நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-48
–நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-48
48. வலியறிதல்
குறள் 471:
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்
காரியத்தோட வலிமையும், அத செய்ய நெனக்குத தன்னோட வலிமையும், அத கெடுக்கணும்னு நெனக்கவன் வலிமையும், ரெண்டு பேருக்கும் தொணையா நிப்பாம்னு தோணுதவனோட வலிமையும் ஆராஞ்ச பொறவுதான்அந்த காரியத்த செய்யணும்.
குறள் 472:
ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்
தன்னால முடியுத காரியத்த செய்யுமுன்ன அத செய்யுததுக்கு தேவையானத அறிஞ்சிக்கிட்டு பொறவு செய்ய முனஞ்சாம்னா அவனால முடியாததுனு எதுவும் இல்ல.
குறள் 473:
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்
தன்னோட பலம் இவ்ளோதான்னு அறிஞ்சிக்கிடாம உணச்சி வசத்தால காரியத்த தொடங்கிப்போட்டு பொறவு பாதியில கெடப்புல போட்டு அழிஞ்சவங்க பலபேரு இருக்காக.
குறள் 474:
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்
தன்னோட பலத்த உணந்துக்கிடாம, பிறத்தியாரோடயும் ஒத்துப் போவாம தன்னையப் பத்தி பெரிசா நெனச்சி மண்டக்கனம் புடிச்சு அலையுதவன் வெரசலா அழிஞ்சு போவான்.
குறள் 475:
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்
மயில் தோகதானே ன்னாலும் அளவுக்கு அதிகமா வண்டியில ஏத்தினா வண்டியோட அச்சு முறிஞ்சு போவும்.
குறள் 476:
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்
மரத்தோட நுனிக் கொம்புல ஏறிக்கிட்டவன் அதுக்கும் மேல ஒசரத்துல ஏற மொனஞ்சாம்னா அது அவனோட உசிருக்கு முடிவா வந்து சேரும்.
குறள் 477:
ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி
எதப் பொறத்தியாருக்கு குடுக்கும்போதும் தன்னோட சம்பாத்யத்த அறிஞ்சிக்கிட்டு அளவா குடுக்கணும். அப்டி கொடுக்குததுதான் பொருளச் சேத்து காப்பாத்தி வச்சிக்கிட்டு குடுக்குத வழிமுறை.
குறள் 478:
ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை
சம்பாத்யம் கொறச்சலா இருந்தாலும் வரம்பு மீறின செலவு இல்லாம இருக்குதது நல்லது.
குறள் 479:
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்
தன் சொத்தோட மதிப்ப அறிஞ்சுக்கிட்டு ஏத்தாப்போல வாழாதவனோட வாழ்க்க வளம் இருக்குதது போல தோணினாலும் இல்லாம அழிஞ்சு போவும்.
குறள் 480:
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்
தங்கிட்ட எம்புட்டு இருக்குனு பாராம மத்தவுகளுக்கு ஒதவி செஞ்சிக்கிட்டே இருக்கவனோட செல்வம் சுருக்க அழிஞ்சு போவும்.
(அடுத்தாப்லயும் வரும்…)