இசைக்கவி ரமணன்

அவளுக் கென்றோர் மனமுண்டு! அதில்
ஆயிர மாயிரம் குணமுண்டு!
சிவனை நெஞ்சில் மிதித்திடுவாள், ஒரு
சித்திர மலராய்ச் சிரித்திடுவாள்
கவலைகள் யாவும் இவளேதான், ஒரு
கலமாய் வருவதும் அவளேதான்!
எவரும் எதுவும் அறியாமல், இவளே
எதிரே புதிராய்த் திரிகின்றாள்!

ஏதும் துவங்கிய முன்பேயே, அவை
எல்லாம் விழுங்கி வியர்த்தவள்தான்
ஏதோ மிஞ்சி இருப்பதுபோல்
இன்றும் வீதியில் திரிகின்றாள்
தீதும் நன்றும் இவள்கண்கள், இவள்
சிந்திய சிரிப்பே நம்பெண்கள்
கீதம் பாடும் கவிஞர் நெஞ்சில்
கிளர்ந் தெழுந்திடும் கிரணங்கள்!

உச்சி வெய்யில் வியர்வையிலே
உடம்பில் ஒருவித நடுக்கம்போல்
பிச்சியின் சினத்தின் உச்சத்தில்
பெயர்ந்த சுகமே பக்தியடா!
தன்னை மீறிய புதிரொன்று
தன்னி லிருந்தே தோன்றியதை
அன்னை உணர்ந்து வியக்கின்றாள்
அதனைக் காண விழைகின்றாள்!

எங்கே எப்படிக் காணுவது?
எவ்விதம் தன்னைக் காணுவது?
கங்கைக் கரையின் ஓரத்தில்
கனலாய் பக்தி ஒதுங்கியது
அங்கே பதுமை வடிவத்தில்
அநந்த சக்தி ஒடுங்கியது
எங்கும் காணாப் பேரின்பம், ஓர்
ஏழையின் மூலம் துலங்கியது!

பவதா ரிணியே கண்ணாடி
பரம ஹம்ஸரே பக்தியதில்
அவரை வைத்துத் தன்னைத்தான்
கண்டு மகிழ்ந்தாள் பராசக்தி!
சிவனே அறியாப் பேதையவள்
சித்தம் சிலிர்க்க வைத்தவரை
இவனா கவியில் பாடுவது?
இலையா நதியைச் சூடுவது?

பக்திக் கனலின் வெப்பத்தால்
சக்தியின் பிடரியைப் பற்றியவர்
சக்தி யென்னுமோர் மூர்க்கத்தை
சற்றும் குறையா ஆக்கத்தை
நற்கதி அனைவரும் பெறவேண்டி
நட்டு வைத்தார் நடுவூரில்
முக்தியும் இதற்கோர் ஈடில்லை, எந்த
முடிவும் இதுபோல் சுகமில்லை!

காளியின் கண்ணைப் பாருங்கள், அதில்
பரம ஹம்ஸரே தெரிகின்றார்
தூளியி லாடும் குழந்தைபோல்,
தூண்டிற் புழுபோல், தோள்தேடும்
தோழன் போல், ஒரு துணைவன்போல்
துவண்டு புரண்டு துடிக்கின்றார்
ஆளே யின்றி அத்வைத
அருமை ஒருமையில் நிற்கின்றார்!

 
அவளுக் காக அழுவதுபோல்
ஆனந் தம்வே றொன்றில்லை
அவளே கதியென விழுவதுபோல்
அறிவொன் றிங்கே வேறில்லை
அவளே தானாய்க் காண்கின்ற
அனுபவம் போல்பிறி தொன்றில்லை
பவதா ரிணியைக் காணுங்கள்
பரம ஹம்ஸர்தான் தெரிகின்றார்!

படத்திற்கு நன்றி :

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “பரமஹம்ஸரும் பவதாரிணியும்

  1. Hari Om. Excellent anna.’Aval sindhiya siripe nam pengal’ beautiful & very true. No wonder, each woman is an embodiment of ‘parashak’thi’ guha.

  2. பாராட்டிச் சொல்ல வார்த்தைகளில்லை. பல வரிகளில் கண்களில் நீர் அரும்பி விட்டது. குறிப்பாக, பவதாரிணியாகிய காளி தேவியே ‘மஹா மாயா’ அதாவது நம் மாயைக்குக் காரணமும் அதிலிருந்து காப்பாற்றுபவளும் அவளே என்பதை, ‘கவலைகள் யாவும் அவளேதான் ஒரு கலமாய் வருவதும் அவளேதான்’ என்று  தெரிவிக்கும் வரிகள். பக்தியின் மேன்மையை, பரமஹம்ஸரின் ஞானாவஸ்தையை விவரித்திருப்பது அருமையிலும் அருமை. மிக்க நன்றி.

  3. பவதாரிணியின் அவதாரமாய் பரமஹம்சரைப் பார்த்திருப்பது பொருத்தமானது.

  4. கண்ணனும் ஆண்டாளும் கண்ணனும் மீராவும் கண்ணனும் கண்ணதாசனும் போன்ற உரைகளை கேட்டு உங்கள் குரலுக்காகவும் வார்த்தை ஜாலத்திர்க்காகவும் கிறங்கி போனது உண்டு இப்போது உங்கள் எழுத்தை முதல்முறையாக இணையத்தில் படித்து வியந்து போகிறேன் நதியும் சூடுமோ இலையை நல்ல கற்பனை வளமான சொல்லோட்டம் பாராட்டுகள் மேலும் சிந்திப்போம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *