என்று மடியும் அமெரிக்காவின் இனதுவேஷம்?
— நாகேஸ்வரி அண்ணாமலை.
என்று மடியும் அமெரிக்காவின் இனதுவேஷம்?
துப்பாக்கி மூலம் நடக்கும் வன்முறைச் சம்பவங்களும் கருப்பு இன அமெரிக்கர்களை வெள்ளை இனக் காவல் அதிகாரிகள் தேவையில்லாமல் சுட்டுக் கொல்வதும் அதிகமாக இப்போது அமெரிக்காவில் நடந்து வருகின்றன. ஜூன் மாதம் 15-ஆம் தேதியன்று இன்னொரு கொடிய சம்பவம் இங்கு நடந்திருக்கிறது. தென் கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த சார்ல்ஸ்டன் என்னும் ஊரில் கருப்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தேவாலயத்தில் அம்மாநில செனட்டரும் அந்த தேவாலயத்தின் போதகருமான கெலெமென்டா பிங்க்னி (Clementa Pinckney) உரையாற்றிக்கொண்டிருக்கும்போது இருபத்தி ஒன்று வயதே ஆன ஒரு வெள்ளை இன வெறியன் தேவாலயத்திற்குள் புகுந்து ஒரு மணி நேரம் அவருடைய உரையைக் கேட்டுவிட்டுத் திடீரென்று துப்பாக்கியை எடுத்து அவரைச் சேர்த்து ஒன்பது பேரைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றிருக்கிறான். அந்த அராஜகச் செயலைச் செய்துகொண்டிருக்கும்போதே ‘கருப்பர்களாகிய நீங்கள் அதிக எண்ணிக்கையில் வளர்ந்து வருகிறீர்கள். நாட்டை (அமெரிக்காவை) எங்களிடமிருந்து அபகரிக்கப் பார்க்கிறீர்கள்’ என்று கூவியிருக்கிறான். அவன் தன்னுடைய ஃபேஸ் புக் பக்கத்தில் ஆப்பிரிக்காவின் ரொடீஷியாவிலும் (இன்றைய ஜிம்பாவ்வே) தென் ஆப்பிரிக்காவிலும் வெள்ளையர் ஆட்சி நடந்த சமயத்தில் இருந்த கொடிகளைத் தன் சட்டையில் அணிந்துகொண்டு இருக்கும் படத்தை வெளியிட்டிருக்கிறான். வெள்ளை இனத்தவர்களின் ஆதிக்கம் இவனுடைய தாரகமந்திரம்.
சார்ல்ஸ்டன் ஊரில் உள்ள கிறித்துவ தேவாலயம் மிகவும் பழமை வய்ந்தது; அமெரிக்க சரித்திரத்தில் முக்கியத்துவம் பெற்றது. ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்கள் அமெரிக்காவில் வெள்ளையர்களால் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். ஆடுமாடுகளைப் போலவும் வெள்ளையர்களின் உடமைகள் போலவும் நடத்தப்பட்டனர். ஆப்பிரிக்கர்களுடைய மதங்களிலிருந்து அவர்களை முழுவதுமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றிய பிறகு இறைவனின் சன்னிதானமான தேவாலயங்களில் அவர்களுக்கு சம அந்தஸ்து கொடுக்காமல் அவர்களுக்கென்று தனி இடம் ஒதுக்கினார்கள். அடிமைகள் தங்களுக்கென்று தனித் தேவாலயங்கள் கட்டிக்கொள்ளவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இவர்களுக்கு விடுதலை கொடுப்பதா வேண்டாமா என்ற சர்ச்சையில் 1861-இல் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது.
இதற்கு முன்பே ஆப்பிரிக்க அடிமைகளின் விடுதலைக்காக 1822-லேயே புரட்சி ஏற்படுத்தச் சிலர் முனைந்தனர். இவர்கள் இந்தத் தேவாலயத்தில்தான் ரகசியமாகக் கூடுவார்களாம். இவர்களின் முயற்சியை அறிந்துகொண்ட அரசு அதிகாரிகள் இவர்களில் 313 பேரைக் கைதுசெய்து 35 பேரைத் தூக்கிலிட்டனர். வெள்ளை இன வெறியர்கள் இந்தத் தேவாலயத்திற்குத் தீவைத்து இதை அழித்தனர். 1863-இல் ஜனாதிபதி லிங்கன் எல்லா அடிமைகளுக்கும் விடுதலை அளித்து அறிக்கை வெளியிட்ட பிறகு எல்லாக் கருப்பர்களுக்கும் விடுதலை அளிக்கப்பட்டாலும் அவர்கள் தொடர்ந்து வெள்ளையர்களின் கொடுமைக்கு ஆளாகினர். கருப்பர்கள் தாங்கள் வழிபடுவதற்கு ஏதுவாக தனித் தேவாலயங்கள் கட்டிக்கொண்டனர். 1891-இல் சார்ல்ஸ்டன் தேவாலயம் மறுபடி புதுப்பித்துக் கட்டப்பட்டது. கருப்பர்களின் விடுதலை முயற்சிகளுக்குத் தலைவராக இருந்தவருக்கு இந்தத் தேவாலயத்தில் ஒரு நினைவாலயம் இருக்கிறது. இது போன்ற பல தேவாலயங்கள் அமெரிக்காவின் தெற்குப் பகுதி முழுவதும் கட்டப்படுவதற்கு இதுதான் முன்னோடியாகத் திகழ்ந்தது. இப்படிப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேவாலயத்தை இந்த வெள்ளை இன வெறியன் நிறையக் கருப்பர்களைக் கொல்வதற்கு ஏற்ற இடமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறான்.
சார்ல்ஸ்டனில் வெள்ளையர்கள், யூதர்கள், கருப்பர்கள் என்று பல இனத்தவர் வாழ்ந்தாலும் கருப்பர்கள்தான் அதிகம். இந்த தேவாலயத்திற்கு வருபவர்களில் பெரும்பாலானோர் கருப்பர்கள். பல அப்பாவி நிராயுதபாணி கருப்பர்களைச் சுட்டுக் கொன்ற பல வெள்ளைக் காவல் அதிகாரிகள் போதிய ஆதாரங்கள் இல்லாதால் தண்டிக்கப்படாமல் தப்பித்துக்கொண்டனர். இவர்களைத் தண்டிக்கத் தேவையான ஆதாரங்களைச் சேகரிக்க அவர்கள் தங்கள் உடம்பில் காமராக்களைப் பொருத்திக்கொள்ள வேண்டும் என்ற சட்டம் தென் கரோலினா மாநிலத்தில் இயற்றப்படக் காரணமாக இருந்த மாநில செனட்டர் பிங்க்னி இங்குதான் மதபோதகருமாக இருந்தார். இந்தத் தேவாலயத்தைத் தாக்குவதன் மூலம் கருப்பர்களின் மேல் தனக்கிருந்த வெறுப்பை கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ரௌஃப் காட்டிக்கொண்டான்.
இந்தச் சம்பவம் நடந்துவுடனேயே தென் கரோலினா மாநில ஆளுநர் நிக்கி ஹேலி (இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்) மாநில சட்டமன்ற வளாகத்திற்குள் இருந்த கான்பிடரேட் கொடியை அகற்றிவிட வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தார். கான்பிடரேட் கொடி பற்றி ஒரு சிறிய விளக்கம். அடிமைகளுக்கு விடுதலை கொடுக்கக் கூடாது என்று வாதாடிய தென் மாநிலங்கள், கான்பிடரேட் என்ற ஒரு நாடாகத் தங்களை அமைத்துக்கொண்டு, அடிமைகளுக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்று விரும்பிய வட மாநிலங்கள் சேர்ந்து அமைத்துக்கொண்ட யூனியனைத் தாக்கின. கான்பிடரேட் சார்ல்ஸ்டனில்தான் முதன் முதலில் பீரங்கியை வெடித்துப் போரைத் துவக்கியது. பதிமூன்று மாநிலங்கள் அடங்கிய அமெரிக்காவிலிருந்து பிரிந்து தனி நாடாக இயங்கி தொடர்ந்து ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்று திட்டமிட்ட பிரிவினைவாதிகள் இவர்கள். கான்பிடரேட் கொடி இன்னும் சில தென்மாநிலத் தலைநகரங்களில் முக்கியமான இடங்களில் வைக்கப்பட்டிருக்கிறது. இது போன்று மற்ற சில கான்பிடரேட் சின்னங்களும் இன்னும் இம்மாநிலங்களில் இருப்பதால் கருப்பர்கள் வெள்ளையர்களுக்கு அடிமை என்னும் எண்ணத்தை உருவாக்கிக்கொண்டிருப்பதாகவும் அவற்றை அகற்றுவதன் மூலம் இப்போது ஒன்பது கருப்பர்களைக் கொலைசெய்த ரௌஃப் போன்றவர்களின் மனதிலிருந்து அந்த எண்ணத்தை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல வெள்ளையர்கள் உட்பட பலரிடம் தோன்றியிருக்கிறது. இந்தக் கொடிய சம்பவத்திற்குப் பிறகு எல்லா இனத்தவர்களும் இந்தத் தேவாலயத்தில் கூடி தாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பதாக உலகுக்குக் காட்டியிருக்கிறார்கள்.
கருப்பர்களுக்கு அடிமைத்தளையிலிருந்து விடுதலை கிடைத்து 150 ஆண்டுகளும் அவர்களுக்கு குடிமையுரிமைகள் கிடைத்து ஐம்பது ஆண்டுகளும் ஆகியிருந்தும் இன்னும் அவர்களைத் தங்களுக்குச் சமமாக நினைக்காதவர்கள் வெள்ளையர்களிடையே இருக்கிறார்கள். இவர்கள் மனதில் தாங்கள் உயர்ந்த இனத்தவர்கள் என்ற எண்ணம் நன்றாகவே ஊறிப்போயிருக்கிறது. இப்படிப்பட்டவர்களில் ஒருவன்தான் இப்போது சார்ல்ஸ்டனில் ஒன்பது பேரைக் கொன்ற வெள்ளை இன வெறியன். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய பண்ணைக்காரன் கருப்பர்கள் அடிமைகளாக இருந்தபோது எவ்வளவோ சந்தோஷமாக இருந்தார்கள் என்று திருவாய் மலர்ந்திருந்தான். எத்தனை தூரம் கருப்பர்களை வெறுத்தால் இப்படிக் கூறியிருப்பான்?
2001, செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதிக்குப் பிறகு அல்கொய்தாவின் செல்வாக்குக்கு உட்பட்ட இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அமெரிக்கர்கள் வெள்ளை இன வெறியர்களாலும் அமெரிக்க அரசை எதிர்க்கும் தீவிரவாதிகளாலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.
இந்தியாவில் காலம் காலமாக உயர் ஜாதிகளால் கொடுமைப்படுத்தப்பட்ட தலித்துகளுக்கு வழங்கப்படும் சலுகைகளைக் கண்டு குமுறும் உயர்ஜாதி மக்களைப்போல் அமெரிக்காவிலும், அவர்களின் இஷ்டத்திற்கு மாறாக அவர்களின் இருப்பிடங்களிலிருந்து வலுக்கட்டாயமாகக் கொண்டுவரப்பட்டு அடிமைகளாக வாழ்ந்த கருப்பர்களின் மேல் இன்னும் வன்மம் பாராட்டும் வெள்ளை இன வெறியர்களுக்கு கருப்பர்களை அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்த கான்பிடரேட் நாட்டுக் கொடியை அகற்றுவதில் விருப்பம் இல்லை. ஏதோ ஒரு தனிப்பட்டவன் செய்த கொலைக்கும் கான்பிடரேட் கொடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இவர்கள் வாதிடுகிறார்கள். அது மட்டுமல்ல, கொடியை அகற்றுவதைத் தொடர்ந்து கான்பிடரேட்டின் மற்ற சில அடையாளங்களையும் நீக்குவதற்கு இது வழிகோலும் என்றும் கான்பிடரேட் ராணுவத்தில் பணிபுரிந்த தங்கள் மூதாதையர்களின் தியாகங்கள் எல்லாம் மறக்கப்படுவதோடு அவர்கள் எல்லோரும் கொலை வெறியர்கள் என்று சித்தரிக்கப்படுவதை எப்படித் தங்களால் ஒப்புக்கொள்ள முடியும் என்றும் கேட்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை கான்பிடரேட் நாட்டை உருவாக்கப் பாடுபட்டவர்கள் அமெரிக்கர்களின் மனதில் எப்போதும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதே.
இன்னொரு வெள்ளையர் கான்பிடரேட் நினைவுகளையே மக்களிடமிருந்து அகற்றுவதன் மூலம் தங்கள் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் கம்யூனிஸ கொள்கைகள் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
கருப்பர்களின் மேல் இத்தனை வெறுப்பும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அப்படியொன்றும் பெரியதல்ல என்றும் நினைக்கும் வெள்ளையர்களிடையே இனி கான்பிடரேட் கொடியைத் தங்கள் கடையில் விற்கப் போவதில்லை என்று சில பெரிய கார்ப்போரேட் நிறுவனங்கள் முடிவுசெய்திருப்பதும் தென் கரோலினாவோடு டென்னஸி, வட கரோலினா, மிஸிஸிபி, அலபாமா போன்ற மற்ற தென் மாநிலங்களும் கான்பிடரேட்டோடு தங்களுக்கிருக்கும் எல்லாத் தொடர்புகளையும் துண்டித்துக்கொள்ளப் போவதாக அறிவித்திருப்பதும் – தங்கள் மாநிலக் கொடிகளிலிருந்து கான்பிடரேட் கொடியின் அடையாளத்தை அகற்றுவது, கான்பிடரேட் கொடிகள் விற்பனையை நிறுத்துவது போன்றவை – பெரிய ஆறுதலைத் தருகிறது. பத்து வருஷங்களுக்கு முன் கான்பிடரேட் கொடியைத் தன் கையில் பச்சை குத்திக்கொண்ட ஒருவர் அதைத் தன் கையிலிருந்து அகற்றிவிட முடிவுசெய்து ஒரு பியூட்டி பார்லருக்கு வந்திருக்கிறார் அங்கிருந்த ஊழியரிடம் சார்ல்ஸ்டன் தேவாலயத்தில் நடந்த கொடிய சம்பவத்திற்குப் பிறகு ஒரு கருப்பினப் பெண்ணின் முகத்தில் இருந்த சோகத்தைப் பார்த்து தான் அதை அகற்றிவிட முடிவுசெய்ததாகக் கூறியிருக்கிறார். இவரை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற வெள்ளையர்களும் மனம் மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
பிரச்னை இனத்த்வேஷம் மட்டுமல்ல; எல்லோருக்கும் கைத்துப்பாக்கிகளும் , மற்ற துப்பாக்கிகளும் சுலபமாக கிடைப்பது. ஒருவர் மனதில் ஒரு த்வேஷம் வந்தால் உடனே அது கைக்கும், விரல்களுக்கும் செல்கிறது; துப்பாக்கி கையில் இருப்பதால் உடனே விரல் கொக்கியை இழுத்து, மற்றவர்கள் மீது சுடுகிறது. இதை எப்படி தடுப்பது என்பது இனத்வேஷத்தை விட பெரிய பிரச்சினை.
ஆனால் துப்பாக்கி உற்பத்தி, வியாபார சங்கங்கள் அமெரிக்க்க அரசின் மீது அழுத்தம் கொடுப்பவை ; அமெரிக்க முதலாளித்துவத்தின் தீய நிழல் இந்த துப்பாக்கி குற்றங்கள்.
விஜயராகவன்
வணக்கம். முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் பாலஸ்தீன் இஸ்ரேல் போர் குறித்த நூலை வாங்க விரும்புகிறேன். தயவு செய்து நூல் கிடைக்கும் முகவரி தந்துதவ வேண்டுகிறேன்.
regards, Sivasubramanian,Coimbatore.