-க. பாலசுப்ரமணியன்
போதிமரத்தடியில் புனிதமாய் ஒளிரும் பேரொளி
புன்னகையைக் கண்களில் செதுக்கிய புதுமொழி
புலனடக்கி மனமடக்கி புவிவென்ற நல்வழி
புரியாத வாழ்க்கைக்கு வழிகாட்டும் அன்புநெறி!
கரைகடந்த வெள்ளமென நிலைமறந்து தவித்துடுமே
கள்ளுண்ட போதையெனக் கலங்கிடும் ஆசைமனமே!
உள்ளடங்கா மாந்தருக்கு உடலென்றும் போர்க்களமே
உண்மை உணர்த்த வந்ததுவே போதிசத்வமே!
சித்தனில்லை புத்தனவன் விவேகத்தின் எல்லை
மோகமில்லை முக்தனவன் முடிதுறந்த முல்லை
சோகமில்லை சுந்தரனே சுகம்விடுத்த பாதை
தேடவில்லை தேறியவன் தானறிந்த உலகமறை!
வானுயரப் புகழ்வந்தும் வாடிவிடும் மானுடமே!
ஊனுருக நாடிச்சென்றால் உண்மை ஒளிர்ந்திடுமே!
தானறியத் தனித்திருந்தால் நிகரில்லாத் தவமே!தானடங்கிய உள்ளத்தில் தெளிவது அன்புமயமே!


Leave a Reply