கே.ரவி

என் வளர்ப்புத் தந்தை கவிராஜ காளமேகம் படம் தயாரிக்கத் தொடங்கிய போது எங்கள் இல்லம் மயிலை, பலாத்தோப்பில் இருந்தது. அங்கேதான் அவரை நான் முதன்முதலாகப் பார்த்தேன். கையை மடித்து விட்டிருந்த வெள்ளை ஜிப்பா, வெள்ளை வேட்டி, நெற்றியிலே குங்குமப் பொட்டு, மீசை. இந்தத் தோற்றத்துடன் அங்கே வந்தவர் கவிஞர் வாலி.

images (1)

மாமா படத்துக்குப் பாட்டெழுத ஏ.எல்.நாராயணன் அழைத்ததும் ‘ஹோட்டல் எல்லாம் வேண்டாம் நான் அவர் வீட்டுக்கே வந்து விடுகிறேன், அவா நம்ம ஊர்க்காரா’ என்று சொல்லி வந்து விட்டராம்.

ஏற்கனவே இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவும், ஏ.எல்.நாராயணனும் வந்து காத்திருந்தனர். எங்கள் வீட்டுக் கூடத்தில் ஒரே வெற்றிலை மணம், ஆர்மோனியச் சத்தம்.

ஶ்ரீரங்கம் கோவில் மடப் பள்ளியில் சமையல் செய்து கொண்டே பின்னாளில் காளமேகமாக மாற இருக்கும் கதாநாயகன் நையாண்டியாகப் பாடவேண்டிய பாடல் என்று நாராயணன் விளக்க, உடனே வாலி, நானும் அதே ஊர், ஶ்ரீரங்கம்தான் என்று சொல்லி விட்டு, 5 நிமிடங்களுக்குள் பாடலை அமர்க்களமாக எழுதிக் கொடுத்த காட்சியைக் கண்குளிரக் கண்டும், செவிகுளிரக் கேட்டும் ரசித்தேன்.

ரெண்டு பக்கம் காவேரி எங்க ஊரு நடுவிலே
ரெங்க நாத சாமியோ ஆதி சேஷன் மடியிலே

சித்திரையில் தேரோட்டம் மாசியிலே படகோட்டம்
இத்தனையும் காணவரும் எத்தனையோ ஜனக்கூட்டம்
பக்தாளுக்குத் தெரியாதோ பெருமாளின் சங்கதி
உள்ளூரில் ரெண்டிருக்க உறையூரில் இன்னொருத்தி

கைவழியே நெய்வழியும் பொங்கலுண்டு காலையிலே
சித்திரான்னம் படைப்பதுண்டு மத்தியான வேளையிலே
ஊருக்கெல்லாம் சோறூட்டும் சாமியெங்க சாமிதான்
நான்சமச்சுப் போடாட்டா நாள்முழுக்கப் பட்டினிதான்

பாட்டு முடிவதற்குள் டி.எம்.செளந்தரராஜனும் வந்து சேர்கிறார். எஸ்.எம்.எஸ் மெட்டுச் சொல்லி வாசிக்க, அந்தப் பாடலை டி.எம்.எஸ் பாடிக் காட்ட, அடாடா, பெருமாளே கள்ளத்துயில் நீங்கி எழுந்து வந்து சிவதாண்டவம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவானது.

maxresdefault

இந்தப் பாட்டை கேட்கச் சொடுக்கலாமே,

http://youtu.be/4XSsgperblo

என்னையும் கவிஞன் என்று ஏ.எல்.நாராயணன் வாலிக்கு அறிமுகம் செய்து வைத்ததும், “அதெல்லாம் ஒண்ணும் வேணாம்பா, ஒழுங்காப் படி” என்றார் வாலி.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கவிஞர் வாலியை நான் பல ஆண்டுகள் பார்க்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. ஆனாலும் அவருடைய பாடல் வரிகள் பல என்னை ஆட்கொண்ட வரிகள்.

“மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா
மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர வெறுத்திடுமா”

எவ்வளவு அற்புதமான வரிகள்!

“இடையோ இல்லை இருந்தால் முல்லைக் கொடிபோல் மெல்ல வளையும் – சின்னக்
குடைபோல் விரியும் இமையும் விழியும் பார்த்தால் ஆசை விளையும்”

சொற்கள் எப்படி இயல்பாக ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டு வருகின்றன!

வாலியை அடுத்தமுறை நான் பார்த்தது 1997-ல் அவருடைய இல்லத்தில். வானவில் பண்பாட்டு மையம் எடுத்த இந்திய சுதந்திரப் பொன்விழாக் கவியரங்கத்துக்கு அவரை அழைக்கச் சென்றிருந்தேன். அப்போது என்ன சொன்னார் தெரியுமா? “ஏன்யா, நான் தப்பித் தவறி ஒரு நல்ல பாட்டு எழுதிட்டாப் போச்சு, அதையும் கண்ணதாசன் பாட்டுன்னு சொல்லிடுவீங்களே”. எனக்கு ஒன்றும் விளங்க வில்லை. அவரே விளக்கினார். நான் எழுதி வெளியிட்டு, அவருக்கும் அனுப்பி வைத்த ‘நமக்குத் தொழில் கவிதை’ என்ற நூலில்,

“ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் – இந்த
உண்மையச் சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தப் பாருங்க – அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க”

என்ற பாட்டின் எளிய நடையை நான் பாராட்டி விட்டு அதைக் கண்ணதாசன் பாடல் என்று குறிப்பிட்டு விட்டேனாம். சிரித்துக் கொண்டே கோபித்துக் கொண்டார். நான் மன்னிப்புக் கேட்டேன். அவர் என் நூலை முழுமையாகப் படித்திருந்தது குறித்து மகிழ்ச்சியடைந்தேன்.

பின்னொரு சமயம் சபரிமலைக்கு என்னுடன் யாத்திரை போய்க்கொண்டிருந்த நண்பர் குழுவின் பக்திப் பாடல்கள் அடங்கிய ‘சந்தன மணம் கமழ் ஐய்யப்பன்’ என்ற பாட்டு நூலை வாலியைக் கொண்டு சென்னை ஆஸ்திக சமாஜத்தில் வெளியிட எங்கள் குருசாமி, என் மூத்த சகோதரர் ஶ்ரீதர், ஏற்பாடு செய்திருந்தார். அதை வெளியிட்டுப் பேசிய வாலி அவர்கள் அதில் இருந்த என் பாடல் ஒன்றை முழுக்கச் சொல்லிப் பாராட்டினார். அந்தப் பாடல்:

நெய் அபிஷேகம் ஜமாய்க்கிறே – என்னை
எத்தன நாளா டபாய்க்கிறே
பொய்யில் அமுக்கிப் புழுதியிலே என்னைப்
புரள விட்டு நீ ஏய்க்கிறே – விட்டுப்
போவானான்னு பாக்குறே

சங்கீதம் தெரிஞ்ச சாஸ்திரக் காரங்க
சந்தோஷமா ஒன்னப் பாடுறாங்க
சங்கோஜங் கொண்ட பேர்வழிங்க – சத்தம்
போடாம ஒன்னத் தேடுறாங்க
எல்லாரும் ஒண்ணாக் கூடுறாங்க
வில்லாளி வீரன்னு கூவுறாங்க
வாச்சாலம் நானும் பழகலே – ஓன்
வீராப்பும் எனக்கு வெளங்கலே

வெளிச்சமில்லாத சாலையிலே – ஆள்
அரவமில்லாத மூலயிலே – வெத்துக்
காயிதமா நான் கெடக்குறேன் – ஓன்
கைபடத்தான் படபடக்குறேன்
பளிச்சுனு என்ன நீவிப்புட்டு – ஒரு
பாட்டெழுதிக் கைநாட்டுவை
பத்துத் தலமொறைக் கதுபோதும் – மக்கள்
பாடுவாங்க நீ கேட்டுவை

காட்டுல போயி குந்திக்குற – கண்ண
மூடிக்கிட் டேதோ சிந்திக்குற – நான்
பாட்டுக்குப் படுத்துத் தூங்கையிலே – ஒரு
பாட்டாக வந்து சந்திக்கிற

நெய் அபிஷேகம் ஜமாய்க்கிறே – என்னை
எத்தன நாளா டபாய்க்கிறே
மெய்யும் பொய்யும் கலந்துவச்சு – நான்
மெரள மெரள சதாய்க்கிறே.

மனம்திறந்து பாராட்டி விட்டுப் பேசி முடித்த பிறகு என் காதருகே வந்து ரகசியமாக மிரட்டினார்: “ராஜகோபாலா ஒங்கம்மா தோச வாத்தாளான்னு நீ சினிமாவுக்காக ஒரு ஆபாசப் பாட்டு எழுதினேன்னு மைக்குல சொல்லட்டுமா?” சிரித்துக் கொண்டேன்.

நானும் அவரும் சந்தித்துக் கொண்ட போதெல்லாம், ஏதாவது எடக்கு முடக்காகவோ, பொய்க்கோபத்துடனோ என்னிடம் அவர் பேசியிருந்தாலும் அவருக்கு என் மீது அன்பும், பற்றும் இருந்ததை நான் உணரத் தவறவில்லை.

பிறகு ஓரிரு நிகழ்ச்சிகளில் நாங்கள் சந்தித்துக் கொண்டிருந்தும் அதிகம் பேசவில்லை. அவருக்கு வானவில் பண்பாட்டு மையத்தின் பாரதி விழாவில் ‘பாரதி விருது’ வழங்கிய போது, சாதரணமாக விருதுகள் பெறத் தாம் சம்மதிப்பதில்லை என்ற போதிலும், பாரதி பெயரால் தரப்படும் விருது என்பதாலும், நான் அழைத்த காரணத்தாலும் தாம் விருது பெற்றுக் கொள்ள வந்ததாகப் பேசி, என் மீது அவருக்கு இருந்த அன்பை உறுதிப் படுத்தினார்.

அவர் இறைவனடி சேர்வதற்கு மூன்று வாரங்களுக்கு முன் அவருடன் நான் தொலைபேசியில் பேச வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. என் சகோதரி மகள் ஸ்வர்ணமால்யா, “நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்” என்ற தன் நாட்டிய நாடகத்தை ஒளிப்பேழையாக , அதாவது, டி.வி.டி யாகக் கொண்டுவர இருப்பதால், அதற்கு வாலி அவர்களின் முன்னுரை பெற்றுத் தர வேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டாள். அது குறித்துத்தான், நான் வாலி அவர்களைத் தொலைபேசியில் கேட்டேன். அவர் சொன்னார்: ” ரவி, இப்போதெல்லாம் நான் போகிற வழிக்குப் புண்ணியம் தரக்கூடிய கடவுள் சம்பந்தமான விஷயங்களைத் தவிர வேறெதையும் படிப்பதில்லை. சிலப்பதிகாரமெல்லாம் இப்பொழுது படித்துப் பார்க்கும் மனநிலையில் நான் இல்லை” என்றார். நான் சொன்னேன், ” நீங்கள் இப்படிச் சொல்லலாமா? உங்களுக்குத் தெரியாததா? நானறிந்தவரை சிலப்பதிகாரம் ஒரு சிறந்த பக்தி இலக்கியம். ஆய்ச்சியர் குரவையில் எப்படியெல்லாம் திருமாலைப் போற்றியுள்ளார் இளங்கோவடிகள்!” என்று கூறிவிட்டுத் தொலபேசியிலேயே, “சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே”, “நாராயணா என்னா நாவென்ன நாவே” ஆகிய வரிகளைச் சொல்லி, உங்கள் ஆழ்வார்களுக்கெல்லாம் முன்னோடி இளங்கோ சார்” என்று நான் சொன்னதும் சிறிது மெளனத்துக்குப் பிறகு அவர் சொன்னார்: ” சரி ரவி, நாளை நான் என் ஆச்சாரியன் அழகிய சிங்கர் மீது ஒரு காவியம் வெளியிடுகிறேன், ம்யூஸிக் அகடமியில், அங்கே வந்துவிடு பேசுவோம்” என்றார்.

ஏதோ காரணம் மறுநாள் நான் அந்த விழாவுக்குப் போக முடியாமல் தடுத்து விட்டது. அதற்கு மறுநாளே அவருக்கு உடல்நிலை பாதிக்கப் பட்டதையும் இரண்டு வாரங்களில் அவர் நம்மைப் பிரிந்ததையும் இன்னும் நினைத்து வருந்துகிறேன்.

அவருடைய கள்ளம் கபடமற்ற கவிதையுள்ளம் நான் நன்கு அறிவேன். புன்னகை என்பது இதயத்தோடு தொடர்புடையது, காதலியின் கன்னமோ காதலனின் கையோடு தொடர்புடையது என்ற நுட்பத்தை மிக எளிமையாக அவர் பாடியுள்ளதை நினைவு கூர்ந்தால், திரைப்படப் பாடல்கள் இலக்கிய சம்பந்தம் அற்றவை என்ற பேச்சுக்கே இடமில்லை. பாடுவோமே:

“இந்தப் புன்னகை என்ன விலை – என்
இதயம் சொன்ன விலை – இவள்
கன்னங்கள் என்ன விலை – இந்தக்
கைகள் தந்த விலை”.

தொடரும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *