கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை!
-நாகேஸ்வரி அண்ணாமலை
நேத்தன்யாஹுவுக்கு மாபெரும் வெற்றியாகக் கருதப்பட்ட தேர்தல் வெற்றி இப்போது செல்லாததாகிவிட்டது. மே மாதம் 29-ஆம் தேதி நள்ளிரவுக்குள் மந்திரிசபை அமைக்க வேண்டும் என்ற கெடு கடந்துவிட்டது. அவருடைய கட்சிக்கு 35 இடங்கள் கிடைத்தன. இன்னும் 26 இடங்களைப் பெற்று அமைச்சரவை அமைப்பதற்கு முடியாமல் போயிற்று. இஸ்ரேல் பார்லிமென்டில் மொத்தம் 120 இடங்கள். மந்திரிசபை அமைப்பதற்கு 61 இடங்களாவது வேண்டும். அதைக்கூட அவரால் பெற முடியவில்லை. எப்படியோ முயன்று மற்றக் கட்சிகளோடு சேர்ந்து 60 இடங்களைப் பிடித்துவிட்டும் இன்னும் ஒரேயொரு சீட் வேண்டியிருந்ததால் மந்திரிசபை அமைக்க முடியாமல் போனது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போயிற்று என்று சொல்வோமே அப்படித்தான் நடந்திருக்கிறது.
நேத்தன்யாஹு மந்திரிசபை அமைக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் ஒரு காலத்தில் அவருடைய மந்திரிசபையில் ராணுவ மந்திரியாகவும் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்த லிபெர்மேன் என்பவர். மால்டோவாவிலிருந்து வந்து இஸ்ரேலில் குடியேறிய இவர். நேத்தன்யாஹுவுக்கு உதவியாளராக அரசியலில் நுழைந்து படிப்படியாக முன்னேறி இப்போது கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் அளவுக்கு அரசியலில் உயர்ந்திருக்கிறார். இப்போது நேத்தன்யாஹுவுக்கு மிகவும் வேண்டாதவராக மாறியிருக்கிறார்.
நேத்தன்யாஹு மேல்மூன்று வழக்குகள் – ஊழல் புரிந்தது, லஞ்சம் வாங்கியது, நம்பிக்கைத் துரோகம் செய்ததுஎன்று பலவகைக் குற்றச்சாட்டுக்கள் – இருக்கின்றன. இப்படி வழக்குகளில் சிக்கிக்கொண்டவருக்கு ஆதரவு கொடுக்க சிறிய கட்சிகள் எதுவும் முன்வரவில்லை. இதைச் சாக்காக வைத்து நேத்தன்யாஹுவின் லிக்கூட் கட்சி மந்திரிசபை அமைத்து அவருக்கு முதல் மந்திரி ஆகும் வாய்ப்பைத் தடுத்து நிறுத்த முயல்கிறார் லிபெர்மேன் என்பது நேத்தன்யாஹுவின் வாதம்.
அவருக்கும் நேத்தன்யாஹுவுக்கும் இடையே இன்னொரு பிரச்சினை இருக்கிறது. இஸ்ரேலில் 18 வயது முடிந்த ஆண், பெண் அனைவரும் இரண்டு வருடங்களுக்கு கட்டாய ராணுவ சேவை செய்ய வேண்டும். யூத மத்தத்தின் வேதமான தோராவைப் படிப்பவர்களுக்கும் அதை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பவர்களுக்கும் மாத்திரம் இதிலிருந்து விலக்கு உண்டு. அவர்களுக்கு விலக்களிக்கத் தேவையில்லை என்று கூறி ஒரு சட்டத்தை இயற்ற லிபெர்மேன் ஒரு மசோதாவைக் கொண்டுவந்தார். இந்தச் சட்டம் நிறைவேறாமல் தடுக்கும் கூட்டணி அரசோடு எப்படி சேருவது என்பது லிபெர்மேனின் வாதம். இப்போது இவருக்குத் தனியாக ஒரு கட்சி இருக்கிறது.அந்தக் கட்சிக்கு ஐந்து இடங்கள் கிடைத்திருந்தது. (இஸ்ரேலில் ஏகப்பட்ட அரசியல் கட்சிகள்)
நேத்தன்யாஹு முதல் முறையாக 1996-1999 வரை இஸ்ரேல் பிரதம மந்திரியாக இருந்தவர். அதன் பிறகு 2009 முதல் மார்ச்சில் நடந்த தேர்தல்வரை பிரதம மந்திரியாக இருந்தவர். அடுத்த தேர்தல் நடக்கும்வரை இடைக்கால அரசின் பிரதமராக இருப்பார். தேர்தலில் 35 சீட்டுகளே பெற்ற இவர் மூன்று முறை பிரதமராக பதவி வகித்த பிறகு இப்போது முதல் முறையாக மந்திரிசபை அமைக்க முடியாமல் போனது. இவரோடு கூட்டுச் சேர வந்த கட்சிகளின் மூலம் இவருக்கு 60 சீட்டுகள்தான் கிடைத்தது. மே மாதம் 27 இரவு 12 மணிவரை இருந்த கெடுவிற்குள் இவரால மந்திரிசபை அமைக்க முடியாமல் போனதால் கெடு முடிந்தவுடனேயே பார்லிமென்டைக் கலைத்துவிட்டார். ஜனாதிபதி வேறு ஏதாவது கட்சியை மந்திரிசபை அமைக்க முயற்சிக்குமாறு கேட்டுவிடுவாரோ என்று நினைத்துத்தான் அவசரமாகப் பார்லிமென்டைக் கலைத்தார்.
பார்லிமென்டைக் கலைத்துவிட்டு லிபெர்மேன் தன்னுடைய கூட்டணியில் சேர்ந்திருந்தால் தான் மந்திரிசபை அமைத்திருக்கலாம் என்றும் தனக்குப் பிரதம மந்திரி பதவி கிடைக்கக் கூடாது என்பதற்காகத்தன் அவர் நேத்தன்யாஹு கூட்டணியில் சேரவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
மே மாதம் 30-ஆம் தேதி இரவு 12 மணியோடு அமைச்சரவை அமைக்க நேத்தன்யாஹுவுக்குக் கொடுத்த கெடு முடிந்துவிட்ட நிலையில் அன்று காலை ட்ரம்ப்பின் மருமகனும் மத்திய கிழக்கு ஆலோசகருமாகிய ஜேரட் குஷ்னரும் வெள்ளை மாளிகை அதிகாரியுமான ஜேஸன் கிரீன்ப்ளாட்டும் அடுத்த மாதம் பாஹ்ரைனில் நடக்கவிருக்கும் பாலஸ்தீன அமைதிக்கான திட்டங்களை வகுக்கப் போகும் மாநாட்டில் கலந்துகொள்ள ஜெருசலேம் வந்திருக்கிறார்கள். அப்போது இரவு கெடு முடிந்துவிட்டதைப் பற்றிக் குறிப்பிடுகையில்,‘நேற்று இரவு ஏதோ ஒரு சிறிய சம்பவம் நடந்திருக்கிறது. அது பற்றி ஒன்றும் கவலையில்லை. நாங்கள் தொடர்ந்து செயலாற்றுவோம்’ என்று நேத்தன்யாஹு குறிப்பிட்டார். காலை தொலைக்காட்சி அறிக்கையில் இஸ்ரேல் தான் இல்லாமல் இயங்க முடியாது என்பது போலவும் தனக்கு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் ஆகிய இருவரின் ஆதரவு இருப்பது போலவும் பேசினார். தன்னுடைய சொந்த நலனுக்காக லிபெர்மேன் வலதுசாரி அரசைக் கவிழ்த்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்த கேன்ட்ஸ் கட்சியும் 35. சீட்டுகளைப் பெற்றிருக்கிறது. நேத்தன்யாஹு பார்லிமென்ட்டைக் கலைக்காமல் இருந்திருந்தால் அவர் அமைச்சரவையை அமைத்திருக்கலாமோ என்னவோ. நேத்தன்யாஹு மேல் வழக்கு நடக்கவிருப்பதால் நேத்தன்யாஹுவோடு சேர்ந்து அமைச்சரவை அமைக்க அவர் விரும்பவில்லை.
செப்டம்பர் 17-ஆம் தேதிக்கு அடுத்த தேர்தல் நடப்பதாக இருக்கிறது. சென்ற தேர்தலில் ஜெயித்திருந்தால் பதவியில் இருக்கும் பிரதம மந்திரியின் மீது குற்றம் சுமத்த முடியாது என்று ஒரு சட்டம் கொண்டுவர நேத்தன்யாஹு திட்டம் போட்டிருந்தார். இப்போது அது முடியாமல் போய்விட்டது. இனி செப்டம்பர் 17 தேர்தலில் ஜெயித்தால் அதை முயன்று பார்க்கலாம். ஆனால் அதற்கு நேரம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஏனெனில் அக்டோபரில் நேத்தன்யாஹு மேல் இருக்கும் வழக்குகளை விசாரிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தேர்தலில் ஜெயித்தாலும் அந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவகாசம் இருக்குமா என்று தெரியவில்லை.
இஸ்ரேலில் இன்னொரு தேர்தல் நடந்து யார் பதவிக்கு வரப் போகிறார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். எல்லா அரசியல் தலைவர்களும் பாலஸ்தீனர்களுக்கு எதிராகத்தான் செயல்படுவார்கள். லிபெர்மேன் என்ன சொல்கிறார் தெரியுமா? காஸாவை இன்னும் அதிகமாகத் தண்டிக்க வேண்டுமாம். இவர்கள் பயங்கரவாதிகள் என்று கணிக்கும் எல்லோருக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டுமாம். இப்படித்தான் எல்லா இஸ்ரேல் தலைவர்களும் நினைக்கிறார்கள். யார் வந்தாலும் பாலஸ்தீனர்களுக்கு நியாயம் கிடைக்கப் போவதில்லை. இஸ்ரேல் அரசியல் தலைவர்கள் மத்தியில் ஒரு காந்திஜி தோன்றினால்தான் பாலஸ்தீனர்களுக்கு நியாயம் கிடைக்கும்.