உங்களை எழுப்ப வந்திருக்கிறேன் தோழர் தி க சி
எஸ்.வி. வேணுகோபாலன்
அன்பின் தி க சி அவர்களுக்கு,
உங்களை எழுப்ப வந்திருக்கிறேன், உங்களது மீளாத் துயில் கலைத்து!
90 வயதை நிறைவு செய்வேனா என்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்து தொலைபேசி உரையாடல் ஒன்றின்போது கேட்டிருந்தீர்களே அய்யா, தொண்ணூறு என்ன, இதோ, இந்த மார்ச் 30 அன்று தொண்ணூற்று ஒன்றே நிறைவடைந்துவிட்டது எழுந்திருங்கள்…
பேசுபவரிடம் அவரவர்க்கான வேலைத் திட்டம், எழுத்துக்கான ஊக்கம், அடுத்த புத்தகம் எப்போது என்ற கேள்வி தூண்டுகோல்…என ஒவ்வொரு பொழுதையும் பிறர் நலன் கருதியே எழுதியும், பேசியும், சிந்தித்தும் வந்த நீண்ட களைப்புதானோ ஓய்வை அறிவிக்க வேண்டி வந்தது……
தாமிரபரணி தண்ணீரைக் குடித்து வளர்ந்தவரை பிறிதொருவர் வந்து எழுப்ப வேண்டி இராது. ஆனாலும் வேறு வழியின்றியே எழுப்ப வந்திருக்கிறேன், எங்கள் அய்யா, எழுந்து வாருங்கள்…
செய்தித்தாள்கள் காத்திருக்கின்றன, பருவ இதழ்கள் வந்து குவிகின்றன…அது போன்றே நூல்களும். முக்கிய வாசகர் மரித்தபின்னும் அவர் வசித்த வீதியில் நூல்களும் எங்கே வந்து விழ என்று தடுமாறுகின்றன….தங்கள் பக்கங்களுக்குள் தாழ்போட்டுக் கொண்டு குமுறிக் குமுறி அழக்கூடும் புத்தகங்கள் . அதனாலேயே அவை விரைந்து மக்கியும் போகின்றன. எழுந்து வாருங்கள் எங்கள் தோழா…
நீங்கள் கலந்து கொள்ளாமல் எழுத்தாளர் சங்க மாநாடு ஒன்று அண்மையில் உங்களைப் பேசியபடியேதான் நடந்து முடிந்தது. அலுவலகம் மூடப்பட்டாலும் என்றைக்கோ அதன் பெயரால் ஓங்கி அடித்து விழப்பெற்ற ரப்பர் ஸ்டாம்பில் அதன் நினைவுகள் நிலை பெற்றுவிடுவதுபோல், எத்தனை நெஞ்சங்களில் அறைந்து எழுதப் பட்டிருக்கிறது உங்கள் பெயர். ஆலது அழுந்தி நிறைந்திருக்கிறது உங்கள் குரல்! ஒரு மறுவாசிப்புக்காக எழுந்து வாருங்கள் எங்கள் காலத்தின் அரிய மனிதரே…
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல்……
என்பதை அத்தனை தளர்ந்த வயதிலேயே உங்களிடம் வற்றாது குவிந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்…உங்களது இளமைக்காலத்து அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பை மானசீகமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்….நேராக உங்களது வாய்மொழி மூலம் கேட்க வாருங்களேன் எழுந்திருந்து…
நம்பிக்கை அளிக்கும் படைப்பாளிகள் அடுத்தடுத்து எழுதவேண்டும், நூலாக்கம் செய்யவேண்டும் என்று ஓயாது அன்பின் வற்புறுத்தல் தூண்டிக் கொண்டே இருக்கிறது, உங்கள் மறைவுக்குப்பின்னும் உங்களது ஆளுமையின் நிழல் பரந்து விரிந்திருக்கும் எங்கள் உள்ளத்தோப்பு. அதில் இன்னுமொரு நடை நடந்து பார்க்க எதிர்பார்த்திருக்கிறோம் உங்களை ஆர்வத்தோடு, வாருங்கள் தோழா….
வயதின் கணக்கு எதற்கு, வாழ்க்கை வயதை வைத்தல்ல….
சுடலை மாடன் தெரு ஏங்கிக கிடக்கிறது, எங்கள் அன்புத் தோழா….உங்களது காலடியின் ஓசை அதன் மரபணுவிற்குள் பாய்ந்து தங்கிவிட்டிருக்கிறது போலும்….வேறு யார் நடக்கையிலும், வேக வேகமாக ஒப்பிட்டுப் பார்த்து உதடு பிதுக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தது….அதன் உணர்வுகளை ஊக்கப்படுத்தவேனும் உடனே வந்துதான் செல்லுங்கள் எங்கள் தோழா….
*********