திருக்குறள் நெறிகளைப் பின்பற்றுகிறோமா?

2

அண்ணாகண்ணன்

திருக்குறள் குறித்துத் தமிழர்களுக்கு எப்போதுமே பெருமிதம் உண்டு. அந்தக் குறட்பாக்களை வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் எழுதி வைக்கிறோம். அரசுப் பேருந்துகளில், அரசு அலுவலகங்களில், பள்ளி – கல்லூரி – பல்கலைக்கழகங்களில், பல்வேறு அரங்குகளில்…  திருக்குறளைக் காண்கிறோம். நாளிதழ்களில் தினமும் குறளும் உரையும் இடம் பெறுகின்றன. தொலைக்காட்சிகளில் திருக்குறளை விளக்குகிறார்கள். இணையத்திலும் பற்பல தளங்களில் குறள் வீற்றிருக்கிறது. திருக்குறளின் பெயரால் அமைப்புகளும் விருதுகளும் உலகெங்கும் உள்ளன. பாடப் பகுதியில் திருக்குறளின் சில அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன. அது போக, 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவர்கள் பலரும் உள்ளனர். திருக்குறளை மேற்கோள் காட்டும் தமிழறிஞர்களும் அரசியல்வாதிகளும் இன்ன பலரும் பற்பலர். திருவள்ளுவர் நாளும் திருவள்ளுவர் ஆண்டும் வேறு இருக்கிறது.

இப்படியெல்லாம் திருக்குறளைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகம், திருக்குறட் கருத்துகளை எந்த அளவுக்குப் பின்பற்றுகிறது? இந்தக் கேள்விக்கான பதில், நமக்கு உவப்பானது இல்லை.

கள்ளுண்ணாமையை வலியுறுத்திய வள்ளுவருக்குக் குமரி முனையில் 133 அடி உயரச் சிலையைத் தமிழக அரசு அமைத்தது. அதே அரசுதான் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் அரசு மதுபானக் கடைகளைப் பட்டி தொட்டி முதல் பட்டணம் வரை தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மதுக் கடைக்கும் வணிக நிறுவனத்தைப் போல், விற்பனை இலக்கினை நிர்ணயித்து, வியாபாரத்தைப் பெருக்கி, பல்லாயிரம் கோடிகளை இலாபமாக ஈட்டி வருகிறது. அப்படியானால், வள்ளுவரைப் போற்றுவதன் பொருள் என்ன?

‘வள்ளுவர் கூறிய எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர், புலால் உண்ணாமையை வலியுறுத்தினார். அதற்காக இறைச்சி உண்பதை விட்டுவிட முடியுமா?’ என்று பேரா.சுப.வீரபாண்டியன், நானும் பங்கேற்ற ஒரு பட்டி மன்றத்தில் வினவினார். மாமிசம் உண்ணும் தமிழர்கள், வள்ளுவ நெறிப்படிதான் நடக்கிறார்களா?

பிறனில் விழையாமை என்ற கோட்பாட்டினை வள்ளுவம் முன் நிறுத்துகிறது. ஆனால், வாய்ப்பு கிடைக்காத வரை மட்டுமே அவ்வாறு இருப்பது, பெரும்பாலோரின் இயல்பு. இதற்கு எண்ணற்ற சான்றுகளை நம் தெருக்களிலும் ஊடகங்களிலும் அன்றாடம் காணலாம்.  உடல் அளவில் பிறனில் விழைந்தவர்களைக் காட்டிலும் மனத்தளவில் விழைந்தவர்கள் பற்பல மடங்குகள் அதிகம் இருக்கும். மனச்சான்றின்படி நோக்கினால், இங்கும் குறளின் கருத்தினை நாம் பின்பற்றவில்லை.

தாகத்திற்குத் தண்ணீர் கேட்டால், புட்டியிலும் நெகிழ்ம உறைகளிலும் அடைத்து வைத்துள்ளதைக் காசுக்கு விற்கிறார்கள். தொலைக்காட்சித் தொடர் ஓடும்போது கட்டிய கணவரே வந்தாலும் திரும்பிப் பார்க்காத இல்லத்தரசிகள் இருக்கிறார்கள். ‘கொட்டிக்கோ’ என்று சொல்லி, உணவு பரிமாறும் பண்பும் பல வீடுகளில் உள்ளது. நாம் விருந்தோம்பலைப் பற்றிப் பேசுவது தகுமா?

கடவுள் இல்லை, இல்லவே இல்லை, கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றெல்லாம் சொன்ன பெரியாரின் மாணவர்கள், தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செலுத்துகிறார்கள். இவர்கள், கடவுள் வாழ்த்துப் பாடிய திருவள்ளுவரையும் போற்றுகிறார்கள்.

பொய்யாமையை வலியுறுத்திய வள்ளுவரை முன்வைத்துக் கேட்கிறேன். பொய் சொல்லாத தமிழர்கள் எவ்வளவு பேர்? சிறிதோ, பெரிதோ, பொய் பொய்தானே? சரி, வாய்மை இருக்கிறதே என்கிறீர்களா? தீமையிலாத பொய்களைச் சொன்னவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?

இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்தவர்கள் எவ்வளவு பேர்? மனத்துக்கண் மாசிலனாக வாழ்பவர்கள்? ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் எனக் கருதுபவர்கள்? இன்னும் வள்ளுவத்தில் கூறிய நெறிகளின்படி வாழ்பவர்கள் எங்காவது இருக்கிறார்களா? அறியேன்.

நான் பார்த்த வரை வள்ளுவ நெறிகளில் தமக்கு வசதியான வெகு சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து, சில நேரங்களில் மட்டும் பின்பற்றுபவர்கள் சிலர் இருக்கிறார்கள். பிற நெறிகளை நினைத்துப் பார்ப்பதே அரிது. பலருக்கு ஏட்டுச் சுரைக்காய், கறிக்குதவாது; கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதே கொள்கை.

போற்றுவது ஒன்றை, கடைப்பிடிப்பதோ வேறு ஒன்றை என்பதே தமிழரின் நிலைப்பாடோ? சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியுடன் அவர்கள் வாழ்வதற்கு வள்ளுவமே சான்று.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

என்ற பாரதியின் வரிகளுக்கு ஏதோ ஒரு பட்டிமன்றத்தில் ஒருவர் விளக்கம் தந்தார். வள்ளுவத்தை உலகிற்குத் தந்துவிட்டதால், உள்நாட்டில் அது இல்லை என நகைச்சுவைக்காக அவர் கூறினார். ஆனால், இந்தக் கூற்றில் ஓரளவு உண்மையும் உள்ளது.

வள்ளுவத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் கூட புரிந்துகொள்ளலாம். அதைப் போற்றிக்கொண்டே கடைப்பிடிக்காததுதான் எனக்குப் புரியவே இல்லை. இந்த இரட்டை வேடம் எதற்காக?

வள்ளுவர் சுட்டிய நெறிகள் அனைத்தும் அவர் ஒருவரே வகுத்தவை அல்ல. அவருக்கும் முன்பே பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்த நெறிகளைச் சீரமைத்து, அவர் வகுத்தும் தொகுத்தும் தந்துள்ளார். ஆதித் தமிழரின் சிந்தனை வளம் செறிந்த செவ்வியல் இலக்கியமே திருக்குறள். அப்படியானால், இவ்வளவு செழுமையான நெறிகளைக் கொண்டிருக்கும் ஒரு சமூகம், ஏன் அவற்றைப் பின்பற்றத் தயங்க வேண்டும்? பின்பற்ற மாட்டேன் என மறுக்க வேண்டும்?

திருக்குறள் எழுதப்பட்ட காலத்திலிருந்தே அதற்கு முரணான செயல்களைக் கொண்டவர்களும் இருந்தே வருகிறார்கள். ‘நல்லவற்றை எடுத்துரைப்பது என் கடமை. அதைப் பின்பற்றுவது உன் விருப்பம்’ என்பதே தமிழரின் நடைமுறை. வன்முறையினால் ஒரு வழக்கத்தை நிலைநாட்டுவதை அவர்கள் விரும்பவில்லை. இயல்பாகவே மனத்திலிருந்து அது பூக்க வேண்டும் என்பதே நம் முன்னோரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இன்றும் எதைப் பின்பற்றுவது என்ற சுதந்திரம், நம் மக்களிடம் உள்ளது. அந்தச் சுதந்திரத்தை அவர்கள் முறையாக, முழுமையாகப் பயன்படுத்தினால் அது அவர்களிடம் நிலைக்கும்.

வள்ளுவ நெறிகளைப் பின்பற்றாததால் இழப்பு, வள்ளுவத்திற்கு இல்லை; நமக்கே.

 படங்களுக்கு நன்றி:

http://www.spiritofchennai.com/personalities/thiruvalluvar.htm

http://en.wikipedia.org/wiki/File:Tiruvalluvar_Statue_Kanyakumari.jpg

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “திருக்குறள் நெறிகளைப் பின்பற்றுகிறோமா?

  1. திருக்குறள் படிக்காத எத்தனையோ பாமரர்கள் பொய் சொல்வதில்லை. பிறர் பொருளுக்கு ஆசைப்படுவதில்லை. அதிகமாக திருக்குறளை மேடைகளில் முழங்கும் அரசியல்வாதிகளும், பேச்சாளர்களும்தான் அவற்றையெல்லாம் பின்பற்றுகின்றார்களா என ஐயுற வேண்டியுள்ளது.
    பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமை திருக்குறளுக்கு உண்டு. ஆனல், அந்நூலை (அதிகமாகப்) பின்பற்றுவர்கள் இல்லை என்றே கூறத் தோன்றுகிறது.
    சிந்தனைக்கு விருந்தாக அமைந்த கட்டுரை. திரு. அண்ணாகண்ணன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!

  2. திருவள்ளுவரின் கூற்றுக்கள் ஒரு மனிதனை மனிதனாய் சமைக்க வல்லவை . என்னைச் செதுக்கியதில் வள்ளுவரின் பங்கே அதிகம். வள்ளுவர் கூறும் தவம் செய்தால் விளையும் பலன்களை தவநெறிமுறைகளின் மூலம் நாம் கடைபிடிக்காவிட்டாலும்கூட, ஒவ்வொருவரும் கள்ளுண்ணாமை, புலால் தவிர்த்தல், பிறனில் விழையாமை, சினம் தவர்த்தல்,ஒழுக்கம் இவைகளை உயிரினும் மேலாக கைபிடித்தொழுகவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *