சுரேஜமீ
தொட்டுவிடும் தூரம் தான் வானம்;
தொட முனைபவர்க்கு!
தோகையை விரித்தால் தான்
மயிலுக்கு அழகு!
எண்ணங்கள் எனும் தோகை விரிந்தால்தான்
ஏற்றங்கள் பெற முடியும்! – சுரேஜமீ
நாம் எதை நினைக்கிறோமோ, அதுவாகவே ஆகக் கூடிய வல்லமை, மனிதனுக்கு மட்டுமே உண்டு! ஆனால், நம் நினைவுகள் எல்லாம் ஒரு எல்லையிலேயே இருப்பதுதான், நம் பிரச்சினையே.
ஒரு விடயத்தை எடுத்தால், அதில் வெற்றியடையும் வரை, வேறு எச்சிந்தனையும் இல்லாமல், ஒரு முகமாக, செயலில் ஏகினால், வெற்றி தள்ளிப் போகலாமெயொழிய, நிச்சயம், தட்டிப் போகாது!
நம்புங்கள் உங்களை! நாளை வரலாறு உங்களால் எழுதப் படும் என்று! வரம் கேட்டு உங்கள் வாசலுக்கே வரும் வாய்ப்புகள்!
எந்த ஒரு சாதனையாளருக்கும், வெற்றி தன் வாயிற்கதவை உடனே திறந்து விடவில்லை; ஒவ்வொரு முறையும் ஒரு படிப்பினையைக் கொடுத்துத் தங்கத்தை மெருகேற்றுவது போல, தன்னைச் செதுக்கிய பின்னரே வரும் வெற்றி, காலத்தால் போற்றப் படுகிறது என்பது நாம் அறிந்ததே!
அப்படி இருந்தும் ஏன், நாம் மட்டும் தோல்வி என்றவுடன், எதிர் மறையாகச் சிந்திக்கிறோமே?
தோல்வி என்பது விதை போன்றது; விதை வீறிட்டு எழும்வரை போராட்டம்தான்!
எழுந்த மறு நொடியே பாராட்டும் வாழ்வு பிறக்கும்!
தோல்வி கற்றுத் தரும் பாடத்தை, உளிதாங்கும் சிற்பத்தைப் போல, எடுத்தவுடன் கிடைக்கும் வெற்றி ஒருநாளும் கற்றுத்தராது!
வெற்றியின் ரகசியமே, நீங்கள் எந்த நிலையில் ஒரு செயலின் முடிவை அணுகுகிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது. ஒவ்வொரு முடிவும், படி தாண்டி வரும்பொழுது, ஒவ்வொன்றும் வெற்றிதானே?
வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது.
பாரதி என்ன சொல்கிறான்?
தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் யெய்தி – கொடுங்
கூற்றுக்கிரை எனப் பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல நானும் – இங்கு
வீழ்வேன் என்று நினைத்தாயோ?
உரக்க, உணர்வுகளோடு இந்த வரிகளைச் சொல்லிப் பாருங்கள். உங்கள் உதிரத்தில் வெற்றியின் வேர்கள் நிச்சயம் விதைக்கப்பட்டுவிடும்! திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்! உங்கள் வாழ்வின் இலட்சியம் புலப்படும்!
மனித வாழ்வு என்பது அதிக பட்சம் நூறு ஆண்டுகள் தான்! இருக்கின்ற ஒவ்வொரு நாளும், இறைவன் கொடுத்த பரிசு! விதி என்று உங்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள். உங்கள் வாழ்வு, உங்கள் கைகளில்தான் இருக்கிறது.
ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்த ‘ரைட்’ சகோதரர்களை, இந்த உலகம் ஏளனமாகத்தான் பார்த்தது; ஆனால், இன்று அதன் வசதியில், இந்த உலகத்தின் ஒரு மூலையும், மற்றொரு மூலையும் தொட்டுவிடும் தூரமாகிப் போனதென்றால்,
நீங்கள் அறிய வேண்டுவது, உங்கள் முயற்சிகளைப் பற்றிய, உங்களின் தெளிவான சிந்தனையே அன்றி, அடுத்தவர்கள் உங்கள் மீது வைக்கும் விமர்சனங்கள் அல்ல என்பதே!
உங்களுக்கு எது விருப்பமானதோ, எதை உங்கள் உள்ளுணர்வு சொல்கிறதோ, அதைத் தாமதிக்காமல் செய்ய முற்படுங்கள்! வெற்றி உங்கள் கைகளில் தவழும் நாள் வெகு தொலைவில் இல்லை!
ஒருபோதும் உங்களுடன் மற்றொருவரை ஒப்பீடு செய்யாதீர்கள்! அது உங்களை, நீங்களே அவமதிக்கும் செயல் என்று உலகப் பணக்காரர்களுள் ஒருவரும், வெற்றியின் உச்சத்தை அடைந்தவருமான பில் கேட்ஸ் கூறுகிறார்.
சத்தியமான வார்த்தைகள் அவை!
மாபெரும் சபைதனின் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழ வேண்டும்!
ஒரு மாத்து குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்!
எப்பொழுது அது நடக்கும்?
உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்!
உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் தலை
வணங்காமல் நீ வாழலாம்!
என்ற கவியரசரின் எளிமையான வரிகளை உங்கள் இதயத்தில் இருத்தி, இலட்சியங்களை நோக்கி, இடைவிடாது பயணிக்க,
சிகரங்கள் சிரம் வணங்கக் காத்திருக்கிறது உங்களுக்காக!
…….. தொடர்ந்து பயணிப்போம்!
அன்புடன்
சுரேஜமீ
– புலவர் இரா. இராமமூர்த்தி.
உலகில் எல்லாராலும் போற்றப் பெறும் நல்ல உள்ளம், கொடை உள்ளமே யாகும்! நம் வாழ்கையின் பயனே கொடுத்துப் புகழ் பெற்று வாழ்தல் ஆகும் இதனை வள்ளுவர்,
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு!
என்ற குறட்பாவில் குறிப்பிடுகிறார்! இருப்பதை எடுத்து இல்லாருக்கு வழங்கும் ஈகையைப் பற்றித் திருவள்ளுவர் கூறும் பத்துப் பாடல்களும் பொருட்செறிவு மிக்கவை ஆகும்.
ஈகை அதிகாரத்தின் முதற் குறளே, தனித் தன்மை வாய்ந்தது.வறியவர் ஒருவருக்கு நாம் கொடுக்கும் பொருளை வள்ளுவர் ‘ஓன்று’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் ஒன்று என்ற சொல்லுக்கு, – தேவையான ஓன்று, விரும்பிய ஓன்று என்றெல்லாம் விளக்கம் கூறுவார்கள்! தம்மிடம் இருக்கும் பொருட் செல்வத்தையும் அது குறிக்கும்! ஒருவர் எந்தப் பொருளில் வறியவராக இருக்கிறாரோ, அந்தப் பொருளை வழங்குவதே ஈகை ஆகும். இந்தப்பொருள் செல்வம், உணவு, ஆகியவற்றை மட்டுமே குறிக்கும். ஆனால் அறிவில் வறியவராய் இருப்போர்க்கு அறிவை வழங்குவதும் ஈகையே ஆகும்! ஆகவே,
”ஆங்கோர் எழைக்கு எழுத்தறிவித்தல்” என்று மகாகவி பாரதியார் பாடிய கல்வியை வழங்குவதும் ஈகையே ஆகும் . ”வறியார்க்கு ஒன்றுஈவதே ஈகை ” என்ற தொடரில் உள்ள ஒன்று என்ற சொல் விரிந்த பொருளுடையதாகும்! எழுத்தறிவில்லார்க்குக் கல்வி யும், பசித்தோர்க்கு உணவும், ஊக்கம் குறைந்தோருக்கு உரிய எழுச்சிதரும் அறிவுரையும், வழங்க வேண்டும் என்பதையே பாரதியார் பாடினார்.
இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் கனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம்பதி னாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்.
என்று கல்விக் கொடை பற்றிப் பாடிய பாரதியார் ,
நிதிமி குந்தவர் பொற்குவை தாரீர்!
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர் !
என்ற பாடற்பகுதியில் பொற்குவை, காசுகள், வாய்ச்சொல், உடலுழைப்பு ஆகிய வற்றைக் கொடைப் பட்டியலில் சேர்க்கிறார்.
ஆகவே ஈகை பற்றிய திருக்குறள் காட்டும் ‘ஓன்று’ என்ற பொருள் பொதிந்த சொல்லின் பொருளின் விரிவு புலனாகின்றது!
அந்த ”ஒன்றையும்” கொடுக்கும்போது, ஈகை புரிபவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அந்த அதிகாரத்தின் மூன்றாவது குறட் பாவில் கூறுகிறார்!
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையார் கண்ணே உள! (223)
என்பது அப்பாடல்! இந்தப் பாடலுக்குப் பரிமேலழகர் , இலன் என்னும் எவ்வம் உரையாயாமையும் , ஈதலும் ஆகிய இரண்டும் நற்குடிப் பிறந்தாரின் நற்பண்புகள் ஆகும் என்கிறார். உள என்னும் பன்மைச் சொல் இவை இரண்டையும் குறிக்கிறது என்பார் அவர். இவ்வாறு அவர் உரை கூறக் காரணம் மற்றோர் உரைகாரர், வறியவனான ஒருவன் தன்னிடம் பொருள் வேண்டி வந்த ஒருவனிடம் யான் இல்லாதவன் ஆயினேன் என்று தன் வறுமை நிலையைச் சொல்லாமல், எவ்வாறாயினும் ஈதல் வேண்டும் என்று ஒரே செயலாகக் கூறிய உரையே! அதனை இந்தப் பன்மை விகுதியைக் காட்டி மறுத்தார்!
இவ்வுரையின் சிறப்பு பரிமேலழகர் காட்டிய சிறந்த செயல்களுக்கும் மேலே பல பொருள்களைத் தருகிறது. சிவஞானமுனிவர் தம் நன்னூல் உரையில் , ‘இலன் என்னும் எவ்வம் உரையாமை” என்ற தொடருக்கு,
(1) தம்மிடம் பொருள் பெற்ற ஒருவன் மீண்டும் பிறர்பால் சென்று தன்னிடம் ஏதுமில்லை என்று கூறாத வகையில் பெரும் பொருள் ஈதல் வேண்டும் என்றும்
(2) தான் பெரும்பொருளை ஈந்தபின் ஈந்தவன் பொருளிழப்பால் வறுமை அடைந்து பிறர்பால் ”இலன் ஆயினேன் என்று தன் துன்பத்தைக் கூறாத வண்ணம் அளவறிந்து கொடுத்தல் என்றும் இரண்டு பொருள் கூறினார்!
இனி, இக்குறளுக்கு மேலும் பல பொருள்கள் விரிவதை இங்கே காணலாம்!
(1) தன்னை நாடி வந்தவனிடம், தன்னிடத்துள் உள்ள வறுமையை ”இலன்” என்று கூறி வந்தவனிடம் தன் துன்பத்தை கூறாமல் ஈதல் என்றும்,
(2) வந்தவன் தன்னிடம் ஏதுமில்லை என்று கூறும் முன்னரே பசித்தோன் முகம் பார்த்துக் குறிப்புணர்ந்து தானே முன்வந்து ஈதல் என்றும்,
(3) வந்தவனிடம் உள்ள வறுமையைச் சுட்டிக்காட்டி ‘இவன் ஏதுமே இல்லாதவன்” என்று இகழ்ந்து கூறாமல் கொடுத்தல் என்றும் ,
(4) தன்னிடம் பொருள் பெற்றவன், தன்னைப் போலவே வறியவராக வருவோரிடத்தில் அவர்கள் கேட்கும் முன்னதாகத் தானே ஈயும் வண்ணம் பெரும் பொருள் ஈந்து தனது ஈகைப்பண்பைப் பெற்றவனிடத்திலும் உருவாக் குதல் என்றும் பொருள் தருகிறது
தன்னிடம் கொடை பெற்றவன், மீண்டும் கொடுத்தவனின் கொடைப் பண்பை உடனே பெற்ற நிகழ்ச்சி வில்லிபாரதத்தில் உள்ளது. வறியவனாக வேடம் புனைந்து கர்ணனை நோக்கி வந்த கண்ணபிரான், கர்ணனின் செய் புண்ணி யத்தைப் பெற்ற பின், தாமே கர்ணனை நோக்கி” உனக்கு என்ன வரம் வேண்டும்? ” என்று கேட்டாரே! அதுதான் கொடைப் பண்பு பரவும் முறை!
முன்னாளில் யாருமற்ற அனாதையாக இருந்த கர்ணனே தனக்கு அங்க தேசத்தை வழங்கிய துரியோதனனிடம் கொடைப்பண்பை மேலும் வளர்த்துக் கொண்டான் என்று பாரதக்கதை கூறுகிறது.
இக்குறட் பாவுக்குப் பன்னிரண்டு பொருள்கள் கூறலாம். வாசகர்கள் முயற்சி செய்க ! பின்னர் நானே ஆதாரங்களுடன் விளக்குவேன்!
— நாகேஸ்வரி அண்ணாமலை.
துப்பாக்கி மூலம் நடக்கும் வன்முறைச் சம்பவங்களும் கருப்பு இன அமெரிக்கர்களை வெள்ளை இனக் காவல் அதிகாரிகள் தேவையில்லாமல் சுட்டுக் கொல்வதும் அதிகமாக இப்போது அமெரிக்காவில் நடந்து வருகின்றன. ஜூன் மாதம் 15-ஆம் தேதியன்று இன்னொரு கொடிய சம்பவம் இங்கு நடந்திருக்கிறது. தென் கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த சார்ல்ஸ்டன் என்னும் ஊரில் கருப்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தேவாலயத்தில் அம்மாநில செனட்டரும் அந்த தேவாலயத்தின் போதகருமான கெலெமென்டா பிங்க்னி (Clementa Pinckney) உரையாற்றிக்கொண்டிருக்கும்போது இருபத்தி ஒன்று வயதே ஆன ஒரு வெள்ளை இன வெறியன் தேவாலயத்திற்குள் புகுந்து ஒரு மணி நேரம் அவருடைய உரையைக் கேட்டுவிட்டுத் திடீரென்று துப்பாக்கியை எடுத்து அவரைச் சேர்த்து ஒன்பது பேரைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றிருக்கிறான். அந்த அராஜகச் செயலைச் செய்துகொண்டிருக்கும்போதே ‘கருப்பர்களாகிய நீங்கள் அதிக எண்ணிக்கையில் வளர்ந்து வருகிறீர்கள். நாட்டை (அமெரிக்காவை) எங்களிடமிருந்து அபகரிக்கப் பார்க்கிறீர்கள்’ என்று கூவியிருக்கிறான். அவன் தன்னுடைய ஃபேஸ் புக் பக்கத்தில் ஆப்பிரிக்காவின் ரொடீஷியாவிலும் (இன்றைய ஜிம்பாவ்வே) தென் ஆப்பிரிக்காவிலும் வெள்ளையர் ஆட்சி நடந்த சமயத்தில் இருந்த கொடிகளைத் தன் சட்டையில் அணிந்துகொண்டு இருக்கும் படத்தை வெளியிட்டிருக்கிறான். வெள்ளை இனத்தவர்களின் ஆதிக்கம் இவனுடைய தாரகமந்திரம்.
சார்ல்ஸ்டன் ஊரில் உள்ள கிறித்துவ தேவாலயம் மிகவும் பழமை வய்ந்தது; அமெரிக்க சரித்திரத்தில் முக்கியத்துவம் பெற்றது. ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்கள் அமெரிக்காவில் வெள்ளையர்களால் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். ஆடுமாடுகளைப் போலவும் வெள்ளையர்களின் உடமைகள் போலவும் நடத்தப்பட்டனர். ஆப்பிரிக்கர்களுடைய மதங்களிலிருந்து அவர்களை முழுவதுமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றிய பிறகு இறைவனின் சன்னிதானமான தேவாலயங்களில் அவர்களுக்கு சம அந்தஸ்து கொடுக்காமல் அவர்களுக்கென்று தனி இடம் ஒதுக்கினார்கள். அடிமைகள் தங்களுக்கென்று தனித் தேவாலயங்கள் கட்டிக்கொள்ளவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இவர்களுக்கு விடுதலை கொடுப்பதா வேண்டாமா என்ற சர்ச்சையில் 1861-இல் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது.
இதற்கு முன்பே ஆப்பிரிக்க அடிமைகளின் விடுதலைக்காக 1822-லேயே புரட்சி ஏற்படுத்தச் சிலர் முனைந்தனர். இவர்கள் இந்தத் தேவாலயத்தில்தான் ரகசியமாகக் கூடுவார்களாம். இவர்களின் முயற்சியை அறிந்துகொண்ட அரசு அதிகாரிகள் இவர்களில் 313 பேரைக் கைதுசெய்து 35 பேரைத் தூக்கிலிட்டனர். வெள்ளை இன வெறியர்கள் இந்தத் தேவாலயத்திற்குத் தீவைத்து இதை அழித்தனர். 1863-இல் ஜனாதிபதி லிங்கன் எல்லா அடிமைகளுக்கும் விடுதலை அளித்து அறிக்கை வெளியிட்ட பிறகு எல்லாக் கருப்பர்களுக்கும் விடுதலை அளிக்கப்பட்டாலும் அவர்கள் தொடர்ந்து வெள்ளையர்களின் கொடுமைக்கு ஆளாகினர். கருப்பர்கள் தாங்கள் வழிபடுவதற்கு ஏதுவாக தனித் தேவாலயங்கள் கட்டிக்கொண்டனர். 1891-இல் சார்ல்ஸ்டன் தேவாலயம் மறுபடி புதுப்பித்துக் கட்டப்பட்டது. கருப்பர்களின் விடுதலை முயற்சிகளுக்குத் தலைவராக இருந்தவருக்கு இந்தத் தேவாலயத்தில் ஒரு நினைவாலயம் இருக்கிறது. இது போன்ற பல தேவாலயங்கள் அமெரிக்காவின் தெற்குப் பகுதி முழுவதும் கட்டப்படுவதற்கு இதுதான் முன்னோடியாகத் திகழ்ந்தது. இப்படிப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேவாலயத்தை இந்த வெள்ளை இன வெறியன் நிறையக் கருப்பர்களைக் கொல்வதற்கு ஏற்ற இடமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறான்.
சார்ல்ஸ்டனில் வெள்ளையர்கள், யூதர்கள், கருப்பர்கள் என்று பல இனத்தவர் வாழ்ந்தாலும் கருப்பர்கள்தான் அதிகம். இந்த தேவாலயத்திற்கு வருபவர்களில் பெரும்பாலானோர் கருப்பர்கள். பல அப்பாவி நிராயுதபாணி கருப்பர்களைச் சுட்டுக் கொன்ற பல வெள்ளைக் காவல் அதிகாரிகள் போதிய ஆதாரங்கள் இல்லாதால் தண்டிக்கப்படாமல் தப்பித்துக்கொண்டனர். இவர்களைத் தண்டிக்கத் தேவையான ஆதாரங்களைச் சேகரிக்க அவர்கள் தங்கள் உடம்பில் காமராக்களைப் பொருத்திக்கொள்ள வேண்டும் என்ற சட்டம் தென் கரோலினா மாநிலத்தில் இயற்றப்படக் காரணமாக இருந்த மாநில செனட்டர் பிங்க்னி இங்குதான் மதபோதகருமாக இருந்தார். இந்தத் தேவாலயத்தைத் தாக்குவதன் மூலம் கருப்பர்களின் மேல் தனக்கிருந்த வெறுப்பை கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ரௌஃப் காட்டிக்கொண்டான்.
இந்தச் சம்பவம் நடந்துவுடனேயே தென் கரோலினா மாநில ஆளுநர் நிக்கி ஹேலி (இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்) மாநில சட்டமன்ற வளாகத்திற்குள் இருந்த கான்பிடரேட் கொடியை அகற்றிவிட வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தார். கான்பிடரேட் கொடி பற்றி ஒரு சிறிய விளக்கம். அடிமைகளுக்கு விடுதலை கொடுக்கக் கூடாது என்று வாதாடிய தென் மாநிலங்கள், கான்பிடரேட் என்ற ஒரு நாடாகத் தங்களை அமைத்துக்கொண்டு, அடிமைகளுக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்று விரும்பிய வட மாநிலங்கள் சேர்ந்து அமைத்துக்கொண்ட யூனியனைத் தாக்கின. கான்பிடரேட் சார்ல்ஸ்டனில்தான் முதன் முதலில் பீரங்கியை வெடித்துப் போரைத் துவக்கியது. பதிமூன்று மாநிலங்கள் அடங்கிய அமெரிக்காவிலிருந்து பிரிந்து தனி நாடாக இயங்கி தொடர்ந்து ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்று திட்டமிட்ட பிரிவினைவாதிகள் இவர்கள். கான்பிடரேட் கொடி இன்னும் சில தென்மாநிலத் தலைநகரங்களில் முக்கியமான இடங்களில் வைக்கப்பட்டிருக்கிறது. இது போன்று மற்ற சில கான்பிடரேட் சின்னங்களும் இன்னும் இம்மாநிலங்களில் இருப்பதால் கருப்பர்கள் வெள்ளையர்களுக்கு அடிமை என்னும் எண்ணத்தை உருவாக்கிக்கொண்டிருப்பதாகவும் அவற்றை அகற்றுவதன் மூலம் இப்போது ஒன்பது கருப்பர்களைக் கொலைசெய்த ரௌஃப் போன்றவர்களின் மனதிலிருந்து அந்த எண்ணத்தை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல வெள்ளையர்கள் உட்பட பலரிடம் தோன்றியிருக்கிறது. இந்தக் கொடிய சம்பவத்திற்குப் பிறகு எல்லா இனத்தவர்களும் இந்தத் தேவாலயத்தில் கூடி தாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பதாக உலகுக்குக் காட்டியிருக்கிறார்கள்.
கருப்பர்களுக்கு அடிமைத்தளையிலிருந்து விடுதலை கிடைத்து 150 ஆண்டுகளும் அவர்களுக்கு குடிமையுரிமைகள் கிடைத்து ஐம்பது ஆண்டுகளும் ஆகியிருந்தும் இன்னும் அவர்களைத் தங்களுக்குச் சமமாக நினைக்காதவர்கள் வெள்ளையர்களிடையே இருக்கிறார்கள். இவர்கள் மனதில் தாங்கள் உயர்ந்த இனத்தவர்கள் என்ற எண்ணம் நன்றாகவே ஊறிப்போயிருக்கிறது. இப்படிப்பட்டவர்களில் ஒருவன்தான் இப்போது சார்ல்ஸ்டனில் ஒன்பது பேரைக் கொன்ற வெள்ளை இன வெறியன். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய பண்ணைக்காரன் கருப்பர்கள் அடிமைகளாக இருந்தபோது எவ்வளவோ சந்தோஷமாக இருந்தார்கள் என்று திருவாய் மலர்ந்திருந்தான். எத்தனை தூரம் கருப்பர்களை வெறுத்தால் இப்படிக் கூறியிருப்பான்?
2001, செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதிக்குப் பிறகு அல்கொய்தாவின் செல்வாக்குக்கு உட்பட்ட இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அமெரிக்கர்கள் வெள்ளை இன வெறியர்களாலும் அமெரிக்க அரசை எதிர்க்கும் தீவிரவாதிகளாலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.
இந்தியாவில் காலம் காலமாக உயர் ஜாதிகளால் கொடுமைப்படுத்தப்பட்ட தலித்துகளுக்கு வழங்கப்படும் சலுகைகளைக் கண்டு குமுறும் உயர்ஜாதி மக்களைப்போல் அமெரிக்காவிலும், அவர்களின் இஷ்டத்திற்கு மாறாக அவர்களின் இருப்பிடங்களிலிருந்து வலுக்கட்டாயமாகக் கொண்டுவரப்பட்டு அடிமைகளாக வாழ்ந்த கருப்பர்களின் மேல் இன்னும் வன்மம் பாராட்டும் வெள்ளை இன வெறியர்களுக்கு கருப்பர்களை அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்த கான்பிடரேட் நாட்டுக் கொடியை அகற்றுவதில் விருப்பம் இல்லை. ஏதோ ஒரு தனிப்பட்டவன் செய்த கொலைக்கும் கான்பிடரேட் கொடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இவர்கள் வாதிடுகிறார்கள். அது மட்டுமல்ல, கொடியை அகற்றுவதைத் தொடர்ந்து கான்பிடரேட்டின் மற்ற சில அடையாளங்களையும் நீக்குவதற்கு இது வழிகோலும் என்றும் கான்பிடரேட் ராணுவத்தில் பணிபுரிந்த தங்கள் மூதாதையர்களின் தியாகங்கள் எல்லாம் மறக்கப்படுவதோடு அவர்கள் எல்லோரும் கொலை வெறியர்கள் என்று சித்தரிக்கப்படுவதை எப்படித் தங்களால் ஒப்புக்கொள்ள முடியும் என்றும் கேட்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை கான்பிடரேட் நாட்டை உருவாக்கப் பாடுபட்டவர்கள் அமெரிக்கர்களின் மனதில் எப்போதும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதே.
இன்னொரு வெள்ளையர் கான்பிடரேட் நினைவுகளையே மக்களிடமிருந்து அகற்றுவதன் மூலம் தங்கள் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் கம்யூனிஸ கொள்கைகள் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
கருப்பர்களின் மேல் இத்தனை வெறுப்பும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அப்படியொன்றும் பெரியதல்ல என்றும் நினைக்கும் வெள்ளையர்களிடையே இனி கான்பிடரேட் கொடியைத் தங்கள் கடையில் விற்கப் போவதில்லை என்று சில பெரிய கார்ப்போரேட் நிறுவனங்கள் முடிவுசெய்திருப்பதும் தென் கரோலினாவோடு டென்னஸி, வட கரோலினா, மிஸிஸிபி, அலபாமா போன்ற மற்ற தென் மாநிலங்களும் கான்பிடரேட்டோடு தங்களுக்கிருக்கும் எல்லாத் தொடர்புகளையும் துண்டித்துக்கொள்ளப் போவதாக அறிவித்திருப்பதும் – தங்கள் மாநிலக் கொடிகளிலிருந்து கான்பிடரேட் கொடியின் அடையாளத்தை அகற்றுவது, கான்பிடரேட் கொடிகள் விற்பனையை நிறுத்துவது போன்றவை – பெரிய ஆறுதலைத் தருகிறது. பத்து வருஷங்களுக்கு முன் கான்பிடரேட் கொடியைத் தன் கையில் பச்சை குத்திக்கொண்ட ஒருவர் அதைத் தன் கையிலிருந்து அகற்றிவிட முடிவுசெய்து ஒரு பியூட்டி பார்லருக்கு வந்திருக்கிறார் அங்கிருந்த ஊழியரிடம் சார்ல்ஸ்டன் தேவாலயத்தில் நடந்த கொடிய சம்பவத்திற்குப் பிறகு ஒரு கருப்பினப் பெண்ணின் முகத்தில் இருந்த சோகத்தைப் பார்த்து தான் அதை அகற்றிவிட முடிவுசெய்ததாகக் கூறியிருக்கிறார். இவரை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற வெள்ளையர்களும் மனம் மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
—கவிஞர் காவிரிமைந்தன்.
‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்றான் வள்ளுவன். மண்ணில் பிறந்த உயிர்கள் யாவும் ஒன்றையொன்று சார்ந்துவாழும் உன்னதம் ஜீவனில் தொடங்கியது. மானிடர்களே இந்த சொந்தமும் பந்தமும் மகத்துவமானது. ஈருயிர் இணைந்து ஓருயிர் தோற்றுவிக்க ஜனனக் கணக்கில் பூமிக்கு ஒரு வரவு! ஈன்றவள் நெஞ்சம் பெரிதுவக்க ‘தாய்’ என்று அவளும் மனதில் ஆர்ப்பரிக்க அந்த ஆனந்த வைபவத்தை அணுவணுவாய் ரசிப்பதிலே பெண்மை பெறும் சுகம் கோடியென்பேன்! பிஞ்சு மழலை முகம் பார்த்து அவள் சொல்லரும்பும் வேளையிலே என்ன என்ன வார்த்தை வரும்? கண்ணே கனியே முத்தே அமுதே என்று அல்லும் பகலும் தன் பிள்ளையே உலகம் என்றன்றோ மாறிவிடுவாள்?
தன்னுறக்கம் மறந்து தன்னுயிராய் நினைந்து அன்னையவள் பாடும் பாடல் பிள்ளைக்கனி அமுதே! மழலையின் சின்னச் சின்ன சிணுங்கல்களும் சிங்கார அசைவுகளும் தாய் அவளுக்கு மட்டுமே தனித்துவமாய் புரியும்! அந்த இன்பபுரி நோக்கி இதயம் ஓடிவர, வண்ணக் குழந்தையது வளர்பிறைபோல் நிதம் வளர, தவழ்வதும் தாவி வருவதும் நின்று நடப்பதும் தாயவள் காணும் திருவிழாக்களே!
ராமு திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் வரிகளை வழங்க, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை முழங்க, இன்னிசைப் பூங்குயில் பி.சுசீலாவின் குரலில் இழைந்து வரும் பாட்டு!
திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதில் வல்லமை பெற்ற கவிஞர்கள் பலரை நாம் கண்டிருக்கிறோம். கண்டு கொண்டிருக்கிறோம்! என்றாலும் கவியரசர் கண்ணதாசன் அவர்களது முத்திரை தனித்துவம் கதையை உள்வாங்கி அந்தப் பாத்திரங்களைப் பிரதி பிம்பம் எடுத்துக் காட்டும் கவிஞரை எவர்தான் இன்று வரை விஞ்சியிருக்கிறார் சொல்லுங்கள்?
தாயிருந்து பள்ளி கொண்ட மஞ்சம் – அதில்
தானிருக்கத் துள்ளும் எந்தன் நெஞ்சம்
கதையின் போக்கில் பிள்ளையின் அன்னை ஒரு கோர விபத்தில் மரணமடைகிறாள். அதைப் பார்த்த சிறுவன் அதிர்ச்சியில் பேசும் தன்மை இழக்கிறான். பட்டாளத்தில் இருந்து திரும்பும் தந்தை குழந்தையின் எதிர்கால வாழ்வுக்காக, அவன் மீண்டும் பேசும் சக்தி பெற வேண்டும் என்கிற லட்சியத்துடன் வாழ்கிறான் என்று நகர்கிறது கதை. இவர்களின் வாழ்விலே இன்னொருத்தி நுழைகிறாள். கனிந்த மனம் காதல் மனமாகிறது! தாயென்று ஆகும் முன்னரே அப் பிள்ளையின் தாயாகவே மாறிவிடுகிறாள் சொற்களில் அந்தக் கதையின் சூத்திரங்களைப் பொருத்தி அற்புதமாகப் பாடல் யாத்துத் தந்துவிடுகிறார் பாருங்கள்.
பெற்றவள் உள்ளம் போல் பெரிதும் உவக்க, மற்றவள் ஒருத்தி அப்பதவிக்கு வர மன்றாடுகிறாள். தாயாய் தானும் மாறும் முன்னே தாய்மையின் தரிசனம் காட்டுகின்றாள். தத்தி நடக்கும் முத்துச் செல்வத்தை தங்கத் தேரில் உலவ வைக்கிறாள்! பிள்ளைத் தமிழின் பேரின்பத்தை சொல்லிச் சொல்லி இன்பம் துய்க்கிறாள்!
பெண்ணின் மனது என்ன சொல்லும் என்பதை உணர்ந்த கண்ணதாசன் என்று சொல்லலாமா? இல்லை … இல்லை… உணர்த்திய கண்ணதாசன் வார்த்தைச் சரங்களைத் தொடுக்கிறார்!
ரசிக்கத் தெரிந்த எந்த மனமும் இந்தப் பாடலைக் கேட்டு மயங்கத் தவறியதில்லை!
திரைப்படம்: ராமு
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.
பாடியவர்: பி.சுசீலா
நடிப்பு: கே.ஆர்.விஜயா, ஜெமினிகணேசன், மாஸ்டர் ராஜ்குமார்
முத்துச்சிப்பி மெல்ல மெல்ல திறந்து வரும்
முத்தம் ஒன்று சத்தம் இன்றிப் பிறந்து வரும்
அம்மம்மா….ஆ அப்பப்பா… ஆ…
தித்திக்கும் சேதி வரும்…. (முத்துச்சிப்பி)
தாயிருந்து பள்ளி கொண்ட மஞ்சம் – அதில்
தானிருக்கத் துள்ளும் எந்தன் நெஞ்சம்
சென்ற உலகம் இன்று திரும்பும்
தேடி எடுத்தால் கோடி மலரும்!
அம்மம்மா….ஆ அப்பப்பா… ஆ…
தித்திக்கும் சேதி வரும்…. (முத்துச்சிப்பி)
மூவருக்கும் சின்னச் சின்ன வீடு – அதில்
மூன்றுதமிழ் வந்ததென்று பாடு
அன்பு மொழியும் இன்ப இசையும்
தங்க மழையும் பொங்கி வழியும்
அம்மம்மா….ஆ அப்பப்பா… ஆ…
தித்திக்கும் சேதி வரும்…. (முத்துச்சிப்பி)
காணொளி: https://youtu.be/vb07dtn23mg