யமுடிகின்றது. வெகு விரைவிலேயே இயல்பு வாழ்க்கைத் திரும்பவும் இயலுகின்றது.

நவீன மருத்துவ வசதிகளை, முன்னேற்றங்களைப் பெண்கள் தங்கள் உடல் நலத்தை காக்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நோய்கள் வருவதற்கு முன்னமேயே தற்காப்பு மருத்துவப் பரிசோதனைகளைச் அவ்வப்போது செய்துகொள்வது நல்லது. குறிப்பாக 30 வயதினைக் கடந்த பெண்கள் 3 ஆண்டுகட்கு ஒரு முறை மார்பகப் பரிசோதனை (Mammogram) மற்றும் கருப்பைப் பரிசோதனை (Pap smear) போன்றவற்றைச் செய்துகொள்வது அவசியமானது. இதனால் மார்பகப் புற்றுநோய் (breast cancer), கருப்பைசார் புற்றுநோய்கள் (cervical cancer, endometrial cancer and ovarian cancer) ஆகியவை வராமலே தடுக்கவோ அல்லது ஏற்கனவே வந்திருந்தால் ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தவோ இயலும். அதைவிடுத்து, வீட்டு வேலைகள், அலுவலகப் பணிகள் ஆகியவற்றின் காரணமாகப் பெண்கள் தங்கள் உடல்நலனில் போதிய அக்கறை செலுத்தத் தவறினால் பல்வேறு நோய்கட்கு அவர்கள் ஆட்பட நேரும். அது அவர்களின் இனிய இல்லறத்தைப் பாதிக்கக்கூடும். ஏன்..அலுவலகப் பணிகளையும் செம்மையாகச் செய்ய இயலாது.

அடுத்தபடியாக, பெண்கள் தங்கள் உடலைப் பேணுவதற்கு, கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்கு உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை பெரிதும் உதவுகின்றன. எனவே, எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும் அதற்கு இடையில் தினமும் (காலையோ அல்லது மாலையோ) 15 அல்லது 20 நிமிடங்களேனும் இத்தகைய பயிற்சிகளில் ஈடுபடுதல் அவசியம். யோகா, தியானம் போன்றவற்றை முறையாகப் பயின்று பின்பு பயிற்சியில் ஈடுபடுவதே சிறந்தது. இத்தகைய பயிற்சிகளினால் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும். வேலைகளைத் திறம்பட நிர்வகிக்கத் தேவையான ஆற்றலையும், புத்திக்கூர்மையையும் இவை அளிக்கும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்கின்றனர்.

அலுவலகம் செல்லும் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவதோடு, நேர மேலாண்மையிலும் (time management) ஆற்றலும் பெற்றவர்களாக இருந்தால் இன்றைய விஞ்ஞான உலகில் அவர்களால் அனைத்து வேலைகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் சிறப்பாய்ச் செய்ய முடியும். நேர நிர்வாகம் என்பதனை அவர்கள் முதலில் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். வீட்டு வேலைகளை அவரவர் வயதிற்கும், அனுபவத்திற்கும் தக்கபடி வீட்டிலுள்ள அனைவர்க்கும் பகிர்ந்தளித்தல் வேண்டும். இவ்வாறு செய்வது பெண்களின் வேலை பளுவையும், உடல் சோர்வையும், மன அழுத்தத்தையும் குறைக்கும். இம்முறையை (வாய்ப்பிருப்பின்) அலுவலகத்திலும் பின்பற்றலாம். இதைத்தான் ”delegation of duties” என்று குறிப்பிடுகின்றனர்.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய மற்றொன்று, தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தைப் பெண்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதே. வேலைகளுக்கு நடுவில் கிடைக்கின்ற சிறிதளவு ஓய்வு நேரத்தை மிகவும் பயனுள்ள வகையில் செலவழிக்கப் பெண்கள் பழக வேண்டும். தொ(ல்)லைக் காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவிட்டுக் குழந்தைகளோடு செலவிடுதல் வேண்டும். நல்ல கருத்துள்ள நீதிக் கதைகள், திருக்குறள் போன்றவற்றை அவர்களுக்குக் கற்பிக்கலாம். அவர்களின் பள்ளி அனுபவங்களையும், ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முறைகள் பற்றியும் கேட்டறியலாம். அவர்களோடு சிறிது நேரம் விளையாடலாம். இது போன்ற செயல்கள் குழந்தைகளுக்கு மனமகிழ்ச்சியை நிச்சயம் கொடுக்கும். அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களாக வாழ வழிகோலும்.

எனவே, உடல் நலத்தையும், மன வளத்தையும் காக்கத் தேவையான உணவினையும், உடற்பயிற்சிகளையும், முறையான மருத்துவப் பரிசோதனைகளையும், சரியான திட்டமிடலையும் மேற்கொண்டால் இன்றைய பெண்கள் மேலும் பல சாதனைகளைப் புரியலாம், சரித்திரம் படைக்கலாம். வீடு, அலுவலகம், இரண்டையும் திறம்பட நிர்வகிக்கலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மகளிர் உடல்நலனும், கடமைகளும்!!

 1. நல்ல கட்டுரை.
  நம் நாட்டில் உடற்கட்டைப் பேணும் முனைப்பு இருபாலருக்குமே சற்றே குறைவு தான் என்பதை மறுப்பதற்கில்லை.
  பாரத ஸ்திரீகள் யௌவனத்தில் தங்கள் ஆரோக்யத்தை ரக்ஷித்துக்கொள்ளும் முனைப்பை மத்திம தசையிலும் வ்ருத்தாப்பியத்திலும் காட்டுவதில்லை.
  என்னதான் த்யாகம் என்று அதை நாம் ஸ்லாகித்தாலும் நம்மவர்களின் மெத்தனத்தை ஏற்றுக்கொள்வதற்கில்லை. ஆண்களும் இதற்கு விலக்கல்ல. நெய்யும் பருப்பும் வடையுமாக உண்டு தொந்தி வரம் வாங்கி கொழுப்பினால் அவதிப்படும் புருஷர்களும் ஏராளம்.
  இருபாலருக்கும் பொதுவாக ஒன்று சொல்வேன். குடும்பத்துக்காக உழைக்கிறேன் என்று தன்னை, தன உடலை பேணாது ஒழித்ததால் அது எடுத்த நோக்கத்திற்கே குந்தகமாகும். யாருக்கு உழைக்க நினைத்தோமோ அவருக்கே தொல்லையாகும். நமக்கும் இயலாமை வரும். தன்னைப்பேணி பிறரையும் பேணுவதே முறைமை.
  நல்ல கட்டுரை.
  வாழ்த்துக்கள்.

  புவனேஷ்வர்

Leave a Reply

Your email address will not be published.