Month: July 2015

  • சலாம் கலாம்!

    -கவிஜி 

    அவர் அனுப்பும்
    ஏவுகணைகள் கூடக்
    கருணை கக்கிக் கொண்டுதான் சீறுகிறது…!

    எப்போதும் புன்னகைக்கும்                                         abdulkalam
    பூந்தோட்டமெனக்
    கனவுகளின் திறவுகோலையே
    தருகிறார்…

    எதிர்கால வளையத்தை
    நிகழ்காலக் கரங்களில்
    விட்டு விட்ட
    அக்னிக் கடவுள் அவர்!

    தன்னலம் அற்று
    விண் நலம் காக்கும்
    மண்ணுலகம் தந்த ஹிப்பி
    வைத்த அறிவியல் அவர்!

    சென்ற இடமெல்லாம்
    கல்வியை விட்டுச் செல்லும்
    நூலகம் அவர்!

    சிறகுகளின் வெளிகளைச்
    சின்னஞ்சிறு குழந்தைகளின்
    கண்களில் கொட்டிய விசைக்காரர்…
    கூட இசைக்காரர்!

    மகாத்மா என்றொரு
    சொல்லுக்கு மீண்டும்
    உயிர் கொடுத்தவர்,
    ஆன்மாவின் வலிமையோடு
    இன்னும் இன்னும் நிறைகிறார்…
    நிறைக்கிறார்!

    கனவைக் கண்டே
    தீர்வதுதான் அவருக்கான
    சமர்ப்பணம்!

    மரம் மட்டுமா நட்டார்…?
    மனங்களையும் தான்…
    எனக்கும் எவர்க்குள்ளும்!

    மீண்டும் முளைக்கும்
    சிறகுகளாக
    அவரின் தீட்சண்யம்
    வானம் தாண்டிப் பறக்கும்!

    வந்தே மாதரம்!

     

    Share
  • இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி

    abdul

    டாக்டர் அப்துல் கலாம்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    “உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்;  விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது.  நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை.  ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது.  நீ புரிய வேண்டிய பணிக்கு அவசியம் இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச் செல்கிறது.  ஆகவே உனது இந்த தோல்வியை மறந்திடு.  உனது பிறப்பின் மெய்யான காரணத்தை எண்ணித் தேடிச் செல்.  உன்னோடு நீ ஒன்றாய் ஒன்றிக்கொள்!  கடவுளின் விருப்பத்திற்கு நீ சரணடைவாய்”.

    சுவாமி சிவானந்தா (ரிஷிகேஷில் டாக்டர் அப்துல் கலாமுக்குக் கூறியது)

    “கனவு காண், கனவு காண், கனவு காண்,  பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு.  சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும்.  நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி.  ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும்.  அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”

    டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி (இளைஞருக்குக் கூறியது )

    அக்கினி இடித் தாக்கம்!
    அசுர வல்லமை ஊக்கம்!
    பொறுமை யற்ற புயலிலே
    புதுநெறி படைக்க
    புறப்படும் எமது கனவுகள்!

    டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி

    “இந்தியா உலகத்தின் முன் நிமிர்ந்து நின்றால் ஒழிய, எவரும் நம்மை மதிக்கப் போவதில்லை!  இந்த உலகிலே அச்சத்துக்கு இடமில்லை!  வல்லமைதான் வல்லரசுகளின் மதிப்பைப் பெறுகிறது. படைப்பல வல்லமையும், பொருளாதார ஆற்றலும் நாம் பெற வேண்டும். அவை இரண்டும் ஒன்றை ஒன்றை சார்ந்தவை.”

    டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி

    “3000 ஆண்டுகளாய் இந்திய வரலாற்றில் உலக முழுவதிலு ருந்து அன்னியர் படையெடுத்து, எங்கள் நாட்டையும், எங்கள் மனத்தையும் பறித்துக் கொண்டது ஏனென்று கூறுவாயா?  அலெக்ஸாண்டர் முதலாக கிரேக்கர், போர்ச்சுகீஸ், பிரிட்டீஷ், பிரெஞ்ச், டச் ஆகிய அன்னியர் உள்ளே புகுந்து கொள்ளை அடித்து எங்களுக்கு உரிமையான ற்றைக் கைப்பற்றினார்.  நாங்கள் அதுபோல் யார் மீதும் படையெடுக்க வில்லை.  எந்த நாட்டையும் கைபற்ற வில்லை.  யாருடைய நாட்டையும், கலாச்சாரத்தையும், வரலாற்றையும் மாற்றி எங்கள் வாழ்க்கை முறைகளை அங்கே திணிக்க வில்லை.”

    டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி

    “முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை!  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்!  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”

    டாக்டர் விக்ரம் சாராபாய், பாரத விண்வெளிப் பயணப் பிதா (1919-1971).

    ஆயுதம் செய்வோம்! நல்ல காயுதம் செய்வோம்!
    ஆலைகள் வைப்போம்! கல்விச் சாலைகள் வைப்போம்! ……
    வானை அளப்போம்! கடல் மீனை அளப்போம்!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்!

    மகாகவி பாரதியார் (பாரத தேசம்)

    இந்திய விண்வெளி ராக்கெட்களைப் படைத்த விஞ்ஞான மேதை

    டாக்டர் அப்துல் கலாம் ராணுவ ராக்கெட்டுகளை விடுதலைப் பாரதத்தில் விருத்தி செய்த முன்னோடி விஞ்ஞானி.  இரண்டாம் உலகப் போரில் ஜெர்மெனிக்கும், போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் ராணுவ ராக்கெட்டுகளை விருத்தி செய்த முதல் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் வெர்னெர் ஃபான் பிரௌன் [Wernher Von Braun].  அமெரிக்காவின் அண்டவெளிப் பயண ராக்கெட் விருத்தியிலும் அவர் முழுமையாக ஈடுபட்டார்.  பாரத நாட்டில் டாக்டர் ஃபான் பிரௌனுக்கு இணையாகக் கருதப்படும் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம்.  அவரே பாரதத்தின் ராணுவ ராக்கெட் படைப்புக் பிதாவாகாப் போற்றப்படுகிறார்.  இந்திய ராணுவ ஏவுகணைகள் அக்கினி, பிருத்வி போன்றவை மூச்சு விட்டுப் பாய்ந்து செல்ல விதையிட்டு விருத்தி செய்தவர் அப்துல் கலாம்.  அவற்றை வெற்றிகரமாக ஏவச் செய்து பாகிஸ்தான், சைனா போன்ற பக்கத்து நாடுகளின் கவனத்தைப் பாரதம் கவர்ந்துள்ளது!  1980 ஆண்டுகளில் ஹைதிராபாத் ராணுவ ஆராய்ச்சி விருத்திக் கூடத்தை [Defence Research & Development Laboratory] தன்னூக்கத்துடன் இயங்கும் ஓர் உன்னதக் கூட்டுப்பணிக் குழுவாக மாற்றி அதை ஒரு பொறிநுணுக்கத் தொழிற்சாலையாக ஆக்கினார்.  உன்னத பாதுகாப்புப் பணி புரிந்த டாக்டர் அப்துல் கலாமுக்கு 1990 ஆம் ஆண்டில்  பாரதம் மதிப்பு மிக்க “பாரத் ரத்னா” பட்ட வெகுமதி அளிக்கப் பட்டது.

    1931 அக்டோபர் 15 ஆம் தேதி அப்துல் கலாம் தமிழ்நாட்டின் இராம பூமியான இராமேஷ்வரத்தில் பிறந்தார்.  அங்குள்ள ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்.  திருச்சி ஸெயின்ட் ஜோஸ·ப் கல்லூரியில் விஞ்ஞான அடிப்படைக் கல்வியைக் கற்றவர்.  தனது சிறப்புப் பொறிநுணுக்க டாக்டர் பட்டப் படிப்புச் சென்னை பொறியியல் துறைக் கல்லூரியில் [Madars Institute of Technology] சேர்ந்து (1954-1957) விமானவியல் எஞ்சினியரிங் துறையை [Aeronautical Engineering] எடுத்துக் கொண்டார்.  பட்டப் படிப்பின் போதே பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் [Hindustan Aeronautics Ltd] பயிற்சிக்குச் சேர்ந்தார்.  அங்கே விமானங்களை இயக்கும் பிஸ்டன் எஞ்சின், டர்பைன் எஞ்சின், ஆர அமைப்பு எஞ்சின் [Piston, Turbine & Radial Engines] ஆகியவற்றில் அனுபவம் பெற்றார்.

    1958 இல் ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் பட்டம் வாங்கிய பிறகு, தன் நெடுநாட் கனவான விமானப் பறப்பியலில் ஈடுபட நினைத்தார்.  அவருக்கு இரண்டு வித வேலை வாய்ப்புகள் கிடைக்க வழி பிறந்தன.  முதலாவது வேலை இராணுவ அமைச்சகத்தின் தொழில் நுணுக்க விருத்தி & உற்பத்தித் துறைக் கூடத்தில் {Directorate of Technical Development & Production, (DTD&P) Ministry of Defence].  அடுத்தது இந்திய விமானப் படையில் ஊழியம் [Indian Air Force].  இரண்டுக்கும் விண்ணப்பித்து அவருக்கு நேர்காணல் தேர்வும் கிடைத்தது.  முதலில் கூறிய இராணுவப் பணி அவரது திறமைக்குச் சவாலாக இருக்க வில்லை.  அடுத்து தேரா தூன் விமானப் படைத் தேர்வில் அவர் வெற்றி பெறவில்லை.

    தோல்வி மனதுடன் திரும்பி வரும் வழியில் ரிஷிகேஷில் தங்கிப் புனித கங்கா நதியில் நீராடிய போதுதான், அவருக்குப் புத்தரைப் போல் தோன்றிய சுவாமி சிவானந்தாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது!  தன்னை யாரென்று அறிமுகப் படுத்திக் கொண்டதும், சுவாமி சிவானந்தா அவரோர் இஸ்லாமியர் என்று மனதில் கருதவில்லை!  கவலைப் படுவது ஏனென்று சிவானந்தா கேட்டபோது, அப்துல் கலாம் தனது பறக்கும் கனவுகளை இந்திய விமானப் படை நேர்காணல் ஏமாற்றி விட்டெதெனக் கூறி வருந்தினார்.  அப்போது சிவானந்தா கூறினார், ” உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்;  விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது.  நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை.  ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது.  நீ புரிய வேண்டிய பணிக்கு அவசியம் இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச் செல்கிறது.  ஆகவே உனது இந்த தோல்வியை மறந்திடு.  உனது பிறப்பின் மெய்யான காரணத்தை எண்ணித் தேடிச் செல்.  உன்னோடு நீ ஒன்றாய் ஒன்றிக்கொள்!  கடவுளின் விருப்பத்திற்கு நீ சரணடைவாய்”.

    டெல்லிக்கு மீண்டதும் DTD&P இல் சீனியர் சையன்டி·பிக் அஸ்ஸிஸ்டென்ட் வேலை கிடைத்தது.  அப்போது அவர் தன்னோடு பணி செய்த குழுவுடன் முன்னோடி ஹோவர்கிரா·ப்டு [Prototype Hovercraft] ஒன்றைத் தயாரித்தார்.  அவர் முதன்முதல் அமர்ந்து இயக்கிய இந்திய ஹோவர்கிரா·ப்டில் முன்னாள் இராணுவ மந்திரி கிருஷ்ண மேனன் பயணம் செய்தார்.  அதற்குப் பிறகு 1962 இல் டாக்டர் அப்துல் கலாம் இந்திய விண்வெளித் திட்டத்தில் வேலை கிடைத்துச் சேர்ந்தார்.  சுமார் இருபதாண்டுகள் (1963-1982) அவர் இந்திய வெண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் [Indian Space Research Organization (ISRO)] பல பதவிகளில் பணியாற்றினார்.  பிறகு அவர் தும்பாவில் [திருவனந்தபுரம், கேரளா] துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் [Satellite Launch Vehicle Team (SLV)] சேர்ந்து, SLV-3 ராக்கெட் படைப்புத் திட்டத்தின் டைரக்டர் ஆக நியமிக்கப் பட்டார்..  SLV-3 ராக்கெட்டின் 44 துணைச் சாதனங்களை டிசைன் செய்து, பயிற்சி செய்து, மேன்மையாய் விருத்தி செய்து வெற்றிகரமாக ஏவிடப் பணிபுரிந்தார்.  1980 ஜூலையில் இல் ரோகினி என்னும் முதல் விஞ்ஞானத் துணைக்கோளைத் தூக்கிக் கொண்டு SLV-3 ராக்கெட் விண்வெளியில் ஏவப்பட்டு, ரோகினி பூமியைச் சுற்றிவரும் சுழல்வீதியில் இடப் பட்டது.  அவ்வரிய பணிக்குப் பாரத அரசாங்கம் 1981 இல் டாக்டர் அப்துல் கலாமுக்கு பாரதத்தின் மாபெரும் “பத்ம பூஷண்” பாராட்டு மதிப்பை அளித்தது.

    ஓர் ஆன்மீக முஸ்லீமாக அப்துல் கலாம் தினமும் இருமுறை இறைவனைத் துதிக்கிறார்.  அவர் அறையில் தஞ்சை நடராஜர் வெண்கலச் சிலை காணப்படுகிறது. மேலும் அவர் ஓர் இராம பக்தர்.  வீணை வாசிக்கிறார்.  ஸ்ரீராகத்தை ரசிக்கிறார்.  தமிழில் கவிதை புனைகிறார்.  தானோர் இந்தியன்ரென்று பெருமைப் படுகிறார். 1999 ஆண்டில் பொக்ரானில் சோதித்த அடித்தள அணு ஆய்த வெடிப்புகளில் பங்கெடுத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறார். விடுதலை பெற்ற பிறகு இதுவரைச் சாதித்த விஞ்ஞானப் பொறியியற் துறைகளை எடுத்துக் காட்டி முன்னேறும் நாடாகக் கருதப்படும் பாரதம் விருத்தி அடைந்து 2020 ஆண்டுக்குள் முன்னேறிய நாடாக மாறப் போகிறது என்றோர் எதிர்காலவாதியாக [Forecasting Futurist] ஒளிமயமான எதிர்காலத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.  டாக்டர் அப்துல் கலாம் மெய்யாக ஒரு ராக்கெட் விஞ்ஞானி, படைப்பாளர், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தேச நேசர்.  அவரே பாரதத்தின் ராணுவ ஏவுகணைப் பிதாவாகப் போற்றப் படுகிறார்.

    (தொடரும்)

    தகவல்:

    1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
    2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
    3. Indian Space Program By: Subhajit Ghosh
    4  Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]
    5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
    6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]
    7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
    8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html [Dr. Vikram Sarabhai Space Pioneer]
    9. Indian Space Program By: Wikipedia
    10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]
    11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717]
    12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp
    13 Dr. Abdul Kalam : India’s Missile Program www.geocities.com/siafdu/kalam.html
    14 India’s 2005 Republic Day Parade Archive – Military Photos [www.militaryphotos.net/forums/archive]
    15 Increasing Indian Missile Reach, Opinion & Editorials By: The Hindu Editorial [April 14, 2007]
    16 Missile Test By India [February 5, 2007]
    17 Defence Update, International Online Defence Magazine [Posted Nov 30, 2006]
    18 Defense Update, New Pissile Program at Aero India (2007)
    19 BrahMOs, Missiles, Weapon Systems, India Defense
    20 Indo-Russian Bilateral Equation Including Military [2001 ?]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] (May 10, 2007)

    Share
  • திரு அப்துல் கலாம்

    தமிழ்த்தேனீ

    11220140_1123504214343953_8318872397092579954_n

    எத்தனையோ மகன்கள் பிறந்திருக்கலாம்
    மகான்களாய்த் சிலரதிலே திரிந்திருக்கலாம்
    எத்தனையோ மனிதர்கள் பிறந்திருக்கலாம்
    புனிதராய்ப் பலரதிலே திகழ்ந்திருக்கலாம்

    எத்தனையோ பிறவிகள் பிறந்திருக்கலாம்
    துறவியாய் அனைத்தையும் துறந்திருக்கலாம்
    பலகோடி வகையாய்ப் பிறந்திருக்கலாம்
    பலகோடி வகையாய்ச் சிறந்திருக்கலாம்

    எல்லா உயிர்களையும் பிடித்திருக்கலாம்
    எல்லா உயிர்க்குமே பிடித்திருக்கலாம்
    மனிதராய் யாரும் பிறப்பதில்லை
    வளர்ந்தபின் குழந்தையா யிருப்பதில்லை

    பிறந்த பின் மனிதராய் வளர்வதில்லை
    மாமனிதராய் பலரும் வாழ்வதில்லை
    குழந்தையாய்ப் பிறந்து மனிதராய் வளர்ந்து
    மாமனிதராய்த் திகழ்ந்து மேதையாய் மலர்ந்து

    மனிதாபிமானம் கொண்டு மனிதருள் மனிதராய்
    மனதோடு மனதாகப் புனிதராய் கலந்தவர்
    திரு அப்துல்கலாம் இப்போது இறந்திருக்கலாம்
    இவ்வுலகை விட்டு மறைந்திருக்கலாம்

    இவ்வுலகம் மறக்காமல் இருந்தவர் வாழ்ந்தவர்
    இன்னுமாயிரம் ஆண்டுகள் இருந்திருக்கலாம்
    திரு அப்துல்கலாம் இறவாமல் இருந்திருக்கலாம்
    நாம் இவரை எப்போதும் மறவாமல் இருக்கலாம்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ
    அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
    அவனை விடவா உயர்ந்தது ஜாதி?

    மனிதமும்,உலகமும் காப்போம்,
    மௌனம் உணர்த்தாத பொருளை
    சொற்கள் உணர்த்தாது

    அன்புடன்
    தமிழ்த்தேனீ
    http://thamizthenee.blogspot.com
    rkc1947@gmail.com
    http://www.peopleofindia.net

    Share
  • Dr.APJ Abdul kalam

    செல்வரகு

    டி. ஆர்.

    asel

    Share
  • எம்மனது அழுகிறது !

    எம். ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா

    apj-abdul-kalam-650-ap_650x400_71438008626
    வல்லரசு நல்லரசு எனமனதில் கொண்டுநிதம்
    வல்லவராய் நல்லாவராய் வாழ்ந்துநின்ற மாமனிதர்
    எல்லோரின் மனங்களிலும் இருந்தமர்ந்த கலாமவர்கள்
    இல்லை என்றுசொல்லிவிட எம்மனது அழுகிறது !

    ஈடில்லா விஞ்ஞானி எமைவிட்டுப் போனசெய்தி
    நாடெல்லாம் நினைந்தழவே நமன்கூட நடுங்குகிறான்
    விஞ்ஞானி தனையழைத்து விண்ணவரோ மகிழுகின்றார்
    மண்மீது இருப்போரோ மனம்நொந்து தவிக்கின்றார் !

    அப்துல்கலாம் ஐயா அனைவருமே அழுகின்றார்
    அணுத்துறையும் உமைத்தேடி அலமந்து நிற்கிறது
    அமைதியாய் இருந்துகொண்டு அனைத்தையும் செய்துநின்றாய்
    அழுகின்றோம் கலாமையா அழகுமுகம் காணாது !

    கனவுகாணச் சொல்லிவிட்டு காணாமல் போனதெங்கே
    கனவுநனைவு எல்லாமே கலாமாக இருக்கிறது
    காலனிடம் சென்றநீங்கள் கனவுகாணச் சொல்லிவிட்டு
    கடுகதியாய் இங்குவந்து காட்டிடுங்கள் முகத்தையையா !

    இங்கிருக்கும் பிள்ளைகளோ ஏக்கமுடன் இருக்கின்றார்
    எங்கள்கலாம் ஐயாவை எப்படிநாம் பார்ப்பதென
    தங்கத் தமிழ்மகனே தரமிக்க தமிழ்க் கவியே
    உங்களது இழப்பாலே உலகமே அழுகிறது !

    Share
  • ‘கலாம் ஆகலாம்’

    அண்ணாகண்ணன்

     

    2002இல் நான் எழுதி, கங்காராணி பதிப்பகம் வெளியிட்ட, ‘கலாம் ஆகலாம்’ சிறுவர் பாடல் நூலின் தலைப்புப் பாடல்

     

    anna

     

    anna1

     

    anna2

    Share
  • “பாரதரத்னா அப்துல் கலாம்”

    மீ.விசுவநாதன்

     

     

    சலாம் சலாம்- எங்கள்
    “அப்துல் கலாம்” !
    கலாம் கனவு நாளை
    கனியும் எலாம் ! (சலாம் சலாம்…..)

    “அப்துல் கலா”மெனும் மனிதன் – தேச
    அமைப்பை மாற்றிய சரிதன் !
    உப்பள பூமியில் பிறந்தான் – அணு
    உச்சத்தைத் தொட்டவன் சிறந்தான் ! (1)

    கல்வியின் மதிப்பை அறிந்தான் – அதைக்
    கனவு கண்டுடன் கடந்தான் !
    நல்வினை மதித்து நடந்தான் -ஞான
    நட்புடன் மதியால் தெளிந்தான் ! (2)

    வள்ளுவன் பாரதி படித்தான் – அதை
    வழக்கப் படுத்தி நிமிர்ந்தான் !
    துள்ளுவன் குழந்தை போலே – அதில்
    துயரம் மறப்ப தாலே ! (3)

    இந்திய தேசத்தின் பெருமை -கலாம்
    எனும்விஞ் ஞானத் திறமை !
    எந்திர மனிதனா யின்றி – ஒரு
    எளியனாய்க் காட்டினான் நன்றி ! (4)

    (பாரதரத்னா அப்துல்கலாம் அஞ்சலிக் கவிதை)

    Share
  • கலங்கரை விளக்கு ஒளியிழந்தது!

    APJ Abdul Kalam Rare Pic - ATK

    ஷில்லாங்கில், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவச் செல்வங்களுடன் ஒரு கருத்தரங்கில் உரையாடிக் கொண்டிருந்தபோது, நம்முடைய இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் உயர்திரு ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் மாரடைப்பால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவச் செல்வங்களுக்கு கலங்கரை விளக்காக வழிகாட்டி, ஒளியூட்டிக்கொண்டிருந்த தீபம் நம்மை விட்டு விலகியது தாங்கொணாத் துயரம் அளிப்பது. கனவு காணுங்கள் என்று இளைய சமுதாயத்தினரை ஊக்கப்படுத்திய  ஐயா இப்படி எங்களை தவிக்கவிட்டு செல்ல எப்படி மனம் வந்தது…

    டாக்டர் கலாம் அவர்கள் நம் இந்தியத் திருநாட்டின் 11வது குடியரசுத் தலைவராக,  2002 முதல் 2007 ம் ஆண்டு வரை தன்னலமற்ற தொண்டு புரிந்தவர். ராமேசுவரத்தில் அக்டோபர் 15, 1931 இல் ஒரு படகுக்காரருக்கு மகனாக அவதரித்தவர். கலாம் அவர்கள் பத்மபூஷன், பாரத ரத்னா ஆகிய நாட்டின் உயரிய விருதுகள் பெற்றவர். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்.

    Share
  • ”கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை”

    கிரேசி மோகன்

    Tamil_News_large_107959620140926025806இன்று ”கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையின்” பிறந்த நாளில் அடியேனின் மலரும் நினைவுகள்….இளமையில் ”தண்டமிழ் கொண்டல் சிதம்பரம் ஸ்வாமினாதன்” தலைமையில் ”சிந்தனைக் கோட்டம்” என்ற அமைப்பில், வாராவாரம் கவிஞர்கள் சுகி சிவம், வானவில் பண்பாட்டு நிலையத்தின் தலைவர் வக்கீல்/ கவிஞர் க.ரவி, எனது தோழன் சு.இரவி எல்லோரும் கூடி கவிகளை பாடி மகிழ்வார்கள்….இந்த அஷ்ட திக் கஜங்களுக்கு மத்தியில் அடியேன் தெனாலி ராமன் போல் அமர்வதுண்டு….அப்போது எங்கள் கிருஷ்ண தேவராயர் ”தண்டமிழ் கொண்டல்” ‘ துலங்குவெண் நீறு துனிப்பிறைக் கோடு துணைக்கரங்கள்” என்று துவங்கும் கட்டளைக் கலித்துறை பாடல் இன்னமும் என் காதில் ஒலிக்கிறது….அதே போல் ”கொத்து வேப்பிலை கைத்தலத்திடை-வைத்த நற்குங்குமச் சிலை-தொழ- வாடும் உன் மன்மதக் கலை” என்ற சுகி சிவத்தின் பாடல் எனது முதல் கவிதை அறிமுகம்….க.ரவி நன்றாக ஆழ்ந்த பொருளோடு மேடையில் கம்பீரமாகப் பேசுவார்….நாங்கள் எல்லோரும் பிற்காலத்தில் ”சுகி சிவம்” சிறந்த கவிஞராகவும், மகாகவி பாரதியாரின் தத்துப் பிள்ளை ”க.ரவி” சிறந்த பேச்சாளராகவும் வருவார் என்று பேசிக் கொள்வதுண்டு….ஆனால் ”சுகி சிவத்தை” வீராவேசமாகப் பேசும் மேடைப் பேச்சாளராகவும், ”க.ரவியை” நளினமான யதார்த்தக் கவியாகவும் ”காலமாம் மரத்தில் அண்ட -கோலமா மரத்தின் மீது -காளி சக்தி என்ற பெயர் கொண்டு -ரீங்காரம் இட்டு உலவும் ஒரு வண்டு”, பிரகருதி எங்கள் எண்ணத்திற்கு மாறாக மாற்றி அமைத்து விட்டது….வெற்றியையும் அருளியது….வாழ்க சக்தி….ஒரு கவிமன்றத்திற்காக நாங்கள் ”ஆம்பூர்” சென்றபோது, தொத்திக் கொண்ட என்னையும் மேடையில் கவிதை கத்தச் சொல்லி கட்டளைக் கலித்துறை இட்டார் ”தண்டமிழ் கொண்டல்” அய்யா…தட்ட முடியாது….காரணம் அவர் என் தம்பிக்கு தமிழ் ட்யூஷன் வாத்தியார்….வேறு வழியில்லாமல் ஆம்பூர் சத்திர தொட்டியில் குளித்தபடி ஒரு கவிதை யோசித்துப் பாடினேன்….அது….”முகிலாண்ட இமயத்து, முக்கண்ணன் இதயத்தில்-முருகாக நின்ற உமையே-அகிலாண்ட நாயகி, அகலாதென் உள்ளத்தில் அணுவாக நின்ற சுமையே- அகிலுண்ட வாசத்தின் அலையான கேசத்தின் – ஆறாத பாரத்தினால்-துகிலாண்ட இடைசற்று துவளவே நடையிட்டு-துணையாக வா காளி நீ”….என் முதல் கவிதை இது….அப்போது என் தோழன் சு.இரவி, அடிக்கடி ”கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையின்” உமர்கய்யாம் மொழிபெயர்ப்பை என்னிடம் மனதில் பதியும் வண்ணம் கூறுவான்….”வெய்யிலுக்கு ஏற்ற நிழலுண்டு-வீசும் தென்றல் காற்றுண்டு-கையில் கம்பன் கவி உண்டு-கலசம் நிறைய மதுவுண்டு”…..இந்த எளிமையான வரிகளின் தாக்கம் இன்னமும் எனக்குண்டு….பிற்காலத்தில் தேசிக வினாயகம் பிள்ளையின் இந்த மீட்டரில் அடியேன் க்ரேசிக வினாயகம் பிள்ளை(கவிதைக் குழந்தை) எழுதிய பாடலை பகிர்ந்து கொள்கிறேன்….

    இட்டிலி சாம்பார் வடையுண்டு
    இனிக்கும் டிகிரி காப்பியுண்டு
    பட்டுத் துளிர்வெற் றிலையுண்டு
    புகையிலை வறுவல் சீவலுண்டு
    விட்டம் சுற்றும் ஃபேன் உண்டு
    வீசும் ஏஸிக் காற்றுண்டு
    கட்டுரை கதைகள் பலவுண்டு
    கல்கி தேவன் அதிலுண்டு….கிரேசி மோகன்….

    Share
  • படக்கவிதைப் போட்டி – 23

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    11802085_867732629947604_440588056_n

    திரு. சுரேஷ் ராம் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (01.08.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜூலை 27, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு  எம்.  ஆர். ஹப்பர்ட்  அவர்கள் 

    m r hurbert

     

    வறட்சிக்குப் பிறகு புத்துயிர் அளிக்கும் மழைக்கு ஷப்னம் என்று பெயர். அதைப் போன்று வறண்டு போன வறிய நிலையில் வாழும் சிறுவர், சிறுமியரும், இளைஞர்களும் வாழ்வில் வளம் பெறும் வகையில் தொண்டூழியம் செய்யும் அரசு சாரா தொண்டு நிறுவனம் ஷப்னம் ரிசோர்செஸ் என்ற அறக்கட்டளை அமைப்பு. அரசு பதிவு பெற்ற இந்த  ஷப்னம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தோற்றுவித்து, கடந்த 17 ஆண்டுகளாக நடத்தி வருபவர் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படும் திரு. எம். ஆர். ஹப்பர்ட் என அழைக்கப்படும் மைக்கேல் ஹப்பர்ட் அவர்கள். இவரது ஷப்னம் தொண்டு நிறுவனத்தின் குறிக்கோள் புறநகர், கிராமப்பகுதிகளில் வறுமையின் பிடியிலும், வன்முறைகள் நிறைந்த குடும்பச் சூழலில் வாழும் சிறுவர், சிறுமியர்கள்; கல்வி, சுகாதாரம், நல்வாழ்வு ஆகியவற்றில் பின்தங்கும் சூழ்நிலையில் இருந்தால் அவர்களுக்கு உதவுவது. குழந்தைத் தொழிலாளராக இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கான பாதுகாப்பு இல்லம், கல்வி வளர்ச்சிக்கு உதவுவதும் ஷப்னம் அமைப்பின் நோக்கம்.

    சிறுவர்களுக்காக காலணிகள் வழங்குவது முதல் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்குவது வரை பலவகைகளில் ஷப்னம் அமைப்பால் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. கல்வியைக் கைவிட்ட மாணவர்களுக்கு உழைத்துக் கொண்டே கல்வியைத் தொடர உதவுவதும், TUPA (The underpriveleged angels) என்ற வாழ்த்து அட்டைகளை கைவினைப்பொருட்களாக உருவாக்கி விற்பனை செய்து நிதி திரட்டுவதும் ஷப்னம் ஈடுபட்டுள்ள பணிகளின் சில கோணங்கள் என்றால், சமூகத்திற்கு விழிப்புணர்வுச் செய்திகள்தரும் நோக்கில் ஓட்டங்கள் போன்ற கவன ஈர்ப்பு நிகழ்வுகளும், தற்கால இளைஞர்களுக்கு உதவும் காலத்திற்கேற்ற பயிற்சி பட்டறைகளும் நடத்தி வருவது ஷப்னம் அமைப்பின் மற்றொரு வகை பரிமாணம்.

    hurbert2

    இந்த வகையில் சென்ற சனிக்கிழமையன்று ஒரு பயிற்சிப் பட்டறை ஒன்றின் வழியாக ஷப்னம் தொண்டு நிறுவனம் இளைஞர்களுக்கு தனிமையை எதிர்கொள்ளும் பயிற்சியை அளித்தது.

    Mr Hubert 2

    lonliness

    “தனிமை நிறைந்த வாழ்க்கை வறுமையையும் விடக் கொடிதானது” என்பதன்   அடிப்படையில் முதியோரும், இளைஞர்களும்,  சிறுவர்களும் இக்கால வாழ்க்கை முறையினால் எவ்வாறு தனித்து விடப்படுகிறார்கள் என்பதையும், இதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக இக்கால சமூகம் இழந்து நிற்கும் ஒன்று மூதாதையர் தங்கள் பேரக்குழந்தைகளுக்கு கதை சொல்வது போன்று இரு சாராரையும் இணைக்க இருந்த ஒரு பிணைப்பு  மறைந்து போனது.  தனிமை வாழ்க்கையில் அகப்படுபவர்களை எப்படி தனிமையில் இருந்து மீட்கலாம் என்பதற்கான வழிகள் சில பயிற்சி பட்டறையில் பங்கேற்ற உளவியல், சமூகவியல் புலம்சார்ந்த கல்லூரி மாணவ மாணவியரால் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

    சிறுவர்களின் நல்வாழ்விற்காகவும், கல்விக்காகவும் தொடர்ந்து பணியாற்றிவரும் எம். ஆர். ஹப்பர்ட் அவர்களும் அவரது சமூகப் பணிகளுக்காக பாராட்டுகளும், விருதுகளும் பெற்றுள்ளார்.

    Mr Hubert 1

    வறிய நிலையில் உள்ள சிறுவர் நல்வாழ்விற்காக சமூக அமைப்பை நிறுவித் தொண்டாற்றிவரும் திரு. மைக்கேல் ஹப்பர்ட் அவர்களின் தொண்டு மனப்பான்மையைப் பாராட்டி அவரை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    தொடர்புக்கு:
    Mr. M.R. Hubert
    SHABNAM RESOURCES
    (REGD. Charitable Non Profit Trust)
    Old No 5, New No 13, Buddha Street,
    Rangarajapuram, Kodambakkam.
    Chennai 600 024
    Phone: +91-44-64547089
    E-Mail: mrhubert72@gmail.com
    http://www.shabnamresources.com/
    https://www.facebook.com/pages/Shabnam-Resources/161348097284778

     

    Sources of News and Pictures:
    Free workshop on tackling loneliness
    http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/free-workshop-on-tackling-loneliness/article7438905.ece
    http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/free-workshop-on-tackling-loneliness/article7438849.ece

    Hundreds Run for the Better Future of the World in Kodambakkam
    http://www.newindianexpress.com/cities/chennai/Hundreds-Run-for-the-Better-Future-of-the-World-in-Kodambakkam/2015/06/30/article2893326.ece

    Chennai-based NGO celebrating Christmas differently
    http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-based-NGO-celebrating-Christmas-differently/articleshow/27803350.cms

    Sketches of a safe Deepavali
    http://www.newindianexpress.com/education/student/article251398.ece

    Director of Shabnam Resources awarded for his work in education and children’s welfare
    http://overcomingpoverty.org/article/director-of-shabnam-resources-awarded-for-his-work-in-education-and-childrens-welfare

    Share
  • அடியாரும் ஆன்மீகமும் (2)

    பவள சங்கரி

    1382426_823390031082957_239293274964935666_n

    12914_823390161082944_8842537095226880754_n

    ஆன்மீக நெறியில் நயந்து இருப்போரின் உள்ளம் என்றும் எதைக்கண்டும் அஞ்சுவதில்லை. எம்மைக் காக்கும் ஈசன், பரம்பொருள் எம்மை வழிநடாத்துவான் என்ற இறுமாப்பு கொண்டோர்களாகவே, தன்னம்பிக்கையின் சிகரமாக வலம் வருகின்றனர். அந்த வகையில் அப்பரடிகளின் பாடல்கள் அனைத்தும் பெரும்பாலும் சுதந்திர உணர்வுமிக்க எழுச்சிப் பாடல்களாகவே அமைந்துள்ளன எனலாம். உழவாரப்படை கொண்டு சமூகப் பணியையும் குறைவிலாது நிறைவேற்றியவர். சாதி, குலம், மதம் என எந்தவித வேறுபாடும் இன்றி, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற தூய நெறியில் வாழ்ந்தவர். இந்த தன்னம்பிக்கையே இவருக்கு பல்லவ மன்னனையே துணிந்து எதிர்க்கும் வல்லமையைப் பெற்றுத்தந்தது. சமூக நலன் கருதி தம் வாழ்க்கையையே அர்ப்பணித்த புரட்சிக் கவிஞர் இவர் என்றால் அது மிகையாகாது!

    நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
    நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
    ஏமாப்போம்; பிணியறியோம்; பணிவோம் அல்லோம்;
    இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை.

    ‘நான் யாருக்கும் அடிமையில்லை; எமனுக்கு கூட அஞ்ச மாட்டேன்…’ என்ற பொருள்படும் வகையில், “நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்” என்ற மறுமாற்றத் திருத்தாண்டகத்தில், அப்பர் பெருமானின் உயரிய இறுமாப்பு பல்லவப் பேரரசனையும் பணிய வைத்த சிறப்பைக் காணலாம்.

    அதாவது எவரும் தம்மைக் கட்டுப்படுத்தவோ, அத்து இடவோ முடியாது. எமனுக்கும் கூட அஞ்சமாட்டோம். எமக்கு மரணத்தைக் கண்டும் அச்சமில்லை. ஒருவேளை நரகத்திற்கே செல்ல நேர்ந்தாலும் யாம் அங்கே இடர் பட மாட்டோம். அதையே சொர்க்கமாக எண்ணவும் எம் மனம் அறியும். ஏமாற மாட்டோம். பிணியுற்றாலும், அதனால் துவண்டு, அடிபணிய மாட்டோம். இறையருளால், எமக்கு எந்நாளும் இன்பமேயன்றி துன்பம் என்பதே இல்லை.

    அப்பரடிகள், தருமசேனராக இருந்தபோது சூலைநோய் எனும் வயிற்று வலியால் மிகவும் துன்பப்பட்ட நேரத்தில்
    “ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம் இன்பமே ஒருநாளும் துன்பமில்லை..” என்று மன உறுதியோடு அந்த
    நிலையிலும் பூரண சரணாகதியுடன் இறை நம்பிக்கை கொண்டிருந்தவர்.

    பேரரசர் அலெக்சாண்டரின் அழைப்பையே ஏற்க மறுத்த ஒரு திகம்பரர் குறித்த வரலாறும் உண்டு. பின்னர் அம்மன்னரே தாமே நேரில் சென்று அத்திகம்பரரின் தரிசனம் பெற்றதாகவும் வரலாறு கூறுகின்றன.

    ஐயன் வள்ளுவனின் குறள் நெறியைப் பார்ப்போம்:

    குறள்:497
    அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
    எண்ணி இடத்தால் செயின்

    செய்ய வேண்டியவைகளை குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல்
    வேறு துணையும் நாட வேண்டியதில்லை. அதாவது எந்த ஒரு செயலுக்கும் தம் திண்மை அன்றி வேறு ஒரு துணை வேண்டுவதில்லை.

    ஒரு ஜென் கதையைப் பார்ப்போமா..

    பேரரசன் ஒருவன் இருந்தான். இந்த உலகிலேயே தனக்கு இணை எவருமே இல்லாத மாபெரும் வீரன் தான் மட்டுமே என்று இறுமாப்புடன் இருந்து வந்தான். அவனைச் சுற்றி இருந்த ஒத்து ஊதும் கூட்டமும், புகழில் மயங்கிக் கிடக்கும் அரசனை எப்படியும் கவிழ்த்துவிட முடியும் என்ற பேராசையில் அவனை தகுதிக்கு மீறிய புகழ் போதையில் மயக்கி வைத்திருந்தனர். இதையறியாத அரசனும் ஒருவரையும் மதிக்காமல் ‘தான்’ என்ற அகந்தையில் திரிந்து கொண்டிருந்தான். நாட்கள் செல்லச் செல்ல, நண்பர்களும், சுற்றமும் விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்க அரசனுக்கு ஏதோ ஒரு வெறுமை குடிகொள்ள ஆரம்பித்தது. அவனுடைய செயல்பாடுகளிலும் தொய்வு ஏற்பட ஆரம்பித்தது. ஒரு ஜென் துறவியைச் சந்தித்து ஆசி பெற்றால் தம் மனம் தெளிவடையும் என்று நினைத்த அரசன், அந்த ஊரில் இருந்த ஒரு ஜென் துறவியிடம் சென்று, தம் வீரதீர பராக்கிரமங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி, தமக்கு ஆசி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். ஆனால் அந்த அரசன் சொன்ன எதையும் காதில் வாங்கியதாகவே தெரியாதது போல் இருந்த ஜென் துறவி, ‘நான்’ செத்த பிறகு வா, இப்போது இந்த இடத்தை காலி செய்’ என்று மட்டும் சொன்னார். அந்த அரசனோ,

    ‘என்ன இது, நீங்கள் செத்த பிறகு வந்து நான் என்ன செய்வது’ என்று கேட்டான்.

    அப்போதும் அந்தத் துறவியார், ‘நான், செத்த பிறகு வா.. போ இங்கிருந்து’ என்றார்.

    அரசனும் மேலும் பல முறை கேட்டும், அவரிடமிருந்து இதைத் தவிர வேறு எந்த பதிலும் வரவில்லை. அரசன் உடனே கோபமாக வாளை உருவினான். சுற்றியிருந்த சீடர்களோ, அவரைத் தடுத்து நிறுத்தி, அவருடைய நிலையை புரியச் செய்து, அந்த மகானிடம் அமைதியாகச் சென்று, பணிவுடன், ஆசி வழங்குமாறு கேட்குமாறு எடுத்துச் சொன்னார்கள். கோபம் சற்று குறைந்த அரசன், தன் நிலை உணர்ந்தவனாக பணிவாக, அந்தத் துறவியிடம் சென்று ஆசி வழங்கும்படி கேட்டான். அப்போதும் அவர் அதே பதிலை மட்டுமே கூறினார். ஆனால் அந்த அரசனுக்கு, ‘தான்’ என்ற அகந்தையை அழித்துவிட்டு வந்தால்தான் ஆசி பெற முடியும் என்பது தெளிவாகவே புரிந்தது!

    Share
  • காகமும் வாழ்வும் !

    -பத்மநாபபுரம் அரவிந்தன் 

    இரையுண்ணும் போதும்
    நிம்மதியற்றுத்
    தற்காப்புணர்வுடன்
    எச்சமயமும் பறக்கத்                         crow1
    தயாராய் இருக்கும்
    காகம் போல மாறிவிட்டது
    மனித வாழ்வும்…

    யதார்த்த நிலை தொலைத்து
    ஒரு பதட்டத்துடன்
    நகர்கின்றன நாட்கள்…

    நடிப்பைச் சதா கைக்கொண்டு
    இயல்பைத் தொலைத்து
    வாழ்ந்துதான் ஆக வேண்டியிருக்கிறது!

    இதில் சற்றே ஏமாந்தால்
    நொடியில் துளைத்து விடுகிறது
    ஒரு தோட்டா!

     

    Share
  • உன்னையறிந்தால் ….. (15)

    நிர்மலா ராகவன்

    மரியாதை

    உனையறிந்தால்1-1111
    கேள்வி: குழந்தைகளுக்கு சுதந்திரம் அளிப்பது சரிதானா?

    விளக்கம்: `என் குழந்தைகள் என்னைப்போல இல்லை. ரொம்ப தைரியசாலிகள்!’
    பணிவு, அடக்கம், மரியாதை என்ற பெயர்களில் தாம் அளவுக்கு மீறி ஒடுக்கப்பட்டு விட்டோம் என்ற மனக்குறை உடையவர்கள் பெருமையாகப் பேசுவது இது. பழையகால வளர்ப்பு முறை தவறு என்பது அவர்கள் வாதம்.

    சமயம் கிடைத்த போதெல்லாம் மேலதிகாரிகளுக்கு அடிவருடிகளாக, தம் புகழை ஒன்றுக்குப் பத்தாக தாமே பாடிக்கொண்டு, எதிரி என்று தோன்றுபவர்களை எல்லாம் மிரட்டலும், அவதூறும் பிரயோகித்து அவர்கள் தம் நிகராகவோ, அல்லது தம்மை மிஞ்சாதிருக்கவோ செய்து — இன்னும் என்னென்னமோ செய்தால்தானே பிள்ளைகள் முன்னுக்கு வர முடியும் என்றுதான் தற்காலத்தில் பலரின் சிந்தனையும் செல்கிறது.

    அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. பொய்யும், பித்தலாட்டமும் நிறைந்த இந்த உலகில் வெற்றி பெற அறிவாற்றலும், நேர்மையும் இருந்தால் மட்டும் பிழைக்க முடியுமா? தில்லுமுல்லு செய்யக்கூட அளவில்லாத துணிச்சல் வேண்டும்தானே?

    ஆனால், சுய லாபத்துக்காகப் பிறரிடம் போலி மரியாதையுடன் நடந்துகொள்பவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறான். அவனிடமும் அப்படியே பொய்யாக நடப்பவர்களிடம் ஏமாந்துவிடுகிறான். நாளடைவில், இது புரிய. விரக்திதான் மிஞ்சும்.

    கதை 1: என் மலாய் மாணவி நோர்லேலா (14) சற்றும் மரியாதை இல்லாமல், எதிர்த்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். பொறுக்க முடியாமல் போய், ஒரு சக ஆசிரியையிடம் அவளைப்பற்றிக் கேட்டேன். `மலாய்க்காரர்களுக்கு மரியாதை ரொம்ப முக்கியமாயிற்றே! இந்தப் பெண் ஏன் இப்படி இருக்கிறாள்?’

    நோர்லேலா எங்களுடன் வேலை பார்க்கும் ஒரு வயது முதிர்ந்த ஆசிரியையின் மகள் என்று அவள் கூற, ஆச்சரியப்பட்டுப்போனேன். பிறருக்கு நற்குணம் போதிக்க வேண்டிய ஓர் ஆசிரியை அதெப்படி தன் மகளை இப்படிப் பழக்கி இருப்பாள்?

    பெண்ணின் தாய் சற்று வருத்தத்துடன் என்னிடம் சொன்னாள்: `பெரியவர்கள்முன் வாயே திறக்கக்கூடாது என்பதுபோல் என்னை வளர்த்தார்கள். அதனால், நான் பெரியவர்கள்முன் வாயடைத்துப் போய்விடுவேன். என் மகளும் அப்படிப் போய்விடக்கூடாது என்றுதான் அவளுக்கு அளவற்ற பேச்சு சுதந்திரம் கொடுத்தேன். இப்போது எல்லா ஆசிரியைகளும் அவளைக் குறை கூறுகிறார்கள். வீட்டிலும் அப்பா, அம்மா, உடன்பிறந்தோர் எல்லாரையும் மரியாதை இல்லாது பேசுகிறாள். என்ன செய்வது என்றே புரியவில்லை!’

    நாகரீக யுகத்தின் குழப்பம் இது.

    அதிகம் படிக்காத தாய், `என் மகன் பேசறதும், கேக்கறதும் எனக்கே புரியலே!’ என்று பிறரிடம் பெருமையாகச் சொல்கையில், தன்னையுமறியாது, மகன் அவளை மட்டமாக எடைபோட வழிவகுக்கிறாள்.

    தான் பெற்று வளர்த்த பிள்ளை புத்திசாலி என்ற மிதமிஞ்சிய பெருமையுடன், அவன் வயதினரான பிறரை மட்டம் தட்டிப் பேசினால்கூட மகனுக்கும் அந்தப் போக்குதான் வரும். பெரியவன் ஆனதும், அவனைவிடத் தாழ்ந்தவர்கள் எல்லாரையும் –பெற்றோர் உட்பட — அலட்சியம் செய்வான்.

    ஒருவன் எவ்வளவு திறமைசாலியாக இருந்தால்தான் என்ன? அவனைப்போன்ற கல்வியறிவோ, செல்வமோ இல்லாததால் மட்டுமே பெற்றோர் அவனைவிடத் தாழ்ந்தவர்கள் ஆகி விடுவார்களா, என்ன?

    கதை 2: `உங்களுக்கு எது வேணுமோ, வாங்கிக்குங்கம்மா!’ என்று அன்பும், மரியாதையுமாகச் சொல்லிவிட்டு, ஒரு நகைக்கடை வாசலில் நின்றுகொண்ட ஓர் இளைஞனைப் பார்த்தேன். படித்து, நல்ல உத்தியோகம் பார்ப்பவனாகத் தெரிந்தான்.

    அவனுக்கு நேர்மாறான தோற்றத்தில் தாய். ஏழ்மையிலேயே காலமெல்லாம் உழன்றிருப்பவளாகத் தெரிந்தாள். தனது இல்லாமையிலும் மகனைப் பரிவுடன் நடத்தி, அவனுடைய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் பண்புகளைப் போதித்திருக்க வேண்டும்..

    தான் முன்னுக்கு வந்தது தன் சுய முயற்சியால் மட்டுமல்ல, தன் பெற்றோருக்கும் அதில் முக்கியப் பங்குண்டு என்று ஒத்துக் கொண்டிருக்கிறான் மகன். தன் நன்றியை இப்படி வெளிக்காட்டுகிறான். இச்சம்பவத்தை நான் கண்டு பல வருடங்களாகியும், இப்போது நினைத்தாலும், பூரிப்பாக இருக்கிறது.

    இன்னொரு தாய், `இவர்களால் எனக்கு என்ன லாபம்?’ என்ற வியாபார நோக்கில்தான் குழந்தைகளைப் பார்க்கிறாள்.
    தான் பெற்ற பிள்ளைகளிடம், நீ நிறையப் படித்து, பெரிய வேலை கிடைத்ததும், நான் உனக்குச் செய்ததை எல்லாம் மறக்காதே!’ என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிறாள். இதில் அன்பு எங்கே இருக்கிறது?

    முதலில் பெற்றோரிடமிருந்து அன்பைப் பெறாததால், வளர்ந்தபின்னர் அவர்கள் அளிக்காத அந்த அன்பைத் திருப்பி அளிக்க முடிவதில்லை அப்பிள்ளைகளால். தன்னைச் சம்பாதித்துப்போடும் ஒரு கருவியாகத்தான் அவர்கள் கருதி இருக்கிறார்கள் என்ற எண்ணம் கசப்பைத்தான் விதைக்கும். இத்தகையவர்களால் போலி அன்பைத்தான் காட்ட முடியும்.
    வாழ்க்கை எவ்வளவுதான் நாகரீகம் அடைந்தாலும், இரக்க குணம், அன்பு, பிறரிடம் மரியாதையாக நடத்தல் போன்ற பண்புகளுக்கு காலக்கெடு எதுவும் கிடையாது. மனிதர்களிடம் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டியவை இவை.

    உலகில் 8% மனிதர்கள்தான் அடுத்த வேளை உணவு, இருப்பிடம் போன்ற அத்தியாவசியமான தேவைகள் எப்படிக் கிடைக்கப்போகிறது என்று பரிதவிக்காமல் இருக்கிறார்களாம்.

    இது புரிந்து, `இப்படி ஒரு வளமான, அன்பான குடும்பத்தில் பிறக்க நீ எவ்வளவோ புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும். அதற்கு ஈடாக, பிறருக்கு உதவி தேவைப்படும்போது, வலியப்போய் செய்!’ என்று அறிவுரை சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகள் சுயநலமின்றி வளர்வார்கள். ஆனால், சோம்பேறிகளுக்கோ, ஏமாற்றுக்காரர்களுக்கோ உதவி செய்வது அநாவசியம்.

    `பிறரிடம் மரியாதையாகப் பழகு,’ என்று ஒரு சிறுவனிடம் சொல்வதைவிட, அதை நம் போக்கில் காட்டினால், அவனும் அப்படியே நடப்பான். இங்கும் ஓர் எச்சரிக்கை தேவைப்படுகிறது.

    வயதானவர்கள் தாறுமாறாக (உ-ம்: பாலியல் வதைக்கு உட்படுத்துவதுபோல்) நடந்து கொண்டால், அதைப் பொறுத்துப்போக வேண்டியதில்லை; தாராளமாக எதிர்க்கலாம், ஏனெனில், அவர்கள் மரியாதைக்கு ஏற்றவர்கள் அல்லர் என்பதையும் வலியுறுத்த வேண்டும்.

    இப்படிச் செய்தால், அநீதியைத் தட்டிக் கேட்கும் தைரியம் என்றென்றும் குன்றாது நிலைக்கும்.

    தொடருவோம்

    Share
  • மலை மகளே வருக !

    -பா.ராஜசேகர்

    பச்சையிலே பட்டுடுத்திப்
    பாறையிலே முகம் புதைத்து
    நாணலாக இடையசைத்துத்
    தவழ்ந்துவரும் மலைமகளே !                 falls

    வான் பொழிந்த புன்னகையிலே
    மலையரசி பெற்ற மலையருவி
    வறட்சிகண்ட உயிரினங்கள்
    மகிழ்ச்சிகொள்ள வந்த பேரழகே !

    இளமை பொங்க இருகரையும்
    மனமகிழ்ந்து ஓடி ஆடி
    நீ ஆர்ப்பரித்துக் கொட்டும்
    அழகுக்கு ஈடு இணை இல்லையடி!

    இயற்கை தந்த இன்பத்திலே
    உன் சிரிப்பொலியே
    எமக்குப் பசுமைச் சொர்க்கமடி !

     

    Share