Month: April 2015

  • அந்தகாரத்துக்கு முன்பு

     

    – சந்திரகுமார விக்ரமரத்ன

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

     Untitled 12(113)

    வாசலருகே மலர்ச்செடியின்

    பூக்களுக்கு வரும் வண்ணத்துப் பூச்சிகளே

    கொழும்புக்குச் செல்லும் வழி அறிவீரோ

    அம்மாவின் மரணத்துக்காக இன்றிரவு

    பாடப்படப்போகும் போதனை கீதங்களை

    கொழும்புக்குச் சென்று

    அப்பாவிடம் உரைப்பீரோ

     

    அமாவாசைக் கனவுகள் வந்து

    தம்பியை அச்சுறுத்துகையில்

    நள்ளிரவில் தாலாட்டுக் கவிகள் பாட

    யாருமில்லை வீட்டில் இப்பொழுது

    இன்றிரவு சொந்தங்கள்

    எம் குடிசையில் விழித்திருப்பர்

    எவ்வாறிருக்குமோ நாளை

    நாம் உணரும் அந்தகார இருள்

     

    வண்ணத்துப் பூச்சிகளே

    மெதுமெதுவாக

    மறைந்துகொண்டிருக்கிறான் சூரியன்

    இனி

    பாழடைந்த வெண்ணிலவின் உச்சியில்

    உறைந்துவிடும் அம்மாவின் வாசனை

    அனைத்தும் வீழ்ந்தழிவதற்கு முன்பு

    மயானத்துக்கு வந்து நாளை

    கூட்டிச் செல்லுங்கள் அப்பா

    சிறைச்சாலைக்கு எம்மையும்

     

    – சந்திரகுமார விக்ரமரத்ன

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

    Share
  • சிலவரிக் கவிதைகள்!

    -பத்மநாபபுரம் அரவிந்தன்

    பறவைகளின் உடல்
    மறைக்கும் உடைத்
    தூவல்கள்…

    எப்பொழுது வரவேண்டுமென்று             ARAVINDHAN BOOK
    மயிலிடம் கேட்கிறது
    மழைக்குமுன் சிறு தூவல்…

    சேவலே கூவிவிடாதே
    இன்னமும் நேரமிருக்கிறதென்கிறது
    விடியலுக்கு முன்பான இருட்டு…

    உனக்காகத்தானே
    இத்தனை நாட்கள்
    காத்துக் கிடந்தேனென்று
    ஓடி வந்துக் கலக்கிறது
    குட்டையில் மழைநீர்…

    பொறுத்திரு சிலநாட்கள்
    முழுமையாய் வருகிறேன்
    மேகத்திடம் சொல்கிறது
    வளர் பிறை…

    தலை சுற்றச் சுற்ற
    காற்றள்ளி வீசுகிறது
    மின் விசிறி…

    தொலைதூரம் ஓடிவந்து
    படுக்கையில் கிடக்கிறது
    கனவு…

    உதடும் கோப்பையும்
    உரசிக்கொள்ளக்
    கள்வெறி கொள்கிறது
    மது…

     

    Share
  • நயம் விரும்பும் மனம்!

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    நயம் ஒன்றே விரும்பும் மனம்
    யெயம் காணத் துடிக்கும் தினம்
    பயமற்ற தன்னம்பிக்கைத் தூணெனும் மனம்
    சுயமழியாது காக்கும் தனம்!

    இன்ப மேகங்கள் சுகமான சுமையாய்
    அன்பின் இராகமாய் புது அனுராகமாய்
    இன்னிதழ்களின் எழில்மிகு நடனத்தில்
    மென்னகைப்பது கண்களில் நிதரிசனம்!

    வினைமனத் தினப்போரின் வில்லங்கப்
    பிணைதலில் விதி யென்று கூறிடும்
    புனையால் மனம் இறுகிடும்; இளகிய
    நினைவு இன்பம் சேர்ப்பதியல்பு!

     

    Share
  • இதயம் கவர்ந்தவன்!

    -திருக்குவளை மீ.லதா

    உன்  காந்தப் பார்வையின் இழுப்பட்ட விசையால்
    இடம் மாறியது எனது இதயமடா!
    விலகி செல்லும் போது வீணாய் அழைத்து போனது
    உன் பின்னால் என் மனமும்!

    உடைகளின் வண்ணத்தின் ஒற்றுமை
    நம் எண்ணத்தின்ஒற்றுமையைப்
    பறைசாற்றிய  நாட்கள் எத்தனை!

    காத்திருப்பில் கரைந்துபோன காலங்களில்
    உன்னுடன் பேசிய  நினைவுகள்
    உயிர் கொடுத்தன வாழ்ந்துவிடு என்று!

    மணக்கும் மல்லிகை பார்த்தால்
    மறக்காது மனக்கண்முன் வந்துபோனது
    மல்லிகையுடன் நீ நின்ற கோலம்!

    கற்பனையில் கரைந்த காட்சி  கண்மலரக்
    கண் எதிரில் நின்றது உனது வடிவில்
    கண்கலங்கி நின்றேன் சந்தோஷத்தின் எல்லையில்!

    சுமைதாங்கும்  இதயமாய்
    உனைத் தாங்கிய இதயம்
    களைப்பாறியது உனது இதயம் சேர்ந்து!

    மணித்துளிகள் நிமிடங்களானது
    பிரிவென்ற அம்பு துளைக்கக் காத்திருக்க?
    கிடைத்திடும் தருணம் ’மகிழ்ச்சி கொள்’ என்றது
    பகவத்கீதை வரிகள் போல!

    அடிக்கடி சந்தித்த பார்வையின் பரிமாற்றம்
    பாதுகாப்பாய்ப் பூட்டப்பட்டது
    பெட்டகத்தின் திறப்பான் என்னிடம் இருத்தப்பட்டது!

    விருந்தோம்பல்  விளையாட்டாய்ப் போக
    மனம் மணி பார்த்தது பதைபதைத்து!
    சிரிப்பலையில் சிறகு விரித்த சந்திப்பு
    இப்போது மெளனம் சாதித்தது பிரிவைக் கண்டு!

    விடை கொடுத்து விடை பெற்றாய்
    விடை தெரியாத என் கேள்வி மட்டும்
    கொக்கிபுழுவாய்க் குடைந்து நின்றது!

    உள்நுழைந்து இதயம் சுரண்டிய உன் நினைவும்
    நீ வந்து சென்ற அடையாளமாய் மிச்சம் இருந்தது
    அறை முழுதும் வாசனையாய் உன் அங்கத்தில் பரவிய நறுமணம்!
    தினம்தோறும் அசைபோடும்
    மனத்தின் காட்சியானது உனது வருகை காலம் முழுதும்!

     

    Share
  • சோகத்தை மிஞ்சும் சடங்கு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    ஒவ்வொரு வார சனிக்கிழமையும் ஓய்வு நாளாக (Sabbath day) அனுசரிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கும் யூதர்களிடையே நியுயார்க்கிலுள்ள புருக்ளின் பகுதியில் ஒரு பெரிய சோக நிகழ்ச்சி மார்ச் மாதம் 21-ஆம் தேதி நடந்தது. சனிக்கிழமை யூதர்களுக்கு ஓய்வு தினமாதலால் அன்று தீயை மூட்டக் கூடாது என்பதால் வெள்ளி சூரிய அஸ்தமனத்திற்கு முன் அடுப்பை மூட்டி அன்று இரவு முழுவதும் உணவை சூடாக வைத்திருந்து மறு நாள் குடும்பத்தினருக்கு உணவளிக்கும் ஒரு பழக்கத்தை யூதர்கள் அனுசரிக்கிறார்கள். இப்படி இந்தப் பழக்கத்தை அனுசரிக்கும் ஒரு குடும்பத்தில் ஹாட் பிளேட்டில் ஏதோ கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்து வீடு பூராவும் தீ பரவி அந்தக் குடும்பத்தின் எட்டுக் குழந்தைகளில் ஏழு பேரைப் பலிவாங்கியிருக்கிறது.

    இந்தச் சம்பவம் நடந்த பிறகு சநாதன யூதர்கள் வாழும் அந்த வட்டாரம் முழுவதும் மிகவும் கலங்கிப் போயிருக்கிறது. தங்களுக்கும் இந்தக் கதி வந்துவிடக் கூடாதென்பதற்காக பல வித எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாரா வாரம் வரும் இந்த சனிக்கிழமையை எப்படிச் சமாளிப்பதென்று திட்டம் தீட்டி வருகிறார்கள் அந்த வட்டார மக்கள். அந்த ஏரியாவில் உள்ள மின்சாதனங்கள் விற்கும் ஒரு கடையில் நெருப்புப் பிடித்தால் நெருப்பிலிருந்து வரும் புகையைக் கண்டுபிடிக்கும் (smoke detectors) கருவி அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. அதற்கு மேல் சேமிப்பு இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட கடையில் இருந்ததைப் போன்று மூன்று மடங்கு கருவிகளும் விற்றுப்போய்விட்டன. யூதர்களுடைய கோவிலிருந்து இம்மாதிரியான நிறையக் கருவிகள் இனாமாகப் பலருக்கு வழங்கப்பட்டன.

    அந்த வட்டாரத்தில் வசிக்கும் ஒரு யூதர் தன் நான்கு குழந்தைகளுக்கும் வீட்டில் தீ பிடித்தால் என்ன செய்ய வேண்டும் என்று விரிவான பயிற்சி கொடுத்ததோடு வீட்டில் ஆறு கயிற்று ஏணிகளையும் (குடும்பத்தவர் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ஒன்று போலும்) ஜன்னல்கள் அருகே சுத்தியலையும் (ஜன்னலை உடைத்துத் தப்புவதற்கு) வைப்பதற்கு ஏற்பாடு செய்யப் போகிறாராம். தன் குழந்தைகளுக்கு எங்கு, எந்த மாதிரி தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும், எப்படித் தப்பிக்க வேண்டும் என்று பயிற்சிகள் கொடுக்கப் போகிறாராம். ஒன்பதிலிருந்து பதினைந்து வயதுள்ள அவர் குழந்தைகளுக்கு அவர் கொடுக்கப் போகும் பயிற்சியில் ‘அம்மாவுக்காகக் காத்திருக்காதீர்கள். அப்பாவுக்காகக் காத்திருக்காதீர்கள். முதல் முதலாக நீங்கள் செய்ய வேண்டியது வெளியே செல்வது’ என்ற போதனையும் இந்தப் பயிற்சிகளில் ஒன்று.

    பல யூதர்கள் தங்கள் வீடுகளில் உள்ள நெருப்பின் புகையைக் கண்டுபிடிக்கும் கருவி நன்றாக வேலை செய்கிறதா என்றும் கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் அவற்றைக் கடைக்கு எடுத்துச் சென்று கடைக்காரரிடம் பரிசோதித்துக்கொண்டு வர வேண்டும் என்றும் திட்டம் வைத்திருக்கிறார்கள். சிலருடையது மிகவும் பழையதாகிவிட்டதால் அவற்றுக்குப் பதில் புதியவைகளை வாங்கிவந்து மாட்டியிருக்கிறார்கள். தீயணைப்புக் கருவிகளையும் சிலர் வீட்டில் புதிதாக நிறுவியிருக்கிறார்கள். இன்னும் சிலர் வெள்ளியன்று சூரிய அஸ்தமனத்திற்குக் கொஞ்சம் முன்னால் அடுப்பு ‘ஆன்’ ஆகி அவர்கள் படுக்கப் போகும்வரை வேலைசெய்துவிட்டு தானாக ‘ஆஃப்’ ஆகி மறுபடி இவர்கள் சனிக்கிழமை காலையில் எழுந்ததும் தானாக ‘ஆன்’ ஆகி மறுபடி வேலைசெய்வதற்கு ஏற்ற மாதிரியான ஒரு கருவியை (timer) வாங்கி அவர்கள் அடுப்போடு பொருத்தப் போகிறார்கள்.

    ரஷ்யாவில் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டு மடிந்த அனுபவத்தையும் ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய யூதப்படுகொலையையும் யூதர்கள் சேர்ந்து அனுபவித்திருப்பதால் இப்போது இந்த மிகப் பெரிய சோக சம்பவமும் அந்த வட்டாரத்திலுள்ள யூதர்களை மிகவும் பாதித்திருக்கிறது. ஒரு ஆறு வயதுக் குழந்தை இரவில் இடையிடையே எழுந்து அழுகிறதாம். ஏழு குழந்தைகளை இழந்த குடும்பத்திற்கு அருகே வசித்த ஒரு பெண் மிகவும் அதிர்ந்து போயிருக்கிறார். ‘இறைவன் ஏன் இப்படி அவர்களைச் சோதித்தார்?” என்று கேட்பதோடு, ’இது இறைவன் செயல். அதை ஏன் என்று கேட்க நான் யார்?’ என்றும் தனக்குத் தானே சொல்லிக்கொள்கிறார்.

    இப்படி சோகத்தில் அமிழ்ந்து போயிருக்கும் இந்த யூதர்களுக்கு ஆறுதல் சொல்லி அவர்கள் இந்த சோகத்தை எதிர்கொண்டு மறப்பதற்கு ஒரு மதத்லைவர் தலைமையில் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். இம்மாதிரியான சோக சம்பவங்களின்போது நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்திருப்பது ஒன்றுதான் நம் எல்லோருக்கும் பலத்தைக் கொடுப்பது என்று அவர் கூறியிருக்கிறார்.

    இந்த மாதிரி இன்னொரு சோகச் சம்பவம் நடந்துவிடக் கூடாதென்று பல முன்னேற்பாடுகளை இந்த யூதர்கள் செய்துவருகிறார்கள். ஆனால் ஒருவருக்காவது மூட நம்பிக்கையில் பிறந்த இந்த ஓய்வு நாள் பழக்கத்தை ஏன் விட்டொழிக்கக் கூடாது என்று கேட்கத் தோன்றவில்லை. அன்று சமைக்காமலே சாப்பிடக் கூடிய பழங்கள் போன்ற உணவுகளை மட்டுமே சாப்பிட்டு சனிக்கிழமை விரதத்தை அனுஷ்டிக்கலாம் என்று ஏன் ஒருவருமே நினைக்கவில்லை? கால மாற்றத்திற்கேற்பத் தங்களையும் தங்கள் சடங்குகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஏன் இந்த யூதர்கள் நினைக்கவில்லை?

    Share
  • உங்களை எழுப்ப வந்திருக்கிறேன் தோழர் தி க சி

    எஸ்.வி. வேணுகோபாலன்

    அன்பின் தி க சி அவர்களுக்கு,

    உங்களை எழுப்ப வந்திருக்கிறேன், உங்களது மீளாத் துயில் கலைத்து!

    unnamed (7)
    90 வயதை நிறைவு செய்வேனா என்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்து தொலைபேசி உரையாடல் ஒன்றின்போது கேட்டிருந்தீர்களே அய்யா, தொண்ணூறு என்ன, இதோ, இந்த மார்ச் 30 அன்று தொண்ணூற்று ஒன்றே நிறைவடைந்துவிட்டது எழுந்திருங்கள்…

    பேசுபவரிடம் அவரவர்க்கான வேலைத் திட்டம், எழுத்துக்கான ஊக்கம், அடுத்த புத்தகம் எப்போது என்ற கேள்வி தூண்டுகோல்…என ஒவ்வொரு பொழுதையும் பிறர் நலன் கருதியே எழுதியும், பேசியும், சிந்தித்தும் வந்த நீண்ட களைப்புதானோ ஓய்வை அறிவிக்க வேண்டி வந்தது……

    தாமிரபரணி தண்ணீரைக் குடித்து வளர்ந்தவரை பிறிதொருவர் வந்து எழுப்ப வேண்டி இராது. ஆனாலும் வேறு வழியின்றியே எழுப்ப வந்திருக்கிறேன், எங்கள் அய்யா, எழுந்து வாருங்கள்…

    செய்தித்தாள்கள் காத்திருக்கின்றன, பருவ இதழ்கள் வந்து குவிகின்றன…அது போன்றே நூல்களும். முக்கிய வாசகர் மரித்தபின்னும் அவர் வசித்த வீதியில் நூல்களும் எங்கே வந்து விழ என்று தடுமாறுகின்றன….தங்கள் பக்கங்களுக்குள் தாழ்போட்டுக் கொண்டு குமுறிக் குமுறி அழக்கூடும் புத்தகங்கள் . அதனாலேயே அவை விரைந்து மக்கியும் போகின்றன. எழுந்து வாருங்கள் எங்கள் தோழா…

    நீங்கள் கலந்து கொள்ளாமல் எழுத்தாளர் சங்க மாநாடு ஒன்று அண்மையில் உங்களைப் பேசியபடியேதான் நடந்து முடிந்தது. அலுவலகம் மூடப்பட்டாலும் என்றைக்கோ அதன் பெயரால் ஓங்கி அடித்து விழப்பெற்ற ரப்பர் ஸ்டாம்பில் அதன் நினைவுகள் நிலை பெற்றுவிடுவதுபோல், எத்தனை நெஞ்சங்களில் அறைந்து எழுதப் பட்டிருக்கிறது உங்கள் பெயர். ஆலது அழுந்தி நிறைந்திருக்கிறது உங்கள் குரல்! ஒரு மறுவாசிப்புக்காக எழுந்து வாருங்கள் எங்கள் காலத்தின் அரிய மனிதரே…

    நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல்
    இமைப்பொழுதும் சோராதிருத்தல்……

    என்பதை அத்தனை தளர்ந்த வயதிலேயே உங்களிடம் வற்றாது குவிந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்…உங்களது இளமைக்காலத்து அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பை மானசீகமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்….நேராக உங்களது வாய்மொழி மூலம் கேட்க வாருங்களேன் எழுந்திருந்து…

    நம்பிக்கை அளிக்கும் படைப்பாளிகள் அடுத்தடுத்து எழுதவேண்டும், நூலாக்கம் செய்யவேண்டும் என்று ஓயாது அன்பின் வற்புறுத்தல் தூண்டிக் கொண்டே இருக்கிறது, உங்கள் மறைவுக்குப்பின்னும் உங்களது ஆளுமையின் நிழல் பரந்து விரிந்திருக்கும் எங்கள் உள்ளத்தோப்பு. அதில் இன்னுமொரு நடை நடந்து பார்க்க எதிர்பார்த்திருக்கிறோம் உங்களை ஆர்வத்தோடு, வாருங்கள் தோழா….

    வயதின் கணக்கு எதற்கு, வாழ்க்கை வயதை வைத்தல்ல….
    சுடலை மாடன் தெரு ஏங்கிக கிடக்கிறது, எங்கள் அன்புத் தோழா….உங்களது காலடியின் ஓசை அதன் மரபணுவிற்குள் பாய்ந்து தங்கிவிட்டிருக்கிறது போலும்….வேறு யார் நடக்கையிலும், வேக வேகமாக ஒப்பிட்டுப் பார்த்து உதடு பிதுக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தது….அதன் உணர்வுகளை ஊக்கப்படுத்தவேனும் உடனே வந்துதான் செல்லுங்கள் எங்கள் தோழா….

    *********

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    –புவனா.

    எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து

    எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து…

    தமிழ் என்பது மூன்றெழுத்து.. சினிமா என்பது மூன்றெழுத்து.. அந்த தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்த மூன்றெழுத்து..எம்.ஜி.ஆர். என்னும் சிகரம். அந்தச் சிகரத்திற்கு அறிமுகம் தேவையில்லை.

    இளம் சூரியன் உந்தன் வடிவானதோ..
    செவ்வானமே உந்தன் நிறமானதோ ..
    பொன் மாளிகை உந்தன் மனமானதோ ..
    என்ற பாடலுக்கேற்ப மாளிகை போன்ற மனதை உடையவர் எம்.ஜி.ஆர்.

    எம்.ஜி.ஆர். என்ற பெருமழை தந்த ஈரத்தால் இன்னும் வாடாமல் தழைத்தோங்கும் பயிர்கள் (உயிர்கள்) ஏராளம்.

    அவர் பிறந்தது இலங்கையாக இருந்தாலும் .. தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால்தானோ என்னவோ “வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் பண்பு – அவரைத் தேடி வந்தவரை எல்லாம் வாழவைத்துக் கொண்டிருந்தார்.

    நடிகரில் மனிதர்: மனிதர்கள் நடிகராக வருவது இயல்பு. ஆனால், “நடிகருள் மனிதராக மக்கள் திலகம் வாழ்ந்தவர்”. இன்னும் சொல்லப் போனால் மனிதருள் கடவுளாகவே பலருக்குத் தென்பட்டவர்.

    அவரது தோற்றம் போலவே எண்ணமும் அழகு..அதனால்தான் புகழின் உச்சத்தையே அவர் அடைந்தார். திரை உலகில் அவர் தான் ஏந்தி வரும் ஒவ்வொரு வேடத்தையும் அதற்கான முயற்சிகளையும் தானே மேற்பார்வை காட்டினார்; உதாரணம் – அவர் எங்க வீட்டு பிள்ளையில் பாடி நடித்ததை பார்த்து மக்கள் அவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே பார்த்தனர். எல்லா படங்களிலும் சண்டைக் காட்சிகள் அமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஏன்? தன்னை ஒரு பயில்வானாக காட்டிக்கொள்ளவா? இல்லை. ஸ்டன்ட் நடிகரின் பிழைப்பிற்காகவே தனது எல்லா படங்களிலும் சண்டைக் காட்சி வைத்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.

    திரையில் அவர் நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்களில் கருத்தாழம் நிறைந்தது. ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்கு பாடல் மூலம் பறை சாற்றிக் கொண்டிருந்தார். அது 2 வயது குழந்தை முதல் 100 வயது வரையிலான வயோதிகர் வரை சென்று சேர்ந்தது.

    விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்..
    தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்..

    என்ற வரிகளுக்கேற்ப தமிழினத்திற்காக பாடுபட்ட ‘மன்னாதி மன்னன்’ .. அவர்.

    அவரது பாடல்களைக் கேட்டாலே புத்துணர்வு பிறக்கும். அது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி.. நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி.. எதிர்மறை எண்ணங்களே இல்லாது பார்த்துக் கொண்டிருந்தார். பாடல்கள் மட்டுமல்லாமல் அவருடைய படத்தின் பெயரும் எதிர்மறை எண்ணத்தைத் தவிர்த்து .. உதாரணம் – தாய் சொல்லை தட்டாதே.. மன்னாதி மன்னன், நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும், காவல்காரன், ஒளி விளக்கு, இன்னும் பல..

    இந்தப் பெயர்களால் ஒரு விதமான நம்பிக்கை மனதில் தோன்றுகிறதல்லவா.. தானும் உயர்ந்து தன்னை சார்ந்தவரையும் உயர்த்துபவன் தான் தலைவன். அந்த வகையில் எம்.ஜி.ஆர். ஒரு உண்மையான தலைவன்.

    எதோ நடித்தோம், பணம் சம்பாதித்தோம், மறைந்தோம் என வாழும் நடிகர்களுக்கு மத்தியில் அவரின் சிந்தனையே சொல்லானது.. சொல்லே செயலானது.. அந்த செயலும் புனிதமானது. அந்த வகையில் அவர் புத்தனாகவும் யேசுவாகவும் கண்ணில் தென்பட்டார்.

    அவர் பற்றி எழுதும் இந்தக் கட்டுரையில் எனக்கு தெரிந்த இருவரின் அனுபவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

    1. பட்டப்படிப்பு வரை படித்த இளைஞன் ஒருவர் – அரசாங்க உத்தியோகத்திற்கு முயற்சி செய்த காலத்தில், பல முறை தேர்வு எழுதியும் பலனில்லை. தேர்ச்சி பெறவில்லை. குடும்ப சூழலின் காரணமாக வேலைக்காக மிகவும் பாடுபட்ட காலமது. மனம் வெறுத்து இதுதான் கடைசிமுறை என நினைந்து தேர்வு எழுத சென்றார். அதில் ” உனக்குப் பிடித்த தலைவர் பற்றி” ஒரு கட்டுரை வரையும்படி கேள்வி இருந்தது. அவர் உடனே.. எம்.ஜி.ஆர். எனும் தலைவர் என்னும் தலைப்பில் எழுதினார். தன் மனதில் ஆழப் பதிந்திருந்த .. எண்ணி நெகிழ்ந்திருந்த விஷயங்களை எழுதினார். அந்த முறை தேர்ச்சி பெற்றார். அவரைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்.தான் தன்னை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.

    2. ஒரு முதியவர் .. ஒரு நாள் .. எம்.ஜி.ஆர் அவர்களிடம் வந்து உன்னை நம்பி என் பையனை படிக்க வைத்தேன். நீதான் வாழ வழி காட்ட வேண்டும் என்றார். உடனே எம்.ஜி.ஆர். முதலில் நீங்கள் சாப்பிடுங்கள்.. பின்னர் பேசுவோம் என்றார். அனால் முதியவர் விடவில்லை. தன் குறையை அழுது புலம்பிக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர். நீங்கள் சாப்பிடுங்கள்.. உங்கள் மகன் அடுத்த மாதம் அரசாங்க சம்பளம் உங்களுக்கு கொண்டு வருவான் என்றார். அதுபோலவே, அடுத்த மாதம் அந்தப் பெரியவர் தன் மகனின் சம்பளக் கவரோடு முதல்வரை (மக்கள் திலகத்தை) காண வந்தார்.

    எந்த முதல்வரையாவது இப்படி எளிதில் எளிய மக்கள் காண முடியுமா? ஆனால் மக்கள் திலகம் அவர்களை காண முடிந்தது. கர்ணன் மறுபிறப்பு எடுத்து இவராக இம் மண்ணில் தோன்றினாரோ என்று தோன்றுகிறது.

    இன்று பலர் அவரைப்போலவே நடித்து, ஆடிப்பாடிப் பிழைக்கிறார்கள். ஒரு சிலருக்கு அவருடைய வேடம் ஒத்துப்போகுமாயின், அதைக் காணும் பொது மக்களும், தாய் மார்களும், “வாங்கையா வாத்தியாரைய்யா’ என பெருமை கொள்வது அவரின் மீது உள்ள பற்றும் ஈடுபாடும் தான் காரணம். அவரை ஓர் அவதார புருஷனாகவே எண்ணியிருக்கிறார்கள்.

    தமிழ் நாட்டையும் தாண்டி மேல் நாடுகளில் அவரைப் பற்றித் தெரியும். இது ஒரு நடிகனாக இருந்ததால் மட்டுமலா.. அவர் செய்த ஒவ்வொரு நல்ல செயலும் அங்கும் எதிரொலித்தது. நடிப்பதைத் தொழிலாகவும், கொடுப்பதைக் கொள்கையாகவும் கொண்டவர் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் எலும்பிலும் தசையிலும் உடல் இருக்கும். ஆனால். இவருக்கோ தங்கத்தால் வார்த்த உடம்பு….அதனால்தான் எமனையும் ஒரு முறை வென்றார்.

    புரட்சித் தலைவர் பள்ளியில் படிக்காவிட்டாலும் பல்கலைக் கழகமாக தன்னை மாற்றிக் கொண்டவர். அதனால்தான் அவர் தியாகரஜ சட்டக் கல்லூரியில் சேர்மேனாக அமர முடிந்தது.

    மனிதன் உயிர் வாழத் தேவையானது உணவு. மனிதனாக வாழ வைப்பது கல்வி. இந்த இரண்டையும் தான் பிறருக்காக அள்ளி வழங்கிய வள்ளல். அவரது சத்துணவு திட்டம், அவர் காலத்தில் திறக்கப்பட்ட அரசு பள்ளிகளும் சாட்சி.

    முடியாது.. இல்லை.. என்ற இரண்டு வார்த்தைகளையும் தமிழில் உள்ள அனாவசிய வார்த்தைகள் என அப்புறப்படுத்தியவர் பொன் மனச் செம்மல்.

    எம்.ஜி.ஆர்.

    அரிதாரம் இட்டு அடையாளமாகி ..
    அகம் நுழைந்து ஜகம் ஆண்டவன்..
    மக்கள் மனதில் குடியிருந்த கோவில்
    என்றென்றும் ஊருக்கு உழைப்பவன்
    அள்ளிக் கொடுப்பதில் அவர் மன்னாதி மன்னன்
    மொத்தத்தில் என்றென்றும் அவர் எங்க வீட்டுப் பிள்ளை..

    காலத்தை வென்றவர் அவர்..
    காவியமானவர் அவர்..

    — புவனா, மும்பை

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    — மணிமுத்து.

     

     

    நான் அறிந்த எம்.ஜி.ஆர்!

    குடும்ப உறவுகளுக்கிடையே பிரியம் காட்ட முடியாத உலகத்தில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பிரியம் செலுத்திய மனிதர்(மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்) ம.கோ.ராமசந்திரன். நடிப்பில் மட்டுமல்லாமல் அதே போல் வாழ்ந்து நடப்பிலும் மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.

    வாழ்ந்தவர் கோடி,
    மறைந்தவர் கோடி,
    மக்களின் மனதில் நிற்பவர் யார்!
    என்ற பாடல் வரிகள் கூட அவருக்கே பொருந்துவதாய்!

    வாழ்க்கையில் பல மனிதர்கள் சரித்தில் தான் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த நாட்களை விடவும், இறந்த பின்னே அவர்களுக்கு உலகம் புகழாரம் சூட்டவும், பாராட்டவும் செய்தது. வாழ்ந்த நாட்களில் சரித்திரம் படைத்தவர்கள் ஒரு சிலரே அவர்களில் ஒருவர் தான் ம.கோ.ராமசந்திரன். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் தொழில் எனும் பொழுது ஒரு மாதிரியாகவும், அதுவே நிஜ வாழ்க்கை எனும் பொழுது வேறாக இருக்கும். ஆனால் ம.கோ.ராமசந்திரன் அவர்களோ தொழில், வாழ்க்கை என்றெல்லாம் வேறு படுத்திப்பார்க்கத்  தெரியாதவர்.

    எல்லோரிடமும் திறமைகள் உண்டு, ஆனால் அந்த திறமைகள் தன்னிடம் இருப்பதை அறிந்து செயல் படுத்துபவர் ஒரு சிலரே, அப்படி தன்னிடம் இருந்த எல்லா திறமைகளையும் தெரிந்துக் கொண்டு இயக்குனர், தயரிப்பாளர் மற்றும் நடிகர் என அனைத்து பணிகளையும் செவ்வனே செய்து திரை உலகில் மிகப்பெரிதாக சாதித்துக் காட்டியவர். ஒரு மனிதன் அவனுடைய வாழ்நாளில் சேமிக்க வேண்டிய ஒரே பெரிய சொத்து நண்பர்களும், உறவினர்களும் தான், அப்படி ஒரு மாநிலத்திலிருக்கும் அனைவரையும் உறவினராய் சம்பாதித்தவர்.

    அப்படி அனைவரின் அன்பை சம்பாதிக்க என்ன செய்யலாம். நல்லவனாக நடிக்கலாம், அதற்கு சிறந்த நடிகர் என பெயரும் வாங்கலாம்.ஆனால் சிறந்த நடிகர் என்று பெயர் வாங்குவதால் ஒருவரை ஒரு மாநில மக்களே விரும்புவர்களா என்ன? விரும்பினார்கள் அதற்குக் காரணம் அவர் நிஜ வாழ்க்கையில் நடிக்கத்  தெரியாதவர். நன்றாக சாப்பிட்ட ஒருவனிடம் “பசிக்கிறதா என்பதை விட, பசிக்கிற ஒரு மனிதனுக்கு அன்னமிடுவதே” சாலச் சிறந்தது.

    அதைத்தான் அவர் “பசிக்கிற ஒருவனுக்கு மட்டுமல்லாமல் பசி என்கிற ஒவ்வொருவனுக்கும் உணவினை வாரி வழங்கினார்” அட்சய பாத்திரம் போல. அரசு கொடுக்கும் பொருட்களை சுரண்டல் இல்லாமல் அதை மக்களிடம் சேர்த்தார். அவர் அறிமுக படுத்திய திட்டங்கள் தான் எத்தனை? சத்துணவுத் திட்டம், விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி, தாலிக்கு தங்கம் வழங்குதல், மகளிருக்கு சேவை நிலையங்கள் இன்னும் எத்தனையோ அடுக்கிக் கொண்டே போகலாம்.

    அவர் கொடுத்த இலவச ஓட்டைக் கொண்டு வீட்டை அமைத்து, அதில் வாழ்கிற எத்தனையோ பெயரில் நானும் ஒருத்தியாய். சிலருடைய பெருமைகள் சொல்லி மாளாது எனினும் இவருடைய பெருமைகள் சொல்ல சொல்ல மாளாதவைகளாய்! நாம் தியாகிகள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் எத்தனையோ பேர் உலகிற்கு மட்டுமே தியாகிகளாய், ஆனால் எப்போது தன் மனைவி குழந்தை பிறக்க இயலாமல், பிரசவத்தில் இறந்தாளோ  அப்போதே தன்னால் இரண்டு உயிர் போனதே என்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். இப்படி ஒரு தியாக உள்ளத்தை மீண்டும் எங்கே காண்பது?

    சிறு எறும்புக்கும் தீங்கு இழைக்காதவர், செல்ல பிராணிகளிடம் கூட உயிரையே வைத்திருந்தார். அவர் வளர்த்து வந்த செல்ல பிராணிகளான இரண்டு சிங்கங்களில், ஒன்று இறந்து விட அதனுடைய தனிமை துயரை காண சகியாதவராய் கொண்டு சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டுவிட்டார். எம்.ஜி.ஆருடைய பல படத்தின் பாடல் வரிகளுமே அவரையும், அவருடைய செய்கையையும் பிரதிபலிப்பனவாக, அதற்கோர் உதாரண பாடல் இங்கே.

    நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்,
    நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்
    சிலர் அல்லும், பகலும்
    வெறும் கல்லாய் இருந்து விட்டு
    அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்

    தொண்டையில் துப்பாக்கி சூடுப்பட்டு, குரல் உடைந்த பிறகும் கூட நடித்து வெளிவந்த படமான காவல்காரன், பெரிய வெற்றியை தேடித்தந்தது. இதைத்தான் சாதிப்பதற்கு வயதோ, உடல் குறையோ தடை கிடையாது என்பதோ. இந்த காலத்தில் வீடுவீடாக சென்று லஞ்சம் கொடுத்தாலும் கூட வாங்க முடியாத வாக்குகளை, உடல்நிலை முடியாமல், பிரசாரத்திற்கே வரமால் பெற்று முதல்வர் ஆன மாமனிதர்.

    அந்த மாமனிதருக்கு
    கிடைத்தது தான்
    என்ன
    எல்லோரையும் போல
    சிறுவயதில் வறுமைதான்.
    கல்வியும் கூட காசு இருப்பவனுக்கே!
    வறுமையில் வாழ்க்கையை
    எப்படி வாழ வேண்டும்
    என்று மட்டுமல்ல,
    எப்படி மாற்ற வேண்டும்
    என்றும் கற்றுக் கொண்டாயா!
    அதனால் தான் வறுமையில்
    வாழ்ந்தவர்களுக்காக
    வாழ்நாள் முழுவதும் போரடினாயா!
    அத்தனை இலவச திட்டங்களையும் அறிமுகப்படுத்தினாயா!
    உனக்கு பாரத ரத்னா விருது கூட சிறிதே!

    அன்பை சம்பாதிப்பவனே ஆண்டவனை சம்பாதித்தவன், அனைத்தையும் சம்பாதித்தவன். அனைத்தையும் சம்பாதித்த அந்த மாமனிதனுக்காகவே இன்றுவரை அவர் வளர்த்த கட்சிக்கு வாக்களிக்கும் மக்கள் தான் எத்தனை!

    மாமனிதரே இன்னொரு முறை தமிழ்நாட்டில் பிறப்பீராக… நாட்டின் தலையெழுத்தை மாற்ற!
    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது 
    முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும்!
    என்று உலகிற்கு வாழும் போதே சொல்லிவிட்டு போய்விட்டார்.
    வாழ்க்கையில் வறுமை மனிதனுக்கு இருபாதையைக் காட்டி விடுகிறது.
    ஒன்று நல்வழி, மற்றொன்று தவறான பாதை!

    நாமும் வறுமையை ஒழிப்போம் நல்வழியில் நடந்து எம்.ஜி.ஆர் போல.

    Share
  • சிவபிரதோஷம்

     

    மீ.விசுவநாதன்

    8-1
    ஒருபூ எடுத்துநான் போடாமல் ஓடிய நாளாய் இருந்தேனே !
    தெருவில் திரிகிற தீவட்டி , தேவடி ஈசன் மறந்தேனே !
    பருவச் சிறுமையில் பாராமல் பாடிட வார்த்தை இழந்தேனே !
    அருமை அருட்பெரும் ஆனந்தன் ஆடிட நெஞ்சம் மறுத்தேனே !

    கல்வி அறிவினைக் கைவிட்டு கயவனின் கையில் கிடந்தேனே !
    பல்கிப் பெருகிய பொய்யினிலே பாடியே நாளைக் கழித்தேனே !
    வில்வ இலையைக் கொள்ளாமல் வீணடிக் கலையைக் கொண்டேனே !
    நல்ல சிவனிடம் கேட்கின்றேன் நாடிய நானாய்த் தெளிவாயே !

    (அறுசீர் விருத்தம் வாய்பாடு: மா, விளம், காய் , விளம் ,மா, காய் ,)
    (01.04.2015)

    Share
  • எனக்காக பொறந்தாயே எனதழகி…

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    மென்மையான பாடலுக்கு மக்கள் மத்தியில் என்றைக்குமே வரவேற்பு இருக்கும் என்பதற்கு தற்காலப்பாடல்களில் ஒரு சாட்சி! தாத்தாவிற்கும் பேரனுக்கும் பாட்டெழுத பிரம்மன் அனுப்பி வைத்த காவியக் கவிஞர் வாலி அவர்கள் கைவண்ணத்தில் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் எஸ்.பி.சரண், அனு ஆனந்த் குரல்களில் இழைந்தோடும் இந்தத் தென்றல் இதயத்தைத் தொடுகிறது!

    பண்ணையாரும் பத்மினியும் என்கிற வித்தியாசமான கதையமைப்பில் உருவாகி வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்பிரகாஷ், துளசி ஆகியோர் நடிப்பில் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் இனிமைதவழும் கானம் இதோ கேளுங்கள்! பருவக் காதலை ஒருபுறம் சொல்லிவிடுகிற இயக்குனர் நடுத்தர வயதுக் காதலையும் நயமாக சொல்லியிருப்பதும்… குறிப்பாக இந்தப் பாடலில் இடம்பெறும் சிறு சிறு காட்சிப் படலங்கள் சத்தமில்லாமல் சங்கதி சொல்கின்றன சங்கீதத்துடன்!!

    கவிஞர் வாலியின் வரிகளில் ஒரு சிறந்த பாடலாசிரியருக்கான முதிர்ச்சியும்… அதே நேரத்தில் கதாபாத்திரம் எந்த வார்த்தைகளைத் தாங்கும் என்கிற அளவைக் கண்டறிந்து எளிமையும் எதார்த்தமும் கலந்து பரிமாறியிருக்கிறார் என்றால் அது மிகையில்லை! கணவன் மனைவி இருவருக்கிடையில் இருக்க வேண்டிய அந்நியோன்யம் கரைபுரண்ட பாசமாய் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தால் இல்லறம் என்பது இன்பதேசமாய் இருப்பதில் என்ன குறை? கேட்டபின் மறந்துவிடும் பாடலாய் இல்லாமல் மனம் முணுமுணுக்கச் சொல்கிற பாடலாய்… பழைய பாடலின் சாயலோடு … இதோ…

     

    PANNAIYARUM PADMINIYUMPANNAIYARUM PADMINIYUM3PANNAIYARUM PADMINIYUM2
    __________________________________

    பாடல்: எனக்காக பொறந்தாயே எனதழகி
    படம் :பண்ணையாரும் பாத்மினியும்
    பாடலாசிரியர் : வாலி
    இசை :ஜஸ்டின் பிரபாகரன்
    பாடியவர்கள் : எஸ்.பி.சரண்,அனு ஆனந்த்
    __________________________________

    https://youtu.be/KRBBzanmGsU

     

    காணொளி: https://youtu.be/KRBBzanmGsU

    உனக்காக பொறந்தேனே எனதழகா
    பிரியாம இருப்பேனே பகல் இரவா
    உனக்காக பொறந்தேனே எனதழகா
    பிரியாம இருப்பேனே பகல் இரவா
    உனக்கு வாக்கப்பட்டு
    வருஷங்கள் போனால் என்ன ?
    போகாது உன்னோட பாசம் !
    என் உச்சி முதல் பாதம் வரை
    என் புருஷன் ஆட்சி..
    ஊர்தெற்காலதான் நிக்கும் அந்த
    முத்தாலம்மன் சாட்சி ……..

    எனக்காக பொறந்தாயே எனதழகி
    இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி ……..

    அ… அ.. ஆ………
    லைய் லாய் லாய் லல்லே
    லல்லாய் லலலல்லாய்
    லைய் லாய் லாய் லல்லே
    லல்லாய் லலலல்லாய் ……..

    ஒருவாட்டு எனை உரசாட்டி உனை
    உறுத்தும் பஞ்சனைமெத்தையும்
    ராத்திரி பூத்திரி ஏத்தற வேளையிலே

    கருவாட்டி பானை கிடைச்சாக்க பூனை
    விடுமா சொல்லடி சுந்தரி..
    நெத்திலி வத்தலு வீசுற வாடையில..

    பூவாட்டம் உன் காத்து மாவட்டும் நேரம்தான்
    உன் கையை மீட்டாதா முந்தானை ஓரம்தான்

    பூவாடை தூக்காதா? பூபானம் தாக்காதா?
    நீ முத்தி போன கத்திரியா புத்தம் புது பிஞ்சு

    நா முந்தா நாளு ஆளானதா எண்ணுதோ உன் நெஞ்சு
    உனக்காக பொறந்தேனே எனதழகா..
    பிரியாம இருப்பேனே பகலிரவா..
    உனக்கு வாக்கைப்பட்டு வருஷங்கள் போனா என்ன
    போகாது உன்னோட பாசம்..
    என் உச்சி முதல் பாதம் வரை
    என் புருஷன் ஆட்சி..
    ஊர்தெற்காலதான் நிக்கும் அந்த
    முத்தாலம்மன் சாட்சி

    ************************************************************************************

    https://youtu.be/VVNGuRrh2sY

    காணொளி: https://youtu.be/VVNGuRrh2sY

    எனக்காக பொறந்தாயே எனதழகி
    இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி
    அ… அ.. ஆ..
    எனக்காக பொறந்தாயே எனதழகி
    இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி

    உனக்கு மாலையிட்டு
    வருஷங்கள் போனா என்ன ?
    போகாது உன்னோட பாசம் !
    எனக்கு என்மேலெல்லாம் ஆச இல்ல
    உன் மேல தான் வச்சேன் !
    என்ன ஊசியின்றி நூலுமின்றி
    உன்னோடதான் தச்சேன் !

    உனக்காக பொறந்தேனே எனதழகா
    பிரியாம இருப்பேனே பகல் இரவா
    உனக்கு வாக்கப்பட்டு
    வருஷங்கள் போனால் என்ன ?
    போகாது உன்னோட பாசம் !
    எனக்கு என்மேலெல்லாம் ஆச இல்ல
    உன் மேல தான் வச்சேன்
    என்ன ஊசியின்றி நூலுமின்றி
    உன்னோடதான் தச்சேன்

    லைய் லாய் லாய் லல்லே
    லல்லாய் லலலல்லாய்
    லைய் லாய் லாய் லல்லே
    லல்லாய் லலலல்லாய்

    ஒதுங்காதே தொட்டு
    உசுப்பேத்தி விட்டு
    உனக்கா ஒவ்வொரு மாதிரி
    நாக்குல நெஞ்சில
    பச்சைய குத்தி வச்சேன்

    இதுதாண்டி ரதம்
    இதலதான் நிதம்
    உன்னத்தான் உட்காரவச்சி
    நா ராசாதிராசனா
    ஊர்வலம் வந்திடுவேன்

    உன்னோடு நான் சேர
    மென்மேல வந்து ஒரு
    நேந்து தான் சாமிக்கு
    வப்பேனே வெள்ளாடு !

    ஆத்தோரம் காத்தாடும்
    காத்தோடு நாத்தாடும்
    நான் பாத்தாட்டமா நாத்தாட்டமா
    உன்னால அழும் நாளும்

    நீ மாலையிடும் வேளையில
    கேட்குதா என் தோடு !

    உனக்காக புறந்தேனே எனதழகா
    பிரியாம இருப்பேனே பகல் இரவா
    உனக்கு மாலையிட்டு
    வருஷங்கள் போனால் என்ன ?
    போகாது உன்னோட பாசம்
    தன்னனனான தன்னனான
    நன்னானானனான…

    Share