படக்கவிதைப் போட்டி – 214

அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

கே.மோகன்தாஸ் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் செவ்வாய்க்கிழமை (04.06.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

Share

Comments

One response to “படக்கவிதைப் போட்டி – 214”

  1. sundar

     
         வளையணி பெருவிழா
    அழகே,
    பிறைநிலவே,
    பைந்தமிழை
    கருவாக உருவாக்கிய
    செம்மொழியே…..!
    மழலை பருவத்தில்
    மதிலேறி
    தாவணி பருவத்தில்
    தடம் பதித்து
    சிறிய கனவுகளை சுமந்து
    உலா வந்த சிட்டுக்குருவியே….!
    உன்னை சிறைபிடிக்க
    மணக்கோலம் கொண்டு
    நானும் வந்ததன் பேராசை?
    என் வீட்டின் அரியணையில்
    மகாராணியாக உன்னை ஒருமனதாக
    பிரகடனம் செய்தோம்.
    என் கனவுகளை உன்
    நினைவில் புகுத்தி
    நான் இளைப்பாற
    உன் மடி தந்தாய்,
    ஒருநாளும் ஓய்வின்றி
    உன் நிழலை அலையவிட்டாய்,
    நம் குலம் தழைக்க
    நீ சிந்திய வெட்கத்தால்
    மகிழ்ச்சி கடலில் மூழ்கவைத்தாய்,
    அள்ள அள்ள குறையாத
    மகிழ்ச்சியை அள்ளி தரும்
    தங்கசுரபியை தாரமாக்கிய
    கைம்மாறு கனியும் நேரம் இதுதானோ-?
    உன் ஆசைகளை அரங்கேற்றி,
    என் சேவையை உனதாக்கி,
    ஊர் கூடி உற்றார் – உறவினர்
    உன்னை வாழ்த்தி
    அரிதாரம் பூசிய நிறைமாத கனியே,
    இத்தருனம் நான்இடும் சந்தனமும்
    உனக்கான சத்தியமே,
    உன் கைகளில் நான் சூடும்
    வளையணிப்போல் மென்மேலும்
    உன்னை மெருகேற்றி பாதுகாவலனாய்
    அனுதினமும் நான் சுமப்பேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *