இதயம் கவர்ந்தவன்!
-திருக்குவளை மீ.லதா
உன் காந்தப் பார்வையின் இழுப்பட்ட விசையால்
இடம் மாறியது எனது இதயமடா!
விலகி செல்லும் போது வீணாய் அழைத்து போனது
உன் பின்னால் என் மனமும்!
உடைகளின் வண்ணத்தின் ஒற்றுமை
நம் எண்ணத்தின்ஒற்றுமையைப்
பறைசாற்றிய நாட்கள் எத்தனை!
காத்திருப்பில் கரைந்துபோன காலங்களில்
உன்னுடன் பேசிய நினைவுகள்
உயிர் கொடுத்தன வாழ்ந்துவிடு என்று!
மணக்கும் மல்லிகை பார்த்தால்
மறக்காது மனக்கண்முன் வந்துபோனது
மல்லிகையுடன் நீ நின்ற கோலம்!
கற்பனையில் கரைந்த காட்சி கண்மலரக்
கண் எதிரில் நின்றது உனது வடிவில்
கண்கலங்கி நின்றேன் சந்தோஷத்தின் எல்லையில்!
சுமைதாங்கும் இதயமாய்
உனைத் தாங்கிய இதயம்
களைப்பாறியது உனது இதயம் சேர்ந்து!
மணித்துளிகள் நிமிடங்களானது
பிரிவென்ற அம்பு துளைக்கக் காத்திருக்க?
கிடைத்திடும் தருணம் ’மகிழ்ச்சி கொள்’ என்றது
பகவத்கீதை வரிகள் போல!
அடிக்கடி சந்தித்த பார்வையின் பரிமாற்றம்
பாதுகாப்பாய்ப் பூட்டப்பட்டது
பெட்டகத்தின் திறப்பான் என்னிடம் இருத்தப்பட்டது!
விருந்தோம்பல் விளையாட்டாய்ப் போக
மனம் மணி பார்த்தது பதைபதைத்து!
சிரிப்பலையில் சிறகு விரித்த சந்திப்பு
இப்போது மெளனம் சாதித்தது பிரிவைக் கண்டு!
விடை கொடுத்து விடை பெற்றாய்
விடை தெரியாத என் கேள்வி மட்டும்
கொக்கிபுழுவாய்க் குடைந்து நின்றது!
உள்நுழைந்து இதயம் சுரண்டிய உன் நினைவும்
நீ வந்து சென்ற அடையாளமாய் மிச்சம் இருந்தது
அறை முழுதும் வாசனையாய் உன் அங்கத்தில் பரவிய நறுமணம்!
தினம்தோறும் அசைபோடும்
மனத்தின் காட்சியானது உனது வருகை காலம் முழுதும்!
M.Latha, this poem is excellent.