தேசிய பெண் குழந்தைகள் தினம்

0

பவள சங்கரி

”பெண்களை உயர்வாக மதித்து நடத்தும் நாடுதான் முன்னேறும்

– காந்தியடிகள்

இந்தியாவில் பெண் குழந்தைகளின் நலனைக் காக்கவும், அவர்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த  விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 24 ஆம் நாள் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதே தினத்தில்தான், 1966ம் ஆண்டு நம் இந்தியாவின் முதல் பெண் பிரதமராக  இந்திராகாந்தி அவர்கள் பதவியேற்றார்.

நம் இந்தியாவைப் பொறுத்தவரை பெண் குழந்தைகளை வளர்ப்பதை பெரும் சுமையாகக் கருதும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பதால் பெண் சிசுக் கொலை மிகப் பரவலாக ஆனது. இதன் காரணமாக 2001ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 933 பெண்கள்தான் இருந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை நகர்ப்புறங்களில் 946 ஆகவும், கிராமப் புறங்களில் சுமார் 900 ஆகவும் இருக்கிறது.. ஹரியானா மாநிலத்தில் மிகக் குறைவாக 861 பெண்களும்தான் இருந்திருக்கிறார்கள்.கடந்த 20 ஆண்டுகளில்  ஒரு பாவமும் அறியாத ஒரு கோடி பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்பட்டிருக்கின்றன என்பது வேதனையான விசயம்.அதாவது தினசரி கிட்டத்தட்ட 2000 குழந்தைகள் அழிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பில் தெரிவித்திருக்கிறது.

நம் இந்தியாவில் தொடக்கப் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 100க்கு 87 ஆக உள்ளது. அதிலும் 12 ஆம் வகுப்பு வரை செல்பவர்கள் 49 பேர் மட்டுமே என்கிறது ஒரு ஆய்வறிக்கை.. உயர் கல்விக்கும், கல்லூரிக்கும் செல்பவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கின்றனர்.

இவையனைத்திற்கும் மேலாக இன்று பெண்களின் முன்னேற்றத்தை குறி வைத்துத் தாக்கக்கூடிய பெரும் பிரச்சனை பாலியல் வன்கொடுமை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, ஈரோடு சித்தார்த்தா மேல் நிலைப்பள்ளியின் தாளாளர் திருமதி. ஜெ. ஜெயபாரதி அவர்களின் முயற்சியால் பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளிலிருந்து காப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு மாணவர்கள் அதற்கான வாசகங்கள் தாங்கிய அச்சிதழ்களை ஊர் முழுவதும் விநியோகம் செய்தும், சக மாணவிகளை உயர்வாய் மதிப்போம் என்ற உறுதிமொழி எடுத்தும், மற்றும் அழகான கலை நிகழ்ச்சிகளுடன் இன்றைய தேசிய பெண் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடியுள்ளனர். நிகழ்ச்சிகளின் முத்தாய்ப்பாக ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகளின் கைகளில் ராக்கி கட்டி சகோதரியாக ஏற்றுக் கொண்டனர். மாணவர்களுக்கு தற்காப்புக் கலையாக கராத்தே பயிற்சியும் அளிக்கப்பட இருப்பதாக பள்ளி முதல்வர் திரு முகமது கௌஸ் அறிவித்தார்.

உறுதிமொழி வாசகங்கள்:

* என் சக பெண்களை நல்ல தோழியர்களாகக் கொள்வேன்.

* என் சக தோழியர்களைக் கண்ணியமாக நடத்துவேன்.

* என் தாய்க்கும், சகோதரிக்கும் கொடுக்கும் அனைத்து மரியாதைகளையும் பெண்களுக்குக் கொடுப்பேன்.

* எந்தச் சூழலிலும் கண்ணியக் குறைவாக பெண்களிடம் நடந்து கொள்ள மாட்டேன்.

* பெண்களுக்கு எதிரான எந்தவிதமான வன்முறையிலும் ஒருக்காலும் ஈடுபடமாட்டேன்.

* பெண்களை நுகர்வுப் பொருளாக நடத்த மாட்டேன்.

* பெண்களின் உணர்வுகளை மதிப்பேன்.

* பெண்மையைப் போற்றுவேன்.

* மானுடத்திற்கான சமத்துவத்தைக் கடைப்பிடிப்பேன்.

* இன்று நான் ஏற்கும் இந்த உறுதிமொழியை என் வாழ்நாள் முழுவதும் காப்பேன்.

சித்தார்த்தா பள்ளி ஆசிரியர்களும், பள்ளி முதல்வரும் வாக்காளர் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.

வாக்காளர் உறுதிமொழி:

”ஜனநாயகத்தின்மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் நன்மதிப்பான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றில் தாக்குதலுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம்”.

பெண் அடிமை தீரும் மட்டும் நம் நாட்டின் பெருமை உயராது – பாரதிதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *