திருக்குறளுக்குப் புது விளக்கம் – 4
– புலவர் இரா. இராமமூர்த்தி.
உலகில் எல்லாராலும் போற்றப் பெறும் நல்ல உள்ளம், கொடை உள்ளமே யாகும்! நம் வாழ்கையின் பயனே கொடுத்துப் புகழ் பெற்று வாழ்தல் ஆகும் இதனை வள்ளுவர்,
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு!
என்ற குறட்பாவில் குறிப்பிடுகிறார்! இருப்பதை எடுத்து இல்லாருக்கு வழங்கும் ஈகையைப் பற்றித் திருவள்ளுவர் கூறும் பத்துப் பாடல்களும் பொருட்செறிவு மிக்கவை ஆகும்.
ஈகை அதிகாரத்தின் முதற் குறளே, தனித் தன்மை வாய்ந்தது.வறியவர் ஒருவருக்கு நாம் கொடுக்கும் பொருளை வள்ளுவர் ‘ஓன்று’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் ஒன்று என்ற சொல்லுக்கு, – தேவையான ஓன்று, விரும்பிய ஓன்று என்றெல்லாம் விளக்கம் கூறுவார்கள்! தம்மிடம் இருக்கும் பொருட் செல்வத்தையும் அது குறிக்கும்! ஒருவர் எந்தப் பொருளில் வறியவராக இருக்கிறாரோ, அந்தப் பொருளை வழங்குவதே ஈகை ஆகும். இந்தப்பொருள் செல்வம், உணவு, ஆகியவற்றை மட்டுமே குறிக்கும். ஆனால் அறிவில் வறியவராய் இருப்போர்க்கு அறிவை வழங்குவதும் ஈகையே ஆகும்! ஆகவே,
”ஆங்கோர் எழைக்கு எழுத்தறிவித்தல்” என்று மகாகவி பாரதியார் பாடிய கல்வியை வழங்குவதும் ஈகையே ஆகும் . ”வறியார்க்கு ஒன்றுஈவதே ஈகை ” என்ற தொடரில் உள்ள ஒன்று என்ற சொல் விரிந்த பொருளுடையதாகும்! எழுத்தறிவில்லார்க்குக் கல்வி யும், பசித்தோர்க்கு உணவும், ஊக்கம் குறைந்தோருக்கு உரிய எழுச்சிதரும் அறிவுரையும், வழங்க வேண்டும் என்பதையே பாரதியார் பாடினார்.
இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் கனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம்பதி னாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்.
என்று கல்விக் கொடை பற்றிப் பாடிய பாரதியார் ,
நிதிமி குந்தவர் பொற்குவை தாரீர்!
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர் !
என்ற பாடற்பகுதியில் பொற்குவை, காசுகள், வாய்ச்சொல், உடலுழைப்பு ஆகிய வற்றைக் கொடைப் பட்டியலில் சேர்க்கிறார்.
ஆகவே ஈகை பற்றிய திருக்குறள் காட்டும் ‘ஓன்று’ என்ற பொருள் பொதிந்த சொல்லின் பொருளின் விரிவு புலனாகின்றது!
அந்த ”ஒன்றையும்” கொடுக்கும்போது, ஈகை புரிபவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அந்த அதிகாரத்தின் மூன்றாவது குறட் பாவில் கூறுகிறார்!
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையார் கண்ணே உள! (223)
என்பது அப்பாடல்! இந்தப் பாடலுக்குப் பரிமேலழகர் , இலன் என்னும் எவ்வம் உரையாயாமையும் , ஈதலும் ஆகிய இரண்டும் நற்குடிப் பிறந்தாரின் நற்பண்புகள் ஆகும் என்கிறார். உள என்னும் பன்மைச் சொல் இவை இரண்டையும் குறிக்கிறது என்பார் அவர். இவ்வாறு அவர் உரை கூறக் காரணம் மற்றோர் உரைகாரர், வறியவனான ஒருவன் தன்னிடம் பொருள் வேண்டி வந்த ஒருவனிடம் யான் இல்லாதவன் ஆயினேன் என்று தன் வறுமை நிலையைச் சொல்லாமல், எவ்வாறாயினும் ஈதல் வேண்டும் என்று ஒரே செயலாகக் கூறிய உரையே! அதனை இந்தப் பன்மை விகுதியைக் காட்டி மறுத்தார்!
இவ்வுரையின் சிறப்பு பரிமேலழகர் காட்டிய சிறந்த செயல்களுக்கும் மேலே பல பொருள்களைத் தருகிறது. சிவஞானமுனிவர் தம் நன்னூல் உரையில் , ‘இலன் என்னும் எவ்வம் உரையாமை” என்ற தொடருக்கு,
(1) தம்மிடம் பொருள் பெற்ற ஒருவன் மீண்டும் பிறர்பால் சென்று தன்னிடம் ஏதுமில்லை என்று கூறாத வகையில் பெரும் பொருள் ஈதல் வேண்டும் என்றும்
(2) தான் பெரும்பொருளை ஈந்தபின் ஈந்தவன் பொருளிழப்பால் வறுமை அடைந்து பிறர்பால் ”இலன் ஆயினேன் என்று தன் துன்பத்தைக் கூறாத வண்ணம் அளவறிந்து கொடுத்தல் என்றும் இரண்டு பொருள் கூறினார்!
இனி, இக்குறளுக்கு மேலும் பல பொருள்கள் விரிவதை இங்கே காணலாம்!
(1) தன்னை நாடி வந்தவனிடம், தன்னிடத்துள் உள்ள வறுமையை ”இலன்” என்று கூறி வந்தவனிடம் தன் துன்பத்தை கூறாமல் ஈதல் என்றும்,
(2) வந்தவன் தன்னிடம் ஏதுமில்லை என்று கூறும் முன்னரே பசித்தோன் முகம் பார்த்துக் குறிப்புணர்ந்து தானே முன்வந்து ஈதல் என்றும்,
(3) வந்தவனிடம் உள்ள வறுமையைச் சுட்டிக்காட்டி ‘இவன் ஏதுமே இல்லாதவன்” என்று இகழ்ந்து கூறாமல் கொடுத்தல் என்றும் ,
(4) தன்னிடம் பொருள் பெற்றவன், தன்னைப் போலவே வறியவராக வருவோரிடத்தில் அவர்கள் கேட்கும் முன்னதாகத் தானே ஈயும் வண்ணம் பெரும் பொருள் ஈந்து தனது ஈகைப்பண்பைப் பெற்றவனிடத்திலும் உருவாக் குதல் என்றும் பொருள் தருகிறது
தன்னிடம் கொடை பெற்றவன், மீண்டும் கொடுத்தவனின் கொடைப் பண்பை உடனே பெற்ற நிகழ்ச்சி வில்லிபாரதத்தில் உள்ளது. வறியவனாக வேடம் புனைந்து கர்ணனை நோக்கி வந்த கண்ணபிரான், கர்ணனின் செய் புண்ணி யத்தைப் பெற்ற பின், தாமே கர்ணனை நோக்கி” உனக்கு என்ன வரம் வேண்டும்? ” என்று கேட்டாரே! அதுதான் கொடைப் பண்பு பரவும் முறை!
முன்னாளில் யாருமற்ற அனாதையாக இருந்த கர்ணனே தனக்கு அங்க தேசத்தை வழங்கிய துரியோதனனிடம் கொடைப்பண்பை மேலும் வளர்த்துக் கொண்டான் என்று பாரதக்கதை கூறுகிறது.
இக்குறட் பாவுக்குப் பன்னிரண்டு பொருள்கள் கூறலாம். வாசகர்கள் முயற்சி செய்க ! பின்னர் நானே ஆதாரங்களுடன் விளக்குவேன்!
“இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையார் கண்ணே உள! (223)” என்ற குறளுக்கு,
புலவர் இரா. ராமமூர்த்தி அவர்களின் விளக்கம், படிக்கும் வாசகனுக்குக் கொடைத்தன்மையைத் தூண்டும் விதமாக இருக்கிறது. துரியோதனனிடம் அங்கதேசத்தைப் பெற்றுக் கொண்ட கர்ணன், அவனிடம் இருந்துதான் கொடைத் தன்மையை அறிந்து கொண்டான் என்பது மிக அருமையான, சரியான சிந்தனை. இதை மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டே இருந்தால் படிப்போர் மனதில் கொடைத்தன்மை பெருகும்..நன்றி.
அன்பன்,
மீ.விசுவநாதன்