–தேமொழி.
கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ?
கவிதை மூலம் – மாயா ஆஞ்சலூ
மொழிபெயர்ப்பு – தேமொழி
சுதந்திர பறவை வேகமெடுத்து
காற்றில் பாய்ந்தது,
காற்றோட்டத்தின் எல்லை வரை
காற்றில் மிதந்தது,
செங்கதிரின் வண்ணத்தில் தன்
சிறகைத் தோய்த்து
வானம் எனக்கே சொந்தம்
என எண்ணத் துணிந்தது
கூண்டுப் பறவையோ குறுகிய
கூண்டில் கொதிப்புடன் உலவியது,
பொங்கி வரும் ஆத்திரம்
அதன் கண்ணை மறைத்தது,
சிறகொடிந்து கால்கள் கட்டுண்டதால்
குரலெடுத்துப் பாட முனைந்தது
கூண்டுப்பறவை பாடுகிறது
அச்சத்துடன் நடுங்கும் குரலில்
அனுபவிக்காதவற்றை எண்ணி
மனம் விரும்பும் ஏக்கத்தில்.
அந்தப் பாடல் எதிரொலித்தது
தொலை தூரத்து மலையில்
கூண்டுப்பறவையின் வேட்கை
தொனிக்கும் விடுதலைப் பாடல்
சுதந்திர பறவை மற்றொரு
இளந் தென்றலை நினைந்தது
அசையும் மரங்களின் பெருமூச்சாய்
மெல்லத் தவழ்ந்து செல்லும்
பருவக் காற்றை நினைந்தது
காலைக்கதிரொளியில்
ஒளிர்ந்திடும் புல்வெளியில்
ஊர்ந்திடும் கொழுத்தபுழு
உணவை மனதினில் நினைந்தது
இந்த வானமே எனதென மகிழ்ந்தது
கூண்டுப்பறவையோ கனவுகளின்
கல்லறை மேடையில் நின்றது
பயங்கரக் கனவின் அலறலாக
அதன் நிழல் ஓலமிட்டது
சிறகொடிந்து கால்கள் கட்டுண்டதால்
குரலெடுத்துப் பாட முனைந்தது
கூண்டுப்பறவை பாடுகிறது
அச்சத்துடன் நடுங்கும் குரலில்
அனுபவிக்காதவற்றை எண்ணி
மனம் விரும்பும் ஏக்கத்தில்.
அந்தப் பாடல் எதிரொலித்தது
தொலை தூரத்து மலையில்
கூண்டுப்பறவையின் வேட்கை
தொனிக்கும் விடுதலைப் பாடல்

மாயா ஆஞ்சலூ கவிதைகளின் மொழி பெயர்ப்பு:
நான் எழுவேன் !!! (Still I Rise – Poem by Maya Angelou)
கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ? (Caged Bird – Poem by Maya Angelou)
தனிமையிலே … (Alone – Poem by Maya Angelo)


Leave a Reply