–தேமொழி
நான் எழுவேன் !!!
கவிதை மூலம் – மாயா ஆஞ்சலூ
மொழிபெயர்ப்பு – தேமொழி
நீ வரலாற்றில் என்னைப் பற்றி எழுதலாம்
உனது கசப்பான சரடுகளை
நீ என்னை மண்ணோடு மண்ணாகப் புதைக்கலாம்
எனினும், நான் தூசு போல மேலெழுவேன்
எனது துடுக்குத்தனம் எரிச்சலூட்டுகிறதா?
எதனால் நீ சோர்வில் மூழ்கினாய்?
வீட்டிலேயே எண்ணைக் கிணறுள்ள செல்வச்
சீமாட்டிபோல நான் வலம் வருவதாலா?
நிலவினைப்போல கதிரவனைப் போல
நிரந்தரமான அலைகளைப்போல
மேலெழும் நம்பிக்கை போல
நானும் மேலெழுவேன்
என்னை மனமுடைந்தவளாகக் காண விருப்பமா?
கவிழ்ந்த தலையுடன் தாழ்ந்த கண்களுடன்
தொங்கிய தோள்களையும் உறுதியிழந்து உயிரை
உருக்கும் அழுகையையும் என்னிடம் எதிர்பார்த்தாயா?
எனது செருக்கு உன்னைப் பாதிக்கிறதோ?
அதனைக் கண்டு நீ சோர்வு கொள்ளாதே
ஏனெனில் நான் நகைப்பேன் என் வீட்டுத்
தோட்டத்தில் தங்கச்சுரங்கம் வைத்திருப்பவள் போல
நீ என்னைத் தாக்கலாம் உன் சொற்களால்
நீ என்னை கண்டிக்கலாம் உன் பார்வையால்
நீ என்னைக் கொல்லவும் செய்யலாம் உன் வெறுப்பால்
எனினும், உயரும் காற்றாக நான் மேலெழுவேன்
எனது கவர்ச்சி உன்னை வருத்துகிறதா?
எனது துள்ளாட்டம் வியப்பளிக்கிறதா?
மடியிலேயே வைரச் சுரங்கம் கொண்டவள் போல
நானாடும் நடனம் வியப்பளிக்கிறதா?
வரலாற்றின் அவமானக் குடில்களில் இருந்து
நான் எழுவேன்
வேரூன்றிப் போன கடந்த காலத்தின் வலிகளில் இருந்து
நான் எழுவேன்
கொந்தளித்து எழும்பும் அலைகளுடன்
நானொரு பரந்து விரிந்த கருங்கடலாக
இரவுகளின் திகிலையும் அச்சத்தையும் பின்தள்ளி
நான் எழுவேன்
புலரும் வேளையில் தெளிவான பொழுதில்
நான் எழுவேன்
என் முன்னோர் வழங்கிய பரிசுகளுடன்
ஒரு அடிமை காணும் கனவாக, நம்பிக்கையுமாகவும்
நான் எழுவேன்
நான் எழுவேன்
நான் எழுவேன்
மாயா ஆஞ்சலூ கவிதைகளின் மொழி பெயர்ப்பு:
நான் எழுவேன் !!! (Still I Rise – Poem by Maya Angelou)
கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ? (Caged Bird – Poem by Maya Angelou)
தனிமையிலே … (Alone – Poem by Maya Angelo)


Leave a Reply