நாளெல்லாம் மகிழ்ந்திருப்போம் !
( எம் .ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா )
மாநிலத்தில் நாமுயர ஏணியாய் இருந்தார்கள்
மாசகற்றி எம்மனதை மாண்புபெறச் செய்தார்கள்
தாம்படித்து எமக்களித்து தலைநிமிர வைத்தார்கள்
தாமுரமாய் ஆகிநின்றார் தலைசிறந்த ஆசான்கள் !
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமானார்
ஆசான்கள் எம்வாழ்வில் அனைத்துக்கும் தெய்வமானார்
ஆன்மாவை தூய்மையாய் ஆக்கிவிடும் அவர்களின்
அடியினைத் தொழுதுநாம் அவராசி பெறுவோமே !
வாழ்வெனும் பாதையில் வழுக்கிடா வண்ணம்
தாழ்வெனும் சிக்கலில் மாட்டிடா வண்ணம்
ஆளுமை எம்மிடம் வளர்ந்திடும் வண்ணம்
ஆற்றலை வளங்குவார் ஆசான்கள் அன்றோ !
நீதிநெறி நடவென்பார் நெஞ்சைதூய்மை ஆக்குவென்பார்
போதனைகள் பலசொல்லி பொறுப்பதனை உணர்த்திடுவார்
பேதமிலா மனம்வளர பெருங்கதைகள் பலவுரைப்பார்
பாதகங்கள் களைந்தெறிவார் பண்புநிறை ஆசான்கள் !
பாகற்காய் படிப்பையெலாம் பக்குவமாய் எமக்காக
பதப்படுத்தி சுவையேற்றி பதியவைப்பார் நல்லாசான்
சோதனைகள் வந்தாலும் சுமையின்றி நாம்படிக்க
சாதகமாய் வழிசொல்வார் சரியான ஆசான்கள் !
பள்ளிசென்று நாம்படிக்க உள்ளமதில் ஆசைதனை
மெல்ல மெல்ல நுழைப்பதற்கு நல்லவழி கண்டுநிற்பார்
கள்ளமனம் கரைந்தோட கனிவுடனே வகுப்பெடுத்து
உள்ளமதில் அமர்ந்திடுவார் உண்மைநிறை ஆசான்கள் !
ஒருநேரம் அடித்தாலும் பலநேரம் அரவணைப்பார்
சிலநேரம் திட்டிடினும் அருள்வாக்காய் அமைந்துவிடும்
குறைகண்டு விட்டாலும் நிறைவாக்க நினைந்திடுவார்
அறிவுடனே அணுகிடுவார் அன்புநிறை ஆசான்கள் !
பட்டம்பல பெற்றாலும் பதவிதனில் உயர்ந்தாலும்
படிப்பித்த ஆசான்கள் பக்கத்தில் இருப்பார்கள்
அவர்களது ஆசிகளும் அவர்களது வாழ்த்துகளும்
அனைத்துமே எமையிப்போ அகமகிழ வைக்கிறதே !
நல்லாசான் வாய்த்துவிட்டால் நமெக்கென்றும் ஒளிமயமே
நல்லாசன் நம்வாழ்வில் நாழுமே வந்துநிற்பார்
நல்லாசன் கிடைத்தவர்கள் நாளுமே உயர்ந்திடுவார்
நல்லாசான் வாழ்த்துப்பெற்று நாளெல்லாம் மகிழ்ந்திருப்போம் !

ஆற்றலை வளங்குவார் ஆசான்கள் – வாழ்வெனும் பாதையில் வழுக்கிடா வண்ணம்
தாழ்வெனும் சிக்கலில் மாட்டிடா வண்ணம்
ஆளுமை எம்மிடம் வளர்ந்திடும் வண்ணம்
ஆற்றலை வளங்குவார் ஆசான்கள் அன்றோ என்ற உன்னதமான வரிகள். அழகுர கவிதை எழுதிய திரு. எம் .ஜெயராமசர்மா எனது மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி வணக்கம்