கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ? – கவிதை

4

–தேமொழி.

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ?

Maya Angelou

கவிதை  மூலம் – மாயா ஆஞ்சலூ
மொழிபெயர்ப்பு – தேமொழி

 

 

சுதந்திர பறவை வேகமெடுத்து
காற்றில் பாய்ந்தது,
காற்றோட்டத்தின் எல்லை வரை
காற்றில் மிதந்தது,
செங்கதிரின் வண்ணத்தில் தன்
சிறகைத் தோய்த்து
வானம் எனக்கே  சொந்தம்
என எண்ணத் துணிந்தது

கூண்டுப் பறவையோ குறுகிய
கூண்டில் கொதிப்புடன் உலவியது,
பொங்கி வரும் ஆத்திரம்
அதன் கண்ணை மறைத்தது,
சிறகொடிந்து கால்கள் கட்டுண்டதால்
குரலெடுத்துப்  பாட முனைந்தது

கூண்டுப்பறவை பாடுகிறது
அச்சத்துடன் நடுங்கும் குரலில்
அனுபவிக்காதவற்றை  எண்ணி
மனம் விரும்பும்  ஏக்கத்தில்.
அந்தப் பாடல் எதிரொலித்தது
தொலை தூரத்து  மலையில்
கூண்டுப்பறவையின்  வேட்கை
தொனிக்கும் விடுதலைப் பாடல்

சுதந்திர பறவை மற்றொரு
இளந் தென்றலை நினைந்தது
அசையும் மரங்களின் பெருமூச்சாய்
மெல்லத் தவழ்ந்து   செல்லும்
பருவக் காற்றை நினைந்தது
காலைக்கதிரொளியில்
ஒளிர்ந்திடும் புல்வெளியில்
ஊர்ந்திடும் கொழுத்தபுழு
உணவை மனதினில்  நினைந்தது
இந்த வானமே எனதென மகிழ்ந்தது

கூண்டுப்பறவையோ கனவுகளின்
கல்லறை மேடையில் நின்றது
பயங்கரக் கனவின் அலறலாக
அதன் நிழல்  ஓலமிட்டது
சிறகொடிந்து கால்கள் கட்டுண்டதால்
குரலெடுத்துப்  பாட முனைந்தது

கூண்டுப்பறவை பாடுகிறது
அச்சத்துடன் நடுங்கும் குரலில்
அனுபவிக்காதவற்றை  எண்ணி
மனம் விரும்பும்  ஏக்கத்தில்.
அந்தப் பாடல் எதிரொலித்தது
தொலை தூரத்து  மலையில்
கூண்டுப்பறவையின்  வேட்கை
தொனிக்கும் விடுதலைப் பாடல்

 

மாயா ஆஞ்சலூ கவிதைகளின் மொழி பெயர்ப்பு:
நான் எழுவேன் !!! (Still I Rise – Poem by Maya Angelou)
கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ? (Caged Bird – Poem by Maya Angelou)
தனிமையிலே … (Alone – Poem by Maya Angelo)

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ? – கவிதை

 1. பாடும் பறவை
  பாடியது
  தன் பாட்டையா
  தான் பட்ட பாட்டையா?

  ஏக்கங்கள் என்பதே
  குத்திடும் தாக்கங்கள் தானே!

  விடுதலை பெற்ற பறவை
  சென்றதோ சோலைக்கு
  அது பெரும் மதிப்பும்
  ஆராதனையானது
  அதன் (அவளின்) கவிதைகளின் கலைக்கு.

 2. கருத்துரைக்கு மிக்க நன்றி தனுசு.

  என்ன ஒரு அருமையான அஞ்சலிக் கவிதையை அம்மையாருக்கு நீங்கள் எழுதியுள்ளீர்கள்!!!!!!!!

  விடுதலை பெற்ற பறவை
  சென்றதோ சோலைக்கு
  அது பெரும் மதிப்பும்
  ஆராதனையானது
  அதன் (அவளின்) கவிதைகளின் கலைக்கு.

  உண்மை…, புகழ் பெற்ற ஆங்கில இலக்கிய கவிதைகளின் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடிப்பதும், அமெரிக்க தலைவர்களின் பதவியேற்பில் கவிதை வாசித்து வாழ்த்துவதும் சுலபமாக எவரும் அடையக் கூடியதா என்ன?

  அவரின் உணர்ச்சி பொங்கும் கவிதை அவரை புகழின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது, கவிதைகளில் காணும் சமூக அக்கறை அவரை சேற்றில் பிறந்த செந்தாமரை, சிப்பியில் பிறந்த முத்து போன்ற வரிசையில் அடையாளம் கண்டு மிகச் சாதாரண நிலையில் இருந்த அவரை எண்ணமுடியாத உயரத்திற்குக் கொண்டு சென்றது.

  கவிதையைப் படித்து கருத்து பகிர்ந்துகொண்டதற்கு மீண்டும் நன்றி தனுசு.

  அன்புடன்
  ….. தேமொழி

 3. ஒர் அருமையான கவிதையை மிக அழகாகத் தமிழாக்கம் செய்து தந்திருக்கும் சகோதரி தேமோழியை மனமார வாழ்த்துகிறேன். கே.ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *